Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 26

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
பிற்படுத்தப்பட்டோருக்கான மாணவர் தங்கும் விடுதி அது !

விடியலிலிருந்தே பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. உலகெங்கிலுமுள்ள ஆண்கள் விடுதி எப்படி இருக்குமோ அப்படிதான் இருந்தது.. அறைகள் எல்லாம் அசுத்தமாய் ஆடைகளும் , காகிதங்களும் எங்கும் இறைந்து கிடக்க.. உண்ட தட்டுகள் கழுவியும் கழுவப்படாமலும் ஒரு சுவரோடு பதிக்கப்பட்ட அலமாரியில் ஒழுங்கற்று இருக்க ஒரு சில கட்டில்கள் வெகுவாக அடிபட்ட நிலையில் இருக்க பெரும்பாலும் தரையில் பாய்களை விரித்து படுத்திருந்தனர் மாணவர்கள்.

சிலர் இன்னும் தூக்கத்தில் இருக்க.. பலர் உபயோகிக்கும் நிலையிலிருந்த மூன்று கழிவறைகளுக்கு முன்பாக வரிசைகளில் காத்திருக்க .. வெகு சிலர் நேரத்திலேயே குளித்து உடைகளை துவைத்து கல்லூரிக்கு தயாராகி உணவுக்கூடத்தில் அமர்ந்திருந்தனர்.

அவர்களில் சண்முகமும் ஒருவன்..!

சண்முகம் ..!

ஒரு சிற்றூரில் இருந்து வந்து ஈரோடு டவுனில் தங்கி படித்து கொண்டிருப்பவன்.

நலிந்தோருக்கு அருள் பாலிக்கும் தமிழ் கடவுள் சண்முகனை போலவே சாந்தமான முகம் .. பாடிய வாரிய தலையிலிருந்து லேசாய் என்னை இறங்கிய நெற்றியில் பட்டையாய் விபூதி .எது இல்லாவிட்டாலும் நெற்றியில் பட்டையின்றி அவனை பார்க்க முடியாது .. அவன் தோழர்கள் அவனை செல்லமாய் அழைப்பதே "டேய் பட்டை" என்பதே ! சற்றே கரிய நிறம்.. சாயல் அவன் அன்னையை கொண்டிருக்க அதுவே ஒரு வசீகரத்தை கொடுத்தது.. தாயின் சாயலில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு முக வசீகரம் என்றுமே கூடுதல்தான்!

கருநிற முகத்தில் லேசாய் வெளிறி தெரியும் இதழ்கள் .. அதற்கிடையில் மின்னிக்கொண்டிருக்கும் பல்வரிசை.. எல்லாவற்றையும் மிஞ்சி அவன் முகத்தில் பொலியும் அறிவுக்களை! அதன் பொருட்டு சுடர்விடும் விழிகள்! பார்த்ததும் யாரையும் கவர்ந்து விடும் அவன் அப்பாவித்தனம் !

படிப்பில் என்றுமே அவன் முதல் தான்! கல்வி தான் நம்மை கரையேற்றும் அன்று பிறந்தது முதலே அவனது தாயும் தந்தையும் உணவை ஊட்டியதைவிட இந்த உணர்வையே அதிகம் ஊட்டியிருந்தனர்.. அத்தனை வறுமை ... பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதாலேயே குறைந்த கூலி .. அதில் இவன் , இவனது தங்கை, தாத்தா , மனவளர்ச்சி குன்றிய சிறிய தந்தை மற்றும் இவன் பெற்றோர் என்று வீட்டிலுள்ள அறுவரின் வயிற்றுக்கு ஒரு வேளை உணவளிப்பது என்பதே மிகுந்த சிரமம் இவன் தந்தை மாடசாமிக்கு! இவனது இரு தம்பிகளும் கைக்குழந்தையாய் இருந்த போதே வயிற்றுப்போக்கால் தவறியிருந்தனர்.. சரியான ஊட்டமும் மருத்துவ உதவியும் இன்றி.

இவன் தாய் மரிக்கொழுந்தும் தோட்டங்களில் கூலி வேலை செய்பவர் தான். இருந்தும் சிரம தசை தான்.

