Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா!-25

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member

அத்தியாயம் -25

இன்னும் கொஞ்ச நேரம் அங்கேயே நின்றுகொண்டு இருப்பதால் மட்டும் சம்மதம் கிடைத்துவிடுமா என்ற அலட்சியத்தோடு கூந்தலை ஒதுக்கி விட்டாள் மித்ரா. கடிகாரம் நேரம் பத்து மணி என்றது.

அன்று அவள் ஐராவதத்தையும் பாமாவையும் ஹாலில் வந்து அமரச் சொன்னாள்.

அக்காவின் அதிசய தோரணையை கண்டவன் " அக்கா! நானும் வந்து உட்காரனுமா?" என்று கேலியாக கேட்டான்.

" வா.. நீயும் இந்த வீட்ல ஒருத்தன் தானே.."
அவள் சொன்னதில் அவனுக்கு லேசாய் கண் கலங்கியது. 'நம்மளையும் மனுசனா மதிக்கிறாங்கடா வருண்..' என்று ஒரு ரியாக்ஷன் கொடுத்தான்.

" எதுக்கு டீ.." என்று சேலைத் தலைப்பில் கையை துடைத்தவாறே வந்து, எதிர் கேள்வி கேட்ட தாய்க்கு " என் வாழ்க்கையைப் பற்றி கொஞ்சம் பேச வேண்டி இருக்கு.." என்று பதிலுரைத்தாள்.


ஐராவதம் இப்போது உடல் நலம் தேறி இருந்ததால் அவரால் யாருடைய உதவியும் இன்றி வாக்கிங் ஸ்டிக் உதவியோடு நடமாட முடிந்தது. வந்து சோஃபாவில் அமர அவர் அருகிலேயே பாமா. அடுத்திருந்த ஒற்றை சோஃபாவில் வருண்.


" சீக்கிரம் சொல்லு.. இனிதான் வத்தக்குழம்பு வைக்கனும்.." அவர் பாடு அவருக்கு. மகள் தாயை முறைத்தாள்.

' நான் வாழ்க்கையை பற்றி பேசனும்னு சொல்றேன்.. நீங்க வத்தக்குழம்பு பற்றி பேசிக்கிட்டு இருக்கிங்க..' என்று எண்ணினாள்.

அவள் பேச்சை ஆரம்பிக்கப் போவதில்லை என்று அறிந்த ஐராவதம் ரிமோட்டை எட்டி எடுத்தார்.

" நான் ஒருத்தரை லவ் பண்றேன். அவரை கல்யாணம் பண்ணிக்க உங்க சம்மதம் வேணும்.." படாரென அறைந்தது போல சொல்லி விட்டாள்.

பெற்றோர் முகத்தில் அவள் எதிர்பார்த்த அதிர்ச்சி தெரியாததை கவனிக்க தவறினாள் மித்ரா.

'இதெல்லாம் எங்களுக்கு எப்பவோ தெரியும்.. ஹையோ.. ஹையோ..' என்று வடிவேலு பாணியில் ஆக்சன் கொடுத்துக்கொண்டு இருந்தான் வருண்.

" என்னடீ.. ஏதோ காய்கறி வாங்கப் போறேன். சமைக்க போறேன்ற மாதிரி சொல்ற.."


" எப்ப பாரு சமையல்.. சமையல்.. அந்த அடுப்படியை விட்டு வெளிய வாங்கம்மா.. நான் எவ்வளவு சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன்.."

" சரி டீ. என் சமையல்கட்டு கதை என்னோடயே இருக்கட்டும். இப்படி திடுதிப்புனு வந்து சொன்னா என்ன அர்த்தம்?"

" பாமா..! உன் பொண்ணு பார்த்த மாப்பிள்ளை யாருனு கேளு.." அவளிடம் நேரிடையாக கேட்காமல் அந்த கேள்வியை கேட்டார் அவர். அதுதான் அவளது தந்தை. ஐராவதம்.

" உங்களுக்கெல்லாம் தெரிஞ்சவர் தான். நவிலன்." அவன் பெயரை சொல்லும் போதே அவள் வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது.

அப்போதாவது பெற்றோர் ஆச்சர்யப்படுவார்கள் என்று எதிர்ப்பார்த்த அவள் ஏமார்ந்தாள்.

