Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 7

Advertisement

என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 7

அத்தியாயம் 7 அன்பில் நனைந்து பாச மழையில் குடை பிடித்தாள்!

“ஸார் உங்க பொண்ணு பத்திரமா இங்க தூங்கிட்டிருக்கா, நீங்களும் ஏதாவது கொஞ்சம் சாப்பிடுங்க, இல்லைனா இவ்வளவு மாத்திரை சாப்பிடுற உங்க குடலில் ஓட்டை விழுந்து அது அப்புறம் தானாவே புல்லாங்குழல் இசைக்க ஆரம்பிச்சிரும்!” என்று தாமரை ஆறுதலாய்க் கூற,

“தாங்க்ஸ்ங்க, ரொம்ப கிரிடிக்கல் ஸ்டேஜ்ல எனக்குக் ஹெல்ப் பண்ணி இருக்கீங்க! என் குழந்தையை ஒரு அம்மா மாதிரி பார்த்துக்கிட்டதுக்கு இன்னொரு தாங்க்ஸ்!!!”

“நான் என்ன சார் பெரிசா செஞ்சிட்டேன், உங்க குழந்தைதான் ஒரு குட்டி தேவதை, எல்லாப் பெண்களுக்குள்ளும் இந்தத் தாய்மை இருக்கும், ஆனால் பால் மனம் கூட மாறாத இந்தப் பிஞ்சின் கைகளில் நான் பார்த்த தாய்மையைப் பத்தி சொல்ல எனக்கு வார்த்தையே கிடைக்கலை!

நீங்க இந்தப் பக்கம் வந்தீங்கனா, அந்த ஸீட்டிலும் படுக்கையை விரிக்க முடியும், நீங்க எந்த ஸீட்டில் வேணா படுத்துக்குங்க, பட் யூ நீட் ரெஸ்ட், உங்க எண்ணங்களையும் சிந்தனைகளையும் ஷட் டவுன் பண்ணிட்டுத் தூங்குங்க, உங்க குழந்தையைப் பத்திரமாப் பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு!” அவள் தாரா போலவே பேசினாள்!

அவன் எழுந்து வந்து தன் குழந்தையின் அருகில் அமர்ந்து கொண்டு தான் வைத்திருந்த தயிர்சாத பாக்ஸைப் பிரித்து ஒரு ஸ்பூனால் எடுத்து ஒரு வெள்ளைக்காரனுக்குரிய லாவகத்தோடு சாப்பிட, அவனைக் கடைக் கண்களால் பார்த்துக் கொண்டே படுக்கையை விரிக்கும் தன் வேலையைத் தொடர்ந்தாள் அந்தப் பெண்.

“எனக்கு என் மகளோட தூங்கினாத்தான் என்னால் நிம்மதியாத் தூங்க முடியும், ஸோ உங்க இடத்தை எனக்கு மாத்தித் தருவீங்களா தாமரை?”

“தாராளமா எடுத்துக்குங்க, அதுக்குப் பதிலா உங்க ஸீட்டை நான் எடுத்துக்கப் போறேன், அவ்வளவுதானே!” என்று சிறு பிள்ளை போல் சிரித்துவிட்டு அவளும் படுக்க பல மணி நேரங்கள் கழித்து அந்தப் ரயில்வே கோச்சும், அவன் மனமும் ஸ்லீப்பிங்க் மோடிற்குச் சென்றது!

தூக்கத்தில் அவன் உடம்பு நடுங்கிக் கொண்டிருக்க, அப்பா வந்து தலையில் குல்லா அணிவித்துவிட; அம்மா வந்து ஸ்வெட்டர் போட்டுவிட, தாரா வந்து கம்பளி போர்த்திவிட, அந்த புதிய பெண்ணோ போர்வையை அவனிடமிருந்து பறித்து ஜன்னல் வழியாக வெளியே தூக்கி எறிந்தாள்.

அந்த ஏசி குளிரிலும் அவனுக்கு வேர்ப்பது போலிருந்தது!

'இந்தக் கூட்டத்தில் எங்கே என் சிந்துவைக் காணவில்லை?' என்று அவன் சுற்றிச் சுற்றி ஓடி அவளைத் தேடி கொண்டிருக்க, அது ஒரு நீள் வட்டப் பாதையாக, கிளம்பிய இடத்திலேயே அவனை மறுபடியும் மறுபடியும் கொண்டு வந்து சேர்த்தது! அங்கே அவனுடைய குழந்தை, “அப்பா! அப்பா!” என்று அழுது கொண்டிருந்தது! அவன் உடனே தன் மேல் கிடந்த கம்பளியை உதறினான்.