இவர்கள் மட்டுமல்ல.. கிட்ட தட்ட மொத்த கிராமமுமே அப்படிதான் !
மதியம் உண்ணும் சத்துணவு மட்டுமே நல்ல உணவாக இருக்கும் .. மற்ற வேளைகளில் வெறும் பழையதோ .. கூழோ.. அதுவும் பல நாட்களில் இல்லை .

மதிய சத்துணவும் கூட முன்பெல்லாம் நன்றாயிருக்காது ! புழு நெளியும் சோறும், தண்ணியாக ஒரு குழம்பு, பெரும்பாலும் அந்த பக்கத்தில் மலிவாக கிடைக்கும் ஒரு காய் ..என்று இருந்தாலும் அதுவே அவர்களுக்கு விருந்துணவு போல இருக்கும். முட்டை பெரும்பாலும் உணவு கூடத்து பொறுப்பாளன் சிவநேசன் வீட்டிற்கும் ,மிகுதியானது அண்ணாச்சி கடைக்கும் விற்பனையாகிவிடும். யாரும் கேட்டு விட முடியாது.. மீறி ஏதோ ஒரு பிள்ளை "முட்டை தாங்க அய்யா " என்று கேட்டுவிட்டால் கடும் தண்டனைகள் தான் .. பிரம்படியும், வெய்யிலில் மணிக்கணக்காக நிற்கவுமாக .. யாரும் கேட்பது இல்லை..உணவை குறை ஏதும் சொல்லாமல் உண்ண கற்று கொண்டனர்..வழி வழியாக அவர்களுக்குள் புகுத்தப்பட்ட அடிமைத்தனம் அவர்களை கேள்வியின்றி பணிந்து போக செய்தது.


பின்பு சொக்கலிங்கம் வாத்தியார் அந்த பள்ளிக்கு வந்த பின் தான் பிள்ளைகளுக்கு விமோச்சனம்!

நல்ல அரிசியில் சமைத்த சூடான சோறும், ஓரளவு சத்துள்ள காய்களும்,தினம் கட்டாயம் ஒரு முட்டையும்.. என்று பிள்ளைகள் அப்போதுதான் நல்ல உணவென்றால் என்ன என்பதையே அறிந்தனர் ..சில சமயம் அவரது தோட்டத்தில் இருந்து காய்கறிகள் அனுப்புவார் .. பிள்ளைகளை படிப்பித்தலிலும் அவரது ஆர்வமும் முயற்சியும் பெரிது.. இங்கு நல்ல சத்துணவு கிடைப்பதாலேயே சுத்துப்பட்டிலுள்ள கிராமங்களின் பிள்ளைகளும் இந்த பள்ளியில் சேர்ந்தனர். சொக்கலிங்கம் வாத்தியார் தான் அவர்களுக்கு தெய்வம் போல்!

மேல் சாதி மக்களுக்கோ அவர் பரம எதிரி போல் தெரிவார்.. பின் அவர்களில் ஒருவராக இருந்தாலும் அவர்களை போல் இல்லாமல் இந்த ஜனங்களுக்காக உழைக்கிறாரே.. உண்மையில் அவர் படித்த படிப்பிற்கு பட்டணத்தில் நல்ல வேலை..ஆடம்பரவாழ்க்கை என்றில்லாமல் இப்படி சொந்த ஊரில் வாத்தியார் வேலை அதுவும் இந்த கீழ்ப்பட்ட மக்களுக்காக என்று ஊரே அவரை பேச .. அவரோ உண்மையிலேயே கல்வி என்னும் விளக்கினால் அறியாமை நீங்க பட்டவர் ..வெறும் டிகிரிகளை மட்டும் அடுக்கி கொண்டவரில்லை.. ஏற்ற தாழ்வு அவர் மனதில் என்றும் இருக்கவில்லை!

