Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 8

Advertisement

Admin

Admin
Member

அத்தியாயம் – 8

ஒருவரின் வார்த்தைகளில் மனம் முழுவதும் விட்டு போவதை முதன் முதலாக உணர்ந்தான் கார்த்திக். கதிர் கூறியவற்றை கேட்டு அவன் திகைத்து கற்சிலையாக இருந்தது சில நிமிடங்கள் மட்டும் அல்ல… பல மணிநேரங்கள்!! கதிர் அனைத்தையும் ஒளிவு மறைவு இன்றி கொட்டிவிட்டு கார்த்திக்கின் முகத்தை ஆவலாக பார்க்க, அவன் பார்வை எங்கோ வெறித்திருந்தது.

கார்த்திக்கை உலுக்கியபடி, “என்னடா ஒண்ணுமே சொல்லாம இருக்க?? நான் உன்கிட்ட தான் கேக்கறேன்?! விநாகிட்ட நாளைக்கு சொல்லிடலாமா??” என்று அவன் ஆருயிர் நண்பன் வினவினான்.

உணர்ச்சி எதுவும் வழிந்தோடாத முகத்தைக் கொண்டு, ஒரு மாதிரியாக மண்டையை உருட்டினான் கார்த்திக். அவனுக்கு அந்த நொடி என்ன சொல்வது அல்லது செய்வது என்று தெரியவில்லை… அது மட்டுமின்றி அவன் நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. அதனால், அமைதியாக தன்னுடைய கைப்பேசியை பார்ப்பது போல், கதிரின் கேள்விகளில் இருந்து தப்பிக்க பார்த்தான் அவன்.

கதிரோ இவன் தலையாட்டலே போதும் என்பது போல, ‘நாளைக்கு பார்க்கலாம்’ என்று விடைப்பெற்றான். கதிருக்கு தன் நண்பனிடம் எல்லாவற்றையும் சொல்லியதே மனதின் பாதி பாரம் குறைந்தது போல் உணர்ந்தான். தன் சந்தோஷம் தன் நண்பனின் சந்தோஷத்தை குழி தோண்டி புதைத்து பிறந்தது, என்பதை பாவம் அவன் அறியவில்லை.

ஆனால், கார்த்திக் உணர்ந்தே இருந்தான். கதிர் சென்றதும் தன் அறையின் கட்டிலில் போய் விழுந்தவனுக்கு, தலை மிகவும் பாரமாக இருந்தது. கதிர் சொன்னதை எல்லாம் யோசிக்க ஆரம்பித்தவனுக்கு அவன் கூறியது எல்லாம் ரிவைன்ட் செய்தது போல், மனதுக்குள் ஓடியது!

“எப்படினு தெரியலடா கார்த்தி…. உன்கிட்ட சண்டை போட்டால? அப்போவே என்னை ரொம்ப கவர்ந்துட்டா போல. அவளை பத்தி ரொம்ப ‘தைரியமான பொண்ணு’னு நினைச்சுப்பேன். ஆனா, அவளோட கனவு, விநாகிட்ட அவ பேசுறது எல்லாம் பார்த்து ரொமப் பிடிச்சு போச்சு எனக்கு.

முதல்ல ஒரே குழப்பமா இருந்துச்சு. அம்மா, அப்பா இதெல்லாத்துக்கும் ஒத்துப்பாங்களா?? மாயாவே ஒத்துப்பாளா?? இப்படி நிறைய டவுட் எனக்குள்ள. ஆனா, இந்த ஸ்டடி லீவ்ல தான் அவ இல்லாம என்னால இருக்க முடியாதுனு புரிஞ்சிக்கிட்டேன்.

உங்க ரெண்டு பேருக்கும் தெரியாம அவ வீட்டு பக்கமா போயிட்டு, அவள டெய்லி பார்ப்பேன்டா… இப்போ காலேஜ் முழுசா முடிஞ்சிருச்சுனு யோசிக்கும் போது, எவ்வளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?? யார் கிட்ட சொல்றது, என்ன பண்றதுனு புரியாம தான் உன்கிட்ட கொட்டிட்டு இருக்கேன். நீ தான்டா எதாவது ஹெல்ப் பண்ணனும். விநா வேற அண்ணனா போயிட்டான் மாயாக்கு. அவன் கிட்ட சொல்ல கொஞ்சம் ஜெர்க்காகுது மச்சான்.

