Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 1

Advertisement

கணபதியே அருள்வாய்

காதல் வலம் வர

அத்தியாயம் ஒன்று :

“அறிந்தும் அறியாமலும்

தெரிந்தும் தெரியாமலும்

செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக் காத்தருளல் வேண்டும்,

சத்தியமாய பொண்ணு பதினெட்டாம் படி மேல் வாழும்

வில்லாளி வீரன் வீர மணிகண்டன்

காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கி ஆளும்

ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன்

ஆனந்த சித்தன்

ஐயப்பா சுவாமியேஏஏஏஏஏஏஏஏ” என்ற நாமகரணம் ஒலிக்க...

“சரணம் அய்யப்பா” என்று உரத்த குரலில் சொன்னவன், பின்பு “சுவாமி சரணம் ஐயப்ப சரணம்” என்று சொல்லிக் கொண்டான், அவன் ராஜ ராஜன்.

சபரிமலைக்கு மாலையிட்டு இருந்தான். இன்று இருமுடி கட்டு. அவர்களின் கிராமத்தில் இருந்து ஒரு வேன் கிளம்ப அதில் அவனும் ஒருவன். அவனின் வீட்டினில் இந்த மாதிரி செல்ல ஒத்துக் கொள்ளவேயில்லை.

இவனும் அய்யனின் தீவிர பக்தன், தனியாய் தான் செல்வான். இந்த முறை இவர்களுடன் பிடிவாதம் பிடித்து கிளம்பி இருக்கிறான். அவனின் நண்பன் ஜகதீஷ் செல்வதால். அவன் தான் இந்த முறை என்னுடன் வா என்று பிடிவாதமாய் அழைக்க, சரி என்று என்று விட்டான்.

இப்படி செல்வதெல்லாம் அவனின் பெரியப்பாவிற்கும் அப்பாவிற்கும் கௌரவ குறைச்சல். அவர்கள் எல்லோருடனும் தள்ளி தாங்கள் பெரிய ஆள் என்பது போல நிற்பர், மற்ற மக்களும் அப்படி தான்.

ஆனால் ராஜ ராஜன், ராஜ ராஜன் தான்.எங்கே அவர்களுடன் நிற்க வேண்டும், எங்கே அவர்களுக்கு மேல் ஏற வேண்டும் என்று நன்கு தெரிந்தவன்.

அங்கிருந்த சிவன் கோவிலில் உள்ளிருந்த விநாயகர் முன் பக்கம் ஐயப்ப சுவாமியின் படம் வைத்து பூஜைகள் நடந்து கொண்டிருக்க, இன்னும் இவன் முறை வரவில்லை.

ஏனென்றால் இவனின் வீட்டில் இருந்து இன்னும் யாரும் வரவில்லை. விடியற்காலை ஐந்து மணி அல்லவா. ஏழு மணிக்கு கிளம்புவது, வந்து விடுவார்கள், அமைதியாய் அமர்ந்திருக்க..

அப்போது பார்த்து மனோகணபதி அவனின் குடும்பத்துடன் வர, அதுவும் கோவிலுக்கு போகும் ஏற்பாட்டுடன் வர, “இவனும் வருகிறானா யாரும் சொல்ல வில்லையே என்னிடம்” என்று சுற்றும் முற்றும் பார்க்க,

குருசாமி வேகமாக ஓடி வந்து “அதுங்க தம்பி ஏதோ வேண்டுதலாம், ஒரு வாரம் முன்ன வந்து மாலை போட்டார்” என்று பயந்து பயந்து சொல்ல,

ஜகதீஷை கண்ணிலேயே காணவில்லை. சதிகாரன் சதி செய்து விட்டான். ஓஹ், இது தான் நம்மை வருந்தி வருந்தி அழைத்ததன் நோக்கமா?. பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சிய சிரிப்பு உதடினில் வந்து ஒட்டிக் கொண்டது.

கூடவே “அய்யகோ, காது ஜவ்வு கிழிந்து விடுமோ” என்ற கவலை வந்து அமர்ந்து கொண்டது.

