Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -15

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
ஹலோ மக்களே!!! இனிய ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் முந்துதலாகவே!!

This episode is around 2700 words. such a long episode! எதுக்கு இதை சொல்றேன்னா, திங்கள் தர வேண்டிய எபியும் சேர்த்து ஒரே எபியா போட்டுட்டேன்!! So see you after pooja holidays .... அடுத்த பதிவு... 'புண்ணிய புதனில்' ;)

*15*

அற்புதமான காதலை மட்டுமல்ல,

அதை உன்னிடம் சொல்ல முடியாத,

அதி அற்புதமான மௌனத்தையும்

நீதான் எனக்கு தந்தாய்!!!

சென்னையில் இறங்கிய ஷங்கரும் செல்லமும் நேரே சென்று நின்றது சிவகுருவின் வீட்டிற்கு தான். கார்மெண்ட்ஸில் வேலை முடித்து வீட்டிற்கு அப்போதுதான் வந்திருந்த சிவகுரு, லக்கேஜ்களோடு டேக்ஸியில் வந்திறங்கும் ஷங்கரையும் செல்லத்தையும் கண்டு, புருவ மேடுகள் முடிச்சிட, வாசலுக்கு ஓடினார்.



“என்ன ஷங்கர்? அதுக்குள்ள ஊருல இருந்து வந்துட்டீங்க?” என்று கேட்ட சிவகுரு, “லக்கேஜ குடுமா” என்று செல்லத்தின் கையில் இருந்த பைகளை வாங்கிக்கொண்டார். மௌனமாய் இருந்த இருவரையும் வீட்டிற்க்குள் அழைத்து வந்தவர், “லலிதா, யாரு வந்துருக்காங்க பாரு” என்று அடுக்களையை நோக்கி குரல் கொடுத்தார் சிவகுரு.



முந்தானையில் கையை துடைத்துக்கொண்டே வெளியே வந்த லலிதா தன் வருங்கால சம்மந்திகளை அந்நேரத்தில் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது.

தடுமாற்றத்துடன், “வாங்..வாங்க அண்ணா! வா செல்லம்” என்று வரவேற்ற லலிதா, “என்ன சொல்லாம கொள்ளாம...” என்று கேட்க, “ஏன், வரக்கூடாதா?” என்றார் செல்லம் பட்டென.



“வரலாம், வரலாம்!!! நான் அப்படி கேட்கல! இத்தனை வருஷம் கழிச்சு அம்மா வீட்டுக்கு போயிருக்கியே, ஒரு மாசம் குறையாம திரும்ப வர மாட்டன்னு நினைச்சேன்” என்று லலிதா சொல்ல அதையே ஆமோத்தித்தார் சிவகுரு.



“நானும் அதான் நினச்சேன்! கம்பெனி வேலையை நானும் என் புள்ளையுமே பார்த்துக்குறோம்ன்னு சொல்லிருந்தேனே! அப்புறம் ஏன் அவசரமா வரணும்?” பதில் தெரிந்தே ஆக வேண்டும் போல இருந்தது அவருக்கு.



செல்லம், “ஒரு காஃபீ போடு லல்லி, தலையை வலிக்குது” என்று கேட்க, பெண்கள் இருவரும் அடுக்களைக்குள் புகுந்தனர்.



தன் முகம் கண்டே அமர்ந்திருக்கும் சிவகுருவிடம், பெருமூச்சோடு, “போனோம், வந்துட்டோம்” என்றார் ஷங்கர். மேலும் அங்கே நடந்த சச்சரவை எடுத்து சொன்னவர், அன்று காலை கிளம்பபோவதாய் அவர்கள் பாசாங்கு செய்து அசிங்கப்பட்டதை மட்டும் சொல்லவில்லை.



சிவகுரு, “ப்ச்! கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திருக்காங்க!! இதுக்கு நீங்க போகாமையே இருந்துருக்கலாம்” என ஷங்கரை நன்முறையில் ஏத்திவிட, சரியாய் வேலை செய்தது அது.



ஷங்கர் இறுகிய முகமாய், “அந்த பசங்க தான் எங்களை ரொம்ப அவமானபடுத்துறாங்க! அதுலயும் பெரியவன்!!? நான் தூக்கி வளர்த்தவன், என்னை ஒரு மனுஷனாக்கூட பார்க்கல! என்கிட்டயே கோகிலா கல்யாணத்தை நிறுத்துவேன்னு சவால் விட்டுருக்கான் தெரியுமா?” என்று ஆவேசப்பட, “அவன் கடக்குறான் பொடியன், நம்மளை மீறி என்ன செய்துட முடியும்!? இதுக்கெல்லாம் நீ வொரி பண்ணிக்காத ஷங்கர்” என தெம்பாய் தேற்றினார் சிவகுரு.



காபி கோப்பையோடு அங்கே வந்த செல்லம், “அவன் மூஞ்சில கரியை பூசுறதுக்காகவே நம்ம கோகிலா கல்யாணத்தை சிறப்பா நடத்தனுங்க!” என்று சொல்ல, “கவலை விடு செல்லம், அவங்களே வயித்தெரிச்சல் படுற அளவுக்கு நல்லா நடக்கும்” என்றார் லலிதா.



“மனசே சரியில்லை, அதான் வீட்டுக்கு கூட போகாம நேரே உங்களை பார்க்க வந்துட்டேன்” என்ற ஷங்கர் தளர்வாய் சோபாவில் சரிந்து அமர, “ஆமா, மாப்பிளை தம்பி எங்க?” என்றார் செல்லம்.



“அது...அவன்... அவன்....”

