Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் கண்களில் காண்பது உன் முகமே அத்தியாயம் 6

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 6

அத்தியாயம் 6 ஏற்கனவே மூன்று பெண்களோடு போராடுபவன்,,,

அந்த ரயில் விபத்து நடக்கும் வரையிலும் அவனுக்குக் கண்கள் மிகவும் ஷார்ப். ஆனால் கடந்த ஒரு வருடமாகத் தன் பார்வையில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் அது நாணத்தில் சிவப்பது போல் சிவந்து போகிறது. புத்தகங்களைத் தொடர்ந்து வாசிப்பது அவனுடைய பொழுதுபோக்கு. அதைக் கற்றுக் கொடுத்தவர் அவனுடைய தந்தை! சிறுவயதில் புத்தகங்கள் படிக்காமல் அவனால் இரவில் தூங்க முடியாது! அவள் மடியில் விரிந்து கிடக்கும் புத்தகம் அவன் படித்த புத்தகமாகக் கூட இருக்கலாம்.

பழைய பார்வையிருந்திருந்தால் அது என்ன புத்தகம் என்று இந்நேரம் கண்டு பிடித்திருப்பான்! புத்தகத்தைப் பற்றிய ஆராய்ச்சியை நிறுத்திவிட்டு, இப்பொழுது தன்னை நேர் பார்வை பார்த்தவளை ஆராயத் தொடங்கினான்!

ஏற்கனவே அவன் வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ மூன்று பெண்களை அழ வைத்துவிட்டான்! முதல் பெண் அவனுடைய அன்பு அம்மா, இரண்டாவது பெண் அவனுடைய மனைவி சிந்துஜா;

மூன்றாவது பெண் தன்னைக் காதலித்துக் கைபிடிக்கக் காத்திருக்கும் தாரா!

தான் யாரென்று தெரிவதற்கு முன்னால் அவனும் தாராவிடம் மிக அன்பாகத்தான் இருந்தான், இப்பவும் மிச்சம் வைக்காமல் அவள் மேல் அந்த நன்றி கலந்த அன்பு இருக்கிறது! ஆனால் அவளைத் திருமணம் செய்ய அவனால் முடியாது! ஏனென்றால் அவனுக்கு ஏற்கனவே சிந்துஜா என்ற பெயரில் டில்லியில் ஒரு மனைவி உண்டென்று சில காலம் தன் ஞாபகங்களைத் தொலைத்திருந்த அவனுடைய பழுதுபட்ட, மூளை அவனிடம் அடித்துச் சொல்கிறது!!!

அவளைக் காணத்தான் அவன் விழுந்தடித்துக் கொண்டு இப்பொழுது ஓடுகிறான். சிந்துஜா தன் தாயை ஒரு முறையேனும் சந்திக்கவாவது அவளை இழுத்து வரவேண்டும்! அவன் தன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும்!

‘அது என்ன சத்தியம் என்று அவன் கேட்க அவன் மூளை ‘ங்கே?’ என்று விழித்தது!

எதிரிலிருந்த பெண்ணை எங்கோ ஏதோ ஒரு ஜென்மத்தில் பார்த்தது போல அவனுக்குத் தோன்றியது! யாரிவள்? இவளை எங்கே பார்த்திருக்கிறோம்? இப்பொழுது அவன் மூளையைக் குடைந்தால் அவன் மறந்து போயிருக்கும் தலைவலி மீண்டும் வரலாம்! தலைவலி மிகத் தீவிரமானால் இவன் மாத்திரை போட வேண்டியிருக்கும்!

வலி தாங்காமல் இவன் முணங்கலாம்; கத்தலாம்; அழலாம்! எதிரிலிருக்கும் பெண் ஓர் மனிதாபிமானத்தில் இவனுக்கு உதவலாம்!

’‘வேணாம்! வேணாம்! எந்தப் பெண்ணும் உதவிக்கு வர வேணாம்’ அவன் மனம் அவனை வண்மையாகக் கண்டித்தது!

ஒரு வாரத்திற்கு முன்புதான் அவன் முடிவெடுத்திருந்தான் இனி எந்தப் பெண்ணையும் நிமிர்ந்து கூடப் பார்ப்பதில்லையென்று! பெண்களே இல்லாத உலகமே இல்லையா? தாரா அவனிடம் பலமுறை கூறி இருப்பது போல அவன் கண்களில் ஏதோ ஒரு கவர்ச்சி இருக்க வேண்டும். அவனுடைய கண்களின் காந்தப் பார்வையிலும்; அதிலிருந்து பாய்ந்து வரும் லேசர் ஒளியிலும் தான் குப்புறக் கவிழ்ந்துவிட்டதாக அவள் பலமுறைக் கூறக் கேட்டிருக்கிறான்! ஒரு முறை தாரா,

“கண்களே கண்களே காதல் செய்வதை விட்டுவிடுங்கள்
ஆண்களே! ஆண்களே இளம் வாலிபிகளைக் கொஞ்சம் வாழவிடுங்கள்!


என்று ஒரு திரை இசைப் பாடலை மாற்றிப் பாடி வெறுப்பேற்றி இருக்கிறாள்!

