Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 04

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
*4*

என்னுள் புகுந்த காற்றுக்கு ஆச்சர்யம்...

எல்லா அணுக்களிலும் உன்னையே கண்டதால்!!!

தான் அழும் காரணம் அறிந்தால், பேரின்பனின் கோவம் எல்லை கடக்கும் என அறிந்தே சிவகாமி மௌனித்திருந்தது. காண்டீபன் சொல்லிய நொடியில்லாமல், “சாவே விழுந்தாலும் சரி, அந்தம்மா இந்த வீட்டு வாசல்படியை மிதிக்க கூடாது!” என கர்ஜிக்க, சிவகாமியின் அழுகை கூடியது. ஒண்டிவீரர் மனம் கலங்கி, “அழாதே சிவா, இத்தனை வருஷம் எப்படி இருந்தோமோ அப்படியே இருந்து வாழ்க்கையை முடிச்சுக்குவோம்! இப்போ புதுசா உறவெல்லாம் நமக்கெதுக்கு?” விரக்தியாய் அவர் பேசியதே அவருக்கும் தன் மகளை பார்க்க விருப்பம் என்பதை எடுத்துரைக்க, இன்பன் தன் அத்தை தங்கத்தை திரும்பி பார்த்தான்.



கண்ணீர் வழிந்தாலும், அவரும் தன் தந்தை தாய்க்கே ஆதரவாய் இருப்பது போல தோன்றிற்று. சத்தியராஜோ தனக்கும் இதுக்கும் எதுவும் இல்லை என்பது போல அமர்ந்திருந்தார். மொத்ததில் சிவகாமியின் கடைசி மகவை வீட்டிற்கு அழைக்க பகிரங்க மறுப்பு தெரிவிக்கும் இரே ஆட்கள் பேரின்பனும், காண்டீபனும் மட்டுமே!!



இன்பன் ‘என்ன செய்ய?’ என்று காண்டீபனை பார்த்தான். அவன் முகம் முன்பு போல் திடமாய் இராமல் குழம்பியதை போல தோற்றம் கொள்ள, “என்ன எல்லாரும் ஒரே கட்சியா கூடிட்டீங்களா? இருபத்தி மூணு வருஷமா ஒதுக்கி வச்சு வாழ முடிஞ்ச நமக்கு இப்போ என்ன புதுசா பாசம் கேக்குது?” என பொதுவாய் கத்திய இன்பன், சிவகாமியிடம், “பழசெல்லாம் மறந்துடுசுள்ள அம்மாயி? பெத்த மூணுல ஒன்னு செத்து போச்சுன்னு சொல்லிதானே வீட்ட விட்டு அனுப்புனீங்க? செத்தது செத்ததாவே போனா என்ன? உங்களுக்கு நாங்க எல்லாம் போதாதா?” என்றான் ஆதங்கமாய்.

அவர் கண்ணீர் நின்றபாடில்லை.



ஒண்டிவீரர், “அதான் இத்தனை வருஷம் ஒதுக்கி வச்சாச்சேடா! இன்னும் என்ன வீண் வீம்பு நமக்கு? சாகுற காலத்துல புள்ளைங்க கூட இருக்கணும்ன்னு ஆசை இருக்காதா?” மனைவியின் விருப்பமே தன் விருப்பமாய் பேசினார்.



“ஹோ! அப்போ நீங்க அவங்களோட போய் இருந்துக்கோங்க! இந்த வீட்டுக்கு யாரும் வரக்கூடாது!!” மீண்டும் அதையே பிடிவாதமாய் சொன்ன இன்பனிடம் சபையில் முதன்முறையாய் பேசினார் தங்கம்.



“அவங்க பெத்த புள்ளைய அவங்க பார்க்க நீ எதுக்குடா குறுக்க நிக்குற?”

