Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா!-26

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -26

அவள் மிக இயல்பாக நடமாடிக்கொண்டு இருந்தாள். ஆம். அம்மா தன் காதலை எதிர்க்கிறார் என்ற எந்தவித பாதிப்பும் ஏற்படாது காதலித்துக்கொண்டு இருந்தாள். அவள் தான் நம் நாயகி சங்கமித்ரா.

காபி ஷாப்பில் பேசிவிட்டு வந்த அன்றைய இரவு மித்ரா நவிலனோடு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தாள். காதலர்களுக்கு செல்போன் தெய்வம் போலல்லவா? அந்த தெய்வத்தின் ஊடாக இருவரும் ஒருவரை ஒருவர் தொழுது கொண்டு இருந்தார்கள்.

நிசப்தமான ராப்பொழுது. வானத்தை சிவக்க வைத்த முழுநிலவு. இதமாக வீசிக்கொண்டு இருந்த தென்றல் காற்று. அந்த ரம்மியமான பொழுது காதலர்களுக்கு காதலிக்க ஏதுவாய் வழி செய்து கொடுத்தது.

" அப்படியா? எப்ப போறாங்க நவி..?"

" நாளைக்கு காலைல ஃப்ளைட். அம்மாவை சின்ன வயசுல இருந்து வளர்த்ததே அந்த பாட்டி தானு அடிக்கடி சொல்வாங்க. அவங்க இறப்புக்கு போகாட்டி நல்லா இருக்காதுன்னு அப்பாவும் கிளம்புறார். வர எப்படியும் ஒரு வாரமாவது ஆகிடும். " நவிலன் சொல்லிக் கொண்டு இருந்தான்.

" ஓ.." இவள் யோசனையோடு இழுத்தாள்.

" நாளைக்கே உங்க வீட்டுக்கு வந்து அப்பா அம்மாவை பேசச் சொல்லலாம்னு பார்த்தேன்.. " தன்னுடைய திட்டம் களைந்த கவலை அவனுக்கு.

" அதுக்கென்ன நவி.. அங்கிளும் ஆன்ட்டியும் போயிட்டு வரட்டும். பிறகு வீட்ல பேசிக்கலாம். அதுக்குள்ள நம்மளை பிரிச்சிடவா போறாங்க.."

" ஏய்.. சும்மா கூட அப்படி சொல்லாத.. இனியொரு பிரிவு வேண்டாம் கண்மனி.."

அவள் அதற்கு அந்தப்பக்கம் மௌனமாக இருந்தாள்.

" ஹேய்.. என்னாச்சு.. ?" நவிலன் பதட்டமானான்.

" எங்கம்மா முறைச்சு பார்த்துட்டு போறாங்க.." என்று சொன்னாள்.

" உங்கம்மா என்ன திடீர் வில்லியா மாறிட்டாங்க..?"

அவனும் ஆச்சர்யப்பட்டான். ஏனெனில் அவன் ஐராவதத்தைப் பார்க்க அடிக்கடி அங்கு வந்து போனபோதெல்லாம் பாமா வெகு சாதாரணமாக தான் அவனிடம் நடந்து கொண்டார். ஹாஸ்பிடலில் அவன் உதவியாய் இருந்ததிற்கு நன்றிக்கடனாக அப்படி நடந்து கொண்டாரோ என்ற ஐயம் அவனுள் பூதமாய் எழுந்தது.

" எங்கம்மா இப்படி வில்லத்தனமா நடந்துக்கிறது கூட நல்லாத்தான் இருக்கு.. நவி.. நவி.. நான் பேசுறது கேட்குதா..? என்ன யோசனை?"

" ஒன்னுமில்ல மித்ரா... எனக்கு உன்னைப் பார்க்கனும் போல இருக்கு.." அவன் குரலில் காதல் இழையோடியது.

" காலையில தானே பார்த்தோம்.." இருட்டிலும் அவள் முகம் வெட்கத்தை சிந்தியதை முழுநிலவு மட்டுமே ரசித்தது.

" காலையில பார்த்தா மறுபடியும் பார்க்க கூடாதுனு எதாவது சட்டம் இருக்கா..?" அவன் எதிர் கேள்வி கேட்டான்.

" இல்லைத்தான்..." அவள் சொல்ல,

" அப்ப வீடியோ கால் வா.."

