Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 14 (2)

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 14(2)

“ஏய் வைதேகி, இங்க பாரு என் பையன் என்னை பார்த்து சிரிக்குறான்” பிறந்து ஒரு மாதமே ஆன தன் இளைய மகனை கையில் ஏந்திக்கொண்டு, அவன் உறக்கத்தில் மெலிதாய் சிரிப்பதை அந்த சோளக்காடே கேட்கும்படி கத்தி சொல்லிக்கொண்டிருந்தார் சத்தியராஜன்.



“நிறத்தை பாரேன், அப்படியே உன்னை உரிச்சு வச்சுருக்கான்!! கண்ணு மூக்கு எல்லாம்...!!” ரசித்து ரசித்து பேசியவரின் பேச்சை கேட்டுக்கொண்டே அறையில் இருந்து வெளியே வந்த வைதேகி, தன் வெண்பற்கள் காட்டி பளிச்சென சிரித்து, “ஒரு மாசத்துலயே உங்களுக்கு ஜாடை எல்லாம் தெரியுதா?” என விளையாட்டாய் கேட்க, பிள்ளையிடம் இருந்து தாயிடம் பார்வையை திருப்பிய சத்தியனுக்கு, அதன் பின் மகனிடம் கவனம் போகவில்லை.



ஒன்பது மாதம் முடியும் தருவாயில் வைதேகியை அன்னை வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார் சத்தியராஜன். போன மறுநாளே பிரசவ வலியெடுக்க, அவரை ஓரளவு படுத்திவிட்டு பூமியை காண வந்திருந்தான் காண்டீபன். அன்னை வீட்டு சீராட்டலில் மூன்று மாதம் இருக்கலாம் என கேட்ட வைதேகியின் ஆசையில் ஆடிப்போனார் சத்தியராஜன்.



‘உன்னைவிட்டுட்டு அவ்வளோ நாளெல்லாம் என்னால இருக்க முடியாது! வேணுன்னா ஒரு பத்து நாள் இருந்துட்டு வா!!’ என அவர் அனுமதிக்கொடுக்க, இதோ அதோவென ஒரு மாதத்தை அன்னை வீட்டில் ஓட்டிவிட்டு அன்று காலையில் தான் வந்திருந்தார் வைதேகி. அவராக வரவில்லை, எட்டாம் வருட திருமணநாளை கொண்டாட, காரோடு சென்று மனைவியை அழைத்து வந்திருந்தார் சத்தியராஜன்.



மனைவி மீது அத்தனை காதலா? என்றால் தயங்காமல், ‘ஆம்!’ என்றுதான் உரைப்பார் அவர். ஒட்டுமொத்த ஊரிலும் வைதேகி அழகிற்கு ஈடு ஒருவரும் இல்லை! சாத்வீகமான அவர் அழகு சத்தியனை தடம் புரள செய்ய, தூரத்து சொந்தமாய் வேறு போனதால், அவர் ஆசைக்கு யாரும் தடையிடவில்லை.



வைதேகி ஒன்றை ‘வேண்டும்’ என சொல்லும்முன்பே அவர் முன் கொண்டு வந்து வைத்துவிடுவார் சத்தியராஜன். நாளுக்கு நாள் கூடிய அவர்கள் அன்னியோன்யம் ஒண்டிவீரர் தம்பதிக்கு நிறைவையே கொடுத்தாலும், திருமணமாகாத இரு பெண்கள் வீட்டில் இருப்பதால், இருபக்கமும் நல்லதாய் அமையட்டும் என திருமணமான சிறிது நாட்களிலேயே சோளக்காட்டிற்க்கு தனிக்குடித்தனம் வைத்துவிட்டார் ஒண்டிவீரர்.



இந்த ஏழு வருட மணவாழ்வில் இருவருக்குள்ளும் பிணக்கு என வந்தது போல அவர்களுக்கு நினைவு கூட இருக்காது. வைதேகி இயல்பிலேயே அத்தனை எளிதில் கோவம் கொள்ள மாட்டார். எப்போதும் அவரை சிரித்த முகமாகவே பார்க்க முடியும்! ஆனால், சத்தியராஜனோ, அதிகம் யாரிடமும் பேசாது, ஏன் சிரிக்க கூட யோசிக்கும் ரகம்! அவர் சிரிப்பதும், விளையாடுவதும் வைதேகியிடம் மட்டுமே!



