Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -39

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் -39


தாயும் மகளும் ஒரு அறைக்குள் சென்று அமர்ந்துவிட ..நவநீ மனம் தாளாமல் தோட்டத்தில் உலாவ சென்றார்.

இப்படி ஒரு பெண்ணின் பாவமும் ஒரு குடும்பத்தின் துயரமும் தன்னை சூழ்ந்துவிட்டதே. நல்ல குடும்பம்..சின்னஞ்சிறுசுகள் வாழ்க்கையை சரிவர புரிந்துகொள்ளாமல் பிரியவேண்டும் என்று நிற்க.. பெரியவர்கள் நின்று அவர்களை சேர்த்து வைக்க முயலாமல், தன் மனைவி இப்படி கலகம் செய்வது அவருக்கு தலைகுனிவையே ஏற்படுத்துகிறது.
ஆனால் அதுகூட புரியாதவளாய்.. புரிந்துகொள்ள முயலாதவளாய் அவள் நடந்து கொள்வது அவரது மனதை கத்தியை குத்தியது போல் இருந்தது..

அதிலும் தன் தங்கையிடம் பெண் கேட்டிருக்கிறாள்.. எப்போதும் இவரது குடும்பத்தினரை ஒரு பொருட்டாக கூட மதிக்காதவர் ..இன்று அவளது பெண்ணையே மருமகளாக்கி கொள்ள கேட்டிருக்கிறாள்.. அதுவும் தன் அனுமதியோ பிடித்தமோ இல்லாமல்!

தங்கை என்ன நினைத்திருப்பாள்? அண்ணன் சம்மதித்து தான் இப்பேச்சு என்றே நினைத்திருப்பாள்... இல்லாவிட்டால் ஏன் அண்ணா ? என்று ஒரு கேள்வியாவது இருந்திருக்கும். இந்த கையால் ஆகாதா அண்ணனை கேள்வி கேட்டு மட்டும் என்ன பயன் என்று சம்மதித்திருப்பாள்.

உமை அவரது செல்ல பெண்.. தன் பெண் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அத்தனையுமாய் உமை இருப்பது அவருக்கு பெரும் சந்தோஷம்.. தன் பெண் கூட தன்னிடத்தில் இத்தனை அன்பும் மரியாதையும் காட்டவேயில்லையே..

அப்படிப்பட்ட பெண்.. அவள் விருப்பத்தோடு தன் மகனை மணந்தால் சரி .. ஆனால் கடமைக்காகவும் உறவுக்காகவும் ..அவளது வாழ்வை பிடித்தமில்லாத ஒருவனோடு ..அது தன் மகனாகவே இருந்தாலும் பிணைப்பதில் அவருக்கு விருப்பமில்லை.

அதுவும் ரஞ்சித் இப்போது உள்ள நிலை.. அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருப்பது அவன் விழிகளிலேயே தெரிந்தது.

அவ்வளவு சீக்கிரம் அவனால் அம்ரிதாவை மறக்க முடியாது என்பதும் அவர் அறிந்ததே.

இதுவரை பெரிதாக தோல்விகளை சந்திக்காத இளம் தலைமுறை .. சிறிதாக ஒரு உரசல் வந்ததும் ..நானா நீயா என்ற போட்டி..

அதுவும் சற்றே தணிந்துபோனால் ..சரி வந்துவிடும் ..ஆனால் யார் தணிவது என்பது தானே இங்கே போட்டியே!

இப்படியே யோசித்தபடி தன் போக்கில் நடந்தவர் ஸ்ரீயின் அறை அருகில் வந்திருக்க .. திறந்திருந்த ஜன்னல் வழி தாயும் மகளும் பேசிக் கொள்வது தெளிவாகவே கேட்டது.

