Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஓவியப்பாவை 2....

Advertisement

அத்தியாயம் 2:



கண்களுக்கு மேலே ஏதோ புகைப்படலம் போல இன்னமும் மிதந்து கொண்டிருந்தது. மயக்க நிலையில் நடப்பது கனவோ என வியக்க வைத்தது. ஸ்வேதாவின் எதிரில் ஓவியத்தில் பார்த்த அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அந்தக்கால அரச குடும்பத்துப் பெண்களைப் போல உடை அணிந்து இருந்தாள் அந்தப் பெண். உடலிலில் தங்க வைர ஆபரணங்கள் மினுமினுத்தன. அவளது மை தீட்டிய விழிகள் ஸ்வேதாவையே வெறித்தன.



"இளவரசி ஆணயிடுங்கள்! நான் செய்ய வேண்டியது என்ன?"



"புலிப்பட்டியில் நமது ரகசியமும் புதைந்துள்ளது . அதனை நீ மார்த்தாண்டன் உதவியோடு வெளியில் கொண்டு வா! இதனால் உன் பிரச்சனை மட்டுமல்ல என் பிரச்சனையும் தீரும்"



"மார்த்தாண்டரை நான் எப்படி அடையாளம் கண்டுபிடிப்பேன் இளவரசி?"



"அவர் உனக்கு அருகிலேயே தான் இருக்கிறார்! இன்னும் மூன்று திங்களுக்குள் நீ அந்த ரகசியத்தைக் கண்டு பிடி . எப்போதும் நமக்கு எதிரிகள் அதிகம் என்பதை மறவாதே. நான் வருகிறேன்" என்று சொல்லி மறைந்தது அந்த உருவம்.



மீண்டும் உலகமே இருளில் மூழ்கியது போல ஒரு மோன நிலை.



"ஸ்வேதா! கண்ணைத்திற! என்ன ஆச்சுடி உனக்கு?"



"அக்கா! கண்ணைத் திறந்து பாருக்கா! எனக்கு ரொம்ப பயம்மா இருக்குக்கா"



அப்போது தான் ஸ்வேதாவுக்கு தாயின் குரலும் தம்பியின் குரலும் எட்டின. கண்கள் வெதுவெதுப்பான நீரால் நிறைந்திருக்க மெல்ல இமைகளை அசைத்துப் பிரித்தாள். அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு பிரிய மறுக்க வலுக்கட்டாயமாக அவற்றைப் பிரித்தெடுத்தாள்.



"தாயே கருமாரி உனக்கு மாவிளக்கு போடுறேன்டி! என் மகளை கண்ணைத்திறக்க வெச்சியே?" என்று அம்மா கண்ணீரால் நனைந்தாள்.



அப்போது தான் தன்னை சுற்று முற்றும் பார்த்துக்கொண்டாள். தான் எங்கே இருக்கிறோம்? எப்படி இங்கே வந்தோம் என்பதே சுத்தமாக நினைவில்லை! தலையின் மீது பெரும் பாரத்தை வைத்தது போல இருந்தது.



"அம்மா"



"சொல்லு கண்ணு"



"நான் எங்கேம்மா இருக்கேன்?"



"ஆஸ்பத்திரியில இருக்கடி செல்லம்! உங்க ஆபீஸ்ல மாடிப்படியில இருந்து விழுந்து உனக்கு தலையிலயும் கால்லயும் நல்ல அடி. ரெண்டு நாள் நினைவில்லாமக் கிடந்தேம்மா! இன்னும் அஞ்சு மணி நேரத்துக்குள்ள நீ கண்ணு விழிக்காட்டா உன்னைக் காப்பாத்த முடியாதுன்னு டாக்டருங்க கெடு வெச்சிட்டாங்கடி! நல்ல வேளை நான் கும்புடுற கருமாரி என்னைக் கை விடல்ல" அம்மா நீளமாகப் பேசி திருநீற்றையும் வைத்து விட்டாள்.



