Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சலசலக்கும் சொந்தங்கள்-அத்தியாயம்1

Advertisement

BelsyPrabhu

Active member
Member
சலசலக்கும் சொந்தங்கள்

அத்தியாயம் 1

அங்கு ஆலய மணியோசை ஒலிக்க, டிரம்ஸ் இசை காதைக் கிழிக்க, வெடிச்சத்தம் முழங்க, திருப்பலியில் “இன்பத்திலும் துன்பத்திலும் வாழ்விலும் நோயிலும் பிரமாணிக்கமாய் இருப்பேன்” என அவனும் அவளும் வாக்குறுதி அளித்து, அவன் மங்கல நாணை கட்ட, அவளும் ஏற்றுக் கொண்டாள்.

பத்தே நாட்களுக்குள் பேச்சு வார்த்தையே இல்லாமல் இதுவரை இருந்த இரு குடும்பங்கள் இணைந்து ஒரு திருமணத்தை நடத்த இயலுமா என்றால், இயலும் என்பதற்கு சான்றே இத்திருமணம் என்றால் மிகையாகாது.

திருப்பலி முடிந்து மணமக்கள் வீட்டிற்கு சென்று, பால் பழம் சாப்பிட்டு, விளக்கேற்றி, இறைவனை வணங்கி, பின் திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, வரவேற்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டனர்.

இருவர் முகத்திலும் மருந்துக்குக் கூட சிரிப்பே இல்லை, சரி வெறுப்பாக இருக்கின்றனரா? என்றால் அதுவும் இல்லை. நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலையிலேயே இருக்கின்றனர்.

அப்படி இப்படி என்று, இதோ அவன்- பீட்டர் அறைக்கு அவள்- நிர்மலா வந்துவிட்டாள். வந்தவள் கேட்கிறாள் “இங்க பாய், பெட்சீட் இல்ல போர்வை மாதிரி ஏதாவது இருக்கா?”. பீட்டருக்கு முதலில் இவள் என்னிடமா கேட்கிறாள் என்றிருந்தது, பிறகு இதெல்லாம் எதுக்கு கேட்குற என நினைத்ததை வாய்விட்டும் கேட்டான்.

தன் வழக்கமான வாயாடல்படி, நிர்மலா “ஆமா, எதுக்கு கேட்பாங்க, கும்மியடிக்கவா, தூங்கதான்” என்றாள். அவளுக்கு தானும் சளைத்தவன் அல்ல என்று பீட்டர் “இது கிங் சைஸ் பெட், படுத்து உளுமளவுக்கு இடமிருக்கு, நா யாரை தொந்தரவு செய்யமாட்டேன், நம்பி தூங்கலாம் என்றான். அவ்வளவுதான் அவள் ஒரு பக்கத்திலும் அவன் மறு பக்கத்திலும் என கண்மூடி உறங்க முற்பட்டனர். புறகண் மூடினாலும் மனக்கண் இருவருக்கும் விழித்துக் கொண்டது.

இரு வாரங்களுக்கு முன்பு, விடியற்காலையில் வீட்டின் பெல் சத்தம் கேட்டவுடன் பீட்டரின் அம்மா- செல்லி கதவைத் திறந்து கொண்டே, “காபி குடிக்கிறியா” என்றார். அவனோ, “இல்லமா, டாக்ஸிக்கு காத்திருந்த நேரத்துல அங்க கடையில குடிச்சேன், நா கொஞ்சம் ஓய்வெடுக்கிறேன்” என்று சொல்லி அவன் அறைக்கு சென்றுவிட்டான்.

