Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 12

Advertisement

Admin

Admin
Member

அத்தியாயம் – 12

முடிந்தது எல்லாம் முடிந்தது!! கதிரை தூரத்தில் பார்த்திருந்த விநாயகம், ஒரு நிமிடம் பொறி கலங்கி நின்றான். அவனுக்கு நடந்தவை மனதில் ஏறவே சில நிமிடங்கள் பிடித்தது. பயமும் பதற்றமும் சூழ ஓடினான் கதிரிடம். கதிரின் மேல் ஏறிய இறங்கிய பஸ் அங்கேயே நின்றிருந்தது….

அதிலிருந்து பயணிகள் அனைவரும் ஓரமாக நின்று கதிரின் நசுங்கி இருந்த உடலை பார்த்தனர். விநாயகம் ஓடி வந்து கதிரை பார்க்க, ரத்த வெள்ளத்தில் மிதந்திருந்த தன் நண்பனை பார்த்ததும் கண்களில் இருந்து அருவி மழை பொழிந்தது! அவனை அடையாளம் காண்பதே கஷ்டம் என்பது போல, இருந்த கதிரின் உடலை பார்த்ததும் உள்ளம் உளைக்கலமாக கொதித்தது. “டேய் கதிரு கதிரு….” என அவன் அரற்றியதை பார்த்து கல் மனதும் கரைந்தது.

பத்து நிமிடங்கள் முன் தன்னிடம் பேசியவன் இப்போது உயிருடன் இல்லை என்பதை அவன் மனம் ஏற்க மறுத்தது! “ஐய்யோ கதிரு…. வேணாம் வேணாம்னு சொன்னனேடா…. இப்படி போயிட்டியேடா…. கதிரு, கதிரு”

யாரோ ஒருவர் ஆம்புலன்ஸுக்கு அழைத்து விஷயத்தை கூற, உயிரற்ற உடலை தூக்கிக் கொண்டு சென்றனர். பார்த்திருந்த கூட்டம் மொத்தமும் விநாயகம் ஓடி வந்து கதிரிடம் கதறிய போது மட்டும் அவனை அடக்கி பிடித்தனர். பின் அவரவர் கும்பலாக நின்று பேசத் துவங்கினர். பிரகாஷும் அவன் நண்பர்களும் கதிரை இப்படி பார்த்த உடனே ஜுட் விட்டனர். போலீஸ் வந்தால் தாங்கள் போன ரேஸ் கதை எல்லாம் வெளியே வரும், அதற்கு முன் தப்பிக்க வேண்டும் என்பதே அவர்கள் எண்ணமாக இருந்தது!

விநாயகத்துக்கு யாரிடம் கூறுவது என்றே தெரியவில்லை. நெஞ்செல்லாம் வலியுடன், கைகள் உதற அவன் அழைத்தது கார்த்திக்கை தான்! ஆனால், கார்த்திக் தூங்கிக் கொண்டிருந்ததால், போன் எடுத்ததோ அவன் தந்தையே. “அங்கிள்…..” ஒன்றும் பேசாமல் ஓவென விநாயகம் அழத் துவங்கவும், சுப்பிரமணியம் நிலைக் கொள்ளாமல் தவித்தார்.

“என்னடா சொல்லிட்டு அழுடா…. யாருக்கு என்ன ஆச்சு?? சொல்லுப்பா.”

எதுவோ பெரிய துர்சம்பவம் நடந்திருப்பது மட்டும் அவருக்கு புரிந்தது. “அங்கிள் கதிரு கதிரு…. நம்மள விட்டு போயிட்டான்….” கேட்ட சுப்பிரமணியத்துக்கு ஷாக் அடித்தது போல் இருந்தது. கதிரின் புன்னகை பூசிய முகம் மனக் கண்ணில் தோன்ற, “என்னடா என்ன ஆச்சு ஒழுங்கா சொல்லு. இப்போ எங்க இருக்க நீ??” என்று நடுங்கும் குரலில் விசாரித்தார்.

