Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -36

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் -36


ப்ரித்வி வீட்டில்..
காலை உணவு நேரத்திற்கு இருவரும் ஜோடியாக உணவறைக்கு வர.. சந்தியா தான் வந்து அழைத்தார்.

இவர்கள் உண்ண செல்லும் போதே மற்ற மூவரும் அமர்ந்திருந்தாலும் .. யாரும் உண்ணும் மனநிலையில் இல்லை.

இவளை பார்த்ததும் சத்யா இருக்கையில் இருந்து எழுந்துவிட .. அவரது கையை பிடித்து அமர வைத்த நவநீ "கொஞ்சம் அமைதியா உக்காரு சத்யா " என்றார்.

"எப்படி அமைதியா இருக்க சொல்றீங்க ? ஏற்கனவே இவ அக்கா பண்ணி வச்ச வேலை போதாதா ? என் பையன் மனசையே உடைச்சிட்டா. இப்போ இவ வந்திருக்காளா?"

" என் அக்கா உங்க பையன் மனச உடைச்சதாவே இருக்கட்டும். நீங்க என்ன ஆசைப்படீங்க ? அதே தானே நீங்க ஆசைப்பட்டீங்க . நீங்க நெனச்சா சரி.. அது தானே நடந்தா தப்பா ?"

“பாரு! இவ எவ்வளோ வாய் பேசறா? அதுவும் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சி இன்னும் முழுசா ஒரு நாள் கூட ஆகலை ..அதுக்குள்ள எவ்வளோ பேசறா பாரு "

கோபமாய் கத்தியதில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது அவருக்கு.

"அம்மா .. யாரும் யார் மனசையும் உடைக்கலை. ஒருத்தரை ஒருத்தர் அவங்க ரெண்டு பேரும் சரியா புரிஞ்சிக்கலை" ஓரக்கண்ணால் தன் அண்ணனை பார்த்தபடி கூறினான் ப்ரித்வி.

"நாங்க வேலைக்கு போயிட்டு வர்றோம்" என்றபடி இருவரும் கிளம்ப "இன்னிக்கே வேலைக்கு போகணுமாப்பா " என்று நவநீ கேட்க "இங்க இருந்தால் அம்மா இன்னும் டென்ஷானாகிட்டு தான் இருப்பாங்க அப்பா. நாங்க வேலைக்கு போறதே பெட்டர் " என்று கிளம்பி விட்டனர்

ரஞ்சித்திற்கு சம்யுவை பார்க்கும்போதெல்லாம் அம்ருவின் நினைவே அதிகமாக வந்தது.ப்ரித்விக்கும் சம்யுவுக்கும் வேண்டியதும் அதுதானே !

ரித்து என்னை மறந்திருப்பாளா ? எப்படி என்னை நினைக்காமல் இருக்கிறாள்? அப்படி இருக்க முடியுமா ? எனக்கு அவள் சம்மந்தமான ஒவ்வொரு விஷயமும் அவள் குறித்த எல்லா ஞாபகங்களையும் கிளறி விடுகிறதே ! ஏதேதோ நினைத்தபடி உணவை அளைந்துகொண்டிருந்தான் ரஞ்சித்.


சம்யு வீட்டில் ..

மாலை தன் வீட்டினுள் நுழைந்து சம்யுவை பார்த்த மோகன் " என்ன அவன் வரலையா? நீ மட்டும் வந்திருக்க? "

"அவன்னா யாரு? ?"

முகத்தை திருப்பிக் கொண்டவர் "அதுதான் உன்னை கட்டிக்கிட்டிருக்கானே ..அந்த ப்ரித்வி அவனை தான் கேக்குறேன் "

"ஏன் ..மாப்பிள்ளைன்னு சொல்ல மாட்டிங்களோ ?'

"அது ஒண்ணுதான் குறைச்சலா ? சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணம் பண்ணிப்பீங்க ..நாங்க மருமகனேன்னு கொஞ்சனுமா? "

" கொஞ்சற வேலையெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீங்க மருமகன்கர மரியாதையோடு பேசுங்க போதும்"

"உன் பொண்ணுக்கு வாய் எவ்வளோ நீளுது பாத்தியா தனுஜா ?" என்றார் மனைவியை பார்த்து.
தனுஜாவுக்கும் மனதிற்கு வருத்தம் தான்.. ஒரு மகள் திருமணம் நிச்சயத்தோடு நின்றுவிட இன்னொருத்தியோ சொல்லாமல் கல்யாணமே செய்துகொண்டாள்! அதுவும் வேண்டாம் என்ற அதே வீட்டில்!

"என்ன சம்யு? எதுக்கு அப்பாகிட்ட வாய்க்கு வாய் வம்பிழுக்கிற ? எதுக்கு வந்தே? உன் ட்ரெஸ்ஸெல்லாம் இந்த பெட்டில இருக்கு" என்று ஒரு பெட்டியை கொண்டு வந்து வைக்க ..அவரை தீர்க்கமாய் பார்த்தவள்
"நாங்க இப்போ ஒண்ணா வாழுறதா இல்லை. எப்போ எங்க அக்காவுக்கும் அவங்க அண்ணனுக்கும் கல்யாணம் நடக்குதோ.. அது அவங்களுக்குள்ளவா இருந்தாலும் சரி ..தனித்தனியா இருந்தாலும் சரி ..அன்னிக்கு ஒண்ணா வாழ்ந்தால் போதும்னு தீர்மானிச்சிருக்கோம் "

சொல்லிவிட்டு தன்னறைக்கு செல்லும் மகளை வாய்பிளந்து பார்த்திருந்தனர் பெற்றோர்.

சமையல் அறை உள்ளே சென்றவள் தாய் தயாரித்து வைத்திருந்த மணமான காபியை இரு கோப்பைகளில் ஊற்றிக் கொண்டு தமக்கையின் அறை நோக்கி சென்றாள்.

