Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றில் வரைந்த ஓவியம் ..9.....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 9.



ராகவன் எல்லாப் பணத்தையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டான் என்ற எண்ணமே முதலில் கோமதிக்கு உரைக்கவில்லை. காலையில் படுக்கையில் அவன் இல்லாதது கண்டு எங்கே போயிட்டார்? என்று நினைத்துக் கொண்டாளே தவிர அவன் ஓடி விட்டான் என்பது தெரியவில்லை. மாலையிலும் பிறகு இரவிலும் கூட அவன் வரவேயில்லை.



அம்மா தான் சொன்னாள்.



"உன்னைப் பிடிச்ச சனி விட்டிருச்சின்னு நெனச்சிக்கோ கோமதி! தலைக்கு முழுகிட்டு நீ உன் வேலையைப் பாரு! எங்க போயிடப் போறான்? அவனுக்கு உன்னை விட்டா சோறு போட ஆள் யாரு? போ போயி ஸ்கூலுக்குப் போற வழியைப் பாரு" என்றாள்.



மனம் கலக்கத்துடனே தான் பள்ளி சென்றாள். மேலும் இரு தினங்கள் சென்றன. அவனைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. செல்ஃபோனுக்கு ஃபோன் செய்தாலும் எப்போதும் ஸ்விட்ச் ஆஃப். இல்லையென்றால் அவுட் ஆஃப் ரேஞ்ச். கடவுளின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நாட்களைக் கடத்தினாள்.



அப்போது மாலதிக்குத்தான் அந்த சந்தேகம் முதலில் வந்தது.



"கோமதி! உங்க வீட்டுக்காரரோட ஆபீஸ் சாவி இருக்கா? அங்க போயிப் பாக்கலாமா?" என்றாள்.



தேடும் போது தான் தெரிந்தது சாவியைக் காணோம் என்று. இருந்தாலும் போய்ப் பார்க்கலாம் என்று மாலதியை அழைத்துக் கொண்டு போனாள். அந்தச் சிறிய இடம் பரபரப்பாக இருந்தது. கூட்டிப் பெருக்கும் பெண்மணியும் இன்னும் யாரோ ஒருவரும் இருந்தார்கள். கூட்டிப் பெருக்கும் பெண் மணி கூட புதியவள் தான். இவர்களைப் பார்த்து விட்டு அந்த ஆள் வந்தார்.



"என்னம்மா? நீயும் அந்த ஆள் கிட்ட காசு கட்டி ஏமாந்துட்டியா? இதோட எத்தனை பேரு தேடி வந்தாச்சு தெரியுமா? பாத்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க? நீங்களுமா ஏமாந்தீங்க?" என்றார்.



துணுக்குற்று நின்றவளை அமைதிப்படுத்தினாள் மாலதி. அவரிடம் பேசினாள்.



"இல்லை சார்! இங்க முன்னாடி பிசினஸ் செஞ்சிக்கிட்டு இருந்தாரு இல்ல ராகவன்னு ஒருத்தர். அவருக்குத் தெரிஞ்சவங்க இவங்க! திடீர்னு நாலு நாளா ஆளையே காணோம்னு தேடி வந்திருக்காங்க" என்றாள் மாலதி.



"அடக்கடவுளே! இது என்னம்மா புதுக் கூத்து? நான் தான் இங்க பெயின்ட் கடை வெக்கிறதுக்காக ராகவன் கிட்டருந்து இந்த இடத்தை வாடகைக்குப் பிடிச்சேன். பத்து நாள் முன்னாடியே அவன் எல்லாப் பணத்தையும் வாங்கிக்கிட்டானே? அவன் மனைவி குழந்தைங்க எல்லாம் ஊர்ல இருக்கறதாகவும் அங்க போகப் போறதாகவும் சொன்னான்" என்றார்.



கையால் தலையைப் பிடித்துக் கொண்டாள் கோமதி.



