Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 9

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் – 9

தன் வாழ்க்கையில் குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் பஞ்சமில்லை என்றாலும், அதற்காக இப்போது ஒன்றும் பண்ண முடியாது என்பது மாயாவின் எண்ணம். எப்படியும் தன் படிப்பு முடிந்ததும் தான் ஒவ்வொன்றாக தலை தூக்கும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்திருந்தாள்.

அப்போதும் கார்த்திக்கை அவள் மறக்கவில்லை! மாயசித்ராவின் நினைவுகள் கார்த்திக்கை வட்டமிட்டுக் கொண்டிருந்த வேளையில், கார்த்திக்கும் அவளின் அருமை சகோதரனும் கோயம்பத்தூரின் பிரபல கார் கம்பெனியில் வேலையில் சேர்ந்து மாதம் ஐந்து முடிந்திருந்தது. இன்னும் அவள் கல்லூரி படிப்பு முடிய ஒரு செம்மஸ்டரெ மிதமுள்ள நிலையில் தான் விதி அவள் வாழ்க்கையில் கால்பந்து விளையாடியது!

அவளின் அத்தை, மாமா, மாமி எல்லோரும் ஒரு சேர இவளின் வீட்டிற்கு வந்த நிலையில், மாயாவின் மனதிலும், ரித்தியாவின் மனதிலும் ஒரே அபாயமணியாக அடித்தது!! தன் ஒரே தாய்மாமனின் மனைவியான கவிதா மாமி அவளின் அத்தை போல் மோசமில்லை என்றாலும் கூட, மாயாவின் மனதில் திக்திக் என்று இருந்தது உண்மையே! எவ்விதத்திலும் தன் கனவை இழக்க அவள் தயாராக இல்லை!!!

வந்தவர்கள் இவளின் திருமணத்தை பற்றி எதுவும் பேச்செடுக்கவில்லை. மறுநாள் கார் ஏற்பாடு செய்து மருதமலை போவதாக முடிவு மட்டும் செய்தனர். மாயாவும் குஷியாக கிளம்பினாள். அம்மாவை எப்படியாவது திருமண பேச்சை தள்ளிப் போட வைக்க வேண்டும். அதற்காக முருகனிடம் அப்ளிகேஷன் போட சகோதரிகள் இருவரும் செல்ல, பெரியவர்கள் மாயாவின் திருமணத்திற்கு நல்ல வரன் அமைய வேண்டும் என்ற வேண்டுதலுக்காக சென்றனர்.

அடுத்த நாள் காரில் அனைவரும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டு செல்ல, மாயாவின் மனது நிறைய நாள் கழித்து அமைதியாக இருந்தது. தன் கடைசி நம்பிக்கையாக அவள் போய் நின்றது கடவுளிடம் மட்டுமே… அழகு கொஞ்சும் முருகனை பார்த்து தரிசித்துவிட்டு மாயாவின் குடும்பத்தினர் கோவில் சுற்று பிரகாரத்தில் அமர்ந்த நேரத்தில் தான் அங்கே கதிரும் அவனுடைய பெற்றோரும் வந்தனர்.

கதிர் தூரத்திலேயே மாயாவை பார்த்துவிட்டான். தன் பெற்றோர்களிடம் அவளை சுட்டிக் காட்டி, “அப்பா, அம்மா நான் சொன்னேன்ல மாயான்னு ஒரு பொண்ணு என்னோட காலேஜ்ல? அது இந்த பொண்ணு தான்மா…” என்று அறிமுகப்படுத்தவும் தவரவில்லை…

“ஹோ இந்த பொண்ணு தானா??” என்று கதிரின் அன்னையும் கேட்டுக் கொண்டே மாயாவையும், அவளின் சுற்றத்தினரையும் பார்த்திருந்தார். அவருக்கு கதிர் அவளை காதலிக்கின்ற விஷயம் எல்லாம் தெரியாது. எதோ உள்ளுணர்வு தோன்ற, மாயாவின் அத்தை கோதையை உற்று நோக்கினார். மனதில் மின்னல் அடிக்க விடுவிடுவென்று கோதையிடம் நடந்துச் சென்றார்.

