Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 24

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
அன்றைய விடியலே பரபரப்பாக இருக்க ..கண்மணியால் நடந்த எதையும் மறக்கவே முடியவில்லை.


தன் கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிற்றை கையில் எடுத்து பார்த்தவளுக்கு அருகில் அமர்ந்திருந்த கதிரின் உருவமே ஒரு மயக்கத்தை கொடுக்க வேலனின் வீட்டில் அமர்ந்திருந்தனர் அன்றைய மணமக்களான கண்மணியும் கதிரும்.


முந்தைய இரவு தன்னவனை நினைத்தபடி படுத்திருந்தவளை வடிவின் பதற்ற குரல் கலைக்க ..கீழே இறங்கி கூடத்திற்கு சென்றாள் கண்மணி. பொன்னுத்தாயிக்கு மூச்சுத்திணறல் அதிகரித்திருக்க ..யசோதா கொடுத்த மருந்துகள் வேலை செய்யவில்லை .. அம்புலன்சுக்கு அழைத்திருக்க .. சில கிலோமீட்டர் தள்ளி இருந்த மருத்துவமனையில் இருந்து அம்புலன்ஸ் வந்ததும் அவரை அதில் ஏற்றி சென்றிருந்தனர்.

"கண்மணி அத்தையோட மருந்தெல்லாம் எடுத்துக்கிட்டு வா " என்று வடிவு பணித்து செல்ல தன் ஆத்தாவின் அறைக்கு சென்ற கண்மணியின் பார்வையில் விழுந்தது அந்த புகைப்படம்!

வளைகாப்பு பூட்டப்பட்டு வடிவு நிற்க .ஒருபுறம் தாமரை நின்றிருந்தார். மறுபுறம் இருந்த பெண் இப்போது கண்மணி இருப்பது போலவே அதே சாயலில் ! இதுவரை இந்த புகைப்படத்தை கண்மணி பார்த்ததில்லை . இதை ஏன் ஆத்தா மறைத்து வைத்திருக்கிறார் என்று எண்ணியவளுக்கு அந்த பெண்ணின் கழுத்திலும் தான் அணிந்தது போலவே ஒரு மரகத பதக்கம் வைத்த அட்டிகை இருப்பது தென்பட்டது. இதைத்தான் அன்று கதிரும் உற்று நோக்கினானோ !

பலவித சிந்தனைகளில் உழன்றவளை ஸ்வாதியின் குரல் கலைக்க மருந்து பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினாள் கண்மணி.
பின்னோடு அனைவரும் காரில் செல்ல ..போகும் வழியிலேயே திக்கித் திணறி " வர சொல்லு ..ராஜவள்ளியை.." என்றார் பொன்னுத்தாயி.


தன் தாயின் விருப்பப்படி செய்த வேலனும் அவரருகில் அமர்ந்திருக்க ..மருத்துவமனை சென்றதும் அவசர சிகிச்சை தொடங்க ..சிறிது நேரத்தில் அவரது உடல் நிலை சற்றே தேறியது. பின்னர் இரண்டு மணி நேரங்களில் அவரை வார்டுக்கு மாற்ற ..


இப்போது சற்றே கோர்வையாக பேச முடிந்தது அவரால்.."வேலா "என்று தன் மகனை அழைத்தவர்..."நான் போய் சேந்துருவேன் சாமி . என் பேத்தி கலியாணத்தை மட்டும் பாத்துட்டேன்னா நிம்மதியா போயிருவேன்.. ராஜ வள்ளி வரலையா ?" என்றார்.


சரியாக அப்போதுதான் ராஜ வள்ளி உள்ளே வர பின்னோடு தாமரையும் கதிரும் வந்தனர்.


அவர்கள் இருவரையும் பார்த்தாலும் வேலன் ஏதும் சொல்லவில்லை ..தன் தாயை காண வந்திருப்பதால் அமைதியாக இருந்தார்.


