Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ - 37

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் -37

தினமும் காலையில் ப்ரித்வி வீட்டிற்கு வந்துவிடுவாள் சம்யு. அதேபோல் மாலையில் அவன் சம்யுவோடு அவளது வீட்டிற்கு சென்று சிறிது நேரம் இருப்பான்.

"அதுதான் இங்க வந்து இப்போதைக்கு வாழமாட்டேன்னு சொல்லிட்டீல்ல ? ..இப்போ எதுக்கு வந்திருக்க ?” நொடித்து கொள்வார் சத்யபாமா .

"வேறெதுக்கு மாமியாரே ? அப்பப்போ வந்து காட்சி குடுக்கலைன்னா ..நாந்தான் உங்க மருமகள்ங்கிற விஷயத்தை உங்க மெமரில இருந்து டிலீட் பண்ணிட மாட்டீங்களா ? அது மட்டும் இல்ல என்ன இருந்தாலும் என் புகுந்த வீடு ..எல்லாரும் எப்படி வேலை பாக்குறாங்கன்னு மேற்பார்வை பாக்கிற கடமை இருக்கில்ல ? அதுசரி எங்க மாம்ஸுக்கு காபி டீ ஏதாவது குடுத்தீங்களா ?" என்று சத்யாவை வம்பிழுப்பதே அவளது வேலையாக இருக்கும்.

"அதெல்லாம் குடிச்சிருப்பாரு. நீ உன் வேலையை பாரு."

"ரொம்ப பேட் மாமியாரே ! எங்கம்மா எவ்வளவு வேலை இருந்தாலும் எங்கப்பாவுக்கு தன் கையால தான் காபி கலந்து குடுப்பாங்க . தெரியுமா ?" என்றதும் ப்ரித்வி அவள் காதருகில் வந்து "நீ என்ன செய்ய போற டார்லிங் ? உனக்கு அடுப்பு பத்த வைக்கவே தெரியாதே?"

"ஒரு சேஞ்சுக்கு, நீ காபி போட்டு எனக்கு குடு ப்ரீ . " என்றாள் அவனை மையலாய் நோக்கியபடி .

"காபியோடு சேர்த்து இன்னும் நெறைய குடுப்பேன் .ஓகேவா "

கன்னங்கள் செம்மையுற "மாமியார் பாக்கலேன்னா ஓகே தான்" என்றவள் சட்டென சுதாரித்து " என்னை டைவர்ட் பண்ணாத ப்ரித்வி" என்று சத்யாவின் புறம் திரும்பினாள்.

"நல்லா சொல்லும்மா ..உன் அத்தை ஒரு நாள் கூட எனக்கு காபி போட்டு கொடுத்ததில்லை. நீ ரெகமண்ட் பண்ணியாவது வாங்கி தாம்மா " என்றார் நவநீ பாவமாய்.

"நான் எதுக்கு தரணும்? அதுதான் சமையலுக்கு வேலை செய்ய அத்தனை ஆட்கள் இருக்காங்களே " என்றார் சத்யா .
"எத்தனை பேர் இருந்தாலும் மனைவி கையால குடிப்பது போல் ஆகுமா ?" விடாமல் நவநீ கேட்க ..

" வாதி தரப்பு வாதத்தை வைத்து பார்க்கும் போது ..பிரதி வாதி அவருக்கு ஒரு நாள் கூட தன் கையால் தண்ணீர் கூட தந்ததில்லை என்று தெரிய வருகிறது யுவர் ஹானர். ஆகையால் இனி தினமும் அவர் தன் கையால் தன் கணவருக்கு உணவு வழங்க தீர்ப்பளிக்கிறேன்" என்று சம்யு கூற..

"இன்னும் நீ அரைகுறை வக்கீலாவே ஆகலை. இதில தீர்ப்பு வேற சொல்றியா ?" கடுப்பாக கூறினார் சத்யா.