கட்டிலில் சுருண்டு படுத்திருந்த தமக்கையை பார்க்கையில் மனம் வருந்தியது சம்யுவிற்கு.. இவளது துயர் துடைத்தே தீர வேண்டும் என்ற உறுதி ஏற்பட .."அக்கா " என்றழைக்க.. ஆச்சரியத்துடன் எழுந்து அமர்ந்தாள் அம்ரு.

"ஹேய் சம்யு! நீ எங்கே இங்கே ?'

"ஏன் ? நான் இங்க வரக்கூடாதா ?"

தன் தங்கையை அணைத்துக் கொண்டவள் "ஏய் அப்படியெல்லாம் நான் சொல்வேனா ? உன் வீட்டுக்கு போகலையானு தான் கேட்டேன்."

"அது உன் வீடும் தான் அக்கா " என்றதும் ஒரு விரக்தி சிரிப்பொன்று மலர்ந்தது அம்ரிதாவின் இதழ்களில்.

"என் வீடா ? என்னை உரிமையா அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போக வேண்டியவன் பாதியில விட்டுட்டு போய்ட்டானே"

" நீயும் தான் அவர் கையை உதறிட்டு வந்திட்டே அக்கா . அத்தான் இன்னமும் உன்னை நினைச்சிட்டு தான் இருக்காருன்னு எனக்கு படுது. உன் மனசை தொட்டு சொல்லு. வேறொருத்தரை உன்னால மனசார கணவனா ஏத்துக்க முடியுமா ?"

மௌனமாய் காபியை அருந்திய அம்ருவிடம் இதற்கு பதிலில்லை.

"உன்னால பதில் சொல்ல முடியாது அக்கா . ஆனால் நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்றேன். உனக்கு என்னிக்கு கல்யாணம் ஆகுதோ அன்னிக்கு தான் நான் ப்ரித்வி வீட்டுக்கு போவேன்" என்றவள் தன் தமக்கையை அணைத்து கொள்ள மூத்தவள் விழிகள் கலங்கி நீரை சொரிந்தன.

என்னால் வேறொருவரை மனமார ஏற்றுக் கொள்ள முடியுமா ? அவளது இதயமே அவளை கேள்வி கேட்க பதில்தான் இல்லை அவளிடம்.

ப்ரித்வியின் வீட்டில் ..

சம்யுவை நறுக்கென நாலு கேள்வி கேட்டுவிட வேண்டுமென்று சத்யபாமா காத்திருக்க ..ஏமாற்றமே மிஞ்சியது.

ப்ரித்வி தனியாக உள்ளே நுழைய "எங்கேடா உன் கூட ஒருத்தியை இழுத்திட்டு வந்தியே ? முதல் நாளே ஓடிட்டாளா ? என் பிள்ளைங்களை மயக்கறதுக்குன்னே அந்த தனுஜா பெத்து போட்டிருக்கா போல ? ஏற்கனவே உங்கண்ணன் மனசுடைஞ்சி போய் இருக்கான் .இப்போ அடுத்து நீயும் வரிசைல போய் ஏமாந்துட்டு வந்திருக்க " காலை முதல் அடக்கி வைத்திருந்த புலம்பல் எல்லாம் இப்போது வெடித்து வர.. ஸ்ரீஜாவும் வந்துவிட்டிருந்தாள் செய்தி கேள்விப்பட்டு. பின் கேட்கவும் வேண்டுமா ?

ரஞ்சித்தும் நவனீயும் அலுவலகம் சென்றவர்கள் அந்நேரம் திரும்பி வர .. நடு ஹாலில் ஒரு பஞ்சாயத்து கூடிவிட்டது.

" எங்கேடா அவ ?" என்றார் சத்யா மறுபடியும் ஆங்காரமாய்.

" அவ அவளோட வீட்ல இருக்காம்மா . என்னிக்கு அண்ணனுக்கு கல்யாணமாகுதோ அன்னிக்கு நாங்க எங்க வாழ்க்கையை தொடங்கிறதா முடிவெடுத்திருக்கோம்"

"இதென்ன ப்ரித்வி புது உருட்டா இருக்கு " நக்கலாய் ஸ்ரீஜா சொல்ல..."ஆமாப்பா ..எப்படியாவது இந்த வீட்டு மருமகளா ஆகணும்னு தானே அக்காவும் தங்கச்சியும் முயற்சி பண்ணாங்க ..அக்காகாரியால முடியல..அதுக்குதான் தங்கச்சியை ஏவி விட்டு உன்னை வலை போட்டு பிடிச்சிருக்கா "

தன் தாயா இப்படி நாகரீகமற்று பேசுவது என்று ஆற்றாமையாக இருந்தது ப்ரித்விக்கு.

தன்னவளை பேசியதும் கோபம் தலைக்கேற " என் மனைவியை பற்றி யாரும் பேச வேண்டாம் .என் அண்ணனை மாதிரி நான் இல்லை. அமைதியாக பாத்துக்கிட்டிருக்க மாட்டேன்" என்றவனின் பார்வை அண்ணனை துளைக்க 'நீதான் உன்னவளை விட்டுக் கொடுத்து விட்டாய் ' என்று அவன் பார்வை சொல்லாமல் சொல்ல ரஞ்சித்திற்குள் குற்ற உணர்வு.

" ஸ்ரீ! உனக்கும் தான் சொல்றேன் உன் எல்லைக்குள்ள இருக்க பழகிக்கோ. அவள் தான் உனக்கு அண்ணி புரியுதா ?" என்றவன் இதற்குமேல் உங்களுக்கு நான் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை என்பதாக உள்ளே சென்றுவிட்டான்.
 
Top