“ஹே கோதை எப்படி இருக்க?? என்னை தெரியுதா?? மீனாட்சிடி… ஞாபகமே இல்லையா…”

வயது நாற்பதை கடந்திருந்தும் குழந்தையின் உத்வேகத்தோடு கூறிய மீனாட்சியை பார்த்து கோதையும் ஓர் ஆழ்ந்த அணைப்பை பகிர்ந்தார். “எவ்வளவு நாள் ஆச்சு உன்னை பார்த்து??” கோதையின் திருமணத்துக்கு முன் இருந்த வீட்டின் பக்கத்து வீட்டில் தான் மீனாட்சி குடியிருந்தார். மீனாட்சியும், கோதையும் திருமணம் ஆனதும் வெவ்வேறு ஊர்களுக்கு செல்ல, உறவு விட்டு போனது.

இருபது வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்டதும், இருவரும் தங்களின் குடும்பத்தினரை மூம்முரமாக அறிமுகப்படுத்தினர். மாயாவை பற்றி கோதை சொல்லவும், “தெரியும்டி. என்னோட பையனோட காலேஜ் தான இவளும்?? நல்லா போட்டோ எடுப்பாளாமே?? உன்னை பத்தி கதிர் நிறைய சொல்லிருக்கான்மா…” என்று மீனாட்சி கூறவும் கோதையும் மாயாவும் ஒரு சேர கதிரின் முகத்தை பார்த்தனர்.

வந்ததிலிருந்து கதிர் மாயாவையே விழியசைக்காமல் காண்பதை அபிராமி முதற்கொண்டு அனைவரும் கவனித்தனர். அபிராமிக்கு கதிரை பார்த்ததும் மிகவும் பிடித்தது. ஆனால், அவனின் பார்வை அவரை உருத்தாமலும் இல்லை… அதே நேரம், தன் பெண் வெறும் ஒரு அறிந்த சிரிப்பை மட்டும் உதிர்த்ததில் அவளுக்கு எந்த எண்ணமும் இல்லை என்று விளங்கிற்று. இப்போது கோதையும் கவனிக்கவும் கதிர் கடினப்பட்டு தன் பார்வையை மாற்றினான்.

சிறிது நேரம் பேசியிருந்து விட்டு, தங்களின் கைப்பேசி எண்ணங்களை பறிமாறிக் கொண்டதும், இரு குடும்பங்களும் கிளம்பினர். அந்த சிறிது நேர பேச்சிலேயே மாயாவுக்கு அடுத்து கல்யாணத்திற்கு வரன் தேடுவதாக கோதை கூற, மாயசித்ராவின் முகம் பேயை பார்த்தது போல் பீதியாகியது!!! மீனாட்சி அப்போது தான் மாயாவை முழுதாக பார்த்தார்.

அவர் திருப்பித்தியான பார்வையுடன் அவர் தன் கணவரை நோக்கினார். அவரும் கண்களை மூடி திறந்து தன் சம்மதத்தை கூறவும், மீனாட்சி கோதையிடம் தான் தொலைப்பேசியில் பேசுவதாக கூறி விடைப்பெற்றார். மாயாவுக்கு இதையெல்லாம் பார்க்கப் பார்க்க உள்ளுக்குள் திகில் பரவியது. கொடூரமான பேய் படம் கண்டால் கூட அவள் இவ்வளவு பயப்படுவளோ என்னவோ தெரியவில்லை…

வீடு திரும்பும் வரை அவள் எதுவும் பேசவில்லை. வந்ததும் ரித்தியாவின் கைகளை பற்றி அவள் அறைக்குள் புகுந்துக் கொள்ள, பெரியவர்கள் நிம்மதியாக இவளின் திருமணத்தை கதிருடன் அமைப்பதில் தீவிரம் காட்டினர். உள்ளே ரித்தியா தான் படபடவென பொரிந்தாள். “என்னடி அந்த பையன் அப்படி பார்க்கிறான்?? இந்த அத்தை என்னடானா உனக்கு அவன் கூட கல்யாணம் பண்ணிட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க போல?? இப்போ என்ன பண்றது?? படிப்பு முடிஞ்சிட்டு தான் உனக்கு ஆப்பு வரும்னு பார்த்தா, இப்போவே இவன் வந்து நிக்கறான்…”

மாயா ஒன்றுமே பேசவில்லை… அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியும், திகைப்பும் அவளின் பேச்சை நிப்பாட்டி இருந்தது! கதிருக்கு எப்போது இருந்து இந்த நினைப்பு மனசுக்குள்?? கார்த்திக்கிற்கு இது தெரியுமா?? தன் வீட்டில் எல்லோரிடமும் என்னவென்று கூறி இவனை நிராகரிப்பது??

