Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 27

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
மாலை நேரம் ..

அந்த நூலகத்துக்குள் இருந்து வெளியே வந்தாள் விசாலாட்சி !

மஞ்சள் நிறத்தில் காபி போடி நிறத்தில் சிறு புட்டாக்கள் போட்ட பாவாடையும் ரவிக்கையும் அணிந்து காபி போடி நிறத்தில் தாவணி அணிந்திருந்தாள்.

காதில் அணிந்திருந்த சிறு ஜிமிக்கியும் நெற்றியின் பொட்டும் அவள் அழகை கூட்டி காட்ட கைகளில் இசைகூட்டிய பொன் வளையல்களும் , வலம்புரி சங்காக மின்னிய கழுத்தில் தவழ்ந்த மெல்லிய சங்கிலியும் அவளது செல்வ நிலையை பறைசாற்றியது.

தன தோழிகளோடு நூலகத்தை விட்டு வெளியே வந்தவளுக்கு .. பெண்களுக்கே உரிய நுண்ணுணர்வு விழித்துக்கொள்ள ..யாரோ தன்னை நோக்குவதை அறிந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். ஆனால் யாரையும் காணவில்லை.

" என்னடி விசு நின்னுட்ட?" கேட்ட ராகினி குஜராத்தை சேர்ந்தவள். வெண்ணை நிறமும், மெலிந்த உடலும் ,சிவந்த இதழ்களும் வடக்கத்தி பெண் என்று சத்தியம் செய்தன .சிகப்பு நிற சல்வாரில் அம்சமாய் இருந்தாள். தந்தை ரயில்வே அதிகாரி. அவளும் விஷாலினியும் ஒன்றாய் பயிலும் தோழிகள்.

"ஒன்னும் இல்லடி..வா போலாம் " என்றவளுக்கு மறுபடியும் அதே உணர்வு .சட்டென்று திரும்பி பார்த்தவளின் விழி வீச்சில் சிக்கின மதில் சுவர் மீது தெரிந்த இரு விழிகளும் பட்டையாய் விபூதி பூசிய நெற்றியும் தான்.

இவள் எந்த திசை நோக்கி பார்க்கிறாள் என்று பார்த்த ராகினியும் அவனை பார்த்தாள்..அவள் மிகுந்த துணிச்சலான பெண்!

அந்த மதில் சுவர் நோக்கி செல்ல "ஏய் நில்லு ராகினி .. " என்றபடி அவள் பின்னே ஓடினாள் விசாலாட்சி .

இவர்கள் தன்னை பார்ப்பதை உணர்ந்த சண்முகம் மதில் சுவருக்கு கீழ் மறைந்து கொள்ள ..சுவரின் அருகே வந்த ராகினி " ஏய் ..யாரு மேன் அந்த பக்கம் ? எதுக்கு எட்டி பாக்கிற " என்றாள் அதட்டலாக.

அந்த பக்கமிருந்து சத்தம் ஏதும் வரவில்லை .."ஏய் போய்டலாம்டி ..எதுக்கு வம்பு ?" என்றாள் விசாலாட்சி.

வம்பு வந்தால் விட்டு விடும் பழக்கம் உள்ளவளல்ல ராகினி .அதனால் விடாது "ஏய் யாரது ?" என்றாள் மிரட்டலாய்.

சில வினாடிகளுக்கு பின் மதிலின் மீது எட்டி நன்றாக தலையை நீட்டினான் சண்முகம் "ஏங்க.. தயவு செஞ்சு சத்தம் போடாதீங்க " என்று கெஞ்சியபடி.

"எதுக்கு எங்களை எட்டி எட்டி பார்த்தே ?"

இதற்கு பதில் சொல்லாதவனின் பார்வை மட்டும் விசாலாட்சி யின் கையில் இருந்த புத்தகத்தையே பார்த்தது.

இரு அழகிய பெண்களின் முன்னே நின்று இருந்த அந்த இருபது வயது இளைஞனின் விழிகளோ அவர்களின் அழகை பருகாமல் அவள் கையில் இருந்த புத்தகத்தையே தாகத்துடன் நோக்கின.