நம்ம ரெண்டு பேரும் நாளைக்கு விநாவ போய் பார்த்து இதையெல்லாம் சொல்லிட்டு வந்திருலாம்டா. அவன் அப்புறம் கோச்சிப்பான், சொல்லாம விட்டுட்டோம்னு… என்ன சரியா??”

கதிரின் பேச்சை கவனிக்கவில்லை என்று அவன் நினைத்தாலும், அவன் மனம் அதை வேதனையுடன் பதிவேற்றியதை அப்போது தான் உணர்ந்தான். இப்போது தான் என்ன செய்வது?? உதவி என்று கேட்காமலே கதிருக்கு எல்லாவற்றையும் செய்து தரும் தன்னை இந்த இக்கட்டில் நிறுத்திய கடவுளை மனமாற திட்டினான் கார்த்திக்.

எல்லோருக்கும் மனம் ஒரு பக்கமும், மூளை இன்னொரு பக்கமும் சாயும். ஆனால், கார்த்திக்கிற்கு மனமே இரண்டு பக்கம் தராசு தட்டை ஏந்தி நின்றது. காதல் கொண்டொரு மனம் மாயாவின் பக்கம் சாய, நட்பின் பால் உருகியது இன்னொரு மனம். எப்போதும் கதிருக்கு தான் அனைத்தையும் விட்டுக் கொடுப்பது நடப்பது தான்….

அதற்காக காதலையும் விட்டு கொடுப்பதா?? மனசாட்சி சரியாக அந்த நேரத்தில் கார்த்திக்கிற்கு நினைவூட்டியது. “நீ தான அவனுக்கு ஒவ்வொரு முறையும் விட்டு கொடுத்து விட்டு கொடுத்து, கெடுத்து வைச்ச?? இப்போ முக்கியமான ஒண்ண உன்கிட்ட இழுத்து வைச்சா அவன் தாங்குவானா?? அதை மட்டும் யோசி…”

யாருக்கும் தெரியாமல் உள்ளுக்குள் பூட்டியே வைத்த காதல் மூச்சு முட்டுவதாக தான் அவஸ்தை பட்ட நேரத்தில், அதை வெளிக் கொண்டு வராமல் புதைந்து விடுவதே மேல் என்ற நிலை தனக்கு ஏனோ??

சிந்தனை தறிக்கெட்டு ஓடிய வேகத்தில் அன்றைய பொழுது போனதே கார்த்திக்கிற்கு அறியவில்லை. தன் தந்தை வந்து கேட்ட போது கூட, தலைவலி என கூறி அவரின் கழுகுப் பார்வையில் இருந்து தப்பித்தான். ஆனால், பென்டூலம் ஆடும் மனதை தான் நிலைநிறுத்த முடியவில்லை!! ஒரு நிலையில் தலையை பியித்துக் கொண்டு, எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு சென்று விட்டால் கூட பரவாயில்லை என்று தோன்றியது.

விடிகாலை வரை சிந்தனை செய்த கார்த்திக், விடியும் தருவாயில் முடிவுடன் படுத்தான். எப்படியும் மாயாவுக்கு தானும் கதிரும் ஒன்று தான்! அவளுக்கும் காதலின் மேல் பெரிய நம்பிக்கை இல்லை என விநாயகத்தின் மூலம் கார்த்திக் அறிந்திருந்தான். அவளின் நிழல் படங்களின் தேடலையும் கதிர் எப்படியும் நிறுத்தப் போவதில்லை… வெற்று காகிதமாக இருக்கும் அவள் இதயத்தில் கதிரை எளிதாக வரையலாம்!!

அதனால் ஆறு மாதங்களாக தெரிந்து சில வாரங்களில் காதலாக மலர்ந்த மாயாவை விட, பல வருட நட்பே பெரியது என்று முடிவெடுத்தான். தராசு தட்டில் கதிர் ஜெயித்த உடனே தன மனதில் வலி தோன்றுவதை கார்த்திக்கால் தடுக்க முடியவில்லை. இதை பற்றி தன் தந்தையை தவிர யாரிடமும் மூச்சு கூட விட கூடாது எனவும் உறுதி மொழி எடுத்தான்.