ஆனால் எதிரிலிருக்கும் பெண்ணோ தன் காந்தப் பார்வையால் இவனைக் கவர்ந்திழுக்கப் பார்க்கிறாள். ஒரு கட்டத்தில் அந்தப்பெண் இவனுடைய அபியைப் பார்த்துச் சிரிக்க, அவனுடைய மழலையும் அவளைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கியது!

“வா! வா!” வென்று அவள் தன் தந்தம் போன்ற கரங்களை நீட்டி அவளை அழைக்க, அதுவும் ‘போகட்டாப்பா?’ என்பது போல அவனைக் கேள்வியாய்ப் பார்த்தது!

“வேண்டாம்!” என்று கிழக்கு மேற்காக அவன் வாயசைக்காமல் தலையாட்ட, அந்தக் குழந்தை இன்னும் வலிமையோடு அவனிடம் ஒன்டிக் கொண்டது. மனதில் தோன்றிய ஒருவகையான கோபத்தோடு அவளை முறைத்துப் பார்த்த கௌதம்,

“நீ யார் பெண்ணே!? என் குழந்தையை வான்னு கை நீட்டிக் கூப்பிட? பொம்பளைங்க உங்களுக்கெல்லாம் கொஞ்சங்கூட விவஸ்தையே கிடையாதா? இப்படித்தான் ஓடும் ரயிலில், தனியா இருக்க ஆண்கள் கிட்டப் பேச்சுக் கொடுக்க குழந்தைகள் மூலம் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்து கடைசியா அவங்கக்கிட்ட மாட்டிக்கிவீங்களா? இல்லை என் பெண்ணை என்கிட்ட இருந்து கடத்தத் திட்டம் போடுறியா?” அவன் பேச்சில் ஏற்பட்ட கோபத்தில் குப்பென்று முகம் சிவந்து போனாள் அவள்.

“அடப் பொம்பளைங்க முகமெல்லாம் கூட சிவக்குதே ஆச்சரியம்தான்!” என்று அவன் முணங்க,

“சாரி சார், குழந்தை அம்மா, அம்மானு கேட்டதால நான் கொஞ்சம் தடுமாறிவிட்டேன்!” அவள் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கூற,

“ஓ அப்ப நீங்களும் அதுக்கு அம்மாவாகப் போறீங்களா?” அந்தக் கேள்விக்கும் அவள் அசராமல் பதில் அளித்தாள்.

“அப்படினா இந்தக் குழந்தைக்கு நிறைய அம்மாக்கள் இருக்காங்கனு சொல்ல வர்றீங்களா?!” இந்த முறை கோபத்தில் சிவந்தது கௌதமின் கண்கள்! ஆனால் அந்தக் கோபத்திலும் அவன் அறிவு விழித்துக் கொண்டது!

‘யாரோடும் பேசாதே! பேச்சைக் குறை! முக்கியமா பெண்களிடம் பேசாதே! உனக்கு இப்பத் தலைவலி வரப்போகுது!’ என்று அவனுடைய இன்னர் வாய்ஸ் எச்சரிக்கை ஒலி எழுப்ப, அவன் தன் நெற்றிப்பொட்டைப் பிடித்துக் கொண்டான்!

“ஸார் நீங்க தப்பா எடுத்துக்கலைனா ஒண்ணு சொல்றேன்! நாம முழுசா இரண்டு இரவுகளும் ஒரு பகலும் இந்த ஒரே பெட்டியில் சேர்ந்தே பயணம் செய்து மூன்றாம் நாள் காலையில்தான் டில்லி போய் சேரப் போறோம்! நாம இந்த ரெண்டு நாளில் பேசிச் சிரித்து, அட் லீஸ்ட் இந்தக் குழந்தையுடனாவது விளையாடி வெறும் ரயில் ஸ்னேகிதர்களாயிருந்து பிரிவதில் ஒரு தப்பும் இல்லைனு எனக்குத் தோணுது! அதுவும் உங்களோட ஸ்நேகம் கூட எனக்கு வேணாம்,,,” என்றவள் நிறுத்தி நிதானமா,

“எந்த விதமான மனச்சிக்கல்களுமில்லாத உங்க குழந்தைக்கிட்டப் பேசினா, சிரிச்சா என்ன குறைஞ்சு போயிரும்?” ஒரு சிறிய பெண் போன்ற தோற்றத்தில் இருந்தவளுடைய பஞ்சிங் பேச்சில் அவன் சுத்தமாக அதிர்ந்து போனான்.

“அந்தக் குழந்தையோடு பேசிச் சிரிப்பதில் என் மனசுக்கு கொஞ்சம் சந்தோஷமாவும், ஆனந்தமாவும் இருக்கும்! நான் ஒண்ணும் உங்க குழந்தையைக் கடத்திக்கிட்டுப் போகணும்னோ; இல்லை உங்களை மயக்கணும்னோ; எந்த நாடகமும் போடலை! ஏற்கனவே வாழ்க்கையில் நிறைய நாடகங்கள் போட்டுவிட்டேன்! ஜஸ்ட் ஒரு டைம் பாஸ்தான்” அவளின் அந்தப் பதிலைக் கேட்டுக் குப்பென்று சிரித்தவன்,

“நீங்க என்னைக் கூடக் கடத்தலாம், ஆனால் என் குழந்தையை முடியாது!

