Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 7

Advertisement

niranjana subramani

Well-known member
Member
7.

“ அது……..” என ஹர்ஷா எதோ கூறி சமாளிக்க நினைக்கையில்,

" அவன் எங்க அண்ணே ஒரு வாரம்னு சொன்னான். இத்தனை நாள் வராம வனிதா
எங்க போனாங்கன்னு தானே கேட்டான்” என கிஷோர் இடையிட்டு சமாளிக்க,

" இத்தனை நாள் அப்பிடின்னா….. வனிதா அம்மா இங்குன இல்லைன்னு உங்களுக்கு முன்னாடியே தெரியும். அப்பிடித்தானே தம்பி???” என சாமிக்கண்ணு கேள்வி எழுப்ப.

‘ என்னடா கால கொடுமை நாம ஒன்னு சொல்லி சமாளிக்க நினைச்சா நாமளே மாட்டிவிட்டுருவோம் போல’ என எண்ணிக்கொண்டு ஹர்ஷாவை காண அவன் கிஷோரை பார்வையால் எரித்து கொண்டிருந்தான்.

அதனை கண்டு கிஷோர் கண்களால் சமாளி என மன்னிப்புடன் வேண்டினான்.

" சாமி அண்ணே நாங்க கோவிலுக்கு போயிருந்தோம்ல அங்க யாரோ சொர்ணாம்பிகை பாட்டியாம். அவுங்கதான் சொன்னாங்க உலகத்துல இல்லாத அதிசயமா கல்யாண பொண்ண வீட்டுல வச்சுக்காம பண்ணையாரு நிச்சயம் பண்றாரு அப்பிடின்னு” என ஹர்ஷா கூறிக்கொண்டு சாமிக்கண்ணு முகத்தை காண ,

அவர் சந்தேக கண்ணோட்டத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். அதனால் ஹர்ஷா மேற்கொண்டு தொடர்ந்து,

“ ஹ்ம்ம் அப்புறம் எதோ மயிலரசி கொலை அதைக்கூட பண்ணையார்தான் பண்ணி இருப்பார் அப்பிடின்னு சொல்லிட்டு இருந்தாங்க அதை வச்சுதான் கேட்டேன்” என கூற

“என்னது சொர்ணா கிழவியா????.. அது ஒரு லூசு கிழவி . அது சொல்றது எல்லா காதுல வாங்கிக்காதீங்க அப்புறம் எனக்கு பந்தல் கட்டுற
இடத்துல வேலை இருக்கு நான் போய்ட்டுவாரேன் தம்பிகளா” என சாமிக்கண்ணு அவசரமாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.

" என்னடா இவரு, இன்னைக்கு கேட்ட கேள்வி எல்லாம் வச்சு பார்த்தா நாம மாட்டினோம்னு நினைச்சேன். ஆனா இப்போ இவரு நீ சொன்னதை நம்பி ஒன்னும் கேட்காம வேலை இருக்குன்னு வேகமா போறாரு” என
கிஷோர் கேட்க,

" டேய் அவரு வேகமா எங்க போறாருன்னு நீ நினைக்குற எல்லாம் பண்ணையாரை பார்த்து இங்க நடந்தத சொல்றதுக்காத்தான் இருக்கும்”
என ஹர்ஷா கூறினான்.

" எதை வைத்து அப்படி சொல்ற ஹர்ஷா??”

" அங்க பாரு பண்ணையார்ட்ட சாமிக்கண்ணு தீவிரமா எதோ சொல்லிட்டு இருக்காரு” என பந்தல் போடும் இடத்திற்கு பக்கத்தில் நின்ற தன் காரில் ஏறுவதற்கு சென்ற பண்ணையாரிடம் பேசிக்கொண்டிருந்த சாமிக்கண்ணை சுட்டிக்காட்டினான் ஹர்ஷா.

" அது சரி நான் ஒன்னு கேக்கணும்னு நினைச்சே???”
என கிஷோர் வினவ

" என்னதுடா???”

" அதான் வனிதா கிடைச்சாச்சுல. அப்புறம் என்ன நாம கிளம்ப வேண்டியதுதானே”.

