Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 10

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் – 10

கார்த்திக்கின் பைக்கில் பின் அமர்ந்து இருந்த கதிரின் நெஞ்சம் வேகவேகமாக துடிப்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. மாயா திகைத்து நின்ற போது அப்படியே ஓடி வந்தது தப்போ?? கதிர் யோசித்திருந்த வேளையில் கார்த்திக் தன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு, திரும்பி கதிரை பார்த்து முறைத்தான். “இறங்குடா கீழ.”

கதிரும் இறங்கி நிற்கவும், கார்த்திக் அவனை சரமாரியாக கேள்வி கேட்டான். “எதுக்குடா இப்போ என்னை கூட்டிட்டு வந்த?? நான் பேசாம வீட்டுக்கே போயிருப்பேன்ல?? நீ அவகிட்ட பேசுறதுக்கு நான் ஏன் இருக்கனும் அங்க? தேவையில்லாம என்னை இழுத்துட்டு வந்துருக்க….”

“கோச்சிக்காதடா! எனக்கு அவகிட்ட தனியா பேச கொஞ்சம் பயமா இருந்துச்சு. விநா வேற இவளுக்கு கூட பிறந்த அண்ணனாவே மாறிட்டான். லவ் சொல்றதுக்கு அண்ணன்காரன யாராவது கூட்டிட்டு போவாங்களா?? அதான், உன்னை கூட்டிட்டு வந்தேன்.”

“லவ் பிரப்போஸ் பண்ணியா?? அவ என்ன சொன்னா???!”

“அவ எதுவும் சொல்லலை… ஷாக்ல அப்படியே நின்னுட்டா. வீட்டுலயும் நேத்து பேசிருப்பாங்க போல. ஆனா, நான் போட்டோகிராபி கிளாஸ்ல சேர்த்து விடறேன்னு சொன்னதும் கண்ணை விரிச்சு பார்த்தா தெரியுமா?? எனக்கு அப்படியே பறக்கற மாதிரி இருந்துச்சு…. அவ அப்படி நிக்கும் போது நான் கிளம்பி வந்துட்டேன்.”

கார்த்திக்கிற்கு உள்ளுக்குள் எதுவோ உடைவது போல இருந்தது. நெஞ்சம் கணக்க, கதிரை அவனுடைய வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டை அடைந்தவனுக்கு வாழ்க்கையே முதன்முதலாக வெறுத்துப் போனது.

ஒன்றும் பேசாமல் பூஜை அறையில் ஒய்ந்து போய் விழுந்தான். கொஞ்சம் தியானம், பிராத்தனை செய்த பிறகு மனம் அமைதியாக ஆகியது.

அந்த வாரம் முழுவதும் தன் மனம் நிலைகொள்ளாமல் தவிப்பதை தாங்கும் சக்தியற்று கார்த்திக் பூஜை அறையில் தான் தஞ்சம் புகுந்தான். கடவுளிடம் ஒன்றுமே கேட்பதில்லை தனக்காக! எப்போதும் ஒரே தாரக மந்திரம்… “எல்லாரும் நல்லா இருக்கனும்!” அவ்வளவே!!!

இவன் இப்படி மந்திரித்து விட்டதை போல் இருப்பதை பார்த்து பயந்தவர்கள் இருவர். ஒன்று அவன் தந்தை. இன்னொருவன் அவன் நண்பன் விநாயகம்…. அவன் தந்தை இப்போதெல்லாம் அவனை குத்திக்காட்டி மறைமுகமாக திட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கார்த்திக் கதிரை கண்டு ஒரு வாரம் ஆகியிருந்தது. காலையில் சாப்பிடும் போது டிவியில் நாயகன் படம் ஓடிக் கொண்டிருந்தது…

அதை காண்பித்து, “உனக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும் இல்லடா??” என்று சுப்பிரமணியம் வினவவும், ஒன்றும் புரியாமல் முழித்தான் கார்த்திக். “இல்ல நீ ‘நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவும் தப்பில்லை’னு பாளிசி வைச்சிருப்பியே.. அதான் கேட்டேன். ஆனா பாரு அங்கயாவது நாலு பேர். இங்க ஒரே ஒருத்தன் தான்… உனக்கு தனியா அவார்ட்டே தரனும்டா.” என்று நக்கல் தோணியில் தன் தந்தை கூறுவதை வலி மிகுந்த கண்களுடன் பார்த்தான் கார்த்திக்.

