Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றில் வரைந்த ஓவியம்..7....

Advertisement

Kalyanam na theera visarikkarathu ithukkuthan.
உண்மை தாங்க! பொண்ணுக்குக் கல்யாணம் ஆனாப் போதும் என்கிற மன நிலையில இருக்கக் கூடாது! தீர விசாரிக்கணும். ஏன்னா? பொண்ணைக் கொடுத்தோமோ? கண்ணைக் கொடுத்தோமோ! அப்படீன்னு சொல்லுவாங்க.
 
அத்தியாயம் 6.



வளையலை அடகு வைத்த ரசீதை கணவனது பேண்ட் பாக்கெட்டில் பார்த்ததும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. மனம் குமுறியது. ஏன் இப்படிச் செய்தார்? என்ற கேள்வி வந்து வந்து அலையடித்தது.



"சே! என்ன ஒரு அரக்கத்தனம்? எனக்குத் தெரியாமல் வளையலை எடுத்துப் போய் அடகு வைத்திருக்கிறார். நான் கேட்டதற்கு மாலதியக்கா எடுத்திருக்கலாம் என்று சொன்னாரே? ஏன் இத்தனை பொய்? அப்படியானால் என் வளையலை அடகு வைத்த பணத்தில் தான் டாக்டரிடமும் அழைத்துப் போயிருக்கிறார். " என்னவெல்லாமோ சிந்தித்தபடி ஒன்றும் செய்யத் தோன்றாமல் அமர்ந்திருந்தாள். மதியம் 3 மணி வாக்கில் மாலதி வந்தாள்.



"கோமதி! என்ன இது? ஏன் என்னவோ மாதிரி இருக்கே? உடம்புக்கு என்ன?" என்று பதறினாள்.



தாங்கமுடியாமல் கதறி விட்டாள் கோமதி.



"அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? என்ன செய்யுது? சொல்லும்மா?" என்றாள் ஆதரவாக.



ராகவன் வளையலை தனக்குத் தெரியாமல் அடகு வைத்ததைச் சொன்னாள். ஆனால் மாலதி தான் எடுத்திருப்பாள் என்று அவன் சொன்னதைச் சொல்லவில்லை.



"அடகு வெக்கப் போறேன்னு உங்கிட்ட சொல்லவே இல்லையா?"



"ம்ஹூம்! நான் வளையலைத் தேடும் போது கூட உருண்டு விழுந்திருக்கும்னு தான் சொன்னாரு. ரசீதை வெச்சு நானாத்தான் கண்டு பிடிச்சேன். எனக்கு என்ன செய்யன்னே தெரியல்லக்கா"



"நீ ஏதாவது சாப்பிட்டியா இல்லை இதையே நெனச்சுக்கிட்டு பட்டினி கெடந்தியா?"



"ஒண்ணுமே வேண்டியிருக்கல்லக்கா! என் வாழ்க்கை என்ன ஆகுமோன்னு நெனச்சா ரொம்பப் பயமாயிருக்கு. இதுல குழந்தை வேற! இது ஒண்ணு தான் குறைச்சல்! சே!" என்று அலுத்துக் கொண்டாள்.



"அப்படிப் பேசாதே கோமதி! குழந்தை நமக்குக் கடவுள் குடுக்கறது! இந்த நேரத்துல நீ நல்லா சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடுக்கணும். வா! கொஞ்சம் சாப்பாடு எடுத்துட்டு வரேன். சாப்பிட்டே ஆகணும் நீ" என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள்.



மாலதியின் அன்பை நினைக்க நினைக்க மனம் பூவாக மலர்ந்தது. அவள் கொண்டு வந்த சாம்பார் சாதம் பசிக்கு அவ்வளவு ருசியாக இருந்தது. தனக்காக இல்லாவிட்டாலும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காகவாவது சாப்பிட வேண்டுமே என நினைத்து உண்டாள். தட்டைக் கழுவி கொடுத்தாள்.



"ஏன் கோமதி? இப்படி நீ தனியாக் கெடந்து கஷ்டப்படுறதுக்கு உங்க அம்மாவைத் துணைக்குக் கூப்பிட்டு வெச்சுக்கலாம் இல்ல? அவங்க கிராமத்துல தனியாத்தானே இருக்காங்க? இங்க வந்து இருக்க மாட்டாங்களா?"



"அவங்க ரெடியாத்தான் இருக்காங்கக்கா! ஆனா எனக்குத்தான் இஷ்டமில்ல"



"ஏன்ம்மா?"



