Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -18

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
hey guys ... போஸ்ட் போட்டு இன்பனையும் கொக்கிமூக்கியையும் தேடிய அனைவருக்கும் நன்றிகள் பல!!!

*18*

நான் எப்போது உன்னை நினைக்க ஆரம்பித்தேனோ,

அப்போதே என்னை மறந்துவிட்டேன்!

அதனால் தான் என் காதலை உன்னிடம் சொல்ல வேண்டும் என்கிற

நியாபகம் கூட எனக்கு வரவில்லை...!

இரண்டே வாரத்தில் திருமணம் என்ற செய்தியோடு வந்த ஷங்கரும் செல்லமும் உடன் கிஷோரை அழைத்து வருவார்கள் என கிஞ்சித்தும் கோகிலா எண்ணவில்லை. திருமண தேதி, முகூர்த்தம் என அத்தனையும் முடிவு செய்துவிட்டு ஒரு அறிவிப்பாய் மட்டுமே அதை ஒண்டிவீரரிடம் தெரியப்படுத்தினர். திருமணதிற்கு முன்னே பெண்ணும் பையனும் எப்படி ஒரே வீட்டில் தங்கிருக்க முடியும் என சிவகாமி தயங்கியபோது கூட ‘பழைய பஞ்சாங்கம் பார்க்காதே’ என தன் அன்னைக்கே புத்தி சொல்லி அமட்டியிருந்தார் செல்லம்.



கூட்டுக்குள் இருந்து மெல்ல மெல்ல வெளிவந்துக்கொண்டிருந்த தங்கம், மீண்டும் தன்னறைக்குள்ளே ஒடுங்கிக்கொண்டார். சத்தியராஜன் எப்போதும் போல ‘என்ன நடந்தால் எனக்கென்ன?’ என இருந்துக்கொண்டார். காண்டீபனுக்கு கிஷோரை கண்டது முதலே ஏனோ பிடிக்காமல் போனது. அவன் சிரிப்பும் பேச்சும் பந்தாவும் காண்டீபனை எரிச்சல்க்கொள்ளவே செய்தது.



ஒண்டிவீரர் மட்டும், ‘உதவி வேண்டுமானால் கேள்’ என ஷங்கரிடம் பட்டும் படாமல் சொல்லிவிட்டார். சிவகாமி அதைக்கூட சொல்லவில்லை. திருமணத்தை இந்த ஊரில் வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட ஒண்டிவீரருக்கே இப்போது துரிதகதியில் நடக்கும் இந்த ஏற்ப்பாடுகள் எதுவும் சிறிதும் மனதிற்கு ஒப்பாமல் போனது. முன்புபோல் இயல்பாய் செல்லத்திடம் பேச முடியாமல், பேசாமலும் இருக்க முடியாமல் ஒருவித அவஸ்தையுடனே நாட்களை நகர்த்தினர். ஆனால் இதுபோன்ற எந்த தயக்கமும் செல்லத்திடமோ ஷங்கரிடமோ இல்லவே இல்லை. மகளின் கல்யாண ஏற்ப்பாட்டில் அனைத்தையும் மறந்து ஒன்று கூடிக்கொண்டனர்.



கிஷோர் இன்பனின் வீட்டிருக்கு வந்து மூன்று நாட்கள் கடந்துவிட்டன. அன்று அவன் கோகிலாவை உரிமையாய், “ஹாய் பேபி” என அழைத்தபோது ரௌத்திரத்தில் எதிரில் இருந்த டீப்பாயை எட்டி தள்ளியவன், வந்தவனின் முகம் கூட பாராது எழுந்து சென்றுவிட்டான்.

கிஷோரின் பெற்றோர் திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருக்கும்போது வருகிறோம் என சொல்லிவிட்டதால் கிஷோருக்கு மட்டும் தனியறை ஒதுக்கப்பட்டது.



“பேபி... ஐ மிஸ்ட் யூ!” காதல் ரசம் சொட்ட தன் பெற்றோரின் முன்னவே பேசுபவனை எதுவும் சொல்ல முடியாது நின்றுவிட்டாள் கோகிலா. செல்லம் திருப்தியான புன்னகையோடு நகர்ந்துக்கொள்ள, “எதுவும் வேணும்ன்னா ஒரு குரல் குடுங்க கிஷோர், நான் உடனே வந்துடுவேன்! உங்க வீடு மாறி நினைச்சுக்கோங்க!” என்று சொல்லிவிட்டு சென்றார் ஷங்கர்.