கைகளை உதறிவிட்டு அவன் சாப்பாட்டின் பாதியில் எழுந்துக் கொள்ளவும் எழுந்து அவன் கைகளை பிடித்தார் சுப்பிரமணியம். “என்னடா கோவம் வருதா?? வலிக்குதா?? இதை விட நூறு மடங்கு எனக்கு வலிக்குது… உன்னோட லைப்பை நினைச்சு.”

“அப்பாபாபா” என அவரை கட்டிக் கொண்டான் கார்த்திக். அவர் முகத்தில் தென்பட்ட வலியை தனதாக்கிக் கொண்டான் மைந்தன். “எனக்கு மட்டும் ரொம்ப சந்தோஷமாவா இருக்கு?? உடனே அப்போ ஏன் இப்படி பண்றனு கேக்காத… அவனுக்காக சின்ன வயசுலந்து என்னென்வோ செஞ்சு ஜெயிக்க வைச்சுருக்கேன். இனிமேலும் அப்படித் தான்!

எனக்கு பைக்னா எவ்வளவு பிடிக்கும்?? உனக்கு தெரியும்ல! ஆனா, அந்த பைக் ரேஸ்ல கூட அவனை தான் ஜெயிக்க வைப்பேன்… இவ்வளவு பண்ணிட்டு இப்போ திடீர்னு அவனை போய் தோக்கடிக்க சொல்றியா?? அதுவும் வாழ்க்கையில முக்கியமான விஷயம் கல்யாணம், அதுல! என்னால முடியாதுபா… அவனை தோக்கடிச்சு நான் மாயாவோட சேர்ந்தாலும் என்னால நிம்மதியா வாழ முடியாது! கண்டிப்பா முடியாது….

இது இப்படித் தான்பா…. என்னோட தலையெழுத்து, விடு! கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாகிடும்.” கார்த்திக்கின் விளக்கத்தை கேட்டு சுப்பிரமணியம் அவன் தலையை கோதினார். ஒரு பெருமூச்சுடன் அவனை வேறு வேலைகளில் கவனத்தை திருப்பச் சொன்னார். “ஹ்ம்ம்ம், ஆபீஸ்லயே நிறைய கத்துக்க இருக்குப்பா…. வேலை நிறைய இருக்கு. இனிமேல் நிறைய நேரம் அங்க தான் இருப்பேன்.”

“சரிடா உனக்கு எது சரினு படுதோ அதை செய்…” இதை சொல்லித் தான் அவர் கார்த்திக்கை வளர்த்தது… இதை எண்ணி ஒரு நாள் தான் மிகவும் வருத்தப்படப் போவதை அறியாமல்.

‘சுப்பு அப்பாவை கூட சமாளித்து விடலாம் போல. இந்த விநாயகத்தை வைச்சுட்டு!!! கடவுளே…’ கார்த்திக் இப்படி நொந்து போகும் அளவு, விநாயகம் அவனை வாட்டி வதக்கினான். அதில் சிலது கீழே உள்ளவாரு.

“மச்சி என்னடா எப்போவும் பொங்கல் திண்ண மாதிரி டல்லாவே இருக்க?? வரியா லன்சுக்கு பிரியாணி சாப்பிடலாம்?”

“இந்த கதிர் பையனை கையில புடிக்க முடியல… புதுசு புதுசா எதோ கரபான்பூச்சி எல்லாம் மனசுக்குள்ள சுத்தற மாதிரி ஃபீல் ஆகுறான்டா…. தாங்க முடியல.”

“கதிர பாருடா…. மச்சான் மச்சான்னு கூப்டுட்டு, இப்போ நிஜமாவே எனக்கு மச்சான் ஆகிட்டான். லக்கி பாய்…”

“இப்போ எதுக்கு இப்படி ஆபீஸே உன்னை நம்பி இருக்குற மாதிரி வேலை பார்க்குற?? நம்ம சி.யி.ஓ. கூட இவ்வளவு வேலை பண்ண மாட்டாரு! என்ன வேலை பார்த்தாலும் வரற்து தான்டா வரும்…. ஓவர் ஜாப் உடம்புக்கு ஆகாது மச்சான். கிளம்பு கிளம்பு!”