விநாயகம் அழுகையுடன் அனைத்தையும் விவரிக்க, ஒரு பக்கம் கோபமும் மறுபக்கம் இதயம் முழுதும் உணர்ந்த வலியால் கண்களில் நீர் பொழிந்த வண்ணம், தான் மருத்துவமனை வருவதாக கூறி வைத்தார். கோபம் தன் மகன் மேலும், கதிரின் மேலும்! அவருக்குமே இவர்கள் ரேஸ் செல்வது அவ்வளவாக பிடிக்காது. ஆனால், கார்த்திக் எதையாவது பேசி ஒவ்வொரு முறையும் இவரை சரிகட்டுவான்.

இந்த கோபத்தில் மனம் குமுறிய அதே நேரம், சிறு வயதில் இருந்து தன்னையும் ஒரு தந்தையாக கருதி சுற்றிவந்த பையன் இல்லை எனும் போது, வாழ்க்கை இவ்வளவு தானா என்று வெறுத்தது அந்த பெரியவருக்கு. யோசனை ஓடிய அதே நேரம் கார்த்திக் அவரின் அருகில் வந்து நின்றான். “யாருப்பா போன்ல?” என்று கேட்டபடி தந்தையை கண்டவனுக்கு அதிர்ச்சி பரவியது….

“ஏன்பா அழறீங்க?? என்னா ஆச்சு???”

“ஒண்ணுமில்ல என் கூடவா….”

அவனின் எந்த கேள்விக்கும் செவி சாய்க்காமல், காரை டிரைவரிடம் எடுக்க சொல்லிவிட்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்தார் சுப்பிரமணியம். கார்த்திக்கிற்கு எதுவோ நடக்கக் கூடாதது நடந்திருப்பது மட்டும் விளங்கியது. பதற்றமான முகத்துடன் தன் செல்போனை கேட்டான் அவன் தந்தையிடம். அவர் எதுவும் பேசாமல், ஓய்ந்து போய் அமர்ந்திருப்பதை பார்த்து மீண்டும் அமைதியானான். டிரைவரின் முன் மேலும் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

கார் நின்ற இடத்தை பார்த்து நெஞ்சு கூடே காலியானது கார்த்திக்கிற்கு!!! எதோ நரகத்தில் இருப்பது போன்ற உணர்வுடன் அவன் அடி மேல் அடி எடுத்துவைக்க, ஓடி வந்து அவனை கட்டிக் கொண்டு கதறினான் விநாயகம். விநாயகத்தால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை…. “என்னடா என்ன ஆச்சு?? கதிர் எங்க?” ஆவேசமாக விநாயகத்தை உலுக்கியபடி கார்த்திக் வினவ, விநாயகம் உள்பக்கம் கை காட்டினான்.

அவனையும் இழுத்துக் கொண்டு சென்றவனுக்கு தனக்கு என்ன காத்திருக்கின்றது என்பது ஓரளவுக்கு விளங்கியது. திரும்பி தன் தந்தையை பார்த்தபடி பயமும் கண்ணீரும் அப்பிய கண்களுடன் மேலே நடந்தான். வெள்ளை துணி ஒன்று போர்த்தி இருந்த கதிரின் உடலை பார்த்ததும் கார்த்திக்கிற்கு மயக்கம் வருவது போல் இருந்தது. விநாயகம் துணியை முகம் வரை இழுத்துவிட, துக்கம் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் புகுந்தது கார்த்திக்கிற்கு!!

தன் நண்பனா இவன்?? தன்னை “மச்சி” என அன்பொழுக கூப்பிடுபவனா இவன்?? இல்லை கண்டிப்பாக இல்லை…. அவன் உடல் நிலை சரியில்லாத போது கூட இப்படி அவன் முகம் ஆனதில்லையே! “டேய் இவன் நம்ம கதிர் இல்லடா… இவன் இல்ல…. இது வேற யாரோ!” கார்த்திக் உளறுவதை பார்த்து விநாயகம் மேலும் அழ ஆரம்பித்தான்.

மீண்டும் மீண்டும் கார்த்திக் அதையே உளற விநாயகம் அவனை உலுக்கியபடி நடந்ததை கூறினான்! சுப்பிரமணியம் இதையெல்லாம் தாங்கும் சக்தியற்று அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்து அழுதபடி இருந்தார். பஸ்ஸில் டையர் கதிரின் நெஞ்சின் மேல் ஏறியிருக்க, கழுத்தை தாண்டி துணியை அகற்ற முயன்ற நண்பனை, “வேணாம்டா வேணாம்டா” என தடுத்து நிறுத்தினான் விநாயகம்.