" வரணுமா..?" இழுத்தாள் சங்கமித்ரா. ஏனெனில் அவள் இரவு உடைக்கு மாறியிருந்தாள்.

" நான் நைட்டியில இருக்கேன் நவி.." என்று இன்னும் கொஞ்சம் இழுத்தாள்.

" ஆஹா.. அப்ப பார்த்தே ஆகணும்..." அவன் மனசுக்குள் பேசுகிறோம் என்று நினைத்து சத்தமாக பேசிவிட, " ஹேய்..!" என்று அதட்டல் போட்டாள் மித்ரா.

" சரி.. சரி.. தரிசனம் தான் தரமாட்டேன்னு சொல்லிட்ட.. பாவம் தானே நான்.. ஒரு முத்தமாவது கொடு.."

" எது.. முத்தமா..?" அவள் குரலில் இருந்தது அதிர்ச்சியா? வெட்கமா? எதுவென்று தெரியாமல் அவன் அவள் முகத்தை கற்பனைக்குள் கொண்டு வந்திருந்தான்.

" ம்... முத்தம் தான்.. "

" ஐயோ.. நான் தரமாட்டேன் ப்பா.."

" தரமாட்டியா..? பாவம் தானே நானு.."

" இல்லவே இல்ல.. நான் தரமாட்டேன்.."

" ஓ.. போன்ல தரமாட்டேனு சொல்றியா? சரி நேர்ல..." என்று சொல்ல அவள் கன்னங்கள் பூத்தன.

" நேர்லயும் கிடையாது.."

" சரி நீ தராதே.. நான் எடுத்துக்கொள்றேன்.."

" அதெப்படி?"

" அதெல்லாம் சொல்லக்கூடாத சீக்ரெட் தங்கம்.. நீயா எனக்கு முத்தம் கொடுப்ப.. கொடுக்க வைக்கிறேன்.."

" ஓ.. அவ்வளவு நம்பிக்கையா..? " அவனுடைய உறுதியைப் பார்த்து மிரண்டாள்.

" ம்.. ஆமா.. முத்தம் தராத தேவதையே.. நீ தரலனா என்ன? நான் தாரேன்.." என்று முத்தமென்றை தந்தான் செல்போனில்.

அவளுக்கு உடம்பே வைப்ரேட் ஆகியது. சட்டென சற்று முன் படித்த கவிதை ஞாபகத்துக்கு வந்தது.

" சரி.. அப்படியே சிலையா நின்றது போதும். போய் தூங்கு.. குட் நைட் மித்து.."

" குட் நைட் நவி.. " மெல்லிய குரலில் சொல்லிலிவிட்டு கட் செய்து படுக்கையில் விழுந்தவளுக்கு அவனுடைய முத்தம் தான் என்னென்னவோ கொடுமைகள் செய்தன.

அந்த கவிதையை வாட்சப் செய்தாள்.


தொலைபேசியில் எல்லாம் நீ எனக்கு முத்தம் தராதே,
அது,
உன் முத்தத்தை எடுத்துக்கொண்டு, வெறும் சத்தத்தை மட்டுமே,
எனக்குத் தருகிறது!


தபூ சங்கர்



மீண்டும் படித்துப் பார்க்கையில் அந்த முத்தம் நினைவுக்கு வந்து சித்தம் கலங்கியது. காதலை கட்டிப்பிடித்துக்கொண்டு உறங்கினாள்.


அடுத்த அறையில் பாமா உறக்கமின்றி தவித்தார்.

" என்ன பாமா.. தூக்கம் வரலையா?"

" ஆமாங்க.. ஒரே யோசனையா இருக்கு.."

" என்ன யோசனை?"

" இந்த மித்ரா தான்.."

" ஏன் ? அவளுக்கு என்ன?"

தன் கணவருக்கு என்னவாயிற்று என்ன கேள்வியோடு அவரை நோக்கினார் பாமா.

"என்னங்க..அவ அந்த பையனை விரும்புறேனு புதுசா கதை சொல்லிக்கிட்டு நிற்கிறா.. நீங்களும் எதுவுமே நடக்காத மாதிரி இருக்கிங்க?"

" இப்ப என்ன பண்ணணும்னு சொல்ற?" அவர் குரலில் ஒருவித சலிப்பு இருந்தது.