“யூ லுக் ஹாட் இன் திஸ் நைட் ட்ரெஸ்!” அவள் காதோரம் கேட்ட ரகசிய குரலில், அது சொல்லிய பொருளில் இரண்டிடடி தள்ளிப்போனாள் கோகிலா. கண்களில் சீற்றத்துடன், “எனக்கு இப்படியெல்லாம் பேசுனா பிடிக்காது!” என்றாள்.



“பட் எனக்கு பிடிக்கும்!! தென் யாரு அந்த ஆளு? டேபிளை தள்ளிவிட்டுட்டு போயிருக்கான்!?” கிஷோர் கேட்டிட, ‘அவரை தான் நான் விரும்புறேன்னு’ சொல்லிடலாமா? என ஒரு நொடி சிந்தித்தவள், ‘இல்ல, இப்போ சொல்றது சரி வராது’ என எண்ணிக்கொண்டே, “அவர் என் இன்பா மாமா” என்றாள் கோகிலா.



“ஹோ! அது அவன்தானா? அங்கிள் சொன்னாங்க, அவரை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டானாமே? பட்டிக்காட்டான்!” என்று நக்கலாக கிஷோர் கேட்டதும், “லுக் மிஸ்டர், யாரா இருந்தாலும் மரியாதையோட பேசனும்ன்னு உங்களுக்கு தெரியாதா? அந்த அளவு டீசென்சி கூட இல்லாம எப்படி நீங்கல்லாம் பாரின்ல இருந்தீங்க?” இன்னும் நக்கலாக அவனுக்கு பதிலடி கொடுத்தாள் கோகிலா.



எழுந்த கோவத்தை அடக்கியவன் இன்முகமாகவே, “டீசென்சி எங்க காட்டனும், எங்க காட்டக்கூடாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்!” என்றவன் தலை முதல் கால் வரை அவளை நிதானமாய் பார்க்க, அவன் பார்வையில் உடல் கூசியது அவளுக்கு.



“ச்சீ...” என முகத்தை திருப்பிக்கொண்டாள் கோகிலா. அவள் தள்ளி போக போக, அவளை நெருங்க வேண்டும் என்றே தோன்றியது அவனுக்கு.



கிஷோர் அவள் அசூயை பாவத்தை கண்டு “ஐ லவ் யூ!!!” என்றான், காதலாய் அல்ல, இரை பிடிக்க காத்திருக்கும் புலியின் தோரணையில்.



“பட் ஐ யம் நாட்!” வெடுக்கென பதில் உரைத்தவள் அங்கிருந்து சென்றுவிட, கிஷோருக்கு இப்போது வெறி பிடித்தது. அவனை ஒருத்தி அவமதிப்பதா?



தன் அன்னையின் அறைக்கு சென்ற கோகிலா, ஷங்கரும் செல்லமும் யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருப்பது கண்டு நின்றுவிட்டாள். இரண்டு வாரத்தில் திருமணம் என சொன்னபோது எழுந்த படபடப்பும் பதட்டமும், கிஷோர் பேசிய விதத்தில் கோவமாய் உருமாறியிருக்க, போனில் பேசிமுடித்தவர்கள் மகளை கண்டதும், “என்ன கோகிலா சந்தோசமா?” என சிரித்துக்கொண்டு கேட்டதும் வெடித்தது.



“யாரை கேட்டு முடிவு செஞ்சீங்க?” என்று கத்தினாள். மகளின் சத்தத்தில் அவர்கள் உற்சாகம் குறைய, “ஏன்மா? உன்னை கேட்டு தானே கல்யாணம் முடிவு செஞ்சோம்?” என்றார் ஷங்கர்.



“ப்ச்!! அப்பா, கல்யாணத்துக்கு இவ்வளோ அவசரமா நாள் குறிக்குறதுக்கு என்ன அவசியம் இப்போ?”



“ஒரு மாசத்துல கல்யாணம் வைக்கணும்ன்னு முன்னாடியே முடிவு செஞ்சது தானே? உனக்கு தெரியாதா என்ன? இப்போ நாங்க நாள் மட்டும் தான் குறிச்சுட்டு வந்துருக்கோம்!” என்றார் ஷங்கர்.



“என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு செஞ்சுருக்கலாமே!”