என்றுமே உடல் உழைப்பினால் திடமான சண்முகத்திற்கு இப்போது நல்ல உணவும் கிடைத்திட நல்ல திட காத்திரமான உடல் அமைப்பு .. கரிய நிறமும் மாநிறமாக தெரிந்தது. படிப்பிலும் கெட்டி ..அப்பா அம்மாவுடன் விடுமுறை நாட்களில் அவனும் காட்டு வேலைக்கு செல்வான் .. வேளாண்மை அவனுக்கு நன்கு கை வந்தது.வேளாண் கல்லூரியில் தான் படிக்க ஆசைப்பட்டான் ..அனால் மாடசாமிக்கு பிடித்தமில்லை.. டவுனில் ஏதாவது வேலை பார்த்தல் நல்லது என்று பிரியப்பட்டார்... தங்கையை கரையேற்றவும் , கிராமத்தின் பிற்போக்குத்தனங்களில் இருந்து விடுபடவும் வேண்டும் என்று விரும்பினார்.


அதற்கேற்றாற்போல் பள்ளி இறுதியில் நல்ல மதிப்பெண்களை சண்முகம் எடுத்திருக்க ..பி.ஏ பொருளாதாரம் சேர்ந்திருந்தான். டவுன் கல்லூரியில்! நல்ல மதிப்பெண் என்பதால் உதவித்தொகை கிடைக்க ..தங்குவதற்கும் அரசின் விடுதி! இப்படியாக செலவுகள் இல்லை.. மேலும் மாலையில் ஒரு துணி கடையில் விற்பனையாளனாக இருக்க அந்த வருமானத்தை சேமித்து தங்கைக்கு திருமணம் செய்துவிட்டான் .


இப்போது மூன்றாவது வருடம் படித்து கொண்டிருக்கிறான் ..தங்கை இவனை விட ஒரு வயதே சிறியவள் ..அவளும் 12 வரை படித்திருக்க டீச்சருக்கு படிக்க அவளுக்கு ஆசை .. சொக்கலிங்கம் வாத்தியார் தயவில் அவளும் கல்லூரியில் சேர்ந்திருந்தாள்.. ஆனால் ஊருக்குள் ஒரே பேச்சு ..இப்படி பொட்ட புள்ளைய கட்டி குடுக்காம வச்சிருக்கியே என்று !


இவன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை.. வேறு வழியின்றி மாமன் மகனுக்கே கட்டி வைத்தனர் ..அவர்கள் இருப்பது திருப்பூரில் என்பதால் இவனுக்கு ஒரு நிம்மதி எப்படியோ இந்த ஊரை விட்டு போனாளே என்று .


தன் மாமனிடம் சொல்லி தங்கையை அங்கே உள்ள கல்லூரியிலேயே சேர்த்திருந்தான். அவர்களும் இருப்பது டவுனாதலால் வெவ்வேறு மனிதர்களை பார்க்கிறார்கள் .. பெண்கள் பனியன் கம்பெனிகளிலும், பள்ளியிலும் , மில்களிலும் , மருத்துவமனைகளிலும் வேலை பார்ப்பதை பார்த்து கொண்டு தானிருக்கின்றனர். தங்கள் ஊர் போல எல்லோரும் கூலி வேலை அடுப்படி என்று முடங்குவதில்லை. அதிலும் சித்ராவின் கணவன் ராஜவேலு தன் மனைவியை நன்கு புரிந்தவன் . அவள் படிப்பில் கெட்டி என்றும் அறிவான்.


சுற்றியுள்ளோர் போட்ட தூபமெல்லாம் வேலை செய்யவில்லை !


"உன்ன விட கூட படிக்கவைக்காத .. அடங்கமாட்டா " என்றனர்.


"படிப்புக்கு ஏன்பா செலவளிக்கிற ? நம்ம பனியன் கம்பெனில சேர்த்துவிட்டா மாசம் நூறு ரூவா சம்பளம்ப்பா" என்றனர்.


"இவபடிக்க போயிட்டா புள்ள குட்டி பெத்துக்க வேணாமா? " என்றனர்.


" உங்கப்பாம்மாவை யாரு பாத்துப்பா? உனக்கு வாய்க்கு ருசியா சமைக்க வேண்டாமா ? "என்றனர்.