ராஜவள்ளி தான் அவர்களை அழைத்து வந்திருந்தார் ..அதுவும் பொன்னுத்தாயி சொல்லித்தான் என்று அவர் அறியவில்லை. "கண்மணியை கூப்புடு வேலா " எனவும் வெளியே சென்று கண்மணியை அழைத்து வந்தார்.தன்னருகில் அமர்ந்த தன் பேத்தியை ஆதரவாக தடவி கொடுத்தவர் தன் புடவை முந்தானையில் இருந்த முடிச்சை அவிழ்க்க உள்ளே மஞ்சள் கயிற்றில் கோர்த்த திருமாங்கல்யம் இருந்தது.


"விக்ரம் எங்க ராஜி ?"


"வெளிய நிக்கிறான் பெரியம்மா "


"வர சொல்லு" எனவும் ..தன் தாய் என்ன செய்ய போகிறார் என்று புரிந்தாலும் மறுப்பேதும் சொல்லவில்லை வேலன். முன்பே முடிவெடுத்ததுதானே . அவருக்கு மறுப்பேதும் இல்லை. அதனால் "விக்ரம் " என்று குரல் கொடுக்க ..


உள்ளே நுழைந்தவர்களை பார்த்து அவருக்கு ஒரே அதிர்ச்சி.


விக்ரம் உடன் ஒரு பெண் .. வடக்கத்தி பெண் போல இருக்க உரிமையாய் அவன் கரம் பற்றி உள்ளே நுழைந்தாள்.


வேலனுக்கும் கண்மணிக்கும் தான் அதிர்ச்சி.மற்ற எவர் முகத்திலும் அதிர்ச்சிக்கான சாயல் இல்லை ..ஒரு பதற்றம் மட்டுமே.


அந்த வடக்கத்தி பெண்ணை அருகில் அழைத்த பொன்னுத்தாயி அவள் தலையில் கை வைத்து ஆசீர்வதிக்க பார்த்திருந்த வேலனுக்கு ஆத்திரம் பொங்க "ராஜி உன் பையனுக்கு கலியாணம் முடிஞ்சிதா ? என் பொண்ணுக்கு முடிக்கிறேன்னு சொன்ன ?" என்று கேள்வி எழுப்ப எதுவும் நடவாதது போல் அமைதியாக பார்த்தார் பொன்னுத்தாயி.


"பதறாத வேலா ..என் கண்மணி கண்ணுக்கு இல்லாத மாப்பிள்ளையா ? இதோ தாமரை அக்கா மகன் இருக்கானே .. நல்ல பையன் .. நல்லா படிச்சிருக்கான் .. அவனை தான் என் பேத்திக்கு கட்ட போறேன் ..இது தான் என் கடைசி ஆச"

கதிரை பற்றியும் இந்த சில நாட்களில் தெரிந்திருந்தது .. நன்கு படித்த பையன். தூரத்து உறவு முறை .அவன் தந்தையும் நல்ல பதவியில் ! செல்வா நிலையும் ஓரளவு நல்ல நிலை தான் ..
தன் தாய் கடைசி ஆசை எனவும் விழிகளில் நீர் பொங்க மறுக்க தோன்றாதவராய் நின்றிருந்த வேலன் தாலியை எடுத்து கதிரின் கரத்தில் கொடுக்க ..'அப்பாவும் அய்யாவும் இல்லாம எப்படி சித்தி ?" என்று கதிர் தயங்க ..அவங்கள்லாம் வந்தா உன் கலியாணம் நடக்காதுடா என்று மனதுக்குள் நினைத்தவராய் ' அதெல்லாம் பாத்துக்கலாம் ..இப்போ தாலி கட்டு " என்று தாமரை உந்த தன்னவளின் ஆர்வம் பொங்கும் முகத்தை பார்த்தவனுக்கு மற்றது மறந்தது.