"ம்ச்! என்னத்தை சொல்றது? அவங்க நான் இங்க ரொம்ப வசதியா இருக்கேன்னு நெனச்சுக்கிட்டு இருக்காங்க! சொந்த வீடு வாங்கப் போறாங்க! நகை வாங்கறான்னு சந்தோஷமா இருக்காங்கக்கா! இப்பப் போயி அவங்க கிட்ட உங்க மருமகன் டாகடர் கிட்டக் கூட்டிக்கிட்டுப் போகிறதுக்குக் கூட காசில்லாம நகையை அடகு வெச்சாருன்னு தெரிஞ்சா ரொம்ப மனசு வருத்தபடுவாங்க! அதான் நான் கூப்பிடல்ல"



"இப்படி எத்தனை நாள் மூடி மூடி மறைக்கப் போற? என்னைக்காவது உங்கம்மாவுக்குத் தெரியத்தானே வேணும்?"



"என்னக்கா இப்படிச் சொல்றீங்க? நாங்க என்ன இப்படியேவா இருப்போம்? அவருக்கு ஏதாவது வேலை கெடச்சா எங்க நிலைமை உயராதா? இப்படியேவா இருப்போம்?" என்றாள் நம்பிக்கையுடன்.

பெருமூச்சு விட்டாள் மாலதி. ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்திருந்தாள்.



"என்னக்கா அப்படிப் பாக்கறீங்க?"



"ஒண்ணுமில்ல கோமதி! நீ ரொம்ப அப்பாவியா இருக்கியேன்னு தான் பாக்கறேன்."



என்ன என்பது போலப் பார்த்தாள்.



"உங்கிட்ட சொல்ல வேண்டாம்னு தான் நித்திலா அப்பா சொன்னாரு. ஆனா என்னால சொல்லாம இருக்க முடியல்ல! நான் ஏன் சொல்றேன்னா நீ கொஞ்சம் எச்சரிக்கையா இருந்து உன் எதிர்காலத்தைத் திட்டமிடணும். அதுக்காகத்தான் புரியுதா?" என்று பீடிகை போட்டாள். அடிவயிற்றில் அமிலம் சுரந்தது கோமதிக்கு.



"என்னக்கா சொல்லப் போறீங்க? எனக்கு பயமா இருக்கே?"



"கோமதி! உங்க வீட்டுக்காரர் வக்கீலா தொழில் பண்ணல்லம்மா! அவரு ராயப் பேட்டையில ஒரு சின்ன எடத்துல ஆபீஸ் வெச்சிருக்காரு. அதுல முக்காவாசி கட்டப்பஞ்சாயத்து தான் நடக்குமாம். ஆக்கிரமிப்பைக் காலி பண்றது, தாலுகா ஆபீசுல பட்டா வாங்கிக் கொடுக்கிறது. இப்படி சில்லறை வேலைகளை செய்து தருவாராம். அதுக்குக் கமிஷனாக் காசு குடுக்கறாங்க! "



கஷ்டப்பட்டுப் பேசினாள் கோமதி.



"இது உங்களுக்கு எப்படித் தெரியும்?"



"எங்க வீட்டுக்காரரோட ஃபிரெண்டு ஒருத்தர் வீடு கட்டுறாராம். அவருக்கு பட்டா வாங்கிக் குடுத்தது உங்க வீட்டுக்காரர் தானாம். அந்த ஃபிரெண்டைப் பாக்க ராகவன் நித்திலா அப்பாவோட ஆபீசுக்கு வந்தாராம். அவரு போனப்புறம் விவரம் கேட்டதுக்கு அந்த நண்பர் சொன்னாராம். அதைத்தான் நான் உங்கிட்ட சொன்னேன்" என்றாள்.



"வக்கீலுக்குப் படிச்சிட்டு இவரு ஏங்க்கா இந்த மாதிரி வேலை செய்யணும்? ஒரு வேளை நான் பணம் பணம்னு கேக்குறேன்னு இப்படி இறங்கிட்டாரோ?" என்ற கோமதியைப் பரிதாபமாகப் பார்த்தாள் மாலதி.



"நீ கல்யாணமாகி வரதுக்கு முந்தியே அவரு இதைத்தான் செய்துக்கிட்டிருந்தாராம் கோமதி!"



"இதுக்கு வேலைக்குப் போகலாம் இல்ல? ஏன் இப்படிப் பண்றாரு இவரு?" என்று தனக்குள் பேசிக் கொள்வது போலக் கேட்டாள்.



"அதையே தான் எங்க வீட்டுக்காரரும் கேக்குறாரு! அவருக்கு ராகவன் வக்கீலுக்குப் படிச்சிருக்காரான்னே சந்தேகமா இருக்குன்னு சொன்னாரு" என்றாள்.



விலுக்கென நிமிர்ந்தாள்.