“அப்பா, அப்பா எழுந்திருப்பா, எனக்கு உச்சாப் போகணும்பா!” படக்கென்று கண்விழித்த கௌதம், சுற்று முற்றும் பார்த்துவிட்டு ஓடும் ரயிலின் ஓசை கேட்டு இவ்வுலகிற்குப் பிடித்து இழுத்து வரப்பட.

“குட் மார்னிங்க் சார்!” என்று அந்த அல்லி ராணி மலர்ந்த மல்லிகையாய்ச் சிரித்து, அவனை அந்த ரயில் பயணத்திற்குள் அழைத்து வந்தாள்.

“ஓ மை காட், இவ்வளவு நேரம் தூங்கிவிட்டேனா? நீங்க என்னை எழுப்பி இருக்கலாமே? நாம சூரியனுக்கு காலை வணக்கம் சொல்றதுக்குப் பதிலா அது நமக்கு வணக்கம் போடுதே!” என்ற கேள்வியோடு அவளைப் பார்க்க,

அவள் அவனிடம் பேச்சைத் தொடர்ந்தாள்! “உங்க பொண்ணை வா நான் டாய்லெட் கூட்டிப் போறேன்னு சொன்னேன், ஆனால் அதுக்குக் கூட உங்க பெர்மிஷன் வேணும் போல!” என்று அவள் சோகமாய்க் கூற, அவன் சிரித்துக் கொண்டே,

“ஆன்ட்டிகூட போயிட்டு வாடா!” என்று கூற, குழந்தையை அவள் தன் கரங்களில் தூக்கிக் கொள்ள அதுவும் அப்பாவைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே டாய்லெட் சென்று, திரும்பி வந்தது,

“கொஞ்ச நேரம் பார்த்துக்குங்க இதோ வர்றேன்” என்று, பேஸ்ட், ப்ரஷ், சோப் டவலுடன் தன் காலைக் கடன்களை முடிக்கச் சென்ற கௌதம், திரும்பி வந்த பொழுது,

பவியும் அந்தப் பெண்ணும் தொலைந்து போயிருந்தார்கள்! அவனுக்கு ஒரு நிமிடம் இதயமே நின்றுவிடும் போலிருந்தது! ‘ஐயோ என் குழந்தையை அந்தப் பெண் கடத்திவிட்டாளா? இந்த ஓடும் ரயிலிருந்து பவியோடு குதித்திருந்தால் இருவருக்குமே கை கால்களில் சேதாரம் ஆகிருமே?’ என்ற சந்தேகத்துடன்

“பவி!” என்று கத்தப் போனவன்,
“உங்களுக்கு என்ன சார் வேணும்!” என்று கரகர குரலில் வெள்ளைத் துணி மூட்டை போலிருந்த ஒரு மூட்டைக்குள்ளிருந்து ஒரு வயதான பெண்மணி கேட்க, அவன் அதிர்ச்சியின் உச்சத்தைத் தொட்டான்.

“இந்தக் காலத்துப் பசங்களே இப்படித்தான் கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாதவங்க! சேலை கட்டின ஒரு பொண்ணைப் பார்த்தாப் போதும், அது வயசானக் கிழவினாக்கூட ரசிக்கத் தொடங்கிருவானுங்க!” என்று ஒரு பல்லுப் போன கிழம் எதிர் திசையிலிருந்த சீட்டின் போர்வைக்குள்ளிருந்து பேச,

அந்த ஏசிப் பெட்டியில் போடப்பட்டிருந்த ஊதா நிறக் கர்ட்டனைப் பிரித்துக் கொண்டு நின்றிருந்தவன், “ஐயோ!” என்று கத்திக் கொண்டே, அந்தக் கர்ட்டனை மூடிவிட்டு,
“தப்பான பெட்டியின் திறைச்சீலையைத் திறந்துவிட்டேனா?” என்று குளறிய வார்த்தையோடு சீட்நம்பரை பார்த்துக் கொண்டே ஓட எத்தனித்தான்

“அந்தப் பெட்டியில என்ன சார் பண்றீங்க?” என்று மூட்டையிலிருந்து பிரித்துக் கொட்டிய சோடா பாட்டில் மூடிகளைப் போல் கலகலவென்று சிரித்த அல்லி மலர்,

“இங்க வாங்க, இதுதான் உங்க சீட்!” என்று, அவனுடைய சீட்டில் அமர்ந்து தன் பெண்ணுடன் ஏதோ மழலையில் பேசிச் சிரித்து விளையாடிக் கொண்டிடே அவனை அழைத்தாள்.