தலையில் கைவைத்து அப்படியே ஒன்றும் முடியாமல் அமர்ந்த மாயாவை ரித்தியா தான் சமாதானப்படுத்தினாள். “மாயா நான் உனக்கு சப்போர்ட் பண்றேன்டி. ஆனா, நீ அமைதியா மட்டும் இருந்துடாத… இது லைப்ஃ பிரச்சனை. பார்த்து டிஸைட் பண்ணு. புரியுதா??? எதாவது பேசுடி!”

“ஹ்ம்ம்ம் ஓகே.” இவ்வளவு தான் மாயா வாய் திறந்தது. அன்று மத்தியம் சாப்பிடும் வேளையில், யாரும் இதை பற்றி பேசிக் கொள்ளவில்லை… ஆனாலும், மாயாவிடம் பழைய துருதுருப்பு இல்லை என்பதை அபிராமி அறிந்தார். என்ன ஆனாலும் சரி, இந்த முறை தன் மகளின் போக்கில் செல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

உடன்பிறப்புகளின் உணர்ச்சி கொந்தளிப்பை அரங்கேற்றவே மாலையில், கோதை மாயாவை அழைத்தார் ஹாலுக்கு. ஹாலில் சோபாவில் அம்மா, அத்தை, மாமா, மாமி அனைவரும் உட்கார்ந்திருப்பதை கண்டு தன் மனதை திடப்படுத்திக் கொண்டாள் மாயா! இவள் எதிர்பார்த்ததை போலவே அவளின் அத்தை பேச ஆரம்பித்தார்.

“மாயா இன்னிக்கு பார்த்த பையன் கதிரை உனக்கு தெரிஞ்சிருக்கு ஏற்கனவே. அதனால, நான் டைரக்டா விஷயத்துக்கு வரேன். அவனுக்கு உன்னை கல்யாணம் பேசலாம்னு நாங்க எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணிருக்கோம். மீனாட்சிக்கும் அவனோட புருஷனுக்கும் கூட உன்னை பிடிச்சிருக்காம். அந்த பையனுக்கு கேக்கவே வேண்டாம் போல… அவனையும் எங்க எல்லோருக்கும் பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற??”

“எனக்கு இஷ்டமில்ல அத்தை. இதை இத்தோட விட்றுங்க!”

கோதை அவ்வளவு கூற தன் பெண் ஒற்றை வரியில் பதிலளிப்பதை பார்த்து, கோபம் பொத்துக் கொண்டு வந்தது அபிராமிக்கு. “என்னடி பெரியவங்க சொல்றாங்க… நீ பாட்டுக்கு ஒரே வார்த்தையில, இஷ்டம் இல்லைனு சொல்ற?? ஏன் அந்த பையனை பிடிக்கல?? என்ன ரீஸன்?? ஒழுங்கா பதில் சொல்லு.”

“எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லமா… அவ்வளோ தான், மேல கேக்காதீங்க.”

குரலை உயர்த்தி பேசிவிட்டோமோ என மாயா யோசித்த வேளையில் அவளின் அன்னை மேலும், வசைப்பாடினார். “இப்போ எதுக்கு கத்தற?? கல்யாணம் பண்ணிக்க ஏன் கசக்குது உனக்கு… இன்னும் நீ அந்த போட்டோ பையித்தியத்தை விடலையா… நீ என்ன சொன்னாலும் சரி! உனக்கு காலேஜ் முடிஞ்ச உடனே கல்யாணம்… அதுல, ரொம்ப தெளிவா இருக்கேன் நானு!”

“அண்ணி ஏன் கோவப்படுறீங்க?? நம்ம பொண்ணு பொறுமையா சொன்னா புரிஞ்சிக்குவா. நான் பேசறேன் அவகிட்ட.” அபிராமியின் தோளை தடவியபடி கூறிய தன் மாமியை காணவும் பிடிக்கவில்லை மாயாவுக்கு. யாரும் தன்னுடன் இல்லையா?? கண்களில் இருந்து அருவி பொழிய, மாயாவின் மனம் வேதனைக் கொள்ள அவள் நினைப்பதை புரிந்துக் கொண்ட ரித்தியா, முதன் முதறையாக தன் வாய் திறந்தாள்.