"நீ மெதுவாக் கேட்டுப்பாரு! சர்டிஃபிகேட்டைக் காட்டச் சொல்லு! அப்படி அவரு வக்கீல் இல்லைன்னாலும் பரவாயில்ல! உண்மையச் சொன்னா அவரோட படிப்புக்குத் தகுந்த படி வேலை வாங்கித்தரேன்னு சொன்னாரு எங்க வீட்டுக்காரரு" என்று ஆறுதல் சொல்லி விட்டுப் போய் விட்டாள் மாலதி.



பெண் பார்க்க வந்தவர்கள் கல்யாணம் வரையில் ஊரிலேயே தங்கியது, சென்னையில் பெரிய ரிசப்ஷன் கொடுக்கப் போகிறோம் என்று சொல்லி செய்யாமல் விட்டது, சிறிய வீட்டில் குடியிருந்தது, பணம் இல்லாமல் திண்டாடுவது என எல்லாமே அவன் வக்கீல் இல்லை என்று தான் சொல்கின்றன. கடவுளே! அப்படி இருந்தால் என்ன செய்ய?" என்று யோசித்தபடி அமர்ந்திருந்தாள்.



ராகவன் வந்ததும் ஒன்றும் பேசாமல் இருந்தாள்.



"ஏன் கோம்ஸ் ஒண்ணுமே பேசாம இருக்க? காப்பி கூட வேணுமான்னு கேக்கல்ல?"



"காப்பிப்பொடி இல்லை"



"அப்ப டீ போடேன்"



"பால் இல்ல, டீத்தூளும் இல்ல" என்றவளை ஏறிட்டுப் பார்த்தான்.



"இன்னைக்கு ஒரு கஸ்டமர் 1000 ரூவா குடுத்தாரு. இந்தா" என்று கொடுத்தான்.



"ஏங்க பொதுவா வக்கீல்கள் எல்லாரும் கட்சிக்காரங்கன்னு தானே சொல்லுவாங்க? நீங்க கஸ்டமர்ங்கறீங்க?"



"அது அது…வாய் தவறிடிச்சு.."



"எப்படி? கை தவறி என் வளையலை எடுத்துட்டுப் போய் மார்வாடிக் கடையில வெச்சீங்களே அது மாதிரியா?" என்றாள்.



அவன் திடுக்கிட்டது வெளிப்படையாகத் தெரிந்தது.



"ஓ! தெரிஞ்சி போச்சா? அதான் கோவமா? என்னால விளக்கம் சொல்ல முடியும்! ஆனா நீ கேக்க மாட்டே"



"நீங்க சொல்லி எத்தனையோ கேட்டாச்சு! இதைக் கேக்க மாட்டேனா? சொல்லுங்க கேக்கறேன்" என்றாள் கிண்டலாக. அதை அலட்சியம் செய்து விட்டுப் பேசினான் ராகவன்.



"நீ டாக்டர் கிட்டப் போகணும், தடுப்பூசி போடணும்னு சொல்லிக்கிட்டு இருந்தே! ஆனா எங்கிட்டப் பணம் இல்ல! நான் என்ன செய்வேன்? அதான் வளையலை எடுத்துட்டுப் போய் அடகு வெச்சேன். எடுத்ததே தெரியாம மீட்டு கொண்டு வந்து வெச்சிடணும்னு தான் நெனச்சேன். ஆனா உனக்குத் தெரிஞ்சிருச்சு"



"ஏன் எங்கிட்டக் கேட்டிருந்தா நான் என்ன தர மாட்டேன்னா சொல்லியிருப்பேன்? ஏன் இந்தத் திருட்டுத்தனம்? என்ன கேட்டாலும் அழகா ஒரு பதிலைச் சொல்லிடறீங்க! வக்கீலாச்சே?"



அவளைக் கூர்ந்து நோக்கினான்.



"என்னை மன்னிச்சிடு கோம்ஸ்! நீ மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு தான் நான் அப்படி செஞ்சேன். ஆனா நீ என்னயே கேவலமாப் பேசுற!"



"ஆனா நீங்க ரொம்ப நல்லவருங்க! என் மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு எத்தனை யோசிச்சு செய்யறீங்க? எனக்குத்தான் அதைப் புரிஞ்சிக்கிற சக்தி இல்லை! என்ன இருந்தாலும் வக்கீலாச்சே?"



"ஏன் அடிக்கடி வக்கீலாச்சேன்னு வக்கீலாச்சேன்னு குத்திக்காட்டுற?"



"வக்கீலை வக்கீல்னு சொல்றது எப்படிங்க குத்திக் காட்டறதா ஆகும்?"



"கோமதி! நீ உன் மனசுல என்னவோ வெச்சுக்கிட்டுப் பூடகமாப் பேசுற! பக்கத்து வீட்டு பொம்பளை என்னத்தைக் கிளறி விட்டுட்டுப் போனா? சொல்லு"



"அவங்க கிளறி விடற அளவுக்கு உங்க கிட்ட என்னவோ இருக்குறதால தானே அவங்க கிளறி விடறாங்க?"