பின் கூட இருந்தவர்களும் கார்த்திக்கை அடக்கி அவனின் தந்தையின் அருகில் அமர வைத்தனர்! அவ்வளவு தான். “அப்பாபபாபாபா கதிரு….” என தன் தோளில் சாய்ந்து கதறும் மகனை தேற்றும் வழி தெரியாமல், அவரும் சேர்ந்து கதறினார். அப்போது தான் கதிரின் பெற்றோர்கள், உறவினர்கள் விஷயம் அறிந்து அலறியபடி வந்தனர்.

அவன் தாய் அடிக்கடி மயக்கம் போட்டு விழ, கார்த்திக்கால் இதையெல்லாம் காணயிலவில்லை…. இவர்களின் கதறலை பார்த்தே போஸ்மார்ட்டாம் சீக்கிரமாக முடித்து, வீடு அனுப்பினர் கதிரின் உடலை. அதற்கே நள்ளிரவு தாண்டியது.

விநாயகம் தான் கொஞ்சம் கதிரின் தந்தையிடம் கேட்டுக் கேட்டு வேலைகள் செய்தான். அனைவருக்கும் விஷயத்தை தெரிவுக்கும் கஷ்டமான வேலையெல்லாம் கதிரின் சொந்தங்களே பார்த்துக் கொள்ள விநாயகத்துக்கு அக்கடினமான வேலை தப்பியது. கார்த்திக்கிற்கு இவ்வுலகமே நின்றது மாலையிலேயே… ஒன்று மட்டும் நன்றாக விளங்கியது அவனுக்கு.

தன்னால் தான் தன் நண்பனுக்கு இந்த நிலைமை! அவனை எப்போதும் ஜெயிக்க வைத்து பார்த்து சந்தோஷப்படுத்தியது, அவனை பைக், ரேஸ் என்று பையித்தியமாக மாற்றியது எவ்வளவு தவறென்று அந்த கணப்பொழுதில் அவனுக்கு கசப்புடன் புரிந்தது. தான் அன்புடன் வாங்கிக் கொடுத்த பைக்கால், தன் நண்பனுக்கு இந்த முடிவு வரும்மென்று அவன் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.

தன் குற்றயுணர்ச்சியில் மிதந்தபடி கதிர் வீட்டு வாசலில் அழுதுக் கொண்டே இருந்தான். இங்கே நிலைமை இப்படி இருக்க, மருத்துவமனையிலிருந்து கிளம்பும் போதே கதிரின் பெரியப்பா அபிராமிக்கு அழைத்துச் சொல்லியிருந்தார். அப்போது மணி பதினொன்று!!! தூக்கக் கலக்கத்தில் பேசிய அபிராமிக்கு கலக்கம் எல்லாம் போய் நெஞ்சு அடைத்தது துக்கத்தில்!! மேலும் எதையும் யோசிக்க முடியாமல், அவரின் மூளை வேலை நிறுத்தம் செய்ததில் அவர் சடாரென மயங்கி விழுந்தார்.

அவரின் மகள்கள் இருவரும் சத்தம் கேட்டு பதறியபடி அறையிலிருந்து வெளியே வந்து தாயை தண்ணீர் தெளித்து எழுப்பினர். எழுந்த அடுத்த நொடி, மாயாவை கட்டிக் கொண்டார் அபிராமி. “ஐய்யோ போச்சே…. உன்னோட வாழ்க்கை இப்படியா ஆகனும்?? கடவுளே!!!” என அழுதபடி தாய் பேசியதை கேட்ட மாயாவுக்கு அவள் அறியாமல் அழுகை பொத்துக் கொண்டு வந்தது. தன் அன்னை அழுவதை பார்த்தே அவளும், ரித்தியாவும் அழுதனர்! “என்னமா என்ன ஆச்சு?? ப்ளீஸ் சொல்லுங்கமா…”

இருவரும் கேட்டவுடன் சுருக்கமாக விஷயத்தை பகிர்ந்தார் அவர், கண்ணீரின் ஊடே! கேட்டிருந்த இரு சகோதரிகளுமே அப்படியே அமர்ந்துவிட்டனர். மாயாவுக்கு கதிரை அவ்வளவாக பிடிக்காது என்றாலும், சில மாதங்களாக நண்பனை போல் பேசிப் பழகிய ஒருவன் இப்போது இல்லை என்றதே துக்கம் தொண்டையை அடைக்க போதுமானதாக இருந்தது.