விடிந்து பல மணி நேரமாகியும் தூங்கிவிட்டு, தாமதமாக அறையிலிருந்து வெளியே வரும் மகனை கவலையுடன் பார்த்தார் தந்தை. ஒரு வேளை அந்த பெண் மாயா தன் மகனை ஏற்றுக் கொள்ளவில்லையோ?? அதான் சோகமாக இருக்கிறானா?? சுப்பிரமணியத்தின் விவேக மூளை வேகமாக செயல்பட்டது!

காலையில் உணவருந்தும் போது விடாமல் கேள்வி கேட்டார் சுப்பிரமணியம். “ஏன்டா ஒரு மாதிரி இருக்க? எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கலாம்டா… அப்பா கிட்ட சொல்லுபா! நேத்துலந்து எதுவும் பேச மாட்டேங்குற, என்ன விஷயம்??”

சுப்பிரமணியம் டிசைன் டிசைனாக கேள்வி எழுப்பினாலும், பதில் “ஒண்ணுமில்ல…” என்று தான் வந்தது. கேள்வியின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போக, பதிலின் அழுத்தமும் கூடிக் கொண்டே போனது!!

கடைசியில் பொறுக்க முடியாமல், “இப்போ என்ன தான்பா வேணும்?? தலைவலினு படுத்தானே, அதை பத்தி கேப்போம்னு இல்லாம, ‘என்ன எதுனு’ கேள்வி கேட்டுட்டே இருக்க… எனக்கு உடம்பு நல்லானதும் நானே உன்கிட்ட வந்து பேசறேன். போதுமா??” என்று கார்த்திக் கத்த, சுப்பு அப்பா சோகமான முறுவலுடன் தலையசைத்து அலுவகத்துக்கு புறப்பட்டார்.

பையன் தன் பேச்சை எடுத்திருந்து பேசிகிறான் என்றால், எதுவோ தப்பாக இருக்கிறது என மட்டும் புரிந்துக் கொண்டார். நாளை வரை பார்க்கலாம், இல்லையென்றால் எதாவது செய்து அவனை அரித்துக் கொண்டிருக்கும் விஷயத்தை அறிய வேண்டும் என அவரின் மனம் குறித்துக் கொண்டது. கார்த்திக் தன் தந்தையிடம் பேசியதை நினைத்து வருந்திய நேரத்தில், விநாயகத்தை பார்க்கச் செல்ல வேண்டும் என் கதிர் வந்து நின்றான்.

வேறு வழியில்லாமல் கார்த்திக்கும் கிளம்பி ரெடியாகி வர, அவன் முகத்தில் எப்போதும் இருக்கும் மலர்ச்சி இல்லாததை கண்டு என்னவென்று கேட்டான் கதிர். “ஒண்ணும் இல்லடா கொஞ்சம் உடம்பு முடியல. தலைவலிக்குது… பாரமா! அதான்…”

“அப்போ நீ ரெஸ்ட் எடுடா. இன்னொரு நாள் போலாம். விநாயகம் கிட்ட நானே சொல்லிக்கிறேன்.”

“இல்ல இல்ல போலாம்டா. வந்துட்டு நான் வீட்டுல ரெஸ்ட் எடுக்கறேன். பிரச்சனையில்ல.”

வலிய வரவைத்த புன்னகையுடன் கார்த்திக் பதில் கூற, கதிர் முறுவலுடன் கிளம்பினான். கதிரே தன் முகத்தில் இருந்து கண்டுக் கொள்கிறான் என்றால், தன் உணர்வுகள் அப்பட்டமாக தெரிகிறது போலவே?? விநாயகத்துக்கு ஏற்கனவே சந்தேகம் வேறு வந்தது….

அதனால், அவனை பார்க்கும் போது கவனமாக தன் முகபாவனைகளை மறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்தான். நேராக இருவரும் விநாயகத்தின் வீட்டிற்கு சென்றனர். சிறிது நேரம் அவனின் அன்னையுடன் நேரம் செலவழித்தப் பின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான் விநாயகம்.

