Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றில் வரைந்த ஓவியம் 7 ஏ...

Advertisement

கோமதி பிறந்த வீட்டுக்கு வந்து இன்றோடு மூன்று மாதங்கள் ஆகி விட்டன. முதலில் அம்மாவிடம் ஒன்றும் சொல்லவில்லை. வேலை செய்ய முடியாமல் களைப்பாக இருப்பதால் வந்தேன் என்று தான் சொன்னாள். ஆனால் அடிக்கடி அவள் தனியாகக் கண்ணீர் விடுவதைப் பார்த்தாள் அம்மா. அதோடு கோமதி கணவனோடு பேசவே இல்லை. இந்த மூன்று மாதங்களில் அவனும் வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை. எல்லாவற்றையும் சேர்த்து அம்மா கல்யாணி சந்தேகப் பட்டாள்.



"கோமதி! மாசமா இருக்குற பொண்ணுங்க முகம் பூரிப்பா மலர்ச்சியா இருக்கும். நீ என்னடான்னா ஏன் வாடி தெரியுற? என்னடி விஷயம்? உனக்கும் மாப்பிள்ளைக்கும் சண்டையா?"



"ம்ச்" என்று சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.



"இப்படி மூஞ்சியைத் திருப்பிக்கிட்டா என்ன அர்த்தம்? நான் உன்னைப் பெத்தவ இல்லியா? உன் மனசு எனக்குத் தெரியாதா? சொல்லுடி! சென்னையில என்னவோ நடந்திருக்கு. உன் புருஷன் குடிக்கிறாரா? இல்லை வேற பொண்ணுங்களோட..." என்று முடிக்காமல் நிறுத்தினாள்.



"அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா!" என்றவள் தாயின் மடியில் முகம் புதைத்து அழுதாள்.



"நாம ஏமாந்துட்டோம்மா! அவரு வக்கீலும் இல்ல ஒண்ணும் இல்ல. நல்லா நம்மை ஏமாத்திட்டாங்க" என்று அழுதாள்.



நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தாள் கல்யாணி.



"என்ன சொல்ற? என்னடி சொல்ற? எங்க அண்ணன் பரமசிவம் தானே பாத்து வெச்சாரு? அவரும் நம்மை ஏமாத்திட்டாரா?"



"இல்லம்மா! அவங்க எல்லாருமே ஏமாந்திருக்காங்க"



அம்மாவை நெருக்கி அமர்ந்து கொண்டு ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.



"அவன் நாசமாப் போக! அவன் வாயில புத்து முளைக்க! என் மக வாழ்க்கையை நாசமாக்கிட்டானே? உருப்படுவானா அவன்? அவங்க அம்மாவும் இதுக்கு உடந்தையா? எங்க அந்தக் கெழவி? அவளை ரெண்டு துண்டா வகுந்தாத்தான் என் மனசு ஆறும்." என்று கத்தினாள்.



"என் தலை விதி அப்படி இருக்கும் போது யாரை குத்தம் சொல்லி என்ன பிரயோஜனம்?"



"நீ நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்டிருக்கணும் உன் புருஷன் கிட்ட"



"கேட்டாச்சும்மா! நான் என்ன உன்னை ஏமாத்தினேனா? கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தறேனேன்னு பேசுறாரு. அதுக்கும் மேல இப்படித்தான் இருக்கும். இஷ்டமிருந்தா இரு இல்லைன்னா உங்க அம்மா வீட்டுக்குப் போன்னு சொல்லிட்டாரு. எனக்கு மானமே போகுதும்மா" என்றாள் அழுதபடி.



கல்யாணியும் கொஞ்ச நேரம் மகளை அணைத்துக் கொண்டு அழுதாள்.



"அப்பா இல்லாத பொண்ணை இப்படிப் பாழுங்கெணத்துல தள்ளிட்டேனேடி! என்னை மன்னிச்சிடும்மா! என் கண்ணு! என் ராணி! நீ எங்கியும் போக வேண்டாம்டி! இங்கயே இருந்துடு. பார்த்துடலாம் ஒரு கை!" என்றாள்.