இதை உணர்ந்ததும் ராகினியின் கோபம்தணிந்தது.

"என்ன வேணும் உங்களுக்கு ?" வார்த்தைகளிலும் மரியாதை ஏறியிருந்தது இப்போது.

நெற்றியில் இருந்து வியர்வை பெறுக நின்றிருந்தவனை ஆர்வமாய் பார்த்தாள் விசாலாட்சி. "நீங்க தப்பா நினக்கலன்னா ..தப்பா நினைக்கலன்னா "

"என்ன தப்பா நினைக்கணும் ?" குறும்பு சிரிப்போடு கேட்டாள் ராகினி.

"இல்லங்க உங்க கைல இருக்க புக் கொஞ்சம் கடனா குடுக்க முடியுமாங்க? "

ராகினி அரசு தேர்வுகளுக்கு தயாராவதால் இவர்கள் கல்லூரி பேராசிரியர் இந்த புத்தகத்தை படிக்க சொல்லி இருக்க .. அதற்காகத்தான் நூலகம் வந்திருந்தனர். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம் ..அவர்கள் அங்கே இங்கே என்று கஷ்டப்பட்டு நூலகம் முழுக்க தேடி கண்டுபிடித்த புத்தகத்தை இவன் எட்ட நின்று பார்த்த ஒரே பார்வையில் கண்டு கொண்டு விட்டானே!

ஏனெனில் அவன் அந்த புத்தகத்தை அத்தனை தூரத்தில் தான் தினமும் பார்க்கிறான். அவர்களது பேராசிரியரும் ஒரு சில வசதியான மாணவர்களும் அதை விலைக்கு வாங்கி வைத்திருக்க .. இவனுக்கு அதன் தோற்றம் வெகு பரிச்சயம் .. ஆனால் அவர்கள் படிக்காவிட்டாலும் கூட இவனுக்கு தந்து உதவ மாட்டார்கள்.

பெண்களாதலால் சற்றே மனம் இறங்கி தந்துதவுவார்கள் என்று நினைத்து இவன் கேட்க.. உண்மையிலேயே இருவருக்கும் மனமிரங்கி தான் போயிற்று!

இருந்தாலும் குறும்பு மிக்கவளாச்சே ராகினி "புக்க வாங்கிட்டு நீக்க திருப்பி தராட்டி நாங்க தான் பைன் கட்டணும் ..எதை நம்பி உங்க கிட்ட கொடுக்கறது ?"

"ஐயோ ஏமாத்தலாம் மாட்டேனுங்க ..எங்க குல சாமி கருப்ப சாமி சத்தியமா நாளைக்கு சாயங்காலம் இதே நேரத்தில உங்க கிட்ட தந்துடுறேனுங்க "

"சரிங்க ..நம்பி தரோம்..உங்க பேரென்ன ? எந்த காலேஜ் ?" அவன் கண்களில் இருந்த ஏதோ ஒன்று இருவருக்குள்ளும் நம்பிக்கையை விதைக்க மதில் சுவர் எட்டி புத்தகத்தை நீட்டினாள் விசாலாட்சி.

"சண்முகமுங்க.. கவர்மெண்டு காலேஜுதானுங்க . எக்கனாமிக்ஸ் மூணாவது வருஷங்க. இந்த ஹாஸ்டல்ல தங்க இருக்கேன் "

"வாங்கிக்கோங்க .. ஆனால் நாளைக்கு எங்களால வர முடியாது..நாளான்னைக்கு தான் வருவோம்.அப்போ கொண்டு வந்து குடுத்தால் போதும் " முதல் முறையாய் வாய் திறந்து பேசினாள் விசாலாட்சி. ராகினி ஏதோ சொல்ல வர அவளது கைகளில் லேசாய் அழுத்தம் கொடுத்து அடக்கியவள் "நாளை மறுநாள் சாயங்காலம் நாலு மணிக்கு வரோம் ..சரிங்களா?" என்றதும் சட்டென்று அவன் முகத்தில் தீபத்திருவிழா ..அத்தனை பிரகாசம் !