உருவத்தில் தந்தையை கொண்டிருந்தாலும் பேரின்பன் குணத்தில் வைதேகியை போல! அதேப்போல், காண்டீபன் வைதேகியின் அழகை தன்னிடம் கொண்டிருந்தாலும், இயல்பு மட்டும் சத்தியராஜனை போன்றே!!!



தன் முன் நிற்கும் மனைவியை மையலுடன் பார்வையில் வருடியவர், “எப்டிடி ஏழு வருஷத்துக்கு முன்ன பார்த்த மாறியே கும்முன்னு இருக்க?” என குறும்பு வழிய கேட்டதும், படக்கென திரும்பிய வைதேகியின் விழிகள் தன் மூத்த மகனைத்தான் தேடியது.



வெளித்திண்ணையில் அமர்ந்து அன்னை கொடுத்திருந்த வறுத்த கடலையை மென்றுக்கொண்டிருந்த ஆறு வயது இன்பனின் பார்வை முழுக்க, தந்தை கைகளில் இருந்த தன் தம்பியையே ஏக்கமாய் வட்டமிட்டன.



சத்தியன் பேச்சு அவனை எட்டியிருக்க வாய்ப்பில்லை என தெரிந்ததும் ஆசுவாசமாய் மூச்சுவிட்ட வைதேகி, கணவனை நெருங்கி, “பையன் இருக்கப்போ இப்டியெல்லாம் பேசாதீங்க! அவனுக்கு நம்ம பேச்செல்லாம் ஓரளவு புரியும்!!” என்றபடி காண்டீபனை கையில் ஏந்திக்கொண்டார்.



நூல் புடவையில் கட்டியிருந்த தொட்டிலில் குனிந்து குழந்தையை மெல்ல படுக்க வைத்தவரை பின்னிருந்து சத்தியன் அணைக்க, துள்ளி நகர்ந்தார் வைதேகி.



“என்னங்க நீங்க?”



“ஏண்டி ஒரு மாச குழந்தைக்கு நம்ம பேசுறது புரிஞ்சுடுமா? என்னையே ஏமாத்துற பாரு” என்றவர் மீண்டும் நெருங்க, “ம்ம்!! நமக்கும் இன்னொரு பையனும் இருக்கான், நியாபகம் இருக்கட்டும்” என சிரித்தபடி சொன்னவர் அவர்களையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கும் இன்பனை ஜாடைக் காட்டிவிட்டு அடுக்களைக்கு செல்ல, அவனை பார்த்த சத்தியனுக்கு, ஏனோ ‘அவனும் என் மகனே’ என்ற எண்ணம் எப்போதும் போல வராது போனது.



உணவு சமைக்கும் வேலையில் வைதேகி இறங்க, இன்பனை முறைத்துப்பார்த்துக்கொண்டிருந்த சத்தியன் பின்னே, “வைதேகிமா, நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்டா” என்றார்.



“அட, கொஞ்சல் எல்லாம் பலமா இருக்கே!!” என சிரித்த வைதேகியும், கை போன போக்கில் வேலைகளை செய்ய, “ப்ச்! இன்னைக்கு தான் நம்ம முழுக்க வெளில போறோம்ன்னு சொன்னேன்ல? அப்புறம் எதுக்கு சமைக்குற?” என்றார்.



“இல்லங்க! இன்பன் பசி தாங்க மாட்டான்! அதான் அவனுக்கு மட்டும் கொஞ்சமா ராகி தோசையும் தேங்கா சட்னியும் செஞ்சு குடுக்கலாம்ன்னு” என்றவர் தன் வேலைகளை செய்துக்கொண்டே சொல்ல, வேகமாய் அவரிடம் சென்ற சத்தியன், எரிந்துக்கொண்டிருந்த விறகடுப்பில் தண்ணீரை அள்ளி ஊற்றிவிட்டு, “உன்கிட்ட பேசணும், வா” என்றார் கடுப்பாய்.



அவர் திடீர் கோவத்தில் துணுக்குற்ற வைதேகி, மௌனமாய் அவர் அருகே சென்று அமர, சத்தியன் பார்வை தரையை அளந்தது.



சிறிது பொறுத்துப்பார்த்த வைதேகி, “என்னங்க பேசணும்?” என்றார்.



வெளியே அமர்ந்து இவர்களை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த இன்பனை ஒருமுறை பார்த்த சத்தியன் பின்னே மெல்லிய குரலில் தொடங்கினார்.

“நம்மக்கிட்ட இத்தனை சொத்து இருந்தும், எங்கப்பா இந்த வயலை மட்டும் என்னோட பொறுப்புல விட்டாங்க! நானும் நல்லபடியா விளைச்சல் எடுத்து, அப்பாக்கிட்ட நல்ல பேரெடுக்கனும்ன்னு உழைச்சேன், அது உனக்கே தெரியும்!!!

