Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

.எவனோ என் அகம் தொட்டு விட்டான்....!!! - 11

Nila krishi

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரெண்ட்ஸ்....

சாரி....!கொஞ்சம் தாமதமாகி விட்டது....!இரண்டு அத்தியாயம் பதிவிட்டிருக்கிறேன்....!படித்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க...!!அத்தியாயம் 11:


அன்று ஞாயிற்றுக்கிழமை.....


காலையிலேயே எழுந்து ஜாகிங் போய்விட்டு வந்து...தனது அறையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான் ஆதித்யன்.அவனது அறையே ஒரு மாளிகையைப் போல் பிரம்மாண்டமாக இருக்கும்....உள்ளே நுழைந்ததுமே வரவேற்பறை இருக்கும்...அதற்கு அடுத்தது அவனுடைய அலுவலக அறை.இரவு நேரங்களில்...நீண்ட நேரம் வேலைப் பார்க்க வேண்டிய சமயங்களில் அவன் அங்குதான் அமர்ந்து வேலை பார்ப்பான்.அங்கிருந்து உள்ளே நுழைந்தது படுக்கையறை...மற்ற இரண்டு அறைகளை விடவும் பெரிது...!

இடது பக்கம் குளியலறையுடன் உடை மாற்றும் அறையும் இருக்க...மேலே அறையில் இருந்தபடியே..கீழே இருக்கும் தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களைப் பார்த்து ரசிக்கும் படி...பால்கனி அமைக்கப்பட்டிருக்கும்...!

படுக்கை அறையிலிருந்து இன்னொரு அறைக்கு ஒரு கதவு போகும்...அந்த அறையில் அவன் உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக...உடற்பயிற்சி சாதனங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

அந்த அறையில்...வியர்க்க...விறுவிறுக்க உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவனை அவனது தாத்தா...பாட்டியின் குரல் கலைத்தது.

"குட் மார்னிங் மை பாய்...!",உற்சாகமாக அழைத்துக் கொண்டு வந்தார் அவனுடைய தாத்தா.

ஆதித்யனுக்கு அவனுடைய தாத்தா...பாட்டி என்றால் மிகவும் பிரியம்...!இந்த வயதிலும் உற்சாகமாக...ஆர்ப்பரிப்புடன் வாழ்க்கையை அவர்கள் எதிர்கொள்வதை அவன் மிகவும் ரசிப்பான்.

அவர்களிடத்தில் அவனை ஈர்த்த மற்றொரு விஷயம்...அவர்களுடைய காதல்...!முதுமை அடைந்து...நரைகள் எய்தியிருந்தாலும் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் காதலைப் பொழிந்து கொண்டிருப்பர்...!இருவரையும் ஒரு கண நேரம் கூடத் தனியாகப் பார்க்க முடியாது.காதல் பறவைகளைப் போல்...எப்போதும் ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருப்பர்...!

'தன்னுடைய தாத்தா...பாட்டியைப் போல்...தானும் தன் மனைவியும் வாழ வேண்டும்...!தன்னவளை காதல் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்து...வாழ்நாள் முழுவதும் கீழே இறக்கி விடாமல் பாதுகாக்க வேண்டும்...'என்ற எண்ணம் அவனது மனதில் வேரூன்றியிருந்தது.

அன்றும்..இருவரும் ஜோடிப் போட்டுக் கொண்டுதான் அவனுடைய அறைக்கு வந்திருந்தனர்.

"குட் மார்னிங் மை டியர்ஸ்...!எப்பப் பார்த்தாலும்...இரண்டு காதல் கிளிகளும் ஒண்ணாத்தான் சிறகடிச்சிட்டு இருப்பீங்களா....?" ஆதித்யன் கிண்டலாகக் கேட்க,

"நல்லா கேளுப்பா உன் தாத்தாவை....எப்ப பாரு ஒட்டுப்புல் மாதிரி...என் கூட ஓட்டிகிட்டே திரியறாரு...",என்று அவன் பாட்டி பொய்யாக அழுத்துக் கொள்ள,

"கமலு...!என் செல்லம்...!நீயே இப்படி சொல்லலாமா...?",என்று வருத்தப்படுவதைப் போல் நடித்தவர்,

"உன்னை நீங்கி நான்
எங்கே செல்வது...?",
என்று பாட்டுப் பாட ஆரம்பித்து விட்டார்.

"ஐயோ..தாத்தா...!போதும்...போதும்...!உங்க ரொமான்ஸை ஓட்டறதுக்கு வேற இடமே கிடைக்கலையா...?ஏன் காலையிலேயே இங்க வந்து...என் காதுல ரத்தம் வர வைக்கறீங்க...?",தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிட்டபடி...பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் ஆதி.