“அவங்க புள்ள இந்த வீட்டுக்கு வரதுல எந்த தடையும் இல்ல எனக்கு, ஆனா ஒரு நம்பிக்கை துரோகி இந்த வீட்டுக்கு வரது நான் இருக்க வரைக்கும் நடக்காது, நடக்கவும் கூடாது!!” அழுத்தமான அவன் பேச்சில் தங்கத்திற்கு கோவம் கிளம்ப, “அவ அப்டி என்னடா செஞ்சுட்டா? காதலிச்சு ஒருத்தனை கல்யாணம் பண்ணது குத்தமா?” என்று கத்தியவரை வினோதமாய் பார்த்தான் இன்பன்.



“காதலிச்சது தப்பில்ல அத்தே!! ஆனா மணமேடையில உட்காந்து உனக்கு தாலிகட்ட வேண்டியவரை, உன் கல்யானத்தனைக்கே இழுத்துட்டு போய் அவங்க கல்யாணம் பண்ணாங்களே, அதான் தப்பு!! அதுக்கு பேருதான் துரோகம்!! மணமேடை வரை வந்து ஒரு கல்யாணம் நின்னா, அந்த பொண்ணோட வாழ்க்கை என்ன ஆகும்ன்னு கூட யோசிக்காம, தன் சுயநலத்துக்காக பொண்ணோட தங்கச்சியவே கூட்டிட்டு ஓடி போனானே, அந்தாளு! அவனும் துரோகி தான்!! பச்ச துரோகி!!” என்றான் இன்பன் ஆத்திரமாய்.



தங்கம், “அவங்க செஞ்சது தப்புதான்! அதுக்காக என் வாழ்க்கை அப்படியே போயிடுச்சா என்ன? எனக்குன்னு ஒருத்தர் அமைஞ்சுட்டாருல!!?” அவனுக்கு புரியவைக்கும் நோக்கில் அவர் பேச, எரியும் தீயில் எண்ணையை கொட்டியது போல ஆனது.



“உன் வாழ்க்கை தான் போய்டுச்சே அத்தே!! கல்யாணம் நின்னு போய் நீ மேடையில நின்னு அழுறதை பார்த்து தூரத்து சொந்தம்ன்னு ஒரு மாச லீவுல வந்துருந்த பட்டாளத்துக்காரரை உன் தலையில அவசரமா கட்டி வச்சாங்க அன்னைக்கே!! என்ன ஆச்சு? ஐஞ்சாறு புள்ளகுட்டியோட சந்தோசமா இருக்கியோ? ஹம்!! லீவு முடிஞ்சு போனவரு, பொணமா தானே திரும்பி வந்தாரு! தாலி ஏறுன ரெண்டாம் மாசமே தாலி இறங்குச்சு!! உன்னை எல்லாரும் அதிர்ஷ்டகட்டைன்னு பேசுனாங்கன்னு பயந்து இப்போவரைக்கும் ஜெயில் கைதி மாறி யார் முன்னையும் வராம அடுப்படியே கதின்னு கடக்குற!!

அந்தாளு ஓடி போகாம இருந்தா இதெல்லாம் நடந்துருக்குமா? இல்ல, எனக்கு இந்த பொண்ணு பிடிக்கல, அவங்க தங்கச்சிய தான் பிடிச்சுருக்குன்னு முன்னமே சொல்லியிருந்தா உனக்கு வேற நல்ல மாப்பிளையா பார்த்து கட்டி குடுத்துருக்கலாமா? உன் வாழ்க்கையை அழிச்சுட்டு அவங்க சந்தோசமா சென்னையில குடி இருக்காங்க! இப்போ அவங்களை பார்க்கனும்ன்னு எல்லாரும் ஒன்னு கூடுறீங்க!?” ஆவேசமான அவன் பேச்சு அத்தனையும் உண்மை என்பதால் மறுத்து பேச முடியாமல் எல்லோரும் இருக்க, தங்கம் மட்டுமே விடாது வாதித்தார்.