ஆனா, என் உழைப்பு முழுக்க ஒரே ராத்திரில கருகிப்போச்சு!” என்றார் வேதனையாய்.



ரோட்டோர பழைய பிளாஸ்டிக் கழிவுகளை குவித்து அதற்க்கு தீ வைத்திருக்க, எரிந்துக்கொண்டிருந்தவற்றை அந்த பக்கம் சென்ற இரு மாடுகள் சண்டையிட்டுக்கொண்டதில் சிதறி விட, வயலில் விழுந்த நெருப்பு குப்பைகளால், மெதுவாய் ஆரம்பித்த தீ, யாரும் கவனிக்காததால் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து பாதி வயலுக்கு பரவிவிட்டது.



வைதேகி அன்னை வீட்டில் இருந்ததால் சத்தியன் பெரிய வீட்டில் தங்கியது வேறு தீயை அணைக்கவோ, தடுக்கவோ வழி இல்லாமல் போய்விட, வெகு நேரத்திற்கு பிறகு செய்தி தெரிந்து அவர்கள் வந்து பார்த்தபோது பாதிக்கு மேல் காணாமல் போயிருந்தது.



இது நடந்து ஒரு வாரமே ஆகியிருக்க, கருகி கிடக்கும் வயலை பார்க்க வைதேகிக்கே நெஞ்சு வலித்தது.



சத்தியன் வருத்தமாய் சொல்ல, அவர் கரத்தை ஆதரவாய் பிடித்துக்கொண்ட வைதேகி, “ஏதோ நம்ம போறாத காலம், இப்படி நடந்துடுச்சு! விடுங்க, இந்த முறை சாகுபடியை இரட்டிப்பாக்கி குடுத்து மாமாக்கிட்ட நல்ல பேரெடுத்துடலாம்...” என்றார் மென்மையாய்.



அவர் பதிலில் சத்தியன் முகம் திருப்தியின்மையை காட்ட, “இதுக்கு முன்னாடி நான் லாட்டரி பிசினஸ் செஞ்சேன்! நல்லா போய்க்கிட்டு இருந்தது திடீர்ன்னு நஷ்டம் வச்சு விழுந்துடுச்சு” என்றார்.



‘இப்போது எதற்கு இந்த பழங்கதை?’ என்பதை போல அவரை பார்த்த வைதேகி, “கவர்மெண்டு லாட்டரியை தடை செஞ்சதுக்கு நம்ம என்னங்க பண்ண முடியும்?” என்றார் அவர்.



“ப்ச்” என உச்சுக்கொட்டியவர், “அடுத்தடுத்து நான் செஞ்ச எந்த தொழிலும் உருப்படல! எங்க நகைக்கடைலையே அந்த ஷங்கர் பய கல்லால உட்கார, நான் வேலைக்காரனா நின்னேன்!!” என்றவரின் பேச்சில் கோவம் துளிர்த்தது.



“என்ன இருந்தாலும் ஷங்கர் அண்ணா இப்போ நம்ம வீட்டு மாப்பிள்ளை! இப்படியெல்லாம் பேசாதீங்க?” வைதேகி கண்டிப்புடனே சொல்ல, “அவன் செல்லத்தை இழுத்துட்டு ஓடுனதால தானே, தங்கத்துக்கு எவனையே புடிச்சு கட்டி வச்சு இப்ப ரெண்டு மாசத்துல தாலியறுத்து நிக்குறா!! அவனுக்கென்ன மரியாதை?” என ஆவேசமாய் கத்தினார் சத்தியராஜன்.



இதைப்பற்றி பேசுவது இது முதல் முறையல்ல என்பதால், “நீங்க ஏதோ பேசனும்ன்னு சொன்னீங்களே? அது என்னனு சொல்லுங்க” என்றார் வைதேகி பொறுமையாய்.



வைதேகி கேட்டவுடன் தான் பேச வேண்டிய காரியத்தின் முக்கியத்துவம் விளங்க, அமைதியாய் சில நொடிகள் இருந்த சத்தியனை, “என்னனு சொல்லுங்க” என ஊக்கினார் வைதேகி.



“அது...!! நம்ம கொளப்பலூர் ஜோசியரை பார்த்தேன்”



“ஹோ! என்ன சொன்னாரு? பையனுக்கு எப்போ பேரு வைக்குறதாம்?” என பரபரத்தார் வைதேகி.