“ஏன் இப்போ என்னாச்சு?”

“ப்ச்...ப்பா.....!!!” என்றவளுக்கு அதற்குமேல் என்ன சொல்வதென தெரியவில்லை. உண்மையை உடைத்தாலொழிய அவரிடம் வாதிடுவது வீண் என உணர்ந்தாள்.



வீட்டில் இருந்த ஒருவருக்கும் அன்றைய இரவு நல்ல உறக்கத்தை கொடுக்கவில்லை. மறுநாளும் விடிந்தது. அவரவர் வேலையை அவரவர் பார்க்க, கோகிலாவுக்கு மனதில் பெரும் உலைசளாய் இருந்தது. இன்பனை காலை எழுந்தது முதலே காணவில்லை. காண்டீபனிடம் கேட்டால், “வேலைக்கு தான் போயிருப்பான்!” என்று பதில் வந்தது.



“உங்கப்பாக்கு கொஞ்சம் கூட டேஸ்டே இல்லை கோகிலா! அவனும் அவன் சிரிப்பும்!!” காண்டீபனின் வார்த்தைகள் இவை.



“நிஜமாலுமே உனக்கு அந்த பையனை பிடிச்சுருக்கா கண்ணு?” சிவகாமி கேட்டிருந்தார்.



“கல்யாண தேதியும் குறிச்சுட்டாங்க கோக்கிமா! இனி இதான் உன் வாழ்க்கை” தங்கம் அழுத்தமாய் சொல்லிவிட்டார். அன்றைய நாள் முழுக்க இன்பனையும் காணாது கிஷோரின் தொல்லையையும் பொறுக்க முடியாது ஓய்ந்து போனாள் கோகிலா.



ஆம்! கோகிலாவின் அருகிலேயே இருந்தான் கிஷோர். அவள் வெளிப்படையாய் எரிந்து விழுந்தும், தன் விருப்பமின்மையை வெளிகாட்டியும் அவன் கொஞ்சமும் அசைந்துக்கொடுத்தானில்லை. வேறோருவனாய் இருந்தால் ரோஷப்பட்டு சென்றிருப்பான், அல்லது ‘உனக்கு என்னை பிடிக்கவில்லையா?’ என்றாவது கேட்டிருப்பான். இவனோ ‘எதையும் தாங்குவேன்’ என அசராது இருந்தான்.



அன்றைய இரவு உணவுக்கு பின்னே, மொட்டை மாடியை அடைந்தவளை, “ஹாய் பேபி” என சீண்டினான் கிஷோர். அவனிடம் இருந்து தப்பிக்கவே அவள் மாடியை தேடி தனியாய் வந்தது. இங்கும் அவன் வந்ததும் எரிச்சலாகி, “உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவேயில்லையா கிஷோர்? எனக்கு உங்களை பிடிக்கலன்னு இன்னும் எப்படி தான் நான் வெளிப்படையா காட்டுறது? ஏன் என்னை விடாம தொல்லை பண்ணுறீங்க?” என்றுவிட்டாள்.



கிஷோரிடம் இருந்து பதிலே இல்லை. அவன் முகத்தில் இருந்து எந்த உணர்வுகளையும் அவளால் படிக்க முடியவில்லை. அதற்குமேல் அங்கே நிற்க பிடிக்காமல் தன்னறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டாள். எதிரே இன்பனின் அறையில் விளக்கு எரிவது தெரிந்தது. அவன் வந்துவிட்டான் என தோன்றியதும், அவனை காண வேண்டும் இருந்த ஆவல் மறைந்து, ‘அதென்ன அவனுக்கு அவ்வளோ வீம்பு? இப்போக்கூட நான் வேணும்ன்னு அவனுக்கு தோணவே இல்லையா? அவனை போல என்னால இருக்க முடியலையே ஏன்!?’ என எண்ணியவள், கண்கள் கலங்க நித்திரையை வேண்டினாள்.



அறைக்குள் இருந்த இன்பனுக்கு, நன்கு புரிந்தது, கோகிலா இந்நேரம் தனனைத்தான் எதிர்ப்பார்த்து காத்திருப்பாள் என! ஆனால் அவள் முன்னே சென்று, ‘உனக்காக நான் இருக்கிறேன்’ என சொல்ல அவனுக்கு தயக்கம்! அவளுக்காக ஷங்கர் பார்த்திருக்கும் மாப்பிளை குணவானாக இருப்பான் என துளியும் தோணவில்லை. கண்டிப்பாக தனவானாய் இருப்பான்!