அவர்கள் மூவரும் எப்போதுமே மொட்டை மாடியில் தான் தங்களின் பேச்சு அரட்டையை அரங்கேற்றுவது. இப்போது மூவரும் அமர்ந்ததும் கார்த்திக்கே குண்டை முதன்முதலில் போட்டான். “டேய் மச்சா நம்ம பையன் எதோ பெரிய மேட்டர் எல்லாம் சொல்றான், கேளேன்…”

விநாயகம் கேள்வியாக கதிரை பார்க்க, பட்டென்று மண்பானையை உடைத்தது போன்று விஷயத்தை போட்டுடைத்தான் கதிர். “நான் உன்னோட தங்கச்சி மாயாவை லவ் பண்றேன்டா….” விநாயகத்தின் கண்கள் சட்டென்று கார்த்திக்கை தான் பார்த்தது! அவனுக்கும் மிகவும் அதிர்ச்சி தான்… ஆனால், அதையெல்லாம் தாண்டி, கார்த்திக்கிற்கு மாயாவை பிடித்திருக்கிறதோ என்று ஒரு எண்ணம் அவனுக்குள் எப்போதும் இருக்கும்.

ஆனால், விநாயகம் இப்படி பார்ப்பான் என்று தெரிந்திருந்த கார்த்திக் எப்போதும் போல முகத்தை வைத்தான். “நீ அவளோட அண்ணனாம்… உன்கிட்ட சொல்றதுக்கு பயந்துட்டு நேத்து என்கிட்ட வந்து சொன்னான்…. நான் தான் இழுத்துட்டு வந்தேன். என்னடா சொல்ற??”

விநாயகம் ஒருமுறை கார்த்திக்கின் முகத்தை கூர்ந்து நோக்கினான். ஒரு வேளை நடிக்கிறானா?? இல்லை அவனுக்கு மாயா ஒன்றுமே இல்லையா? விநாயகத்தின் ஆராய்ச்சி கார்த்திக் நடிக்கவில்லை என்று முடிந்ததில், கார்த்திக் நிம்மதியுற்றான். இதற்குள் கதிர் தன் ஒரு தலை காதலை சொல்லி முடித்திருக்க, விநாயகம் கதிரின் பக்கம் திரும்பினான்.

“மச்சான் நீ அவள லவ் பண்றத பத்தி எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்ல! ஆனா, அவ இதுக்கு ஒத்துப்பாளா அப்படிங்கறது தெரியாது… அவளுக்கு பெரிய சினிமாட்டோகிராபர் ஆகனும்னு தீராத ஆசை… அதனால, நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அவளோட கனவை கலச்சுடாதடா. புரியுதா??”

“இதெல்லாம் நீ சொல்லனுமாடா?? நான் கல்யாணம் பண்ணிட்டு என்னோட சென்னைக்கு தான கூட்டிட்டு போகப் போறேன்… அங்க அவளுக்கு கோர்ஸ் சேர்த்து விடறேன்! எனக்கு நீ ஓகே சொன்னதே போதும்டா. அதோட நான் இப்போ அவகிட்ட சொல்லப் போறதில்லை, என்னோட லவ் பத்தி! ரெண்டும் மூணு மாசம் போகட்டும்… அப்புறமா பார்த்துக்கலாம்…”

இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டு கார்த்திக்கிற்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை… கதிர் தன்னை போலவே மாயாவின் கனவுகளுக்கு தடை போட மாட்டான் என்பது நல்ல விஷயம் என்றால், அவர்களின் வாழ்க்கையை தள்ளி நின்று காணும் சக்தி தனக்கு இருக்கிறதா என்ற கேள்வியே அவனை மேலும் சோகமாக்க போதுமானதாக இருந்தது!!

ஆனால், முகத்தில் இதையெல்லாம் காண்பிக்காமல், அழகாக சிரித்து ஒப்பேற்றினான் அந்த கர்ணப் பிரபு. வீடு திரும்பினால் எதையாவது நினைத்து பையித்தியாமாக மாறிடுவோமோ என பயந்து, அன்று முழுவதும் விநாயகத்தின் வீட்டிலேயே தங்கினான். தாங்கள் இருவரும் ஒரு மாதம் கழித்து சேரவிருக்கும் அலுவகம் பற்றியெல்லாம் இருவரும் பேசினர்.

அந்தி சாய்ந்ததும் வீட்டுக்கு வந்த கார்த்திக்கை வரவேற்க அவன் தந்தை இருந்தார். காபியை மகன் கையில் திணித்துவிட்டு, டிவியில் கவனம் வைத்திருந்த சுப்பிரமணியத்தின் மோவாயை தன் பக்கம் திருப்பினான் கார்த்திக். “சாரிபா… காலையில எதோ டென்ஷன்… உன்னை கத்திட்டேன் தேவையில்லாம!”

