Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றில் வரைந்த ஓவியம் ..5...

Advertisement

அத்தியாயம் 5.



கணவனிடம் தான் அம்மாவாகப் போகும் விஷயத்தைச் சொன்னாள். அவன் கோமதியைத் தூக்கிச் சுற்றினான். அவளை மெதுவாக கீழே இறக்கினான்.

"கோம்ஸ்! நிஜமாவா சொல்ற? நான் அப்பாவாகப் போறேனா? எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா! எனக்குன்னு ஒரு குழந்தை, எனக்குன்னு ஒரு குடும்பம். கேக்கவே கவிதையா இருக்கு இல்ல? பொண்ணு பொறந்தாலும் சரி, பையன் பொறந்தாலும் சரி நான் அதை டாக்டருக்குப் படிக்க வெக்கப் போறேன். இப்பவே போயி அதுக்கு வேணும்ங்கிற துணியெல்லாம் வாங்கிட்டு வரலாம் வா" என்றான்.



சிரித்து விட்டாள் கோமதி.



"என்னங்க இது? இப்பத்தான் 40 நாள் ஆகியிருக்கு, அதுக்குள்ள நீங்க எங்கியோ போயிட்டீங்களே?"



"முதல்ல அம்மாவுக்கு ஃபோன் போட்டு வரச் சொல்லணும். இனிமே நீ வேலையே செய்யக் கூடாது! ராணி மாதிரி நீ ஆர்டர் போடு! என்ன?" என்றான்.



"ஏங்க அத்தையை தொந்தரவு பண்ணணும்? வேண்டாம் வேண்டாம்! இங்க ஒண்ணும் வேலை அத்தனை அதிகம் இல்ல! உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் உக்காருங்க" என்றாள். அவள் முகம் சீரியசாக இருக்கவே அவனும் பேசாமல் அமர்ந்தான்.



"நமக்குக் குழந்தை பிறக்கப் போவுது! இனியும் விளையாட்டுத்தனமா இருக்கறது நல்லதில்லீங்க! முதல்ல என்னை டாக்டர் கிட்ட காமிக்கணும். டானிக்கு, தடுப்பூசி, சத்து மாத்திரைன்னு அதுவே நிறைய செலவாகும். பிரசவத்துக்கு நான் எங்கம்மா வீட்டுக்குத்தான் போவேன். இருந்தாலும் கையில கொஞ்சம் பணம் இருந்தா நல்லது தானே?"



"அதைப் பத்தியெல்லாம் யோசிச்சு நீ ஏன் கண்ணம்மா கவலைப் படற? நான் நெனச்சா மாசம் ரெண்டு லட்சம் சம்பாதிக்க முடியும். உனக்குத் தெரியாதா என்ன?"



"உங்க திறமை எனக்குத் தெரியும்ங்க! ஆனா கொஞ்சம் விளையாட்டுத்தனமா இருக்கக் கூடாதுங்கறேன். மாசாமாசம் நிலையா ஒரு வருமானம் வரா மாதிரி ஏற்பாடு பண்ணுங்க! அப்பத்தானே நாம திட்டமிட முடியும்"



"செய்யறேன் கோம்ஸ்! கண்டிப்பா செய்யறேன். நானே வேலை தேடிக்கலாம்னு தான் இருந்தேன். அதுக்குள்ள நீயே சொல்லிட்ட! நாளையில இருந்து வேலை தேடும் படலம் ஆரம்பம்" என்றான் நாடக பாணியில்.



"அந்தக் கஷ்டம் கூட உங்களுக்கு வேண்டாம்! பக்கத்து வீட்டு மாலதியக்கா வீட்டுக்காரர் கிட்ட நான் சொல்லி வெச்சிருந்தேன். அவரு நல்ல வேலை ஒண்ணு சொன்னாரு."



"என்ன வேலை?"



"அவங்க கம்பெனிக்கே லீகல் அட்வைசர் தேவைப்படுதாம். தெரிஞ்ச வக்கீல் யாராவது இருந்தாச் சொல்லுங்கன்னு ஆபீஸ்ல அவருகிட்ட சொல்லியிருந்தாங்களாம். உடனே உங்க ஞாபகம் வந்துட்டுது அவருக்கு. உங்களை வந்து பாக்கச் சொன்னாரு ஆபீசுல."