செல்லி, பீட்டர் அறைக்கதவைத் தட்டி, “டேய் பீட்டர், மணி பத்தாக போகுது, எழுந்திரி” என்றார். அவர் விடாமல் தட்டவும் வேறு வழியின்றி எழுந்து, கதவைத் திறந்துவிட்டு, திரும்ப படுத்து கொண்டான். செல்லி, “பீட்டர், இன்னைக்கு உறவு விட்டு போன உங்க சின்ன அத்தை வீட்டுக்கு சமாதானம் பேசப் போறாங்க, அதனால நீ கூட போய்ட்டு வா” என்றார். பீட்டர், “இதுக்கெல்லாம் நா எதுக்குமா பெரியவங்களே போய்ட்டு வரட்டும்” என்றான். செல்லி, “டேய், கல்யாணம் உனக்கு, உன்னை வைச்சுதான் சமாதான பேச்சு வார்த்தையே, நீயே போகலனா, எப்படி, இது சரி வராது, நீ உடனே கிளம்பு” எனக் கூறி அறையிலிருந்து வெளியேறிவிட்டார். இல்லானா இவன் வேற ஏதாவது சொல்லி நம்மள சரிக்கட்டிடுவானு நினைத்துக் கொண்டார்.

சிறிது நேரத்தில் பீட்டர் கிளம்பி வர, ஹாலில் ஏற்கனவே அனைவரும் தயாராகி, இவனுக்காக காத்து கொண்டிருந்தனர். பீட்டர், “போகலாமா?” என அவன் தந்தை ஆரோக்கியசாமி முறைத்த முறைப்புக்கு வெளியே சென்று நின்றுக் கொண்டான். ஆரோக்கியசாமி, “அப்பா, அம்மா கிளம்பலாமா?” என்றார்.
ஆரோக்கியசாமியின் தாய் ரோஸ்லின், தந்தை பொன்னுசாமி இருவருக்கும் நான்கு பிள்ளைகள். முதல் பிள்ளைதான் இவர். அடுத்தது ஒரு பெண்பிள்ளை அக்ஸீலியா, அவர் கணவர் நவ்ரோஜ், பிறகு ஒரு ஆண் ஹென்றி, அவர் மனைவி லீமா, கடைசியாக சமாதானம் செய்யபோகும் கிரேஸ், அவர் கணவர் ஆரோக்.

பொன்னுசாமி, தங்கள் பங்காளிகளில் நல்ல பேச்சு திறமைமிக்க இருவரையே கிரேஸ் வீட்டிற்கு சமாதானம் பேச அழைத்து செல்லவிருக்கிறார். மகன் கேட்டதும் தன் பங்காளிகளிடம் “போகலாமா?” என்றார். அவர்களுள் ஒருவர் “நேரங்கடத்தாம வேகமா போய்ட்டு வந்துருவோம்” என்றார்.

ஆரோக்கியசாமியின் கையசைவில் வேன் வந்து வாசலில் நிற்க, பொன்னுசாமியின் மூன்று மக்களும், அவர்தம் துணைவர்களும் மற்றும் கல்யாண மாப்பிள்ளைகளான ஆரோக்கியசாமியின் புதல்வர்கள் பீட்டர், பேட்ரிக் என அனைவரும் ஏறி சீட்டில் உட்கார்ந்தவுடன் வேன் கிரேஸ் வீட்டை நோக்கி நகர்ந்தது.

பல வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் கிரேஸ் வீட்டிற்கு இவர்கள் வருகின்றனர். திடீரென அங்கு போய் நிற்க கூடாது என்பதற்காகவே ஆரோக்கின் பங்காளியிடம் தங்கள் வருகைக் குறித்து ஆரோக்கியசாமி ஏற்கனவே தெரிவித்திருந்தார். கிரேஸ் வீட்டை அடைந்த்தும் அனைவரும் வேனிலிருந்து இறங்கி நின்றனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க, வந்து விட்டோம் இனி நடப்பதை எதிர்கொள்ள வேண்டும் என்று ஆரோக்கியசாமி கேட்டில் கைவைக்கும் போது, ஒரு பெண், “யார் நீங்க? என்ன, ஏதுனு சொல்லாம நீங்கபாட்டுக்கு உள்ள வர பாக்குறீங்க” என்றாள்.

இவளின் பேச்சைக் கேட்டு திரும்பிய பீட்டர் தன்னால் முடிந்த மட்டும் அவளை முறைத்துப் பார்த்தான்.
 
Last edited by a moderator:
Top