“எனக்கு சொல்றதுக்கு ஒண்ணுமில்லை, இப்ப பெரியப்பா வருவார், அப்பா வருவார், என்னவோ நீங்க பார்த்துக்கங்க” என்று அவன் சொல்லி முடித்த நேரம்,

ராஜ ராஜனின் குடும்பம் மொத்தமும் இரண்டு கார்களில் வந்து இறங்கியது. அவனின் பெரியப்பா சுவாமிநாதன், அப்பா தமிழ்செல்வன், பெரியம்மா வாசுகி, அம்மா தில்லை, எல்லோரும் கூட்டுக் குடும்பம்.

பெரிய அண்ணன் கௌரிசங்கர், அண்ணி பார்வதி அவர்களின் மக்கள் ரோஹித் , சஹானா, சின்ன அண்ணன் நந்த குமார், அண்ணி சிவசங்கரி, அவர்களின் மக்கள் கவின், காவ்யா.

அக்காள்கள் இருவர் சௌந்தரி, விஜயா. அவர்கள் மட்டும் வந்திருந்தனர். அவர்கள் குடும்பம் வரவில்லை. கௌரி சங்கரும் விஜயாவும் இவனின் உடன் பிறந்தவர்கள், சௌந்தரியும் நந்தகுமாரும் பெரியப்பா மக்கள். எல்லோரையும் விட சௌந்தரி மூத்தவர் அவருக்கு பின் கௌரிசங்கர், நந்த குமார் விஜயா.. இவர்களின் கடைக்குட்டி ராஜராஜன்.

அவன் தறிகெட்டு ஓடும் காளையாய் சுற்றினாலும் இவர்கள் அனைவருக்கும் அப்படி ஒரு செல்லம்.

அந்த கிராமத்தில் அவர்களது தான் பெரிய குடும்பம். அவர்கள் வைத்தது தான் சட்டம் அங்கே. இன்னும் கூட இப்படி சில இடங்கள் இருக்க தான் செய்கின்றன. பயம் இருக்கிறதா என்பதனை விட பெரிய குடும்பம் என்ற மரியாதை அதிகம்.

இவர்களை விடுத்து ராஜ ராஜனின் பார்வை ரகசியமாய் மனோகணபதியின் குடும்பத்தை வட்ட மிட, அங்கே மனோ அவன் மனைவி அவனின் நான்கு வயது மகன் விகாஸ் மட்டுமே!

“அட, நம்ம கிழவியை காணோம், கூட வர்றவளையும் காணோம். அது இருந்தாளாவது நம்ம வீடு சும்மா இருக்கும். இல்லைன்னா டேன்ஸ் ஆடுமே” என்று ராஜராஜன் எண்ணி முடித்த நேரம்.

மனோகணபதியை பார்த்து விட்டார் அவனின் பெரியப்பா.

“சாமி” என்று ஒரு கத்து கத்த அவ்வளவு தான் அந்த இடமே அப்படி ஒரு பரபரப்பாகி விட்டது.

“என்னங்க சாமி?” என்று குருசாமி வந்து நிற்க,

“என்ன நடக்குது இங்க? வேணும்னே எங்களுக்கு ஆட்டம் காமிக்க நினைக்கறீங்களா?” என ஆட

“நான் என்னங்க சாமி செய்யட்டும், ஆத்தா பேச்சை மீற முடியலை, அதுவுமில்லாம அவர் ஜில்லா கலக்டரு வேற” என்றார் பவ்யமாய்.

“ஜில்லா கலக்டருன்னா, பெரிய இவனா? மக்க மனுஷா பாக்க வேண்டாமா?” என எகிற,

“என்னலே இங்க சத்தம்?” என்றபடி வந்தார் நாட்சியம்மாள்.

மனோகணபதி நடப்பதை அமைதியாய் வேடிக்கை பார்த்து இருந்தான். எவ்வளவு பெரிய மனிதராய் வேண்டுமானாலும் அவர் இருக்கட்டும். அவனுக்கு ஏதும் கிடையாது.

அவனை அசைக்க கூடியவன் ராஜராஜன் மட்டுமே. மனோவின் தயக்கம் பயம் கவலை எல்லாம் அவனை கொண்டே.

பெரிய பாட்டியை பார்த்ததும் பிக் கிரேனி ( big grani ) என்றபடி விகாஸ் வேகமாய் வந்து நாட்சியின் கையை பிடித்து கொண்டான்.

எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்தாலும் அசால்டாய் நான்கு வயது விகாஸை தூக்கி இடுப்பில் வைத்தவர்..

“போங்க குருசாமி, போய் இருமுடி கட்ட ஏற்பாடு பண்ணுங்க” என அதட்டலிட,

“ராஜா, நீ இவங்களோட போக வேண்டாம். நான் வேற ஏற்பாடு பண்றேன்” என்றார் பெரியப்பா.

அவ்வளவு தான் நாட்சிக்கு பொங்கியதே கோபம் “டேய் சுவாமி, நீ எனக்கு பொறந்தது உண்மைன்னா, இவன் உன் தம்பிக்கு பொறந்தது உண்மைன்னா, போய் நீயே இருமடி கட்ட சொல்லு, இல்லை இதுல எது ஒன்னு இல்லைன்னாலும் கட்ட வேண்டாம்டா” என

சுற்றி நின்றவர்கள் அத்தனை பேரும் வாயடைத்து நிற்க, “ப்ச், இவ எங்க காணோம், இந்த கிழவியை அவ மட்டும் தானே அடக்குவா, இதோடா வாய் என்ன வாயோ? பேச்சை பாரு, அப்படியே இந்த கிழவியை தூக்கி இந்த கோவில் வாசல்ல எறிஞ்சிட்டு வரணும்” என்று ராஜ ராஜனின் மனம் ஜெட் வேகத்தில் பறக்க,

“அமைதி சாமி, அமைதி, இப்போது நீ ஐயனை நினைத்து மலைக்கு செல்லும் சாமி” என்று அவனுக்கு அவனே கட்டுப் படுத்திக் கொண்டான்.

வேகமாய் வந்த வாசுகி “என்னங்க நீங்க? அவங்க பிடிவாதம் தெரியாதா?” என்று கணவனை அடக்க,

“இப்படி சொல்லி, சொல்லி தான், குடும்பத்தை குட்டி சுவாராகிட்டு இருக்கீங்க. சொல்லி வை, அவங்க நினைக்கறது ஒரு நாளும் நடக்காது. அவங்க பொண்ணு குடும்பத்தை நம்மோட ஒட்ட வைக்க முடியாது”

அதற்கு எந்த பதிலும் நாச்சி பேசவில்லை, அமைதியாய் சென்று மனோகணபதியுடன் நின்று கொண்டார். அவன் சற்றும் யாரை பற்றியும் கவலைப் படவில்லை அவனின் கவனம் முழுக்க ஐயனின் பாதத்தில் தான்.

பக்கத்தில் கரிஷ்மா பய பக்தியாய் நின்று கொண்டிருந்தாள். அவனின் மனைவி, வட நாட்டவள், அவர்களது காதல் திருமணம்..

தில்லை தான் தமிழ்செல்வனின் காதை கடித்துக் கொண்டிருந்தார். “இன்னும் உங்கண்ணன் ஒட்ட வைக்க முடியாதுன்னு கத்திட்டு இருக்கட்டும், கல்யாணமே முடிஞ்சு போச்சு”

“அதெல்லாம் கல்யாணமே கிடையாது”

“அதை நீங்க மட்டும் தான் சொல்லணும்”

“யேய், கோவில்ன்னு பார்க்க மாட்டேன், வகுந்துருவேன்” என்று மனைவியை ஏதோ அடியாள் போல மிரட்ட,

“அட போடா” என்ற பார்வையை தில்லை கொடுத்தாலும் வாயை மூடிக் கொண்டார் .. அண்ணன் கோடு போட்டால் இவர் ரோடு போடுவார், அண்ணன் கிழித்த கோட்டை தாண்ட மாட்டார்.

“யாரோ என்னவோ கத்திக் கொள்ளுங்கள்” என்ற பாவனையை மனோ காண்பித்து கொண்டிருக்க,

ராஜராஜனும் அதற்கு சற்றும் குறையாதவனாக இருந்தான். இவ்வளவு அலப்பரைகளையும் யாரினதோ என்று பார்த்து இருந்தான்.