முகத்தில் கோபம் கொப்பளிக்க கையில் இருந்த காப்பிக் கோப்பையைத் தூக்கி அடித்தான். திடுக்கிட்டவளாக பயந்து போய்ப் பார்த்தாள்.



"என்னங்க..."



"பேசாதே! என் புருஷனுக்கு வருமானம் பத்தாது! அவனால குடும்பத்தைக் காப்பாத்த முடியல்ல! நீங்க ஏதாவது வேலை வாங்கிக் குடுங்கன்னு போயி அவன் கால்ல விழுந்து கெஞ்சியிருப்ப! நம்ம ஊர்ல தான் பொம்பளைங்க சொல்லிட்டாப் போதுமே உடனே வரிஞ்சி கட்டிக்கிட்டு உதவி பண்ணுவானுங்களே! உனக்கு என்ன திமிரு?"



தன்னை எதற்குத் திட்டுகிறான் என்றே புரியவில்லை கோமதிக்கு.



"ஏங்க! தெரிஞ்சவங்க கிட்ட வேலைக்கு சொல்லி வெக்கிறது தப்பா? நீங்க தானே வேலை தேடப் போறேன்னு சொன்னீங்க? எதுக்கு இப்படி கோவப்படறீங்க? அப்படி நான் என்ன தப்பு செஞ்சேன்?"



"நீ இப்ப மாசமா இருக்கறதால தான் பேசாம இருக்கேன். இல்ல அடிக்கிற அடியில தாடை கழண்டுரும். ஏண்டி என்னால சம்பாதிக்க முடியாதுன்னு நெனச்சியா? நான் நெனச்சா மாசம் ரெண்டு லட்ச ரூவா உன் கையில குடுக்க முடியும். தெரியுமா? சே! எத்தனை சந்தோஷமா இருந்தேன்! எல்லாத்தையும் குலைச்சுட்டா. எதுக்குடா வீட்டுக்கு வரோம்னு இருக்கு" என்றபடி மீண்டும் வெளியே போய் விட்டான்.



ஸ்தம்பித்தவளாக அமர்ந்திருந்தாள் கோமதி.



"எதுக்கு என்னை அடிப்பேன் உதைப்பேன்னு சொல்லிட்டுப் போறாரு? தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வேலை வாங்கித்தரேன்னு சொன்னது ஒரு தப்பா? எதுக்கு இத்தனை ஈகோ? ஒரு வேளை ஏற்கனவே வேலை கெடச்சிடிச்சோ? அப்படியானா அதைச் சொல்ல வேண்டியது தானே? வக்கீலுக்குப்ப படிச்சா லீகல் அட்வைசர் வேலை கெடைக்கலையேன்னு எல்லாரும் ஏங்குவாங்க! இவர் என்னடான்னா...இப்படி கோவப்படறாரே? அடிக்கவும் துணிவாரோ?" என்று கலங்கியபடி இருட்டில் உட்கார்ந்திருந்தாள்.



எட்டு மணிக்கு ராகவன் திரும்பி வரும் வரை லைட் போட வேண்டும் என்று தோன்றவில்லை அவளுக்கு.



"கோம்ஸ்! சாரிம்மா! ஏதோ ஒரு கோவத்துல உன்னைக் கண்டபடி திட்டிட்டேன். ஐ ஆம் சாரிடா செல்லம்! எங்கிட்டக் கோவமா? தெரியாம திட்டிட்டேண்டா! இங்க பாரு உனக்கு பிடிச்ச ஜாங்கிரி வாங்கிட்டு வந்திருக்கேன். நல்ல செய்தி சொல்லியிருக்க ஒரு வாய் சாப்பிடுடா கண்ணு" என்று கொஞ்சினான்.



மனம் இளகியது கோமதிக்கு.



"சே! பாவம் இவர்! எவ்வளவு கெஞ்சுகிறார்? நாம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து தான் போவோமே" என்ற எண்ணம் தோன்ற கணவனை நோக்கி ஒரு புன்முறுவல் பூத்தாள்.



"அப்பா! இப்பத்தான் மனசு நிம்மதியாச்சு! இந்தா கொஞ்சம் ஜாங்கிரி சாப்பிடு" என்று ஊட்டினான்.