" அப்பாடா.. ஒரு வழியா இந்த அம்ரிதாவை ஒழிச்சு கட்டியாச்சும்மா "

" நல்ல வேளையா வெளிநாட்டுக்கு போறேன்னு கிளம்பினா. இல்லைனா கொஞ்சம் கஷ்டம்தான். நான் கூட பயந்தேன்.. ரஞ்சித்தையும் ஹரிணியையும் போட்டோ எடுத்து அனுப்பினோமே! எங்க அதை நம்பாமல் போய்டுவாளோன்னு கொஞ்சம் யோசனையாய் இருந்தது. ஒரு வேளை ரஞ்சித்தையே என்ன ஏதுன்னு கேட்டுட்டாலும் போச்சே ! நம்ம நல்ல நேரம்.. அவ மூளை சரியா வேலை செய்யலை. இந்த சின்ன பிசாசு இருக்கே அதுக்கு மட்டும் தெரிஞ்சிருந்தது.. உண்டு இல்லைன்னு ஆக்கியிருப்பாள். அடுத்து அவளுக்கு ஒரு வழி பண்ணனும் " பேசிக் கொண்டே இருந்தவர் எதேச்சையாக ஜன்னல் புறம் நோக்க .. தகிக்கும் முகத்துடன் நின்றிருந்தார் நவநீ.

தாங்கள் பேசியதை நவநீ கேட்டுவிட்டார் என்பதில் சத்யாவிற்கு எந்தவொரு பதட்டமும் ஏற்படவில்லை. அவருக்கு எப்போதுமே நவநீ என்றால் ஒரு இளக்காரம் தான்.

அவரும் பெரும்பாலும் மனைவியிடம் தணிந்தே போய் விடுவார். அது அவரது இயல்பு ..அதிலும் மனைவியை மரியாதையாய் நடத்துவதில் அவரை மிஞ்ச முடியாது..சத்யா ஏதாவது தவறு செய்தாலும்..'இப்படி செய்ய கூடாதும்மா ' என்று மென்மையாய் சொல்வாரே தவிர அதிர்ந்து கூட பேச மாட்டார். மூன்று பெண் பிள்ளைகளோடு பிறந்தவர் அல்லவா ?


ஆனால் அவரது தர்மபத்தினிக்கு தான் அது புரியவில்லை.. அதை தன்னிடமுள்ள பயம் .. தன் செல்வாக்கிற்கு கிடைக்கும் மதிப்பு என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்.

ஆனால் இம்முறை தான் அவருக்கு புரியும்படி ஏதும் செய்யாவிட்டால் தன் மகன்கள் வாழ்வு கந்தர கோலமாகிவிடும் என்று புரிந்தவராய் அன்றிலிருந்து மனைவியிடம் தன் எதிர்வினையை காட்டினார்.

ஆம்.. சத்யாவே அதனை எதிர்பார்க்கவில்லை.

அந்த நொடியில் இருந்து நவநீ சத்யாவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.முகம் பார்க்கவும் இல்லை.

அன்றிரவு தங்கள் அறையில் படுத்துக்கொள்ளாமல் விருந்தினர் அறையில் சென்று படுத்துக்கொள்ள.. அவரிடம் சென்று மன்னிப்பு வேண்டவோ.. ஏன் பேசவோ கூட சத்யா முயலவில்லை.

இரண்டு நாள் ஆனால் தானாக சரியாகிவிடுவார் என்று நினைத்திருக்க .. ஒரு வாரம் ஆகியும் அவரிடம் எந்த பேச்சும் வைத்துக்கொள்ளவில்லை என்றதும் அவர் மனம் துணுக்குற்றது.

காலை எழுபவர் .. தன் வழக்கமான நடைப்பயிற்சியை செய்துவிட்டு மகன்களோடு பேசியபடி உண்டு முடிப்பார்.

சத்யா எப்போதுமே கணவருக்கு பரிமாறியதில்லை.. ஆனாலும் மனைவியோடு சேர்ந்தே உணவு உண்ணுவது நவனீயின் பழக்கம். இப்போது அவரை எதிர்பார்க்காமல் உண்டுவிட்டு கிளம்ப ..சுருக்கென்றது சத்யாவிற்கு.

இவர் அருகில் வந்தாலோ அந்த இடத்தில் இருந்து நகர்ந்து விடுகிறார்.