ஐராவதமும் பாமாவும் இதை எதிர்ப்பார்த்திருந்தது போல தெரிந்தது அவளுக்கு. அவள் நவிலனோடு பழகுவதை வைத்து என்றாவது ஒருநாள் 'காதலிக்கிறேன்' என அவர்கள் முன் வந்து நிற்பாள் என்று அவர்கள் முன்பே ஊகித்திருக்ககூடும் என்று எண்ணினாள்.

' என்னடா இது.. எல்லாம் ரொம்ப அமைதியா போகுது..? இது நம்ம வீடு தானா..?' என்று சந்தேகித்தாள் மித்ரா. அவளுக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை.

அந்த நேரத்தில் பாமா எழுந்து கிச்சனுக்கு செல்லப்போனார்.

" ம்மா. நான் பேசிக்கிட்டு இருக்கேன்ல.." குறுக்கே கைநீட்டி தடுத்தாள் மித்ரா.

" இருடீ.. குக்கர்ல மூணு விசில் வந்துருச்சு.." என்று அவளை பொருட்படுத்தாமல் விலக்கிவிட்டுப் போய் அடுப்பை அணைத்துவிட்டு வந்தார். அந்த சீனைப் பார்த்து வருண் நமட்டு சிரிப்பு சிரித்தான்.

" இது என்பத்தி ஏழுல வந்த படம் தானே.." ஓடிக்கொண்டு இருந்த டீவியை சுட்டிக்காட்டி கணவனைப் பார்த்து கேள்வி வேறு.

" ம்மா.. நான் என்ன பேசிக்கிட்டு..."

" இப்ப என்ன செய்யனும்னு சொல்ற.. எல்லா முடிவையும் நீயே தானே எடுப்ப.. புதுசா எங்ககிட்ட என்ன சொல்ற..?" தாய் குத்திக்காட்ட மித்ரா நிஜமாகவே வேதனையடைந்தாள். மதுபாலாவின் காதல், அவளது அம்மன் கோயில் திருமணம் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. அப்போதே இது போல் பேசியிருந்தாள் குறைந்தபட்சம் அவள் உயிரோடாவது இருந்திருப்பாளோ என்ற குற்ற உணர்வு கற்பனையோடு வந்து போனது.

இருந்தும் அந்த நினைவுகளில் இருந்து சட்டென மீண்டாள்.


" நான் நவிலனை கல்யாணம் செய்துக்க உங்க அனுமதியும் ஆசிர்வாதமும் வேணும். அதான் இப்ப உங்க முன்னாடி நின்னுகிட்டு இருக்கேன்.." சுவரில் மாட்டியிருந்த மயில் படத்தை பார்த்தாள்.

" எங்க அனுமதியா..?" பாமாவே பேசினார்.

" ஆமா. நீங்க தானே என்னை பெத்தவங்க.." குரலில் கோபம் இருந்தது.

" இது இப்பதான் உனக்கு ஞாபகம் வருதா மித்ரா.." பாமா மீண்டும் பேச மகள் கோபமானாள்.

" இப்ப என்னம்மா பிரச்சினை உங்களுக்கு.. சும்மா குத்தி குத்தி பேசிக்கிட்டு.. "

" யாருடீ.. நானா.. இத்தனை வருஷமா நீ உங்க அப்பாவை எத்தனை பேச்சு பேசியிருப்ப.. அதுக்கெல்லாம் வட்டியும் முதலுமா நீதான் பதில் சொல்லனும்.."

" என்னம்மா.. எனக்கு வில்லி மாதிரி பேசுறிங்க.. திடீர்னு நான் உங்களுக்கு பொல்லாதவளா ஆகிட்டேனா..?" அம்மாவின் போக்கு புரியாமல் தடுமாறினாள் மித்ரா.

" நான் ஒன்னும் உனக்கு வில்லி இல்ல.. உள்ளதை சொன்னேன்.."

" ம்மா.. நான் என்ன சொல்ல வந்தேன்.. நீங்க ஏதேதோ பேசிக்கிட்டு இருக்கிங்க.."

" ஆமாம்மா.. நான் தான் சம்பந்தமில்லாமல் பேசிக்கிட்டு இருக்கேன். இப்ப என்ன செய்யனும்னு சொல்ற.."

