Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றில் வரைந்த ஓவியம்...1

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 1:



தனது ஹோண்டா பைக்கில் விரைந்து கொண்டிருந்தான் ராகவன். அலைபாயும் அழகான கேசம், நல்ல உயரம். மாநிறம் மிகவும் களையான முகம் கட்டுடல் இவற்றுக்கு சொந்தக்காரன் ராகவன். 27 வயதில் சொந்தமாக பிசினஸ் செய்கிறான். அவனுக்கு நகரின் முக்கியப்பகுதியில் ஒரு சின்ன ஆபீஸ் இருக்கிறது. அங்கு தான் விரைந்து கொண்டிருந்தான். வாசலிலேயே வண்டியை நிறுத்திப் பூட்டி விட்டு ஸ்டைலாகப் படியேறி ஆபீசை அடைந்தான். பெருக்கித் துடைக்கும் கண்ணம்மா தன் வேலையைச் செய்து கொண்டிருந்தாள்.



"என்ன கண்ணம்மா? என்னைத் தேடி யாராவது வந்தாங்களா?" என்றான். கழுத்தை நொடித்துக் கொண்டாள் அவள். அதற்கெல்லாம் அசரும் ஆள் இல்லை ராகவன். சுறுசுறுப்பாக சாமி படத்தை வணங்கி விட்டு செல்ஃபோனை நோண்ட ஆரம்பித்தான்.



"ஏன் சார்! நீங்க ரியல் எஸ்டேட்னு போர்டு போட்டுருக்கீங்க? ஆனா எந்தக் கட்டடத்தையும் வாடகைக்கு விட்டதாகவோ, வித்ததாவோ தெரியலையே? ஊர்ப்பஞ்சாயத்து தான் ஓடுது இங்க! என்ன தொழிலோ என்ன எழவோ?"



"இதப்பாரு கண்னம்மா! உனக்கு வேண்டியது சம்பளம். அதை வாங்கிக்கிட்டுப் போயிட்டே இரு! அனாவசியமா என் தொழில்ல மூக்கை நுழைக்காத! பல வேலையும் செய்தாத்தான் பணம் வரும்! அது தெரியாம பேசாதே."



"சம்பளமா? அப்டீன்னா என்னன்னு உங்களுக்குத் தெரியுமா சார்? மூணு மாசமாச்சு எனக்கு நீங்க சம்பளம்னு காசு எண்ணிக் குடுத்து. இந்த மாசமும் நீங்க சம்பளம் குடுக்கலைன்னா நான் நின்னுக்குவேன். அப்புறம் என்னைக் குறை சொல்லாதீங்க!"



"உனக்கு நான் பணமாக் குடுக்கல்ல தான். ஆனா எத்தனை செஞ்சிருக்கேன்? அதை மறந்துட்ட பாத்தியா?"



"என்ன செஞ்சீங்க?"



"உன் புருஷனுக்கு ஒரு ஆபீஸ்ல பியூன் வேலை வாங்கிக் குடுத்தேன். உன் மகளுக்கு நல்ல ஸ்கூல்ல அட்மிஷன் வாங்கிக் குடுத்தேன். அப்புறம் நீ ரேஷன் கார்டுல உன் மாமியார் பேரைச் சேர்க்கணும்னு எவ்வளவு அலைஞ்சு திரிஞ்சு கஷ்டப்பட்ட? அதையும் நான் தான் முடிச்சுக் கொடுத்தேன். நன்றி மறந்து பேசாத"



"ஆத்தாடி! என்னமா கணக்குச் சொல்றீங்க சார்? என் புருஷனுக்கு வேலை வாங்கிக் குடுத்ததுக்குத்தான் அரை மாச சம்பளத்தை கமிஷனா வாங்கிக்கிட்டீங்க இல்ல? அப்புறம் வான்மதி ஸ்கூலுக்கு சிபாரிசே தேவையில்ல! அந்த ஸ்கூல் பெரிய டீச்சரம்மா இனிமே இந்த மாதிரி ஆளுங்களைக் கூட்டிக்கிட்டு வராதே! நல்ல புத்திசாலியா இருக்கா குழந்தை நானே சேர்த்துருப்பேனேன்னு சொன்னாங்க! ரேஷன் கார்டுக்கு உதவி செஞ்சது என்னவோ வாஸ்தவம் தான். அதுக்கும் கமிஷன்னு 1000 ரூவா வாங்கினீங்களே?"