“அம்மா மாயு பாவமா… ப்ளீஸ், அவளுக்கு இப்போ கல்யாணம் வேண்டாமா… அவ லேட்டா பண்ணிக்கிட்டாலும், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… அதனால….”

“ஆமா உனக்கு என்ன பிரச்சனை?? எங்களுக்கு தான எல்லாம்! பார்க்குறவுங்க எல்லாம் பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் பண்ணலையானு என்னை தான் கேப்பாங்க!! உன்னை இல்லை…” ரித்தியாவை பேசவே விடாமல், அபிராமி மீண்டும் கத்த ஆரம்பித்தார். அவரை அடக்கிவிட்டு அவரின் அண்ணன் ரமேஷ் பேசினார்.

“மாயா இங்க வாடா…” மாயா சிறிது தயங்கினாலும், கண்களை துடைத்துக் கொண்டு மாமாவின் அருகில் சென்று உட்காரவும் ரொம்ப நேரம் எடுக்கவில்லை. “நாங்க ஏன் இவ்வளவு ஃபீல் பண்றோம்னா இதை விட நல்ல இடம், தெரிஞ்ச இடமா அமையிறது கஷ்டம். அதான், இவ்வளவு பேசறோம் உன்கிட்ட. நீ நல்லபடியா கல்யாணம் பண்ணி இருந்தா தானமா எங்களுக்கு சந்தோஷம்.

அதோட இந்த பையனையும் உனக்கு தெரிஞ்சிருக்கு. அவனை பத்தி விசாரிப்போம். எல்லாம் நல்லபடியா முடிஞ்சா தான் மேல பேசப் போறோம். என்ன சொல்ற?”

“எனக்கு அந்த பையன் ரொம்ப எல்லாம் தெரியாது மாமா. எனக்கு தெரிஞ்ச ஒரு அண்ணோவோட ஃபிரண்டு அவ்வளவு தான்.”

“தெரியாம தான் அவனோட போட்டோ எல்லாம் லேப்டாப்ல வைச்சிருக்கியா??”

தன் மாமாவின் தீர்க்கமான கேள்வியில், எப்போது கதிரின் புகைப்படத்தை தான் எடுத்தோம் என யோசிக்க ஆரம்பித்தாள். பின் தான் நினைவு வந்தது, விநாயகத்தை போட்டோஷூட் பண்ணும் போது மூவரையும் நிற்க வைத்து எடுத்த போட்டோக்கள்!! நேற்று அவள் மாமா வேறு இவளின் புகைப்பட தொகுப்பை பார்வையிட்டது சரியாக ஞாபகம் வந்த தொலைத்தது அவளுக்கு.

தன் பக்க நியாயத்தை அவள் கூறவும், “உன்னை தப்பா நினைச்சு கேக்கலடா… பட், உனக்கு அந்த பையனை தெரிஞ்சிருக்கு தான?? யாரையோ கல்யாணம் பண்ணிக்கறதுக்கு இவனை பண்ணிக்கலாம்ல?? யார் கண்டா, கல்யாணத்துக்கு அப்புறம் அவன் உன்னோட ஆம்பிஷனுக்கு கூட ஒத்துழைக்கலாம்!” என்றார் ரமேஷ். அவளின் ஆசையை துண்டுகிறோம் என்ற நினைப்பில் அவளின் வயிற்றெரிச்சலை வாரி கொட்டிக் கொண்டார்.

மாயாவுக்கு ஏற்கனவே காலையிலிருந்து ஓடிய சிந்தனை ஓட்டம், இப்போது அழுதது எல்லாம் சேர்ந்து தலை மிகவும் வலித்தது! அதை அப்படியே தன் தாய்மாமனிடம் கூறினாள். “மாமா எனக்கு தலை ரொம்ப வலிக்குது… ப்ளீஸ், இதை பத்தி அப்புறமா பேசலாமா??”

“என்னமா ரொம்ப முடியலையா?? மாத்திரை போட்டுக்கறியா?? இல்ல டாக்டர் கிட்ட போலாமா??”

“நீ போய் ரெஸ்ட் எடுமா… அப்புறமா பேசிக்கலாம்.”

“போய் முகத்தை கழுவிட்டு பேசாம தூங்கு. நைட் சாப்பிட எழுப்பறோம்.”