“என் வாழ்க்கை போனதுல எனக்கே இல்லாத அக்கறை உனக்கென்னடா வந்துச்சு?” வார்த்தை தடுமாற, அழுகை கேவலாய் கிளம்ப கேட்டு முடித்த தங்கத்தை, “உன் தங்கச்சிக்காக என்ன யாரோன்னு பேசுறல்ல அத்தே!?” என்றான் இன்பன்.

உருகிபோனார் அவன் வார்த்தையில்.

“இல்லடா இன்பா! செஞ்ச தப்புக்கு இத்தனை வருஷம் பார்க்காம பேசாம இருந்தாச்சு! இன்னும் எதுக்குடா? உன் பிடிவாதத்தை விட்டுடேன்!” என்று இறைஞ்சிய தங்கத்தை, “உன் வாழ்க்கை சாகுறவரைக்கும் இப்படியே தானே இருக்க போது! அதுக்கு என்ன பதில்?” என்றான்.



“முடிஞ்சதையே பேசாதடா இன்பா! சொன்னா கேளு!!” அழுகை நின்று உத்தரவாய் சொன்னார் தங்கம்.



“ஹோ! அப்போ யாரும் என்கிட்ட அனுமதியோ ஆலோசனையோ கேட்கல! முடிவு பண்ணதை சொல்றீங்க? அப்படிதானே? சரி நடத்துங்க!! ஆனா இனி ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல நான் இருக்க மாட்டேன்!” என்றான் பேரின்பன். ஒண்டிவீரரும் சிவகாமியும் பதறி போய் நிற்க, தங்கம், “என்னத்துக்குடா இப்படி பிடிவாதம் பிடிச்சு எங்களை கொல்லாம கொல்ற?” என்றார் முகத்தில் அறைந்துக்கொண்டு.



நெடு நேரத்திருக்கு பின் வாய்ப்பூட்டவிழ்த்தான் காண்டீபன். “த்தே!! அழாதீங்க! நான் சின்னத்தைய குடும்பத்தோட வர சொல்றேன்! உங்க எல்லார் நிம்மதிக்கும் சந்தோசத்துக்கும் முன்னாடி, ஒருத்தனோட பிடிவாதம் பெருசில்ல!!” என்றான் இன்பனை பார்த்தபடி. அவன் வருவதற்கு முன்பு வரை தானும் புது சொந்தங்களின் வரவை எதிர்த்ததை மறந்தே போனான் காண்டீபன்.



தங்கத்தின் திருமணம் நின்றபோது இன்பனுக்கு ஆறுவயது. காண்டீபன் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை. இன்பனுக்கு அன்று நடந்த களேபரங்களும், தங்கத்தின் அழுகையும் அழியா ஓவியமாய் மனதில் பதிந்திருக்க, தாயாய் மாறி தன்னை தாங்கும் தங்கத்தின் வாழ்க்கை சிதைந்ததை, அதற்கு காரணிகள் என நினைக்கும் ஆட்களை அவனால் மன்னிக்க இயலவில்லை.

ஆறு வயதில் தெளிவாய் புரியாதது வயது ஏற ஏற புரிந்தது. காண்டீபனுக்கோ, வாய்வழி கேட்ட செய்தியிலேயே தனது சின்னத்தை மீது வெறுப்பு ஏற்ப்பட, அவர்கள் வரவை வெகுவாய் வெறுத்தான். ஆனாலும் இன்பன் அளவுக்கு தங்கத்திடம் ஒட்டுதல் இல்லாததால், அவனை போன்று பிடிவாதம் பிடிக்காமல், பெரியவர்களின் விருப்பத்திற்கும் கண்ணீருக்கும் இசைந்து போனான் காண்டீபன். அண்ணனும் தம்பியும் ஒத்து போனது இந்த ஒரே விடயத்தில் மட்டும் தான், இப்போதும் அதுவும் இல்லை. அவன் இசைவுக்கு முக்கிய காரணம் தனது வலுவான எதிர்ப்பே என்பது இன்பனுக்கு தெரியாதா!