‘என் பொண்ணை உனக்கு கொடுக்க என்ன தகுதி உனக்கிருக்கிறது? எப்படி என் பெண்ணை வைத்து காப்பாற்றுவாய்?’ என ஷங்கர் கேட்டால் அவனால் பதில் சொல்ல முடியும். ஆனால் கோகிலா எந்த அளவுக்கு திடமாய் இருக்கிறாள் என அவனால் அறிந்துக்கொள்ள முடியவில்லை.



வயசு கோளாறு என சொல்ல அவள் ஒன்றும் சிறுபெண்ணும் அல்ல. இந்த வீடும் சொத்தும் இன்பனுக்கும் உரியது என அவன் எந்நாளும் எண்ணியதில்லை. வருபவளும் அவ்வாறே இருந்தால் தான் இவனால் நாட்களை நிம்மதியாய் கடத்த இயலும். தினக்கூலியாய் கிடைக்கும் நானூறு ரூபாயில் அவளது தேவைகளை அவளால் சுருக்கிக்கொண்டு வாழ முடியுமா? ஆரம்பத்தில் இனித்தாலும் போக போக கசப்பு தோன்றாதா? காதல் என்ற பெயரில் அவளது வளமான வாழ்வை எதற்க்காக நான் தடுக்க வேண்டும்? இப்படியெல்லாம் எண்ணியவனும் நேரங்கடந்து உறங்கியே போனான்.



யாருக்கும் காத்திராமல் பொழுது புலர, ஒரு முடிவுடனே எழுந்தாள் கோகிலா. வேகமாய் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு கீழே சென்றவள் இன்னமும் கிஷோரின் அறைக்கதவு சாற்றியிருப்பதை கண்டு நேரத்தை நெட்டி தள்ளினாள். அரைமணி நேரம் பொருத்து பார்த்தவள் அதற்க்கு மேல் தாங்காமல் அவன் அறைக்கதவை தட்டியிருந்தாள்.



உள்ளிருந்து முனகலாய், “இயா! கம்மின்!” என்று கேட்க, கதவை திறந்து உள்ளே சென்றாள் கோகிலா. அவளை கண்டதும் சோம்பல் முறித்தபடியே எழுந்தவன், “ஹாய் பியூட்டி! திஸ் இஸ் ஹாட் மார்னிங் ரியலி” என்றான் கண்சிமிட்டி!



அவன் சிரிப்பும் கண்சிமிட்டலும் அவளுக்கு குமட்டிக்கொண்டு வந்தது. அவனை பார்த்ததில் இருந்தே அவளுக்கு பெரிதாய் நாட்டமில்லை. இப்போதோ அவன் பேசும் விதத்தில் சுத்தமாய் பிடிக்காமல் போய்விட்டது.



“உங்ககிட்ட ரொம்ப முக்கியமா பேசணும்! ப்ளீஸ் பிரெஷ் ஆகிட்டு வாங்க” என பொறுமையாய் அவள் சொல்ல, “உன்னை பார்த்ததுமே நான் பிரெஷ் ஆகிட்டேன் பேபி, சொல்லு என்னனு” என்றான் கிஷோர்.



பல்லைக்கடித்துக்கொண்டு, “எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல கிஷோர். இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம்!!” என்றாள். இதை கேட்டு அவன் சிறிதேனும் அதிர்வான் என அவள் நினைக்க, அவனோ, “பட் எனக்கு இதுல இஷ்டம் இருக்கே!” என்றான் கூலாய்.



“வாட்..!? ஹலோ நான் எனக்கு விருப்பம் இல்லன்னு சொல்றேன்... ஏன் எதுக்குன்னு கேட்காம இப்படி பேசுறீங்க?” என்றாள் திகைப்பாய்.



“லுக், உனக்கு விருப்பம் இல்லன்னா அது உன் விஷயம்! அதுக்கும் எனக்கும் என்ன இருக்கு?” என்றான் விட்டேத்தியாய்.