" இல்லங்க.. அவதான் காதல் கத்திரிக்கானு வந்து நிற்கிறானா நம்மளும் அவ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டனுமா?"

" தலையாட்ட வேணாம் பாமா. அவளோட உணர்வுகளையாவது புரிஞ்சிக்க முயற்சி செய்யலாம். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்னு சொல்வாங்கல.. அப்பவே நம்ம பொண்ணுங்க மனசுல என்ன இருக்குனு புரிஞ்சிக்க முயற்சி செய்து இருந்தா இன்னைக்கு மதுபாலா உயிரோட இருந்திருப்பா.."

மதுபாலா பற்றி பேச்செடுத்தாலே கணவர் குற்ற உணர்ச்சியில் துவண்டு போய் விடுவார் என்று அறிந்த பாமா எப்போதும் அந்த பேச்சை தவிர்த்து விடுவார். இப்போது ஐராவதமே அதுபற்றி பேச வாயடைந்துபோய் இருந்தார் பாமா.

" அந்த நவிலன் நல்ல பையன் பாமா. மித்ராவுக்கு ஏற்ற பையன். உனக்கும் அந்த பையன் மேல நல்ல அபிப்பிராயம் இருக்குனு எனக்கு தெரியும். அப்புறம் ஏன் இதுல உனக்கு விருப்பம் இல்ல??"

" அந்த பையன் ரொம்ப நல்ல பையன்தாங்க. நமக்கு ரொம்ப உதவியாக இருந்திருக்கு. ஆனா கல்யாணம்னு வரும் போது ரெண்டு குடும்பங்கள் இணையுதுங்க.. நமக்கும் அவங்களுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. இன்னைக்கு இல்லைனாலும் நாள் போக போக இதுனால பல பிரச்சனைகள் வரும்ங்க.. இப்பவே அக்கம் பக்கத்துல எல்லாம் ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சிட்டாங்க.."

" என்ன பேசுறாங்க அக்கம் பக்கத்துல..? "

" அது வந்து.."

" சொல்லு.. நானும் தெரிஞ்சிக்கத்தானே வேணும்.." ஐராவதம் சொல்ல பாமாவின் கண்முன் அந்த சம்பவம் வந்து நிழலாடியது.

வழக்கமாக காலை பத்துமணி தாண்டி காய்கறிகளை சுமந்துகொண்டு வரும் தன் தள்ளுவண்டியோடு அந்த கிழவர் வந்துவிடுவார். அந்த ஃப்ளாட்டில் உள்ள இல்லத்தரசிகள் கணவனை ஆபிசுக்கும், குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கும் அனுப்பிய நிம்மதியில் காய்கறி கூடையோடு கீழே இறங்கினால், வம்பு தும்புகளை பேசி புது தகவல்களோடு தான் மேலே ஏறுவார்கள். பாமா அந்த பேச்சில் எப்போதும் கலந்து கொள்வது இல்லை. அதனாலேயே அன்று அவர் குடும்பம் பேசும் பொருளாக மாறி இருந்தது.

" என்ன பாமா.. உன் பொண்ணை கொஞ்ச நாளா றெக்கையோட பார்க்க முடியுது.." அலமேலு ஆரம்பிக்க, " பின்ன புடிச்சது புளியங்கொம்பாச்சே..." என்று மோகனா சொல்ல அங்கு வாய்க்குள்ளேயே சிரிப்பு எழுந்தது.

பாமா பதிலே பேசவில்லை.

" இதபாரு பாமா.. சொல்றோம்னு தப்பா நினைச்சிக்காத.. ஏற்கனவே ஒரு பொண்ணை பழி கொடுத்துட்டிங்க.. இது ஒன்னு மூக்கும் முழியுமா லட்சணமா இருக்குதுனா நாலு பசங்க பின்னாடி சுத்ததான் செய்வாங்க. நம்ம தான் எது நல்லது கெட்டதுனு சொல்லி கொடுக்கனும். ராத்திரியில அவ கார்ல் வந்து இறங்குறதும்.. போற வழியெல்லாம் போன் பேசிக்கிட்டு சிரிச்சு பல்லை காட்டிக்கிட்டு போறதும் பார்க்க நல்லாவா இருக்கு சொல்லு.. அவளை பார்த்து எங்க வீட்டு புள்ளைங்களும் வீணா போகுதுங்க.. நான் சொல்றதை சொல்லிட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்.." வம்பு வனஜா நீளமாக பேசி முடிக்க அடுத்து ஆரம்பித்தாள் குண்டு குமுதா.