முதல் முறையாக முகம் திருப்பும் கணவன்!

இதுவரை தான் எவ்வளவு அலட்சியமாக நடந்தபோதும் ஒரு நாளும் அவர் பதிலுக்கு எதுவும் செய்ததில்லை.. சின்னதாக ஒரு முக சுளிப்பு கூட கிடையாது.

சத்யாவிற்கு மனதிற்குள் ஏதோ செய்ய ... கணவனின் முக்கியத்துவம் முதல் முறையாக தெள்ள தெளிவாக புரிந்தது.

இதுவரை தன் பணத்திற்காக தன்னை மணந்தவர்.. அதனால் தான் ஏவியதெல்லாம் செய்கிறார் என்று இறுமாந்து இருந்தவருக்கு .. அவர் இல்லாவிட்டால் தான் இல்லை என்பது புரிய இத்தனை வருடங்கள் ஆகி இருந்தது.

அவர் தன்னிடம் பேசாத இந்த ஒரு வாரத்தில் தான் அவரது குரலை எத்தனை ஆராதிக்கிறோம் என்று புரிந்தது. ஆனாலும் இவ்வளவு நாட்கள் அவரை அதிகாரம் செய்து பழகிய மனம் .. இன்று அடிபணிய யோசிக்கிறது..

நீயே எனக்கு எல்லாம் என்று முழு சரணாகதி அடைவதுதான் காதலின் அடிநாதம் என்று புரியவில்லை .. பண செருக்கிலேயே வளர்ந்த அந்த பெண்மணிக்கு.

ப்ரித்வி தந்தையிடம் ஜாடை மாடையாக கேட்டு விட்டான். முதல் முறையாக தந்தையிடம் இருந்து இதில் தலையிட வேண்டாம் என்ற பதில் கிடைக்க அமைதியாகி விட்டான்.

ரஞ்சித் தன்னுள்ளேயே உழன்று கொண்டிருந்தவன் தந்தையிடம் தென்பட்ட மாற்றத்தை கவனிக்கும் மனநிலையில் இல்லை.

அவன் மனமோ 'உமை எனக்கு மனைவியா ? அப்படியான ஒரு நினைவு இதுவரையில் ஏற்பட்டதேயில்லையே' என்பதை விட ..'அவனது ரித்துவின் இடத்தில் வேறொரு பெண்ணா ? அப்படி அவள் என்னடா பெரிய தவறு செய்துவிட்டாள்?' என்று அவன் மனசாட்சியே அவனை கேட்டது.

'அவள் விரும்பிய வேலையை செய்தாள்.. அதனால் ஒரு இரண்டு மாதங்கள் சரிவர பேசி பழகவில்லை.. பல மைல் தூரம் கடல் கடந்து தனியாக இருக்கும் பெண்ணிற்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்திருக்க கூடும் .நான் எதையுமே யோசிக்காமல் அவளிடம் சண்டையிட்டதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்.'

இப்படி அவனுக்குளாகவே கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தன.


அதுவும் அன்று அவளது சோர்ந்து ஓய்ந்த முகத்தை பார்க்கையில் .. தான் தவறு இழைத்து விட்டோமோ என்ற ஐயம் முதல் முறையாக ஏற்பட்டது.

இந்த ஒரு வாரமாக சம்யுவும் வீட்டிற்கு வரவில்லை.. அங்கே அம்ரிதாவும் தனுஜாவும் ரொம்ப நொந்து போயிருக்க.. அவர்களை தேற்றவே அவளுக்கு சரியாக இருந்தது

அந்தப்பக்கம் அம்ரிதாவும் இதே மனநிலையில் தான் இருந்தாள்.

தன் அவசர புத்தியால் தன் மனம் கவர்ந்தவனை முழுதாய் இழந்துவிட்டோமோ என்ற பயம் அவளை பிடித்து ஆட்டியது.