“நான் அதைப்பத்தி கேட்கல அவர்க்கிட்ட”



“பின்ன, வேறென்ன பேசுனீங்க?”



“அது வந்து! எனக்கு ஒரு ஆறு வருஷமாவே தொட்டது எதுவும் துவங்காம போகுதுன்னு சொன்னேன்! அவர் நம்ம எல்லார் ஜாதகத்தையும் கணிச்சு பார்த்தாரு!” என சொல்ல, வைதேகி அவரை கூர்மையாக கவனித்துக்கொண்டிருந்தார்.



“இந்த இன்பன் உதிச்ச நேரமே சரியில்லையாம்மா! அப்போ இருந்தே உங்களுக்கு ஒன்னும் சரியா இருந்துருக்காதேன்னு சொன்னாரு! அது உண்மை தானே? இல்லனா அத்தனை நாள் இல்லாம கவர்ன்மென்ட் ஏன் அந்த வருஷம் லாட்டரியை தடை பண்ணனும் சொல்லு?” என்றார் வைதேகியிடமே!



“வயித்துல அவன் வளர வளர உங்க கெட்ட நேரமும் வளர்ந்துட்டே இருந்துருக்கும்ன்னு அவர் சொல்ல, எனக்கு ஆச்சர்யம்! நான் அடுத்தடுத்து செஞ்ச எந்த தொழிலும் விளங்காம தானே போச்சு!!”



வைதேகி ஒருவார்த்தை கூட இடையே பேசாது வெறித்த முகத்தோடு அமர்ந்திருக்க, அவர் கண்களை பார்த்து பேசக்கூட திராணி இன்றி எங்கோ பார்த்தபடி மேலே தொடர்ந்தார் சத்தியராஜன்.



“எந்த வேலையும் எனக்கு சரிப்படலன்னு எங்கப்பா நகைக்கடைக்கே போனா, அங்கயும் உரிமையா கல்லால உட்காராம வேலையாளா தானே நின்னேன்? முதலாளியா சொகுசா இருந்த என்னை, ஒரே நாள்ல வேலைக்காரனா மாத்திட்டு தானே இந்த சனியன் பொறந்துச்சு?” அத்தனை வெறுப்பு அவர் பேச்சில்!



“அதுக்கு பிறகாவது ஏதாவது நல்லபடியா நடந்துச்சுன்னு சொல்லு பாக்கலாம்? ஒன்னும் இல்ல! போன வருஷம் தான் அப்பா எனக்குன்னு இந்த நிலத்தை குடுத்து விவசாயம் பாருன்னு சொன்னாரு! அந்த நேரம் நம்ம குட்டி உன் வயித்துல வந்தான்! அதுக்கு பிறகு எல்லாம் யோகம் தானே? பொறந்து ஒரே மாசத்துல ஜவுளிக்கடை பொறுப்பு முழுக்க எனக்கு வாங்கிக்குடுத்துட்டானே என் சின்னக்குட்டி!!” என்றார் பெருமை பொங்க தன் சின்ன மகனை.



“ஆனா, இன்பன்? அவன் பேருல இந்த நிலத்தை பதிஞ்சு குடுத்தப்போவே எனக்கு உடன்ப்பாடில்லை! நான் பயந்தமாறி அன்னைக்கு ராத்திரியே விளைச்சல் முழுக்க எரிஞ்சு மண்ணாப்போச்சு!!” என்றார் தலையில் அடித்துக்கொண்டு.



வைதேகியின் வெறித்த பார்வை இன்னும் மாறாது இருக்க, மெல்ல நிமிர்ந்து அவரை பார்த்த சத்தியன் மெதுவாய் அவர் தோள் தொட, உணர்ச்சி துடித்த குரலில், “இப்போ என்ன சொல்ல வரீங்க?” என்றார் வைதேகி.



ஒரு வேகத்தில் இத்தனையும் பேசிவிட்டாலும், சொல்ல வந்த விஷயத்தை எப்படி ஆரம்பித்து சம்மதம் வாங்குவது என தயங்கினார் சத்தியன்.



சொல்லித்தானே ஆக வேண்டும் என்ற முடிவுடன், “ஜோசியர், அம்மாவாசை ராகுக்காலத்துல பொறந்த பையனை நீங்க கூடவே வச்சுக்கிட்டு இருக்கிறது உங்க வளர்ச்சிக்கு தடையா தான் இருக்கும், மேலும் அது உங்க சின்ன மகனையும் பாதிக்கும்ன்னு சொல்லிட்டாரு! எனக்கு ரொம்ப பயமா போச்சு!!” என்றவர், “இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கான்னு கேட்டேன், அதுக்கு, அவர் சொன்னாரு....” என்றபடி வைதேகியை அவர் நோட்டம் பார்க்க, அவர் முகம் இறுகிப்போயிருந்தது.