‘நீ சொல்’ இல்லை ‘நீயே சொல்’ என சிவகுருவும் லலிதாவும் ஒருவரைஒருவர் பார்த்துக்கொண்டு கண்களாலேயே கெஞ்சிக்கொண்டிருன்தனர். பின்னே கேட்பவரை திறனாய் சமாளிக்க வேண்டுமல்லவா? முதல் நாள் இரவு விருந்துக்கு சென்றவன் இன்று மதியம் போல முழு போதையில் வீட்டிற்க்கு வந்து அறைக்குள் புகுந்துக்கொண்டான். நான்கு மணி நேரங்கள் ஆகியும் அவன் அறையில் சிறு சப்தம் கூட எழவில்லை.



ஷங்கரிடம் என்னவென்று சொல்வார் சிவகுரு?! அவனை சென்று எழுப்பலாம் என்றாலோ அவன் எந்த நிலைமையில் கிடப்பான் என்றே தெரியாது! போதை தெளிந்ததோ இல்லையோ? எழுந்து வா என அழைத்தால் அமைதியாய் வருவானோ? இல்லை கண்டபடி கத்திவிடுவானோ? யாருக்கு தெரியும்? மிகுந்த தயக்கத்துடனே சிவகுரு இருக்க, “வாசல்ல கார் நிக்குதே, தம்பி வீட்ல தான் இருக்காரு போல” என்றார் ஷங்கர். இதற்குமேல் மறைக்க முடியாது என்று, “ஆமா, ரூம்ல தான் இருக்கான்! தலைவலின்னு சொன்னான்” என்றார் அவர்.



“ஹோ! பார்க்கலாம்ன்னு நினைச்சேனே” ஷங்கர் சொன்ன பின், வேறு வழியின்றி, “எழுந்துரிச்சுட்டானான்னு பார்க்குறேன்” என்று எழுந்த சிவகுரு மிகசிரமப்பட்டு நான்கடி தொலைவில் இருந்த அந்த அறையின் கதவை நெருங்கினார்.



ஒற்றை விரலை மடக்கி கதவின் மீது அவர் மெதுவாய் தட்ட, ஒரு தட்டலுக்கே, “ஹான் அப்பா, வந்துட்டேன்!!” என்ற கிஷோரின் தெளிவான குரல் கேட்க, சிவகுருவுக்கு தலை சுற்றுவதை போல இருந்தது. ‘என்னடா இது அதிசயம்?’ என எண்ணிக்கொண்டார். அவன் தெளிவாய் இருந்தாலே கதவு உடையும் வரை தட்டினால் கூட பதில் வராது. இன்றோ சிறு சத்தத்துக்கே பதில் வருகிறது என்றால் அதிசயம் தானே!?



அடுத்த அரை நிமிடத்தில் கதவை திறந்தவன் தன் சட்டையின் முதல் பொத்தானை போட்டுக்கொண்டே “வாங்க அங்கிள், வாங்க ஆன்ட்டி” என்றான் பவ்வியமாய். லலிதா மோவாயில் கைவைத்து தன் மகனையே தாஜ்மகால் போல பிரம்பிப்பாய் பார்க்க, சிவகுருவுக்கும் அதே நிலைதான்.



“வாப்பா! ரொம்ப வருசத்துக்கு முன்னாடி பார்த்தது! நீ பாரின்ல இருந்து வந்த பின்னாடி நம்ம சரியா பேசிக்க கூட இல்லை, வேகவேகமாய் நிச்சயமே முடிஞ்சுடுச்சு!” ஷங்கர் தன் அருகே உள்ள இருக்கையை காட்டி அழைக்க, அவர் அருகே வேகமாய் வந்தவன் அமரும் முன்னே, “ஆன்ட்டி, நிக்குறீங்களே? நீங்க உட்காருங்க!!” என செல்லத்திற்கு மரியாதை தர புல்லரித்து போனார் அவர். ‘தன் மகளுக்கு கூட இந்தளவு மரியாதை தெரியாது’ என சடைத்துகொண்டார் மனதுள்.



எல்லோரும் அமர்ந்தபின்னே, “நீங்க மட்டும் வந்துருக்கீங்க அங்கிள், கோகிலா எங்க?” என்று கிஷோர் கேட்ட பிறகே அவன் பெற்றோருக்கு தன் வருங்கால மருமகளின் நினைவு எட்டிப்பார்த்தது.



மெலிதாய் சிரித்துக்கொண்ட ஷங்கர், “அவ அவங்க தாத்தா பாட்டிக்கூட கொஞ்ச நாள் இருக்கனும்ன்னு பிரியப்பட்டா! அதான் விட்டுட்டு வந்துட்டோம்!” என்றவர், “இங்க கல்யாண வேலை ஆரம்பிக்க வேண்டாமா? நாள் கம்மியா இருக்கே!!” என்று சிரிக்க, கிஷோரும் வெட்கப்படுவதை போல தலையை குனிந்துக்கொண்டான்.



“அப்புறம் கிஷோர்? கார்மெண்ட்ஸ் பொறுப்பை இனி நீயும் கோகிலாவும் பார்த்துக்கிட்டு எங்களுக்கு ரிடையர்மென்ட் குடுக்க போறீங்களா?” என்று ஷங்கர் அவனின் தோளில் கைவைத்து இலகுவாய் கேட்க, “இல்ல அங்கிள், நம்ம பிசினஸ் கோகிலாவே பார்த்துக்கட்டும்! நான் தனியா ஒரு தொழில் ஆரம்பிச்சுருக்கேன்! நானும் என் பிரண்ட்ஸும் சேர்ந்து!!” என்று சொல்ல, சிவகுரு, ‘இது எப்போ?’ என திகைத்தார்.



ஷங்கர், “கிரேட்!! உனக்குன்னு ஒரு தொழில் இருக்கிறது எப்போவும் நல்லது!” என்று பாராட்ட, “தேங்க்ஸ் அங்கிள்! யாருக்கும் இப்போவரைக்கும் சொல்லாம இருந்தேன்! லாபம் பார்த்துட்டு வெளில சொல்லலாம்ன்னு” என்று கிஷோர் சொல்ல, ‘அதுவும் சரிதான்’ என்றார் ஷங்கர்.



