Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 25( A) ( PRE FINAL)

Advertisement

niranjana subramani

Well-known member
Member
25.

என்ன மச்சி சொல்ற???. நிலவரசனா!!!!.. அவன் எதுக்கு மயிலரசியை கொன்னுருக்கணும்???” என கிஷோர் குழப்பத்தோடு வினவ

இல்லடா நான் நிச்சயமா சொல்லல. ஒருவேளை அப்படியும் இருக்குமோன்னு ஒரு சந்தேகம் அவ்வளவுதான்என ஹர்ஷா கூறிக்கொண்டிருக்கையில்,

வனிதாவின் அறையில் இருந்து வெளியே வந்த நர்ஸ்,

சார் பார்வையாளர் நேரம் முடியப்போகுது. சீக்கிரம் பேசிட்டு கிளம்புங்க. அவுங்க ஓய்வு எடுக்கணும்என ஹர்ஷா மற்றும் கிஷோரிடம் கூறிவிட்டு சென்றார்.

அதன் பின் அறைக்குள் இருவரும் நுழைந்தனர். மீண்டும் ஹர்ஷா வனிதாவிடம்,

இப்போ உங்களால பேசமுடியுமா??. இல்ல நாங்க அப்புறம் வரட்டுமா வனிதா??” என ஹர்ஷா வனிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கேட்க

நான் நல்லா இருக்கேன் சார். உங்களுக்கு என்ன தெரியணுமோ நீங்க கேளுங்க என வனிதா கூறினாள்.

ஏன் வனிதா அந்த தில்லைநாயகியோட பொண்ணு மயிலரசியைத்தானே நிலவரசன் விரும்புனது. அதோட அந்த விஷயம் தில்லைநாயகிக்கும் தெரியும்.

அப்படி இருக்குறப்போ தன் மகளோட இறப்புக்கு எதோ ஒரு வகையில உங்க குடும்பமும் காரணம்ன்னு நினைச்சு இருப்பாங்க. அப்புறம் எப்படி நிலவரனுக்கு வைத்தியம் பார்க்க ஒத்துக்கிட்டாங்க???” என கேள்வி எழுப்ப

சார் அண்ணனுக்கு மயிலரசி இறந்து மூணு மாசம் கழிச்சு ஒரு நாள் ராத்திரி காய்ச்சல் வந்து ரொம்ப அனத்த ஆரம்பிச்சான். அப்போ தான் அவசரத்துக்கு தில்லைநாயகிட்ட வைத்தியம் பார்த்துக்கலாம்ன்னு வீட்டுல வேலை பார்க்குற மாரி சொன்னாரு.

சரின்னு அப்பாதான் வேலுவை அனுப்பி தில்லைநாயகியை அழைச்சுக்கிட்டு வர சொன்னாரு.அவுங்க வைத்தியம் பார்த்து காய்ச்சலும் நின்றுடுச்சு. அப்புறம் தான் ஒரு ரெண்டு நாளுல மனநிலை பாதிக்கப்பட்டது.

அதுக்கு அப்புறம் மறுபடியும் தில்லைநாயகி கிட்ட அப்பா பேசுனப்போ, அவுங்க
என்னால வைத்தியம் பார்த்து இதை குணப்படுத்தமுடியும். நீங்க எதுக்கும் கவலை படாதீங்க ஐயான்னு’ சொன்னாங்க. எங்களுக்கும் அவுங்க மருத்துவம் மேல அவ்வளவு நம்பிக்கை. ஏன்னா???. நிறைய வியாதிகளையும் இந்த மாதிரி மனநிலை பாதிக்க பட்டவங்களையும் குணப்படுத்திருக்காங்க. அதான் அவுங்களை முழுசா நம்பி அவுங்ககிட்ட வைத்தியம் பார்க்குறோம்” என வனிதா கூறிமுடித்தாள்.

“ சரி வனிதா. உங்க வீட்டுல வேலை பார்க்குற வள்ளி எத்தனை வருசமா வேலை பார்க்குறாங்க???” என ஹர்ஷா அடுத்த கேள்வியை எழுப்ப

“ ஏன் சார் கேட்குறீங்க???”