அவனைப் பார்த்தவுடன், அவளிடமிருந்து குதித்து ஓடிவந்த குழந்தை அவன் மடியிலேறி அவன் கழுத்தை வளைத்து கன்னத்தில் முத்தமிட, அவன் தன் குழந்தையைத் தன் நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு முத்த மழை பொழிந்தான். அந்தப் பெண்ணுக்கோ தானே அந்த அன்பில் நனைந்து; பாசமழையில் குடை பிடிப்பது போலிருந்தது!

“பசிக்கும் போது சொல்லு பவி, காலையில ப்ரெட், பட்டர், ஜாம் சாப்பிடலாமா?” அவன் கேள்விக்குப் பதில் கூறாமல் குழந்தை வேறு கேள்வி கேட்டது! அவனால் பதிலே கூற முடியாத கேள்வி,

“இன்னும் அம்மா காணும்! எப்ப வரும்!” ‘எந்த அம்மா? சிந்துவா? தாராவா?’ அவன் மனம் குதர்க்கமாய் அவனிடம் கேள்வி கேட்டது. குழந்தைக்கு விபரம் தெரிந்த நாள் முதல் அது தன் அம்மாவாக வரித்துக் கொண்டது தாராவைத்தான். தாராவும் அந்தக் குழந்தையுடன் உயிராகத்தான் இருந்தாள். இப்பொழுது அவளிடமிருந்து அவளின் உயிரைப் பறித்துக் கொண்டு. சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்துவிட்டான். இவன் வாழ்க்கையில் மட்டும் ஏன் இத்தனை கொடுமைகள் நடக்கின்றன என்று அவனுக்கே புரியவில்லை!

“பவிமா, ஆன்ட்டிக்கிட்ட வாங்க! அப்பாவுக்கு ராத்திரி தலைவலி வந்ததில்லையா? தொந்தரவு பண்ணலாமா!” அந்த ரயில் ஸ்னேகிதி புத்திசாலித்தனமாகக் கை கொடுக்க, அவன் தன் கண்களை மூடி குழந்தை அவளிடம் போகலாமென்ற தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.

அந்தப் புத்திசாலிக் குழந்தை என்ன புரிந்து கொண்டதோ, தெரியவில்லை! அது உடனே அவன் கழுத்தில் தன் பிஞ்சுக்கையை வைத்துப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கி அவனது மாத்திரைப் பையைத் தூக்கி வந்து அவனிடம் கொடுத்த பின்; அந்த சீட்டில் ஏறி, ரெண்டு சீட்டிற்கும் நடுவில் படுத்துக் கிடந்த குட்டி மேஜையில் இருந்த அவளுடைய வாட்டர் பாட்டிலையும் எடுத்துக் கொடுத்துவிட்டு, சமத்தாக அந்தப் பெண்ணின் மடியில் சென்று அமர்ந்து கொண்டது! அந்தக் குழந்தையின் செய்கைகளில் அந்தப் பெண் நிச்சயமாக அதிர்ந்துதான் போனாள்!

“தாங்க்ஸ்டா பவி!” என்று அவன் கூற, “இட்ஸ் மார்வலெஸ்” என்று கைதட்டினாள் அந்தப் பெண். அந்தக் குழந்தையும் சிரித்துக் கொண்டே தன் இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்துக் கொண்டு கைதட்டியது!

“உங்க குழந்தையை ரொம்ப அருமையா வளர்த்திருக்கீங்க சார்!” என்று அவள் ஸ்லாகித்துக் கூற,

“நான் எங்க வளர்த்தேன், என்னைக் கவனிக்கவே ஒரு தனிப்படை தேவைப்பட்டுச்சு, அவளையும் என்னையும் சேர்த்துப் பார்த்துக்கிட்டது அவளோட அம்மாதான்.

“அவங்களைத்தான் டில்லில தொலைச்சதா சொன்னீங்க இல்லையா?

“இது வேற அம்மா! பேர் தாரா!” என்று சொல்லிவிட்டு அவன் நாக்கைக் கடித்துக்கொள்ள, அந்தக் குழந்தையோ, “தாராம்மா! தாராம்மா!” என்று சொல்லிவிட்டு மேலும் கைகளைத் தட்டிக் கொண்டு கிளுகிளுவெனச் சிரித்தது!