" டேய் வனிதா கிடைச்சாலும் கதிர் சொன்ன ரத்தக்கறை. அப்புறம் கதிரும் வனிதாவும் ஓடிப்போறதா இருந்த ராத்திரி என்ன ஆச்சு வனிதாவுக்கு.

அதோட இந்த நிச்சயதார்த்தம் பத்தி வனிதாவுக்கு சம்மதம் இருக்கா இப்படி எல்லா கேள்விகளுக்கும் நமக்கு விடை தெரியனும்.

இது எல்லாம் தெரிஞ்சாதான் நாம இங்கேயிருந்து கிளம்ப முடியும்”
என ஹர்ஷா கூறினான்.

" சரி டா இது எல்லாம் நாம எப்பிடி தெரிஞ்சுக்குறது. வனிதா சொன்னாதான் உண்டு” என கிஷோர் சலிப்புடன் கூற

" ஆமாடா வனிதாகிட்ட தான் கேட்க போறோம்”

" எப்படிடா???” என கிஷோர்
வினவ

" இன்னைக்கு ராத்திரி தானே வனிதாவை பண்ணையார் கூட்டிட்டு வரதா சாமிக்கண்ணு சொன்னாரு”

" ஆமா”

" இன்னைக்கு ராத்திரி 12 மணி போல வீட்டுக்குள்ள புகுந்து வனிதாவை சந்திக்க போறேன்”.

" வீடு புகுந்து சந்திக்க போறியா???? டேய் ஏதும் பிரச்சனைஆகிடாம”

" பிரச்சனை வந்தா பார்த்துக்கலாம். நீ வீட்டுக்குள்ள வரவேணாம் வெளியவே நின்னுகோ”

" ஏன்டா?? நானும் வரேன் உன்கூட”

" இல்லடா ரெண்டு பேரா போனா மாட்டினாலும் மாட்டிக்கலாம். அதான் நான் மட்டும் தனியா போய்ட்டு வரேன் அவ்வளவுதான்” என ஹர்ஷா கண்டிப்பு குரலில் சொல்லி முடித்தான்.

அதனை அரை மனதுடன் ஏற்றுக்கொண்டு கிஷோரும் தலை அசைத்தான்.

இரவு பனிரெண்டு மணிக்கு ஹர்ஷாவும் கிஷோரும் வீட்டின் பின் பகுதியில் இருந்த மொட்டை மாடிக்கு செல்வதற்கான படிகட்டிருக்கு அருகில் வந்தனர்.

" கிச்சா நான் இந்த வழியா மொட்டை மாடிக்கு
போய் அங்க இருந்து முன்னாடி முகப்பு அறைல இருக்குற முற்றம் வழியா கீழ குதிச்சு வீட்டுக்குள்ள போயிடுவேன்.

நீ மாரி கண்ணுல மாட்டிக்காம இங்க காத்திரு
என ஹர்ஷா கூறினான்.

" சரி மச்சி கவனமா போயிட்டு வா” என கிஷோர் கூற ஹர்ஷா தலை அசைப்புடன் மாடி படிகளில் ஏறி தன் திட்டப்படி வீட்டினுள் நுழைந்தான்.

தரைத்தளத்தில் விசாலமான முகப்பு அறை, சமையல் அறை, சாப்பாட்டு அறை மட்டும் இருக்க;
மாடிக்கு சென்றான்.

அங்கு இருந்த நான்கு அறைகளில் இரு அறை உட்பக்கமாக பூட்டி இருந்தது ஒரு அறை வெளி பக்கமாக மூடி இருக்க, ஒரு அறை மட்டும் திறந்து இருந்தது.