இல்ல வனிதா உங்களுக்கு பால் கொண்டுவந்து குடுக்க வந்தது வள்ளி தான். ஆனா இடையில் உங்க அப்பா வாங்கி உங்களுக்கு குடுத்துருக்காங்க. அதனால ஏன் ஒருவேளை வள்ளி கூட விஷத்தை கலந்துருக்கலாம்ல??” என ஹர்ஷா சொல்ல

இல்ல சார் வள்ளியா இருக்க வாய்ப்பே இல்ல.”

எதை வச்சு அப்படி சொல்றீங்க வனிதா??”

“ சார் வள்ளி இங்க வேலைக்கு சேர்ந்த போது எனக்கு பத்து வயசு கிட்டதட்ட பதிமூணு வருசமா இங்க வேலை பார்க்குறாங்க
..

அதோட எப்பவும் நான் சாப்பாடு வேணாம்ன்னு சொன்னாலும் வெறும் பாலாவது குடித்தான்னு சொல்லி குடுப்பாங்க.அப்படி இருக்குறப்போ இத்தனை வருசத்துல இல்லாததா திடீர்ன்னு என்னைய அவுங்க கொல்ல காரணம் என்ன சார் இருக்க முடியும். அதனால நிச்சயம் இதுக்கு வள்ளி காரணம் இல்ல” என வனிதா உறுதியாக கூற

!!!... சரி வனிதா நீங்க ஓய்வு எடுங்க எங்களுக்கு வேற எதாவது தகவலோ இல்ல சந்தேகம்ன்னா நாங்க உங்கள சந்திக்க வறோம்” என வனிதாவிடம் கூறிவிட்டு பின் நண்பர்கள் இருவரும் விடைபெற்றனர்.

மருத்துவமனையில் இருந்து கிளம்பிய ஹர்ஷாவும் கிஷோரும் அரங்கநாதபுரத்திற்கு திரும்பி வந்துகொண்டிருக்கையில்,

ஏன் மச்சி வனிதா வள்ளி விஷம் கலந்து குடுத்துருக்க வாய்ப்பு இல்லைன்னு சொல்லுது. பத்தாததுக்கு ஊருக்கு போன வள்ளி இன்னும் வரலன்னு அன்னைக்கு சாமிக்கண்ணு சொன்னாரு. இப்போ என்ன செய்றது???. எங்க யாருகிட்ட இருந்து ஆரம்பிக்குறது????. ஒரே குழப்பமா இருக்கு” என கிஷோர் புலம்ப

டேய் எப்ப பார்த்தாலும் ஏன்டா புலம்புற???”

“ ஏன் கேட்கமாட்ட வனிதாவுக்கு என்ன ஆச்சுன்னு கண்டுபிடிக்க வந்து
, இப்போ மயிலரசி இறப்பு, நிலவரசன் நிலைமை, வனிதாவுக்கு நடந்த கொலைமுயற்சின்னு எல்லாத்துக்கும் விடை தேடுறோம்.

பத்தாததுக்கு அந்த ஒத்தை காலு மண்டபத்துல கதிர் பார்த்ததா சொல்ற ரத்த கரை யாரோடதுன்னு தெரியல.இதுல எங்க யாருகிட்ட விசாரிக்குறதுன்னு தெரியல. ஒரு தடயமும் கிடைக்கல. அப்புறம் புலம்பாம என்ன செய்ய???” என கிஷோர் கடுப்புடன் கேட்க

ஏன்டா கடுப்பாகுற??. நாம முதல்ல தில்லையாகியை பார்க்கப்போறோம். அவுங்க கிட்ட பேசுனா எதாவது சாதகமா கிடைக்குதான்னு பார்க்கலாம். அதுவரை கொஞ்சம் அமைதியா வா” என ஹர்ஷா கூற,

அதோடு அரங்கநாதபுரம் வந்து தில்லைநாயகி வீட்டின் முகவரியை வரும் வழியில் கேட்டு கேட்டு ஒருவழியாக மதியம் ஒரு மணிபோல தில்லைநாயகி வீட்டிற்கு வந்தனர். அதுவரை அவர்களின் பயணம் அமைதியாகவே இருந்தது.