அந்த பேச்சு அத்தோடு முடிய, “நம்ம கேட்ட தேதிக்கு இங்க எந்த மண்டபமும் ப்ரீயா இல்ல ஷங்கர்! நானும் தினம் நாலு இடம் அலைஞ்சுட்டு தான் இருக்கேன்! என்ன செய்யுறதுன்னு தெரியல!” தன் கவலையை பகிர்ந்துக்கொண்ட சிவகுருவிடம் ‘திருமணத்தை கிராமத்தில் வைத்துக்கொள்ளலாம்’ என எப்படி சொல்வது என யோசித்துக்கொண்டிருந்தார் ஷங்கர்.



அவருக்கு எடுத்துக்கொடுப்பதை போல, “ரிசெப்ஷன்க்கு ஹால் ரெடியா இருக்கு” என்றவர் ஒரு உயர்த்தர ஐந்து நட்சத்திர விடுதியின் பெயரை சொல்ல, ஷங்கருக்குள் மணி ஒலித்தது.



“இன்னும் ஒரே மாசம் தான் சரியா இருக்கு! மண்டபமே கிடைக்கலன்னு சொன்னா எப்படி சிவகுரு? இப்போ என்ன செய்யுறது?” என வேண்டுமென்றே கவலைக்கொண்டார் ஷங்கர். சிவகுருவும் யோசனையோடே இருக்க, “நான் ஒன்னு சொல்றேன், சரிப்படுமான்னு யோசிக்கலாமா?” என்றார் ஷங்கர் பீடிகையாய்.



உடனே சிவகுரு ஒப்புதல் சொல்ல, “எங்க மாமனார் மாமியாருக்கும் வயசாகுது, அவங்க என்னதான் எங்களை அசிங்கப்படுத்துனாலும் எங்களால அவங்களை விட்டு கொடுக்க முடியல!” என்று நிறுத்தியவர், “நம்ம கல்யாணத்தை எங்க கிராமத்துல வச்சுக்கலாமா? உங்களுக்கு எந்த குறையும் வராம நாங்க பார்த்துக்குறோம்! நம்ம பிரண்ட்ஸ் பிசினஸ் பீபுள் எல்லாரையும் இங்க ரிசப்ஷனுக்கு அழைச்சுக்கலாம்! என்ன சொல்ற?” என்றார் தேர்ந்த வணிகன் என்பதை நிரூபிக்கும்படி.



அவரை போன்ற இன்னொரு வணிகனுக்கு புரியாதா? இது திடீரென்ற யோசனை அல்ல, ஏற்கனவே எடுத்துவிட்ட முடிவு, நம்மிடம் இப்போது பகிரப்படுகிறது என்று!!!



மனைவியை ஒருமுறை பார்த்த சிவகுரு பதில் இன்றி மௌனிக்க, “அங்கிள், நான் பெரியவங்க பேச்சுக்கு நடுவுல வரேன்னு தப்பா எடுத்துக்காதீங்க! இது உடனே எடுக்குற முடிவு இல்ல, யோசிக்கணும்! அதனால நம்ம இன்னும் ரெண்டு நாள் பொருத்து இதை பேசுறது சரிப்படும்ன்னு நினைக்குறேன்! அப்பாவும் யோசிக்கட்டும்!” என்ற கிஷோர், “என்னப்பா?” என சம்மதம் கேட்டான்.



சிவகுருவும் ‘ஆம்’ என தலையசைக்க, “பொறுமையாவே யோசிங்க, அவசரமில்ல” என்றார் ஷங்கர். அதற்குள், “எல்லோரும் பேசுனது போதும்! சாப்பிட வாங்க!” என அழைத்திருந்தார் லலிதா. உறவாக போவதற்கு முன்பிருந்தே நட்ப்போடு பழகியிருப்பதால் எந்த தயக்கமும் இன்றி சாப்பிட அமர்ந்தனர். தன் தட்டையும் தாண்டி மாமனார் மாமியாருக்கு வேண்டியதை கேட்டு கேட்டு, அன்னையிடம் சொல்லி வைக்க சொல்லிக்கொண்டிருந்தான் கிஷோர்.



உணவு முடிந்து சிறுது நேரம் பொதுப்படையாய் பேசிக்கொண்டிருந்தவர்கள் கிளம்பும் நேரம் வர, வாசல் வரை சென்றவர்களை, “அங்கிள்!!! கோகிலாவை கேட்டேன்னு சொல்லுங்க” என்றான் கிஷோர் கூச்சத்தோடு!

ஷங்கர் மட்டுமன்றி செல்லத்தின் புருவமும் உயர்ந்தது.



“உன்கிட்ட அவ நம்பர் இருக்குதானேப்பா? இன்னும் நீங்க பேசிக்கலையா?” என வியப்பாய் கேட்க, “அது எப்படி அங்கிள்? நிச்சயமே ஆனாலும் பெரியவங்க பர்மிஷன் இல்லாம ஒரு பொண்ணுகிட்ட பேசமுடியும்? சோ ஐ வாஸ் ஜஸ்ட் வெய்டிங் பார் யூ டு கெட் பர்மிஷன் அங்கிள்!” மிகமிக பவ்வியமாய் கிஷோர் சொன்ன விதத்தில் தன் மகனை பற்றி நன்கு அறிந்த சிவகுருவே ஒரு கணம் சொக்கி போனார் என்றால், ஷங்கரை கேட்கவே வேண்டாம்!! அசந்து போய் நின்றுவிட்டார்.



கிஷோரின் செய்கைகளை கண்ட ஷங்கரின் மனது இதமாய், திருத்தியாய் மாற, அதுவரை நண்பனுக்காக கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்டோமோ? பல வருட வெளிநாட்டு வாசத்தில் இருந்த பையன் எப்படி இருப்பானோ? என்ற சஞ்சலம் அகன்று, ‘என் மகளுக்கு எப்படி ஒரு மாப்பிளையை பிடித்திருக்கிறேன் பார்’ என இன்பன் முன் நிறுத்த வேண்டும் போல அவருக்கு செருக்கு தோன்றியது.



