Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 16 2

Advertisement

Admin

Admin
Member

விநாயகம் கேட்டதை தொடர்ந்து, அபிராமியும் யோசைனையில் மூழ்கினார். குனிந்து மாயாவை பார்த்தார். அவளும் தாயை ஏக்கமான கண்களுடன் அண்ணாந்து நோக்கினாள். ஒன்றும் முடிவாக சொல்லாமல், “நானும் என்னோட பொண்ணும் கொஞ்ச நேரம் தனியா பேசனும்.” என்று கூறிவிட்டு மாயாவின் கைப் பிடித்து உள்ளறைக்கு அழைத்துச் சென்றார். ரித்தியாவை கூட உள்ளே அனுமதிக்கவில்லை…

“அம்மாமா….” அழுதபடி தோள் சாய்ந்த மகளின் தலையை கோதிவிட்டு, “மாயா அழுதது போதும்டா… அடுத்து என்ன செய்யறது இப்போ?? அத பத்தி மட்டும் யோசி!” என்று அன்போழுகிய குரலில் சொன்னார்.

“எனக்கு நிஜமா என்ன செய்யறதுனு தெரியலைமா…. அவனை கொல்லனும் போல தோணுது! அதே நேரம் இது எல்லாம் வெளியே தெரிஞ்சா என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு… என்னை அவன்….” தேம்பலுடன் நிறுத்திவிட்டு, மீண்டும் தொடர்ந்தாள். “எனக்கு அப்புறம் ரித்து வேற இருக்காமா… அவ லைப்ப நினைச்சா தான்மா கஷ்டமா இருக்கு…”

“இங்க பாரு மாயு…. அம்மா இந்த வாட்டி உன்னை எதுக்கும் கம்பெல் பண்ண மாட்டேன்… நீ என்ன முடிவு பண்றீயோ அது அம்மாக்கு ஓகே தான்டா… நீ யோசனை பண்ணி சொல்லு!”

அபிராமியின் கனிவான குரலைக் கேட்டு மாயாவுக்கு புது தெம்பு வந்தது போல் இருந்தது. தான் மூன்று இரவுகளாக யோசித்து வைத்து இருந்ததை அன்னையிடம் பகிர்ந்தாள் மாயா. “அம்மா நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன். சரியான்னு சொல்லுமா…”

“என்னடா சொல்லு…”

“என்னால எப்போவும் இந்த தாலியை கழட்ட முடியாதுமா…. அவன் எதை நினைச்சு இதை போட்டானோ, தெரியாது. ஆனா, இது மட்டும் இல்லனா அன்னிக்கு அந்த ஹோட்டல்ல நடந்ததுக்கு….. என…. எனக்கு வேற பேருமா….” தாலியை பிடித்தபடி கதறி அழும் பெண்ணை காணும் போது அபிராமிக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது…. ‘ஐய்யோ தன் மகளுக்கா இந்த நிலைமை’ என அவளை கட்டிக் கொண்டு அவரும் கதறினார். கண்ணீர் பொழிந்த வண்ணம் இருந்தாலும், தன் மனதில் இருந்ததை அன்னையிடம் பகிர்ந்தாள். “ஆனா அதுக்காக என்னால அவன் கூட சேர்ந்து வாழவும் முடியாது. எல்லாருக்கும் சொல்லி கல்யாணம் பண்ணி வைங்க. நான் சென்னைக்கு சினிமாட்டோகிராபி படிக்கப் போறேன்.

அதுக்கப்புறம் எனக்கும் அவனுக்கும் எந்தவித சம்மந்தமும் இருக்காது. கடைசி வரைக்கும் நான் தான் அவன் சட்டப்படியான பொன்டாட்டியா இருக்கனும். அவன் வேற யாரையும் கல்யாணமும் பண்ணிக்க கூடாது! நானும் அவன் கூட இருக்க மாட்டேன். வாழ்நாள் முழுக்க தனியா இருந்திருந்து சாகட்டும்!!! இத விட அவனுக்கு பெரிய தண்டனை எனக்கு தெரியலைமா… எனக்கும் பேருக்கு கல்யாணம் ஆன மாதிரி ஆச்சு, ரித்தியாவோட கல்யாணமும் இதால பாதிக்காது. நீங்க என்ன சொல்றீங்க??”