‘என்ன ஆனாலும் இன்றோடு பேசிவிடுவது’ என முடிவெடுத்தவர் போல, “இன்பனை யாருக்காவது தத்துக்குடுத்துட்டா நம்ம கெட்ட நேரம் எல்லாம் முடிஞ்சுடும், சின்னவனுக்கும் இன்பனால எந்த பாதிப்பும் இருக்காதுன்னு சொன்னாரு வைதேகி, எனக்கும் அதுதான் சரின்னு தோணுச்சு!

விசாரிச்சதுல ரொம்ப வருஷமா குழந்தை இல்லாத ஒரு தம்பதி இருக்குறதா தெரிஞ்ச ஒருத்தர் சொன்னாங்க, நல்ல வசதியாம்! துபாய்ல வேலைப்பார்க்குறாங்க, இன்பனை குடுத்தா துபாய்க்கே கூட்டிட்டு போய்டுவாங்களாம்! ஜாதகம் மேல எல்லாம் நம்பிக்கை இல்லன்னு சொல்றாங்க!! அவங்ககூட அனுப்பிட்டா இவனும் நல்லா வசதியா இருக்க போறான்! நம்மளும் நிம்மதியா......” சத்தியன் அந்த வரியை முடிக்கும் முன்னே ஒரு மண் பானை நடுவீட்டில் நொறுங்கி விழ, வெளியே இருந்த இன்பன் சத்தத்தில் பயந்து ஓடி வந்தான் அன்னையிடம்.



தன் காலைக்கட்டிக்கொண்டு நின்ற இன்பனை, தன்னோடு சேர்த்து பிடித்த அணைத்த வைதேகி, “தத்துக்குடுக்குறீங்களா? யாரு பெத்த புள்ளையா யாருக்கு தத்து குடுக்குறது? இவனுக்கு என்னங்க தெரியும்? நடக்குற எல்லாத்துக்கும் இவன் தான் காரணம்ன்னு இவன்மேல பழியை போடுறீங்க? எவனுக்காவது புள்ளை வேணுன்னா அவங்களை பெத்துக்க சொல்லுங்க, முடியாதுன்னா, தத்து எடுத்துக்க நிறைய இடம் இருக்கு, ஆதரவில்லாம அனேக குழந்தைங்க தவிக்குறாங்க! அங்க போக சொல்லுங்க! அதை விட்டுட்டு என் பிள்ளையை நான் எதுக்கு குடுக்கணும்? அவனுக்கென்ன அப்பா இல்லையா இல்ல அம்மா தான் செத்துட்டேனா?” என்றார் ஆவேசமாய்.



“புரியாம பேசாத வைதேகி, உனக்கு வேணுனா நீ பெத்த புள்ள உசத்தியா இருக்கலாம், அதுக்கான அவன் ராசிக்கெட்டவன் இல்லன்னு ஆகிடுமா?” என்றார் கோவமாய்.



அவரை விட கோவமாய், “ராசிக்கெட்டவனா? என்ன பேச்சு பேசுறீங்க நீங்க? இவன் எனக்கு மட்டுமா புள்ள, உங்களுக்கு இல்லையா?” என்றார் வைதேகி.



“அவன் எனக்கும் புள்ள தான், அப்போ அவனைப்பத்தின முடிவ நான் எடுக்கக்கூடாதா வைதேகி?”



‘அம்மா, அம்மா’ என்ற இன்பனின் அழுகை இருவரையும் எட்டவில்லை.



“தாராளமா எடுக்கலாம்! ஆனா அது நல்ல முடிவா இருக்கணும்! நம்ம பையனை எவனுக்கோ தூக்கி குடுக்கப்போறேன்னு பேசுறது நல்ல முடிவா? ஆமா, இதெல்லாம் உங்க வீட்டுக்கு தெரியுமா?”



குரல் சிறுக்க, “யாருக்கும் தெரியாது! உன்கிட்ட மட்டும் சொல்லிட்டு, கடைசியா எல்லாருக்கும் செய்தி சொல்லிக்கலாம்ன்னு இருந்தேன்” என்றார் சத்தியன்.