தன் மாமா, அத்தை, மாமி என எல்லோரும் கூறியதை கேட்டு தலையாட்டிவிட்டு, அறையினுள் செல்ல திரும்பினாள் மாயா. சட்டென்று தன் அன்னையை திரும்பி பார்த்தாள் ஆவலுடன். அவர் தலையசைத்து இவளை போக சொல்லவும், வேறு யோசனை இன்றி கட்டிலில் விழுந்தாள். உள்ளம் சுனாமியாய் கொந்தளிக்க, அதை கஷ்டப்பட்டு அடக்கி தூங்க முயன்றாள்.

இவளின் பின்னே ரித்தியாவும் தன் அக்காவிற்கு தைலம் தேய்க்க அறையில் புகுந்துக் கொள்ள, வெளியே முதலில் ஜாதகப் பொருத்தம் பார்த்து, அது நன்றாக அமைந்தால் மேற்கொண்டு மாயாவிடம் பேசலாம் என முடிவு செய்யப்பட்டது!

இங்கே நிலைமை இப்படியிருக்க, கதிரின் வீட்டிலோ ஒரே மகிழ்ச்சி பொங்கி வழிந்த வண்ணம் இருந்தது. வீட்டிற்கு வந்ததும் தன் பெற்றோர்களிடம் தன் காதல் கதையை கூறி முடித்தான் கதிர். அவர்களுக்கும் மாயாவை பிடித்திருந்ததால், எதுவும் ஆட்சேபனை சொல்லவில்லை. மீனாட்சிக்கு தன் பழைய தோழியின் குடும்பத்தில் பெண் எடுப்பது மிகவும் பிடித்திருந்தது! வீட்டில் பச்சை கொடி தென்பட்டவுடன், மாயாவிடம் “பச்சை நிறமே பச்சை நிறமே” என பாடச் சென்றான் கதிர்.

அவனால் வீட்டில் அமைதியாக இருக்க முடியவில்லை. கார்த்திக்கை அழைத்து, அன்று நடந்த அனைத்தையும் ஒப்பித்தான்… கார்த்திக்கு அதிர்ச்சியே! திகைப்பில் இருந்து மீண்டு வந்தவுடன், “சரிடா ஒரு வேலை இருக்கு அப்புறமா கூப்பிடறேன்” என கூறி தப்பிக்க பார்த்தான். கதிராவது விடுவதாவது??

“மச்சி நாளைக்கு நீ என் கூட ஒரு இடத்துக்கு வர… ஈவ்னிங் அஞ்சு மணிக்கு ரெடியா இரு. பை.” கார்த்திக் பேசவே இடம் தராமல் கதிர் பேசிவிட்டு தொலைப்பேசியை வைத்து விட்டான். அதன்பின் இவன் அழைத்தாலும் எடுத்தபாடாக காணோம்! ‘பாவி என்னை ஏன்டா இப்படி படுத்தற??’ மனதிற்குள் புலம்பியபடி கார்த்திக் அடுத்த நாள் அவன் நண்பன் கூறிய நேரத்திற்கு ரெடியாக இருந்தான்.

கார்த்திக்கின் அலுவகத்துக்கு வெளியே தன் பைக்கை நிறுத்திய கதிர் அவனை அழைத்துக் கொண்டு சென்ற இடம் அவர்களின் கல்லூரி! போகும் வழியிலேயே கதிரை கேள்விகளால் வருத்தெடுத்தான் கார்த்திக். “இன்னிக்கு மன்டே தான?? நேத்து நைட்டே பஸ் ஏறி சென்னை போயிருக்கனும் நீ. இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்க??’

“இன்னிக்கு கூட நான் கிளம்பலடா… நாளைக்கு தான் கிளம்பறேன்…”

“ஏன்டா?? முதல்ல இப்போ நாம எங்க போறோம்னு சொல்லு…”

“ஸஸ்பென்ஸ்” ரகசிய புன்னகையுடன் கதிர் கூறியதை கேட்டதும், ஒரு வேளை மாயா திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாளா, என திகைத்தான் கார்த்திக்! இருக்காது சட்டென்று அப்படி ஒத்துக்கொள்பவள் இல்லை மாயா… ஆனால், அவள் சம்மதித்தாள் தானே கதிரின் ஆசை நிறைவேறும்?? தான் என்ன சிந்திக்கிறோம் என அவனுக்குள்ளேயே குழம்பிப் போனான் கார்த்திக்.