"என்னடி? ரொம்ப ஓவராப் பேசுற? கன்னம் பழுத்துரும். என்னை யாருன்னு நெனச்ச?"



"ஏங்க? வக்கீலுக்குப் படிச்சவங்க அவங்க வாங்குன சர்டிஃபிகேட்டை அழகா லாமினேட் பண்ணி மாட்டி வைப்பாங்க இல்ல? நீங்க ஏன் அப்படிச் செய்யல்ல?"



"அது அது… எனக்கு விளம்பரம் பிடிக்காது. அதான்."



"அதை எங்கிட்டயாவது காட்டுங்களேன்? எனக்குப் பாக்கணும்னு ஆசையா இருக்கு!"



அவளை நெருங்கி வந்தான். அடித்து விடுவானோ என்று தோன்றியது. இருந்தாலும் கண் இமைக்காமல் அவனைப் பார்த்தாள்.



"ஆமாண்டி! நான் வக்கீல் இல்லை தான். என்ன பண்ணிடுவே? எனக்கு பத்தாம் கிளாசுக்கு மேல படிப்பு ஏறல்ல! ஆனா அப்படிச் சொன்னா பொண்ணு குடுப்பாங்களா? அதான் வக்கீல்னு பொய் சொன்னேன். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க" என்றான்.



வானம் இடிந்து தலை மேல் விழுந்தது போல உணர்ந்தாள் கோமதி.



"அப்ப உங்க அம்மாவும் ஃபிராடு தானா? அவங்க என் மகன் வக்கீலுக்குப் படிச்சுட்டு நிறைய சம்பாதிக்கறான்னு சொன்னாங்களே? அத்தனையும் பொய்யா? அம்மாவும் மகனும் சேர்ந்து ஏன் எங்களை ஏமாத்துனீங்க? சொல்லுங்க சொல்லுங்க..." என்று அழுதாள்.



அவள் அழுது முடியும் வரை பேசாமல் பார்த்திருந்தான்.



"இந்தா! இப்ப என்ன நடந்து போச்சின்னு நீ அழற? நீ என்ன பெரிய அம்பானி குடும்பத்துலயா பொறந்த? சாதாரண வாத்தியார் மக தானேடி நீயி! அதுவும் சின்னப் பசங்களுக்கு ரைம்ஸ் சொல்லிக் குடுக்குற பொம்பளை. உனக்கு பின்ன டாக்டர், இஞ்சினியர் மாப்பிள்ளையா வருவாங்க?" என்றான் கடூரமாக.



"இப்பப் புரியுது எனக்கு! நீங்க முன்ன இருந்த ஏரியாவுல உங்களைப் பத்தி எல்லாருக்கும் தெரியும். அதனால தான் அவங்க உங்களை மதிக்கல்ல! உள்ளூர்ல யாரும் ஏமாற மாட்டாங்கன்னு நீங்க கிராமத்துக்கு வந்து எங்களை ஏமாத்தியிருக்கீங்க?"



"ஆமாம் ஏமாத்தினோம்! என்ன செய்வ? வக்கீலு, மாசம் கணிசமான வருமானம், வரதட்சிணை வேண்டாம்னதும் வாயைப் பொளந்துக்கிட்டு வந்தீங்க இல்ல? உங்களுக்கு மட்டும் ஆசை இல்லியா?"



"நாங்க என்ன வக்கீல் மாப்பிள்ளை தான் வேணும்னா நின்னோம்? நீங்க தான் வந்து பொண்ணு பார்த்துட்டு இன்னும் பத்தே நாள்ல கல்யாணத்தையும் முடிச்சுட்டுப் போயிடலாம்னு இருந்தீங்க! திட்டம் போட்டு எங்களை இப்படி ஏமாத்திட்டீங்களே?"



"சும்மா ஏமாத்திடீங்களே ஏமாத்திட்டீங்களேன்னு சொல்றியே? அப்படி என்னடி உன்னை ஏமாத்தினோம்? தாலி கட்டி ஒழுங்காத் தானே குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கேன்? உனக்கு சோறு போடுறேன், மருந்துக்கு அழுவுறேன். அப்புறம் என்னடி? இதப்பாரு! போட்டதைத் தின்னுட்டு மரியாதையா இரு! இல்லை நான் எங்க ஆத்தா வீட்டுக்குப் போறேன்னா போ! உன் இஷ்டம்" என்று சொல்லிவிட்டான்.



தான் ஏமாந்ததை நினைத்து அழுவதா? கணவன் நல்லவனாக இல்லயே எனக் கலங்குவதா? வருங்காலத்தை நினைத்துக் கவலைப் படுவதா? என்று எதுவும் தெரியாமல் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள் அந்தப் பேதை.
Nice
 
Top