அவரை அற்பமென பார்த்த வைதேகி, “நீங்க இவ்வளோ மோசமா இருப்பீங்கன்னு நான் கொஞ்சம்கூட நினைக்கலைங்க” என்றார் வெறுத்த குரலில்.



அதில் சத்தியனின் சீற்றம் மேலும் ஏற, “இத்தனை வருஷத்துல நமக்குள்ளன்னு சண்டை வந்ததே இல்லை! எந்த வாக்குவாதமா இருந்தாலும் அது இதோ இந்த சனியனால தான்!!” என்றவர் இன்பனை பார்க்க, வைதேகியின் காலை கட்டிக்கொண்டு அவன் அழுதுக்கொண்டிருப்பதைக் கண்டு, வெறி வந்தவர் ஒரே கையால் அவனை தன் பக்கம் இழுத்து, “இது மட்டும் இல்லன்னா நமக்குள்ள எந்த வாக்குவாதமும் வராது தெரியுமா? இவனால தான் இப்போ என்னையே நீ எதிர்த்து பேசுற?” என்றவர் தன் பிடியை விட, ‘பொத்’தென தரையில் விழுந்த இன்பனின் கீழ் தாடையில் அவன் பல் குத்தி, ரத்தம் வர ஆரம்பித்தது.
 
கீழே கிடக்கும் மகனை அள்ளி எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்ட வைதேகி, “அச்சோ, ரத்தம் வருதேடா கண்ணா, ரொம்ப வலிக்குதாடா” என கேட்டபடி அவன் காயத்தை ஆராய்ந்துக்கொண்டே, “நீங்க இத்தனை மோசமா நடந்துக்க கூடாதுங்க” என கத்த, தொட்டிலில் இருந்த காண்டீபனும் சத்தத்தில் அழத்தொடங்க, அவ்விடம் போர்க்களமாய் இருந்தது.



ஓய்ந்து போய் அமர்ந்துவிட்டார் சத்தியராஜன். இன்பனின் காயத்திற்கு மஞ்சள் பத்துப்போட்ட வைதேகி, அவனுக்கு தின்பண்டத்தை கையில் கொடுத்துவிட்டு சின்னவனை கவனித்தார். அமைதியாய் கழித்தன சில மணித்துளிகள்.



“இப்போ என்ன சொல்ல வரீங்க? என் புள்ள உங்களோட இருக்கக்கூடாதா?” என பொறுமையாய் ஆரம்பித்தார் வைதேகி.



“ஆமா! அவன் நம்மளை விட்டு தூர இருக்கிறது தான் நமக்கு நல்லது”



“அப்படின்னா, இனி அவன் உங்கக்கூட இருக்க மாட்டான், அவனை எங்க அம்மா வீட்ல விட்டுடுறேன்!” என்றதும் மலர்ந்த சத்தியனின் முகம், “ஆனா, கூடவே நானும் எங்க அம்மா வீட்டுக்கு போய்டுவேன்! இவனை விட்டுடு என்னால இருக்க முடியாது” என்றதும் சிவந்து போனது.



“அப்போ இவனுக்காக என்னையே தூக்கிப்போட தயாரா இருக்கல்ல நீ?”



“ஆமா!”



“யோசிச்சு தான் பேசுறியா?”



வைதேகி, “நல்லா யோசிச்சு தான் பேசுறேன்” என்றிட மனைவியிடம் என்ன சொல்ல என தெரியாது, இன்பனை பார்த்து முறைத்தவர், “உன் ஒருத்தனால என்னைக்கும் எங்களுக்குள்ள நிம்மதியே இல்லடா! எங்கயாது போய் தொலை!! அப்போ தான் எனக்கு நிம்மதி!!!” என சொல்ல, “சின்ன பையன் கிட்ட என்ன பேசனும்ன்னு தெரியாதா உங்களுக்கெல்லாம்?” என்றார் வைதேகி சீற்றமாய்.



“ச்சை!!!” என்றவர் வழியில் கிடந்த நாற்காலியில் தன் கோபத்தை காட்டிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அன்று அவர்களின் திருமண நாள் என்பதால் வேலையாட்களுக்கு விடுமுறை கொடுத்திருக்க, சோளக்காட்டில் ஒருவருக்கும் இச்சண்டையை அறியும் வாய்ப்பின்றி போனது.



சத்தியன் சென்றதும் அழுதபடி அமர்ந்திருந்த அன்னையிடம் சென்ற இன்பன், “ம்மா, அழாத! நா எங்கயாது போவா?” என்றான்.