தில்லை நாயகி வீட்டின் முன்பு வண்டியை ஹர்ஷா நிறுத்தியவுடன் வண்டியில் இருந்து இறங்கிய கிஷோர், தில்லைநாயகி வீடு பூட்டி இருந்ததை பார்த்து

“ மச்சி வீடு பூட்டி இருக்குடா
. இப்போ என்ன செய்றது???” என சலிப்புடன் கேட்க

ஏன்டா சலிச்சுக்குற. வெளிய எங்கயாவது போயிருப்பாங்க. இரு பக்கத்து வீட்டுக்காரவங்ககிட்ட கேட்கலாம்” என ஹர்ஷா கூறிவிட்டு

தில்லைநாயகி வீட்டின் வலதுபுறம் இருந்த சிறிய ஓட்டு வீட்டின் முன்பு இருந்த கல்லில் மீன் உரசிக்கொண்டிருந்த ஒரு முப்பது வயதுடைய பெண்ணிடம் வந்து,

அக்கா என அழைக்க

அந்த பெண்ண சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்து ஹர்ஷாவிடம்
,

“ என்ன தம்பி என்னையவா கூப்பிட்டீங்க??”

“ ஆமா அக்கா எங்களுக்கு ஒரு உதவி வேணும்” என ஹர்ஷா பேசிக்கொண்டிருக்கும் போது அங்குவந்து நின்றுகொண்டான் கிஷோர்
.

அதை கண்ட அந்த பெண்,

முதல்ல நீங்க ரெண்டு பேரும் யாரு???” என கேட்க

“ அக்கா நாங்க ரெண்டு பேரும் ஆதிலிங்க மூர்த்தி சார் வீட்டுலதான் தங்கிருக்கோம்”
. என ஹர்ஷா கூற

நீங்க பண்ணையார் ஐயா வீட்டுலதான் தங்கிருக்கிங்களா. அப்போ சொல்லுங்க தம்பி நான் என்ன உதவி செய்யணும்” என அந்த பெண் கேட்க

“ இங்க இந்த ஊரைப்பத்தி
, கோவிலைப்பத்தி, ஒத்தைக்காலு மண்டபம் பத்தி கட்டுரை எழுத போறோம்.அதான் ஊருக்குள்ள விசாரிச்சப்போ தில்லைநாயகின்றவங்க சித்த மருத்துவம் நல்லா பார்குறதா சொன்னாங்க. அதான் அவுங்களை பார்த்து சும்மா பேசலாம்ன்னு வந்தோம். ஆனா வீடு பூட்டி இருக்கு அதான் அவுங்க எங்க போயிருக்காங்க எப்ப வருவாங்கன்னு கேட்கலாம்ன்னு வந்தோம் என ஹர்ஷா கூறினான் .

“ நாயகி அக்காவா???. அவுங்க கோவில் குளம்ன்னு புனித யாத்திரைக்கு போயிட்டாங்க” என அந்த பெண் கூற

“ புனித யாத்திரையா
!!!!.. எப்போ போனாங்க??. எப்போ வருவாங்கன்னு தெரியுமா???” என ஹர்ஷா வினவ

அது எல்லாம் தெரியல தம்பி. ஒருநாள் ராத்திரி நானும் என் புருசனும் என் அக்கா மக காதுகுத்துக்கு போயிட்டு வண்டில வந்துகிட்டு இருந்தோம். அப்போ நாயகி அக்கா அந்த ஒத்தை காலு மண்டபத்துல உட்கார்ந்துருந்தாக.

அவுங்க மக அரசி இறந்ததுல இருந்து எப்போதும் ராத்திரி கொஞ்ச நேரம் அவுங்க அங்க உட்கார்ந்து இருக்குறதுதான். ஆனா அன்றைக்கு ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தாப்புல இருந்துச்சு. ஏன்னா நாங்க வரும்போதே மணி ஒன்பது கிட்ட இருந்துச்சு.

அதான் நான் அந்த அக்கா கிட்ட கேட்டேன் ‘ என்னக்கா இங்க உட்கார்ந்திருக்கீங்க. என்ன யோசனைன்னு. அப்போதான் அவுங்க சொன்னாங்கா ஒன்னும் இல்ல சரசு மனசு சரி இல்ல அதான் கோவில் குளம்ன்னு எங்கயாவது போய்ட்டுவரலாம்ன்னு இருக்கேன்னு’.