"விஷயம் இல்லாம இந்த சுந்தரம் எங்கேயும் வர மாட்டான் டா...இங்க வந்ததுக்கும் ஒரு காரணம் இருக்கு...!",மர்மமாகப் புன்னகைத்தபடியே பேரனின் முகத்தை அளவிட்டார் பெரியவர்.

"அப்படி என்றால் தாங்கள் வந்ததின் காரணம் என்னவோ..?",ஆதித்யன் கேலியாக வினவ,

ஒன்றும் பேசாமல் தன் பேரனைப் பார்த்துப் புன்னகைத்தவர்,"இப்பொழுதெல்லாம்..என் பேரனின் முகத்தைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரிகிறதே...அதன் காரணம் என்னவோ...?",என்று அவனைப் போலவே திருப்பிக் கேட்டார்.

தாத்தாவின் பேச்சில் ஒரு நொடி தடுமாறியவன்...பிறகு,"ஒளிவட்டமா...?அதெல்லாம் ஒண்ணுமில்ல...நான் குளிக்கப் போறேன்...!",என்றபடி டவலை எடுத்துக் கொண்டு நழுவியவனை,

"இருடா பேராண்டி....!உன் கிட்ட பேசணும்...",என்ற அவனுடைய பாட்டியின் குரல் இழுத்துப் பிடித்தது.

"பாட்டி...!நீங்களுமா...?சரி...சொல்லுங்க...?என்ன பேசணும்...?",என்றவாறு பொறுமையாக நடந்து சென்று தனது கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

கணவனும் மனைவியும் அவனுக்கு எதிரில் இருந்த சோபாவில் சென்று அமர்ந்தனர்.அவனுடைய தாத்தாதான் ஆரம்பித்தார்.

"நீ முன்ன மாதிரி இல்லையே....?முதல்ல எப்போ பாரு முகத்தை...கடுகடுன்னு வைச்சிருப்ப....தொழில்...தொழில்னு பிசினஸ் மேலேதான் உன் முழு கவனமும் இருந்துச்சு...",அவர் கூறி முடிப்பதற்குள்ளேயே அவரை இடை மறித்தவன்,

"இப்ப என்ன சொல்ல வர்றீங்க...?நான் என் தொழிலை கவனிக்கிறது இல்லைன்னு சொல்றீங்களா...?",என்றான் சற்று கோபமாக.

"சே...சே...!நான் அப்படி சொல்லுவேனாப்பா....?தொழில்ல உன்னை யாரும் அசைக்க முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்...!",

"தென் வாட்...?",என்றபடி தோளைக் குலுக்கியவனிடம்,

"ஆனால்...உன் மனச யாரோ அசைச்சிட்டாங்ளோன்னு எங்களுக்கு சந்தேகமா இருக்கு....",அவனையே குறுகுறுவென்று பார்த்தபடி கூறினார் சுந்தரம்.

"அப்படி அசைச்சாதான் என்ன தப்பு...?",ஒற்றைக் கண்ணைச் சிமிட்டியபடிக் கேட்ட பேரனின் தோளைத் தட்டியவர்,

"அப்படி வாடா வழிக்கு....!ஸோ...உன் மனசில ஒரு குட்டிப் புயல் மையம் கொண்டிருக்கிறது....உண்மைதான்...இல்லையா...?",என்று ஆரவாரமாகக் கேட்க,

"படவா...ராஸ்கல்...!கல்யாணம் வேண்டாம் வேண்டாம்ன்னுட்டு...நீயே ஒரு பொண்ண பார்த்திட்டாயா...?",என்று செல்லமாக பேரனின் காதைப் பிடித்துத் திருகினார் கமலாம்பாள்.

"ஹைய்யோ...பாட்டி விடுங்க....!அதுதான் ரெண்டு பேரும் உளவு பார்த்துக் கண்டுபிடிச்சிட்டடீங்களே ...?",என்று போலியாய் அலறினான் ஆதித்யன்.

"உளவு பார்க்கிறதா...?அது என்ன தேவைக்கு...?அதுதான் உன் முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கே.....!",

"அந்த அளவுக்கா இருந்திருக்கேன்....?",

"ஆமாண்டா பேராண்டி....!அப்பப்ப எதையாவது நினைச்சு சிரிக்கிற....அதுவும் இல்லாம...முதல்ல எல்லாம் உனக்கு ரொம்பக் கோபம் வரும்....இப்பவெல்லாம் நீ அவ்ளோக்கா கோபப்படறது இல்ல...தோட்டத்துல ஜாகிங் போகும் போது பூக்களைப் பார்த்து ரசிச்சிக்கிட்டு நிற்கிற.....",அவன் பாட்டி அடுக்கிக் கொண்டே போக,

"ஹ்ம்ம்....போதும்...போதும்....!",சிறு முறுவலுடன் கூறியப் பேரனைப் பார்த்தவரின் மனம் கனிந்தது.