கோமதியின் கணவன் படித்தவனில்லையாம். ஏமாற்றி விட்டார்களாம் என்ற செய்தி கிராமம் முழுவதும் பரவி விட்டது. சிலர் உண்மையிலேயே இரக்கப்பட்டனர். சிலர் "அம்மாவும் மகளும் ரொம்ப ஆடுனாங்க! அதான் கடவுள் இப்படி தண்டிச்சுட்டாரு" என்று இவர்களது துன்பத்தில் குரூர இன்பம் கண்டனர். விஷயம் தெரிந்து பரமசிவம் ஓடி வந்து மன்னிப்புக் கேட்டார்.



மாதங்கள் ஏழு முடிந்து விட்டது. மகளுக்கு வளை காப்பு சீமந்தம் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள் கல்யாணி. அதைப் பற்றி அண்ணன் பரமசிவத்திடமும் பேசினாள். அவர் ராகவனின் தூரத்து உறவான கணபதியிடம் சொன்னார். இரு பெரியவர்களும் கோமதியைப் பார்க்க புறப்பட்டு வந்தனர். வந்தவர்களிடம் ஒரு பாடு வைது தீர்த்தாள் கல்யாணி.



"ஐயா! நீங்க எல்லாம் பெரியவங்கன்னு தானே உங்க பேச்சைக் கேட்டு நம்பி என் மகளைக் கல்யாணம் பண்ணிக் குடுத்தேன். அவன் இப்படி ஒரு ஏமாத்துக்காரனா இருக்கானே ஐயா! என் மக வாழ்க்கை நாசமாயிடிச்சே" என்று அழுதாள்.



கணபதி பேசினார்.



"அம்மா! எங்களை மன்னிச்சிடுங்க! மரகதம் ரொம்ப நம்பிக்கையாப் பேசுனா. அவ பேச்சுல மயங்கிட்டோம். நாம ஒரு எட்டு மாப்பிள்ளை வீட்டைப் பார்த்துட்டு வந்திருக்கணும். அவங்க தான் அவசரப்பட்டாங்கன்னா நீங்களும் அவசரப்பட்டீங்களே? உங்களை நான் குத்தம் சொல்லல்ல! இப்படி ஏமாத்திட்டானே ஏமாத்திட்டானேன்னு புலம்புறதைக் காட்டிலும் இனிமே என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம் இல்ல?' என்றார் இதமாக.



கண்களைத் துடைத்துக் கொண்டாள் கல்யாணி.



"இனிமே நடக்க என்ன இருக்கு? என் மக அவன் கூட வாழ மாட்டா! அத்து விட்டுருங்க" என்றாள் சடாரென.



தூக்கி வாரிப் போட்டது கோமதிக்கு.



"அத்து விடுவது என்றால்? இனிமேல் எனக்கும் ராகவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு ஆயிருமே? அப்ப என் வயித்துல வளர்ற குழந்தை அப்பா இல்லாம வளரணுமா? எனக்குத்தான் சின்ன வயசிலயே அப்பா இறந்துட்டாரு. ஆனா என் குழந்தைக்கு அப்பா உயிரோட இருந்தும் அது அனாதையா வளரணுமா?" யோசித்தாள்.



"நீங்க சொல்றீங்க? ஆனா உங்க மக இன்னும் பேசவேயில்லையே?" என்றார் கணபதி.



கல்யாணி திரும்பி மகளைப் பார்த்தாள். அவள் முகம் கலக்கமாக இருந்தது.



"அம்மா! நீங்க வாழ்ந்தவங்க! தாலி கட்டின உறவுங்கிறது அத்தனை ஈசியா அத்துக்கிடறது இல்ல! கால காலத்துக்கும் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழணும்னு தான் நாம கல்யாணம் செஞ்சி வைக்கிறோம். அதை ஈசியா பிரிக்க முடியாதும்மா"



"அந்த மரியாதை அவங்களுக்கு இல்லையே? நாம இப்படி பொய் சொல்றோமேன்னு அம்மாவும் மகனும் நினைக்கலியே?"



"நாம அவங்க மேல தப்பு சொன்னா அவங்க நம்ம மேல தப்பு சொல்லுவாங்க! இப்படிப் பேசிக்கிட்டே போனா இதுக்கு ஒரு முடிவு ஏது? நல்லா யோசிச்சுப் பாருங்க?"