கார்த்திக் இதையெல்லாம் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை. விநாயகமும் சொல்லி சொல்லி பார்த்து வெறுத்து விட்டான். கார்த்திக்கிற்கு காதல் வாழ்க்கை பறிப் போனாலும், அலுவக வாழ்க்கை கை கொடுத்து அவனை துயரத்தில் இருந்து தூக்கியும் விட்டது. மேல் அதிகாரியிடம் நற்பெயரும் கிட்டியது!

இங்கே இவன் வாழ்க்கை ஒருவிதமாக போக, மாயாவின் வாழ்க்கை கல்யாண பாதையில் ஸ்மூத்தாக பயணித்தது. அவளின் வீட்டில் கல்யாண தேதியை முடிவெடுப்பதில் ஆலோசனை நடைபெறுவதை பார்த்து, அமைதியாக நின்றிருந்தாள் மாயா. கதிர் அவளிடம் உளறிவிட்டு சென்றதும், அவள் நேராக சென்று நின்றது பிள்ளையாரிடம் தான்! வெகு நேரம் கோவிலில் இருந்ததால், அவளின் கைப்பேசி இசைத்து வீட்டிற்கு விரையும்படி அவளின் அன்னையின் குரலில் கூறியது.

வீட்டிற்கு சென்றவுடன் ரித்தியாவிடம் வழக்கம் போல் எல்லாவற்றையும் கொட்டினாள் மாயா. அனைத்தையும் கூறி முடித்ததும் ரித்தியாவே பொங்கிவிட்டாள். “அவனோட இன்டன்ஷன் எல்லாம் சரிடி, எதுக்கு நீ சொல்றதை கூட கேக்காம ஓடிப் போனான்?? லூசா இருப்பானோ??”

மாயா இதற்கு மௌனமே பதிலாக தந்தாள். “நீ என்ன முடிவு பண்ணிருக்க மாயா??”

“தெரியல…”

“ஹே இன்னும் நீ சும்மா இருக்க முடியாது. எதாவது முடிவு செய் முதல்ல…”

“கார்த்திக் அவன் கூடவே வந்திருக்கான்னா அவனுக்கு என்னை பிடிக்கலை தான??”

அழுகை பொங்கும் குரலில் மாயா கேட்கவும் ரித்தியாவுக்கு எப்படி பதில் கூறுவது எனவே தெரியவில்லை. இருந்தாலும் அவளை மார்போடு அணைத்துக் கொண்டு தேற்றினாள்.

“மாயு நமக்கு பிடிச்சது எல்லாம் கிடைக்குதா என்னை? அவனை மறக்க ட்ரை பண்ணு. பட், இந்த கதிரும் உன்னை கிளாஸ்ல சேர்த்து விடறேன்னு எல்லாம் சொல்றான். அவனை பத்தியும் யோசி. ஏன்னா அவனை வேண்டாம்னு சொன்னா வீட்டுல நிறைய கேள்வி கேப்பாங்க. அதுக்கெல்லாம் ரெடியா பதில் சொல்லனும், ஞாபகம் வைச்சுக்கோ!”

ரித்தியாவின் பேச்சை கேட்டதும், மாயாவுக்கு மனம் கொஞ்சம் தெளிவு பெற்றது என்னவோ உண்மை! அவள் கூறியதும் நூறு சதவீதம் உண்மையல்லவா?? தன்னை பற்றிய எந்தவித யோசனையும் இன்றி இருப்பவனை எண்ணி தான் எத்தனை காலம் முட்டாளாக இருந்திருக்கிறோம். எண்ணும் போதே அவன் திரும்பி நின்ற தருணம் நினைவு வர, இதயம் எங்கும் வேதனை ஓடியது.

இவனையே மனதில் கொண்டு கனவை அடைய தன்னால் முடியும். ஆனால், தன் தாய் அதற்கு ஒரு போதும் ஒத்துக் கொள்ள போவதில்லை! மாயாவின் எண்ணங்களுக்கு வலுவூட்டவே அவளின் ஜாதகம் கதிருடன் பொருந்திப் போனது! அதன் பிறகு, மாயாவின் கைகளில் எதுவும் தங்கவில்லை.