எவ்வளவோ பேச்சுக்கள் ! எதற்கும் அசையவில்லை ராஜவேலு ! அவன் பெற்றோருக்கும் விருப்பமில்லை ! ஊர் என்ன சொல்லும் என்பதே மனதுக்குள் உறுத்தியது !


"ஏற்கனவே ஆறு மாச படிப்பை முடிச்சுட்டா ..இனி ஒன்றரை வருஷம் தான் .கோயம்புத்தூரு காலேசுலயே சேத்தாச்சி.. காலையில ஏழு மணிக்கு போனா சாயங்காலம் ஏழு மணிக்கு வரப்போறா ..தெனத்துக்கும் பழங்கஞ்சி தான் குடிக்கிறோம்.. மூணு வேளையும் சுடு சோறா தின்கிறோம். ராத்திரிக்கே ஆக்கி வச்சிட்டு போரா.. அவளுக்கு பரிச்சை இருந்தா நீ ஆக்கி போடு ..உன்னால முடியாட்டி சொல்லு நானே சோறு பொங்கறேன்" என்றுவிட்டான் அவன் தாய் வள்ளியிடம் .


நாத்தனார் மகள் சித்ராவை அவளுக்கு என்றுமே பிரியந்தான்.. அவளை விட ராஜவேலுவுக்கு அதிக பிரியம். பிறந்ததிலிருந்தே அவள் தனக்கு தான் என்ற எண்ணத்தோடு வளர்ந்தவன்.. அவள் பத்திலும் பன்னண்டு பரீட்சையிலும் நல்ல மதிப்பெண் எடுக்க அவனை கையிலேயே பிடிக்க முடியவில்லை.. அவனும் ஓரளவுக்கு படிப்பான் என்றாலும் அவன் தந்தை பக்கவாதம் வந்து விழுந்துவிட .. தாயும் வீட்டோடு அவரை பார்த்துக்கொள்ள அமர்ந்துவிட .. தங்கை தம்பிகள் சிறியவர்கள் .. அத்தனை பொறுப்பும் இவன் தலையில் !


பத்தோடு படிப்பை மூட்டை கட்டியவன் .. அந்த ஊர்காரர்களுக்கு வேறென்ன வழி பனியன் கம்பனி தான்!


பதினாறு வயதில் வேலைக்கு வந்தவன்.. இன்று வரை உழைப்பு உழைப்பு உழைப்பு தான்.


அப்போது சித்ராவிற்கு பத்து வயசு .. எங்கே அதிகம் படித்து விட்டால் தன் மகனுக்கு கட்டி தர மாட்டார்களோ என்று அவள் பூப்பெய்தியதில் இருந்தே இவர்கள் கல்யாணத்திற்கு தன் நாத்தனாரை நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள் வள்ளி.

ராஜவேலு தான் தள்ளி போட்டுவிட்டான் "எம்மா என் சம்பளத்தில் இங்க நம்ம ஏழு பேர் கஞ்சி குடிக்கவே வழியில்லை.. அப்பா வைத்தியசெலவுக்கு பணமில்லை ..எந்த தைரியத்தில் அந்த புள்ளைய பொண்ணு கேக்கிற ?" என்று தன் தாய் மீது பாய்ந்தான்.

"அவள் நல்லா படிக்கிறப்புள்ள .. அவங்க பக்கத்தூருலயே நல்ல பள்ளிக்கூடம் ..அந்த சொக்கலிங்கம் வாத்தியாரு புள்ளைங்கள நல்லா சொல்லித்தறாரு.. நல்லா சத்துணவு கெடைக்கிது.. நல்லா சாப்பிட்டு நல்லா படிக்கட்டும் அவ.. இங்க வந்து எங்கூட பனியன் கம்பெனில பாடுபடணுமா?"


"அதிகம் படிச்சுட்டு என்ன கட்ட மாட்டேன்னு சொல்லுவான்னு பாக்கிறியாம்மா.. அப்படி அவளுக்கு விருப்பமில்லன்னா என்ன கட்ட வேணாம். யாராவது படிச்ச மாப்பிள்ளையா கட்டி நல்லா இருக்கட்டும்" என்றுவிட்டான் .