அப்போது தான் சாலிக்கிராமம் செல்வதற்காகக் கிளம்பியதும் படிகளில் இறங்கி வரும் போது ஏதேதோ தோன்றி கண்ணைக் கட்டியதும் நினைவுக்கு வந்தது. கண்களைச் சுழற்றி சுற்று முற்றும் பார்த்தாள்.



"என்ன பார்க்குற? உன் ஆபீஸ் காரங்க எல்லாரும் பார்த்துட்டு போயிட்டாங்க! அதுலயும் ராகுல் தம்பி செஞ்ச உதவியை மறக்கவே முடியாது ஸ்வேதா! அவரு தான் உடனே உன்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டு வந்து சேர்த்து அங்க இங்க அலைஞ்சு ரத்தம் வாங்கிட்டு வந்துன்னு உதவி செஞ்சது." என்றாள்.



"இப்ப ராகுல் எங்கேம்மா?"



"ஆபீசுக்குப் போய் இன்னும் ரெண்டு நாள் லீவு சொல்லிட்டு வரேன்னு இப்பத்தான் போச்சு! உனக்கு என்ன செய்யுதும்மா கண்ணு? தலை வலிக்குதா?" என்றாள் பரிவாக. அம்மாவின் பாசத்தில் கண்கள் நிறைந்தன.



"தலை தாம்மா ரொம்ப வலிக்குது! எப்ப வீட்டுக்குப் போகலாமாம்? கேட்டீங்களா?"



"இன்னும் மூணு நாள் கழிச்சுப் போகலாம்னு சொன்னாங்க"



"அம்மா! இந்த இடத்தைப் பார்த்தா பெரிய பணக்கார ஆஸ்பத்திரி மாதிரி தெரியுதே? இதுக்கெல்லாம் பணம் ஏதும்மா? யார் கிட்டயாவது கடன் வாங்கினியா?" ஸ்வேதாவின் குரலில் ஏகப்பட்ட கவலை.



"பணத்தைப் பத்தி நீ அலட்டிக்காதே ஸ்வேதா! உங்க ஆபீசே தான் முழுச்செலவையும் ஏத்துக்கறாங்க! அதனால நமக்கு சுமை இல்ல! நீ முதல்ல நல்லா ஆகி வீட்டுக்கு வா! அது போதும் எனக்கு"



சோர்வாகக் கண்களை மூடிக்கொண்டாள் ஸ்வேதா. மீண்டும் மனதில் அந்த ஓவியப்பெண்ணின் முகமும் அவள் சொன்ன விஷயமும் வந்து போயின. நான் கண்டது கனவா? இல்லை தலையில் அடிபட்டதால் எனக்கு தேவையில்லாத காட்சிகள் தோன்றுகின்றவா? இதைப் பற்றி யாரிடம் கேட்க?" குழம்பினாள். தலை விண் விண் என்று தெறித்தது.



"அம்மா"



"சொல்லும்மா! குடிக்க ஆரஞ்சு ஜூஸ் தரட்டுமா?"



"வேண்டாம்மா! நான் நினைவில்லாமக் கிடந்தேன் இல்ல?"



"ஆமா"



"அப்ப ஏதாவது உளறுனேனாம்மா?"



மிடறு விழுங்கினாள் தாய்.



"அது எதுக்கு இப்ப? உனக்குத் தலையில அடி பட்டிருக்குறதால ஏதாவது உளறுவே அதை பெருசா எடுத்துக்க வேண்டாம்னு டாக்டர் சொல்லிட்டாரு. அதனால நீ கவலைப் படாம தூங்கு. உனக்கு ஓய்வு தான் இப்ப முக்கியம்"



"அப்ப நான் ஏதோ உளறியிருக்கேன் அப்படித்தானே? ப்ளீஸ் சொல்லும்மா! நான் என்ன சொன்னேன்னு சொல்லேன்"



மிகவும் தயங்கியவர் மெல்லப் பேசினார்.



"ஏதோ இளவரசி! மார்த்தாண்டன்னு சொன்னதா நினைவு. அதுக்கப்புறம் புலிப்பட்டி அரண்மனைன்னு சொன்னேம்மா! அவ்ள தான்" என்று அதோடு பேச்சை முடித்துக்கொண்டதன் அடையாளமாக ஆரஞ்சுப்பழத்தைப் பிழியலானார்.