மாயாவின் வீட்டில் அவள் அம்மா மற்றும் உறவினர்கள் சேர்ந்து அவளின் வாழ்க்கையை முடிவு செய்தனர். தன் கனவை கல்யாணம் முடிந்த பிறகாவது அடைய முடியுமா என்று ஏக்கத்துடன் காத்திருக்கத் தொடங்கினாள் மாயா. நல்ல வேளை நிச்சயதார்த்தம் எல்லாம் திருமணத்திற்கு முன்னாளே வைத்துக் கொண்டதால், மாயசித்ரா அதிலிருந்து தப்பினாள்.

கதிர் இவளிடம் தொலைப்பேசியில் பேசுவது உண்டு தான். ஆனால், இவளால் தான் அவனுடன் ஈடு கொடுத்து பேச முடியவில்லை… சரி திருமணம் முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என தன்னையே தேற்றிக் கொள்வாள் மாயா. ஆனால், தான் எப்போதும் ஜெயிக்க வேண்டும், முதலாவதாக வர வேண்டும் என்ற கதிரின் கொள்கையை மட்டும் தெளிவாக புரிந்தது மாயவுக்கு.

அவளின் கடைசி செமஸ்டரும் அப்படியே செல்ல இன்னும் இரண்டு மாதங்களே இருந்த நிலையில் கல்யாண வேலைகளை மாயாவின் வீட்டினர் ஓடி ஓடி செய்தனர். ரித்தியாவும் கதிரை தன் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு தன்னால் முடிந்த மட்டும் மாயாவை சந்தோஷமாக வைத்துக் கொண்டாள்!!!

****************************************************************************************************இருட்டான ஓர் அறை! ஜன்னலின் வழியே வந்த சிறு வெளிச்சம் மட்டுமே அந்த அறையில் இருப்பவற்றை காண உதவியது. மாயா அங்கே தனியாக உட்கார்ந்து அழுதுக் கொண்டிருந்தாள். கலைந்த கூந்தலும், அழுது அழுது சோர்ந்த கண்களும், எண்ணை வழிந்த முகமுமாக தோன்றினாள்.

அவளின் கதறல் கல்லையும் கரைக்கும் வண்ணம் இருந்தது. அப்போது அந்த அறையின் உள்ளே ஒர் உருவம் நுழைந்தது. கண்களை கஷ்டப்பட்டு திறந்து, அந்த உருவத்தை அடையாளம் காண முயன்றாள் மாயா…

உருவம் அருகில் வர வர யார் என விளங்கிப் போயிற்று! எப்படித் தான் அப்படி ஒரு சக்தி வந்ததோ அவளுக்கு?? ஓடிச் சென்று உருவத்தின் சட்டையை பிடித்து உலுக்கி தன் மனக் குமுறலை கொட்டினாள். “பாவி இப்போ எதுக்குடா இங்க வந்த?? என்னோட ஆசை, கனவு முழுசா போச்சு உன்னால! அப்பவே சொன்னேன் கேட்டியா?? இப்போ…. நான் என்னடா பண்ணுவேன்…. ஐய்யோ என்னால தாங்க முடியலையே!!!”

இவளின் கோபத்தையெல்லாம் தாங்கிய அவ்வுருவம் கார்த்திக்! இவள் திட்டுவதை கேட்டு அவனும் உடைந்து அழ ஆரம்பித்தான். இருவரும் அழும் ஓசை அவ்வறையை முழுதாக நிரப்பியது….


அலரி அடித்துக் கொண்டு எழுந்தாள் மாயசித்ரா! நடந்தது அனைத்தும் ஓர் கனவு என்பது அவளுக்கு புரிபட சில நிமிடங்கள் பிடித்தது. பக்கத்தில் தூங்கும் ரித்தியாவை எழுப்பாமல், அவள் வெளியே சென்று தண்ணீர் குடித்து மீண்டும் வந்து படுத்தாள். எண்ணங்கள்யாவும் அந்த கனவை சுற்றியே வந்தது…. இது வருவது அவளுக்கு இரண்டாம் முறை!

ஏன் இது அடிக்கடி வருகிறது?? ஒரு வேளை உண்மையாக நடக்குமோ…. அப்படி நடந்தால் என்ன மாதிரியான அசம்பாவிதம் நடக்கும்?? யாருக்கு என்ன ஆகும்??

அடுத்த இரண்டு நாட்கள் மாயா இதை பற்றி தான் சிந்தித்தாள். “அப்பவே சொன்னேன் கேட்டியா??” இந்த வரிகள் தான் அவளின் மனதை குடாய்ந்தது. தான் என்ன கூறினோம் அதை கார்த்திக் கேட்காமல் விட்டான்….