இவ்வளவு மன ஊளைச்சலிலும் தன் மகள் எடுத்துருக்கும் முடிவை மெச்சாமல் இருக்க முடியவில்லை அபிராமியால். அவரால் மாயா கூறியதற்கு பதிலாக எந்த நல்ல யோசனையும் கூற இயலவில்லை. கார்த்திக்கோடு தன் பெண்ணை வாழ அனுப்பவும் அவர் தயாராக இல்லை… அதனால் மாயாவின் முடிவிற்கு அவரும் சம்மதித்தார். “எனக்கு சம்மதம் தான்மா…. ஆனா நல்லா யோசிச்சு பார்த்தியா?? உனக்குன்னு இப்போ இல்லைனாலும் கொஞ்ச வருஷம் கழிச்சு…”

அபிராமியை முடிக்கக் கூட இல்லை. “அம்ம்மாமாமா… ஒருத்தன் தாலி கட்டி, என்னை…. போதும்மா!!! எனக்கு என்னோட கேமரா மட்டும் போதும்மா… இந்த மாதிரி நிலைமையிலும் என்னால அதை விட முடியலை…”

“சரிடா இனிமே அம்மா உனக்கு பிடிச்சதுக்கு குறுக்க நிக்க மாட்டேன். நீ படி! உனக்கு வேண்டியதை படி….”

அபிராமியை கட்டிக் கொண்டு தன் சிறு மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டாள் மாயா…. வெளியே இருந்து ரித்தியாவை உள்ளே கூப்பிட்டு தாங்கள் எடுத்த முடிவை கூறவும், ரித்தியாவிற்கு மாயாவின் முடிவே சிறந்ததாக தோன்றியது. மூவரும் வெளியே வரவும் கார்த்திக், விநாயகம், சுப்பிரமணியம் இவர்களின் முகத்தையே பார்த்தனர். அபிராமி தங்களின் முடிவை தெளிவான குரலில் கூறினார். “எல்லாருக்கும் சொல்லி ஒரு முறை கல்யாணம் பண்ணி வைச்சிடலாம் ரெண்டு பேருக்கும்.

அதுக்கப்புறம் மாயா சென்னைக்கு படிக்க போறா. அவளை உங்க பையன் எதுவும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. அவ உங்க பையன் கூடயும் இருக்க மாட்டா… ஊருக்காக தான் இந்த கல்யாணம். என்ன சொல்றீங்க??”

சுப்பிரமணியம் இதை கேட்டு டென்ஷன் ஆகிவிட்டார். “இவ்வளோ கேவலமா நடந்ததுக்கப்புறமும் இவனுக்கே கல்யாணம் பண்ணி வைக்கறீங்களா?? ஏன்மா கொஞ்ச நாள் போகட்டும். வேற நல்ல பையனா பார்த்து….”

“உங்க பையன் செஞ்சிருக்க காரியத்துக்கு வேற என்ன செய்ய முடியும்னு நினைக்கறீங்க?? எல்லாத்தையும் மூடி மறைச்சிட்டு வேற கல்யாணம் பண்ணிக்கற அளவுக்கு என்னோட பொண்ணு மோசம் இல்லைங்க… இது தான் எங்களோட முடிவு. நானும் என்னோட பொண்ணும் மாற மாட்டோம்.”

அதன் மேற்கொண்டு சுப்பிரமணியம் வேறு எதுவும் வாதம் செய்யாமல் சம்மதித்து வீட்டிற்கு கிளம்புவதாக கூறினார். அபிராமி அவர் வாசல் செல்லும் முன், “இந்த விஷயம் நம்ம ஆறு பேருக்கு தவிர வேற யாருக்கும் தெரிய வேணாம்.” என்று சொல்லவும், சுப்பிரமணியம் தலையசைத்து சென்றார்.