விரல் படாமல் பவ்யமாக அவன் புத்தகத்தை வாங்கிய லாவகத்தில் உள்ளூர அவளுக்கு புன்னகை மலர்ந்தது . ராகினியோ இதழ்களில் கேலி சிரிப்பொன்று உதிக்க "ஆமாம் ..நீங்க தான் எங்க முகத்தையே பாக்கலையே.. வேற யார்கிட்டயாவது குடுத்துற மாட்டிங்களே?"

"அய்யயோ இல்லங்க ..கரிக்டா குடுத்துர்றேங்க" என்றவன் கண நேரம் நிமிர்ந்து விசாலாட்சியின் முகத்தை நோக்க மை தீட்டிய அந்த விழிகள் அவனை ஆதூரத்துடன் நோக்கின.

புத்தகத்தை கொடுத்துவிட்டு நூலக வாயிலில் இருந்த சிறு இரும்பு கேட்டை திறந்து வெளியேறியவர்கள் இவர்களுக்காக காத்திருந்த காரில் ஏறிக்கொள்ள கதவை திறந்துவிட்ட பழனி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியை உறும விட்டான். அது ஒரு கரும்பச்சை நிற மாருதி 800 ! விசாலாட்சி கல்லூரி செல்வதற்காகவே அவள் தந்தை வாங்கியது .


அவள் கணியூரை சேர்ந்த பெரிய குடும்பத்து பெண்..அவள் தான் அந்த கிராமத்திலேயே முதல் முதலாக கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கிறாள். பெரும்பாலான பெண்கள் பள்ளியையே தாண்டுவதில்லை அவர்கள் ஊரில்.. அனைவருமே வசதியானவர்கள் தான் ..ஆனால் பெண் பெரியவளானதும் கட்டி குடுத்து விட வேண்டும். முறைமாமன் தாய்மாமன் என்று எவனாவது இருப்பான்.. பெரும்பாலும் அதே ஊருக்குள்ளோ அல்லது அந்த ஊரை பூர்வீகமாக கொண்டவர்களுக்கே கொடுப்பார்கள். வேற்றூரில் சம்மந்தம் செய்ய மாட்டார்கள். விசாலினிக்கும் பேசி வைத்து கொண்டது தான் ..அவளது தாய் மாமன் மகனை கட்டுவது என்று ... ஆனால் அவளுக்கு கல்லூரி சென்று படிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை .. இவளது தாய் மாமன் குடும்பம் கோவையில் வசிப்பவர்கள்.இவளுக்கு பேசி வைத்தது அவர்களது இளைய மகன் கார்திகேயனைத்தான். அவன் மேல் படிப்பிற்காக மூன்று வருடங்கள் அயல் நாட்டிற்கு சென்று விட திருமணம் தள்ளி போனது ..அவனும் சொல்லி விட்டான் அவள் விருப்பப்பட்டால் படிக்கட்டும் என்று! இவளும் வீட்டின் செல்ல பெண் ..அதனால் அவர்கள் ஊரில் முதல் முதலாக டவுன் கல்லூரியில் சேர்ந்த பெண் அவள் தான். அவளுக்காகவே புதிதாக சிறு கார் ஒன்றை வாங்கியிருந்தார் அவளது தந்தை சிங்கமுத்து. பெயருக்கேற்றாற்போல் சிங்கம் தான் அவர் . ஆனால் விசாலாட்சி என்றால் ரொம்ப பிரியம் .. சிறு வயதிலேயே தாயை இழந்தவர். தன தாயின் உருவத்தில் தன மகள் இருப்பதால் அவளுக்கு ரொம்பவே செல்லம் கொடுப்பார். ஆனால் கட்டுக்காவலும் உண்டு ..எப்போதும் கூடவே இருக்கும் பழனி ஓட்டுநர் மட்டுமல்ல ..கிட்டத்தட்ட மெய்க்காவலன் போல்! அவனும் இவர்கள் ஊரை சேர்ந்தவன் தான். சிங்கமுத்துவின் பங்காளி மகன் ..ஆனால் சற்றே தூரத்து சொந்தம்.