"சரிப்பா...மத்த விஷயங்களை விடு....!நீ அந்தப் பொண்ண உண்மையாகத்தான லவ் பண்ற...?",கேட்ட சுந்தரத்தின் குரல் தீவிர பாவத்துக்கு மாறியிருந்தது.

அவர் கூறியதைக் கேட்டவனின் முகம் யோசனைக்குத் தாவியது."என்ன தாத்தா...இப்படி கேட்கிறீங்க...?இனி என் வாழ்க்கையில மனைவின்னு ஒருத்தி வர்றதுன்னா...அது அவ மட்டும்தான்....!",அழுத்தத்துடன் கூறினான் ஆதித்யன்.

"ம்ம்...குட்....!அந்தப் பொண்ணுக்கிட்ட உன் காதலை சொல்லிட்டியா...?அவ என்ன சொன்னா...?",அவர் ஆவலுடன் கேட்க,

அவனோ,"இன்னும் சொல்லல....",என்றான் முணுமுணுப்பாக.

"ஓ....!",என்றபடி சிறிது நேரம் எதையோ யோசித்தவர்,பிறகு,"நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காத ஆதி....ஒருவேளை....அந்தப் பொண்ணு உன் காதலை ஏத்துக்கலைன்னா...?",என்று கேள்வியுடன் அவனை ஏறிட,

ஒரு வித தீவிரத்துடன் தனது தாத்தாவை நோக்கியவன்,"ஏத்துக்குவா.....ஒத்துக்கிட்டுத்தான் ஆகணும்....நான் இதுவரைக்கும் தோல்வியை சந்திச்சதே இல்லைன்னு...உங்களுக்கு நல்லாவே தெரியும்....!",கர்வத்துடன் கூறியவனைக் கண்டவருக்கு...மனதில் சிறு பயம் எழுந்தது.

"சரிதான்....!இதுவரைக்கும் நீ தோல்வியை சந்திச்சது இல்லைதான்....ஆனால்....தொழில் வேற....வாழ்க்கை வேறப்பா....",அவர் அவனுக்கு எடுத்துக் கூற முயல,

அவனோ,"ம்ம்...நானும் அதைத்தான் சொல்ல வர்றேன்....!தொழில்லயே விட்டுக் கொடுக்காதவன்....வாழ்க்கையிலையா விட்டுக் கொடுக்கப் போறேன்....?அவளை வேற எவனுக்கும் விட்டுத் தர நான் தயாரா இல்ல....",என்று சொன்னவனின் கண்களில் தீவிரம் குடி கொண்டிருந்தது.

"நீ சொல்றது எனக்குப் புரியுதுப்பா....ஆனால்....அந்தப் பொண்ணும் தன் முடிவுல உறுதியா இருந்தா...?",

ஒரு முடிவோடு அவரை நோக்கியவன்,"அவ என்னைக் காதலிச்சுத்தான் ஆகணும்....!அவளுக்குப் பிடிச்சிருந்தாலும் சரி....பிடிக்கலைன்னாலும் சரி....அவளை அவளுக்காகக் கூட விட்டுத் தர நான் தயாரா இல்ல...!",இரையைத் தேடும் வேங்கையின் சீற்றத்தோடு இரைந்து விட்டுக் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

அவன் கண்களில் தெரிந்த உறுதியில்....சுந்தரத்திற்கு பயம் வந்தது.கவலையுடன் அமர்ந்திருந்தவரின் தோளைத் தொட்ட கமலாம்பாள்,"இப்ப எதுக்கு இவ்வளவு வருத்தப்படறீங்க....?அவன் ஒண்ணும் சின்னக் குழந்தையில்ல....எல்லாத்தையும் அவனே பார்த்துப்பான்....",என்றார் ஆறுதலாக.

"என் பயமே அதுதான் கமலா....இதுவரைக்கும் இவன் நினைச்சதை அடையாம விட்டதில்ல....!அந்தளவுக்குப் பிடிவாதமும்....அழுத்தமும் அதிகம்...!",

"இப்ப நீங்க இதுல இவ்ளோ வருத்தப்படறதுக்கு அவசியமே இல்ல....அந்தப் பொண்ணு இவனை வேண்டாம்ன்னு சொன்னாத்தான பிரச்சினை....நம்ம ஆதியை எந்தப் பொண்ணும் நிராகரிக்க மாட்ட...",என்று கூறியவரின் குரலில் பேரனைக் குறித்த பெருமை பொங்கி வழிந்தது.