‘இவன் என்ன பைத்தியமா?’ என்றே தோன்றியது அவளுக்கு. இனியும் மூடி மறைக்க வேண்டாம் என எண்ணி, “எனக்கு என் இன்பா மாமாவை தான் பிடிக்கும்! அவரை தான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்! உங்கக்கூட நிச்சயம் ஆனப்போ என் மனசுல யாரும் இல்லை. இப்போ என் மாமாவை மனசுல வச்சுக்கிட்டு உங்களை கண்டிப்பா கல்யாணம் செய்துக்க முடியாது. இன்னும் சில நாள்ல கல்யாணத்தை வச்சுக்கிட்டு நான் இப்படி சொல்றது தப்பு தான்! பட் ஐ டோன்ட் ஹேவ் அதர் ஆப்ஷன். எதையும் சொல்லாம கல்யாணம் செய்துக்கிட்டு நம்ம ரெண்டு பேரு லைஃபும் வேஸ்ட் ஆகுறதை நான் விரும்பல! டூ ட்ரை டு அன்டர்ஸ்டேன்ட் மீ” என்றுவிட்டாள்.



கிஷோரின் முகம் எந்த உணர்வும் காட்டவில்லை. அவன் பதிலை எதிர்நோக்கி தவிப்பாய் அவள் காத்திருக்க, அவளை நெருங்கி வந்தவன், “டூ யூ லவ் ஹிம்?” என்றான்.

‘இவ்வளவு நேரம் கதையா சொன்னேன்?’ என கோவம் கிளர்ந்தாலும், “எஸ்... அப்கோர்ஸ்” என்றாள் திடமாய்.



சில நொடிகள் அங்கும் இங்கும் நடந்தான். அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள் கோகிலா. நீண்ட நிமிடத்திற்கு பின் நடையை நிறுத்தியவன், வேகமாய் அவளருகே வந்து, “லவ் மட்டும் தானா? இல்ல......?” என இழுக்க, அவள் பொறுமை கரைந்து, “எக்ஸ்யூஸ் மீ...!!!” என்று கத்தியிருந்தாள்.



“ஓகே ஓகே கூல்! இந்த காலத்துல இதெல்லாம் நார்மல் இல்லையா? அதான் கேட்டேன்!!” என்று இயல்பாய் சொன்னவன் மீண்டும் நடக்க, அங்கு நிற்கக்கூட அவளுக்கு வெறுப்பாய் இருந்தது. சொல்வதை சொல்லியாயிற்று என அங்கிருந்து சென்றுவிடலாம் என அவள் எண்ணும்போதே, “ம்ம்! நான் யோசிச்சு பார்த்தேன்! எப்படி பார்த்தாலும் இந்த மேரேஜ கால் ஆப் பண்றது எனக்கு ஓகே வா இல்லை!!” என்றவனை அயர்வாய் நோக்கினாள் கோகிலா.



“உங்களுக்கு புரியலையா? ஐ லவ் சம்ஒன்” அவள் சொல்லி முடிக்கும் முன்னே ஆவேசமாய் அவள் அருகே வந்த கிஷோர், அவள் பேச முடியாதபடி அவள் கீழ்த்தாடையை தன் வலக்கையால் அழுத்தி பிடித்தவன் கண்களில் அத்தனை ஆங்காரம்.

“சும்மா லவ்வு லவ்வுன்னு! எவனை வேணா லவ் பண்ணிக்கோ! ஆனா இனிமே என்னை தான் லவ் பண்ணனும்! கல்யாணமும் என்கூட தான்!!” என்றவன் “புரிஞ்சுதா?” என பலம் கொண்டு கத்த, அவள் தலை அசையவேயில்லை.



“என்னை மீறி இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்ன்னு நினைச்ச, உன்னை எதுவுமே செய்ய மாட்டேன்! நீ உருகுறியே உன் மாமன்! அவன் எங்க இருக்கான்னு எல்லாரும் தேடுற மாறி பண்ணிடுவேன்!” ஆங்காரமும் ஆவேசமும் கலந்து அவன் மிரட்ட, வேறு பெண்ணாய் இருந்தால் சிறிதேனும் பயம் கொண்டிருப்பாள். கோகிலா இது எதற்குமே சளைக்கவில்லை.

“உன்னால என் மாமா பக்கத்துல கூட வர முடியாது!!” என்று திண்ணமாய் சொன்னவள் அவன் கையை வலுக்கொண்டு தட்டிவிட்டு அங்கிருந்து சென்றாள்.



