Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றில் வரைந்த ஓவியம் 4....

Advertisement

அத்தியாயம் 4.



சென்னைக்கு வந்து இறங்கி விட்டார்கள் புது மணமக்கள். தான் வாழப் போகும் வீடு எப்படியெல்லாம் இருக்கும் என்ற கற்பனையில் ஆழ்ந்திருந்தாள் கோமதி. பாத்திர பண்டங்களையெல்லாம் இறக்கி டாக்சி பிடித்து சென்றார்கள். ஒவ்வொரு முறையும் நிறைய வீடுகள் இருக்கும் தெருவைக் கடக்கும் போது இந்தத் தெருவா? இந்தத் தெருவா என எதிர்பார்த்தாள்.



"என்னங்க? இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?"



"இதோ வந்திடிச்சி கோம்ஸ்! இந்தத் தெரு தான் நிறுத்துப்பா" என்றான் ராகவன்.



கீழே இறங்கினாள். மிகவும் குறுகலான தெரு. எதிரே ஒரு குப்பைத் தொட்டி நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. வீட்டு வாசலைப் பெருக்கிக் கொண்டிருந்தனர் பல பெண்கள். யாரும் இவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை. எல்லா வீடுகளும் அரதப் பழசாகத் தோன்றின. ஆங்காங்கே ஒரு சில வீடுகள் மூன்று மாடிகள் கட்டப்பட்டு புதிதாக இருந்தன. பக்கத்தில் இருந்த அதே போன்ற ஒரு வீடு தான் என நினைத்து அதை நோக்கி அடியெடுத்து வைத்தாள் .

"அங்க எங்கே போற? இது தான் நம்ம வீடு" என்று காண்பித்தான் ராகவன். அவன் சுட்டிக் காட்டியது குறுகலான படிகள் கொண்ட வெள்ளையடித்துப் பல வருடங்கள் ஆன ஒரு வீடு. விக்கித்துப் போனாள் கோமதி.



"என்னங்க." என்று ஆரம்பித்தவளை நெருப்புப் பார்வை பார்த்தாள் மாமியார் மரகதம்.



"இந்தா இது சென்னை! இங்க இந்த மாதிரி தான் வீடு இருக்கும். இதுக்கே வாடகை நாலாயிர ரூவா தெரியுமா? சும்மா கேள்வி கேக்காதே! நீ தான் பாத்திரங்களைத் தூக்கிக்கிட்டுப் போகணும்" என்றாள் சிடுசிடுவென.



அழுகையே வந்து விட்டது அவளுக்கு.



"முத முத புகுந்த வீட்டுக்கு வரேன். அக்கம் பக்கத்துல இருக்கறவங்க யாரும் ஆரத்தி எடுக்க மாட்டாங்களா அத்தை?" என்றாள் பரிதாபமாக.



"இது என்ன கிராமமா? அக்கம் பக்கத்தவங்க யாருன்னே எங்களுக்குத் தெரியாது. பேசாம உள்ள வா! வேணும்னா வலது காலை எடுத்து வெச்சு வான்னு நான் சொல்றேன்." என்று சொல்லி விட்டு மாடிக்கு விரைந்து விட்டாள் மரகதம்.



மனதைத் தேற்றிக் கொண்டு வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றாள். மனது அம்மாவை நினைத்து ஏங்கியது. எத்தனையோ கேள்விகள் மனதில் தோன்றின. எல்லாவற்றையும் நிதானமாகக் கேட்கலாம் என நினைத்து வீட்டினுள் நுழைந்தாள். அங்கும் அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சுவர்கள் வெளிறிய நிறத்தில் ஆங்காங்கே மூட்டைப் பூச்சிக் கறைகளோடு இருந்தன. மெல்லிய முடை நாற்றம் வேறு. ஒரே ஒரு ரூம் பிறகு சமையலறை. அத்தனை தான் வீடே. சமையலறையில் பாத்திரங்களும் மிகக் குறைவாக இருந்தன.



கோமதி கற்பனை செய்து வைத்திருந்த வீட்டுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. ஃபோன் ஒலிக்க எடுத்தாள். அம்மா தான்.