"நீ பெரிய ஆள் தான். கமிஷன் காசு எனக்கா? இல்லையே? ரேஷன் ஆபீஸ்ல எத்தனை பேருக்கு லஞ்சம் குடுக்கணும்? அதுக்குத்தான் நான் காசு வாங்கினேன். உன் ரேஷன் கார்டுக்கு என் கைக்காசைப் போட்டா லஞ்சம் குடுக்க முடியும்? அப்புறம் எத்தனை தடவை பைக்கில ரேஷன் ஆபீசுக்குப் போயிட்டு போயிட்டு வந்தேன். அந்த பெட்றோல் செலவெல்லாம் கணக்கு பாத்தா நீ தான் எனக்குப் பணம் தரணும்"



முகவாயில் கை வைத்துச் சிலையானாள் கண்ணம்மா.



"ஐயோ! சார்! என்னை விட்டுடுங்க! உங்க கூடப் பேசி ஜெயிக்க முடியுமா? கொஞ்சம் ஏமாந்தா நீங்க நம்ம தெருப் பிள்ளையார் கோயிலையே வித்துடுவீங்களே!" என்றாள்.



அவளுக்குப் பதில் சொல்ல வாயத்திறக்கும் போது யாரோ ஒருவர் ராகவனைப் பார்க்க படியேறி வந்தார். சட்டென வாயை மூடிக் கொண்ட அவன் போலியாக ஃபோனை எடுத்துப் பேச ஆரம்பித்தான்.



"கண்டிப்பா என்னால முடியும் சார்! நீங்க கவலையே படாதீங்க சார்! எனக்கு முதலமைச்சர் ஆபீஸ்ல கூட ஆட்கள் இருக்காங்க! உங்க வேலை முடிஞ்சாச்சுன்னு வெச்சிக்குங்க" என்று அளந்து விட்டான். அவன் பேச்சைக் கேட்டு வந்தவர் வாயைப் பிளந்தபடி நின்றிருந்தார். ஃபோனை வைத்தவன் "வாங்க சார்! இப்படி உக்காருங்க" என்று எதிர் நாற்காலியைக் காட்டினான்.



"சொல்லுங்க என்னால உங்களுக்கு என்ன உதவி ஆகணும்?" என்றான் பணிவாக. கண்ணம்மா சிரித்து விட்டாள். அவளை முறைக்க டீ வாங்கி வரப் போய் விட்டாள்.



"சார்! உங்க நம்பரை என் ஃபிரெண்டு ஒருத்தரு குடுத்தாரு. நேத்து சாயங்காலம் பேசினேனே குமார்னு நான் தான் அது"



"ஆங்க்! ஞாபகத்துக்கு வருது! கொஞ்சம் டென்ஷனா இருந்தீங்க! அதான் நேர்ல வாங்கன்னு சொன்னேன். சொல்லுங்க சார் உங்க பிரச்சனை என்ன?"



"சார்! நான் நகரை விட்டுத் தள்ளி ஒதுக்குப்புறமான எடத்துல 20 வருஷத்துக்கு முன்னாடி கொஞ்சம் இடம் வாங்குனேன். இன்னைக்கு அந்த இடம் நல்ல விலைக்குப் போவுதாம். என் மகளுக்குக் கல்யாணம் வெச்சிருக்கேன். அந்த இடத்தை வித்து அந்தக் காசுல கல்யாணத்தை நல்ல கிராண்டா செய்யலாம்னு திட்டம் போட்டேன்"



"நல்ல பார்ட்டிய இருந்தா சொல்லட்டுமா?"



"வாங்கறதுக்கு ஆள் ரெடியா இருக்காரு சார்! ஆனா பிரச்சனை அது இல்ல! "



"பின்ன என்ன?"



"அந்த எடத்துல ஒருத்தன் குடிசை போட்டு உக்காந்திருக்கான். போகச் சொன்னா போக மாட்டேங்கிறான். என்னையே மிரட்டுறான். அதான் உங்க கிட்ட வந்திருக்கேன்"



"நான் வந்து அந்த ஆளைக் காலி பண்ணச் சொல்லணுமா?"