"நான் வரகூடாதுன்னு சொல்றதால நீ அவங்க வரனும்ன்னு சொல்றியா காண்டீபா!? நீ அப்போ சின்ன பையன்டா, எதையுமே நீ கண்ணால பார்க்கல.. ஆனா நம்ம குடும்பமே உடைஞ்சு போய் உட்காந்த அந்த நாளை என்னால மறக்கவே முடியாது..! அவங்க செஞ்ச தப்பை வேணுன்னா மன்னிக்கலாம்.. ஆனா அதோட வடு!! கண்ணு முன்னாடி வாழ்க்கையை தொலைச்சுட்டு நிக்குற அத்தையை பார்க்கும்போதெல்லாம் எனக்கு அவங்க செஞ்ச தப்பும், நம்பிக்கை துரோகமும் தானே நியாபகம் வரும்!? தயவுசெய்து என்னை புரிஞ்சுக்கோ" என்றான் பேரின்பன் வேண்டுதலாய்.



அவனை வெற்றுப்பார்வை பார்த்த காண்டீபன், உணர்ச்சியற்ற குரலில், "உன்னை பார்க்கும்போது கூட நீ செஞ்ச தப்பும், அதுக்கு தண்டனையா என் அம்மாவை இழந்துட்டு நிக்குற என் நிலைமையும் தான் நியாபகம் வருது. உன்கூட என்னை சேர விடமா என்னை தடுக்குது... நான் என்ன செய்யணும்!?" சற்றும் எதிர்பார்க்காத தன் தம்பியின் சொற்களில் நொறுங்கி போனான் பேரின்பன். அவன் கேட்பதில் என்ன தவறு!? நான்தானே அவன் நிலைக்கு காரணம்!? மனம் சத்தமின்றி அழ, சிறிதும் தாமதிக்காமல் அந்த வீட்டை விட்டு வெளியேறினான் இன்பன்.



செல்லும் அவனை பனியிட்ட கண்களோடு கண்ட காண்டீபன், 'உன்னை விலக்கவும் முடியல, நெருங்கவும் முடியல' என்று மனதோடு சொல்லிக்கொண்டான். அவன் வெளியேறியதும் பதறியவர்களை, "சோளகாட்டு வீட்ல தான் இருப்பான். அவனுக்காக யாரும் வருந்த வேணாம். நான் சின்னத்தைக்கு போன் பண்ணுறேன்" என்றான் காண்டீபன் எப்போதும் போல இறுகிய குரலில்.



கண்களை துடைத்துக்கொண்ட சிவகாமி, "போன் போட்டு என்கிட்ட குடு, செல்லத்துகிட்ட நானே பேசுறேன்" என்றார் ஆவலாய்.



தன் அலைபேசியில் முன்பொருமுறை எதற்கும் இருக்கட்டும் என பதிந்து வைத்திருந்த தனது சின்னத்தை செல்லத்தின் எண்ணை காண்டீபன் அழுத்த, மறுமுனையில், "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் உங்கள் அழைப்பை ஏற்கவில்லை" என்றாள் கம்ப்யூட்டர்காரி.



"போன் எடுக்கல"



"போன் எடுக்கலன்னா, எதுவும் வேலையா இருப்பாளோ!?" சிவகாமி எண்ணம் போல நிற்க நேரமின்றி பம்பரமாய் சுழன்றுக்கொண்டிருந்தார் செல்லம், தன் ஒரே மகளின் திருமண நிச்சயத்தார்த்தத்தில்.