செருக்கு குறையாமலே, “பர்மிஷனே தேவையில்லை! என் பொண்ணு இனி உன் பொறுப்பு கிஷோர்” என வாக்குக்கொடுத்து ஷங்கர் செல்லத்தோடு சென்றுவிட, அவர்கள் கண் விட்டு மறையும்வரை சிரித்த முகமாய் நின்றிருந்த கிஷோர், அவர்கள் தலை மறைந்ததும், திமுதிமுவென தன் அறைக்கு ஓடினான்.



சிவகுருவும் லலிதாவும் அவனை விசித்திரமாய் கண்டு, அவன் பின்னூடே ஓட, அறைக்குள் சென்றவன் கட்டிலுக்கு கீழே படுத்து எதையோ அறக்கபறக்க தேட, அவன் அவசரத்தை கண்டு என்னவோ ஏதோ என்று எண்ணிய லலிதா, “என்னடா காணோம்? சொன்னா அம்மாவும் தேடுவேன்ல?” என்றிட, “ப்ச்! அந்தாளு வந்துட்டானேன்னு புடிச்சுட்டு இருந்த சிகரட்ட அப்படியே கீழ போட்டுட்டு வந்துட்டேன்! அதான் காணோம்! தேடு வேகமா” என்றான் பெரும் பதற்றத்துடன்!!!!



சிவகுரு, ‘இதெல்லாம் திருந்துற ஜென்மமா? ச்சை” என நகர்ந்துவிட்டார். லலிதா மனம் கேளாமல், “இவ்வளோ நேரம் எத்தனை நல்லவனா இருந்த? இப்போ ஏன்டா இப்படி?” என்றிட, அதை காதுக்குள்ளும் அனுப்பாதவன், “ஹப்பா!! கிடைச்சுருச்சு!!” என்றான் பாதி புகைந்திருந்த அந்த சிகரெட் துண்டை எடுத்து!



என்ன சொன்னாலும் அவன் கேட்கமாட்டான் என்ற நிலை வந்ததும், “இப்படி அரை பீடிக்கு ஏன்டா அலையுற? தூக்கி போட்டுட்டு வேற ஒன்னு தான் எடுக்கலாம்ல?” என்று கேட்க, புகையை ஆத்மாத்தமாய் உள்ளுக்கு இழுத்து மிக மெதுவாய் வெளியிட்டவன், “இது வெறும் சிகரெட் இல்ல! பவ்டர் போட்டு குளிப்பாட்டி அஞ்சாயிரத்துக்கு வாங்குன பர்ஸ்ட் கிளாஸ் கொக்கெயின் சிகரெட்” என்றான் ஆழ்ந்து அனுபவித்து.



லலிதாவிற்கு பேச்சுமூச்சில்லை. கிஷோர், “இந்த கல்யாணம் முடியுற வரைக்கும் இப்படி ஏதாவது நடிச்சுட்டே தான் இருக்கணும்!! ச்சை!!” என அலுத்துக்கொண்டான்.



பின்னே சத்தமாய், “கல்யாணத்தை எந்த பட்டிகாட்டுலையும் வச்சுக்க முடியாது! அந்தாளுகிட்ட சொல்லிட சொல்லு உன் புருஷனை! சரியா?” என்றவன் தன் அறையில் இருக்கும் மினி பிரிட்ஜில் இருந்து எதையோ எடுத்து பருக ஆரம்பித்தான். கண்டிப்பாக அது ‘மது’வாக தான் இருக்கும் என யூகித்த லலிதா, கடவுளிடம் ‘என் புள்ளையை நல்வழிப்படுத்துப்பா’ என வேண்டிக்கொண்டே நகர, மேலிருந்த கடவுளோ, ‘முடியாது! முடியாது!’ என மறுப்பு சொன்னது அவருக்கு எங்கே தெரியும்!?
 
குண்டேரிப்பள்ளத்தில் இருந்து கிளம்பிய காண்டீபனும் கோகிலாவும் நேரே அவர்களின் தென்னந்தோப்பிற்கு செல்ல, “இங்கதான் உன் மாமன் நிக்குறான்! போய் ப்ளேடு போடு” என்றான் காண்டீபன். கோகிலாவிடம் அரைமணி நேரம் பேசியதிலேயே அவள் போக்கிற்கு இறங்கி வந்துவிட்டிருந்தான் அவன். இதில் நண்பர்கள் வேறு ஆனதில் அவளிடம் இயல்பாக பேச வந்தது அவனுக்கு.



காருக்குள்ளிருந்தே எட்டிப்பார்த்தாள் கோகிலா. கண்ணுக்கெட்டிய தொலைவில் இன்பன் தென்படுகிறானா என அவள் தேட, “இறங்கி போய்தான் பாக்குறது?” என்றான் காண்டீபன்.

“நான் இறங்கி போற கேப்ல நீ வண்டியை எடுத்துட்டு ஓடிட்டன்னா? மாமா இங்க தான் இருக்காங்கன்னு தெரியாமா நான் எப்படி உன்னை விடுறது?” என்றாள் அவள்.

‘விவரம் தான்’ என முனுமுனுக்கொண்ட காண்டீபன், “அவனோட அல்லக்கைங்க நிக்குது பாரு!!” என்றான் தூரத்தில் தெரிந்த பச்சைக்கிளி வெட்டுக்கிளியை காட்டி.