"கோமதி! வீட்டுக்குப் போயிட்டியாம்மா? வீடு வசதியா இருக்கா? அக்கம் பக்கத்தவங்க நல்லாப் பழகுறாங்களா?" என்று கேள்விகளாக அடுக்கினாள் அம்மா. எதற்கும் பதில் சொல்ல முடியாமல் கேவல் வெடித்து வந்தது. அம்மா என்று அழுதுவிட்டாள்.

"என்னடி கோமதி? என்ன ஆச்சு? எதுக்குடி அழற?" என்று பதறினாள் கல்யாணி மறுமுனையில்.



தொண்டையில் பந்து போல சோகம் அடைக்க பதில் சொல்ல முடியாமல் மேலும் கேவினாள். அம்மாவின் தவிப்பு அதிகமானது. ராகவன் ஃபோனைப் பிடுங்கினான்.



"அது ஒண்ணுமில்ல அத்த! உங்க நினைவாகே இருக்கா கோமதி அதான். இது வரைக்கு உங்களைப் பிரிஞ்சதே இல்லையே? அந்த ஏக்கம் தான் அவளுக்குப் பாவம். எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாயிடும். இங்க நிறையப் பேர் அவளைப் பாக்க வந்திருக்காங்க. நாங்க அப்புறம் பேசுறோம்" என்று சொல்லி ஃபோனைக் கட் செய்தான். அவனை வெறிக்கப் பார்த்தாள்.



"கோம்ஸ்! பிளீஸ்! சின்ன விஷயத்தைப் பெரிசாக்காதே! நானும் அம்மாவும் மட்டும் தானேன்னு சின்ன வீட்டுல இருந்தோம். இப்ப நீ வந்துட்ட இல்ல? இன்னும் ஒரே வாரத்துல நல்ல வீடு பார்த்து உன்னைக் குடிவெச்சிடறேன்,. போதுமா? இதுக்குப் போய் அழுதுக்கிட்டு. இது என்ன நம்ம சொந்த வீடா? காலி செய்ய முடியாதுன்னு நினைக்க" என்றான் ஆதரவாக.



மனம் சமாதானம் ஆனது. என்ன இது? சிறுகுழந்தைத்தனமாக நடந்து கொண்டு விட்டோமே என்று வருந்தினாள்.



"வந்து வந்து..ஐ ஆம் சாரிங்க! நான் கிராமத்தை விட்டு எங்கியும் வந்ததில்லையா? அதான். சினிமாவுல சென்னையின்னு அகலமான ரோடு, பெரிய பெரிய வீடுகள்னு காமிப்பாங்களே" என்றாள் அப்பாவியாக.



"கிராமத்தைக் கூடத்தான் வேற மாதிரி காட்டறாங்க ஆனா உங்க கிராமம் அப்படியியா இருந்திச்சி? செல்ஃபோன் என்ன? ஐபேட் என்னன்னு ஜொலிக்குது. அத மாதிரித்தானே இதுவும். இதுக்குப் போயி என்ன அழுகை" என்றாள் மரகதம் கடுமையாக.



அந்த வீட்டில் மூன்று நாட்களைத் தள்ளுவதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது கோமதிக்கு. மாலை ஆனால் பீச்சுக்குக் கூட்டிப் போவான் ராகவன். அது ஒன்று தான் ஆறுதல் அவளுக்கு. வேறு வீடு துரைப்பாக்கம் என்ற இடத்தில் பார்த்து விட்டேன். என்று சொல்லி அழைத்துப் போய்க் காட்டினான். வீடு அழகாக பெரிதாக இருக்கவே நிம்மதியாக மூச்சு விட்டாள் கோமதி.

புது வீட்டில் இவர்களைக் குடிவைத்து விட்டு மரகதம் பெரிய மகன் வீட்டுக்குப்போகிறேன் என்று புறப்பட்டு விட்டாள். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது கோமதிக்கு. அம்மாவிடம் நிறையப் பேசினாள். பழைய வீட்டைப் பற்றி அதிகம் பேசாமல் புது வீட்டுக்குப் பால் காய்ச்சியதைப் பற்றி மட்டும் சொன்னாள். அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான் ராகவன். அவன் வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டான். இவள் கொண்டு வந்திருந்த பாத்திரங்கள் கிச்சனில் இடம் பிடித்தன. அரிசி பருப்பு என அனைத்தையும் அனுப்பியிருந்தாள் அம்மா. அதனால் காய்கறி மட்டும் வாங்கினாள் தன் கையில் இருந்த பணத்தைக் கொண்டு. இன்றோடு அதுவும் காலி.