' ஆமாம். பெற்றவர்கள் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்..?' என்று புரியாமல் குழம்பினாள் அவள். அவளுடைய குழப்பத்தை தீர்க்க பாமாவே பேசினார்.

" இத பாரு மித்ரா.. உன்னுடைய வாழ்க்கையை தீர்மானிக்கிற பொறுப்பை எப்பவோ நீயே எடுத்துக்கிட்ட.. அதை உன்கிட்டயே கொடுத்தாச்சு.. நவிலன் ரொம்ப நல்ல பையன். அவங்க குடும்பமும் ரொம்ப நல்ல குடும்பம். ஆனா நாம மிடில் க்ளாஸ். அவங்க வசதியானவங்க. நம்ம பழக்கவழக்கங்கள் வேற அவங்களோடது வேற.. ரெண்டு குடும்பத்துக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. இதெல்லாம் சரிப்பட்டு வருமா சொல்லு.." அம்மா இப்படி ஒரு குண்டை தூக்கிப் போடுவார் என்று மகள் எதிர்ப்பார்க்கவில்லை. தந்தையை நோக்கினாள்.

அவர் நடந்த அத்தனை சம்பாஷனைகளையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார் என்றாலும் எந்த பதிலும் பேசவில்லை.

' அப்பா..! ஏதாவது பேசுங்கப்பா.. அட்லீஸ்ட் திட்டுங்க.. ' அத்தனை நாள் தேக்கி வைத்திருந்த அவளது பாசம் ஆறாய் பெருக்கெடுக்க, கண்கள் கணமாக தந்தையை நோக்கின.

அவர் தன் பார்வையை டீவியில் பதிந்திருந்தார்.

" ம்மா.. நீங்க என்ன சொல்ல வாறிங்கனு புரியுது.. இது ஒரு விஷயமே இல்லம்மா.. எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு. எங்களால் சந்தோஷமா வாழ முடியும். இதுக்கு நடுவில ஸ்டேட்டஸ் ஒரு விஷயமே இல்லம்மா.."

" உனக்கு இல்லாம இருக்கலாம். அவங்களுக்கு இருக்கும்ல.. அவங்க ஏறினா கார்.. இறங்கினா கார்னு வாழுறவங்க.. அவங்களுக்கும் நமக்கும் எப்படிம்மா ஒத்து போகும்? அந்த குடும்பத்துல கல்யாணம் கட்டிக்கிட்டு நீ எப்படி வாழுவ..?"

' இந்த அம்மா எந்த யுகத்தில் வாழ்கிறார் ?' என்ற எண்ணத்தோடு அவரைப் பார்த்தாள் மித்ரா.

" இப்ப முடிவா என்ன சொல்ல வாறிங்க?"

" இந்த இடம் ரொம்ப பெருசும்மா.. நம்ம தகுதிக்கு ரொம்ப அதிகம். யோசிச்சு செய்.." அவ்வளவோடு தன் உரையை முடித்துக்கொண்டு வத்தக்குழம்பு வைக்க சமையலறைக்குள் படையெடுத்தார் பாமா.

மித்ரா கைகளைக் கட்டிக்கொண்டு அங்கேயே நின்று கொண்டு இருந்தாள். ஐராவதம் ஏதாவது ஒரு வார்த்தையாவது பேசுவார் என்று. ஆனால் மனுஷன் கல்லாய் அமர்ந்து இருந்தாரே தவிர அசைந்து கொடுக்கவேயில்லை. அதற்கு மேலும் நிற்கமுடியாமல் வேகமாக அறைக்குச் சென்று கதவை படாரென அறைந்தாள் . சமையலறையில் இருந்து அதை எட்டிப்பார்த்துவிட்டு வேலையை தொடர்ந்தார் பாமா.

' என்னவாம் இந்த அம்மாவுக்கு.. சும்மா இல்லாத காரணத்தை சொல்றாங்க.. ஒருவேளை அம்மா சொல்ற மாதிரி ஸ்டேட்ஸ் ஒரு பிரச்சனையா வருமா..? ச்சீ.. ச்சீ.. நவிலன் , அவங்க அம்மா.. அப்பா.. எல்லோரும் என்கூட எவ்வளவு இதமா பழகுறாங்க. பணக்காரங்க என்ற பந்தா என்னைக்குமே எட்டிப்பார்த்தது இல்ல.. அம்மா தான் வீணா பயந்து என்னையும் பயமுறுத்துறாங்க...இப்ப என்ன பண்றது..?' யோசித்துக்கொண்டு இருக்கும் போதே அவன் செல்போன் வழியாக வந்தான். திரையில் தெரிந்த அவனது முகத்தை கண்ட போதே அவளது முகம் சிரிப்பை வாடகைக்கு எடுத்துக்கொண்டது.

