Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றில் வரைந்த ஓவியம்....10...

Advertisement

அத்தியாயம் 10.



நாட்கள் அல்ல மாதங்கள் அல்ல வருடங்கள் ஓடி விட்டன. இப்போது வசந்துக்கு ஐந்து வயது. சமர்த்தாக பள்ளிக்கூடம் செல்கிறான். இந்த ஐந்து வருடங்களில் கோமதியின் வாழ்க்கை பல மாறுதல்களுக்கு உள்ளாகி இருந்தது. சற்றே பெருத்து கண்களில் கண்ணாடியுடன் காட்சி அளிக்கிறாள் அவள். அம்மா கல்யாணி தனியாக இல்லை. மகளுடனே தான் வாசம். பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாக ஆகி விட்டது கோமதிக்கு.



மாறாதது மாலதியின் நட்பும் அந்த வீடும் தான். முதலில் என்றாவது ஒரு நாள் கணவன் வருவான் என்ற நம்பிக்கையில் காத்திருந்தாள். ஆனால் வருடங்கள் உருண்டனவே தவிர அவனைப் பற்றிய எந்த செய்தியும் தெரியவில்லை. உயிரோடு தான் இருக்கிறானா? என்பதும் தெரியவில்லை. ஆனால் அதைப் பற்றிய கவலையை உதறி விட்டாள் அவள்.



முடங்கி உட்கார்ந்திருந்தவளை ஊக்கப்படுத்தியது தாய் கல்யாணி தான்.



"கோமதி! நீ இனிமே சம்பதிச்சு தான் ஆகணும். எத்தனை நாள் இப்படி சின்னப் பிள்ளைங்களுக்கு டீச்சராவே நர்சரி ஸ்கூல்ல வேலை பார்ப்ப? நான் சொல்றதைக் கேளு! இப்ப தபால் மூலமா படிக்கலாம். எந்த படிப்பு நல்லதுன்னு மாலதி வீட்டுக்காரர் கிட்டக் கேட்டுப் படி! படிப்புல புத்தி போச்சுன்னா உனக்கும் கொஞ்சம் மாற்றமா இருக்கும்" என்று தூண்டி விட்டாள்.



அப்படியே செய்தாள் கோமதி. முத்துசாமி பி காம் படித்தால் நல்லது என அபிப்பிராயப்படவே நல்ல பல்கலையில் பி காம் சேர்ந்தாள். சேர்ந்து விட்டாளே தவிர படிப்பதற்கு அவள் மிகுந்த சிரமப் பட வேண்டியிருந்தது. எப்படியோ படித்து முடித்து விட்டாள். கூடவே கம்ப்யூட்டர் பயிற்சியும் பெற்று விட்டாள். உடனே மாலதியின் கணவர் தனக்குத் தெரிந்த ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுத்தார். மாதம் 25,000 சம்பளம். காலை 9 லிருந்து மாலை 6 மணி வரை அலுவலகம்.



வேலைக்குச் சேர்ந்து இரு வருடங்கள் ஓடி விட்டன. வெறும் பி காமோடு திருப்தியுறாமல் மேற் கொண்டு என்ன படிக்கலாம் என மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு எம் பி ஏ சேர்ந்தாள். முதல் வருடம் முடித்து விட்டாள். இரண்டாம் வருட தேர்வுகளும் முடிந்து விட்டன. இன்னும் நாலைந்து நாளில் முடிவு தெரியும்.



ஆபீசில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் கோமதி.



"மேடம்! அடுத்த அசிஸ்டண்ட் மேனேஜர் நீங்க தான்னு பேசிக்கறாங்க" என்ற குரலில் நிமிர்ந்தாள். பிரகாஷ் நின்றிருந்தான். அவனைக் கண்டதும் முகம் மலர்ந்தது அவளுக்கு.



"டூர் போயிட்டு எப்ப வந்தீங்க பிரகாஷ்? மார்க்கெட்டிங்க் மேனேஜர்னா சுத்திக்கிட்டே இருக்கணுமா?" என்றாள்.