'டம்...டப்' என நாலாபக்கமும் வெடித்த பாப்பர்ஸ் அந்த இரவு நேர பார்ட்டி ஹாலை ஆர்ப்பாட்டமாய் காட்ட, அதைவிட, சுற்றியிருந்தோரின் கரகோஷமும் சிரிப்பொலியும் அவ்விடத்தை ரம்யமாக்கியது. நடுநாயகமாக நின்றிருந்த விழா நாயகர்கள் தங்கள் விரல்களில் நிச்சய மோதிரத்தை மாற்றிக்கொண்டனர்.



அங்கிருந்து மைக்கை கையில் எடுத்த ஷங்கர், "சோ, பைனலி மை டாட்டர் இஸ் எங்கேஜ்ட் டு மிஸ்டர் கிஷோர், தி ஒன்லி சன் ஆப் மை பெஸ்ட் பிரண்ட் சிவகுரு" என பெரும் மகிழ்ச்சியோடு அறித்தார்.



"பிசினஸ்ல மட்டும் பார்ட்னர்ஸா இருந்த நீங்க இப்போ பேமிலி மெம்பர்ஸ் ஆகிட்டீங்க. வாழ்த்துக்கள் ஷங்கர் அண்ட் சிவகுரு"



"SS கார்மெண்ட்ஸ் இனி சிவகுருக்கு முழுக்க வரபோது... பிளான் போட்டு மருமக வழியா கம்பெனியை வாங்கிட்டியே சிவா, பலே ஆளுப்பா நீ" பாராட்டு கூட கொஞ்சம் பொறாமையோடே வந்தது.



வந்தவர்களை உபசரித்து, பஃபெ முறையில் வழங்கப்படும் இரவு விருந்து எல்லோரையும் திருப்தி படுத்தியதா என கண்காணித்து, பாப்கார்ன், பானிப்பூரி, ஐஸ்க்ரீம் என ஸ்டால் போட்டுக்கொண்டிருந்தவர்களை 'சரியாய் பார்த்து கொடுக்கும்படி' ஆயிரத்தி ஒண்ணாவது முறையாய் கட்டளையிட்டு, விழா முடிந்து செல்பவர்களுக்கு, விதை உருண்டையோடு ஒரு பூந்தொட்டியும் பரிசாய் குடுத்து என செல்லத்திற்கும் ஷங்கருக்கும் நேரம் இறக்கை கட்டி ஓடியது.



பரிசு கொடுப்பார்களை மேடையேற்றி போட்டோ எடுக்க வைப்பது மட்டுமே சிவகுரு குடும்பத்தின் தலையாய வேலையாய் இருந்தது. ஏனெனில், நிச்சயம் முழுக்க பெண் வீட்டின் பொறுப்பு.



விருந்தினர் மேடைக்கு வராது இருந்த சிறு இடைவெளியில் தன்னவளின் கரம் பற்றினான் கிஷோர். அவன் தொட்டவுடன் வெடுக்கென அவள் கையை உதற, "வாட்...!?" என புரியாமல் கேட்டவனிடம், "மேடைல எல்லார் முன்னாடியும் எதுக்கு கை தொடுறீங்க!?" என்ற அவள் கேள்வியை கண்டு அவன் கண்ணீர் வருமளவு சிரித்தான்.



"கம் ஆன் பேபி. கை பிடிக்க எல்லாம் கணக்கு பார்க்கிற!? நான் என்ன உன் ஹனி லிப்ஸயா லாக் பண்ணேன். ஜஸ்ட் கை தானே!!?" கண் சிமிட்டி மந்தகாச புன்னகையோடு சொல்பவனை விட்டு ஓரடி நகர்ந்தவள், "நம்ம பண்றது லவ் மேரேஜ் இல்ல. பேரெண்ட்ஸ் சொன்னதுக்காக தான் உங்களை கல்யாணம் செய்ய சம்மதிச்சேன். உங்கக்கூட நான் மனசு ஒன்றி சேர்ந்த பிறகு தான் இந்த.... நீ..நீங்க சொன்ன எல்லாம்... அண்ட் மோர்ஓவர் நான் பேபி இல்ல, கோகிலா" அவனை பார்க்காது சொல்லி முடித்தாள்.