" ஹாய் மித்துகுட்டி.." கொஞ்சலாய் ஆரம்பித்தான்.

" ஹாய்.."

" என்ன.. குரலில் ஒரு சோகம் தெரியுது?"

" ம்.. ம்.. நான் உங்க கூட பேசனுமே நவி.."

" பேசு.. யாரு வேணாம்னு சொன்னா.."

" ஐயோ நவி... நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன்.. நேர்ல பார்த்து பேசனும்.."

" சரி.. பேசலாமே.. எங்க வரட்டும்?"

" ம்.. சண்டே தானே இன்னைக்கு.. உங்களுக்கு வேற ஏதாவது வேலை இருக்கா?"

" தேவதையை தரிசிப்பதை விட வேறு வேலை உண்டா..?"

" ஆரம்பிச்சிட்டிங்களா?"

" வேணாம்னு சொல்றியா..?"

" வேணும்னு சொல்றேன்.." சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டாள். அந்தப்பக்கம் அவன் சிரித்தது அவளை சிலிர்க்க வைத்தது.

அந்த காபி ஷாப்பில் எதிர் எதிர் இருக்கைகளில் அவர்கள் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் முன் காப்பசீனோ கண் அடித்தது.

"நவி..! எங்க அம்மா வம்பு பண்றாங்க..?"

" என்னவாம் என் மாமியார்?"

அம்மா சொன்னதை சொன்னாள்.

" இது ஒரு விஷயம்னு இதை இவ்வளவு சீரியஸா சொல்லிகிட்டு இருக்க.." அவன் சிரித்தான்.

" என்ன நவி.. சிரிக்கிறிங்க.."

" பின்ன என்ன மித்ரா.. உனக்கு என்னைப் பற்றி தெரியும். என் குடும்பத்தைப் பற்றி தெரியும். தெரிஞ்சுமா இப்படி யோசிக்கிற..?"

மித்ரா அமைதியாக இருந்தாள். அவன் சொல்வது சரி. அவர்களை விட தாங்கள் அந்தஸ்தில் மாத்திரமே குறைந்து காணப்படுவதை அவளும் அறிவாள். ஆனால் அதை குத்திக்காட்டும் கணவன் இல்லை நவிலன். 'என்ன வரதட்சணை கொண்டு வந்த ? ' என்று கேட்கும் மாமியார் ரகம் இல்லை ரோகிணி. வாசனும் அப்படித்தான். அவர்கள் பண்பிலும் அன்பிலும் உயர்ந்தவர்கள் என்று மித்ராவுக்குத் தெரியும். ஆனால் பாமா அதைப் புரிந்து கொள்ள வேண்டுமே.

" நான் வந்து பேசட்டுமா மித்ரா..?"

" வேணாம்.. வேணாம்.. எங்க அம்மா அகப்பையாலயே அடிக்க வருவாங்க.."

அவன் போய் அவர்களை சந்திப்பதைக் காட்டிலும் தன்னுடைய அம்மாவும் அப்பாவும் ஐராவதத்தையும் பாமாவையும் சிந்திப்பதே முறையாகும் என்று எண்ணிய நவிலன் அன்றே வீட்டில் பேச வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டான்.

" பார்த்தா அப்படி தெரியாது. எந்த நேரமும் சமையல்கட்டுகுள்ள இருக்காம வெளிய வாங்கம்மானு வேற டயலாக் சொல்லி இருக்கேன்.. வர வர ரொம்ப பேசுறாங்க அம்மா.." குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாள்.

" எது.. உங்கம்மா வா..ரொம்ப பேசுறாங்களா..? நம்புற மாதிரி எதாவது சொல்லு.. நீதான் ரொம்ப பேசுவ.."

" அப்போ நான் வாயாடியா...?" முறைத்தாள்.

"இல்ல மித்துகுட்டி.. அத்தை என்கிட்ட ரொம்ப நல்லா நடந்துக்கிட்டாங்களே.. அதான் சொல்ல வந்தேன்.."