விடிவெள்ளி வெளிச்சத்தில் அந்த திறந்து இருந்த அறையில் ஹர்ஷா எட்டிப்பார்க்க,

திடீரென இரு வலிய கரங்கள் ஹர்ஷாவின் கழுத்தை பிடித்து இறுக்க ஆரம்பித்தது. அந்த கரங்களில் இருந்து ஹர்ஷா விடுபட முயற்சித்து கொண்டிருக்கும்போது,

“ என் மயில கொடு நீதான் எங்கையோ ஒளிச்சு வச்சுருக்க கொடு என் மயில. இல்ல உன்ன கொன்னுடுவேன் என் மயில கொடு”


என திரும்ப திரும்ப அதையே தன் ஆவேசமான குரலில் கூறி ஹர்ஷாவின் கழுத்தை இறுக்கி கொண்டே சென்றான் அந்த வலிய கரங்களுக்கு சொந்தக்காரன்.

' இந்த குரல்..….இது…. இதுதானே நேத்து இரவு கேட்ட அலறல் குரல் மாதிரி இருக்கு. ஒருவேளை இவரோட அலறல் தான் நேத்து கேட்டுச்சா’

என எண்ணிக்கொண்டே அந்த வலிய கரங்களை தள்ளிவிட்டு ஒரு அடி பின்னாடி நகர்ந்து நின்றான் ஹர்ஷா .

மீண்டும் அக்கரங்கள் ஹர்ஷாவை நோக்கி வரும்போது திடீரென விளக்குகள் போடப்பட்டது .அந்த வெளிச்சத்தில் ஹர்ஷா தன முன்னாடி பார்க்க,

பரட்டை தலையுடன் , தாடி மீசை முகத்தை மறைத்து இருக்க இரு கண்களும் கோவத்தையும் ஏக்கத்தையும் ஒரு சேர காட்டி ஒரு 26 லிருந்து 30 வயதுடைய புதியவாலிபன் நின்று கொண்டிருந்தான்.

அந்த புதியவன் தான் தன்னை தாக்க முற்பட்டது, நேத்து கேட்ட அலறலும் இவரோடதாகத்தான் இருக்கமுடியும் என நினைக்கையில்,

“ மாரி.. அரசனை அவனோட அறைக்கு கூட்டிட்டு போ” என ஹர்ஷாவின் பின்னிருந்து ஆதிலிங்க மூர்த்தியின் கட்டளை குரல் கேட்டது,

உடனே ஹர்ஷா திரும்பி பார்க்க “உன்னைத்தான் மாரி அரசனை அவனோட அறைக்கு கூட்டிட்டு போ”
என ஆதிலிங்க மூர்த்தி மறுபடியும் மாரியிடம் கூறினாலும் பார்வை என்னவோ ஹர்ஷாவையே வெறித்துக்கொண்டிருந்தது.

அரசன் என்ற பெயரை கேட்டவுடன் ‘காலையில ஒற்றைக்கால் மண்டபத்துல அரசன் அரசின்னு கிறுக்கி இருந்துச்சே; ஒருவேளை இந்த அரசனும் மயிலரசியுமா இருக்கும்மா??? இவன் வேற மயில கொடு மயில கொடுன்னு சொல்லிட்டே இருக்கான்’ என எண்ணி கொண்டிருக்கும் போது

“ நான் வரமாட்டேன்….. எனக்கு என் மயில கொடுங்க…” என கத்தி கொண்டிருந்த அரசனை மாரி ஹர்ஷாவை முறைத்துக்கொண்டே இழுத்து சென்றான் அரசனின் அறைக்கு.

அந்த சத்தத்தில் தன் சிந்தனையில் இருந்து விடுபட்டு பண்ணையாரை ஹர்ஷா பார்க்க,

ஆதிலிங்க மூர்த்தி பார்வை ஹர்ஷாவை வெறித்துக்கொண்டிருந்ததை கவனித்து அவரை ஹர்ஷா நெருங்கி,

சிறு தயக்கத்துடன் " சார்…. அரசன்…” என எதோ கேட்க வரையில்

" நிலவரசன் என்னோட பையன்” என கரகரப்பான குரலில் கூறி கலங்கிய தன் விழிகளை இமைகளால் மறைத்தார் ஆதிலிங்க மூர்த்தி.





நிலவரசனின் இந்நிலைக்கு காரணம் என்னவாக இருக்கும்????
 
Top