மொத்த குடும்பமும் ஏதோ தெய்வத்தை பார்ப்பது போல ஸ்வாமிநாதனை பார்த்து வைக்க,

நாட்சியம்மாள் மனோ கணபதியின் அருகில் நின்று “கரிசுமா” என்று அவளின் பெயரை கொலை செய்து என்ன முறை செய்ய வேண்டும் என்று சொல்ல,

மனோவுக்கு இருமுடி கட்ட அமர்த்தப் பட, அவனின் பையினில் அரிசியும் காசும் போடப் பட,

“எல்லோரும் போட்டுடாங்களா” என்று குருசாமி கேட்ட நேரம் “என் பேத்தி வருவா சாமி” என்று நாட்சி சொல்ல,

அந்த குரலின் விஷயத்திற்கு ராஜராஜனின் குடும்பம் மொத்தமும் வாயிலை பார்க்க,

அங்கே வந்து கொண்டிருந்தால் ராஜராஜனின் கன்னி , அங்கையற்கண்ணி.

கையில் அண்ணனின் ஒரு வயது பெண் குழந்தை ஸ்ருஷ்டி , வேக நடையிட்டு நடந்து வந்தாள்..

மனோகணபதியின் பாதுகாவலர் ஒருவன் அங்கையற்கண்ணியின் பின் நடந்து வராமல், பக்கவாட்டில் உடன் நடந்து வந்தான். மிகவும் விலகி தான்.

அதுவரை யாரோ என்னவோ என்று அமர்ந்து இருந்த ராஜராஜன் நொடியில் மாறினான். யாரின் அருகில் யார் நடந்து வருவது என்று எண்ணம் மனதினில் தோன்ற, என்னவோ அங்கிருந்தோர் பார்வை எல்லாம் அவர்கள் இருவரையும் பார்ப்பது போன்ற தோற்றம் ராஜ ராஜனுக்கு.

அங்கையற்கண்ணி ராஜ ராஜனை கவனமாய் தவிர்த்து அண்ணனை பார்த்து நடையிட்டாள், அவனை கடந்து சென்றும் விட்டாள். மொத்த வீடும் அவளை பார்த்தது.

அந்த நடை, அந்த உயரம், அந்த தோற்றம், கதையில் வர்ணனையில்வரும் ராஜ குமாரிகள் இப்படி தான் நேரில் இருப்பார்களோ என்று தோன்றும் படி இருப்பாள்..

அங்கையற்கண்ணி தான் கடந்தாள், அந்த பாதுகாவலன் ராஜராஜனை கடக்கும் முன் தலை குப்புற விழுந்திருந்தான்.. என்ன நடந்தது என்று ஒருவருக்கும் தெரியவில்லை.

யாரோ வேகமாய் வந்து அவனை தூக்கி விட அவன் விழுந்ததில் நெற்றியில் அடிப்பட்டு சிறிது ரத்தம் வந்ததோ?

அங்கையற்கண்ணி அதிர்ச்சியில் அங்கேயே அப்படியே நின்று விட்டாள்.

“சுவாமி சரணம்” என்று ராஜராஜனின் வாய் முனுமுனுக்க, அங்கையற்கண்ணி வேகமாய் திரும்பி பார்த்தவள், அந்த பாதுகாவலனிடம் வர முயற்சிக்க,

“அங்கை” என்று மனோவின் குரல் அவளை தேக்கியது.. குரல் அவளை தேக்கினாலும் மனோ கரிஷ்மாவை பார்த்து முறைத்தான். அவளோடு வராமல் உன்னை யார் முதலில் வர சொன்னது என்ற பார்வை அது.

“சாரி” என்றவள் வேகமாக அந்த பாதுகாவலனை நோக்கி சென்றாள்.

“இங்க வா, அண்ணி பார்த்துக்குவாங்க” என்று சொல்ல,

அண்ணன் அமர்ந்திருக்க அவளும் அரிசி போட்டு, ஸ்ருஷ்டியின் குட்டி கை பிடித்து அரிசி போட, அவனின் இருமுடி கட்டும் பணி முடிந்தது.

பாதுகாவலன் அங்கேயே அமர்ந்திருக்க, அதற்கு பக்கம் ராஜராஜனும் இருக்க.. அங்கை “உன்னை என்ன செய்தால் தகும்” என்ற பார்வையை அவனிடம் கொடுக்க, ராஜன் அவளை பார்க்கவேயில்லை.