"என்னங்க! நீங்க வீட்டுக்குப் பணம் குடுக்கவே இல்லையே? காய்கறி எண்ணெய் மளிகை எல்லாம் வாங்க வேண்டாமா?" என்றாள்.



ஒரு கணம் திடுக்கிட்டவன் சுதாரித்துக் கொண்டான்.



"உம்! சாயங்காலம் கொண்டு வரேன். நான் கிளம்பறேன் கோம்ஸ்!" என்றான்.



"நான் கேக்கணும்னு நெனச்சேன். உங்க கறுப்பு கோட்டு எங்கே? வக்கீல் ஆபீசுக்குப் போறீங்க? ஆனா கோட்டு இல்லாமப் போறீங்களே? நீங்க கறுப்புக் கோட்டுப் போட்டு நான் பாக்கணும்னு ஆசையா இருக்கு" என்றாள்.



மீண்டும் திடுக்கிட்டான்.



"இந்த ஊர்ல அடிக்கிற வெயிலுக்கு கறுப்புக் கோட்டு போட்டுக்கிட்டு பைக்கில போக முடியுமா? அதான் என்னோட ஆபீஸ்லயே வெச்சிருக்கேன். அங்க போயி போட்டுப்பேன்" என்று கூறி விட்டு நிற்காமல் கிளம்பி விட்டான்.



ஒரு மாதிரியாக சென்னை வாழ்க்கை பழகி விட்டது. அதோடு ராகவனின் இயல்பும் கொஞ்சம் புரிபட்டு விட்டது. பணம் கிடைத்தது என்றால் கோமதிக்குப் புடவை, தனக்கு நல்ல சட்டை, செல்ஃபோன் அது இது என்று செலவழிப்பான். கொஞ்ச நாள் கழித்து வீட்டுச் செலவுக்குப் பணம் கேட்டால் இல்லை என்று எரிந்து விழுவான். மற்றபடி மனைவியிடம் அன்பாகத்தான் இருந்தான். அக்கம்பக்கத்தவர்கள் ஒரளவு பழக்கமானார்கள். பக்கத்து வீட்டில் இருந்த மாலதி உற்ற தோழியானாள். அவளும் கிராமத்தைச் சேர்ந்தவள் என்பதால் இருவரும் இயல்பாக பழகினர். அவளது கணவனுக்கு பிரைவேட் கம்பெனி ஒன்றில் பெரிய வேலை. எல் கேஜி படிக்கும் ஒரு மகள் என அளவான அழகான குடும்பம். மாலதியோடு மனம் விட்டுப் பேசுவாள் கோமதி.



அப்போது தான் தன் கணவன் நன்றாக சம்பாதிக்கிறான் ஆனால் நிலையான வருமானம் இல்லாமல் அவ்வப் போது பணம் கொடுக்கிறான் என்று கூறினாள்.



"அப்படி மட்டும் செய்ய விடாதே கோமதி! இப்ப நீங்க ரெண்டு பேர் தான் அதனால பெருசாத் தெரியாது. நாளைக்கு ஒரு குழந்தை பிறந்து அதுக்கு உடம்பு சரியில்லைன்னா டாக்டர் கிட்டப் போகக் கூட கையில காசு இல்லைன்னா என்ன பண்ணுவீங்க? அடுத்தவங்களை எதிர்பார்த்தா நல்லா இருக்குமா? சொல்லு?"



"நான் என்னக்கா செய்ய?"



"என்னிக்கு எவ்வளவு பணம் கிடைக்குதோ அதை அப்படியே உங்கையில கொடுக்கச் சொல்லு! நீ ஒரு வங்கிக் கணக்கு ஆரம்பிச்சிடு. தேவைக்கு எடுத்துக்கிட்டு மிச்சப் பணத்தை பேங்குல போட்டு வெச்சா உதவியா இருக்குமே?" என்றாள்.



"அப்படியே செய்யறேன் அக்கா! இருந்தாலும் நீங்க நித்திலா அப்பா கிட்ட சொல்லி இவருக்கு எங்கியாவது நல்ல வேலை கிடைக்குமான்னு பார்க்கச் சொல்லுங்களேன். மாசச் சம்பளம்னு வந்தா நமக்கு திட்டமிட வசதியா இருக்குமே?"