கண்களை இறுக மூடிக்கொண்டாள் ஸ்வேதா. அவள் மனதில் பல கேள்விகள்.



"எனக்குத் தலையில் அடிபட்டதால் தான் இது போன்ற மாயத்தோற்றங்கள் ஏற்படுகின்றதா? ஆனால் ஆபீஸ் விட்டுப் படியிறங்கும் போது எனக்கு எங்கேயும் அடிபடவில்லையே? அவ்வளவு ஏன் அதிகாலையில் சாமி கும்பிடும் போது கூட எனக்கு அடிபடவில்லையே? ஆனால் அந்த ஓவியப்பெண் என்னைப் பார்த்து சிரிப்பது போலத் தோன்றியதும், படியில இறங்கும் போது இன்னும் என்னென்னவோ உருவம் வந்ததுக்கும் காரணம் என்ன? எனக்கு பைத்தியம் பிடிச்சுட்டதா?"



மேலும் அவளை யோசிக்க விடமால ராகுலின் கல கல குரல் கேட்டது. கண்களைத் திறந்து ஆர்வத்தோடு பார்த்தாள். ராகுல் அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தான் அவனுடன் அவன் தாயும் இருந்தார்கள். பாசத்தோடு ஸ்வேதாவின் அருகில் அமர்ந்தார்கள். ராகுல் அவர்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான். காமாட்சியும் அவரும் வணக்கம் சொல்லிக்கொண்டனர்.



"என்னம்மா? எப்படி இருக்கே?"



"உம்! நல்லா இருக்கேன் ஆண்ட்டி!"



"உன் நல்ல மனசுக்கு உனக்கு எந்தக் குறையும் வராதும்மா!"



"அங்கிள் எப்படி இருக்காரு ஆண்ட்டி?"



"நல்லா ஆயிட்டாரும்மா! ஆனாலும் அலைச்சல் கூடாதுன்னு சொன்னதால உன்னைப் பார்க்க வரல்ல! தப்பா நினைச்சுக்காதே"



"அப்படி ஒண்ணும் இல்ல ஆண்ட்டி! "



அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே டாக்டர் வந்து தூங்குவதற்கு ஊசி போட்டு விட்டுப் போனார். கண்கள் மயங்க தூங்கினாள் ஸ்வேதா. அவளது முகத்தையே ஆசையோடும் காதலோடும் பார்த்துக்கொண்டிருந்தான் ராகுல். இதனைக் கண்ணுற்ற அவன் தாய் கேலிச் சிரிப்போடு அவனை அழைத்தாள். தாயை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தான் ராகுல்.



"ஏம்ப்பா! உனக்கு அந்தப் பொண்ணை அவ்வளவு பிடிக்குதா?"



"ஆமா..இல்...அம்மா! எப்படி நீங்க கண்டு பிடிச்சீங்க?"



"அதான் பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையைப் பார்க்குறா மாதிரி பார்த்துக்கிட்டு இருந்தியே! அதை வெச்சு தான் முடிவுக்கு வந்தேன். கவலைப் படாதேப்பா எனக்கு பொண்ணைப் பிடிச்சிருக்கு. அவ உடம்பு குணமானதும் வீட்டுல போய்ப் பேசி முடிச்சு வெக்கறேன்." என்றார். ஆஸ்பத்திரி என்பதையும் பாராமல் தாயை அப்படியே தூக்கி தட்டாமாலை சுற்றினான் ராகுல். கண்களில் கனவு மின்ன தாயை பைக்கில் அமர வைத்து ஓட்டினான்.



அதே நேரம் புலிப்பட்டியில் ஒரு பெரிய வீட்டின் இருண்ட பகுதியில் மீசையைத் தடவி விட்டபடி ஒரு வயதானவர் அமர்ந்திருந்தார். அவர் கரங்களில் ஸ்வேதாவின் ஃபோட்டோ இருந்தது.
Nice ep
 
Top