ஆனால்...அப்படிப்பட்டவனையும் ஒருத்தி வேண்டாம் என்று கூறுவாள்....என்பதை அவர் அப்பொழுது அறிந்திருக்கவில்லை...!

"நீ நினைக்கிற மாதிரியே எல்லாம் நடந்துறாது கமலா....இவன் முரட்டுத்தனமா எல்லா காரியத்தையும் செய்யறவன்....அந்தப் பொண்ண நினைச்சா...எனக்குக் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கு...!",

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே....ஆதித்யன் குளியலறையிலிருந்து வந்து விட்டான்.அவர்கள் இருவரும் இன்னும் தன் அறையிலேயே இருப்பதைக் கவனித்தவன்,

"என்ன தாத்தா...?இன்னும் என்ன பிரச்சனை....?ஒருவேளை....அவ என்கிட்டே வேலை செய்யறவதானான்னு யோசிக்கிறீங்களா...?",கேட்கும் போதே அவன் குரல் கடுமையாகத்தான் வந்தது.
"சே...சே...!அப்படி எல்லாம் இல்லப்பா....நானும் உங்க பாட்டியும் சரி....உன் அம்மா அப்பாவும் ஆகட்டும்....காதலை எதிர்க்கிறவங்க இல்லைன்னு உனக்கு நல்லாவேத் தெரியும்....அதே மாதிரி,பணம் ஒரு பிரச்சனையே இல்ல....நம்மகிட்ட இல்லாததா...?",என்று அவசரமாக மறுத்தார்.

"தென்....வாட்ஸ் யுவர் ப்ராப்ளம் தாத்தா...?"

"உன் கோபமும்...பிடிவாதமும் தான் பிரச்சனையே....தொழில்ல முரட்டுத்தனமா முடிவெடுக்கற மாதிரி....நீ உன் வாழ்க்கையிலும் எடுக்கக் கூடாது....அந்தப் பொண்ணுக்கு விருப்பமில்லைன்னாலும்....நீ பொறுமையாகத்தான் ஹேண்டில் பண்ணனும்...",

"ஹ்ம்ம்....ஒகே...!அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்....இப்ப நீங்க ரெண்டு பேரும் போய் சமர்த்தா.....கொள்ளுப் பேரன் பேத்தியைப் பத்திக் கனவு காண்பீங்களாம்....சரியா...?",தன் பாட்டியின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியவாறுக் கூறியவனைப் பெரியவர்கள் இருவரும் வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டனர்.

"சந்தோஷம் கண்ணா....!எல்லாம் நல்லதாவே நடக்கும்....",என்று வாழ்த்துக் கூறியபடி இருவரும் வெளியேறினர்.

...................................................................................................................
 
Nila krishi

Tamil Novel Writer
The Writers Crew
ஆதித்யா கன்ஸ்ட்ரக்க்ஷன்ஸ் -

காலை நேர பரபரப்பில் இயந்திர கதியாக இயங்கிக் கொண்டிருந்தது.நான்கு ஆண்கள் பின்தொடர.....அவர்களுக்கு மளமளவென்று கட்டளைகளைப் பிறப்பித்தவாறு....கம்பீரமாக உள்ளே நுழைந்தான் ஆதித்யன்.அவன் நுழைந்ததும் அலுவலகத்தில் சட்டென்று நிசப்தம் நிலவியது.அனைவரும் கூறிய 'குட் மார்னிங்கை' சிறு தலையசைப்புடன் ஏற்றவாறு தனது அறைக்குள் நுழைந்தான்.

இதை அனைத்தையும்....சுமித்ராவின் அருகிலமர்ந்து பேசிக் கொண்டிருந்த நித்திலா இமைக் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.'என்ன கம்பீரம்....!' என்று மனதிற்குள் அவளை ரசித்துக் கொண்டிருந்தாள்.ஆனால்....அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சுமித்ராவிடம்,"அடடா....!அப்படியே 'பாட்ஷா....!பாட்ஷா.....!'ன்னு தீம் மியூசிக் போடலாம் போல இருக்கு.....",என்று கிண்டலடித்தாள்.

"ஏய்...!கிண்டல் பண்ணாதடி....அவரு நடந்து வர்றது எவ்வளவு கம்பீரமா இருக்குத் தெரியுமா....?",என்று சுமித்ரா அவள் கூறியதை மறுக்க....அவளை சந்தேகமாகப் பார்த்தவள்,

"என்னடி.....ட்ரெயின் ட்ராக் மாறுது....?",என்றாள் கேள்வியாக,

"என்ன ட்ரெயின்.....?என்ன ட்ராக்....?",சுமித்ரா புரியாமல் வினவ,

"ஹ்ம்ம்....சுமித்ராங்கிற ட்ரெயின்....கௌதம்ங்கிற ட்ராக்கில் இருந்து மாறுது....அதைக் கேட்டேன்....?",