"நான் சொன்னதுக்கு பதில் சொல்லுங்க கோமதி! நீங்க தான் அடுத்த அசிஸ்டண்ட் மேனேஜராமே?"



சுற்றிலும் இருப்பவர்கள் இவர்களையே பார்த்தனர்.



"பிரகாஷ்! லன்சுக்கு நாம வழக்கமாப் போற ஹோட்டலுக்கு வந்துடுங்க! அங்க வெச்சு விவரமாப் பேசிக்கலாம்" என்று அவனுக்கு பதில் சொல்லி விட்டு வேலையில் ஆழ்ந்தாள்.



வேலைக்குச் சேர்ந்த நாள் முதலாக இனிய நட்பு பிரகாஷுடையது. வயது 35. கல்யாணம் ஆகி மனைவி சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக விவாகரத்துச் செய்து விட்டாள். வீட்டில் அம்மா மட்டும் தான். மிகவும் நல்லவன். எம் பி ஏ படி என்று கோமதிக்கு அறிவுரை கூறியவனும் அவன் தான்.



ஹோட்டலில் கூட்டமில்லை. வெளிச்சமாக இருந்த பகுதியில் சென்று அமர்ந்தார்கள்.



"எம் பி ஏ ரிசல்ட் என்னிக்கு வருது?



"அடுத்த செவ்வாய்க் கிழமை! கொஞ்சம் டென்ஷனாத்தான் இருக்கு"



"ஜி எம்மைப் போய்ப் பாக்கச் சொன்னேனே செஞ்சீங்களா?"



"பார்த்தேன் பிரகாஷ்! உங்க ரிசல்ட் வரட்டும்! அப்புறம் பாக்கலாம்னு சொல்லிட்டாரு"



"ஜி எம் எங்கூடத்தான் டூர் வந்தாரு. நம்ம ஆபீசுல இருக்குற எல்லாரையும் பத்திப் பேசுனாரு. உங்களை ரொம்பப் பாராட்டுனாரு. அதோட அவங்க எம் பி ஏ பாஸ் பண்ணிட்டாங்கன்னா நம்ம ஆபீஸ்லயே அசிஸ்டண்ட் மேனேஜரா போட்டுட்டு பிறகு ஒரு வருஷத்துல மேனேஜரா புரமோட் பண்ணிறலாம்னு சொன்னாரு." என்றான்.



மகிழ்ச்சியில் திக்குமுகாடிப் போனாள் கோமதி.



"ரொம்ப நன்றி சார்! உங்களால தான் எனக்கு இந்தப் பெருமை"



"இப்படிச் சொன்னா ஒப்புக்க மாட்டேன்! நீங்க எம் பி ஏ பாஸ் பண்ணின பிறகு உங்க வீட்டுல எனக்கும் எங்கம்மாவுக்கும் விருந்து சாப்பாடு போடுங்க! அது தான் நன்றி தெரிவிக்கிற முறை" என்றான்.



தலையசைத்து சம்மத்திதாள். மேலும் சிறிது நேரம் ஆபீஸ் விஷயமாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினார்கள்.



மாலை வீடு திரும்பியதும் அம்மவிடம் பிரகாஷ் சொன்ன தகவலைச் சொன்னாள். அம்மா திருஷ்டி கழித்தாள்.



"அம்மா! நீ மேனேஜராயிட்ட எனக்கு என்ன தருவே?" என்றது வசந்த்.



"உனக்கு என்னடா கண்ணா வேணும்?"



"என்னை ஊட்டிக்குக் கூட்டிக்கிட்டுப் போறியா? மாலதி பெரியம்மா, பெரியப்பா, நித்திலாக்கா நாம எல்லாரும் போகலாமா? சொல்லும்மா?" என்றான் ஆசையோடு. அவனை அணைத்துக் கோண்டாள்.



"கண்டிப்பாப் போகலாம்டா வசந்த்!" என்றான். குழந்தை ஹோம் ஒர்க் செய்ய உள்ளே ஓடி விட்டது.