"அம்மா உங்க மருமக ஜுடிஷியல் மேஜிஸ்ட்ரேட் எக்ஸாமுக்கு படிக்க ஆரம்பிச்சிட்டா. சீக்கிரம் நீதிபதி ஆயிடுவா. அதனால் இப்பவே அவ சொல்றதை கேட்டுக்கோங்க " என்ற ப்ரித்வி, தன் தாயை காபி போட வைத்து தந்தை கையில் கொடுத்த பின்னர்தான் விட்டான்.

நவனீயையோ கையிலேயே பிடிக்கவில்லை.
இத்தனை வருட குடும்ப வாழ்வில் ஒருமுறை கூட பாசத்தோடு மனைவி நடந்துகொண்டதில்லை. கடமைக்கான வாழ்வாகவே அது இருந்து வந்தது. நாளடைவில் ஒரு பிடித்தமும், பிணைப்பும் வந்துவிடும் என்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் ஒரு காபிக்கே அவர் புளகாங்கிதம் அடைந்துவிட்டார்.

ஓரமாக அமர்ந்து பார்த்திருந்த ரஞ்சித்தின் இதழ்களும் புன்னகை சிந்தின.
ரஞ்சித்திற்கு அவள் வரும் நேரம் மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது. அதனால் ஆர்வமாக அவளிடம் பேசுவான்.

பேச்சு வாக்கில் அம்ருவை பற்றி ஏதாவது சொல்லுவாளா என்று அவன் மனம் ஏங்கும். அதை அறிந்தவள் போல் இன்று அம்ரு இதை செய்தாள் அதை செய்தாள் என்று ஏதாவது கூறுவாள்.

" அத்தான் .. இன்னிக்கு ஏதோ முக்கியமான மீட்டிங்காம் .நீங்க கிஃப்ட் பண்ண வாட்ச் தான் கட்டிக்கிட்டு போயிருக்கா . கேட்டா நீங்க கூடவே இருக்க மாதிரி தைரியமா இருக்குமாம்.. உங்க முன்னாள் காதலி சொல்றா." என்று விளையாட்டாய் கூறுபவள், அவன் முகத்தில் தெரியும் வேதனை பார்த்து " அவளோட வாழ்க்கையில இருந்த முன்னேற்றத்துக்கெல்லாம் பின்னாடி நீங்க இருந்தீங்க அத்தான். இப்பவும் இருக்கீங்க . ரெண்டு பெரும் கொஞ்சம் உங்க ஈகோவை விட்டு வெளியே வாங்க " என்று பெரிய மனிஷியாய் அறிவுரை சொல்லுவாள்.

அதனால் அவள் வீட்டிற்கு வரும் நேரம் உணவு மேஜையில் தான் இருப்பான். சம்யுவும் காலை உணவு இங்கே தான் உண்பாள்.
தினம் ஒரு வம்பு கண்டிப்பாக உண்டு .
இவள் கிளம்பும்வரை அறைக்குள் அடைந்தும் பார்த்துவிட்டார் சத்யா . சம்யு விடவில்லை.. கதவருகே நின்று தட்டியபடியே இருப்பாள்.

"எதுக்குடி இப்போ கதவை உடைக்கிற ?" என்று ஆவேசமாக வெளியே வந்தார் சத்யா .

"எதுக்கு மாமியாரே ? என்னை பாத்தா ஏன் ஓடி ஒளியறீங்க ?"

"நான் எதுக்குடி ஓடி ஒளியனும். இது என் வீடு . நான் நடு ஹால்ல தான் உக்காருவேன்" என்றவர் ஹால் சோபாவில் வந்து அமர்ந்து " இனி என்னை மாமியாரென்னு கூப்பிட்ட..இருக்கு உனக்கு" என்றார் கடுப்பாக.

அவர் கடுப்பாக வேண்டும் என்று தானே கூப்பிடுகிறாள்.

"அப்படியா ? அப்போ சொத்தை .. ஐமீன் .. அத்தைன்னே கூப்பிடறேன் அத்தை! " சாதுவாய் கூறினாள் , மேலும் கோபம் கொள்வார் என்று தெரிந்தே.