அப்புறம் காலையில பார்த்தா வீடு பூட்டி இருந்துச்சு
.ஒரு ரெண்டு நாள் வரல வேற. அதான் அவுங்க சொன்ன மாதிரி புனித யாத்திரை போய்ட்டங்களோன்னு நினைச்சுக்கிட்டேன்” என அந்த பெண் கூறிமுடிக்க

ஹர்ஷா யோசனையுடன் கிஷோரை பார்க்க அவன் முகம் எதோ குழப்பத்தை காட்ட,

என்ன கிச்சா??. என்ன குழப்பம்??”

இல்ல மச்சி இந்த அக்கா சொன்னாங்கள சரசுன்னு. அது யாரு??. அவுங்கள வேற நாம தேடி விசாரிக்கணுமேன்னு” என கூறிக்கொண்டிருக்கையில் இடைப்புகுந்த அந்த பெண்

“ தம்பி அந்த சரசு நான் தான்” என கூற

ஓ இந்த அக்கா தில்லைநாயகிகிட்டே பேசின வசனத்தை நம்மகிட்ட மறு ஒளிபரப்பு செஞ்சுச்சாக்கும். நான் கூட அது வேற யாரோன்னு நினைச்சுட்டேன்’ என மனதில் எண்ணிக்கொண்டு ஹர்ஷாவை பார்க்க அவனின் பார்வையில் கோவ கனலை காண
ஆத்தி ரொம்ப சொதப்புறோம் போல’ என எண்ணி அமைதியாக இருந்தான்.

பின் ஹர்ஷா, அக்கா நீங்க உங்க அக்கா மக காதுக்குதுன்னு சொன்னிங்கள அது எப்போ நடந்துச்சுன்னு கொஞ்சம் நினைவு படுத்தி சொல்ல முடியுமா???” என சரஸிடம் வினவ

“ ஏன் தம்பி கேட்குறீங்க??”

இல்ல அக்கா நாங்க இங்க இன்னும் ஒரு வாரம் கிட்ட இருப்போம். அதான் என்னைக்கு புனித யாத்திரை போனாங்கன்னு தெரிஞ்சா இந்த ஒரு வாரத்துக்குள்ள வந்துருவாங்களான்னு தெரிஞ்சு, காத்திருந்து தில்லைநாயகியை பார்த்து நாங்க சித்த மருத்துவம் பத்தி கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னுதான்” என ஹர்ஷா கோர்வையாக சரசு நம்பும் படி கூறினான் .

இதை கேட்டுக்கொண்டிருந்த கிஷோர் ‘ எப்ப்பா!!!.... என்ன இவன் இப்படி வாய்க்கு வந்ததை நம்புறமாதிரி அள்ளி விடுறான்’ என எண்ணிக்கொண்டிருக்க

அப்படியா தம்பி. எனக்கு என்னைக்குன்னு சரியா நினைவு இல்ல. ஆனா இந்த மாசத்துல முதல் வாரத்துலதான்” என யோசனையுடன் சரசு கூற

“ இந்த மாசமா???”
என ஹர்ஷா சற்றே குழப்பத்துடன் வினவ

“ ஆமாப்பா இந்த மாசம்தான்”

“ அக்கா காதுகுத்துக்கு பத்திரிக்கை எதுவும் குடுத்தாங்களா உங்க அக்கா வீட்டுல???”

ஆமாப்பா பத்திரிக்கை குடுத்து நல்லா விமர்சையால பண்ணுனாங்க”

அப்போ அந்த பத்திரிகையை கொடுக்குறீங்களா அக்கா. அதுல காதுகுத்து நடந்த தேதி இருக்கும். அதைவச்சு அதுக்கு அடுத்த நாள்தான் தில்லைநாயகியை நீங்க பார்க்கல அதாவது புனித யாத்திரை போய்ட்டாங்கன்னு சொல்றிங்க அது என்றைக்குன்னு தெரிஞ்சுக்கலாம்” என ஹர்ஷா கூற

அட ஆமாம்ல தம்பி. அப்போ இங்குன கொஞ்ச நேரம் இருங்க. நான் போய் பத்திரிகைய தேடி எடுத்துட்டு வரேன்” என கூறி சரசு வீட்டினுள் சென்றுவிட்டார்.