ஒரு அர்த்தம் பொதிந்த புன்னகையுடன், “எனக்கு தெரியும்டா. நான் எப்போ கோச்சிட்டு இருந்திருக்கேன் உன்கிட்ட. ஒண்ணும் பிராப்ளம் இல்லை… உனக்கே எப்போ அப்பாகிட்ட சொல்லனும்னு தோணுதோ வந்து சொல்லு. ஓகே??” என்ற சுப்பு அப்பா, கார்த்திக்கின் தலையை தடவி விட்டு எழுந்துச் செல்ல துவங்கினார்.

“அப்பா” கார்த்திக்கின் நடுங்கிய குரல் கேட்டு திரும்பினார் தந்தையவர். “சொல்றேன்பா இப்போவே” பையன் தன் வழிக்கு வந்ததில் மனதளவில் சந்தோஷப்பட்டு, அவன் அருகில் மீண்டும் அமர்ந்தார் சுப்பிரமணியம். ஒன்றும் பேசாமல் அவரின் முன் கைகளை நீட்டினான் கார்த்திக். “நான் சொல்லப் போறதை யார்கிட்டயும் சொல்ல மாட்டனு அம்மா மேல சத்தியம் பண்ணுபா…”

கார்த்தின் கூற்றை வைத்தே விஷயம் மிகவும் பெரியது என புரிந்தது அவருக்கு. “அம்மா மேல சத்தியமா சொல்ல மாட்டேன்டா.” மகனின் கைகளை பற்றியபடி கூறிவிட்டு, அவனின் முகத்தை கூர்ந்தார் சுப்பிரமணியம். ஒரு வரண்ட குரலில் நடந்த அனைத்தையும் அவரிடம் பகிந்தான் கார்த்திக்.

“எனக்கு என்ன பண்றதுனே தெரியலைபா… அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா லைப்ஃ லாங் என்னால அவளை பார்த்துட்டு இருக்க முடியுமா?? தெரியல… ஆனா, நானா கதிரா? இந்த கேள்விக்கு எனக்கு கதிர் தான் சரினு தோணுதுபா! அவன் சாதாரண விஷயத்துக்கே தப்பா போச்சுனா தாங்க மாட்டான். இந்த மேட்டர்ல அவன் ஏதாவது தப்பான முடிவு எடுத்துட்டான்னா??!! வேணாம்பா… அவன் தான் மாயாவுக்கு கரக்ட்!”

“என்கிட்ட சொல்றியா, உனக்கு நீயே சொல்றியாடா?? சரி அவங்க ரெண்டு பேரும் சேர்ந்திருவாங்க…. அப்போ நீ?”

இக்கேள்வி கேட்ட நிமிடம் கார்த்திக்கிடம் கசப்பான ஒரு முறுவல் தோன்றி மறைந்தது! “எனக்கு மனசு மாறாதா என்ன? கொஞ்ச வருஷத்துல அவளை மறந்திருவேன்பா… எனக்கு இன்னொரு பொண்ணு கல்யாணம் பண்ண பாருன்னு உன்னை கேட்டாலும் கேப்பேன்!!”

“ரொம்ப நடிக்காத கார்த்தி! இப்படி எல்லாம் பேசி நீ உன்னை வேணும்னா ஏமாத்திக்கலாம். நான் ஏமாற மாட்டேன்! அம்மா மேல சத்தியம் வேற வாங்கிட்ட… இல்லனா கண்டிப்பா இப்படியே விட்டுருக்க மாட்டேன் இந்த விஷயத்தை. ஆனா, நீ எடுத்துருக்க முடிவுல எனக்கு சுத்தமா இஷ்டமே இல்லைனு மட்டும் ஞாபகம் வைச்சுக்கோ!

இதுக்கு மேல உன்னோட டெசிஷன் தான்டா… இப்போ கூட ஒண்ணும் காலம் போகல. யோசிச்சு முடிவு பண்ணு!” சுப்பிரமணியம் கூறிவிட்டு அவரின் அறைக்கு சென்றுவிட்டார். ஆனால், கார்த்திக் அவர் கூறியது போல் சிந்திக்காமல், தான் எடுத்த தவறான முடிவே சிறந்தது என்ற நம்பிக்கையில் குடியிருந்தான்!