தன் அன்னையின் முகத்தை மனதில் நினைத்தவன் தன் கையில் இருந்த அந்த மாங்கல்யத்தை தன்னவளின் கழுத்தில் கட்டினான் அது தன் தாயின் கழுத்தில் ஏறிய அதே தாலிதான் என்பதை அறியாமலே!


கண்மணிக்கோ சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை !


நான்கு நாட்களுக்கு முன்பு தான் அவனை தன்னவனாக உணர்ந்தாள். இன்றோ அவனது மனைவியாய் ..துணைவியாய்! அதுவும் தன் தந்தையே தாலி எடுத்து கொடுத்திருக்கிறார். அதை நினைக்கும்போதே இது தெய்வ சங்கல்பம் தான் என்று தோன்றியது.


அங்கேயே பொன்னுத்தாயியிடமும் தன் பெற்றோரிடமும் ஆசீர்வாதம் வாங்கியவர்கள் ராதாவின் சொல்படி கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு கண்மணியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.


சிறியவர்கள் எல்லாம் மகிழ்ந்திருக்க ..பெரியவர்களுக்கோ ஏதோ ஒரு உறுத்தல் இருக்கத்தான் செய்தது.


இருந்தும் விக்ரமுக்காக பேசி வைக்க ..அவனோ வேறு பெண்ணை கட்டிக்க கொண்டானே ..இனி கண்மணி விருப்பப்படி ஆகட்டும் என்றே நினைத்தனர்.


சங்கரி ,இந்துமதி வள்ளி, சாவித்ரி கூட சமாதானமாகிவிட்டனர் ..


சமாதானம் ஆகாதவர் இருவர் தான். ஒன்று அஜித்.


அவனுக்கு ஆரம்பம் முதலே கதிரைக் கண்டால் ஆகாது.. சுரேஷை அவன் தான் தப்பவைத்திருப்பான் என்ற எண்ணம் வேறு இருக்க அவன் குமுறிக் கொண்டிருந்தான்.


இதில் மனம் விரும்பாத மற்றோரு ஜீவன் சொக்கலிங்கம் ..


அவருக்கு கதிர் என்றால் உயிர் .. தன் மகனுக்கு முன்பாகவே அவனை எடுத்து வளர்த்ததால் அவன் மீது மூத்த மகன் போன்ற பாசம் .. அந்த பாசமே அவரை கோபம் கொள்ள வைத்து.


அந்த கோபத்தில் தன் மனையாளை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார்.


தாமரையோ எதுவும் பேசாமல் தன் கணவரின் மண்டகப்படிகளை வாங்கி கொண்டிருக்க ..அவரது மனமோ பொன்னுத்தாயி சொன்னதிலேயே இருந்தது.


கண்மணியும் கதிரும் கோவிலுக்கு கிளம்பியதும் வடிவும் வேலனும் அவர்களோடு கிளம்ப ..தாமரையை அழைத்த பொன்னுத்தாயி .."இனி ஒவ்வொரு நிமிஷமும் ஜாக்கிரதையா இருக்கணும்.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்கேயிருந்து அனுப்பிடனும் .அவங்க அப்பாகிட்ட அனுப்பிட்டா பரவாயில்லை ..கொஞ்ச நாளைக்கு யாருக்கும் தெரியாத இடத்தில இருக்குறது நல்லது" என்று சொல்லியிருந்தார்.


இதை எப்படி கதிரிடம் சொல்லி புரிய வைப்பது என்று சிந்தித்தபடி நின்றவர் ..தன் போனை எடுத்து தாமரையை அழைத்து இருவரையும் தங்கள் வீட்டிற்கு அனுப்பும்படி கூறினார்.