உடனே பிரகாசமான அவள் முகம், “சூப்பர், அப்போ மாமா இங்க தான் இருக்கணும்!! எஸ்ஸ்ஸ்” என சிறுபிள்ளையாய் சிரித்தாள். அவளை விநோதமாய் பார்த்த காண்டீபன், “அவன் மேல என்ன உனக்கு அவ்வளவு பிரியம்? சிட்டில நீ பார்க்காத பசங்களா? இவன்கிட்ட அப்படி என்ன இருக்கு? கருகருன்னு ஆறடிக்கு மேல நிக்குறான், உருப்படியா ஒரு வேலை இல்லை, எல்லாத்துக்கும் மேல அவன் உன்னை வேண்டாம்ன்னு சொல்றான்! போடான்னு தூக்கி போட்டுட்டு போகாம...?” என்றவனின் முகத்தில் வெறுப்பு ரேகைகள் ஓட, அதை உணர்ந்துக்கொண்டாள் கோகிலா.



“நீக்கூட தான் ஹிந்திக்காரன் மாறி இருக்க! ஆனா சுசீலாவை விரும்பலையா?” என்றதும், ரோஷமாய், “ஹான், சுசீலாவுக்கு என்ன கொறச்சல்? அவ கொஞ்சம் நிறம் மட்டா இருந்தாலும் அதுதான் அவளோட அழகே!!” என்றான்.



“ம்ம்ம்... உன் ஆள சொன்னதும் சுருக்குன்னு வருதோ? அதேதான் எல்லோருக்கும்!! என் ஆளு என் கண்ணுக்கு அழகன் தான்! அழகன் இல்ல, பேரழகன்!!!” என்றாள் கண்சிமிட்டி!!!

பின்னே, “அதுமில்லாம, பொண்ணுங்க அழகை பார்த்து எப்பவும் மனசை தொலைக்கமாட்டாங்க காட்ஜில்லா! உன்கிட்ட எல்லாம் இருந்தும், மத்தவங்க மனசை புரிஞ்சுகிட்டு, தழைஞ்சு போற குணம் இல்லை! ஆனா இன்பா மாமா? மத்தவங்க ஆசைக்கு மதிப்பு குடுக்குறாரு! அதுக்காக தன்னோட ஆசையை கூட தியாகம் பண்றது கோமாளித்தனமா தெரியலாம்! பட் எல்லார் வீட்லயும் ‘அம்மா’ அப்படிதானே இருப்பாங்க? என் கண்ணுக்கு இன்பா மாமா ரொம்ப பெரிய மனுஷனா தெரியுறாரு” என்றாள் கண்களில் கனவு தேக்கி!!



காண்டீபனின் முகம் மேலும் இறுக, அவன் கோவத்தை தடுப்பது ஸ்டியரிங்கை இறுக்கி பற்றியிருக்கும் அவன் கைகளில் தெரிந்தது.

அது புரிந்தாலும், “உனக்கு ஏன் இன்பா மாமாவை பிடிக்கலன்னு எனக்கு சரியா தெரியாது! ஆனா, ஒன்னு மட்டும் நிச்சயம்! மாமா அவர் மனசறிஞ்சு யாரையும் காயப்படுத்த மாட்டாரு! எல்லாம் இருந்தும் எதுவும் வேண்டாம்ன்னு ஒதுங்கி நின்னு, உன்னை உசரத்துல வச்சு பார்க்குறாருன்னா அவர் மனசு எத்தனை ப்யூர்ன்னு நீ புரிஞ்சுக்கணும்!! இதை நான் அவரோட காதலியா இல்லன்னாலும் சொல்லிருப்பேன்!!” என்ற கோகிலா கதவை திறந்துக்கொண்டு இறங்கி, இரண்டடிகள் சென்றவள், மீண்டும் ஓடிவந்து, “நீயும் நானும் ஒரே டீமா ஜாயின் பண்ணிட்டோம்ன்னு யாருக்கும் தெரியக்கூடாது! முக்கியமா பேரின்பன் மாமாக்கு! ஓகே வா காட்ஜில்லா?” என்றவள் பதிலை எதிர்பாராது, தோப்பை நோக்கி நடந்தாள். காண்டீபனின் கார் அவளை கடந்துச் செல்லும் சப்தம் மட்டும் கேட்டது.



தோப்பிற்குள் நுழைய, மரங்கள் சூழ்ந்த அந்த இடத்தில் ஐம்பதுக்கும் மேலே ஆட்கள் வேளையில் இருந்தனர். அதில் பாதி பேர் தென்னை மரத்தின் மீது அமர்ந்து காய்களை பறித்துப்போட்டுக்கொண்டிருக்க, அவளை அடையாளம் கண்டுக்கொண்ட ஒருவர், “பார்த்துப் போங்க அம்மணி, காய் பறிச்சு போட்டுட்டு இருக்காவோ!” என எச்சரிக்கை குரல் கொடுத்தார்.



அவர் குரலில் கிளிகள் இவளை கண்டுக்கொண்டு ஓடி வர, “அக்கா என்ன இம்புட்டு தூரம்?” என்றான் வெட்டுக்கிளி. அடுத்ததாய் பச்சைகிளி, “அண்ணன பார்க்க வந்துருப்பாங்கடா!” என்றான் வெட்டுக்கிளிக்கு பதிலாய்.



கோகிலா தோப்பினுள் நடப்பதை நிறுத்தவேயில்லை. அவள் கண்கள் இன்பனை தான் தேடிக்கொண்டிருந்தன. அருகே பேசிக்கொண்டே கிளிகள் வர காதில் விழுந்தாலும் பதில் சொல்லவில்லை அவள்.



“அண்ணனை எதுக்குடா பாக்கணும்? ஒரே வீட்ல தானே இருக்காங்க?” வெட்டுக்கிளி வேண்டுமென்றே கேட்க, “அட, என்னடா கேள்வி இது? பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருந்துருக்கும்?” பதில் சொன்ன பச்சைக்கிளி ஓரக்கண்ணால் கோகிலாவை நோட்டமிட, அவளிடம் இன்பனின் தேடுதலை தாண்டி எந்த பாதிப்பும் இல்லை.