அவர் கார்த்திக்கை திரும்பியும் பாராமல் செல்லவும், கார்த்திக் ஒரு நிமிடம் திகைத்து எழுந்து நின்று, பின் எல்லோரையும் திரும்பிப் பார்த்து கால்கள் விந்தி விந்தி வாசல் நோக்கி நடந்தான். அவன் குழந்தையாக இருந்த போது மாறில் காலால் அவன் தந்தையை உதைக்க, அதுவே இப்போது வெறுப்பில் வட்டியும் முதலுமாக வந்து சேர்ந்தது!! வெளியே செல்ல முயன்றவனை தடுத்து நிறுத்தியது விநாயகத்தின் குரல். “ஒரு பிரெண்டு ஒரேடியா போய் சேர்ந்துட்டான், உலகத்தவிட்டே. இன்னொரு பிரெண்டு இருந்தும் இல்லைன்னு நினைச்சுக்கறேன். நான் உன்கிட்ட பேசுறது இது தான் கடைசி தடவை. போ…”

ஒரே வார்த்தையில் தன்னை தூக்கி எறிந்த நண்பனை கண்கள் கசிய பார்த்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறினான் கார்த்திக். ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தவனை வரவேற்க அவன் தந்தை ஹாலில் காத்திருந்தார். அவரிடம் தவறிழைத்த பத்து வயது சிறியவன் போல் கார்த்திக் நிற்க, சுப்பிரமணியத்துக்கு கோபம் பற்றிக் கொண்டு வந்தது.

“இங்க பாரு. கல்யாணம் முடியற வரைக்கும் தான் உனக்கு இந்த வீட்டுல இடம். அது கூட சொந்தக்காரங்க நிறைய கேள்வி கேப்பாங்கனு தான். கல்யாணம் முடிஞ்சவுடனே நீ இந்த வீட்டை விட்டு போயிடனும். இனிமே மாயா மேல உன்னோட நிழல் கூட படக் கூடாது!! கல்யாணத்துக்கு அப்புறம் அவகிட்ட ஏதாவது பிரச்சனை பண்ணன்னு தெரிஞ்சுது, உன்னை என் கையாலையே வெட்டிப் போட்டுடுவேன்…. முக்கியமான விஷயம், எக்காரணத்தை கொண்டும் இங்க இருக்குற வரைக்கும் என்னோட மூஞ்சில முழிக்காத!! அப்பான்னு உன் வாயில இருந்து வந்துச்சு…. நான் இந்த வீட்டுல இருக்க மாட்டேன்!”

மேலே கோபத்தை அடக்கும் வழி தெரியாமல் சுப்பிரமணியம் அவர் அறை நோக்கி நடக்க, அவர் கூறிய வாக்கியங்களின் பொருள் புரிப்பட கார்த்திக்கிற்கு சில நொடிகள் பிடித்தது. அது புரிந்த நொடி கார்த்திக் நேராக சென்று அவன் தந்தையின் கால்களை பிடித்தான்!! “அப்பா ப்ளீஸ்பா… எனக்கு இருக்கிறது நீ மட்டும் தான்பா… இனிமே இந்த மாதிரி சத்தியமா பண்ண மாட்டேன்பா! என்னை எவ்வளவு வேணும்னாலும் அடிச்சுக்கோ…. ஆனா இனிமே ஒண்ணுமே இல்லைன்னு மட்டும் சொல்லாதபா. உன்னை கெஞ்சிக் கேக்கறேன்பா….”

“ச்சீச்சீ அங்க ஒரு பொண்ணோட சாபத்தை வாங்கிட்டு வந்து இங்க நல்லவன் மாதிரி மன்னிப்பு கேக்கறியா?? ஒரு சில தப்புக்கு மன்னிப்பே கிடையாதுடா… தெரிஞ்சிக்கோ!!”

தன் கால்களை அவனிடம் இருந்து விடுவித்து கொண்டு அறையினுள் சென்று மறைந்தார் பெரியவர். மகனோ வாழ்க்கையில் முதல் முறையாக அழுகை கூட வராத அளவிற்கு திகைப்பில் மிதந்தான்…. பாலைவனத்தில் தன்னந்தனியாக மாட்டிக் கொண்ட உணர்வு அவன் மனதில் குடிபுகுந்தது!! அந்த பாலைவனத்தில் தான் அடுத்து வரும் நாட்களை கடக்கப் போவதை அறிந்து அவன் நிலைமை இன்னும் மோசமாகியது!
 
Top