"ஆமா சார்!"



"செஞ்சிரலாம். ஆனா என் ஃபீஸ் கொஞ்சம் அதிகமாகும். ஏன்னா எனக்கு இதுல ரிஸ்க் இருக்கு பாருங்க?"



"நீங்க கேக்கற அமவுண்ட் குடுத்துடறேன் சார்"



"சரி அப்டீன்னா உங்க எடத்தோட அட்ரஸ், ஆக்கிரமிப்புப் பண்ணியிருக்கறவனோட டீட்டெயில்ஸ் எல்லாம் குடுத்துட்டுப் போங்க! அவன் பேர் என்ன?"



"மணிகண்டன்! பாத்து சார்! அவன் எல்லா கட்சி ஆளுங்களையும் கையில வெச்சிருக்கான். "



"அதை நான் பாத்துக்கறேன்! நீங்க கவலைப் படாமப் போயிட்டு வாங்க!"



"இன்னும் மூணு மாசத்துல என் பொண்ணுக்குக் கல்யாணம் வெச்சிருக்கேன். அதுக்குள்ள அந்த எடத்தை விக்கணும். கொஞ்சம் பார்த்து செய்யுங்க சார்"



"இன்னும் ஒரு மாசத்துக்குள்ள அந்த இடத்தை நீங்க வித்துடலாம்! அதுக்கு நான் கியாரண்டி! இப்ப அட்வான்சா 1000 ரூவா குடுங்க மிச்சத்தை வேலை முடிஞ்ச பிறகு நான் வாங்கிக்கறேன்" என்றான்.



வந்தவரும் பணத்தைக் கொடுத்து விட்டு கிளம்பினார். அதன் பிறகு அன்று முழுவதும் யாரும் வரவில்லை. மாலை ஏழு மணிக்கு ஆபீசைப் பூட்டி வீட்டுக்குக் கிளம்பினான். அதை வீடு என்று சொல்வதை விட எலிப்பொந்து என்றால் தான் பொருத்தமாக இருக்கும். பல குடித்தனங்கள் இருக்கும் வீட்டின் ஒரு சின்னஞ்சிறிய பகுதி அது. ஆனால் அவனது உடையும் பேச்சும் அந்த சூழலுக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தாது. அவன பேசுவதைக் கேட்டால் தமிழ் நாட்டின் அனைத்து முக்கிய முடிவுகளும் இவனைக் கேட்டபிறகே எடுக்கப்பட்டன என்பது போலப் பேசுவான்.



வாசலிலேயே நின்றிருந்தாள் அம்மா.



"என்னடா? இன்னைக்காவது ஏதாவது பார்ட்டி மாட்டிச்சா? இல்லை இன்னைக்கும் பட்டினி தானா?" என்றாள்.



"உள்ள வாம்மா பேசுவோம்" என்று அவளை உள்ளே அழைத்து வந்தான்.



"இன்னைக்கு ஒரு செம பார்ட்டி சிக்கிச்சி! சுளையா ஆயிர ரூவா கறந்துட்டேன். இந்தா ஐநூறு வெச்சிக்கோ. ராத்திரிக்கு நல்ல சாப்பாடாப் போடு"



"ஏயப்பா ஐநூறா? நான் பெரியண்ணன் கடையில போயி பிரியாணி வாங்கிட்டு வரவாடா?"



"என்னமோ செய்யி! வாய்க்கு ருசியா சாப்பிட்டு எத்தனை நாளாச்சு? போ போயி வாங்கிட்டு வா"



அம்மாவும் மகனும் ருசியான பிரியாணியை ரசித்து உண்டனர். அதிலேயே நிறையப் பணம் செலவாகி விட்டது. ஏதடா நமக்குப் பணம் கிடப்பது அரிதாகத்தானே கிடைக்கிறது. கிடைக்கும் போது தேவையான அரிசி பருப்பு புளி போன்ற மளிகைப் பொருட்களை வாங்கிப் போடலாமே என்ற எண்ணம் தாய்க்கும் தோன்றவில்லை மகனுக்கும் தோன்றவில்லை.