"கண்டிப்பா சொல்றேன். ஆனா நீ நன் சொன்னதை மறக்காதே" என்றாள்.



ராகவனிடம் மாலதி சொன்னதாகச் சொல்லாமல் தன் யோசனை போலவே சொன்னாள். முதலில் கொஞ்சம் தயங்கிய அவன் பிறகு ஒப்புக் கொண்டான்.



"ஏங்க? உங்கம்மா உங்க கூடத்தானே இருந்தாங்க? அப்ப என்ன செஞ்சீங்க?"



"ஆமா! அந்தக்கெளவிக்கு இவ்வளவு அறிவு ஏது? பணம் குடுக்கற அன்னிக்கு பிரியாணி அது இதுன்னு செலவு பண்ணும். மறு நாளே காசு இல்லாமப் பட்டினி கிடக்கும்" என்றான்.



அதிர்ச்சியாக இருந்தது கோமதிக்கு. யாரும் பெற்ற தாயைக் குறித்து இப்படிப் பேசிக் கேட்டதில்லை அவள். மனம் சுருங்கியது.



"என்னங்க இப்படி பேசுறீங்க? அவங்க உங்க அம்மா இல்லையா?"



"அம்மான்னா? அதுக்காக? எனக்கு நீ தான் முக்கியம். என் கூட கடைசி வரைக்கும் வரப் போறது நீ தான். என்னைக் கெடுத்ததே அவ தான். அவளைப் பத்தி என்ன பேச்சு?"



"என்ன சொல்றீங்க? கெடுத்தாங்களா? உங்களை வளர்த்து ஆளாக்கி படிக்க வெச்சி எல்லாமே அவங்க தானே செய்தாங்க?"



"ஆமா! பெரிய படிப்பு படிக்க வெச்சுட்டாங்க! வெறும் +2, அதுவும் கவர்மெண்ட் ஸ்கூல்ல இலவசமாப் படிக்க வெச்சாங்க! இது ஒரு பெரிய விஷயமா?"



"என்ன உளர்றீங்க? வெறும் +2வா? நீங்க வக்கீலுக்கு இல்ல படிச்சிருக்கீங்க?"



திடுக்கிட்டவன் தன்னை சமாளித்துக் கொண்டான்.



"அது வந்து +2 வரை தான் எங்கம்மா என்னைப் படிக்க வெச்சாங்க. அதுக்கப்புறம் என்னை காலேஜுக்கு அனுப்புனது, வக்கீலுக்குப் படிக்க வெச்சது எல்லாமே எங்க அண்ணன் தான். அதான் அப்படிச் சொன்னேன்." என்றான்.



"அதானே பார்த்தேன். சரி சரி! இனிமே பணம் கிடைச்சா என் கையில கொண்டு வந்து குடுத்துடணும். வீட்டுச் செலவை நான் பார்த்துக்கறேன்." என்றாள்.



"இதுக்குத்தான் மனைவி வேணும்கிறது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சும்மாவா சொல்லியிருக்காங்க? அந்த வகையில நான் குடுத்து வெச்சவன் தான்." என்றான்.



மேலும் நாட்கள் ஓடி மறைந்தன. எப்படியும் பத்து நாளைக்கு ஒரு முறை 4000 ரூபாயாவது கொடுத்து விடுவான். தேவையானப் பொருட்களை மட்டும் வாங்கி, எதையும் வீணடிக்காமல் சிக்கனமாக செலவு செய்வாள் கோமதி. அப்படி இருந்தும் அதிகம் சேமிக்க முடியவில்லை.

"என்னங்க! நீங்க மாசம் 80,000க்குக் குறையாம சம்பாதிக்கிறதா அத்தை சொன்னாங்க! ஆனா நீங்க குடுக்கற பணத்தைக் கணக்குப் போட்டா மாசம் 25,000 கூட வரலியே?"



"மாசம் 80,000 ரூவா சம்பாதிக்கிறான்னு தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டியா? அப்ப நீ என்னை விரும்பல! அப்படித்தானே?"