“அண்ணனை எதுக்கு இவங்க பார்த்துக்கிட்டே இருக்கணும்? எங்கயோ இடிக்குதே?!” வெட்டுக்கிளி ராகம் போட்டு இழுக்க, பச்சைக்கிளி, “அண்ணன கட்டிக்க.....” என ஆரம்பித்தபோது கோகிலா வெடுக்கென திரும்ப பார்த்த ஒரு பார்வையில் அவன் வார்த்தை அப்படியே நின்றது.



திட்டுவாளோ? என அவர்கள் திருதிருவென விழிக்க, “இப்போ என்ன உங்களுக்கு? நான் ஏன் உங்க அண்ணனை தேடி தேடி வரேன்னு தெரிஞ்சுக்கனுமா?” என்று அவள் கேட்டதும், தலையை மேலும் கீழும், இடமும் வலமுமாய் மாற்றி மாற்றி ஆம், இல்லை என ஆட்டிக்கொண்டிருந்தனர் கிளிகள்.



“ஏன்னா? நான் உங்களுக்கு அண்ணி ஆக போறேன்.... அதான்!!!” என்றவள் தன் நடையை தொடர, “ஹான்...?” என வாயை பிளந்துக்கொண்டு நின்றனர் கிளிகள் இரண்டும்.



தோப்பின் ஒரு மூலையில் குவிந்து கிடந்த தேங்காய் மட்டைகளின் மறுபுறம், தேங்காய் உறிக்கும் இரும்பு கம்பியின் தலையில் தேங்காயை ஓங்கி அடுத்து சொருகியவன், வலுகொண்டு அவன், அதன் மட்டையை உரிக்க, இன்பனை கண்டுக்கொண்டவள் துள்ளலுடன் ஓடினாள்.



“மாம்மா...!!!” உற்சாகமான அவள் அழைப்பில், வேலையை நிறுத்திய இன்பன், மூக்கின் மேலிருந்து வழிந்து கொட்டிய வியர்வையை ‘உப்ப்’ என ஊதிவிட்டான்.

உழைப்பில் மெருகேறி நிற்கும் தன் மாமன் மீது உரிமையாய் ஆசையாய் விரவின கோகிலாவின் கண்கள். அவள் பார்வையில் இன்பனுக்கு அடிவயிற்றில் மெல்லிய சாரலாய் ஓர் உணர்வு பிரவாகமெடுக்க, அதை மறைத்தபடி, “குண்டேரிப்பள்ளம் எப்புடி இருந்துச்சு?” என்றான் அடுத்த தேங்காயை கையில் எடுத்தபடி.



“உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றவளுக்கு, “எனக்கு தெரியாம எதுவும் நடக்காது!!!” என்றவன் ‘எதுவும்’ என்பதை அழுத்தமாய் சொன்னான்.



அவன் சொன்ன இருபொருளை கண்டுக்கொல்லாதவள், “நான் உங்க தம்பிக்கூட போனேன் மாமா!” என்றாள். அவன் சன்னமாய் சிரித்து, “தெரியும்!!” என்றான்.



“என்ன பேசுனேன்னு தெரிய வேண்டாமா?” என்ற கோகிலா கள்ளச்சிரிப்பு சிரிக்க, “வேண்டாம்!!” என்றான் இன்பன் பேச்சை முடிக்கும் பொருட்டு!! அவனை அப்படியே விட்டுவிட்டால் எப்படி? கோகிலா அடுத்து தொடர்ந்தாள்.

“என்ன மாமா? கல்யாணம் ஆகபோற சந்தோசமே உங்க முகத்துல இல்லையே? இந்நேரம் சுசீலாக்கூட உட்காந்து பேசிக்கிட்டு இருப்பீங்கன்னு இல்ல நினைச்சேன்!” அவன் கலையிழந்த முகத்தை சுட்டிக்காட்டி அவள் கிண்டல் பேச, இழுத்துப்பிடித்து சிரித்தான் இன்பன்.



“பேசுங்க மாமா? ஏன் அமைதியா இருக்கீங்க?” என்று கேட்டவளிடம் ஒரு செவ்வெளநீரை எடுத்து சீவி கையில் கொடுத்தான் இன்பன். மறுக்காமல் அவள் வாங்கி பருக, அதுவரை பொறுத்திருந்தவன், தேங்காயை இரண்டாய் வெட்டி உள்ளிருக்கும் பருப்பை அவள் சாப்பிட ஏதுவாய் எடுத்து கொடுத்துவிட்டு, “என்னால இயல்பா இருக்க முடியல கோகிலா” என்றான்.



அவள் முகம் கேள்வியை தாங்க, “என்கிட்டே எதுவும் கேட்காத! நீ என்னை ரொம்ப பாதிக்குற, அது மட்டும் தான் என்னால சொல்ல முடியும்!! முப்பத்தி ரெண்டு வருஷமா எனக்குன்னு எந்த ஆசையும் வச்சுக்காம வாழ்ந்துட்டேன்! இனிமேலும் எனக்கு என்னோட தனிப்பட்ட ஆசை முக்கியம் இல்லை! புரிஞ்சுக்கோ என்னை!!!” எங்கோ பார்த்துக்கொண்டே சொன்னான் பேரின்பன்.



“நம்ம பழைய மாறி இருக்கலாமே கோகிலா? வந்த புதுசல எந்த எண்ணமும் இல்லாம என்கிட்டே விளையாட்டுத்தனமா இருந்தியே? அப்படியே இரேன்!!?” இறைஞ்சினான். கோகிலாவை விலக்கி நிறுத்தவும் முடியாது, நெருங்கி வரவிடவும் முடியாது திண்டாடினான்.