"அடிச்சீ....வாய மூடு....!எனக்கும் கெளதம் சாருக்கும் இடையில எம்ப்ளாயர் அண்ட் எம்ப்ளாயீங்கிற ரிலேஷன்ஷிப்பைத் தவிர வேற எதுவும் இல்ல....முதல்ல இடத்தைக் காலி
பண்ணு....!உன் பாஸ் வந்தாச்சு....!",என அவளை விரட்டினாள்.தோழிகளுக்குள் இந்தக் கிண்டல் பேச்சு சகஜம் என்பதால்....அவள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

"அட....ஆமாம்ல.....!உன்கிட்ட உட்கார்ந்து வாயடிச்சுக்கிட்டு இருக்கேன் பாரு....",தன் தலையில் தானேக் கொட்டியபடி ஆதித்யனின் கேபினை நோக்கி ஓடினாள்.

தினமும் காலையில் அறைக்குள் நுழைந்ததுமே....சிறு முறுவலுடன் நித்திலா கூறும் 'குட் மார்னிங்கை' ஏற்றுப் பழகியவனுக்கு....அன்று....அவள் அறையில் இல்லாதது சிறு எரிச்சலைக் கிளப்பியது.'காலையிலேயே எங்க போனா....?' என்று எண்ணமிட்டபடி அவன் தன் இருக்கையில் அமரவும்.....நித்திலா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

"குட் மார்னிங் சார்.....!" என்றவளை நிமிர்ந்து பார்த்தவன் முறைக்க ஆரம்பித்தான்."வேலையைப் பார்க்காம எங்க போயிருந்த.....?",சிறு முகச்சுளிப்புடன் கேட்க,

"சாரி சார்....!வொர்க் எதுவும் அதிகமா இல்ல....அதுவும் நீங்களும் இல்லாததுனால....வெளியே போய்ட்டேன்....!சாரி சார்....!",தலைகுனிந்தபடி பதிலளித்தவளைப் பார்த்தவன்,
"லுக் நித்திலா.....வொர்க் குறைவா இருக்கோ...இல்ல...அதிகமா இருக்கோ....அது மேட்டர் இல்ல....வொர்க்கிங் ஹவர்ஸ்ல நீ என் கேபின்லதான் இருந்தாகணும்....!புரியுதா...?", காலையில் கண் விழித்ததுமே ஆதித்யனுக்கு அவள் முகம்தான் மனதில் தோன்றும்.அவளைப் பார்க்கும் ஆசையில் ஆவலுடன் கிளம்பி வருபவனை....அவள் இல்லாத வெறுமையான அறை வரவேற்றால் அவனுக்கு எப்படி இருக்கும்...?அது தந்த கடுப்பில்தான் அவளிடம் உத்தரவுப் போட்டுக் கொண்டிருந்தான்.

அவனின் நிபந்தனையில் அவளுக்கு சிறு கோபம் எட்டிப் பார்க்கத்தான் செய்தது.'ஆமா...வேலை இல்லைன்னாலும் நான் இந்த ரூமுக்குள்ள தனியா கொட்டு...கொட்டுன்னு உட்கார்ந்திருக்கணும்....சொல்றதுக்கு என்ன..?என்ன வேணும்னாலும் சொல்லலாம்....',என்று மனதுக்குள் கரித்துக் கொட்டியவள் வெளியே,"ஒகே சார்....!இனி பிரேக் டைம் தவிர மத்த டைம்ல வெளியே போக மாட்டேன்....!",தனது உதட்டை சுழித்தபடி சிறு கடுப்புடன் கூறிவிட்டு தனது இருகைக்குச் சென்று அமர்ந்தாள்.

அவள் கூறிய விதத்திலிருந்தே அவள் கோபமாக இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன்,மனதிற்குள் பார்டா....!என் பேபிக்கு எவ்ளோ கோபம் வருதுன்னு....இருடி...!எல்லாம்
கொஞ்ச நாளைக்குத்தான்....நான் என் லவ்வ சொன்னதுக்கு அப்புறம்...இப்படி கோபத்துல உதட்டை சுழிச்சுட்டுப் போ...அப்ப வைச்சுகிறேன்....!',என்று அவளைச் செல்லமாகத் திட்டிக் கொண்டான்.

அதன் பிறகு....இருவரும் மௌனமாகவே தங்களது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆதித்யனின் மொபைல் அடிக்கவும்...அதை எடுத்துப் பேசிக் கொண்டிருந்தான்.போனில் பேசியபடியே அவன் அடிக்கடி தன் சிகையைக் கோதிக் கொள்வதையும்...சில சமயம்....ஒற்றை விரலால் தன் இடது புருவத்தை நிமிண்டியபடி அவன் யோசிப்பதையும் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள்....இல்லை இல்லை....ரசித்துக் கொண்டிருந்தாள்....!