"உளறாதீங்க! நான் என்ன கேக்குறேன் நீங்க என்ன சொல்றீங்க? இத்தனை தான் நம்ம வருமானம்னு தெரிஞ்சா அதுக்குத் தகுந்த படி வாழலாம் இல்ல? அதுக்குத்தான் கேட்டேன். சொல்லுங்க"



"இதப்பாரு! சம்பாதிக்கிற அத்தனை காசையும் உங்கிட்ட அப்படியே கொண்டு வந்து குடுக்க முடியுமா? எனக்குன்னு செலவுகள் இல்லையா? நல்லா இருக்கே நீ சொல்றது?"



"அப்படி என்ன உங்களுக்கு செலவு? சாப்பாடு நான் கட்டிக் குடுத்துடறேனே?"



"அங்க என் ஆபீஸ் வாடகை, வேலை பாக்கற பியூனுக்கு சம்பளம் இதெல்லாம் யாரு குடுப்பாங்க? அதோட இந்த வீட்டு வாடகை வேற. என்னை என்ன நெனச்சே நீ? நான் நாலு எடத்துக்கு போறேன் வரேன். எனக்குன்னு கைச்செலவுக்குக் காசு வேண்டாமா? சம்பாதிக்கிற காசையெல்லாம் உங்கிட்டக் குடுத்துட்டு கோம்ஸ் முடி வெட்டக் காசு வேணும், கோம்ஸ் கட்சிக்காரங்களுக்கு டீ வாங்கிக் குடுக்க காசு வேணும்னு உன் பின்னாடி தலையைச் சொரிஞ்சிக்கிட்டு அலையச் சொல்றியா?" என்றான் கோபமாக.



"ஐயோ! நான் அப்படிச் சொல்லலைங்க! இப்ப நாம ரெண்டு பேரும் தான். ஆனா நாளைக்கே நமக்குக் குழந்தை பிறந்தா அப்ப நீங்க குடுக்கற பணம் பத்தாது. அதான் சொன்னேன்." என்றாள்.



"அந்த நாள் வரும் போது பார்த்துக்கலாம். ஏண்டி அதுவரைக்கும் நான் இப்படியேவா இருப்பேன்? வளரவே மாட்டேனா?" என்றான்.



"உங்க ஆபீசை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லீங்க. என்னை ஒரு தடவை கூட்டிக்கிட்டுப் போங்க! நம்ம ஆபீசுல பியூன் இருக்கறப்ப நீங்க ஏன் ஆறிப்போன சாப்பாடு சாப்பிடணும்? அவனை அனுப்பினா நான் சுடச்சுட சமைச்சுக் குடுத்து விடுவேன் இல்ல?"



"சரியாப் போச்சு போ! அவனை ஆபீஸ் வேலைக்காக வெச்சிருக்கேனா? சாப்பாடு கொண்டு வரதுக்காக வெச்சிருக்கேனா? நடக்காததைப் பேசாத"



"சரி அது வேண்டாம் ஆனா என்னை ஏன் அழைச்சுக்கிட்டுப் போக மாட்டேங்கறீங்க?"



"உனக்குப் புரியவே மாட்டேங்குதே கோம்ஸ்! நான் ஒரு வக்கீல். என்னைப் பாக்க நல்லவங்க மட்டுமா வருவாங்க? ரவுடி ஜாமீன் வேணும்னு வருவான், கொலை பண்ணினவன் எனக்கு தண்டனையைக் குறைச்சு வாங்கிக்குடுங்கன்னு வருவான், அவங்க இருக்கற எடத்துக்கு உன்னை எப்படிக் கூட்டிக்கிட்டுப் போக முடியும் சொல்லு?" என்றான்.



புரிந்து கொண்டவளாகத் தலையசைத்தாள். கோமதியின் தாய் கல்யாணி கிராமத்திலிருந்து ஒரு முறை வந்து மூன்று நாட்கள் தங்கி விட்டு மகளும், மருமகனும் சந்தோஷமாக வாழ்வதைப் பார்த்து விட்டுப் போனாள்.



வர வர ராகவன் வீட்டுக்குப் பணம் கொடுப்பது குறைந்து கொண்டே வந்தது. வாரம் ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் வந்து நின்றது. அன்றாடச் செலவுகளுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் தான் கோமதி தான் கர்ப்பம் என்பதை உணர்ந்து கொண்டாள். நிறைய சந்தோஷமாகவும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது அவளுக்கு.
Nice ep
 
Top