ரித்தியாவுக்கு மிக்க அதிர்ச்சி!! ஒரு பக்கம் கதிருக்கும் அவன் குடும்பத்தாருக்கும் சேர்ந்து வருத்தப்பட்ட மனது, இன்னொரு பக்கம் தன் அக்காவை வாழ்க்கையை எண்ணி பதறியது. அடுத்த என்ன நடக்கப் போகிறதோ என சிந்தனை செய்தவாரு, அழுதபடியே இருந்த அன்னையையும் சகோதரியையும் கதிரின் வீட்டுக்கு கிளம்பச் சொன்னாள். உடை மாற்றும் போதே தன் அத்தையின் கைப்பேசிக்கு அழைத்து விஷயத்தை கூறினாள். அவர் தான் உடனே கார் எடுத்து வருவதாக சொன்னார்.

கோதை அவரின் வீட்டுக்கு வந்தவுடன், அவரையும் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தார் அபிராமி! கோதையாலும் அழுகையை அடக்க முடியவில்லை. ஒரு பக்கம் தன் தம்பி மகளின் வாழ்க்கை பாதிப்புள்ளாகியது என்றால், இன்னொரு பக்கம் தன் தோழியின் புத்திர சோகம்! இதையெல்லாம் எப்படி தீர்கப் போகிறோம் என வேதனைப்பட்டார். ஒருவழியாக தன் குடும்பத்தினரை ரித்தியா கதிரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள்.

அத்தையுடன் மாமாவும் வந்திருந்தாலும், அவர் பெரும்பாலும் பேசவே மாட்டார். கதிரின் வீட்டிலும் கூட அவர் அமைதியாக உட்கார்ந்துவிட்டார். கதிர் வீடு வந்ததும் மாயாவால் தாங்க முடியாமல் போயிற்று. காரில் வரும் போது தான் தன் எதிர்காலத்தை பற்றி யோசனை ஓடியது. தன் கனவை அடைய போவதாக தான் எண்ணியிருக்க, இப்போது கதிருடன் தன் கனவும் செத்துவிட்டதாக நினைத்து அழுதபடி இருந்தாள். ரித்தியா எவ்வளவோ சமாதானப்படுத்தியும் கண்ணீர் நின்றபாடில்லை…

தன்னை பற்றி யோசித்தவளுக்கு, கதிரின் அம்மா மீனாட்சியை பார்த்ததும் தான் அவர் எவ்வளவு இழந்திருக்கிறார் என புரிந்தது. ஒரே மகன் சடலமாக இருப்பதை பார்த்து அவரின் வாழ்க்கையே முடிந்துவிட்டது போல அழுதுக் கொண்டிருந்தார். அவர் கதறலில் அந்த வீடே அதிர்ந்தது!!! மாயா கார்த்திக்கையும் விநாயகத்தையும் கண்டவுடன், மேலும் உடைந்தாள். விநாயகம் அவளை கண்டதும் ஒரு கணம் திகைத்தான். அதுவரை கதிரை பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தவன், இப்போது தான் மாயாவை பற்றியும் சிந்தித்தான். “மாயு போயிட்டான்மா…. நம்மள எல்லாம் விட்டுட்டு போயிட்டான்மா….”

“அண்ணா என்ன ஆச்சு?? நீங்க இருந்தீங்களா கூட?? ஒழுங்கா சொல்லுங்க.” தன் அன்னை சுருக்கமாக கூறியதால், விநாயகத்திடம் தீர விசாரித்தாள் மாயா. அவன் எல்லாவற்றையும் விளக்கவும், ஒன்றும் பேசாமல் கார்த்திக்கை கண்ணீருடன் குற்றம் சாட்டும் பார்வை பார்த்தாள். அந்த பார்வையை எதிர்கொள்ளும் சக்தியில்லாமல் தலைகுனிந்தான் கார்த்திக்.