" இப்படிதான் எங்க ஒன்னுவிட்ட பெரியப்பாவோட மக ஒன்னு.. ஒரு வசதியான வீட்டு பையனை லவ் பண்ணி கட்டிக்கிச்சு.. ஆரம்பத்துல எல்லாம் நல்லாத்தான் போச்சு. அப்புறம் ஆரம்பிச்சது பாரு பிரச்சினை. முதல்ல எங்கடி வரதட்சணைனு ஆரம்பிச்சா அவ மாமியார்... அவங்கம்மா கூட சேர்ந்துகிட்டு அவ புருஷனும் அவளை அடிச்சு கொடுமை படுத்தி.. அவ வசதியில்லாத வீட்ல இருந்து வந்தவனு நாலு நல்லது கெட்டதுனு எல்லாத்துலயும் ஒதுக்கி ஒதுக்கி வச்சி.. கடைசியில ஐஞ்சு மாச பொம்பளை புள்ளையோட தொரத்திட்டாங்க.. பாவம்.. இப்ப வீட்டோட இருக்கா. "

இந்த கதையெல்லாம் கேட்கும் போது அந்த பெண்ணின் இடத்தில் மித்ராவை கற்பனை செய்து பார்த்த பாமாவின் மூளை வயிற்றில் புளியை கரைக்க கட்டளையிட்டது.

" இத பாரு பாமா.. இதெல்லாம் உன்ன பயமுறுத்துறதுக்காக சொல்லல.. எதுக்கு நமக்கு மீறுன இடத்துலே கொடுத்துட்டு பின்னாடி கஷ்டப்பட.. நீலகிரியில் ஒரு மாப்பிள்ளை இருக்கதா எங்க அக்கா சொல்லிச்சு.. உங்களுக்கு ஏற்ற இடம். உங்க ஆளுங்க தான். வேணும்னா சொல்லு.. ஜாதகம் வாங்கி தாரேன்.. எதுவுமே நம்ம சக்திக்கு ஏற்றாப்பல இருந்தா நல்லது பாரு.." என்று பங்கம் பத்மா சொல்ல பாமாவுக்கு மகளை நினைத்து உண்மையில் கவலை பிறந்தது.

நவிலனோடு அவள் பழகுவதை அந்த ஃப்ளாட்வாசிகள் எத்தனை தூரம் நோட்டம் விட்டு வைத்திருக்கிறார்கள். எவ்வளவு விடயங்களை அலசி ஆராய்ந்து இருக்கிறார்கள் என்று அறிந்து அதிர்ந்தார்.

வீட்டில் தீர்ந்திருந்த தக்காளியை வாங்காமலே படியேறிய பாமாவுக்கு மகளை நினைத்து யோசனையானது. நவிலனுடைய குடும்பமோ வசதி வாய்ந்தது. தாங்களோ மிடில் க்ளாஸ். இரண்டுக்கும் எப்படி ஒத்துவரும் என்று பயப்பட ஆரம்பித்தார் தாய். அதனாலோயே மித்ரா காதலை வீட்டில் சொன்ன போது எதிர்த்தார். சாதாரண சிந்தனைகளை கொண்ட ஒரு தாய் பெற்ற பெண்ணை நினைத்து பயப்படுவது இயல்பு தானே. ஏற்கனவே மதுபாலாவை இழந்திருந்ததால் மித்ரா விடயத்தில் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து எடுத்து வைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டார் பாமா.

இந்த கதையெல்லாம் ஐராவதத்திடம் சொன்ன போது அவர் சிரித்தார்.

" என்னங்க சிரிக்கிறிங்க..?"