இவன் ஏதோ கூறவும்....அதற்கு மறுமுனையில் என்னக் கூறப்பட்டதோ தெரியவில்லை....இவன் கடகடவென்று சிரித்தான்.வாய்விட்டு பல் வரிசை தெரியப் புன்னகைத்தவனைப் பார்த்தவளின் மனம் அவளையும் மீறி அவன்பால் மயங்கியது....!

'ஒரு ஆண் மகனால் இவ்வளவு அழகா சிரிக்க முடியுமா....?அசடு வழியாமல்...அதே சமயம் கம்பீரமான சிரிப்பு....!'நீயும் என் கூட சேர்ந்து சிரியேன்...!' என்று எதிரில் இருப்பவர்களையும் மயக்கும் வசீகரமான சிரிப்பு....!',மனதிற்குள் எண்ணமிட்டபடி அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் இமை கொட்டாமல் தன்னையேப் பார்ப்பதைக் கண்டு கொண்டவன்....போனை அணைத்துவிட்டு....அவளைப் பார்த்து தன் ஒற்றைப் புருவத்தை மட்டும் உயர்த்தி "என்ன...?" என்று கேட்க...அவன் செய்கையில் சுய நினைவுக்கு வந்தவள்,"ஓ...ஒண்ணுமில்ல....!",என்று தடுமாறியபடி திரும்பிக் கொண்டாள்.

நித்திலா ஒன்றும் ஆண்களை ஏறெடுத்தும் பார்காதவளில்லை....அழகான ஆண்களைப் பார்த்தால் சைட் அடிப்பதுண்டு....!ஆனால்...அதையும் ஒரு எல்லைக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்வாள்.அதில் எந்த ஒரு ஆணும் இதுவரை அவளைப் பாதித்ததில்லை....தோழிகளுடன் சேர்ந்து சைட் அடித்த மறு நிமிடமே அதை மறந்தும் போய் விடுவாள்.

ஆனால்....ஆதித்யனைப் பார்க்கும் போது வரும் இந்தத் தடுமாற்றம் புதிது....!அவனை நேருக்கு நேர்....கண்ணைப் பார்த்து பேச முடியாமல் தவிக்கும் தவிப்பு புதிது....!அன்று புடவைக் கட்டிக் கொண்டு வந்த நாளன்று...அவன் பார்த்த பார்வைக்கு 'என்ன அர்த்தம்...?' என்று அவள்...அதன் பிறகு வந்த பல இரவுகளில் யோசித்திருக்கிறாள்.

இதோ...இப்பொழுது கூட ஏற்படும் இந்த தயக்கமும்....தடுமாற்றமும் எதனால்...?என்ற கேள்வியும் அவள் மனதில் எழாமல் இல்லை....ஆனால்....அவை அனைத்தும் 'அவனுடன் ஒரே அறையில் வேலை செய்வதால் இருக்கும்...கொஞ்சம் பழகினால் சரியாகி விடும்....!' என்று தவறாகக் காரணத்தை ஊகித்துக் கொண்டாள்.

அவள் படக்கென்று திரும்பிக் கொண்டதில்....வாய் விட்டு சத்தமாக சிரித்தவன்,"ஸோ.....என்ன மார்க்...?",என்று கேட்க,

"எ...என்ன...?என்ன மார்க்....?எனக்குப் புரியல...?",அவள் தடுமாற,

"இவ்வளவு நேரம் என்னை வைச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருந்தியே....அதான்...எனக்கு என்ன மார்க் போட்டாய்ன்னு கேட்டேன்....?எப்படி....பாஸ் ஆகிட்டேனா....?",இதழ்கள் புன்னைகையில் விரிய....கண்ணோரங்களை செல்லமாக சுருக்கியபடி கேட்டான்.

"ஓ...அதெல்லாம்.... ",என்றபடி ஏதோ சொல்ல வந்தவள்....பிறகு தன்னை சமாளித்துக் கொண்டு...."நான் ஒண்ணும் வேணும்னே பார்க்கல....நீங்க கூப்பிட்ட மாதிரி இருந்துச்சுன்னுதான் பார்த்தேன்....!",பொய் என்று தெரிந்தும் அசால்ட்டாகக் கூறினாள்.

"அப்படியா....?நம்பிட்டேன்....!",அவன் உதடுகள் கேலியாக வளைந்த விதமே அவன்....அவள்
கூறியதை நம்பவில்லை என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தது.இருந்தும் அவனை கண்டு கொள்ளாமல்...வேலை செய்வது போல் திரும்பிக் கொண்டாள்.