"கோமதி! நீ கண்டிப்பா பாஸ் பண்ணிடுவே! ஆபீஸ்ல பிரமோஷனும் கெடச்சிடும். அப்புறம் என்ன?"



"அப்புறம் என்னன்னா? என்ன அர்த்தம்? வசந்தைப் படிக்க வெக்கணும், ஆளாக்கணும் கல்யாணம் பண்ணணும். அவ்ள தான். வேறென்ன?"

"மனசுக்குள்ள நூத்துக் கிழவின்னு நினைப்பா உனக்கு? இப்பத்தானே உனக்கு 28 வயசு ஆகுது. நீயும் பிரகாசும் கல்யாணத்தைப் பத்திப் பேசலையா?"



"அம்மா! வாய்க்கு வந்ததைப் பேசாதே! அவரு என்னை நல்ல தோழியாத்தான் நெனச்சிருக்காரு. நானும் அப்படித்தான். அப்படி இருக்கறப்ப அசிங்கமா என்னைக் கல்யாணம் பண்ணிக்கறீங்களான்னு கேக்க முடியாதும்மா! எனக்கும் இதுல இஷ்டமில்ல! தயவு செஞ்சு இனிமே கல்யாணப் பேச்சை எடுக்காதே" என்று கண்டிப்பாகக் கூறி விட்டாள்.



எம் பி ஏ ரிசல்ட் வந்து விட்டது. கோமதி முதல் வகுப்பில் பாஸ் செய்து விட்டாள். மாலதியும் அவளது கணவன் முத்து சாமியும் பாராட்டினார்கள். சக ஆபீஸ் ஊழியர்களும் கூட வாழ்த்தினார்கள். ஜி எம் சொன்னது போலவே அசிஸ்டண்ட் மேனேஜராக புரமோஷன் கொடுத்து விட்டார். அதோடு இன்னும் ஒரு வருடத்தில் எச் ஆர் மேனேஜராக வேலை பார்க்கும் சண்முகம் ரிடயர் ஆவதால் அந்தப் பதவிக்கு இவளையே நியமிப்பதாகவும் சொல்லி விட்டார்.



வசந்த் ஆசைப்பட்டது போலவே அனைவரும் ஊட்டி போய் வரலாம் என ஏற்பாடு செய்தனர். நீலகிரி எக்ஸ்பிரசில் கோவை சென்று பிறகு அங்கிருந்து கார் எடுத்துக் கொண்டு ஊட்டி செல்வதாகவும் அங்கேயே தெரிந்த ஒருவரின் காட்டேஜில் தங்குவதாகவும் ஏற்பாடு செய்தாயிற்று. வெள்ளிக்கிழமை கிளம்ப வேண்டும். ஆனால் திடீரெனக் கல்யாணிக்கு ஜலதோஷமும், இருமல் காய்ச்சல் எனப் பிடித்துக் கொண்டது. வயதானவள் வேறு! இந்த நிலையில் ஊட்டி வந்தால் தாங்க முடியாது என்று சொல்லி விட்டாள் கல்யாணி.



"நீங்க தான் சின்னப் பிள்ளைங்க நீங்க போயிட்டு வாங்க! நான் வீட்டைப் பாத்துக்கறேன். நீ டிரிப்பைக் கேன்சல் பண்ணினா வசந்த் பாவம் ரொம்ப ஏமாந்து போய்டுவான். அதனால் நீங்க கெளம்புங்க! மூணு நாள் தானே நான் பாத்துக்கறேன்" என்று சொல்லி கட்டாயப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தாள். அவர்களுடன் பிரகாஷ் அவனது தாயாரும் செல்வதால் எதுவும் பேசாமல் கிளம்பி விட்டாள் கோமதி.



சனிக்கிழமை காலை மெதுவாக எழுந்து தனக்கென மிளகு ரசம் வைத்துக் கொண்டிருந்தாள் கல்யாணி. வாசலில் இருந்த காலிங்க் பெல் விடாமல் ஒலித்தது. ஓடிச் சென்று கதவைத் திறந்தாள். நின்றிருந்த நபரைப் பார்த்ததும் அதிர்ச்சி தாக்கியது அவளுக்கு. வந்தது வேறு யாருமில்லை ராகவன் தான்.