"ஏன் சார்! நீங்க அவர் கிட்ட முழு விவரமும் கேக்கலையா? அவரோட ஃபோன் நம்பர் ஏதாவது? எப்படி அவரை நம்பிப் பணம் குடுத்தீங்க?"



"நல்லா இருக்கே நீங்க சொல்றது? அவன் ஃபிராடுன்னு எனக்கு அப்பத் தெரியாதும்மா! இந்த இடத்தை அவன் எனக்கு விட்டுக் குடுக்குற வகைக்கு 2 லட்ச ரூவா குடுத்தேன். அப்புறம் இடத்தை சுத்தம் செய்ய வரும் போது தான் ஒவ்வொருத்தங்களா வந்து பணம் குடுங்க! பணம் குடுங்கன்னு கேட்டாங்க! அப்பத்தான் எனக்குப் புரிஞ்சது. நீங்க எவ்வளவு ஏமாந்தீங்க?" என்றார்.



"என் வாழ்க்கையையே ஏமாந்துட்டேன் சார்" என்றாள் கோமதி கண்ணீருடன்.



"இதப்பாரும்மா! நான் இடத்தை வாடகைக்குத்தான் எடுத்தேன். இந்த மாதிரி வில்லங்கமெல்லாம் வரும்னு தெரிஞ்சிருந்தா இந்தப்பக்கமே எட்டிப் பார்த்திருக்க மாட்டேன். அவன் எங்கியோ திருநெல்வேலிப் பக்கம் போகப் போறேன்னு சொன்னான். இது அவனோட ஃபொன் நம்பர்" என்று கொடுத்தார்.



இவர்களிடம் இருந்த நம்பரும் அவர் கொடுத்த நம்பரும் ஒன்றே தான்.



நிற்கவே முடியாமல் தள்ளாடினாள் கோமதி. அவளைப் பிடித்து பக்கத்தில் இருந்த ஒரு பூங்காவில் உட்காரவைத்தாள்.



"மனசை திடப்படுத்திக்கோ கோமதி! அந்த ஆளு உன்னை விட்டுட்டுப் போயிட்டான். அவன் வெளங்குவானா? நாசமாப் போறவன். இப்ப அவனை எங்கேன்னு போயித் தேடுறது?" என்றாள் மாலதி கவலையுடன்.



"விடுங்கக்கா! போனாப் போகட்டும். இத்தனை நாள் அவனா என்னை கவனிச்சுக்கிட்டான்? எங்கம்மா இருக்காங்க நீங்க இருக்கீங்க? அப்புறம் என்ன?" என்றாள் சற்றே தெம்பான குரலில்.



விஷயத்தை அவளிடம் எப்படிச் சொல்வது என்று விழித்தாள். கோமதி நினைப்பது போல எளிமையாக முடிந்து விடுமா என்ன இது? சே! பாவம் இந்தப் பெண். என்று அவளை இரக்கத்துடன் பார்த்தாள்.



"என்னக்கா அப்படிப் பாக்கறீங்க?"



"ஒண்ணுமில்ல! அவன் கிட்டருந்து உனக்கு விடுதலை கெடச்சிடிச்சுன்னு சந்தோஷப்படவா? இல்லை அவன் செஞ்சு வெச்சிட்டுப் போன கூத்துக்கு நீ பதில் சொல்லணுமே அதை நெனச்சு வருத்தப் படறதான்னு எனக்குப் புரியல்ல"



"என்னது? என்ன கூத்து?" என்றாள் புரியாமல் விழித்து.



இப்போது சொல்ல வேண்டாம் என்று நினைத்து அவளை வீட்டுக்குக் கூட்டி வந்தாள் மாலதி. கல்யாணியிடம் நடந்ததைச் சொன்னாள்.