மௌனமானாள் கல்யாணி.



"ஐயா! நான் புறப்பட்டு வந்து நாலு மாசமாச்சு! இன்னும் அவரு வந்து என்னைப் பாக்கவே இல்ல! அவருக்கு என் மேல அக்கறையே இல்லாத போது நான் ஏன் சேர்ந்து வாழணும்? சொல்லுங்க?"



"நீ சொல்றது சரிதாம்மா! ஆனா அவன் ஃபோன் செஞ்சப்ப நீ எடுக்கவே இல்லியாமே? உனக்கு இன்னும் கோவம் தணியல்ல, நேரில வந்தா எங்க நீ துரத்தி அடிச்சிடுவியோன்னு பயந்து தான் அவன் வரல்ல"



"இதை நான் எப்படி நம்புறது?"



"வாரம் ஒரு தடவை அவன் எனக்கு ஃபோன் பண்ணி நான் ஊருக்கு வரட்டுமா மாமான்னு கேட்டுக்கிட்டே இருக்கான்ம்மா! நான் தான் அவங்களுக்கு இன்னமும் கோவம் தணியல! கொஞ்சம் பொறுத்து வான்னு சொல்லியிருக்கேன். நீ உம்முன்னு ஒரு வார்த்தை சொன்னாப் போதும் அவன் ஓடி வந்திடுவான்." என்றார் கணபதி.



"எனக்கு யோசிக்க கொஞ்சம் டயம் குடுங்க ஐயா! நானே ஃபோன் பண்ணிச் சொல்றேன்" என்றாள் கோமதி வந்தவர்கள் விடை பெற்றுப் புறப்பட்டனர். மகளைத் தனியே யோசிக்க விட்டு விட்டு கல்யாணி பக்கத்து வீட்டுக்குப் போய் விட்டாள்.



அப்பாவின் படத்துக்குக் கீழே அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தாள் அவள்.



"இனி நான் என்ன செய்யப் போகிறேன்? புருஷனை விட்டு விட்டு வந்தவள் வாழாவெட்டி என்று ஊர்க்காரர்கள் பேசுவார்கள். அது தான் போகட்டும் என்றால் பிறக்கப் போவது ஆணா? பெண்ணா? தெரியாது. அதை வளர்க்கவும், படிக்க வைக்கவும் துணைக்கு ஆண் என்று ஒருவன் வேண்டுமல்லவா? அவர் தவறு செய்தார். ஆனால் நானும் தானே அவரைப் பார்த்ததும் மாப்பிள்ளையைப் பற்றி விசாரிக்கக் கூட வேண்டாம் என்று கல்யாணத்துக்கு சம்மதித்தேன். அப்படியானால் நானும் தானே குற்றவாளி?"



வயிற்றில் குழந்தை மெல்ல அசைந்தது. உடல் கிளுகிளுப்பாக ஆனது.



"அவர் படிக்கவில்லையே தவிர என்னிடம் அன்பாகத்தானே இருந்தார்? பண விஷயத்தில் தான் அவர் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என் நகையைக் கூட எனக்காகத்தானே எடுத்தார்? தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் அதை மன்னிப்பது தெய்வீக குணம் என்று சொல்வார்களே? அவரை மன்னித்தால் என்னை தலையில் வைத்துத் தாங்குவார். ஆம்! அப்படித்தான் செய்ய வேண்டும். எத்தனை நாள் அம்மாவுக்கு பாரமாய் இருப்பது? என் குழந்தையை தகப்பன் இல்லாத குழந்தையாக இந்த சமூகத்தில் வளர விட மாட்டேன்." என்று முடிவு செய்து கொண்டாள்.



"என்ன முடிவு பண்ணியிருக்கே?" என்றாள் அம்மா.



"நான் அவரை மன்னிச்சு ஏத்துக்கிடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்மா! ஏன்னா என் குழந்தைக்கு அப்பா வேணும்"



"நீ செஞ்சது நல்ல முடிவு தான். ஆனா அப்படியே ஏத்துக்காதே! சில கண்டிஷன்கள் போடு"



"என்ன கண்டிஷன்?"



"சென்னையில உனக்கு வேலை ஈசியாக் கிடைக்கும். அதனால நீயும் வேலைக்குப் போவேன்னு சொல்லு! அதோட..."