உடனே அவனின் இருசக்கர வாகனத்தின் வேகம் நினைவு வர, அவள் மனதில் பிளாஷ் அடித்த முகம் விநாயகம்… ஒருவேளை அண்ணனுக்கு தான் என்னவோ ஆகப் போகிறதோ?? இந்த துளி சிந்தனையே மாயாவை முற்றிலும் சோர்வாக்கியது…. என்னவென்று அறியாமல் மனதை ஒரு சோகமும் பயமும் ஆட்கொண்டது. காரணம், விநாயகம் அவளின் தந்தை விநாயகத்தை எப்போதும் ஞாபகப் படுத்தினான்.

அவளின் தந்தையும் ஓர் வாகன விபத்தில் தான் மரணம் அடைந்தார். இவளின் பன்னிரெண்டாம் வயதில் வெளியே சென்றவர் வீட்டிற்கு வந்த விதம் இன்னமும் அவளின் மனதில் பசுமரத்தாணியாக நினைவிருந்தது. அதனால், மாயா மிகவும் பயந்துப் போனாள்.

உடனே விநாயகத்தை அழைத்து அவனின் நலம் விசாரிக்கவும் தயங்கவில்லை. “என்ன தங்கச்சி திடீர்னு கூப்பிட்டிருக்க?? என்ன விஷயம்?” விநாயகம் கேட்டதிற்கு கூட மழுப்பலான பதிலே கூறினாள் மாயா.

“சும்மா தான் கூப்பிட்டேன்… ஏன் கூப்பிட கூடாதானா??” விநாயகம் உடனே சரண்டர் தான். இந்த பயம், குழப்பம் எல்லாம் மனதை ஆக்கிரமித்த வேளையில் தான் கார்த்திக்கை மாயா சந்தித்தாள். கடைவீதியில் தான் அதுவும் நிகழ்ந்தது. பைகளை தூக்கிக் கொண்டு மாயா தனியாக நடந்து வர, அவளின் பெயரை யாரோ கூப்பிட்டனர். யார் என பார்த்தால் கார்த்திக்!

உறைந்து நின்று அவனையே கண் இமைக்காமல் பார்த்தாள் மாயா. “எப்படியிருக்க மாயா??” புன்னகையுடன் கேட்டவனை பார்த்து தலையசைத்தாள். “உன்கிட்ட ஒரு சின்ன அட்வைஸ் பண்ணிட்டு போலாம்னு தான் கூப்பிட்டேன்.”

கார்த்திக் சொன்னதை கேட்டு மாயா புருவத்தை உயர்த்தினாள். “என்ன அட்வைஸ்??”

“உன்னோட கேமராவை மட்டும் எப்போவும் விட்டுடாத! உன்னோட கோல் தான் உன்னை வித்தியாச படுத்துது…. நீ நார்மல் லைப் வாழ வேண்டிய பொண்ணு இல்ல. உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.”

“ஹ்ம்ம்ம் புரியுது.” மாயா சின்ன முறுவலுடன் கூறிவிட்டு, அவனிடம் தன்னை பயமுறுத்தும் கனவை பற்றி கூறலாமா வேண்டாமா என யோசித்தாள். பின் தனக்கே தெளிவில்லாத விஷயத்தை என்னவென்று விவரிப்பது? அதுமட்டும் இன்றி, இது நல்ல விஷயம் அல்லவே, உடனே பகிர்ந்துக் கொள்ள…

எனவே அவள் தலையசைக்கவும் கார்த்திக்கும் உடனே, “கொஞ்சம் வேலையிருக்கு, நான் கிளம்பறேன். பை” என அவன் புன்னகை பூசிய முகத்துடன் கிளம்பினான். மாயாவும் தன் கேமராவை எப்போதும் கைவிடக் கூடாது என திடமான மனதுடன் உறுதிமொழி எடுத்தாள்.

இன்னும் சில நாட்களில் தன் வாழ்க்கையில் பூகம்பம் வெடிக்க இருப்பதை அவள் அறியவில்லை…!! பூகம்பத்தை தொடர்ந்து புயல், சுனாமி எல்லாம் தாக்கவிருப்பதையும் தான்!!!




 
Top