காலையில் வீரமாய் பரிசம் போட ஒப்புதல் கொடுத்துவிட்டு வந்துவிட்டாலும் மனம் முழுக்க ரணமாய் மாறி அவனை வாட்டியது. சுசீலாவை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதேநேரம் கோகிலாவை விட்டுக்கொடுக்கவும் முடியாது என மனம் சொல்ல, நொந்தே போயிருந்தான். அந்த நேரம் அவன் முன்னே வந்து ரம்யமாய் புன்னகிப்பவளை அவனால் புறக்கணிக்கவோ, ஒதுக்கவோ முடியாது அவன் திணறிய நிலையின் வெளிப்பாடு தான் அவனது இறைஞ்சல்.



அவன் மனநிலை ஒருவாறாய் அவளுக்கு புரிய, இதமான குரலில், “இவ்வளோ நாள் எந்த ஆசையும் நீங்க வச்சுக்கலை! இனியாது, நீங்க ஆசைப்படுற என்னை உங்ககூடவே வச்சுக்கோங்களேன் மாமா?” என்றாள்.



“ப்ச்!! உனக்கு பொறுமையா சொன்னா புரியாதா? தினம் தினம் உன்னோட என்னால போராட முடியாது!! கொஞ்சமாவது திருந்து!! பைத்தியம் மாறி பண்ணாத!!” குரலுரத்தி முகத்தில் கடுமையுடன் அவன் சொன்னதும், ஒரு நீண்ட நொடி அவன் முகத்தை இமைக்காது பார்த்தவள், “திருந்திட்டேன் மாமா, இந்த நிமிஷத்துல இருந்து திருந்திட்டேன்!!” என சொல்ல, இன்பனால் நம்பமுடியவில்லை.



“இனி என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு உங்ககிட்ட வந்து நிக்க மாட்டேன்!! நீயே வந்து என்னை கல்யாணம் பண்ணிப்பன்னு சவால் விட மாட்டேன்!! நான் திருந்திட்டேன்!!” என்று திடமாய் அவள் சொல்ல, “ஏய்... பைத்தியம்!! எப்பவும் விளையாட்டு தானா?” என திட்டினான் இன்பன்.



“இல்ல மாமா! நான் என் முழு சுயநினைவோட தான் சொல்றேன்! நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறெதுவுமில்லை” நெஞ்சின் மீது கைவைத்து அவன் உறுதிமொழி போல கூற, தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து சென்றான் இன்பன்.



அவன் பின்னாலே ஓடியவள், “இன்னும் என் மேல நம்பிக்கை இல்லையா மாமா? சத்தியமா நான் திருந்திட்டேன்!!” என்றவள் அப்போது எதிர்ப்பட்ட கிளிகளை காட்டி, “இதோ உன்னோட அல்லக்கை கிளிங்க மேல சத்தியமா சொல்றேன், இனி உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்க மாட்டேன்!! கேட்க மாட்டேன்!! கேட்க மாட்டேன்!!” என்றாள் சற்று சத்தமாகவே.



“உஸ்ஸ்....!!” தன் உதட்டின் மீது விரல் வைத்து அவளை அமைதி காக்க சொன்னவன், சற்றே தள்ளி இருந்த பம்ப்பு செட்டில் பொங்கிய வழிந்த நீரில் முகத்தை வேகமாய் அடித்து கழுவ, கோகிலா அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.



கிளிகளோ, ‘அஞ்சு நிமிஷம் முன்னாடி தான் நமக்கு அண்ணின்னு சொல்லுச்சு இந்தக்கா! இப்போ என்னன்னா நம்ம மேல சத்தியமா அண்ணனை கட்டிக்க கேட்க மாட்டேன்னு சொல்லுது?’ என விழி பிதுங்க புலம்பிக்கொண்டிருந்தனர்.



முகம் கழுவியதும் புது தெம்புடன் சிறு தெளிவும் பிறக்க, இடுப்பில் இருகைகளையும் வைத்துக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.



“என்ன மாமா பார்க்குறீங்க?” கோகிலா கேட்க, “எப்படி கேட்டதுமே சரின்னு சொல்ற? சந்தேகமா இருக்கே?” என அவளை சரியாய் படித்தான் இன்பன்.



“பழகின ரெண்டே நாள்ல உங்களை பிடிச்சு போகலையா? அதே மாறிதான் நீங்க திட்டுனதும் திருந்திட்டேன்! அதான் சத்தியம் கூட செஞ்சேனே!!?” என்று தடுமாற்றமின்றி சொல்ல, இன்பன் ‘சரி’ என தலையசைக்க வேண்டியதாய் போயிற்று.



“மாமா, இனி நீங்களும் நானும் பெஸ்ட் பிரண்ட்ஸ்! ஓகே வா?” என புன்னகித்து கரம் கொடுப்பவளிடம் தன்னை மீறி தன் கரத்தை ஒப்படைத்திருந்தான் இன்பன்.



கிளிகளை விட்டு தூரமாய் அவனை அழைத்து சென்றவள், “மாமா முக்கியமான ஒரு விஷயம் சொல்றேன் உன்கிட்ட!! சீக்ரெட்டா வச்சுக்கோ!!” என்றாள்.



“ஒன்னு மரியாதை குடு, இல்லன்னா குடுக்காத!! அதென்ன அப்போ அப்போ ‘ங்க’ போடுற, அப்புறம் அத காத்துல விட்டுடுற?” அடிக்கடி அவன் மனதில் உதயமாகும் ஐயத்தை அவன் கேட்டுவிட, “மரியாதை வரப்போ வச்சுகோ மாமா! ரொம்ப முக்கியமா இது!!?” என அதட்டிய கோகிலா, “யூ க்நொவ் ஒன் திங், காட்ஜில்லா ஸ் இன் லவ்!!!!” என்றாள் ரகசியமாய்.



“அது யாரு காட்ஜில்லா?”