சொக்கலிங்கம் கதிரின் தந்தை நாதனை அழைத்து சொல்ல ..அவருக்கும் அதிர்ச்சிதான்.. ஸ்பீக்கரில் தான் பேசிக் கொண்டிருந்தனர் .."இப்படி பண்ணிட்டீங்களே தாமரை ..உங்களுக்கு தெரியாதா அந்த ஊரை பத்தி.. இதுக்குதான் அவனை அங்க அனுப்பாம இருந்தேன்." என்று புலம்பினார்.


"நாம என்ன செய்ய முடியும் ..இது தெய்வ சங்கல்பம் ..நீங்க இந்த ஊருக்குள்ள வந்தே பல வருஷம் ஆச்சு..ஆனா கண்மணியும் கதிரும் ஒரே காலேஜுல சந்திப்பாங்கன்னோ.. இப்போ ஒண்ணா ஊருக்கு வருவங்கன்னோ.. இந்த நாலே நாள்ல ஒருத்தர ஒருத்தர் விரும்புவாங்கன்னா நாம நெனச்சு பாத்தோமா ? பொன்னுத்தாயி அத்தைக்கு எல்லா உண்மையும் தெரியும் ..அவங்க தான் எப்படியாவது இவங்க ரெண்டு பேரையும் ஒன்னு சேக்கணும்னு பிரியப்பட்டாங்க "


"அவங்க பிரியப்பட்டா ஆச்சாமா ..சேர்ந்து வாழ விட மாட்டார்களே " என்று அங்கலாய்த்தார் நாதன்.


"அந்த காலம் மாதிரி இல்ல இப்போ.. மனுஷங்களும் கொஞ்சம் மாறியிருக்காங்க ..நீங்களும் அரசாங்கத்துல பெரிய பதவியில் இருக்கீங்க. பாத்துக்கலாம்."


"நாங்க எப்படியாவது ரெண்டு பேரையும் சென்னைக்கு அனுப்பிடறோம் .. நீங்க பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுங்க "


ஒரு வழியாக மனம் சமாதானம் அடைய கடவுளை வேண்டிக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றுணர்ந்தவராக போனை கட் செய்தார் நாதன்.

பெண்ணையும் மாப்பிள்ளையையும் பால் பழம் கொடுத்து காரில் ஏற்றி தாமரை வீட்டுக்கு அனுப்ப ..அவ்வளவு நேரம் பேசாமல் இருந்த கண்மணி "என்னாச்சு ? என் பேசாம வரீங்க ? உங்களுக்கு ஏதும் பிடிக்கலையா ?"


திருமணத்தை குறித்து கேட்கிறாள் என்று புரிந்தவனாய் "அதெல்லாம் ஒண்ணுமில்லை .எங்கப்பா தான் எனக்கு ஒரே சொந்தம் ..அவர் கூட இல்லாம தாலி கட்ட கஷ்டமா இருந்தது."


"ஒரே சொந்தமா ? அப்போ தாமரை அத்தை ?"


"சொக்கலிங்கம் அய்யாவோட ஸ்டுடென்ட் எங்கப்பா ..எங்க அம்மாவும் தாமரை அத்தையும் க்ளோஸ் பிரெண்ட்ஸ் தூரத்து உறவு ன்னு நினைக்கிறன்.ஆனா அக்கான்னு தான் சொல்லுவாங்க எங்கம்மாவை ! "
"சரி அதை விடுங்க ..என்னை ஏன் உங்களுக்கு பிடிச்சது?"


"முதல் தடவை உன்னை நிமிர்ந்து பார்த்ததே ..உன் பேர கேட்டு தான் ..எங்கம்மா பேரு விசாலாட்சி! உன் பேரு கேட்டதும் அவங்க முகம் தான் நினைவு வந்தது.நிமிர்ந்து உன்ன பாத்தா அப்படியே அவங்கள பாக்கிற மாதிரியே இருந்தது.அப்போ விழுந்தவன் தான் நான். சரி உனக்கேன் விசாலினின்னு பேர் வச்சாங்க ? ஆனா அந்த பேர் சொல்லி கூப்புடவே மாட்டேங்குறாங்க ?"