இடை மறித்தாள் கோமதி.



"என்னம்மா நீ பேசுற? குழந்தையைக் கவனிக்காம என்னை வேலைக்குப் போகச் சொல்றியா?"



"சொல்ல வரதை முழுசாக் கேளு கோமதி! இனி நீ எங்க இருக்கியோ நானும் அங்க தான் இருக்கப் போறேன். நான் குழந்தையை கவனிச்சுக்கறேன். நீ வேலைக்குப் போ! அதோட ரொம்ப முக்கியமான விஷயம், உன் புருஷனை மாசாமாசம் இத்தனை பணம் கண்டிப்பா வீட்டுக்குக் குடுத்துடணும்னு சொல்லிடு. அப்பத்தான் நாளைக்கு உன் கையில காசு இருக்கும்"



"நீ சொல்றதும் சரி தான்! நான் அவரை வரச் சொல்லிட்டு இங்க வெச்சு இதெல்லாம் பேசிக்கலாம்"



"நீ பிள்ளைப் பெத்துப் போகும் போது உங்க வீட்டுப் பக்கத்துலயே எனக்கும் சின்னதா ஒரு போர்ஷன் பாக்கச் சொல்லு. நான் அங்க இருந்துக்கறேன். உங்கப்பா பென்ஷன்ல நான் என் காலத்தை ஓட்டிடுவேன். "



"நீ ஏம்மா தனியா இருக்கணும்? எங்க கூட இருக்கலாம் இல்ல?"



"அது சரி வராதும்மா! என்னை என் போக்குல விடு"



"அதுக்கு இல்லம்மா! அப்பா பென்ஷன்ல வாடகை குடுப்பியா? சாமான் வாங்குவியா? என்ன பண்ணுவ?"



"எல்லாத்துக்கும் நான் யோசனை வெச்சிருக்கேன். உனக்குத்தான் தெரியுமே நான் டிஃபன் ஐட்டமெல்லாம் நல்லாச் செய்வேன்னு. அதனால் வீட்டுலயே சமைச்சு ஆபீசுக்கோ இல்லை வீடுகளுக்கோ குடுக்கறா மாதிரி நான் செஞ்சுக்குவேன். என் தேவைக்கு என்னால சம்பாதிக்க முடியும்" என்றாள் கல்யாணி. முகம் இறுகியிருந்தது. குரலில் உறுதி.



அம்மாவை அணைத்துக் கொண்டு ஓவெனக் கதறி விட்டாள் கோமதி.



"என்னால தானேம்மா உனக்கு இந்த நிலைமை? நான் பாவி? ஏன் என்னைப் பெத்த? என்னால உனக்கு எந்த வகையிலும் மனசு நிம்மதி குடுக்க முடியலியே? என்னை மன்னிச்சிடும்மா"



"அசடு! கண்ணைத் துடை! சோர்ந்து போயி உக்காரக்கூடாது கோமதி. உங்கப்பா சாகும் போது உனக்கு 6 வயசு தான். கூடப் பொறந்தவங்க எல்லாரும் நான் அவங்களுக்கு பாரமாயிருவேனோன்னு பயந்து ஓடிட்டாங்க! உன்னை நெனச்சு நான் என் மனசைத் தேத்திக்கிட்டேன். இனி உனக்காக மட்டுமே வாழுறதுன்னு முடிவு பண்ணினேன். உனக்குத் தெரியாம இட்லி, தோசை வியாபாரம் செஞ்சேன் கோமதி. அதுல தான் உன்னைப் படிக்க வெச்சேன். இல்லைன்னா எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியாருக்கு வர ஃபேமிலி பென்ஷன் நம்ம ரெண்டு பேருக்கும் எப்படிப் போதும் சொல்லு?"



அன்று தான் அம்மாவைப் புதிதாகப் பார்ப்பது போலப் பார்த்தாள் கோமதி. அவளது மதிப்பில் அம்மா இன்னும் இன்னும் உயர்ந்தாள்.



"நீ வேலைக்குப் போன உடனே என் வியாபாரத்தை நிப்பாட்டிட்டேன். திருப்பி அதைச் செய்யறது ஒண்ணும் எனக்கு கஷ்டமில்ல! நீ நல்லா வாழணும் அதான் என் ஆசை" என்றாள்.