"கோம்ஸ்! உன்னைத் திட்டணும்கிற எண்ணமே எனக்கு இல்ல! ஆனா நீ என்னென்னவோ பேசவே எனக்குக் கோவம் வந்திரிச்சு. அதான் கத்திட்டேன். "



"அப்படி நான் ஒண்ணும் எதுவும் தப்பா சொல்லலையேங்க! மாலதியக்கா வீட்டுக்காரர் நம்ம நல்லதுக்குத்தானே சொன்னாரு? இப்பவே நீங்க சம்பாதிக்கிறது நமக்குப் போதும் போதாமையுமா இருக்கு. குழந்தைன்னு வந்திட்டா எவ்வளவு செலவு தெரியுமா? அப்பப் போயி யார்கிட்ட கேட்டுக்கிட்டு நிக்கறது? அது தான் உங்களை வேலைக்குப் போகச் சொன்னேன். உங்களுக்குக் கோவம் வந்திடிச்சு"



"மறுபடியும் மறுபடியும் அதையே சொல்றியே? நான் எதுக்குக் கோவப்பட்டேன்னு கூட உனக்குத் தெரியல்ல பாரு! நீ கிராமத்துல வளர்ந்ததால சிட்டியோட தன்மை உனக்குப் புரியல்ல! இங்க நம்ம வீட்டு விஷயத்தை மத்தவங்க கிட்ட சொல்லக் கூடாதும்மா! அப்படிச் சொன்னா அதையே மத்தவங்க கிட்ட சொல்லிக் கேலி பண்ணுவாங்க! அது மட்டுமில்ல, இந்தப் பொண்ணு புருஷன் கூட சந்தோஷமா வாழல்ல! அதனால நாம முயற்சி பண்ணலாம்னு அலைவானுங்க! இதை யோசிச்சுத்தான் சொன்னேன். புரிஞ்சதா?"



"மாலதியக்கா புருஷன் அப்படி இல்ல! இருந்தாலும் நீங்க சொல்றீங்க அதனால கேக்குறேன்"



"ஆங்க்! இது எவ்வளவு நல்லா இருக்கு?"



அவனைப் பார்த்து சிரித்தாளே தவிர மனதில் ஒரு மூலையில் வண்டு குடைந்து கொண்டே இருந்தது.



நாட்கள் நகர்ந்தன. டாகடரிடம் ஒரு முறை போனதோடு சரி. அப்புறம் மாதா மாதம் செக்கப்பிற்குக் கூட்டிப் போகவில்லை அவன். டாக்டர் கொடுத்த அட்டையில் இன்னமும் அவளுக்கு மூன்று தடுப்பூசிகள் போட வேண்டி இருந்தது. ஒவ்வொன்றும் விலை 500, 300 என்று இருந்தது. இப்போது நான்கு மாதம் முடிந்து விட்டது. ஆனால் கோமதிக்கு குமட்டல், வாந்தி என்று எதுவுமே இல்லை. அதுவும் கொஞ்சம் பயமாக இருந்தது. அம்மாவிடம் சொன்னால் பயந்து விடுவாள் என்று மாலதியிடம் பேசினாள்.



"சில பேருக்கு குமட்டல் இருக்கவே இருக்காதுடி கோமதி! அதனால கவலைப் படாத! ஆனா இப்படி டாக்டர் கிட்டப் போகாம இருக்கிறது நல்ல தில்லை. நாலாம் மாசம் ஒரு ஸ்கேன் எடுத்துப் பாப்பாங்க! அப்புறம் நிறைய இரும்புச் சத்து டானிக், வைட்டமின் மாத்திரை குடுப்பாங்க. அதையெல்லாம் சாப்பிட்டாத்தான் குழந்தை ஆரோக்கியமாப் பொறக்கும்" என்றாள்.



ராகவன் வந்த உடனே அதைப் பற்றிப் பேச்சை ஆரம்பிக்காமல் இரவு உணவை பரிமாறி விட்டுப் பேசினாள்.



"என்னங்க! டாக்டர் கிட்டப் போகணும்! தடுப்பூசி போடணும்னு நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீங்க கூட்டிக்கிட்டே போக மாட்டேங்கறீங்களே? உங்களுக்கு வேலை இருந்தா நீங்க வர வேண்டாம். நானே போயிக்கறேன். ஆனா என் கையில காசு இல்லியே! அதனால தான் உங்களை எதிர்பாக்கறேன்" என்றாள்.