சுதந்திரமாக உள்ளே நுழைந்து சோஃபாவில் உட்கார்ந்து கொண்டான்.

"என்ன அத்தை சௌக்கியமா? எங்கே கோம்ஸ்? எங்கே என் மகன்?" என்றான். வீட்டை சுற்று முற்றும் பார்த்து விட்டு "வசதியாத்தான் இருக்காப்புல தெரியுது" என்றான்.



அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை கல்யாணிக்கு. உடல் மெலிந்து ஒரு மாதமாகக் குளிக்காதவன் போல அழுக்காக இருந்தான். முகத்தில் தாடி மீசை வேறு. ஈயென இளித்தான்.



"நீ எங்க வந்த?" என்றாள் குரல் கடுமையாக ஒலித்தது.



"எங்கே வந்தேன்னா? இது என் வீடு! இங்க வராம எங்க போவேன்? கூப்பிடு என் பொண்டாட்டியை" என்றான் அதிகாரமாக.



"உன் வீடா? இது என் மக வீடு! அவ தான் வாடகை குடுக்குறா! இது கௌரவமானவங்க வாழற வீடு! நீ இடத்தைக் காலி பண்ணு" என்றாள் கறாராக.



"என் பொண்டாட்டி குடுத்தா என்ன? நான் குடுத்தா என்ன? எல்லாம் ஒண்ணு தான். கூப்பிடு அவளை பார்த்து நாளாச்சு" என்று அசிங்கமாகச் சிரித்தான்.



வயிற்றைப் புரட்டிக் கொண்டு வர சமாளித்தாள் கல்யாணி.



"பணத்தையெல்லாம் சுருட்டிக்கிட்டுப் போனியே! அப்ப தெரியலையோ அவ உன் பொண்டாட்டின்னு! இத்தனை வருசத்துல நாங்க என்ன செஞ்சோம்? இருக்கோமா செத்தோமான்னு கேக்கக் கூட நீ வரலையே? இப்ப எந்த உரிமை

யில வந்த? பணமெல்லாம் தீர்ந்திடிச்சாக்கும்?"



"ஆங்! பணம் பொல்லாத பணம்! நான் பாக்காத பணமா? பிச்சைக்காசு 5 லட்சம்! அது எத்தனை நாளுக்கு வரும்? மூணு மாசத்துலயே தீர்ந்திடிச்சு! அப்புறம் நான் என்னென்னவோ செஞ்சேன். பேப்பர்ல கூட என்னைப் பத்தி வந்ததே பாத்தியா கெளவி?" என்றான்.



"பேப்பர்லயா? உன்னை மாதிரி அயோக்கியப் பசங்களைப் பத்திக் கூட போட ஆரம்பிச்சுட்டாங்களா? அந்தக் கண்ராவியை இன்னும் பாக்கல்ல"



சுருட்டி வைத்திருந்த பேப்பரை தூக்கி எறிந்தான். அதில் போலி பத்திர மோசடி என்று போட்டு சில விவரங்கள் போடப் பட்டிருந்தன. ராகவனின் படமும் வெளியாகி இருந்தது.



"அடப்பாவி! நீ நாசமாப் போக! திருந்தவே இல்லையா நீ? பத்திரங்களை போலியா தயார் பண்ணி ஒரே இடத்தை மூணு பேருக்கு வித்துட்டான்னு செய்தி வந்ததே அது நீ தானா?" என்றாள் தலையில் அடித்துக் கொண்டு.



"ஆமா! நானே தான். போலீஸ் பிடிக்காம இருக்கணும்னு நான் மாறு வேசத்துல வந்திருக்கேன். இப்ப எங்கிட்ட நிறையப் பணம் இருக்கு. பெருசா ஹோட்டல் ஆரம்பிச்சு நடத்தப் போறேன். என் பொண்டாட்டி தான் என் பார்ட்னர். அதுக்குத்தான் அவளைப் பாக்க வந்தேன். எங்கே அவ? கண்ணுல காட்ட மாட்டேங்கற? " என்றான்.