“ ஏன்டா மச்சி தேதியை வச்சு நாம என்னடா செய்ய போறோம்??” என கிஷோர் கேட்க

கிச்சா எனக்கு என்னமோ தில்லையநாயகி கோவிலுக்கு எல்லாம் போயிருக்க வாய்ப்பு இல்லைன்னு தோணுது”

“ எதை வச்சு சொல்ற ஹர்ஷா???”

இந்த சரசு சொல்றத வச்சு பார்குறப்போ முதல்நாள் ராத்திரிதான், அதுவும் ஒன்பது மணிக்கு தில்லைநாயகியை பார்த்துருக்காங்க. மறுநாள் அவுங்க வீட்டுல இல்ல”

“ ஆமா”

ஆனா அரங்கநாதபுரத்துல இருந்து வெளி ஊருக்கு போகணும்ன்னா அது சாயங்காலம் தான் பேருந்து. காலையில வெளி ஊருல இருந்து வரதான் முடியும்.”

ஆமா மச்சி நாம முதல இங்க கிளம்பி வரும்போதுகூட சொன்ன அரங்கநாதபுரத்துல இருந்து வெளி ஊருக்கு போகணும்ன்னா சாயங்காலம்தான் பேருந்துன்னு. ஆனா ஏன் தில்லைநாயகி வேற யாருக்கூடையாவது வண்டில போயிருக்கலாம்ல” என கிஷோர் கேட்டுக்கொண்டிருக்கையில் பத்திரிகையுடன் வெளியே வந்த சரசு

“ இந்தாங்க பத்திரிகை”

ரொம்ப நன்றிக்கா”

“ நன்றி எல்லாம் எதுக்குப்பா???.
நான் குடிக்க எதாவது கொண்டுவரவா???”

“ அது எல்லாம் வேணாம் அக்கா
. நாங்க இப்போ கிளம்பத்தான் போறோம்”

அப்படியா சரிப்பா” என கூறி வீட்டிற்குள் சென்றுவிட்டார் சரசு.

பின் பத்திரிக்கையை பார்த்துக்கொண்டிருந்த ஹர்ஷா குழப்பத்துடன் இருக்க,

என்ன மச்சி முகமே சரில்ல. ஏன் என்ன தேதி போட்டுருக்கு???” என கூறிக்கொண்டு பத்திரிகையை கிஷோர் ஹர்ஷாவிடம் இருந்து பார்த்து சற்றே அதிர்ச்சியுடன்,

“ என்ன மச்சி ஜனவரி
5 ன்னு போட்டுருக்கு!!!!!!”

“ அதைதான் நானும் யோசிக்குறேன்
. 5 தேதி ராத்திரி நல்ல மழை வந்ததால வண்டி எடுக்கலன்னு கதிர் சொன்னாரு. அப்போ அன்றைக்கு மழையில இந்த மோசமான ரோட்ல நீ சொன்னமாதிரி வண்டில போகவேண்டிய அவசியமும் அவசரமும் எதுக்கு வந்துச்சு???” என ஹர்ஷா கேட்க

“ அச்சச்சோ!!!! மறுபடியும் முதல்ல இருந்தா???. இப்போ தில்லைநாயகிய வேற கண்டுபிடிக்கனுமா”
என கிஷோர் சலிக்க

மச்சி இங்க இரு. நான் இப்போ வந்துடுறேன்” என ஹர்ஷா கூறி தன் போனை எடுத்துக்கொண்டு சற்று நகர்ந்து யாருடனோ பேசிவிட்டு வர

என்ன மச்சி யாருகிட்ட பேசுன??”

“ ஆதிலிங்க மூர்த்தி சார் கிட்ட கிச்சா”

“ அவர்கிட்ட என்னடா பேசுன???”

“ இல்ல தில்லைநாயகி வீட்டுக்குள்ள போய் பார்த்தா எதாவது தடயம் நமக்கு கிடைக்குமான்னு தேடலாம்ன்னு நினைச்சேன்
. அதான் ஆதிலிங்க மூர்த்தி சார் கிட்ட ஒருவார்த்த்தை சொல்லிட்டு பூட்டை உடைச்சு உள்ள போய் பார்க்கலாம்ன்னு அவர்கிட்ட பேசுனேன். அவரும் சரின்னு சொல்லிட்டாரு” என ஹர்ஷா கிஷோரிடம் பேசிக்கொண்டே,

தில்லைநாயகியின் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தான். அவனை தொடர்ந்து கிஷோரும் நுழைந்தான்.