" பின்ன.. இந்த வம்பு பிடிச்ச கூட்டம் பற்றி தான் நமக்கு தெரியுமே.. யாரு வீட்ல என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்கிட்டு அதை ரெண்டாக்கி பேசி நம்ம மனசை கெடுக்குறது.. நீயும் இந்த கதையெல்லாம் கேட்டுட்டு பைத்தியக்காரி மாதிரி பேசிக்கிட்டு இருக்க.. நம்ம பொண்ணை பார்த்து அவங்க வீட்டு பொண்ணு வீணா போகுதா.. பொறாமைடி.. நம்ம பொண்ணா மேல பொறாமை. பார்க்க வேற அழகா இருக்கா.. நல்லா படிச்சு நல்ல வேலையில இருக்கா.. கை நெறைய சம்பாதிக்கிறா.. சுதந்திரமா இருக்கா.. அந்த கடுப்பு அவங்களுக்கு.. இது புரியாம நீ வேற.. சரி இப்ப உனக்கு ஒரு உண்மையை சொல்றேன்.. கேளு.."

" என்னங்க உண்மை..?"

" எனக்கு ஆக்ஸிடென்ட் ஆகுற அன்னைக்கு நான் போன் பண்ணி பேசினேனே ஞாபகம் இருக்கா உனக்கு. ?" ஐராவதம் கேட்க பாமா அந்த நாளுக்கு போனார்.

பாமா மாலையில் வருணுக்கு காபி ஊற்றியபடியே " படிடா.. எக்ஸாம் வருது தானே.." என்ற போது செல்போன் அடித்தது. திரையில் கணவர் பெயர்.

" பாமா..! நான் தங்கச்சி வீட்டுக்கு போயிட்டு வாரேன்.. வர கொஞ்சம் லேட் ஆகும்.."

" சரிங்க.."

"அப்புறம்... ம்ம்.. ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசனும்.."

" என்னங்க..?" பாமா ஆர்வமாய் கேட்க, "ம்.. இல்ல.. நான் வந்து சொல்றேன்.. இது நேர்ல பேச வேண்டிய விஷயம்.."

" சரிங்க.." என்று தொடர்பை துண்டித்தார் பாமா. அன்று தான் ஐராவதம் ஆக்ஸிடென்ட் ஆனார். அதன் பிறகு ஹாஸ்பிடல் வீடு என்று மாதக்கணக்கில் அலைந்ததில் அந்த முக்கியமான விடயம் தொடர்பில் பேச வாய்ப்பே அமையவில்லை. ஆனால் ஐராவதம் படுக்கையில் இருந்தாலும் காய்களை நகர்த்திக்கொண்டு தான் இருந்தார்.

" அட.. ஆமா.. அன்னைக்கு ஏதோ பேசனும்னு சொன்னிங்க.. அதுக்கு அப்புறம் தான் ஏதேதோ நடந்து போச்சே.. என்னங்க அது.. நானும் கேட்டுக்காமலே விட்டுட்டேன்.."

" நம்ம மித்ராவோட ஜாதகத்தை வேம்படி கல்யாண புரோக்கர்கிட்ட கொடுத்திருந்தேன்ல.. அவரு கூட மித்ராவுக்கு ஏற்ற மாதிரி ஒரு இடம் வந்தா சொல்றேன்னு சொன்னாரே.. "

" ஆமா.."

" அன்னைக்கு அந்த புரோக்கர் பேசுனாரு.. மித்ராவுக்கு பொருந்தின ஒரு இடம் இருக்கு.. ஆனா அது உங்களுக்கு சரிப்பட்டு வருமானு தெரியல. நான் உங்க நம்பரை அந்த பையனோட அப்பாவுக்கு கொடுத்து இருக்கேன். அவரு பேசுனா பேசிப்பாருங்கனு சொன்னாரு.."

" ம்.." பாமா கதை கேட்டுக்கொண்டு இருந்தார்.

" அன்னைக்கு ஆபிஸ்ல இருந்து கிளம்பும் போது அந்த பையனோட அப்பா பேசுனாரு.. அவரை போய் பார்த்தேன். " என்று அந்த இடத்தில் நிறுத்தி மனைவியைப் பார்த்தார்.

அது யாரென்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் பாமாவின் கண்களில்.

" அது யாரு சொல்லு பார்ப்போம்.."

" எனக்கெப்படிங்க தெரியும்.. நீங்க சொன்ன தான் தெரியும்.."

ஐராவதம் அடுத்து சொன்னதை கேட்டதும் வாயைப் பிளந்த பாமா அதை மூட வெகு நேரமாயிற்று.


ஐராவதம் ஃப்ளாஷ் பேக்குக்குள் சென்றார்.


ஆட்டம் தொடரும் ❤️?
 
Top