"அந்தப் படுபாவி திட்டம் போட்டே செஞ்சிருக்கான் மாலதி! பத்து நாளைக்கு முன்னாடியே அவன் ஓடுறதுன்னு தீர்மானம் பண்ணிட்டான். இவ கிட்ட சொல்லவே இல்லை பாரேன். இப்படிக் கூட மனுஷங்க இருப்பாங்களா? ஒரு பாவமும் அறியாத என் மக வாழ்க்கை இப்படி ஆயிடிச்சே? கிராமத்துல கள்ளம் கபடம் இல்லாம இருந்தாளே? நானே இப்படி சீரழிச்சுட்டேனே?" என்று கதறினாள் அந்தத் தாய்.



தேற்ற முடியாமல் அழுதார்கள் மூன்று பெண்களும்.



கல்யாணியைத் தனியாக அழைத்தாள் மாலதி.



"பெரியம்மா! விஷயம் இதோட முடியல்ல! அவங்கிட்ட பணம் குடுத்தவங்க எல்லாம் கோமதியைத்தான் கேப்பாங்க! ஏன்னா இவ பங்குதாரர் ஆச்சே? அது தவிரவும் வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இன்னும் பத்து நாள்ல பணம் குடுத்துடறேன்னு கோமதி சொல்லியிருக்காளே? அதுக்கு இப்ப என்ன பண்றது?" என்றாள்.



மூச்சடைத்துப் போனாள் கல்யாணி.



"ஐயையோ! இதை நான் எதிர்பார்க்கவே இல்லையே? ஊரு முழுக்க பணத்தை வாங்கிட்டு அவன் ஓடிட்டான். ஆனா இப்ப என் பொண்ணு ஜெயிலுக்குப் போயிடுவா போல இருக்கே? என்ன செய்ய? மாலதி நீ ஏதாவது சொல்லேன்?"



"ஒரே ஒரு யோசனை தான் பெரியம்மா! அந்த ஆள் பணம் வாங்குனான். ஆனா அதுலருந்து ஒரு காசு கூட கோமதிக்குக் குடுக்கல்ல! இது நமக்குத் தெரியும். ஆனா மத்தவங்களுக்குத் தெரியாது. அதனால நாமளே போலீஸ்ல ஒரு புகார் குடுத்துடுவோம்"



"என்னன்னு?"



"இந்த மாதிரி என் புருஷன் என்னை விட்டுட்டு ஓடிட்டான். அவன் செஞ்சுக்கிட்டிருந்த வியாபாரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல! அதனால என்னை யாரும் பணம் கேட்கக் கூடாதுன்னு சொல்லுவோம்." என்றாள்.



"உம்! அது தான் சரி! வா! நாம போயி கோமதி கிட்ட பக்குவமாச் சொல்லுவோம்" என்றாள்.



அவர்களது அந்த யோசனைக்கு சம்மதிக்கவே இல்லை கோமதி.



"என்னை மன்னிச்சிடும்மா! எனக்கு இதுல சம்மதமே இல்ல!"



"ஏண்டி? அப்ப நீ ஜெயிலுக்குப் போகப் போறியா?"



"வேற வழியில்லைன்னா அப்படித்தான் செஞ்சாகணும்."



"என்ன உளற்ற? நீ ஜெயிலுக்குப் போயிட்டா அப்புறம் உன் எதிர்காலம் என்னாகும்? உனக்கு யாரு வேலை தருவாங்க? உன் மகன் நிலையை நெனச்சுப் பார்த்தியா? அப்படி என்னடி உன் புருஷன் மேல உனக்குப் பாசம்?" என்று வெடித்தாள் அம்மா கல்யாணி.



"எனக்கு அவரு மேல பாசம் இல்லைம்மா!"



'அப்ப ஏன்?"



"போன ஜென்மத்துல என்ன பாவம் செஞ்சேனோ எனக்கு நல்ல கல்யாண வாழ்க்கை அமையாமப் போயிட்டது. அவரு சாதாரண ஆளுங்க கிட்டத்தான் பணம் வாங்கியிருக்காரு. அதைப் போயி நான் இல்லேன்னு சொன்னா, அந்த சாபம் என் மகனைத் தான்ம்மா தாக்கும். அவனாவது நல்லா இருக்கணும்னு நான் நினைக்கிறேன். இது தப்பா? சொல்லும்மா?" என்றாள்.