****************************************************************************************************

கார்த்திக்கின் மனதிலும், கதிரின் மனதிலும் ஒருங்கே மிளிர்ந்த மாயாவின் மனதில் பல எண்ணங்கள். தான் உண்டு தன் லட்சியம் உண்டு என இருந்தவளின் நெஞ்சில், காதல் எனும் சாரல் மழை பெய்ய காரணமாகிய கார்த்திக்கை, முடிந்த அளவு திட்டினாள்.

மனதின் உள்ளே அல்ல! வெளியே தன் தங்கையின் காதுபட திட்டினாள்! விநாயகத்தை பற்றியும் அவனின் நண்பர்களை பற்றியும் அவள் ரித்தியாவிடம் கூறியது உண்டு தான். கல்சுரல்ஸ் நடந்ததிலிருந்து யோசனை படிந்த முகமாக மாயா அடிக்கடி காட்சியளிக்க, வெகு நாட்களாக தோண்டி துருவி, விஷயத்தை அறிந்தாள் ரித்தியா.

கேட்ட அவளுக்கும் ஆச்சரியம், அதிர்ச்சி எல்லாம்… அவள் தான் எப்போதும் காதல், கல்யாணம் என பேசியபடி இருப்பாள் வீட்டில். மாயாவின் நினைவுகள் எப்போதும் கேமராவை சுற்றியே இருக்கும். அவள் இப்படி ஒருவனை பிடித்திருக்கிறது என சொல்லுவாள் என தங்கையவள் நினைக்கவில்லை…

தன் ஆச்சரியத்தை அவள் கொட்டியதும், மாயா தன் மனம் திறந்து பேசினாள். “நான் அவனை லவ் பண்றேனு சொல்லலைடி. எனக்கு அவனை பிடிச்சிருக்கு! அவ்வளவு தான். அதுக்கு மேல ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. பட், இது காதல், கல்யாணம் வரைக்கும் போகுமானு தெரியாது. அவனுக்கு முதல்ல என்னை பிடிச்சிருக்கானே தெரியலை…”

“பிடிக்காம தான் உன்னையே பார்த்துட்டு இருந்தானா, பாட்டு பாடும் போது??”

“அது வேற ரித்து. அவன் கேமராவ தான் பார்த்திருப்பான்னு, இப்போவும் எனக்கு தோணுது. ஒரு பக்கம் இதெல்லாம் வேண்டாம்டா சாமி… ஒழுங்கா கேமராவையே கட்டிக்கலாம்னு தோணுது… ஒண்ணுமே விளங்க மாட்டேங்குது. ப்ச்ச்ச்!!”

“எல்லாம் காலம் வரப்போ தானா நடக்கும். முறைக்காதமா! நல்லது நடக்கும்னு சொன்னேன்… பார்த்துக்கலாம் விடு! நீ ஃபைனல் இயர் வந்துட்ட… முதல்ல, அத்தையையும் அம்மாவையும் சமாளிக்குற வழிய பாரு! கூடிய சீக்கிரம் உன்னை பேக் பண்ண பிளானிங் ஸ்டார்ட் ஆகிடும்.”

மாயசித்ராவுக்கு எல்லாவற்றையும் நினைக்கும் போது மண்டை சுற்றியது!!! ஒரு இருபது வயதை தொடும் பெண்ணிற்கு எத்தனை பிரச்சனைகள்?? எப்படி இத்தனை தடைகளை தாண்டுவது??? மாயா மனதில் சிந்தனை ஓடிக் கொண்டே இருந்தது அடுத்த சில மாதங்களுக்கு….

அப்போதும் மாயா தெளிந்தபாடாக காணோம்! ஒருவித ஊஞ்சலில் மனம் ஆடியபடி இருந்தது. ஆறு மாதம், கழித்து அவளுடைய அத்தையும் அன்னையும் முதல் இடியை வீட்டில் போட்டார்கள் என்றால், வெளியே வேறு சில நபர்களும் ஈட்டியை பாய்ச்சினார்கள் இதயத்தில்! மீளவே முடியாத சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டதாக உணர்ந்தாள் மாயா!!! முழுதாக அதை உணர்ந்த போது காலம் தாழ்ந்து போய்விட்டது!!


 
Top