"ஏண்டா ராகவா! யாரு அது? உன்னை நம்பி பணம் குடுத்தது?" என்று கேட்டு நக்கலாகச் சிரித்தாள் அவன் தாய் மரகதம்.



"நீ ஒருத்தி போதும்மா என் பிசினசைக் கெடுக்க!"



"ஆமா! பெரிய பிசினசு! ஊரை ஏமாத்துற பிசினசு! என் கிட்டயே கதை விடறியே? சொல்லு யாரு வந்தா?"



"குமார்னு ஒரு ஆளு! ஊருக்குத்தள்ளி எடம் வாங்கியிருக்காராம். அதுல எவனோ குடிசை போட்டிருக்கானாம். அதைக் காலி பண்ண வெக்கத்தான் இந்த அட்வான்ஸ்."



"உன்னால முடியுமாடா?"



"முடியும்மா! கொஞ்சம் நாடகம் போடணும்! அவ்ள தான். மூணே நாள்ல முடிச்சுடுவேன். இருந்தாலும் ஒரு மாசம் டயம் வாங்கியிருக்கேன்"



"ஏண்டா அப்படி?"



"சீக்கிரமே முடிச்சா இதுக்கா இவ்வளவு ரூவா குடுக்கணும்னு அவன் யோசிப்பாம்மா! அதான். கொஞ்சம் டயம் வாங்கி இப்ப முடிஞ்சிடும் அப்புறம் முடிஞ்சிடும்னு இழுத்தடிச்சு செஞ்சா பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்கன்னு நாம் கேட்ட பணத்தைக் குடுத்துவான். "



"நல்ல யோசனை தான். ஏண்டா? அந்த எடத்தை நாமே வளைச்சுப் போட்டுட்டா என்ன? மொத்தமாப் பணம் கிடைக்கும் இல்ல? அதை விட்டுட்டு கமிஷன் காசுக்கு அலையிறியே?"



"போம்மா நீ! கொஞ்சம் கூட யோசிக்க மாட்ட! அந்த எடம் மொத்தமே அஞ்சு செண்டு தான். அதை வளைச்சா மிஞ்சிப்போனா 20 லட்ச ரூவா கிடைக்கும். வளைச்சா ஏக்கர் கணக்குல வளைக்கணும்மா! அதுக்கும் நான் ஒரு திட்டம் வெச்சிருக்கேன். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். நம்ம ஊருக்கு வெளியில இருக்கே மாந்தோப்பு! அது வெளி நாட்டுல இருக்கறவருக்கு சொந்தம். அவரு வாரிசுங்க எல்லாம் அமெரிக்கா, இங்கிலாந்துன்னு இருக்காங்க. அவரு காலத்துக்கப்புறம் அதை நாம எடுத்துக்குவோம். என்ன சொல்ற?"



"எப்படிடா? வெளி நாட்டுல இருக்காருன்னா பத்திரமெல்லாம் பக்காவா இருக்குமே? நாம ...எப்படி?"



"அது என் கவலை!"



"சரி எப்படியோ போ! காலையில தூங்கி எழுந்து எனக்கு நாலு இட்லி வாங்கிட்டு வந்துரு நம்ம சம்முவம் கடையில" என்றபடி உறங்க ஆயத்தமானாள்.



"ஏம்மா வீட்டுல அடுப்பே பத்த வெக்க மாட்டியா நீ? உன்னைப் பார்த்து பயந்து தான் அண்ணன் பரமு வீட்டை விட்டு ஓடிட்டான். ஏன் இப்படி இருக்க?"



"இந்தாடா! வீட்டு சாப்பாடு சாப்பிடணும்னா கல்யாணம் பண்ணி எவளையாவது கூட்டிக்கிட்டு வா! என்னால முடியாது. ரேஷன் கடையில இருக்குற அரிசியை ஹோட்டலுக்கு கை மாத்தி விடணும். அந்த வேலையிலயே பல சிக்கல் இருக்கு. நான் சமையல் பண்ணிக்கிட்டு இருந்தேன்னா அப்புறம் என் தொழில் போயிரும்."



"கல்யாணம் பண்ணிக்க எனக்கும் ஆசை தான். ஆனா நம்மளைப் பத்தி இந்த ஊர்ல எல்லாருக்கும் தெரியும். யாரு பொண்ணு குடுப்பாங்க?"