விசித்திர பிறவி போல அவளை பார்த்த கிஷோர், "நீ எம்.பி.அ படிச்சுட்டு நம்ம கம்பெனில அசிஸ்டண்ட் மேனேஜரா இருக்கன்னு என் அப்பா சொன்னாரு. பட் ஐ கெஸ் இட்ஸ் ராங்...!! நீ பக்தி மடத்துல பஜனை பாடுறன்னு நினைக்குறேன். ஹாஹாஹா" சத்தமாய் சிரிக்கும் அவனை கண்டு அந்நாளின் கணக்கில்லாத எண்ணிக்கையில் எரிச்சல் மூண்டது.



பள்ளி படிப்பை முடிக்கும் வரை கிஷோரும், கோகிலாவும் ஒருவருக்கொருவர் பரிச்சயமாக இருந்தனர். அதன் பின்னே படிப்புக்காக கிஷோர் வெளிநாடு சென்றுவிட, துளி தொடர்பும் அற்று போனது.

கடந்த மாதம் சொல்லாமல் கொள்ளாமல் இந்தியா வந்து குதித்தவன், கோகிலாவை கண்ட இரண்டாம் நாளே 'ஐ வான்ட் டு மேரி யூ' என்றுவிட்டான்.

'எதுவா இருந்தாலும் அப்பாகிட்ட பேசுங்க' என்ற அவள் பதில் இப்போது திருமணத்தில் வந்து நிற்கிறது. தாய் தந்தையின் திருமண வரலாறு அறிந்த பின்னே, பெற்றோரின் சம்மதத்தோடு மட்டுமே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்திருந்த கோகிலா, 'இதுதான் மாப்பிளை' என ஷங்கர் காட்டிய கிஷோரை தந்தை மீதுள்ள அளவில்லா நம்பிக்கையால் கரம் பிடிக்க போகிறாள்.



விருந்தினர்கள் வரவு குறைந்ததும் பார்ட்டி ஹால் செட்டில்மெண்டை முடிக்க சென்றார் ஷங்கர். மேடையில் இருந்து தனக்கென புக் செய்திருந்த அறைக்கு வந்த கோகிலா, செய்திருந்த ஒப்பனைகளை எல்லாம் களைந்து எறிந்தாள். ஒவ்வொன்றையும் அவள் கலைக்கும்போது, ‘மேக்னட்டிக் ஐஸ் கோக்ஸ் உனக்கு! இந்த நோஸ் இவ்ளோ ஷார்ப்பா இருந்து, என்னை கிட்டவே வர விட மாட்டேங்குது! ஆனா, உன் லிப்ஸ் என்னை ‘வாடா வாடா’ன்னு உசுப்பேத்துது! இந்த புல் லெகன்ஹா எதுக்கு எடுத்த? உன் அழகெல்லாம் கண்ணுக்கே தெரியாம மறைஞ்சு போச்சு!! இதே பாரின்னா இருந்தா பிகினில வந்து பிரெஞ்சு கிஸ்ஸோட என்கேஜ் பண்ணிருப்பாங்க! ஹும்ம்!!!’ போட்டோஷூட் நடந்த போது, சகிக்கமுடியாமல் தன் காதுக்குள் புகுந்த கிஷோரின் வார்த்தைகள் அவளை சுற்றி வந்தன.



‘அப்பா எப்படி இவனை எனக்கு சூஸ் பண்ணாருன்னு தெரியல! ச்ச!!’ வெளிப்படையாக தலையில் அடித்துக்கொண்டபோது உள்ளே வந்த செல்லம், “என்ன கோக்கிம்மா!? தலை வலிக்குதா?” என்றார். அன்னையை கண்டதும் முகத்தை மலர வைத்துக்கொண்டவள், “ரொம்ப நேரம் லைட்டிங்ல நின்னது கொஞ்சம் ரெஸ்ட்லஸா இருக்கு, அவ்ளோதாம்மா!!” என்றாள்.



“ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும்டா!!” அருகே வந்து சிகை வருடும் தாயை அவள் வெறிக்க, “ஏதாவது கேட்கனும்மா கோக்கிம்மா?” என்றார் செல்லம்.

‘இல்லை’ என்று சொல்லாது, “எதுக்காக கிஷோரை எனக்கு செலக்ட் பண்ணீங்க?” என்றாள் கோகிலா நேரிடையாய். எதையும் சுற்றிவளைத்து பேசுவதோ, மனதில் வைத்து குமுறிக்கொண்டு தானே பேசி அழுவதோ அவளுக்கு சீரியல் பார்த்தாலும் வராது.



ஆனால் அவள் கேள்வியில் திகைத்து போனார் செல்லம். “ஏன்டா அப்டி கேக்குற? நீ சரின்னு சொன்னதாலதானே நிச்சயம் பண்ணோம்! இப்ப என்னாச்சு? பிடிக்கலையா?” அவர் பதட்டமாய் கேள்விகளை அடுக்கிகொண்டே போக, தான் கேட்டிருக்கவே கூடாதோ என நொந்துபோனாள் கோகிலா, தாயின் அதீத பதட்டத்தில்.



“ம்மா!! ஜஸ்ட் அ க்யூரியாசிட்டி! எதை வச்சு எனக்கு அவர் பொருத்தம்ன்னு முடிவு செஞ்சீங்க?” இயல்பான அவள் கேள்வியில் ஆசுவாசமானவர், “கொஞ்ச நேரத்துல திக்குன்னு ஆக்கிட்ட” என்று சிரித்துவிட்டு, “நாங்க கல்யாணம் கட்டி சென்னை வந்ததுல இருந்தே சிவகுரு அண்ணே குடும்பம் ரொம்ப பழக்கம், அவர் மேல இருந்த நம்பிக்கைல கூட்டு தொழில் தொடங்குனோம்! வாழ்கை அமோகமா இருக்கு! இப்போவும் அதே நம்பிக்கையில தான் அவர் வீட்டுக்கு உன்னை குடுக்க போறோம்!!” என்றார் செல்லம்.



“ம்மா! நான் கிஷோரை எப்டி செலெக்ட் பண்ணீங்கன்னு கேட்டா, சிவகுரு அங்கிள எப்டி செலக்ட் பண்னோம்ன்னு கதை சொல்றீங்க!” என்று கிண்டலாய் சிரித்த மகளை பொய்யடி அடித்தவர், “கண்ணுக்கு லட்சணமா இருக்கு உங்க ஜோடி, உன் அழகுக்கு ஏத்த பையன்! வேறென்ன வேணும்?” என்று நகர்ந்துவிட்டார்.

கோகிலாவின் மனம், “அழகா முக்கியம்?” என அவளிடம் கேள்வி கேட்டது.



தன் கைபையில் இருந்த அலைபேசியை வெளியே எடுத்தவர், “அட, ஒரு புது நம்பர்ல இருந்து நாலு முறை மிஸ்டு கால் வந்துருக்கே!” என்றார். அவர் குரலில் அருகே சென்ற கோகிலா, “நம்பர் சொல்லுங்கம்மா! ட்ரூ காலர்ல யாருன்னு பார்க்குறேன்!” என்று அழைபேசி எண்ணை வாங்கினாள்.



கோகிலா, “ம்மா! ‘காண்டீபன்’ன்னு வருது!!”



“காண்.. காண்டீபனா?” கண்களில் சட்டென நீர் கோர்க்க, “அந்த நம்பருக்கு திரும்ப கூப்புடு கோக்கி.. சீக்கிரம்!!” என செல்லம் துரிதப்படுத்த, அதற்க்கு வேலை வைக்காமல் மீண்டும் அழைப்பு வந்தது காண்டீபனிடம் இருந்து.