வீட்டிற்குள் நுழையும் போது வீட்டில் இருந்து மோசமான வாடை வர,

“ என்ன மச்சி???. எதோ வாடை வருது” என மூக்கை தன் கைக்குட்டையால் மூடிக்கொண்டு கிஷோர் கேட்க

“ ஆமா என்னதுன்னு தெரியலையே கிச்சா”
என ஹர்ஷா கூறிக்கொண்டே வீட்டை சுற்றிலும் பார்க்க,,

அங்கே சமையல் அறையில் ஒரு எலி இறந்து கிடந்தது. மேலும் சாப்பாடு அனைத்தும் கெட்டுபோய் இருந்தது. அதிலிருந்து வாடை வருகிறது என புரிந்துகொண்ட இருவரும்,

என்ன மச்சி சாப்பாட்டை எல்லாம் அப்படியே வச்சுட்டு இந்தம்மா புனித யாத்திரை போயிடுச்சு” என கிஷோர் கூற

ஹ்ம்ம் ஆமா கிச்சா அதோட அங்க நடுகூடத்துல பாரு ரெண்டு டம்ளர்ல காபி போட்டுவச்சுருக்காங்க. ஆனா அதை குடிக்காம அப்படியே அங்கயே இருக்கு. இப்படியே போட்டுட்டு யாராவது போவார்களா என்ன??” என ஹர்ஷா பேசிக்கொண்டே அறையில் ஏற்கனவே திறந்து இருந்த அலமாரியை ஆராய

அதானே. ஆனா ஹர்ஷா இந்த தில்லைநாயகி இங்க இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி வேற யாரோ அவர்களை பார்க்க வந்துருக்காங்க போல அதான் ரெண்டு டம்ளர்ல காபி போட்டுவச்சுருக்காங்க. ஆனா அதை குடிக்காம போற அளவுக்கு என்ன அவசரம்??” என கிஷோர் கேட்க

தில்லைநாயகி இங்க இருந்து போகவேண்டிய அவசரமும் அவசியமும் எதுக்கு வந்துருக்கணும்ன்றதை நாம தில்லைநாயகி கடைசியா சந்திச்ச அந்த நபரை கண்டுபிடிச்சாதான் தெரியும்.

அதோட ஒத்தை காலு மண்டபத்துல கதிர் சொன்ன ரத்தக்கறை தில்லைநாயகியோடதுதானான்னு நாம தெரிஞ்சுக்கணும்” என ஹர்ஷா கூற

“ ஏன் மச்சி??”

“ இல்ல கிச்சா ஜனவரி
5 தேதிதான் தில்லைநாயகியும் காணாம போயிருக்காங்க. எங்க போயிருக்காங்கன்னு யாருக்கும் தெரியல. அதோட கடைசியா அவுங்க இருந்த இடம்ன்னு நமக்கு கிடைச்சுருக்க தகவல் ஒத்தைக்காலு மண்டபம். அதனால ஒரு சந்தேகத்தின் அடிப்படையில ஒரு DNA TEST எடுக்கணும்”


அது ஒன்னும் பிரச்சனை இல்ல இதோ இங்க இருக்குற சீப்புல இருந்து கொஞ்சம் முடிய எடுத்து ஒரு கவர்ல வை. இதை வச்சு கதிர் சட்டையில் இருக்குற ரத்தக்கறையையும் LABக்கு அனுப்புனா தெரிஞ்சுடும்”

“ சரி
test result வரவரை நாம என்ன செய்றது??” என கிஷோர் வினவ

நாளைக்கு நாம செல்லியனுர் போறோம் கிச்சா”

செல்லியனூரா???. அங்க எதுக்கு???.”

“ அந்த ஊருதான் தில்லைநாயகி ஊரு”

“ சரி அங்க எதுக்கு இப்போ போகணும்??. ஒருவேளை அங்க எதுவும் போயிருப்பாங்கன்னு நினைக்குறியா??”

ஆமா கிச்சா”

ரத்தக்கறை தில்லைநாயகியோடதா இருக்கலாம்ன்னு சந்தேகப்படுற. ஆனா செல்லியனூர் போயிருக்கலாம்ன்னு நினைக்குறன்னு சொல்ற .ஏன்டா குழப்புற??” என கிஷோர் சலிப்புடன் கூற

குழப்பம் எல்லாம் இல்ல இங்க பாரு” என ஒரு அட்டையை காட்டினான் ஹர்ஷா.