“ஸோ உங்க கதை ரொம்ப சிக்கலானதுனு நினைக்கிறேன்! ஆனா சார், நீங்க ஆள் பார்க்க ஆறடிக்கு மேல் நல்ல வாட்ட சாட்டமான உயரத்தில், திடகாத்திரமா ஜிம்பாடியோட ஜம்முனு இருக்கீங்க; ஆனால் ராத்திரி, நீங்க தலைவலியில தவிச்ச தவிப்பை பார்த்து நான் அரண்டு போயிட்டேன்! எனித்திங்க் ராங்க் வித் யுவர் அப்பர் பெர்த்?” என்று அவள் தன் தலையைத் தட்டிக் கேட்க, அவன் உடனே நிமிர்ந்து தனக்கு மேலிருந்த அப்பர் பெர்த்தைப் பார்த்தவன் அது காலியாக இருப்பதைப் பார்த்துப் பயந்து போனான்!

“எங்க? ஆதி, தாளம், பல்லவி, சரணத்தோடு ராத்திரி சுகமா பாட்டுப் பாடிக்கிட்டே தூங்கின ஆசாமியைக் காணோம்! என்றான் புன்னகையோடு! அந்த மெல்லிய சிரிப்பில் எந்தப் பெண்ணும் மயங்கிவிடுவாள் என்றே அவளுக்குத் தோன்றியது! ஏனென்றால் அவள் மனம் அந்தப் புன்னகையில் கவிழ்ந்து விடாமலிருக்க அவள் பெரிதும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.

“அந்த ஆசாமி போன ஸ்டேஷனிலேயே இறங்கிப் போய்விட்டார். என்றவள், “அப்பப்ப நோவுதுணு நீங்க தலையைப் பிடிச்சுக்கிட்டாலும்; உங்களுக்கு குசும்பு கொஞ்சம் ஜாஸ்த்திதான் சார்!” என்று அவள் கூற,

“இந்த சாரு மோரெல்லாம் வேண்டாம், ஏதோ சொன்னீங்களே! ரயில் ஸ்னேகிதம், அது இதுனு, அதே மாதிரி ஸ்னேகிதர்களா இரண்டு நாளைக்கு இருந்துவிட்டுப் பிரிஞ்சு போயிறலாம்! பட் ரொம்பப் பெர்சனாலா எதுவும் வேணாம்!” என்று கூற, அவனுடைய இன்னர்வாய்ஸ் உடனே கத்தத் தொடங்கியது!

‘ஏய் ஃப்ராடு அப்ப அவளைப் பத்தி, அல்லி, மல்லினெல்லாம் கவிதை புனைந்தது எதுல சேர்த்தி?’ என்று அவனை மிரட்ட, ‘நண்பர்களாயிருந்தாலும் அழகை ரசிப்பதில் தப்பே இல்லை!’ என்று அந்த வாய்சை மயக்கப் பார்த்தான் அவன். இவனுடைய உள்மனச் சண்டைகள் பற்றி தெரியாத அவள் உடனே,

“சரியா சொன்னீங்க! நாம் இனிமேல் ரயில் ஸ்னேகிதர்கள்” என்று கூறிவிட்டு எழுந்து நின்று, கை நீட்டி அவனுடைய இறுகிய விரல்களைப் பற்றி குலுக்க; அவனோ அவளுடைய மெல்லிய விரல்களுக்குள் சிறைப்பட்டிருந்த தன் விரல்களைப் மெல்லப் பிரித்துக் கொண்டு,

“என் பெயர் கௌதம்” என்று கூறியவன், “உங்க பேர் அல்லியா?” என்று கேட்க, “இல்லை என் பெயர் தாமரை!” என்றாள் அவள்!

“உங்களுக்கு நான் வச்ச பேரைவிட, உங்களோட ஒரிஜினல் பேர் ரொம்ப அழகாப் பொறுத்தமா இருக்கு!” அவன் சொல்லி முடிப்பதற்குள் சிவந்திருந்த அவள் கன்னங்கள் மேலும் சிவந்து போக, அவள் வெட்கத்துடன் தலை கவிழ்ந்து கொண்டாள்.