மிகவும் மன ஊளைச்சலுடன் மீண்டும் தன் தாயிடம் சென்று அமர்ந்தாள் மாயா. காலை வரை எல்லாம் ஒழுங்காக இருந்தது. விடிந்ததும் நிறைய பேர் வந்ததும் தான் அந்த பூகம்பம் வெடித்தது. “இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் வைச்சுட்டு இப்படி ஆகிடுச்சே?? அப்பவே சொன்னனே மீனா, வேற நல்ல பொண்ணா பார்க்கலாம்னு. கேட்டியா?? இப்போ உயிரையே காவு வாங்கிருச்சே??”

கதிரின் ஒரு சொந்தக்கார பெண்மணி நாக்கில் நரம்பில்லாமல் பேச, அபிராமி கோபத்துடன் அவரை கேள்வி கேட்டார். “என்னமா சும்மா வாய்க்கு வந்தபடி பேசுறீங்க? அந்த பையன் ரேஸ் போயிட்டு ஆக்சிடன்ட் ஆச்சுனா என்னோட பொண்ணு என்ன பண்ணுவா??”

“ஆமா உங்க பொண்ணோட ராசி பத்தி தெரியாதுனு நினைச்சீங்களா? அவ பெரிய மனுஷி ஆன அன்னிக்கே அவ அப்பா செத்துட்டாரு!! இப்போ கல்யாணத்துக்கு ரெண்டு மாசம் முன்னாடியே மாப்பிள்ளை போய் சேர்ந்துட்டான். இதுக்கு மேல என்ன வேணும்??”

அவர் பேசப் பேச மாயாவின் மனது இறுகிய கல்லாகிப் போனது! அந்த பெண்மணி கூறியது போன்று, அவள் பூப்படைந்த நாளில் தான் அவர் தந்தை இவ்வுலகை விட்டு போனார். அவள் பெரிய மனுஷியான சந்தோஷமான விஷயத்தை தன் அக்காவிடம் நேரில் சொல்ல போனவர், வீடு திரும்பியது உயிரற்று தான்! அதுவும் விபத்து தான்…. ஆட்டோகாரன் ஒருவன் தந்தையின் பைக் வருவதை அறியாமல், வேகமாக குறுஞ்சந்தில் திரும்ப, மாயாவின் அப்பா விநாயகம் தூக்கி எறியபட்டார்.

இந்த சம்பவம் எப்போதுமே அவள் அத்தை கோதைக்கு நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக குத்தும். அவரும் மாயாவுக்கு ராசி சரியாக இல்லையோ என அவ்வப்போது அபிராமியிடமே சொல்வார். ஆனால், அபிராமி சுத்தமாக மறுத்துவிடுவார். இப்போது மீண்டும் ராசி பற்றிய பேச்சு வர, “யார் உங்ககிட்ட இதை பத்தி சொன்னது?” என அபிராமி வினவினார்.

அதற்குள் துக்க வீட்டுக்கு வந்த அனைவரும் இவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். கோதையை அப்பெண்மணி கை காட்ட, கோதையோ “நான் மீனாட்சிகிட்ட எல்லா விஷயமும் சொல்லும் போது, இதையும் சொன்னேன் அபி. சத்தியமா நான் மாயாவோட ராசி பத்தியெல்லாம் சொல்லலை.” என்று மன்றாடும் குரலில் கூறினார்.

“எப்படி தெரிய வந்தா என்ன?? உங்க பொண்ணால தான் கதிருக்கு இப்படி ஆச்சு! அதான் உண்மை. உங்க பொண்ணுக்கு தயவு செஞ்சு கல்யாணம் பண்ணாதீங்க! உங்களுக்கு புண்ணியமா போகும்…”

கதிரின் பெரியப்பாவும் அந்த பெண்மணியுடன் சேர்ந்துக் கொண்டு குறை கூற, அபிராமி அழும் குரலில் கத்தும் முன், அவரின் அண்ணன் ரமேஷ் சண்டைக்கு சென்றார். மாயாவின் சொந்தங்களும் துக்கத்துக்கு அங்கே வந்திருந்தனர்.

“உங்க பையன் மேல இருக்குற தப்பை எங்களோட பொண்ணோட ராசினு சொல்லி தேவையில்லாம பழி போட்டு தப்பிக்க பார்க்காதீங்க. உங்களுக்கு மட்டும் தான் பேச தெரியுமா?? திமிரு பிடிச்சு ரேஸ் எல்லாம் போய் உயிரை விட்டது கதிர் பண்ண தப்பு. நியாயமா பார்த்தா நாங்க தான் உங்களை கேள்வி கேக்கனும்….”