அதனை வாங்கி பார்த்தான் கிஷோர். அந்த அட்டையில் ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம் ஒட்டி இருந்தது. அந்த புகைப்படத்தில் ஒரு தம்பதியினர் அருகில் ஒரு சிறுவனும் சிறுமியும் நின்றுகொண்டிருந்தனர். அந்த புகைப்படம் கிழே ஆறுமுகம் செல்லியனூர் என எழுதி இருந்தது.

அதனை கண்ட கிஷோர்
இதை வச்சு தான் செல்லியனூர் போகணும்ன்னு சொல்றியா???”

“ ஆமா கிச்சா இந்த புகைப்படம் யாரோடதுன்னு தெரியல ஆனா இந்த திறந்துருந்த அலமாரிக்கு கிழே இந்த புகைப்படம் இருந்துச்சு
.அதனால ஒருவேளை அங்க செல்லியனூருக்கும் போயிருக்கலாம். அதான் அங்க போகணும்ன்னு சொல்றேன்” என ஹர்ஷா கூறிமுடிக்க

“ சரி மச்சி நீ சொல்றமாதிரியே செய்யலாம்
. ஒரு தகவலும் கிடைக்காம இருக்குறதுக்கு கிடைச்ச தகவலை நல்லா விசாரிச்சா நமக்கு எதாவது உபயோகமான தகவல் கிடைக்கும்” என கூறிவிட்டு கிஷோர் தில்லைநாயகி வீட்டை விட்டு வெளியே செல்ல,
,
அவனை பார்த்த ஹர்ஷா இவன் என்ன வர வர நல்லா பேசுறான்” என முணுமுணுத்துவிட்டு அவனும் கிஷோரை தொடர்ந்து வெளியே வந்தான். பின் இருவரும் வீட்டை பூட்டு இல்லாமல் மூடிவிட்டு தோட்டத்து வீட்டிற்கு சென்றனர்.
.
இரவில் தோட்டத்துவீட்டின் வாசலில் ஒரு கயித்து கட்டிலில் அமர்ந்து கிஷோரும் ஹர்ஷாவும் பேசிக்கொண்டிருந்தனர்.

“ மச்சி DNA TESTக்கு இன்னைக்கு மதியம் உடனடியா மாணகிரியூருக்கு போய் உன் அலுவலக நண்பன் சதீஷை வர சொல்லி குடுத்துட்டு வந்துட்ட எப்போ RESULT வரும்??”

“ சதீஸ் இன்றைக்கு மாலை மூணு மணி போல SAMPLEல LABல குடுத்துருப்பான் அதனால் சீக்கிரம் வந்துடும்"

“ அப்புறம் நாம எப்போ தில்லைநாயகி ஊருக்கு போறது??”

“ நாளைக்கு காலையில நாம இங்க இருந்து கிளம்பி தில்லைநாயகி ஊரான செல்லியனுருக்கு போறோம்”

“ இதை ஆதிலிங்கமூர்த்தி சார் கிட்ட சொல்லிட்டியா ஹர்ஷா???”

“ ஹ்ம்ம் சொல்லிட்டேன்டா” என ஹர்ஷா சொல்லிக்கொண்டிருக்கையில்

“ என்ன சொல்லிட்டீங்க??. எங்க கிளம்பிட்டீங்க??” என கேட்டுக்கொண்டே விசித்ரா அங்கு வந்தாள்
.
“ வாங்க விசித்ரா. என்ன இந்நேரத்துல தூங்காம இருக்கீங்க??” என ஹர்ஷா கேட்க

“ எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது சார். கண்ணை மூடுனாலே இங்க நடக்குற பிரச்சனைகளுக்கு எல்லாம் யாரு காரணம்ன்னு ஒரே யோசனைதான் ஓடுது.