"எனக்கு தூரத்து சொந்தக்காரங்க ஒருத்தங்க கிராமத்துல இருக்காங்க! அவங்க மூலமா உனக்கு வெளியூர்ல பொண்ணு தேடுவோம். எவனாவது இளிச்சவாயன் மாட்டாமலா போயிடுவான்?"



"நல்லாத்தாம்மா இருக்கு! கிராமத்துப் பொண்ணுன்னா அடங்கிக் கிடக்கும். கேள்வி கேக்காது! எப்பம்மா நாம பொண்ணு பாக்கப் போறோம்?"



"அலையறான் பாரு! பொறு பொறு! பாக்கலாம்"



"பொண்ணு வீட்டுக்காரங்க கேட்டா எனக்கு என்ன தொழில்னு சொல்லுவ?"



"எம் ஏ படிச்சிட்டு பேங்குல வேலை பாக்கறன்னு சொல்லட்டா?"



"வேண்டாம்! எந்த ஊரு எந்த பேங்குன்னு ஏகப்பட்ட கேள்வி கேப்பாங்க! பேசாம வக்கீலுக்குப் படிச்சுட்டு நிறைய சம்பாதிக்கறான்னு சொல்லிடு. அதான் நல்லது"



"அப்படியே சொல்லிடறேன். ஆனா ஒண்ணு! உனக்குக் கல்யாணம் ஆனப்பிறகு நான் உன் கூட இருக்க மாட்டேன். எங்க அக்கா வீடு இருக்கு பாரு அங்க போயிடுவேன். அதான் எனக்கு சேஃப்டி"



"தாராளமாப் போ! எனக்கும் அது தான் வசதி! சரி சரி! தூங்கு பேசாம" என்றான்.



சற்று நேரம் பொறுத்து ராகவனே ஆரம்பித்தான்.



"அம்மா! தூங்கிட்டியா?"



"என்ன சொல்லு"



"இன்னைக்கு வந்தானே ஒரு ஆளு அவன் வேலையை முடிக்க உன் உதவி வேணும்மா! செய்யிறியா?"



"செய்யறேன். ஆனா கமிஷனை கரெக்டா குடுத்துடணும். போன தடவை அப்படித்தான் ஒரு வேலையை முடிச்சேன். ஆனா கமிஷன் காசு நீ தரவே இல்ல"



"என்னம்மா நீ பெத்த மகன் கிட்டயே கணக்குப் பாக்குற? தாயா நீ?"



"பெத்த மகனோ பெறாத மகனோ? தொழில் வேற! உறவு வேற! 5000 ரூவா தரியா சொல்லு நான் ரெடி"



"ரொம்ப ஜாஸ்திம்மா! 2000 தரேன். அடுத்த வாரம் அங்க போயி நான் சொல்லிக் குடுத்தபடி பேசு"



"எல்லாம் எனக்குத் தெரியும். எப்பவும் பண்றது தானே? செய்யறேன் செய்யறேன். இனியாவது என்னைத் தூங்க விடு! சும்மா தொந்தரவு பண்ணிக்கிட்டு" என்று சொல்லி விட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.



கையைத் தலைக்குமேல் தூக்கியபடி படுத்துக் கொண்டிருந்தவனுக்குள் திருமணத்தைப் பற்றிய பல வண்ணக் கனவுகள்.
 
:love::love::love:

தொழில்ல பொய் சொல்லுவாங்க.....
இங்கே தொழிலே பொய் சொல்லுறது தானா???
வழக்கம் போல ரியல் எஸ்டேட் தொழில் பண்ணுறவன் நல்லா வாயாலே வடை சுடுறானே.....

தாயை போல பையன்.....
வரப்போறவ எப்படியோ???
 
Last edited:
:love::love::love:

தொழில்ல பொய் சொல்லுவாங்க.....
இங்கே தொழிலே பொய் சொல்லுறது தானா???
வழக்கம் போல ரியல் எஸ்டேட் தொழில் பண்ணுறவன் நல்லா வாயாலே வடை சுடுறானே.....

தாயை போல பையன்.....
வரப்போறவ எப்படியோ???
பொறுத்திருந்து பாருங்களேன்!
 
Top