கோகிலா கையில் இருந்து செல்லை பறித்தவர், “ஹல்லோ? ஹல்லோ?”



“செல்லம்......!!!”

இருபத்து மூணு வருடங்களுக்கு பிறகு தன் அன்னையின் வாயில் இருந்து தன் பெயர் சொல்லி கேட்டதும், அடக்கமாட்டாமல் கதறி அழுதவர் அதற்கு மேல பேசவில்லை. கோகிலா, “ம்மா!! என்னாச்சு? ம்மா??” அன்னையின் நிற்காத அழுகையை கட்டுப்படுத்த வழியின்றி அவள் தவிக்க, அங்கே வந்தார் ஷங்கர்.



தரையில் மடிந்தமர்ந்து கதறியழும் தன் மனைவியையும், அன்னையை தேற்ற தெரியாமல் திணறும் மகளையும் கண்ட ஷங்கர், நொடியில் அவர்களிடம் விரைந்து, “செல்லம், என்னம்மா?” என்றார்.



கணவன் வந்ததும் அவர் நெஞ்சில் சாய்ந்து ஒருமூச்சு கேவளோடு அழுதவர், கீழே கிடக்கும் போனை எடுத்து காட்டி, “ம்மா...என் அம்மா” என்றார்.



மறுபக்கம், அழுகையூடே சிவகாமி, “செல்லம்... என் செல்லம்.. பேசுடா அம்மாகிட்ட” என சொல்வது வெளிவரை கேட்க, “பேசு செல்லம், அத்தே லைன்ல இருக்காங்க” என்று காதில் வைத்தார் ஷங்கர்.



அன்னையின் குறல் மீண்டும் தன் காதில் விழுந்ததுமே, “அம்மா!! என்கிட்ட பேசிட்டீங்களாம்மா! என்னை மன்னிச்சுட்டீங்கலாம்மா? ம்மா! உங்களை பாக்கணும் போல இருக்கும்மா! ஒருமுறை உங்களை பார்க்க வரட்டுமா?” இத்தனை வருட ஏக்கத்தை குரலில் தேக்கி, யாசகமாய் கேட்டார் செல்லம்.

பின்னே பயம் கொண்டவராய், “ம்மா, அங்க யாருக்கும்..? எல்லாரும் நல்ல இருக்கீங்கள்ள?” எதுவும் கெட்ட செய்தி சொல்ல அழைத்து விட்டார்களோ என்ற ஐயம்!!



சிவகாமி பேச விடாமல் அடைக்கும் தொண்டையை கடினப்பட்டு சீர்செய்து, “நீ வாடி என் ராஜாத்தி! எல்லாரும் உனக்காக காத்திருக்கோம்! வந்து உன் அம்மாவை பாருடா!” என்றார். அதற்குமேல் பேசினால், எங்கே தாயின் மனம் மாறி வர வேண்டாம் என சொல்லிவிடுவாரோ என்று பயந்த செல்லம், அவசரகதியில் வீட்டிற்க்கு சென்று தேவையான பொருட்களை சேகரித்துக்கொண்டு தன் மகள் கணவனோடு கோபிசெட்டிபாளையத்திற்க்கு ரயில் ஏறினார்.

அங்கே தனக்கான வாழ்க்கை பாதை மாறபோவதை அறியாத கோகிலா, அன்னை தந்தையின் பூர்வீகத்தை காண ஆவலாக காத்திருந்தாள்.

கோகி(கு)லத்தில் நிரந்தரமாய் வசிக்க போகும் ராமன் இவர்கள் வரவை வேப்பங்காயாய் எண்ணி தவிர்க்கிறான்.

இன்னார்க்கு இன்னார் என இணைத்து வைக்க காலம் கால்கடுக்க காத்திருக்கிறது.

-தொடரும்...
 
Top