சற்றே நிதானித்தாள் கல்யாணி.



"என்ன சொல்வது? கோமதிக்கு இவன் திரும்பி வந்த விஷயம் தெரிந்தால் ஏற்றுக் கொண்டு விடுவாளோ? அப்படி நடந்தால் அதைப் போல கெட்டது வேறு எதுவும் இல்லை! இப்போது தான் அவள் நிம்மதியாக வாழத் துவங்கியிருக்கிறாள். இவனால் மீண்டும் அவளது நிம்மதி கெடக் கூடாது."



"என்ன பேச மாட்டேங்குற? ஸ்கூலுக்குப் போயிருக்காளா?"



"இல்லை"



"பின்ன?"



"இதப்பாரு ராகவா! நீ எங்களை ஏமாத்தி பொய் சொல்லிக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறமும் பணத்தையெல்லாம் ஏமாத்திட்டு ஓடிட்ட. எங்க வீட்டை வித்து தான் அத்தனை பணத்தையும் திருப்பிக் கொடுத்தோம். கோமதி நல்லாப் படிச்சு இப்ப ஒரு ஆபீசுல வேலை பாக்கறா! இனியும் அவளைத் தொந்தரவு செய்யாதே! அவ கண்ணுல படாம போயிரு! உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்"



"இதப்பார்றா! நீ எனக்குப் பணம் தரியா? தேவை தான். நான் நெனச்சா ஒரே நாள்ல லட்சக்கணக்கான ரூவா சம்பாதிப்பேன். தெரியுமா?"



"தெரியும்ப்பா! நீ தான் கில்லாடியாச்சே! அவ வாழ்க்கையில இப்பத்தான் வசந்தம் வந்திருக்கு! அதைக் கெடுத்துடாதே"



"இன்னா கிளவி சொல்ற?"



"என் மக அவ கூட வேலை செய்யுற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. அவங்க ஹனிமூனுக்குத்தான் கோடைக்கானல் போயிருக்காங்க! கூடவே வசந்தும் போயிருக்கான்." என்று புளுகினாள்.



"என்னது! புருஷன் உயிரோட குத்துக்கல்லு மாதிரி இருக்கேன். அவளுக்கு ரெண்டாம் கல்யாணமா? இதை நான் சும்மா விட மாட்டேன். போலீசுல புகார் குடுத்து உன் மகளையும் அவளைக் கட்டினவனையும் உள்ள தள்ளிடுவேன். என்னங்கடி விளையாடறீங்க? கோடைக்கானலா போயிருக்கா? வரேன் இரு" என்று கத்தினான்.



"இந்தா சும்மா கத்தாதே! எல்லாம் வக்கீல் கிட்டக் கேட்டுத்தான் நாங்க இந்தக் கல்யாணத்தை முடிச்சோம். அஞ்சு வருஷமா இருக்கானா இல்லையான்னே தெரியாத ஒரு புருஷனுக்கு எந்த விதமான உரிமையும் பொண்டாட்டி மேல கிடையாதுன்னு சொல்லிட்டாங்க! அதனால நீ என்ன கேஸ் போட்டாலும் செல்லாது. இப்ப இடத்தைக் காலி பண்ணு" என்றாள் கல்யாணி.



"முடியாது! என்ன பண்ணுவ? நான் இங்க தான் தங்கப் போறேன். அவளும் அவ புது புருஷனும் வந்த பிறகு பரிசு குடுத்துட்டுப் போயிடுவேன். என்ன பரிசு தெரியுமா? தாய் கிட்டருந்து மகனைப் பிரிக்கிறது தான் அது! ஆமா! என் மகனைக் கூட்டிக்கிட்டுத்தான் போவேன். எனக்கு அவன் மேல உள்ள பாசத்துனால இல்ல! உன் மகளைப் பழி வாங்கணும் அதனால." என்று சொல்லி விட்டு மீண்டும் குரூரமாக சிரித்தான்.