"அத்தை சொத்தைன்னே பல்லை கழட்டிடுவேன். என் பையனை மயக்கிட்டா எனக்கு மருமகளாயிடுவியா?" கோபமாய் கத்தினார் சத்யா .

"சரி .. இனி அப்படி கூப்பிடலை" என்றவள் அமைதியாக சென்றுவிட்டாள்.
சத்யாவிற்கு கூட ஆச்சரியம் தான்.
ஆனால் அமைதியாக சென்றால் அது சம்யுக்தா இல்லையே!

நேராக தன் மாமனாரிடம் சென்றவள் "பாருங்க மாம்ஸ் ..நான் அத்தையை அத்தைனு கூப்பிட கூடாதாம் " என்று முறையிட்டாள்.

"ரஞ்சித் அத்தான் நீங்களும் கேளுங்க " என்று அவனையும் இழுக்க ..
"வருங்கால நீதிபதி சொன்னால் ஏத்துக்க வேண்டியதுதான்" என்று சிரித்தபடி "அம்மா ..சம்யு பேச்சுக்கு அப்பீல் இல்லை " என்று கூறி உண்பதை தொடர ..
இல்லாத காலரை ஏற்றிவிட்டுக் கொண்டவளை முறைத்த சத்யா "இப்போவே உன் பேச்சை கூட கேட்க மாட்டேங்கிறா ? கட்டாயம் இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா ப்ரித்வி உனக்கு ?" கடுப்பாகி கேட்க..

"பார் சம்யு. எங்கம்மாவுக்கு கூட நக்கலடிக்க வருதே. எப்பவும் சீரியஸாவே இருப்பீங்களேம்மா "

"அதாவது எப்பவும் வெடிக்க காத்திருக்கும் குண்டு மாதிரின்னு சொல்லுங்க " என்றவள் ஓரக்கண்ணால் சத்யாவை பார்வையிட்டு விட்டு "அப்போது இனி என் மாமியார் 'பாம் ' என்றே அழைக்கப்படுவார்." என்று அறிவிக்க சத்யா கோபத்தில் கொதிக்க ..மற்றவர்கள் சிரிப்பை அடக்க படாதபாடு பட்டனர்.

சம்யு வீட்டில்..

மோகன் எப்போதும் முறுக்கிக் கொண்டே அலைய .. ப்ரித்வி அவரை சீண்டியபடியே இருப்பான்.
வழக்கத்தில் ஏழு மணிபோல் வேலை முடிந்ததும் சம்யுவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருவான்.

அந்நேரம் எல்லாரும் வீட்டிற்கு வந்திருக்க ..தனுஜா அவனை வெகுவாக கவனிப்பார்.

வந்ததுமே மகள் கையில் தண்ணீர் தந்து அனுப்புவார். சம்யு கையால் குளிர் நீரை பருகுகையிலேயே அன்றைய நாளின் களைப்பெல்லாம் விடைபெற்று ஓடிவிடும்.

பிறகு வரிசையாக காபி பலகாரங்கள் என்று வரிசை கட்டி வரும் "அத்தை ..இப்படியெல்லாம் சாப்பிட்டா .. என்னை எனக்கே அடையாளம் தெரியாமல் போய்டும் "

"அதெல்லாம் கல்லை சாப்பிட்டாலும் ஜீரணிக்கிற வயசு மாப்பிள்ளை.. இன்னும் கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க ..இரவு உணவு தயார் பண்ணிடறேன்"

எதிர் சோபாவில் அமர்ந்து கடுகடுத்த முகத்துடன் மனைவி தரும் உணவு வகைகளை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் மோஹனை பார்த்தபடி சொல்லுவான்..

"அத்தை .. மாமா பேச ஆரம்பிச்சா தாங்கமுடியாதுன்னு தானே அவர் வாய்க்குள்ள வரிசையா தள்ளுறீங்க? "

"கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்களே மாப்பிள்ளை" என்று தனுஜா ஜால்றா தட்ட.... மோகன் முறைப்பார்.