"எங்க ஆத்தாவுக்கு பொம்பள பிள்ளைன்னா ரொம்ப ஆசையாம் .மூணு பிள்ளை வயத்திலேயே இறந்து பிறந்துச்சாம். அதுக்காக காசிக்கும்போய் வேண்டிக்கிட்டாங்களாம் ..எங்க குடும்பத்துல பொண்ணு பொறந்தா அந்த அம்மனோட பேரையே வைக்கிறதா ..எனக்கு முன்ன ஒரு புள்ள பிறந்துச்சாம் ..அதுக்கு வேற பேர் வைக்கவும் அதுவும் தங்காம போகவே அதனால்தான் எனக்கு அந்த பேர் ..எங்கம்மா கொஞ்சம் மாடர்னா வச்சாங்க விசாலினின்னு .ஆனா எங்கப்பாவுக்கு அந்த பேர் சொன்னாலே பிடிக்காது .கண்மணின்னு தான் கூப்புடுவார்." என்று நீளமாக கதை சொன்னாள்.


"எனக்கும் இந்த ஊருக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் அப்படின்னு தோணுது.. இல்லனா அய்யா என்ன இங்க வரவே கூடாதுன்னு ஏன்சொல்லணும். அவர் வேற ரொம்ப கோபமா இருப்பார். எப்படியாவது சமாதான படுத்தனும் ." என்று பேசியவாறே வீடு வந்துவிட காரில் இருந்து இறங்கினர்.


அவ்வளவு நேரம் அவர்கள் பேசிக் கொண்டதையெல்லாம் இரு செவிகள் கூர்ந்து கவனித்து உள்வாங்கி கொண்டன ..பின்னர் கார் நேராக அஜித் இருக்கும் இடம் நோக்கி சென்றது.

காரில் இருந்து இறங்கியவர்களை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்ற தாமரை அவர்களை உணவுண்ண வைத்து பின் பேச்செடுத்தார். "தங்கங்களா ..ரெண்டு பெரும் இப்போவே ஊருக்கு கிளம்பனும் "


என்ன ஏதென்று சொல்லாமல் ஊருக்கு கிளம்ப சொன்னவரை கேள்வியாய் நோக்கினான் கதிர்.


"என்னனெல்லாம் கேக்காத ..அது உங்கப்பாவே சொல்லுவார். மொதல்ல சென்னைக்கு போய் உங்கப்பாவை பார். இன்னிக்கு தான் வெளியூரிலிருந்து திரும்பியிருக்கார். உங்க கல்யாண விஷயமும் தெரியும். இங்க இருக்குறது நல்லதில்லை ..கெளம்பிடுங்க ..டாக்ஸி வர சொல்லியிருக்கேன். பஸ் ஸ்டான்ட் கிட்ட நிக்கிது ரெண்டு பெரும் இப்போவே கிளம்புங்க "


என்று மறுவார்த்தைக்கு இடமின்றி உறுதியாக சொல்ல .. கண்மணியை நோக்கினான். அவளுக்கும் சற்றே பயமாக தான் இருந்தது. நான்கு நாட்களாக ஒரு புறம் இவர்களது காதல் தழைத்து வளர்ந்தாலும் மறுபுறம் மனம் விரும்பாத பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றனவே.


அதனால் அவள் தலை சம்மதமாக ஆடியது.பேசியது தாமரை என்றாலும் இவை சொக்கலிங்கத்தின் வார்த்தைகளே என்று புரிந்து கொண்ட கதிரும் தன்னவளை அழைத்து தன் வளர்ப்பு பெற்றோரிடம் ஆசிகள் வாங்கி புறப்பட்டான்.
 
Last edited:
கண்மணியின் அத்தை தானோ கதிர் அம்மா ..?
சூப்பர் 😀
 
Top