"எப்பப் பாத்தாலும் காசு, பணம் இதான் உனக்கு. எவ்வளவு குடுத்தாலும் பத்த மாட்டேங்குது. நான் என்ன பணம் காய்க்கிற மரமா வெச்சிருக்கேன்? நீ கேட்ட போதெல்லாம் பறிச்சுத்தர? போன வாரம் தானே 500 ரூவா குடுத்தேன்? அதை என்ன செஞ்ச?"



மனம் வலித்தது கோமதிக்கு. அவள் பிறந்த வீட்டில் ஆஹா ஓஹோவென வசதி இல்லையென்றாலும் தேவைக்கு பணம் இருக்கத்தான் செய்தது. இப்படி ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடும் நிலை இல்லை.



"ஐநூறு என்ன பெரிய பணமாங்க? அரிசி வாங்கணும், எண்ணெய் வாங்கணும், ஒவ்வொண்ணும் என்ன விலை விக்குது தெரியுமா? பருப்பு வாங்கக்கூட காசு இல்ல! அதைப் பத்தி நான் உங்க கிட்ட சொல்லவேயில்லையே? ஆனா இப்படி டாக்டர் கிட்டக் கூட கூட்டிக்கிட்டுப் போகலைன்னா அப்புறம் எப்படிங்க?"



"மனுஷனை நிம்மதியா இருக்க விடுறியா? பணப்பிசாசு! அப்படி உனக்கு வேணும்னா உங்க அம்மாவுக்கு எழுதி பணம் வாங்கிக்கோ. எங்கிட்ட இல்லை. ஏன் நீ வேலை பார்த்தியே? அப்ப பத்து காசு கூட சேர்த்து வைக்கலியா? எல்லாத்துக்கும் நான் தான் கெடச்சேனா?" என்றான்.



"நல்லா இருக்கே நீங்க சொல்றது? கல்யாணம் பேசும் போது மாசம் 80,000 ரூவா சம்பாதிக்கறேன் பெரிய வீடு இருக்குன்னு பேசினீங்க? ஒரு ஐநூறு ரூவா குடுத்துட்டு மாசம் ஃபுல்லா சமாளிங்கறீங்க! பொண்டாட்டியை டாகடர் கிட்டக் கூட்டிக்கிட்டுப் போக யோசிக்கறீங்க! அப்படி உங்களுக்கு என்ன தான் பிசினசு? எங்கிட்ட எதையுமே சொல்ல மாட்டேங்கறீங்க?"



கட்டிலிருந்து எழுந்து அமர்ந்தான்.



"நீ என்ன பெரிய அறிவாளியா? உங்கிட்ட நான் என்ன பிசினஸ் பண்றேன்னு சொன்னா உனக்கு எல்லாம் புரிஞ்சிடுமா? என்னோட பிசினஸ்ல மாசம் 80,000 ரூவா பணம் வந்துக்கிட்டு தான் இருந்தது. உன்னைக் கல்யணம் கட்டின நேரம் தரித்திரம் பிடிச்சு ஆட்டுது" என்றான்.



கோபம் வந்தது கோமதிக்கு.



"பொய் சொல்லாதீங்க! கல்யாணமான உடனே என்னைக் கூட்டிக்கிட்டுப் போனீங்களே வீடு! அது மாசம் 80,000 சம்பாதிக்கறவன் வீடு மாதிரி இல்லையே? ஏதோ அன்னாடங்காய்ச்சியோட வீடு மாதிரி இருந்தது."



"எனக்கு ஆடம்பரம் பிடிக்காது! அதனால சின்ன வீட்டுல இருந்தேன்"



"அப்படீன்னா நிறையப் பணம் சேர்த்து வெச்சிருக்கணுமே? அதுலருந்து எடுத்து செலவு பண்ணலாமே? ஏன் கோவப்படணும்?" என்றாள்.



ராகவன் முகம் இறுகியது.



"இதப்பாருடி! என்னால இவ்வளவு தான் சம்பாதிக்க முடியும். இஷ்டமிருந்தா இரு! இல்லைன்னா உங்க ஆத்தா வீட்டுக்குப் போயிட்டே இரு! அதை விட்டுட்டு என்னைப் பார்த்து கேள்வி கேக்காத எனக்குப் பிடிக்காது" என்று சொல்லிவிட்டு முதுகைக் காட்டி படுத்துக் கொண்டு விட்டான். அழுகை வர அவளும் படுத்தவள் களைப்பு மிகுதியால் உறங்கி விட்டாள்.