“இப்பத்தான் பெர்சனல் வேண்டாம்னு அக்ரிமென்ட் போட்டோம்! நீங்க அந்த கோட்டைத் தாண்டியதால் நானும் பெர்சனலா ஒரே ஒரு கேள்வி கேட்டுக்கிறேன்! “இந்தக் குழந்தை யார் குழந்தை?” அவள் கேட்ட கேள்வி அவனுக்குள் திக்கென்று ஒரு பிரமையை ஏற்படுத்தியிருந்தாலும் சமாளித்தவன்,

“என் குழந்தைதான், அதிலென்ன உங்களுக்குச் சந்தேகம்?” என்றான் அவன்.

“இல்லை யாரும் வந்து கடத்திக்கிட்டுப் போயிருவாங்களோன்ற பயம் உங்க கண்களில் இருக்கு கௌதம்!” என்றாள் தாமரை. அவள் கேட்பதில் நூற்றுக்கு நூறு உண்மையாயிருக்குமோ என்று ஓரத்தில் நின்று அவனுடைய ஒரு மனம் கேவலுடன் சிறு குழந்தை போல அழுது கொண்டிருக்க, அவனுடைய குழந்தை பவி அவள் மடியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது!

“நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை தாமரை! என்னோட ஒரு வயது நான்கு மாதங்களேயான குழந்தை பவியை என்னோட நினைவுகளை இழந்த மூளைக்கு மட்டும்தான் தெரியும். என் பவிக்கு இப்ப ரெண்டு வயது நான்கு மாதம் முடிஞ்சிருக்கணும்! இந்தக்குழந்தையின் வயதென்ன? பேரென்ன? என்பதெல்லாம் டாக்டர் தாரா சொல்லித்தான் எனக்குத் தெரியும். எனக்குத் தெரிந்த குழந்தை, என் மனதில் பதிந்த என் குழந்தை, இப்ப எப்படி இருப்பானு எனக்குத் தெரியலை!

“எனக்கே, நான் யார்? என் பெற்றோர் யார்? எங்கே பிறந்து வளர்ந்தேன்? எந்த ஊரைச் செர்ந்தவன், என் தொழில் என்ன? என் கடந்த காலம் என்ன? என்பதெல்லாம் ஒரு வாரத்துக்கு முன்னாடித்தான் தெரிய வந்தது. அதுவும் என் ஞாபகங்கள் இன்னும் முற்றிலுமாய்த் திரும்பவில்லை! பருப்பு சாதத்துகுள்ள குழைஞ்சு கிடக்கிற சாதத்தையும், பருப்பையும் உங்களால பிரிக்க முடியுமா? இல்லை பாலிலிருக்கும் தண்ணியைத்தான் தனியா பிரிச்செடுக்க முடியுமா? அப்படித்தான் என் நினைவுகள் எல்லாம் ஒண்ணோடு ஒண்ணாப் பின்னிப் பிணைஞ்சு போய்க்கிடக்கு!”

தாமரை இப்படி ஒரு பதிலை அவனிடமிருந்து நிச்சயமாக எதிர்பார்க்க வில்லை. அவனைப் பற்றிய கருத்துக்கள் அனைத்தும் அவள் மனதில் மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டிருந்தது! பாவம் கௌதம், இவருக்கு உதவ வேண்டும், அதைத் தவிர வேறு எண்ணங்கள் அவளுக்குத் தோன்றவில்லை!

அவன் தன்னை அறியாமலையே அந்தப் பூங்காற்றிடம் தன் கதையைத் தொடர்ந்தான். “ஒரு வருஷத்துக்கு முன்னால் சென்னையிலிருந்து கோவை செல்லும் ஒரு ரயிலில் என் தாயை சந்திக்கப் பயணித்த பொழுதுதான் அந்த பேரிடர் நடந்துள்ளது. என் கண் முன்னால் நான் ட்ராவல் பண்ணி வந்த அந்த ஏசி கோச் போகிப் பண்டிகைக்கு எரிப்பாங்களே சொக்கப்பானை அதுமாதிரி கொழுந்து விட்டெரிய; அப்பொழுது வீசிய ஊழிக்காற்றில் தீ பரபரவென்று பரவி இன்னும் பல பெட்டிகளையும் திரைச்சீலைகளையும் கிழித்துப் போட்டுக் கொண்டிருக்க, அதனால் தடம் புரண்ட பல ரயில் பெட்டிகள் ஒன்றோரொன்று மோதி சில பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்று ஏறி நிற்க, என் குழந்தையோடு ரெஸ்ட் ரூம் வந்த நான் திறந்திருந்த கதவின் வழியாக என் குழந்தையோடு தூக்கி எறியப்பட்டேன்.