பெரிதாக படித்து வேலைக்கு செல்லும் ஆசை எல்லாம் இருக்கவில்லை விசாலாட்சிக்கு! அவர்கள் ஊர் சினிமா தியேட்டருக்கு ஒருமுறை இவள் தந்தை அழைத்து சென்றார்.. அந்த சினிமா படத்தில் பார்த்த கதாநாயகிகளை பார்த்ததும் இவளுக்குள் ஒரே ஆசை ..இவளும் அதே போல் மிடுக்காகவும் நாகரீகமாகவும் இருக்க வேண்டும் என்று .. அதை கொண்டே ராகினியை அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது. பார்த்த முதல் பார்வையிலேயே அவள் மீது ஒரு அபிமானம்! ராகினியும் இனிமையான பெண்.. விசாலாட்சியின் அப்பாவித்தனத்தில் மயங்கிவிட்டாள். உண்மையில் அப்பாவி தான் விசாலாட்சி. படிப்பிலும் சுமார்தான். ஆனால் முயன்று படித்து பாஸ் பண்ணிவிடுவாள்.


காரில் ஏறியதும் "சரிடி என்னை காலேஜில் விட்டுடு . என் சைக்கிள் அங்க நிக்குது " என்றபடி அவள் அருகே அமர்ந்தாள்.

"என்னம்மா புத்தகம் எதுவும் எடுக்கலையாம்மா ?" என்றான் பழனி இவர்கள் வெறும் கையுடன் வந்ததை கவனித்து !

"இல்லண்ணா.. நாங்க தேடி வந்த புத்தகம் கிடைக்கல ..நாளை மறுநாள் தான் வருமாம் " என்று ராகினி கூற "ஓ..அப்போ நாளன்னிக்கு திரும்ப வரணுமா?" என்றபடி காரின் வேகத்தை கூட்டினான் பழனி .

"ஆமாண்ணா" என்றதுடன் விசாலாட்சி ஏதோ பேச வர இப்போது அவளது கரத்தை லேசாக அழுத்தினாள் ராகினி .

அதற்குப்பின் இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை .. பழனியின் கண்கள் முன்புறம் இருந்தால் செவிகள் பின்புறம் இருக்கும் என்பதை விசாலாட்சி அறியாவிட்டாலும் ராகினி நன்கு அறிவாள்.

அவள் வெகு புத்திசாலி .. பல ஊர்களுக்கு சென்று பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்தவள்! இங்கு ஒரு ஆணும் பெண்ணும் பேசினாலே காதல் என்று கொள்ள படும் என்றறிவாள்.பழனியும் ஓட்டுநர் என்ற எல்லையில் நிற்க மாட்டான் என்று தெரியும் .தங்கச்சி என்றுதான் அழைப்பான்.சொந்த அண்ணனைப்போல பாசம் மட்டும் அல்ல அடக்குமுறையும் காட்டுவான். வேற்று ஆடவனை குறித்த சிறிய பேச்சுகள் கூட உடனே சிங்கமுத்துவின் காதை எட்டிவிடும். தானே அவளது பாதுகாப்புக்கு பொறுப்புஎன்றும் பிற ஆண்களால் அதற்கு பங்கம் நேர்ந்துவிடும் என்று உறுதியாக நம்புபவன்.

ஆண்கள் பெரும்பாலும் பெண்களை கட்டுப்படுத்துவது பாசத்தினால் தானே .. அவளுக்கு தாங்களே அரண் என்று நினைத்து கொண்டு அவளை வெளியேற முடியாமல் அடைத்து வைப்பார்கள் .. அதை விட்டு வெளியேறினால் பேய்களும் ரத்தக்காட்டேரிகளும் அவளது குருதி குடிக்க காத்திருப்பதாக நம்ப வைப்பார்கள். அந்த அரணுக்குள் வாழும் வாழ்வே சொர்ககம் என்றும் நம்ப வைப்பார்கள்.
 
Top