கிஷோர் பேசியதில் அவளுக்கு கண்மண் தெரியாத கோபம் உண்டாக, இன்பனை தேடி அவன் அறைக்கு சென்ற கோகிலாவை, “நில்லு, வராதே!!” என்றான் இன்பன். அவன் சொல்லை கேட்காமல் அவன் அறைக்குள் பிரவேசித்தவள், “மாமா!!” என்றாள் அயர்வாய்.



அவள் குரல் மாற்றம் கண்டு துணுக்குற்றாலும், “என்னை எதுக்கு பார்க்க வர?” என்று காய்ந்தான் பேரின்பன்.

“மாமா, எல்லாம் கை மீறி போய்க்கிட்டு இருக்கு! இனிமே விளையாடவோ, லேட் பண்ணவோ எனக்கு விருப்பம் இல்லை! நீ என்னை காதலிக்குறேன்னு மட்டும் சொல்லு, இப்போவே நான் எல்லார்க்கிட்டயும் பேசி கல்யாணத்தை நிறுத்திடுறேன்!” என்றாள் பரிதவிப்பாய்.



“உனக்கு கல்யாணம் வேண்டாம்ன்னா நீ நிறுத்து, அதுல ஏன் என்னை இழுக்குற?” என்று அவன் சீற்றமாய் சொல்ல, “ஐயோ மாமா, அடுத்தவங்களுக்காக பார்த்தன்னா பறிப்போகபோறது நம்ம வாழக்கை தான்! ஒருத்தன் என்னை ‘பேபி’ன்னு சொன்னதையே உன்னால தாங்கிக்க முடியல, நீயா என்னை விட்டுக்குடுப்ப? உன் மனசை ஏன் மாமா மறைக்குற?” சரியாய் கேட்டாள் கோகிலா.



வெளிப்படையாய் தன் கோவத்தை காட்டிவிட்டு, இப்போது அதை மாற்றி பேச அவனுக்கு விருப்பம் இல்லை. பதில் பேசாமலே இருந்தான்.



“நீ அமைதியா இருக்க இருக்க எனக்கு உன்மேல கோவம் கோவமா வருது மாமா!!” என்று கத்தியவள், திரும்பி நின்றவனை தன் முகம் பார்க்கும்படி திருப்பி, “என்னைப்பார்த்து சொல்லு, நான் உனக்கு வேண்டாம்ன்னு?” என்றாள் சவாலாய்.



எப்படி சொல்வான் அவன்? அவனுக்கே அவனுக்காய் ஆதியும் அந்தமுமாய் அவன் யாசித்த, நேசித்த ஒரே விடயம், அது ‘அவள்’ மட்டுமே அல்லவா?!



“சொல்லு மாமா!!” கோகிலா அவனை உலுக்க, “நீ என்கிட்டே இப்படியெல்லாம் பேச மாட்டேன்னு சொல்லிருக்க கோகிலா!” என்றான்.



“ப்ச்!! இதை சொன்ன நான்தான், உன்னை காதலிக்குறேன், உன்னை தான் கல்யாணம் செய்துப்பேன்னு கதறிட்டு இருக்கேன், அது உன் காதுல விழுகாதா?” என்றவள், “என்னை வேண்டாம்ன்னு நீ சொல்ல உருப்படியா ஏதாவது ஒரு காரணம் இருக்கா? எதுவுமே இல்லை! ஆனாலும் வீம்புக்கு செய்யுற மாமா நீ!!” என்றாள்.



“உனக்கு என்ன தெரியுமா எண்ணம்? நானே எல்லார்க்கிட்டையும் போய் ‘என் இன்பா மாமாவை தான் கட்டிக்குவேன்னு’ கத்தி சொல்லணும். என் அப்பாக்கிட்ட நீ இறங்கி போய் பொண்ணு கேட்க மாட்ட! நீதான் எனக்கு வேணும்ன்னு என் அப்பாக்கிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நானே நிறுத்தனும்... உன்னால என் கல்யாணம் நின்னுப்போச்சுன்னு இங்க இருக்க யாரும் உன்னை குத்தம் சொல்லிடக்கூடாது. என் மனசை கலைச்சுட்டன்னு உன் மேல யாரும் பழி செல்லக்கூடாது!

என் அப்பாக்கிட்ட நீ போட்ட சவால்ல ஜெயிக்க தான் நீ என்னை கட்டிக்கப்போறன்னு யாரும் நினைக்கக்கூடாது! அதையும் தாண்டி, ‘நான் சொல்லியும் கேட்காம என் பேத்தி கல்யாணத்தை நிறுத்திட்டியேடா’ன்னு தாத்தா உன்னை குறை சொல்லிடக்கூடாது... இதானே?” என்றாள் ஆவேசமாய்.