முதல்ல நான் கேட்டத்துக்கு பதில் சொல்லுங்க. எங்க கிளம்பிட்டிங்க???. உண்மையான குற்றவாளிய கண்டுபிடிச்சுட்டீங்களா??” என விசித்ரா கேட்க

“ இல்ல விசித்ரா. அது விசயமாத்தான் தில்லைநாயகி சொந்த ஊருக்கு போறோம்”

“ அப்போ தில்லைநாயகிதான் இங்க நடக்குற பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணமா??” என கண்களில் ஒளியுடன் ஒரு வித பரபரப்புடன் விசித்ரா கேட்க

‘ எதுக்கு இந்த பொண்ணு இப்போ பரபரன்னு இருக்குது’ என கிஷோர் எண்ணுகையில்,

“ இல்ல விசித்ரா எங்களுக்கு ஒரு சந்தேகம் தில்லைநாயகிக்கு எதுவும் ஆபத்து நடந்துருக்குமோன்னு” என ஹர்ஷா கூறிக்கொண்டிருக்கையில்,

இடைபுகுந்த விசித்ரா “ ஏன்?? என்னாச்சு?? எப்படி சொல்றீங்க தில்லைநாயகிக்கு ஆபத்துன்னு??” என கேட்க

“ தில்லைநாயகி இந்த ஊருல பத்து நாளா இல்ல. அதோட எங்களுக்கு கிடைச்ச தடயங்களை வச்சு பார்குறப்போ அவுங்களுக்கு எதுவும் ஆபத்து இல்ல எதாவது பிரச்சனை நடந்துருக்குமோன்னு ஒரு சந்தேகம்.

அதான் அவுங்க ஊருக்கு போய் விசாரிச்சா எதாவது தகவல் கிடைக்குதான்னு பார்க்கலாம்னு நாளைக்கு கிளம்புறோம்” என ஹர்ஷா கூறி முடிக்க

“ ஓ !!!...”என சற்றே இறங்கிய குரலில் கூறிய விசித்ரா தொடர்ந்து,

“ சார் எனக்கு இன்னும் மூணு நாளுல நிச்சயம் அதுக்குள்ள குற்றவாளிய கண்டிபிடிச்சவிடுவீங்களா??” என ஒரு எதிர்பார்ப்புடன் கேட்க

“ அது என்ன மூணு நாளுல கண்டுபிடிக்க சொல்றீங்க??” என கிஷோர் கேட்க

“ அது… அது…” என விசித்ரா சற்று தயங்க

“ நான் சொல்லவா விசித்ரா??. உங்களுக்கு சரத் மேல சந்தேகம் இருக்கு இல்லையா???. அதனால நிச்சயம் முன்னாடி யாரு அந்த குற்றவாளின்னு தெரிஞ்சுக்க நினைக்குரிங்க??” என ஹர்ஷா கேட்க

“ ஆமா சார். ஒருவேளை சரத் இங்க நடக்குற எல்லா பிரச்சனைக்கும் காரணமா இருப்பாரோன்னு சந்தேகம்” என மெல்லிய குரலில் விசித்ரா கூற

“ பார்ப்போம் விசித்ரா. கூடிய சீக்கிரம் கண்டுபிடிக்க முயற்சி செய்ரோம். அப்புறம் எங்களுக்கு இன்னொரு உதவி. நாங்க தில்லைநாயகி ஊருக்கு போயிட்டு வர வரைக்கு இங்க ஏதாவது பிரச்சனையோ இல்ல சந்தேகம் படும்படி எதுவும் நடந்தாலோ எங்களுக்கு உடனே தெரிய படுத்துங்க” என ஹர்ஷா கூற

“ சரி சார் உங்க போன் நம்பர் கொடுங்க” என விசித்ரா கேட்க

பின் ஹர்ஷாவும் விசித்ராவும் தங்கள் அலைபேசி எண்ணை பரிமாறிக்கொண்டனர்.

“ சரி விசித்ரா இப்போவே நேரமாகிடுச்சு போய் தூங்குங்க”

“ சரி சார் வரேன்”என விடை பெற்று விசித்ரா சென்றவுடன் ஹர்ஷா மற்றும் கிஷோர் உறங்க சென்றனர்.

அடுத்த நாள் விடியலில் இருவரும் செல்லியனூருக்கு கிளம்பி சென்றனர்.

நாட்கள் வேகமாக செல்ல, செல்லியனூருக்கு கிளம்பிச்சென்று மூன்றாவது நாள் மாலை அரங்கநாதபுரத்திற்கு திரும்பினர் ஹர்ஷாவும் கிஷோரும்.
 
Top