மதியம் மூவரும் சாப்பாடு கொண்டுவரவில்லை.கேன்டீனில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று பேசி வைத்திருந்தனர்.பாலா...வேலை காரணமாகஅவனுடைய பிரிவிலிருந்து வருவதற்கு லேட் ஆகிவிட்டது.வரும் போதே...."சாரி பிரெண்ட்ஸ்....கொஞ்சம் லேட் ஆகிடுச்சு....!",என்று மன்னிப்பு கேட்டபடியே வந்தான்.

"உனக்காக எவ்வளவு நேரம்தான் வெயிட் பண்றது....?",நித்திலா கோபத்துடன் முறைக்க,

"சரி....சரி...!கோபப்படாத....கொஞ்சம் வொர்க்....!அதுதான் லேட் ஆகிடுச்சு...",என்று சமாதானப் படுத்திக் கொண்டிருக்க,

"அட....உங்க சண்டையை அப்புறம் வைச்சுக்கோங்க....!இப்ப எனக்கு பசிக்குதுப்பா....என்ன ஆர்டர் பண்ணலாம்ன்னு சொல்லுங்க.....!",சுமித்ரா இடையே புகுந்து கேள்வி கேட்கவும்தான் இருவரும் அமைதியாகினர்.

"இங்க நம்ம கேன்டீன்ல வேண்டாம் சுமித்ரா....பக்கத்துல ஒரு ரெஸ்ட்டாரண்ட் இருக்கு...அங்க போய் சாப்பிடலாம்....",என்று பாலா யோசனை கூற,

"அதெல்லாம் வேண்டாம்....!ஏற்கனவே....அரை மணி நேரம் ஓடிடுச்சு....இதுல வெளிய போய்ட்டு வந்தோம்ன்னா...இன்னும் ஒரு மணி நேரம் ஓடிடும்....ரொம்ப லேட் ஆகிடும்...!இங்கேயே ஏதாச்சும் சாப்பிடுவோம்...!",என்று நித்திலா மறுத்தாள்.

"ப்ச்....காமான் நித்தி...!என்ன...ஒரு அரை மணி நேரம் அதிகமா ஆகும்....ஆதி சார்கிட்ட சாப்பிட போனேன்னு சொல்லிக்க....!ஒன்னும் சொல்ல மாட்டாரு....!",,பாலா அவளை சரிகட்ட முனைய,

சுமித்ராவும்,"ஆமாண்டி....போய்ட்டு வந்திடலாம்...!நானும் அந்த ரெஸ்ட்டாரண்டுக்கு போகணும்ன்னு ரொம்ப நாளா நினைச்சுகிட்டு இருந்தேன்...."என்று வற்புறுத்த,

"நோ...நான் வரமாட்டேன்....இன்னைக்கு காலையிலதான் ஆதி சார்கிட்ட திட்டு வாங்கினேன்.... மறுபடியும் வாங்கிக் கட்டிக்க நான் தயாரா இல்லப்பா....இன்னொரு நாளைக்குப் போய்க்கலாம்....இன்னைக்கு இங்கேயே சாப்பிடலாம்....!",என்று உறுதியாக மறுத்தாள்.

பாலா எவ்வளவோ வற்புறுத்தியும்...பிடிவாதமாக மறுத்து விட்டாள் நித்திலா.அவளுடைய பிடிவாதத்தில் அவனுக்கு சிறு ஏமாற்றம் வந்தது.அவளை அந்த ரெஸ்ட்டாரண்டிற்கு அழைத்துச் சென்று...சிறிது நேரம் அவளுடன் தனியாகப் பேசிக் கொண்டிருக்கலாம்....என்று நினைத்து வந்தவனுக்கு...அவள் மறுத்தது ஏமாற்றத்தைத் தந்தது.

'சரி....!இன்னொரு நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்....' என்று தன் மனதைத் தேற்றிக் கொண்டான்.அதன் பிறகு மூவரும் அங்கேயே சாப்பிட்டு விட்டுக் கிளம்பிச் சென்றனர்.

.........................................................................................................................................

மாலை நந்தினி அறைக்குள் நுழையும் போது....நித்திலா படுத்தபடி கையில் ஒரு நாவலை வைத்துப் படித்துக் கொண்டிருந்தாள்.

"என்னடி....இது!உலக மகா அதிசயமா இருக்கு....?வழக்கமா நான் ஆபிஸ்ல இருந்து வரும் போது நீ உங்க அம்மா அப்பாகிட்ட....போன்ல கொஞ்சிக்கிட்டு இருப்ப....இன்னைக்கு என்ன...புக் படிச்சுக்கிட்டு இருக்க...?",என்று கிண்டலடித்தாள் நந்தினி.