அவன் சொன்ன விஷயம் கேட்டதில் இருந்தே மனசுக்குள் நினைத்துவிட்டாள் சித்ரா 'கட்டினால் ராஜவேலுவைத்தான் கட்டுவது' என்று !


எப்படியோ பனிரெண்டாம் வகுப்பை தாண்டி கல்லூரியிலும் காலெடுத்து வைத்து விட்டாள்.

சண்முகமும் சொக்கலிங்கம் வாத்தியாரும் தான் முழுமையான ஆதரவு! இருந்தும் ஊர் விடவில்லை ..ஒரே ஏச்சும் பேச்சுமாக ..மாடசாமியால் அதற்கு மேல் சமாளிக்க முடியவில்லை ..தன் மச்சானுக்கு சொல்லி விட்டுவிட்டான் பரிசம் போடுவதற்கு வர சொல்லி ..ராஜவேலுவின் பேச்சும் எடுபடவில்லை .. திருமணமும் நடந்துவிட்டது .. குல தெய்வம் முன் நின்று தாலியெடுத்து கட்டுகையில் மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டான் எப்படியாவது சித்ராவை டீச்சராக்கி விடுவதென்று !

அதன்படியே அவளை கல்லூரியில் சேர்த்தும் விட்டான்.. அதற்காக தன தேவைகளையும் குறைத்துக்கொண்டுவிட்டான் ..மறைத்து கொண்டுவிட்டான் ..அதில் அவன் தாய் வள்ளிக்கு ரொம்ப வருத்தம்தான் . சீக்கிரமே பேர பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்ற வழக்கமான ஆவல் தான் .. ஏழு பிள்ளை பெற்றவளுக்கு தெரியாதா தன மகனின் குடித்தனம் எப்படி நடக்கிறதென்று .. அவ்வபோது பொருமுவாள். ஒரே பார்வையில் அடக்கிவிடுவான் ராஜவேலு ..கருவுற்றுவிட்டால் மறுபடி கல்வி தடைபடுமே..அதன் பொருட்டு பிறரின் நக்கல் மொழிகளை கூட அவன் கேட்டுக்கொள்வதில்லை.. இன்னுமா குழந்தை இல்லை என்ற பேச்சுகளை!

அந்த கிராமத்திலேயே சண்முகமும் அவன் தங்கையும் தான் கல்லூரியில் அடியெடுத்து வைத்துள்ளனர் . அதற்காக மாடசாமி படும் கஷ்டங்கள் ஏராளம் ..அதை உணர்ந்து சண்முகமும் நன்கு படித்தான். விடுதியில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தாலும் கல்லூரியில் அப்படி இருக்கவில்லை .. மேல்தட்டு மாணவர்கள் இவர்களை இளக்காரமாக பார்ப்பதும் .. இவர்கள் நடை உடை முதற்கொண்டு அனைத்தும் கேலிக்குள்ளாக்கப்பட்டது. இவர்களது ஏழ்மை எள்ளி நகையாடப்பட்டது. அனைத்தும் பொறுத்து கொண்டான்.


எங்கும் விதி விலக்குகள் உண்டல்லவா ..அதைபோல் தான் சத்யனும்! அந்த கல்லூரியின் தமிழ் பேராசிரியரின் மகன் .. இவனோடு பொருளாதாரம் பயில்கிறான்.


இவனது உயிர் தோழன் என்று சொல்லிக் கொள்பவன் ..இவன் தான் சற்றே விலகி நிற்பான் ..பிறந்ததிலிருந்து உடன் வரும் குணமது .

மெஸ்ஸில் உணவு இன்னும் தயாராகியிருக்கவில்லை .. காற்றில் மிதந்து வந்த சாம்பாரின் மணத்தை நுகர்ந்தபடி புத்தகத்தில் மூழ்கியிருந்தான் சண்முகம்.


"டே பட்டை எப்பவும் படிப்பாடா?" கேட்டபடி அருகே வந்தமர்ந்தான் சேகர் . இவன் வகுப்பு தோழன்!

"என்னடா பண்ண .. இன்னும் சாப்பாடு தயாராகல.. நீங்களும் யாரும் வரல "என்றபடி புத்தகத்தை மூடினான்.