"மரியாதையா சொல்றேன்! இந்த வீட்டை விட்டுப் போயிடு! இல்லை நடக்கறதே வேற"



"என்னடி மிரட்டுற?"



"என்னடா! வயசானவ! இவளால என்ன செய்ய முடியும்னு ரொம்பத் துள்ளுறியா? நான் கிராமத்துக்காரி! உழைச்ச மனுசி! என் மனசுல திடம் இருக்கு. இந்தக் கட்டையால ஒரே அடி உன்னை அடிச்சுட்டு நீ மயக்கமானதும் வாயில விஷத்தை ஊத்திடுவேன். அவமானம் தாங்க முடியாம நீ தற்கொலை செஞ்சிக்கிட்டேன்னு போலீசுல சொல்லிடுவேன். ஏற்கனவே உன்னைப் போலீஸ் தேடிக்கிட்டு இருக்கு. நீ தற்கொலை பண்ணிக்கிட்டதா சொன்னா யாரும் கண்டுக்க மாட்டாங்க! உயிரோட போறியா இல்லை பொணமாப் போறியா?" என்றாள் மிரட்டலாக.



கொஞ்சம் பயந்து போனான்.



"இன்னும் பத்து எண்றதுக்குள்ள நீ வெளிய போயிடணும். எனக்குத் தெரியாம என் மகளைப் பார்த்தேன்னு நான் கேள்விப்பட்டேன்னா அடுத்த நிமிஷம் போலீசுக்கு ஃபோன் பண்ணிடுவேன். அப்புறம் ஆயுசுக்கும் நீ கம்பி தான் எண்ணணும். பொண்டாட்டி, மகன்னு உரிமை கொண்டாடிக்கிட்டு வந்தே நான் பொல்லாதவளா மாறிடுவேன்" என்றாள் கல்யாணி.



ஞ்ச நேரம் பேசாமல் நின்றிருந்தான்.



"இதப் பாரு கிழவி! நீ என்னவோ சொன்னேன்னு நான் பயந்துகிட்டு போகல்ல! பொம்பளை அவளே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கும் போது ஆம்பிளை நான் செஞ்சுக்க மாட்டேனா? எனக்கு இருக்குற பணத்துக்கும் அழகுக்கும் சின்ன வயசுப் பொண்ணுங்க ஆயிரம் வரும். அதனால எனக்கு கோமதி ஒண்ணும் பெரிய இவ இல்ல!" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.



"போ! எத்தனை கல்யாணம் வேணும்னாலும் பண்ணிக்க! ஆனா எங்க வீட்டைத் தேடி வந்தேன்னா ஜெயில் களி தான்." என்று அவனை மிரட்டினாள் அவன் போய் விட்டான். நிம்மதிப் பெருமூச்சு விட்டவள் சாமி படங்களின் அருகில் வந்தாள்.



"அம்மா! தாயே! கருமாரி! என் மக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு நான் சொன்னது பொய் தான். ஆனா அதுவே உண்மையா ஆகணும்மா! சின்ன வயசுலயே நிறைய கஷ்டங்களை அனுபவிச்சுட்டா அவ! இனியாவது அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்குடு! ராகவன் வந்து போன விவரம் அவளுக்குத் தெரியவே கூடாது! தெரிஞ்சா பைத்தியக்காரப் பொண்ணு இரக்கப்படுவா! அதனால தான் இப்படிச் சொன்னேன். என்னை மன்னிச்சிடு தாயே" என்று வேண்டிக் கொண்டாள்.



வரும் காலம் கோமதியையும் பிரகாஷையும் இணைக்கும் என்ற நம்பிக்கையோடு ஊட்டிக்குச் சென்றவர்களின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அந்தத் தாய். அவளது நம்பிக்கை பலிக்க நாமும் வேண்டுவோம்.
Nice ep
 
Top