ராகவன் எதுவுமே நடக்காதது போல இருந்தான்.



"இன்னைக்கு சாயங்காலம் தயாரா இரு! டாக்டர் கிட்டப் போகலாம்" என்று மட்டும் சொன்னான். சொன்னது போலவே டாக்டரிடம் அழைத்துப் போனான். அவரும் பார்த்து விட்டு டானிக்குகள், மாத்திரைகள் எழுதிக் கொடுத்து விட்டு ஊசியும் போட்டாள். நிறையக் காய்கறிகள் பழங்கள் சாப்பிடச் சொன்னார்.



மார்க்கெட்டில் ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்களையும் சத்தான காய்கறிகளையும் வாங்கிக் கொண்டு வீடு வந்தனர். மகிழ்ச்சியாகவே இருந்தாள் கோமதி. அவ்வப்போது கத்துகிறார், ஆனால் மனதில் என் மேல் நிறைய அன்பு. அதை வெளிக்காட்டத் தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டாள்.



ஞாயிற்றுக் கிழமை பீச்சுக்குப் போய் விட்டு அஷ்ட லட்சுமி கோயிலுக்கும் போய் விட்டு வரலாம் எனக் கிளம்பினர். அன்று என்னவோ தன்னை அழகாக அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது கோமதிக்கு. அழகான பட்டுப்புடவை கட்டு கண்களுக்கு மையிட்டு தலையில் நிறையப் பூ வைத்துக் கொண்டாள். கைகளில் ஒரே ஒரு வளையல் தான் இருந்தது. பீரோவில் கழற்றி வைத்திருந்த மற்ற நான்கு வளையல்களையும் போட்டுக் கொள்ளலாம் என நினைத்துத் திறந்தாள்.



அதிர்ச்சியில் அவள் உடல் குலுங்கியது. இரண்டே இரண்டு வளையல்கள் தான் இருந்தன. கனமான இரண்டு வளையல்களைக் காணோம். பதறினாள் கோமதி. யார் எடுத்திருக்கக் கூடும்? யாரும் வீட்டுக்குள் வரவே இல்லையே? வேலைக்காரி கூட இல்லை! திருடன் யாராவது வந்திருந்தால் கூட மொத்தமாக எடுத்துப் போவானே தவிர இப்படி இரண்டே இரண்டு வளையலையா எடுப்பான். பக்கத்தில் நெக்லசு, சங்கிலி எல்லாமே அப்படியே இருந்தது.



"என்னங்க! என்னோட ரெண்டு வளையலைக் காணோம்ங்க! ஒவ்வொண்ணும் ஒரு பவுன். வாங்க போலீஸ்ல போய் சொல்லிட்டு வருவோம்" என்றாள் பதறியபடி.



ராகவன் அலட்சியமாக இருந்தான்.



"எங்கியாவது உருண்டு போயிருக்கும் கோம்ஸ்! ரெண்டு பவுன் போனதுக்கு யாராவது போலீஸ்ல புகார் குடுப்பாங்களா? நல்லாத் தேடிப் பாரு இருக்கும். இல்லைன்னா பக்கத்து வீட்டுப் பொம்பளை உன் ஃபிரெண்டு மாலதி எடுத்திருக்கும்" என்றான் கொஞ்சமும் அக்கறை இல்லாமல். எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை வளையல்கள். வேறு வழியின்றி அவனோடு கோயிலுக்குச் சென்றாள். கொஞ்சமும் நிம்மதி இல்லாமல் இருந்தது மனது.



"மாலதியக்கா எடுத்திருப்பாங்களா? சேச்சே! அவங்களுக்கு என்ன குறை? காசு இல்லையா? பணம் இல்லையா? திருட வேண்டிய அவசியம் அவங்களுக்கு கிடையாது" என்று யோசித்தபடியே உறங்கிப் போனாள்.



சில நாட்கள் கழித்து ராகவனின் துணிகளைத் துவைக்கும் போது பாக்கெட்டில் இருந்த ரசீது கண்ணில் பட்டது. இரண்டு வளையல்களை அடகு வைத்துப் பணம் பெற்றுக் கொண்டதற்கான ரசீது அது. தலையில் கை வைத்து மூலையில் அமர்ந்து விட்டாள் கோமதி. கண்கள் கலங்கி கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.
Nice ep
 
Top