“ஹா! ஆமா கேப்பீங்க கேப்பீங்க!!! இதுக்கு முன்னாடி எங்க பையன் ரேஸ் போனதில்லையா?? காலேஜ் படிக்கறதுல இருந்து அவன் போறான்… இப்போ மட்டும் இப்படி ஆச்சுனா என்ன காரணம்?? எல்லாம் உங்க பொண்ணோட போறாத பொல்லாத ராசி தான்…” ரேஸ் போவது அங்கே பெருமையாக பறைசாற்றப்பட்டது!

“வேணாம் திரும்பத் திரும்ப மாயாவ பத்தி பேசாதீங்க… எனக்கு கெட்ட கோவம் வரும்!” தாய்மாமனாய் ரமேஷ் பொங்கி எழ, அவருக்கும் கதிரின் பெரியப்பாவுக்கும் வாய்கலப்பு ஆரம்பமாகி நேரம் செல்ல செல்ல, கைகலப்பாகியது!!! விநாயகமும் கார்த்திக்கும் தான் ரமேஷையும் மற்றவரையும் பிரித்துவிட்டனர்.

“மாயாவ எதுவும் சொல்லாதீங்க நான் தான் கதிர் செத்ததுக்கு காரணம். அவனை ரேஸ் எல்லாம் கூட்டிட்டு போனது நான் தான்…. தேவையில்லாம அவளை இதுல இழுக்காதீங்க!! நான் தான் எல்லாத்துக்கும் காரணம்…. எல்லாத்துக்கும் காரணம்!!” கார்த்திக் அழுதபடி கூறியதை கேட்டு கதிரின் சொந்தங்கள் மனம் மாறவில்லை! மாலை வரை அங்கே இருக்க சுத்தமாக பிடிக்கவில்லை அபிராமிக்கும் அவரின் பெண்களுக்கும்.

ஆனால், ஈமைக்காரியங்கள் முடியும் முன் செல்வது நன்றாக இராது என எண்ணி பொறுமையாக இருந்தனர். அவர் கூடவே கோதையும், ரமேஷும் அவரின் மனைவியும் இருந்தனர். மாலை எல்லாம் முடிந்து வீடு வந்த சேர்ந்ததும், அபிராமி மிகவும் கவலைக் கொண்டார், மாயாவின் எதிர்காலத்தை எண்ணி. கோதை தன் தவறை எண்ணி மன்னிப்பு கேட்டு, வேறு யாரிடமும் வாய்விட மாட்டேன் என வாக்குறுதி தந்தார்.

மாயா பேசவே இல்லை… ரித்தியாவிடம் கூட! ரித்தியாவே எவ்வளவோ முயன்று பார்த்தாள். “எதாவது பேசு மாயு…. இப்படியே வாய் பேசாம இருக்கறது நல்லதில்லைடி! புரிஞ்சுக்கோ. என் கிட்டயாவது பேசுடி…”

“என்ன பேச சொல்ற?? அத்தை சின்ன வயசுலந்து அப்பா செத்தது பத்தி பேசறப்போ எவ்வளோ கஷ்டமா இருக்கும்னு உனக்கு சொல்லிருக்கேன்ல. இப்போ எனக்கு மனமே மொத்தமா விட்டு போச்சு… அவன் பைக் ரேஸ் போனதுக்கு கூட என்னை தான்டி சொல்றாங்க! அவன் வீம்பு பிடிச்சு போனதுக்கு நான் என்ன பண்ணுவேன்?? இதுக்கு எல்லாம் காரணம் அந்த கார்த்திக்! எத்தனை வாட்டி சொல்லிருப்பேன். அவனை மட்டும் மன்னிக்கவே கூடாது….”

மாயாவின் மனது இவ்வளவு புண்பட்டு இருப்பதை அறியாமல், சில மாதங்கள் கழித்து சுப்பிரமணியம் அவளின் திருமணத்தை தன் மகனுடன் நடத்த எண்ணி மாயாவின் வீட்டு படி ஏறினார்!!! அப்போது தான் கார்த்திக்கின் காதல், மாயாவுக்கு தெரியவந்தது…
 
Top