மாயா சம்மதம் தெரிவித்தால் தனக்கு சந்தோஷமா, இல்லை மறுத்தால் சந்தோஷமா?? கடவுளே!! இந்த சிக்கலில் இருந்து தனக்கு எப்போது தான் விடிவு காலமோ?? கார்த்திக் இதே யோசனையில் இருந்த வேளையில், கதிர் மாயாவிடம் கூட்டிச் சென்றான். ‘அடப்பாவி’ என்று கார்த்திக் இருக்க, கதிர் பத்தடி தூரத்தில் நின்றிருந்த மாயாவிடம் விரைந்தான், “கொஞ்சம் இருடா… அவகிட்ட பேசிட்டு வந்திடறேன்.” என்று கூறியபடி.

மாயாவோ இவர்களை துடிக்கும் இதயத்துடன் பார்த்திருந்தாள். ஒரு வேளை கார்த்திக் தன்னுடைய காதலை தெரிவிக்க தான் வந்திருக்காறானோ?? படப்படத்த நெஞ்சை அடக்கியபடி, மாயா இமையசைக்காமல் பார்க்க அவளின் அருகில் கூட கார்த்திக் வரவில்லை!! வந்ததோ கதிரே… அவன் வந்து என்னென்னவோ பிதற்ற மாயாவின் நெஞ்சம் தீயை சுட்டார் போல் கொதிக்க ஆரம்பித்தது.

கதிர் இவளை பார்க்காமல் திரும்பி நின்றவாறு கொஞ்சம் வெட்கியபடியும், பயந்தபடியும் தன் காதல் காவியத்தை அரங்கேற்ற, மாயாவின் விழிகள் கார்த்திக்கையே நோக்கின! கார்த்திக்கும் மாயாவை பார்க்கும் சக்தியற்று, அவர்களுக்கு முற்றிலுமாக திரும்பி நின்றிருந்தான். ‘முகத்தை கூட பார்க்கனும்னு தோணல அவனுக்கு’ இவ்வெண்ணமே மாயசித்ராவின் இதயத்தை வாளால் கூறு போட்டது.

கதிர் இதையெல்லாம் அறியாமல் தன் காதலை சொல்லிவிட்டு முடிக்கும் தருவாயில், “இன்னிக்கு உன்னோட ஜாதகம் வாங்கிட்டாங்க அம்மா… நாளைக்கு பார்த்துட்டு மேல பேசுவாங்க. பட், கல்யாணம் உனக்கு காலேஜ் முடிஞ்சப்புறம் தான். நாம கல்யாணம் முடிஞ்சு சென்னை போயிட்டப்புறம், உன்னை அங்க போட்டோகிராபி கிளாஸ்ல சேர்த்து விடறேன். என்ன ஓகே தான??” என்று வினவினான் ஆத்மார்த்தமாக!

கதிரின் சுபாவம் பயந்த சுபாவமாக இருந்தாலும், எப்போதும் தான் முதலில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் குணம் மேலோங்கி இருந்தாலும், அவன் மாயாவின் மேல் கொண்ட காதல் என்னவோ உண்மை! கதிர் கூறியதை பாதியில் இருந்து தான் கவனிக்க தொடங்கினாள் மாயா. அவன் முடித்ததும் அதியசயமாக அவனை பார்த்தாள்.

வீட்டில் அனைவரும் அவளின் கனவை எதிர்க்க, கதிர் மட்டும் அதற்கு உயிர் கொடுக்க நினைப்பது மாயாவை ஆச்சரிய கடலில் மூழ்கடித்தது. அவளின் ஆச்சரியத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான் கதிர். “உனக்கு என்னை பிடிச்சிருக்கு தான?? அப்போ நாளைக்கு அம்மாவை பேச சொல்றேன். பை…”

எங்கே மாயா எதாவது சொல்லுவாளோ என ஓடியே விட்டான் கதிர். கார்த்திக்கை சீக்கிரமாக பைக்கை எடுக்க சொல்லிவிட்டு, அதில் ஏறி பறந்தான் அந்த அவசரக்காரன்! மாயா நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் தாங்கயியலாமல், அப்படியே மடிந்து உட்கார்ந்தாள்.

இதெல்லாம் வெறும் டிரைலியர் தான் என்பது போல, அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் அவளின் வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப் போட்டது. அதன் முதல் அத்தியாயமாக மாயாவும் கார்த்திக்கும் சந்தித்தனர்!!!
 
Top