மகளைக் கட்டிக் கொண்டு கதறி விட்டாள் கல்யாணி.



"என் கண்ணே! உனக்குப் போயி இப்படி ஒருத்தன் வந்தானே? உன் மனசுக்கு இனி எதுவும் வராதுடி! உன் மகன் நிச்சயமா நல்லாப் படிச்சி உன்னைக் காப்பாத்துவான். நீ கவலைப் படாதே" என்று அழுதாள்.



"எல்லாம் சரிதான் பெரியம்மா! கோமதி தான் ஏதோ உணர்ச்சி வேகத்துல சொல்றான்னா நீங்களும் சேர்ந்துக்கறீங்களே? மொத்தம் எவ்வளவு பணம்னு யாருக்குத் தெரியும்? அவங்க நம்மை ஏமாத்திட்டாங்கன்னா?" என்றாள் மாலதி.



"இல்லை மாலதி! என் மக சொல்றது சரி தான். பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுவோம். நீ போயி உன் புருஷனை வரச் சொல்லு" என்றாள்.



எல்லா விவரமும் முத்துசாமியிடம் சொல்லப்பட்டது. தாடையைத் தீற்றிக் கொண்டு யோசித்தான்.



"அத்தை! இதை நாம ஜாக்கிரதையாத்தான் கையாளணும். நாம பணம் குடுக்கறோம்கிற விஷயம் வெளிய தெரிஞ்சா நிறயப் பேரு பொய் சொல்லிப் பணம் பறிக்கப் பாப்பாங்க! அதனால யார் யார் கிட்ட ரசீது இருக்கோ அவங்களுக்கு மட்டும் பணம் குடுப்போம். என்ன சொல்றீங்க?"



"அப்படித்தாண்ணே செய்யணும். எல்லாத்தையும் கூட இருந்து நீங்களே செஞ்சிடுங்கண்ணே!"



"சரிம்மா! எப்படியும் நாலு லட்ச ரூபா தேவைப்படும். அவ்வளவு பணம் இருக்கா?"



"என் நகைங்களை வித்து கொஞ்சம் சமாளிப்போம். இல்லைன்னா பேங்குல கடன் வாங்க வேண்டியது தான். வேற என்ன பண்ண?"



"இல்ல கோமதி! வங்கியில கடன் வாங்குனா ஆயுசுக்கும் வட்டி கட்டிக்கிட்டே இருக்க வேண்டியது தான். அதனால நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். கிராமத்துல இருக்கற வீட்டை வித்துடுவோம். சின்ன வீடுன்னாலும் இன்னைக்கு எப்படியும் 5 லட்ச ரூபாக்குப் போகும். நம்ம பரமு அண்ணன் கிட்ட சொன்னா உடனே முடிச்சுக் குடுத்திடுவாரு. அப்ப நகைகளும் நம்மை விட்டுப் போகாது" என்றாள் கல்யாணி தெளிவாக.



"அம்மா! அது அப்பா உனக்காக ஆசையாக் கட்டுன வீடு. அதைப் போயி விக்கறேன்னு சொல்றியே? என்னை ஏம்மா அழ வைக்கிற?"



"உங்கப்பா இன்னைக்கு உசிரோட இருந்தாலும் இதைத்தான் செஞ்சிருப்பாரு. உசிரோட இருக்கறவங்களோட மன நிம்மதி தான் முதல்ல முக்கியம். பிறகு தான் மத்ததெல்லாம். நீ கவலைப் படாதே! உங்கம்மா நான் இருக்கேன். அவனுக்கு உன்னைக் கட்டி வெச்ச பாவத்துக்கு இப்படி பரிகாரம் தேடிக்கறேன். என்னைத் தடுக்காதே" என்று சொல்லி விட்டாள் அம்மா.