" அதெல்லாம் எங்க அப்பாவுக்கு உதவியாக ஹாஸ்பிடல்ல இருந்த நன்றிகடனுக்கு.. ஆமா.. யாரு அத்தை..?"

" உங்கம்மா தான்.."

" ஹலோ.. அது கல்யாணம் ஆனா தான்.."

" என்ன தங்கம்.. நீயே இப்படி சொல்லலாமா..? கண்டிப்பா நம்ம கல்யாணம் நடக்கும். யாரு தடுத்தாலும் நடக்கும்..அப்பா கூட பேசுனியா?"

அவனது கடைசி கேள்விக்கு காபியை உறிஞ்சிய படியே பதிலை தவிர்த்தாள்.

அவனும் அவளை வற்புறுத்தவில்லை. அவனுக்குத் தெரியும். அவள் இப்போது வெகுவாக மாறியிருந்தாள். தந்தையின் மாற்றமும் அவளை வெகுவாக மாற்றியிருந்தது. அவரோடு பேசுவதற்கு தன்னை கொஞ்சம் கொஞ்சமாக தயார்படுத்திக்கொண்டு வருகிறாள் என்று அவன் அறிவான். அவளை தூண்டி துருவி கேள்வி கேட்டு சங்கடத்துக்குள்ளாக்காமல் பேச்சை மாற்றினான்.

" என்ன அப்படி பார்க்கிறிங்க நவி.."

" ம்.. ஒன்னுமில்ல.."

" சொல்லுங்க.."

ஒன்றுமில்லை என்று ஆண்கள் சொன்னால் தான் எதுவுவோ இருக்கிறது, அதை கேட்டே ஆக வேண்டும் என்ற பிடிவாதம் பெண்களுக்குள் எழும். அதை மித்ராவும் செயற்படுத்தினாள்.

" ஒன்று யோசிச்சேன்.. சொன்னா அடிப்பியா இருக்கும்.."

" என்னது..." என்று கண்களை சுருக்கினாள்.

" இல்ல வேணாம்.."

" இப்ப சொல்லப் போறிங்களா இல்ல நான் எழும்பி போகட்டுமா?" என்று எழும்ப, அவள் மணிக்கட்டை பிடித்து அமர்த்தினான்.

" ப்பா. பிடிவாதக்காரி.. உட்கார்.. சொல்றேன்.."

ஆவலோடு அவனது கண்களை நோக்கினாள்.

" காபி நுரை படிந்த உன் இதழ்களில் தேன் குடிக்க ஆசைப்பட்டேன்.." என்று சொல்லி அவள் கன்னங்கள் சிவக்கும் அழகை பருகினான்.

அவள் வெட்கத்தில் தலைகுனிந்து காதோரம் வந்த கூந்தலை ஆட்காட்டி விரலால் ஒதுக்கி காதுக்கு பின்புறம் சொருகினாள். அந்த நொடி அவன் கண்கள் விமோசனம் கண்டன.

அவளது இதழ்கள். இதழ்களா அவை? ரோஜா மொட்டை அடுக்கி வைத்தது போல, இல்லையில்லை தாமரை இதழை பறித்து வைத்தது போல!

" மாய மோகினி.." அவன் உச்சரித்தான். அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

" அப்படிப் பார்க்காத.. நேரகாலம் மறக்குது.. "

" என்ன..?"

" நம்ம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனும் மித்ரா.." அவன் எந்த அர்த்தத்தில் சொன்னான் என புரிந்து அவள் உடம்பே கூசியது. செல்லமாய் சிணுங்கினாள்.

" காதலிச்சது போதும். வாங்க கிளம்பலாம்.." என்று எழுந்தாள்.

" ரெண்டு அடி தள்ளியே வா.." அவன் சொல்ல அதற்கும் அவள் சிரித்தாள். ஆனால் சொன்ன பேச்சை கேட்காமல் அவன் கைகளை கோர்த்துக்கொண்டாள்.


' நட்சத்திரங்களை கையில்
பிடிக்க முடியாதென்றார்கள்
நான் பிடித்திருக்கிறேனே..
உன்னை
என் கையில்.!'



அவனுக்குள் கவிஞன் வந்துவிட்டு போனான்.


ஆட்டம் தொடரும் ❤️?
 
Top