“நீங்க வாங்க” என்று அவன் அழைக்கப் பட,

அடுத்து அமர்ந்த ராஜராஜனின் முகம் ஏகத்திற்கும் இறுகியிருக்க, தில்லை அவனின் அருகில் முதலில் வந்தவர் “இவ்வளவு கோபம் கூடாது ராஜா, அதுவும் மாலை போட்டிருக்க” என்றார்.

பாதுகாவலன் விழுந்ததிற்கு காரணம் ராஜராஜன் என்று அங்கிருந்த அநேகம் பேருக்கு தெரியும்.

ராஜராஜன் பதில் பேசவில்லை. சுவாமினாதனில் ஆரம்பித்து பின் அத்தனை பேரும் அரிசி போட, “இனி அவ்வளவு தானா” என்று குருசாமி குரல் கொடுக்க,

“சாமி” என்று நாட்சியம்மாள் வந்தவர் அரிசி போட, அங்கையற்கண்ணி அண்ணனின் அருகில் நின்றிருக்க,

“அங்கை” என்ற நாட்சியம்மாளின் கணீர் குரல் கேட்க, சுவாமிநாதன் வேக வேகமாய் அந்த இடத்தை விட்டு அகன்று விட, அவரின் பின் குடும்பத்தினர் அத்தனை பேரும் சென்று விட,

ராஜராஜன் அந்த இருமுடிப் பையை மூடப் போவது போல ஒரு செய்கை, அது பாவ்லாவா இல்லை நிஜமாய் மூட எத்தனித்தானா, இது ஒரு விடை அறிய முடியா கேள்வி?

நாட்சியம்மால் உடனே “என் பேத்தி வரணும் சாமி, இருக்க சொல்லுங்க” என்று அதட்டல் போட,

“உன் பேத்தி போடாம, அவன் அந்த இடத்தை விட்டு எழுந்திடுவானா அத்தை என் பையன்” என்று தில்லை மனதிற்குள் கௌண்டர் கொடுத்தவர், தேமே என்று முகத்தை வைத்து நின்றிருந்தார்.

“பாட்டி என்ன பண்றீங்க நீங்க? அவங்க குடும்பத்து ஆளுங்க, போட்டுடாங்க போதும்” என்று அங்கை அங்கிருந்தே எல்லோர் காதிலும் விழும் வகையிலேயே பதில் கொடுத்தாள்.

“நீ போட்டா தான் முடியும் வா” என்று அந்த பெரிய மனுஷி அதட்ட

“அதான் பாட்டி சொல்றாங்கள்ள வாங்கம்மா” என்று மரியாதையாய் குருசாமி அழைக்க,

“அண்ணி, வாங்க அண்ணி” என்று அத்தனை நேரம் கண்ணில் படாத ஜகதீஷ் வந்து நிற்க,

இன்னும் இரண்டு மூன்று பேர் சொல்ல,

“போம்மா, மனைவி போடாம எப்படி? போம்மா” என்று யாரோ ஒரு பெண்மணி சொல்ல, அருகில் வந்த அங்கை முகம் ராஜராஜனின் முகத்தை விட இறுகி இருந்தது.

அவள் வந்து அரிசி போட, “சுவாமி சரணம்” என்று ராஜராஜனின் இதழ் முணுமுணுத்தது..

மனோவின் கண்கள் ராஜராஜனை சற்று பயமாயும் கவலையாயும் பார்த்தது.

ஆனால் அண்ணனின் பயமோ கவலையோ சிறிதும் தங்கைக்கு இல்லை.

“சுவாமி சரணம்” என்ற வார்த்தையோடு, வணங்கும் கை கூப்பளோடு, அங்கையின் விழிகள் தீட்சண்யமாய் ராஜராஜனை பார்க்க,

அதற்கு சற்றும் குறைவில்லாமல் தீட்சண்யமாய் பார்த்து அவளின் கை கூப்பளுக்கு “சுவாமி சரணம்” என்று சொல்லியபடி சிறு தலையசைப்பை பதிலாய் கொடுத்தான்.











ஆக்கமும் எழுதும்

மல்லிகா மணிவண்ணன்
Super
 
அசத்தல் ஆரம்பம் மல்லி...
கூடவே மல்லி மாயமும்...
 
Top