அவன் வார்த்தைகளில் மீண்டும் எழுந்த கண்ணீரோடு அவனை வாரி அணைத்துக்கொண்ட வைதேகி, “நம்ம போய்டலாம்டா கண்ணா! இங்க நம்ம இருக்க வேணாம்!! உங்கப்பா கோவம் போனதும் வருவோம்” என சமாதானம் சொல்ல, ஆறு வயது குழந்தைக்கு என்ன புரிந்திருந்ததோ,



“அப்பாக்கு என்னதானேம்மா பிடிக்காது? நா மட்டும் போறேன்” என்றது.



“இல்லடா, அப்பாக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்! சும்மா விளையாட்டுக்கு தான் எப்பவும் திட்டுறாரு!! கொஞ்ச நாள் உன்னை பார்க்காம இருந்தா அவரே உன்னை தேடி வருவாரு! அப்பாக்கு அவ்வளோ பாசம் உன்மேல” இல்லாத ஒன்றை சொல்லி நம்ப வைத்திருந்தார் வைதேகி.



கண்களில் ஒளியுடன், “அப்படியாமா?” என்றது குழந்தை.



“ஆமாடா கண்ணா! நீ எப்பவும் அப்பாவை விட்டு போகக்கூடாது! உன் தம்பியை நீ தான் பார்த்துக்கணும்! அப்பா என்ன திட்டுனாலும் உன் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கனும்!! உன் தம்பி உன்னை ஒதுக்கினா கூட நீ அவனை விட்டு போய்டாத!! இந்த அம்மா பேச்சை நீ கேட்ப தானேடா கண்ணா?” எதற்க்காக அந்த வார்த்தைகள் அப்போது அவரிடம் இருந்து வந்ததோ? அது மட்டுமே இன்பனை இத்தனை பணிந்து போக செய்திருக்கிறது.



“கேட்பேன்மா!!” என அறியா வயதில் வாக்கு கொடுத்தான் இன்பன்.



“நீ விளையாடிட்டு இரு, அம்மா உனக்கு சாப்பாடு செஞ்சு தரேன்! சாப்பிட்டுட்டு நம்ம பாட்டி வீட்டுக்கு போய்டலாம்!!” என்று வைதேகி சொன்னதை விட்டு, “நான் காணா போய்ட்டா அப்பா என்னை தேடுவாராம்மா!?” என்றான் இன்பன்.



அவன் கேட்பதன் பொருளை ஆராயாது, “ஆமா இன்பா” என்றவர் அவன் கையில் ஒரு பந்தை கொடுத்து விளையாட சொல்லிவிட்டு சமையல் வேலையில் இறங்கினார்.



வீட்டின் பின்பக்கம் பந்தை தூக்கிக்கொண்டு சென்ற இன்பன் அதை தூக்கி போட்டு பிடித்தபடி விளையாடிக்கொண்டிருக்க, விதி அதன் விளையாட்டை தொடங்கியது.



இன்பன் வேகமாய் மேலே வீசிய பந்து பறந்து சென்று விழுந்தது அந்த ஆழ்கிணற்றில்.



‘அச்சச்சோ!’ என பதறிய இன்பன், ஒரு குடத்தின் மீது ஏறி கிணற்றுக்குள் எட்டிப்பார்க்க, பந்து இருப்பதே அவனுக்கு தெரியவில்லை.



அன்னையிடம் சொல்லலாம் என சென்றவனுக்கு சட்டென தோன்றியது, ‘நம்ம காணா போய்ட்டா அப்பா தேடுவாருல?’ என!!!



ஒளிவதற்கு வேகமாய் இடம் தேடியவனுக்கு இறுதியாய் கிணறு மட்டுமே சிக்க, ‘இதுக்குள்ள ஒளிஞ்சுப்போம்!’ என சிறுபிள்ளைத்தனமாய் முடிவெடுத்தான்.



தட்டுதடுமாறி மெதுமெதுவாய் ஏறி உள்பக்க கல்லில் அவன் கால் வைக்கும்வரை வைதேகி அங்கு வராது போனது தான் விதியின் சதி. கரடு முரடான அந்த பாறைகள் மேடு பள்ளமாய் இருக்க, பொறுமையாய் சுவரை பிடித்துக்கொண்டே நடந்தவனுக்கு நான்கடிக்கு மேல் பயம் அப்பிக்கொண்டது. திரும்பி மேலே ஏற முயன்றால், சுவரை பிடித்து எக்கி ஏறுமளவுக்கு திறன் இல்லாது போனதால் அங்கேயே அமர்ந்துக்கொண்டு அவன் அழ, இன்பனை தேடி வந்த வைதேகிக்கு அவன் கிணற்றுக்குள் இருந்து அழைப்பது தெரிந்ததுமே நெஞ்சுக்குழி நடுங்கிப்போனது.