அவள் வாய்மொழியாய் வந்த அனைத்துமே முழுக்க முழுக்க உண்மை! இன்பனின் மனதை அட்சரம் பிசகாமல் படித்து, அதை அப்படியே ஒப்புவித்திருந்தாள் கோகிலா.



“என்ன மாமா பார்க்குற? நான் சொன்னதெல்லாம் சரிதானே? இல்ல, இதெல்லாம் பொய்ன்னு உன்னை நீயே ஏமாத்திக்கப்போறியா?” என்றதும், “இல்ல, உன் அப்பா அம்மா என் மூலமா இந்த குடும்பத்துல திரும்ப சேருறதை நான் விரும்பல, அவங்களால எல்லாருக்குமே கஷ்டம் தான்” என்றான் எங்கோப்பார்த்து.



“ஏன் மாமா, இது அன்னைக்கு ராத்திரி மொட்டைமாடில என்னை கட்டிப்பிடிச்சுட்டு நின்னியே, அப்போ தெரியலையா? அப்பவும் நான் ஷங்கர் செல்லத்தோட பொண்ணுதானே?” என்றாள்.



அவள் கேட்பதும் நியாயம் தானே! பெற்றவருக்காக பெண்ணை வேண்டாமென்பதா?!



“யார் மனசும் கஷ்டப்படக்கூடாதுன்னு நினைக்குற நீ, என் மனசை கஷ்டப்படுத்துறியே மாமா?”



அவன் மௌனித்திருக்க, “சரி மாமா, எனக்கு என் அப்பா அம்மா யாருமே வேணாம்! நீ ஒருத்தன் மட்டும் போதும், அப்போவாது என்னை ஏத்துப்பியா?” என்று முடிவாய் கேட்க, பெற்றவரை கூட வேண்டாமென சொல்லுமளவு இவளுக்கு தான் என்ன பெரிதாய் செய்துவிட்டோம் என ஆடிப்போனான் பேரின்பன்.



பொருத்துப்பார்த்த கோகிலா அவனிடம் பதிலின்றி போக, “இதுக்குமேல உன்கிட்ட கேட்க எனக்கு எதுவுமே இல்ல மாமா!!” எனறுவிட்டு, அவன் கரம் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள். “ஏய்...விடுடி!! விடுன்னு சொல்றேன்ல!!” இன்பன் கத்தியது எல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. விறுவிறுவென அவனை இழுத்துக்கொண்டு மாடியை விட்டு இறங்கினாள்.



“என்னடி பண்ண போற?” என்ன செய்ய போகிறாள் என யூகித்திருந்தாலும், இன்பன் மெலிதாய் பதற, “எல்லோரும் இங்க வாங்க!!!” வீடே அதிர அடிக்குரலில் கோகிலா போட்ட சத்தத்தில் பாய்ந்தடித்து கூடத்திற்கு வந்திருந்தனர் வீட்டாட்கள்.



இன்பனின் கரத்தை கோகிலா அழுந்த பற்றியிருப்பது எல்லோர் கண்ணிலும் பட, தங்கத்திற்கு மட்டும் அது ‘பக்’கென்றிருந்தது.



“என்னடி? எதுக்கு கத்துன?” செல்லம் தன் மகளிடம் வந்து கோவமாகவே கேட்டார். அவர் கண்கள் மட்டும் அவளின் கரத்தோடு இணைந்திருந்த இன்பனின் கரத்தை வெறுப்போடு ஏறிட்டது.



“என்னம்மா ஆச்சு?” சிவகாமி தணிவாய் கேட்க, “எனக்கு இன்பா மாமாவை தான் கட்டிக்கணும்! எனக்கும் அவருக்கும் கல்யாணம் செஞ்சு வைங்க” என தடாலடியாய் போட்டு உடைத்தாள் கோகிலா.

-தொடரும்...
 
அப்படி போடு... இன்பா இப்பவாவது ஒழுங்கா தாலிய கட்டு.. இல்ல உனக்கு மூக்கி வச்சிருக்கற பணிஷ்மெண்ட்டோட அளவு கூடி போயிடும் அப்புறம் உனக்கு தான் கஷ்டம்.
 
Top