அந்த மரங்கள் சூழ்ந்த காட்டுப் பகுதிக்குள் உருண்டுருண்டு சென்று ஒரு மரத்தில் மோதி ஒரு பள்ளத்தில் விழுந்தவரைதான் எனக்கு ஞாபகம் உண்டு. நான் அந்தப் பள்ளத்தை நோக்கி உருண்டு சென்ற பொழுது என்னைச் சுற்றி, இரத்தச் சகதியும், கூச்சலும், குழப்பமும், கத்தல்களும், ஒப்பாரிகளும் பிய்த்து எறியப்பட்ட கால்களையும், கைகளையும், கறுகிப்போன துண்டு துண்டான சதைப் பிண்டங்களையும் பார்த்தேன்! அவ்வளவுதான் எனக்குத் தெரியும்! என் காதுக்குள் ஒலித்த ஒலிகள் தேய! அதன் பிறகு நான் முற்றிலுமான ஒரு இருட்டு உலகிற்குள் சென்றுவிட்டேன். எனக்கு நினைவுகள் திரும்பியதே அந்த விபத்து முடிந்து ஒரு மாதம் கழித்துத்தான்.

அதிலும் நான் கடந்த காலங்களை மறந்த ஒரு இறந்த மனிதனாகத்தான் உயிர்த்தெழுந்தேன். அதன் பிறகு நடந்தவைகள் தெரிய வேண்டுமென்றால் என் காதலி தாராவிடம்தான் நீங்க கேட்கணும் தாமரை!” அவன் கூற்றில் சுத்தமாக அதிர்ந்து போனாள் தாமரை!. எனக்கு முற்றிலுமாக ஞாபகத்தில் இருப்பது தாராவோடும், என் குழந்தை பவியோடும் வாழ்ந்த இந்த ஒரு வருட கனவு வாழ்க்கை மட்டும்தான்.

ஒரு வாரத்திற்கு முன் நீச்சல் குளத்தில் நீரில் விழுந்த என் குழந்தையைக் காப்பாற்ற நான் நீரில் குதித்த பொழுது, நான் மறந்து போனதாய் நினைத்த அந்தப் பழைய ஞாபகங்கள் திரும்பத் தொடங்கியது! ஆனால் அதுவும் முற்றிலுமாக இல்லாமல் குட்டிக் குட்டிக் கதையாகத்தான் என் மூளையில் இப்ப டவுன் லோட் ஆகிட்டிருக்கு!!!

என் தாய் தந்தையரோடு நான் வாழ்ந்த அந்த இளமைக்கால வாழ்க்கை, என் மனதில் மிகவும் ஆழமாகப் பதியப்பட்டுள்ளதால் அவை எல்லாம் ஈசியா ரெக்கவரி ஆயிருச்சு!

“அப்ப உங்க மனைவி? குடும்பம்,,,,!? குழந்தை1?”

“அதை மட்டும் பக்காவா என் மூளை மறைச்சு வச்சிருக்கு! என் பெயர் கௌதம், என் மனைவி பெயர் சிந்து, என் குழந்தை பெயர் பவி! நான் கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்த்திருக்கணும்! நான் குடும்பம் நடத்தியது டில்லிக்கருகில் நொய்டாவில்! அவ்வளவுதான், இந்தத் தலைப்புச் செய்திகள் மட்டும்தான் இந்த ஒரு வாரத்தில் என் மூளை எனக்கு அனுப்பிய செய்திகள்!

கௌதம் கூறிய கதைகளைக் கேட்டு அவள் மனதிற்குள் அதிர்ந்தாலும் மிகவும் கிண்டலாக அவனிடம் பதில் கூறத் தொடங்கினாள். தொடரும்

 

Attachments

  • Comp story UKKUM IMG-03 .jpg
    Comp story UKKUM IMG-03 .jpg
    50 KB · Views: 0
ஐயோ தாராவும் இல்லை, சிந்துவும் இல்லை, தாமரையா ஆ ஆ ஆ.......:oops: மேம் இன்னும் எத்தனை பேர் மேம் கௌதம் வாழ்க்கையில் விளையாடப் போறாங்க......:unsure:
 
ஐயோ தாராவும் இல்லை, சிந்துவும் இல்லை, தாமரையா ஆ ஆ ஆ.......:oops: மேம் இன்னும் எத்தனை பேர் மேம் கௌதம் வாழ்க்கையில் விளையாடப் போறாங்க......:unsure:
கவலைப் படாதீங்க கௌதமுக்கு சரியான ஜோடி கிடைப்பாங்க
 
Top