ஒரே ஓட்டத்தில் வந்தவர், உள்ளே எட்டிப்பார்க்க, எந்நேரமும் உள்ளே விழுவதற்கு ஏதுவாய் பாறையின் நுனியில் காலை வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருப்பனை கண்டதும், சிறுதும் யோசிக்காது கிணற்றின் உள்ளே இறங்கிவிட்டார் வைதேகி.



இன்பனை ஒரே கையால் தூக்கி கிணற்றின் வெளியே நிறுத்தியவர், தானும் ஏறலாம் என ஒரு காலை தூக்கியபோது அவர் மறுக்காலை எதிர்ப்பாரா தருணத்தில் வாரிவிட்டது பச்சைப்பாசி!



தடுமாறி பின்னோக்கி சாய்ந்தவர் பிடிமானம் ஏதுமின்றி கீழே விழ அந்த பலநூறு அடி கிணறு அவரை விழுங்க தயாராய் காத்திருந்தது. கீழ விழ போனவர் தண்ணீரை அடையும் முன், ஒழுங்கற்று இருந்த ஒரு கற்ப்பாறையை எட்டிவிட, அது பலமாய் பதம் பார்த்தது வைதேகியின் பின்னந்தலையை...!!!



கிணற்றின் வெளியே நின்று ‘அம்மா... அம்மா’ என இன்பன் அலட்றியது சிறு குரலாய் கேட்க, தண்ணீருக்குள் கிடந்த வைதேகியின் உடலில் இருந்து ரத்தம் வெளியேற தொடங்கியது.



‘மேலேறி செல்’ என உள்ளம் பணிந்தாலும், அதை செயல்ப்படுத்த முடியாது அவரது ஐம்புலன்களும் சக்தி இழக்க, அவர் உடல் தண்ணீருக்குள் முழுதாய் மூழ்கிப்போனது. வைதேகியின் உயிர் உடலை விட்டு பிரிந்து சென்றது.



இன்பன் கதையை சொல்லிமுடிக்க, உணர்வற்று போயிருந்தாள் கோகிலா.



“எனக்கு நேரம் சரியில்லாததால தான் அம்மா இறந்துட்டாங்கன்னு எல்லாரும் சொன்னங்க! அப்பா அதை முழுசா நம்புனாரு! நான் ஒதுக்கப்பட்டேன்! என் தம்பிக்கு சின்னதுல இருந்தே ‘இன்பன் கூட சேரக்கூடாதுன்னு’ சொல்லி சொல்லி வளர்த்தாரு!

அம்மா இவங்களை விட்டு போகக்கூடாதுன்னு சொன்னது மட்டும் பசுமரத்தாணி மாதிரி பதிஞ்சு போச்சு எனக்கு!!!”



இன்பனின் தோள் தொட்டு ஏதோ பேச வந்தவளிடம், “போதும் போதும்ங்குற அளவுக்கு அழுதுட்டேன் கோக்கி!! இனிமே அழ ஒன்னும் இல்ல!! நேத்து திடீர்ன்னு ஏதோ நியாபகம்... அதான்!!” என்றவன், “சரி நான் இந்த கிணறை மூடி வைக்குறேன்! நீ இந்த பக்கமெல்லாம் வரக்கூடாது சரியா?” என்றான் கண்டிப்பாய்.



சம்மதமாய் அவள் தலையசைக்க, “என் அம்மா போனதுக்கு அப்புறம் எனக்கே எனக்குன்னு நீ வந்துருக்க!! நான் உண்மையிலேயே ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என்று அவள் உச்சந்தலையில் முத்தம் பதித்து நின்றான் இன்பன்!!!



-வருவான்...
 
???

Very எமோஷனல் எபிசோட்...
பாவம் இன்பன்... சின்ன வயசிலேயே ஒரு தப்புமே பண்ணாம பெரிய தண்டனை அனுபவிச்சிருக்கான்... அம்மாவும் இல்ல... அப்பாவோட பாசமோ, அரவணைப்போ ஒண்ணுமே கிடைக்கல...

காண்டீபன் அவங்க அப்பாவை பாலோவ் பண்ணட்டும்..
அடுத்த எபிசோடுக்காக நான் பிரியாவை பாலோவ் பண்ணறேன்... எப்புடி??? ??
 
Last edited:
Top