பரம சிவம் அண்ணனிடம் சொல்லி வீட்டை 6 லட்ச ரூபாய்க்கு விற்க ஏற்பாடு செய்தாள். முத்துசாமியும் கல்யாணியும் போய் பதிவு செய்து பணத்தைப் பத்திரமாக வாங்கி வந்தனர். இதற்குள் ராகவன் ஓடியதை அறிந்த ஒரு சிலர் வீட்டுக்கே வந்து பணம் கேட்டனர். அனைவரையும் இன்னும் ஒரு வாரம் கழித்து ரசீதோடு வந்து பார்க்கும்படி சொன்னாள்.



பள்ளியில் வேலை பார்க்கும் டீச்சர்கள், சாதாரண மக்கள் என அனைவருக்கும் ரசீதைப் பெற்றுக் கொண்டு அவரவர்க்குரிய பணத்தைக் கொடுத்தான் முத்து சாமி. பணம் வாங்கியதற்கு அத்தாட்சியாக காகிதத்தில் கையெழுத்தும் வாங்கிக் கொண்டனர். அனைவருக்கும் பணம் கொடுத்தது போக ஒன்றரை லட்ச ரூபாய் மிஞ்சியது. அதை பேரன் பெயரில் பேங்கில் போட்டு வைத்தாள் கல்யாணி.



"இனிமே நமக்கு நல்ல காலம் தான் பெரியம்மா! எல்லாருக்கும் பணம் குடுத்தாச்சு! அவங்க கையெழுத்துப் போட்ட காகிதம்லாம் இதுல இருக்கு. பத்திரமா எடுத்து வையுங்க" என்றாள் மாலதி.



அவற்றை எடுத்து வைத்து விட்டு வந்தாள் கோமதி.



"இனி அவன் இந்தப்பக்கமே வர மாட்டான் தங்கச்சி! நீ கவலைப் படாம வேலையைப் பாரு! எப்படியோ உன் நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது" என்று சொல்லி விட்டு மாலதியும் முத்துசாமியும் அவர்கள் வீடு சென்று விட்டார்கள்.



கல்யாணி குழந்தை வசந்துக்கு பால் புகட்டிக் கொண்டிருந்தாள். சுவரில் சாய்ந்து அமர்ந்தாள் கோமதி.



"இனி நான் என்ன செய்யப் போகிறேன்? சொந்த ஊரோடு இருந்த ஒரே பந்தமும் போய் விட்டது. அம்மா என்னை நம்பித்தான் வீட்டை விற்றாள். அவளைக் கடைசி வரை காப்பாற்ற வேண்டும். குழந்தை வசந்தை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். என் எதிர்காலத்துக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் ஒரு ஆண் துணையில்லாமல் நான் சாதிக்க வேண்டும். கடவுளே! எனக்கு தெம்பையும், தைரியத்தையும் கொடு" என்று வேண்டினாள்.



கோமதி அசதியால் கண்ணுறங்க குழந்தை தூக்கத்தில் சிரித்தது.
 
:love::love::love:

ஒரு ஆண் தைரியமா ஒரு வேலையை தேடி பொழைக்க நினைக்காமல் அடுத்தவனை ஏமாற்றி ஓட பெண் மேல அத்தனை சுமையும்......
அம்மாவையும் ஒண்ணுமில்லாமல் நிறுத்தியாச்சு......

தெம்பும் தைரியமும் தான் மிச்ச வாழ்க்கைக்கு தேவை.....
 
Last edited:
இனியாவது நிம்மதியா இருப்பாங்களா...அந்த கடன்காரன திரும்ப கூட்டிட்டு வராதிங்க ஆதர்ஜி
ஓசிச் சோறு தின்னு ருசி கண்ட பூனையாச்சே அவன்? பாப்போம்!
 
Top