அம்மாவின் அன்பில் தன்னை மறந்தாள் கோமதி.



ஃபோன் செய்த இரண்டாம் நாளே வந்து விட்டான் ராகவன்.



"கோம்ஸ்! கோம்சுக்குட்டி" என்று கத்தியபடியே வந்தான். எதுவுமே நடக்காதது போல இருந்தது அவனது நடவடிக்கைகள். அம்மாவுக்குப் புடவை, இவளுக்குப் புடவை, விதம் விதமான இனிப்புகள் எனக் கடை விரித்தான்.



"அத்தை! இந்தக் கலர் உங்களுக்கு ரொம்ப நல்லாயிருக்கும்! ஏன்னா கோமதியை விட நீங்க நல்ல கலர். அதான் உங்களுக்கு டார்க் கலரா வாங்கிட்டு வந்தேன்" என்றான்.



"இதப்பாருங்க! என் மக முகத்துக்காகத்தான் நான் உங்களை சகிச்சுக்கிட்டு இருக்கேன். என்னை ஐஸ் வெச்சு ஏமாத்தாலாம்னு கனவு காணாதீங்க! இந்த சாலாக்குப் பேச்செல்லாம் எங்கிட்ட வேண்டாம்" என்று சொல்லி விட்டு விருட்டென உள்ளே போய் விட்டாள்.



ராகவனா அசருவான் இதற்கு?



"அத்தைக்கு என் மேல கோவம் இன்னமும் தீரல்ல போலிருக்கு. அதனால என்ன? இன்னும் ரெண்டே மாசத்துல என் குழந்தை வெளிய வந்து பாட்டியை உதைப்பான். அப்ப என்ன செய்வாங்க உங்கம்மா?" என்றான்.



கோமதியால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.



டிஃபன் காப்பி சாப்பிட்ட பிறகு மெதுவாக அவனிடம் பேசினாள். கண்டிஷன்களைச் சொன்னாள். கோபப்படுவான் என்று நினைத்தவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தான்.



"எல்லாமே நானே சொல்லணும்னு நெனச்ச விஷயம் தான் கோமதி! உங்கம்மா நம்ம கூட இருந்தா உனக்கும், குழந்தைக்கும் ரொம்பப் பாதுக்காப்பு! நீ வேலைக்குப் போறது நல்லது தான். படிச்சுட்டு எதுக்கு சும்மா வீட்டுல உக்காரணும்? எனக்கு எல்லாமே சம்மதம்" என்றான் சிரித்துக் கொண்டே.



மனதில் மகிழ்ச்சி பரவியது கோமதிக்கு.



"உங்கம்மாவால தன் நீங்க கெட்டுப் போய்ட்டீங்க! அவங்க நம்ம வீட்டுக்கு வராம இருந்தாலே போதும்" என்றாள்.



"ஆமா கோம்ஸ்! அவங்களால தான் நான் இப்படி ஆனேன். இல்லைன்னா ஒழுங்க படிச்சு ஒரு வேலையில இருந்திருப்பேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே வக்கீலுக்குப் படிக்கணும்னு ஆசை! ஆன எங்கம்மா என்னைப் படிக்க விடாம கடைக்கு வேலைக்குப் போ! மெக்கானிக் கிட்ட தொழில் கத்துக்கோன்னு அனுப்புவாங்க! அதனால தான் என்னால படிப்புல கவனம் செலுத்த முடியல்ல! நீ மட்டும் என் வாழ்க்கையில வரலைன்னா என் கதி அதோ கதி தான் கோம்ஸ்" என்றான் பரிதாபமாக.



"இவருக்குத்தான் என் மேல் என்ன பாசம்? இனிமேல் எல்லாமே நல்லபடியாக நடக்கும்" என்று நம்பினாள் கோமதி. வயிற்றில் இருந்த குழந்தை அம்மாவை உதைத்தது. அதைக் காட்டினாள் கணவனுக்கு. இருவரும் சேர்ந்து சிரித்ததில் அந்த வீட்டில் நிம்மதி மீண்டது.
Nice ep
 

Advertisement

Top