"அம்மாவுக்கு கால் பண்ணினேன்...ஃபுல் ரிங் போய் கட் ஆகிடுச்சு....அதுதான்...புக் எடுத்து வைச்சு உட்கார்ந்திட்டேன்...",

"அதுதான பார்த்தேன்....பாய் பிரெண்டோட கடலை போட வேண்டிய வயசில....அம்மா அப்பாவோட மணிக்கணக்கா போன்ல கொஞ்சிக்கிட்டு இருக்கற ஆள் நீயாகத்தான் இருப்ப....",

"நான் என்னடி பண்ணட்டும்....!இன்னைக்கு நாள் எப்படி போச்சுன்னு அம்மாகிட்ட சொன்னாத்தான் எனக்குத் தூக்கமே வருது....! ",இருகைகளையும் விரித்து தோளைக் குலுக்கியபடி சொன்னவளைப் பார்த்துத் தலையிலடித்துக் கொண்டவள்,

"உன்னையெல்லாம் திருத்தவே முடியாது டி...!",என்றபடி படுக்கையில் விழுந்தாள்.

"ஏய்...பிசாசே...!எத்தனை முறை சொல்லியிருக்கேன்....?வெளிய போயிட்டு வந்தவுடனே இப்படி....பெட்ல படுக்காதான்னு....உன் மேல இருக்கற அழுக்கெல்லாம் என் பெட்ல ஒட்டிக்கும்....!எழுந்திருடி....!",அவள் கையைப் பிடித்து இழுத்தபடியே கத்திக் கொண்டிருந்தாள்.

"குரங்கே...!ஒரு மனுஷிய கொஞ்ச நேரம் படுக்க விடறியா....?இப்பவே உனக்கு ஒரு சாபம் தர்றேன்....உனக்கு வரப் போற புருஷன்....தினமும் ஆபிஸ்ல இருந்து வந்தவுடனே....குளிக்காம...டிரெஸ் கூட சேன்ஜ் பண்ணாம...உன்னைக் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்கணும்....!",அவள் தலையில் ஆசிர்வதிப்பது போல் கை வைத்தபடி நந்தினி கூற,

அவள் செய்கையைப் பார்த்து தன் தலையிலேயே அடித்துக் கொண்ட நித்திலா,"அதெல்லாம் நடக்கறப்ப பார்த்துக்கலாம்....இப்ப நீ போய் குளிச்சுத் தொலை....",அவள் முதுகில் கை வைத்து...பாத்ரூமிற்குள் தள்ளி விட்டாள்.

எதையோ முணுமுணுத்தபடியே நந்தினி உள்ளே செல்ல....நித்திலாவின் போன் அலறியது.அவளுடைய அம்மாதான் அழைத்திருந்தார்.போனை எடுத்தவுடனேயே,

"எங்கேம்மா போயிருந்தீங்க....?எத்தனை டைம் தான் போன் பண்றது....?",என்று கடிந்து கொண்டாள்.

"கோவிலுக்குப் போயிருந்தேன் டா....!அப்புறம்....இன்னைக்கு நாள் எப்படி போச்சு...?",

"எப்பவும் போல நல்லாதான்ம்மா போச்சு....",என்று ஆரம்பித்தவள்...அன்று கேன்டீனில் சாப்பிடதில் இருந்து....மாலை எந்த பஸ்ஸில் வந்தாள் என்பது வரை கூறிவிட்டுத்தான் ஓய்ந்தாள்.அதன் பிறகும்...அவள் இல்லாத போது பக்கத்து வீட்டில் என்ன நடந்தது....அப்பா என்ன செய்கிறார்....?என்பது வரை கேட்டு விட்டுத்தான் போனை வைத்தாள்.

இதை அனைத்தையும் கூறியவள்...ஆதித்யனின் பார்வையைப் பற்றியோ....அந்தப் பார்வையால் தனக்குள் ஏற்ப்பட்ட தடுமாற்றத்தைப் பற்றியோ கூற மறந்துவிட்டாள்....மறந்துவிட்டாளோ.....?இல்லை....மறுத்துவிட்டாளோ....?தெரியவில்லை.....!அதை ஏன் தன் அம்மாவிடம் கூறவில்லை என்பதை அவள் ஒரு கணம் யோசித்திருந்தாலும் போதும்....தன் மனதைப் பற்றி அவள் தெரிந்து கொண்டிருக்கலாம்....!

ஒரு சில மென்மையான விஷயங்களைத் தாயிடம் கூட பகிர்ந்து கொள்ள மனம் வராது....அப்படிப்பட்ட விஷயங்களில்....இந்த விஷயமும் ஒன்று...என்பதை வசதியாய் மறந்து போனாள் அந்தப் பேதை...!!


அகம் தொட வருவான்...!!!
 
Top