“ம்ச்.. உங்க தம்பி தான்!!!” என்ற கோகிலாவை அவன் முறைக்க, “அதை விடு மாமா!! காண்டு யாரை லவ்வுது தெரியுமா?” என்றாள் இன்னும் ரகசியமாய்.



சற்றும் யோசிக்காது, “சுசீலாவை தானே?” என கேட்ட இன்பனை மிகுந்த ஆச்சர்யத்துடன், “எப்புடி மாமா?” என்றாள்.



“அதான் சொன்னேனே! எனக்கு தெரியாம எதுவுமே நடக்காதுன்னு!!” என்ற இன்பன் சிரித்துக்கொண்டே திரும்பி நடக்க, “மாமா மாமா, நீ சுசியை கட்டிக்கிட்டா காண்டீபன் பாவமுள்ள?” என்றாள் முகத்தை பரிதாபமாய் வைத்துக்கொண்டு.



“அதுக்கு அவன் தான் ஏதாவது செய்யணும்! நான் ஒன்னும் பண்ண முடியாது” அவன் முன்பே எடுத்திருந்த முடிவை அவளிடம் சொல்லாது மறைத்தான். சொல்லியிருக்க வேண்டுமோ?!



“அப்போ உனக்கு சுசியை பிடிக்குமா?”



“ம்ம்.. பிடிக்கும்!!” தயங்காமல் வந்தது இன்பனின் பதில். அவன் மனதில் கோகிலா மேல் நம்பிக்கை இல்லை. அவள் எதற்கோ காய் நகர்த்துகிறாள் என அவன் உள்ளுணர்வு இடித்தது. சுசியை காண்டீபனுக்கு விட்டுத்தர ஒப்புக்கொண்டால், கோகிலா இன்னமும் தன் மீது ஆர்வத்துடனே இருப்பாள் என எண்ணி இப்படி சொல்லிவிட்டான்.



ஒண்டிவீரர் கேட்ட சத்தியம் ஒரு காரணமென்றால், ஷங்கரின் மனசாட்சியற்ற அன்றைய வாக்குவாதம் ஒரு காரணம். சேற்றில் மலர்ந்த செந்தாமரையாய் கோகிலா இருக்கலாம். ஆனால், பூவை பறிக்க சேற்றில் அல்லவா இறங்க வேண்டும்? பூவே வேண்டாம் என்ற நிலை தான் இன்பனுடையது. அதையும் தாண்டி அவள் வேறு ஒருவனுக்கு நிட்சயமானவள் என்பதை சொல்லாமல் விட்டது கொசுறு கணக்கில் அவன் மனதில் தேங்கி நிற்கிறது.



“நிஜமாவா மாமா?” மீண்டும் கேட்டாள்.



“பிடிக்காமையா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிருக்கேன்!! என்னையே சுத்தி சுத்தி வரா! வேற என்ன வேணும்?” என்றிட, ‘நான் கூட தான் மான ரோஷம் பாக்காம உன்னையே சுத்தி சுத்தி வரேன், ஹும்ம்!’ என மனதுக்குள் நொடித்துக்கொண்டாள் கோகிலா.



“ஒருவேளை காண்டீபன் மாமா சுசியை கரெக்ட் பண்ணிட்டா?” கிடுக்குப்பிடியாய் அடுத்த கேள்வி அவளிடமிருந்து.



அதற்கும் தாமதிக்காது, “சுசீலா ஒத்துக்கிட்டா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை! விட்டு கொடுக்க தயார்” என சொல்லிட, “இது போதுமே!!” என சிரித்தாள் கோகிலா.



“ஓகே மாமா!! காண்டீபன் சுசீலாவை விரும்புறது நமக்குள்ளயே இருக்கட்டும்! நம்ம ரெண்டு பேரும் ஒரே டீமுன்னு யாருக்கும் தெரியக்கூடாது! முக்கியமா சுசீலாவுக்கு!! ஓகே வா?” என்று கேட்டு அவனிடம் ஒப்புதல் வாங்கிய பின்னரே அவனை நகரவிட்டாள் கோகிலா.



மார்கெட்டிங் மூளை பக்காவாக வேலை செய்தது அவளுக்கு. காண்டீபனிடம் போட்ட அதே டீலை கொஞ்சமாய் பெயின்டிங் டிங்கரிங் பார்த்து இன்பனிடம் டீல் பேசிவிட்டாள்.



இன்பன் சென்றதும் அவளிடம் ஓடி வந்த கிளிகள், “யக்கா? என்னக்கா இப்படி பொசுக்குன்னு சத்தியம் பண்ணிபுட்ட? அப்போ எங்க அண்ணனை நீ கட்டிக்க மாட்டியா?” என்று கேட்டதும், கிளுக்கி சிரித்தவள், “என்னை தவற வேற எவளாது கட்டிடுவாளா என் மாமன?” என்றாள் மிதப்பாய்.



“அப்போ அந்த சத்தியம்!?”

“சும்ம்ம்ம்ம்ம்மா.....”



“அய்யோ எங்க உசுரு போச்சே!! செஞ்ச சத்தியத்தை மீறிட்டா, பொங்கசோறு தொண்டையில சிக்கி செத்துருவோம்ன்னு எங்காயா சொல்லுமே!! போச்சேஏஏ....!!!” என தலையில் அடித்துக்கொண்டு அவர்கள் அழ,



“மூச்!!!!!! இந்த விஷயம் வெளில போனா தான் உங்க உசுரு போகும், அதுவும் என் கையால!!!” கோகிலா மிரட்டிய தொனியில் வாயை மூடிக்கொண்ட கிளிகள், மிரண்டு போய் பார்க்க, “ரெண்டு அடிமைங்க சிக்கிருச்சு டோய்!!!” என்றெண்ணி கலகலத்து சிரித்தாள் கோகிலா.



இந்த சிரிப்பு மறையும் நாள் வெகு தொலைவில் இல்லை என அசரீரி கேட்டதோ!?



-தொடரும்....
 
Top