"நான் பேசுறது அவ்வளவு கஷ்டமா இருக்கா உங்களுக்கு ?" என்று சிலிர்த்து கொள்ள..

அந்நேரம் அம்ருவும் அங்கே தான் அமர்ந்திருப்பாள் "ப்ரித்வி .. எங்கப்பாவை நீங்க இப்படியெல்லாம் கிண்டல் பண்ண கூடாது. என்ன ஆனாலும் உங்க மாமனார் இல்லையா ?"

"உங்க தங்கச்சி கூட தான் எங்கம்மாவை கிண்டல் பண்றா " எனவும் சத்யாவும் அவர் பேசிய வார்த்தைகளும் நினைவு வர அம்ருவின் முகம் சிறுத்தது.

அதை உணர்ந்தவனாய் "என்ன தெரியுமா கூப்பிடுறா ? 'பாம்'னு கூப்பிடுறா " என்று புலம்புவதுபோல் கூற ..

"கரெக்ட்டான பேருதான். என் தங்கச்சி புத்திசாலிதான். " என்று அம்ரு தங்கைக்கு கைகொடுக்க " எங்கண்ணனும் இப்படிதான் அவளை பாராட்டினான்" என்றான் அம்ரிதாவின் முகத்தை பார்த்தபடி.
ரஞ்சித்தின் நினைவில் அம்ரு அமைதியாகிவிட ...

"அடிப்பாவி மாமியாரை பேர் சொல்லி கூப்பிட்டியா? அதுவும் வெடிகுண்டுன்னு ?" என்று அவள் காதை திருக "வலிக்குதும்மா .." என்றபடி அவரிடமிருந்து விலகி ஓடியவள் "மாமியார் கொடுமையைவிட தாய்மார்க்கொடுமை அதிகமா போச்சு . அவங்கதான் அத்தைன்னும் கூப்பிட கூடாது.. மாமியாருன்னும் கூப்பிட கூடாதுன்னு சொன்னாங்க ..சத்யத்துக்கும் அவங்களுக்கும் ரொம்ப தூரம்..அதுதான் பாம்னுகூப்பிட்டேன்" என்று தோளை குலுக்கியபடி சொல்ல

"மாப்பிள்ளை ..உங்க நல்லதுக்கு சொல்றேன் .இவளை கொஞ்சம் அடக்கி வைங்க "

"அவ்வளவுதானே அத்தை அடக்கிட்டா போச்சு " என்றவன் "என்னது?" என்று சம்யு முறைக்க "அடங்கிட்டா போச்சுன்னு சொன்னேன்மா " என்று சரண்டரானான்.

"அது சரி ப்ரித்வி.. ரெண்டு பெரும் எலியும் பூனையா இருந்தீங்க .. எப்படி இந்த ட்ரான்சிஷன் ?" என்றாள் அம்ரிதா.

"அதுவா அண்ணி.. அது க.மு , இது க.பி !"

"அப்படின்னா ?"

மெல்ல சம்யுவின் காதருகே "கபடிக்கு முன்.. கபடிக்கு பின் , சரிதானே சம்யு ?" என்று கேட்க வெட்கத்தில் முகம் சிவக்க அவன் விலாவில் சம்யு இடிக்க.. எல்லாரும் இவர்களையே பார்ப்பது உணர்ந்து "காதலுக்கு முன்.. காதலுக்கு பின் அண்ணி.. "

"வேறேதோ இருக்க மாதிரி தோணுதே " என்றாலும் சிரித்தபடி நகர்ந்துவிட்டாள் அம்ரிதா.

இப்படி ஏதாவதொரு வகையில் இருவரும் தங்கள் உடன்பிறப்புகளுக்கு அவர்களது காதலுக்குரியவர்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்க.. அம்ருவும் ரஞ்சித்தும் வெகுவாக யோசிக்க தொடங்கினர்.
 
Top