"அரசாங்க தேர்வு அறிவிப்பு வந்திருக்குடா .. அப்ப்ளிகேஷன் வாங்கிட்டியா ?"

"நம்மால முடியுமாடா.. அதுக்கு நிறைய புத்தகம் படிக்கணுமேடா .. நம்ம கல்லூரி நூலகத்தில் புத்தகம் எதுவுமே சரியில்ல"


"நம்ம பாட புத்தகத்தை படிச்சால் ஓரளவு எழுதலாம்டா .. வேணும்னா தில்லை நாயகம் சாரை கேப்போமா? அவர் கட்டாயம் உதவுவார்டா.. அவர் பையன் சத்யன் கூட உன் பிரெண்டு தானேடா "


"அதுக்காக எப்பவும் அவங்களை தொந்தரவு பண்ண முடியுமாடா ?" என்றவன் "டேய் பக்கத்துக்கு காம்பவுண்ட்ல ஒரு லைப்ரரி இருக்குடா ..அதில் எல்லா புக்ஸும் இருக்குன்னு சத்யன் சொன்னான் .. ஆனால் அதற்கு மெம்பெர் ஆக பணம் கட்டணும்டா.. புத்தகத்துக்கும் வாடகை தரணும் ..ஆனால் எல்லா புத்தகமும் கிடைக்கும்டா "

"நல்லாசொன்ன போ ! காசில்லாமல் தானே இந்த விடுதியில் தங்கி படிக்கிறோம் " என்றவன் "பாரு இப்போ கல்லிலே காலை வண்ணம் கண்ட மாதிரி ஒரு இட்டிலியை நம்ம சமையல் கார சுப்பு கொண்டு வருவான் பார்.." என்றான் இட்டிலி குண்டானை தூக்கி வந்து வைத்த சுப்புவை பார்த்து! அவனுக்கு பதிமூன்று வயது தான் இருக்கும் . சமையல் காரன் ராமசாமிக்கு உதவியாய் இருக்கும் பையன் . இவர்களை முறைத்தபடி சாம்பார் வாளியை எடுத்து வந்து வைத்தான் ராமசாமி " என்ன லே பேச்செல்லாம் ஒரு மாறி இருக்கு ?"

உடனே ஜகா வாங்கிவிட்டேன் சேகர் " அதில்லண்ணே நீங்க ஒரு கலைஞன்னு சொன்னேன் " ராமசாமியை பகைத்து கொண்டு அங்கே இருக்க முடியுமா ?

"அது மட்டும் இல்லண்ணே நாங்க இட்டிலியை சாப்பிடும்போது விக்கிக்க கூடாதுன்னுதானே சாம்பாருக்குள்ள தண்ணியை ஊத்தறீங்க .. உங்க நல்ல மனசு வேற யார்க்கும் வருமா அண்ணே" என்று சிரிக்காமல் சொல்ல சண்முகத்துக்குதான் சிரிப்பை அடக்க முடியவில்லை.. சட்டென ஒரு இட்டிலியை பிய்த்து வாயில் அடக்கி கொண்டான்.


ராமசாமி இவர்களை முறைத்தபடி நகர்ந்துவிட " டேய் இந்த சாப்பாடு கூட கிடைக்காம தான கஷ்டப்பட்டோம் ...குறை சொல்லாம இருடா "

"இதுவும் ஒரு அடக்குமுறை தாண்டா..இவனுங்களுக்கு இது போதும்னு நினைக்கிற மனப்பான்மை ஏன்டா வருது ?" என்று புரட்சி பேச .."எல்லாம் சரிதாண்டா ..இதெல்லாம் கேக்கிறதுக்கு முதல்ல நல்ல படிச்சு முன்னேறணும்டா ..அப்போதான் நம்ம குரலே எல்லாருக்கும் கேக்கும் . அதுவரை அமைதியா தான் இருக்கணும் " என்றபடி உணவை முடித்து எழுந்தவன் புத்தகங்களை எடுத்துக்கொண்டு எழுந்து பேருந்து நிலையத்தை நோக்கி நடக்கலானான்.
 
Last edited:
Top