எப்போதுமே அவனை அப்படி பார்த்ததில்லை.. பொருத்தமான உடை அணிந்து , எப்போதும் சவரம் செய்யப்பட முகத்துடன், வசீகர புன்னகை மின்ன மிடுக்காக இருக்கும் ரஞ்சித்தை தான் அவள் அறிவாள்.

இவனை பார்க்கையிலே யாரோ ஒருவன் போன்ற தோற்றம் ஏற்பட .... 'பிரேக்கப் ' என்ற வார்த்தை சொல்லும்போது அவ்வளவு சுலபமாக இருந்தது.. ஆனால் அதன் பின்னான ஒவ்வொரு நாளும் வண்டி வண்டியாய் துயரத்தை கூட்ட ..நாளுக்கு நாள் மனம் உடைப்பட்டதே தவிர சரிப்படுவதற்கான வழியை காணோம்.

இப்போது வேலை செய்யும் அலுவலகத்தில் இவள் தோழமை பூண்ட பெண்கள் பெரும்பாலும் மணமானவர்களாகவே இருக்க .. அவர்கள் தங்கள் கணவன்மார் குறித்து பேசும்போதுதான்.. தன்னவனின் மேன்மையான குணங்கள் அவள் மனதிற்கு பட்டன.

அவர்கள் சண்டையிட்டு கணவனை திட்டுவதும் பின்னர் அவர்களோடு சமாதானமாகி சந்தோஷிப்பதும் பார்க்கையில் ஆச்சரியமாய் இருந்தது.

வாழ்க்கை என்பது கடல் அலையில் சவாரி செய்வது போலதான் .. சில சமயம் உச்சியில் கொண்டு செல்லும் ..சில சமயம் பள்ளத்தில் தள்ளிவிடும்.. சில சமயங்களிலோ மொத்தமாக சுழலுக்குள் அழுத்தி விடும் .. ஒருவருக்கொருவர் மூழ்காமல் தடுக்கும் மிதப்பாக இருந்தால் தான் இருவருமே கரை சேர முடியும். இவ்வளவு நாள் கழித்து அவள் மனம் லேசாக தெளிந்தது போல் இருக்க .. காலமோ அவனை வேறொரு பெண்ணோடு பிணைக்க பார்க்கிறதே.

இவளும் அந்த பெண் உமையாளை நிச்சயத்தின் போது பார்த்திருக்கிறாள் . மிகவும் அமைதியான அழகான பதவிசான பெண். அவளை பிடிக்காமல் போக காரணம் இருக்காது. அவளை மணந்து ரஞ்சித் நிற்பது போல் ஒரு பிம்பம் மனதினுள் தோன்ற தாள முடியாமல் வெடித்து அழுதாள் அம்ரிதா.

தனுஜாவிற்கோ.. ஒரு மகள் வாழ்வு இப்படி அந்தரத்தில் தொங்க .. இன்னொரு மகளோ இந்த குடும்பத்தில் தலை கொடுத்து விட்டாளே என்றிருந்தது.

அருமை பெருமையாய் வளர்த்த பெண்களின் வாழ்வு கேள்விக்குறியாகிவிடுமோ என்ற பயம் அந்த தாயின் உறுதியை குலைக்க .. கணவர் உடனே மகளுக்கு திருமணம் நடத்த வேண்டும் என்றுமுடிவெடுக்க.. தடுக்க இயலாமல் ஓய்ந்து அமர்ந்திருந்தார்.

மோஹனது கண்களை கோபம் மறைத்திருந்தது.

காதலித்து மணந்தவரால் ..காதலை இழந்த வலியை உணர முடியவில்லை.. தன் பெண்ணை ஒருவர் கீழ்த்தரமாக பேசுவதா ? அவ்வாறு பேசியவர்கள் முன் மகள் பெரிதாக வாழ்ந்துகாட்டாவிட்டால் எப்படி ? என்று அதுவே அவர் மனதை ஆக்கிரமிக்க .. வெகு சீக்கிரமே தன் நண்பர் ஒருவரது மகனை பேசி முடித்துவிட்டார்... அதுவும் அம்ரிதாவின் சம்மதமில்லாமலே!
 
Last edited:
Top