‘ஆமா இந்த சிடுமூஞ்சியைக் கடத்திவிட்டாலும்’ என்று அவள் மனதிற்குள்ளேயே சிரிக்க, கௌதம் தொடர்ந்தான்,

“இறைவன் நினைச்சிருந்தா, அது ஜனித்த நாளிலிருந்து எப்பவோ என்கிட்டயிருந்து பிரிஞ்சு போயிருக்கும். எங்களைப் பிரிக்க மனித ரூபத்திலும்; இயற்கையின் ரூபத்திலும் எவ்வளவோ சதி நடந்திருக்கு, அப்பக்கூட என் குழந்தை என்னை விட்டுப் பிரியல!” என்று அவளிடம் ஜம்பமாய்க் கூறியவன், “என்னடா இல்லையா?” என்று தன் குழந்தையும் சப்போட்டிற்கு அழைத்துவிட்டு. அவன் அதன் கன்னத்தைக் கிள்ள,

அப்பாவின் அன்பில் அது கிளுகிளுவெனச் சிரித்துவிட்டு, அது ‘இல்லை’ என்று தலை அசைக்க, இந்த முறை அந்த அல்லி மலர் வாய் விட்டுச் சிரித்தது!!!

“குழந்தைங்க எப்பவுமே பொய் சொல்லாது சார்!” என்று கூறியவள், அதோடு நிறுத்தியிருந்தால் கூடப் பரவாயில்லை! ஆனால் அவள் இவனைப் பற்றிய இன்னொரு மதிப்புரையையும் சேர்த்துக் கொண்டாள். “நீங்க கூட சிரிச்சா அந்தக் குழந்தை மாதிரியே அழகா இருப்பீங்க சார்!” என்ற பெண்ணுக்கு மறுபடியும் புத்திமதிகள் கூறத் தொடங்கினான் அவன்.

“பெண்ணே! இப்படித்தான் ஆரம்பமாகும் ஆண் பெண் நட்பு! உன் கண்ணழகு! உன் மூக்கழகு! வெட்டி ஒட்டப்பட்ட உன் இதழ்கள் அழகு! உன் கொலுசு கொஞ்சும் பாதம் அழகு! உன் சிரிப்பழகு! நீ பேசும் போது என் மனசுக்கு ரொம்ப நெருக்கமாத் தோண்ற; ம்,,,ம் சாப்டீங்களா???; உன் பௌர்ணமி நிலா முகத்தை அப்படியே நீரை அள்ளுவது போல் என் கரங்களில் அள்ள நினைக்கிறேன்; ஆனால் அது வழிஞ்சு ஓடிக்கிட்டே இருக்கு; அவன் பேசிக் கொண்டிருந்த வசனங்களை நிறுத்தி,,,,,,,,!!!

ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து போனான்! ‘இவை எல்லாம் இவன் முன்னொரு காலத்தில் தன் காதலியிடம் பேசிய காதல் வசனங்களோ? இப்பொழுது உயிர்ப்புடன் இருக்கும் அவன் மூளை லாஜிக்கலாக திங்க் பண்ணத் தொடங்கியது! அந்த எண்ணங்களை காது கொடுத்து கேட்காதது போல அவற்றை உள் மனதில் வைத்துப் பூட்டியவன், பெண்களோடு பேச்சு வச்சுக்கக் கூடாது என்ற தன் பிரசவ வைராக்கியத்தை மறந்து,

“இது போன்ற ஏமாற்றுப் பேச்சுக்களை நான் நம்பத் தயாரில்லை!” என்று தன் பொழிப்புரையை அந்த வெள்ளை அழகியிடம் கூறி முடித்தான்!”

“நீங்க'என்ன‘காதலில் எப்படி ஏமாற்றுவது என்ற கதைக்கு வசனம்
எழுதப் போறீங்களா? இல்லை
அதைப்பத்தி ஒரு ஆய்வுக் கட்டுரை சப்மிட் பண்ணப் போறீங்களா?” என்று சிரித்தவள்,

“சரி நீங்க எந்தப் பொண்ணையும் நம்ப வேணாம்! பெண்கள் கிட்ட செமத்தையா அடி வாங்கி இருப்பது உங்க பேச்சிலிருந்தே புரியுது; ஆனா உங்க கையிலிருப்பது ஒரு பெண் குழந்தையாச்சே? அதை எப்படி நம்பப் போறீங்க? அது வேற ‘அம்மா! அம்மானு’ வந்ததிலிருந்து ஒரு பத்துத் தடவையாவது கேட்டிருக்கும்!?!”

“அவளோட அம்மாவைத் தேடித்தான் போயிட்டிருக்கேன்!” என்று அவள் விரித்த வலையில் தன்னை அறியாமல் ‘தொபுக்கட்டீர்’ என்று விழுந்து வசமாக மாட்டிக் கொண்டான்! இதைத்தான் ‘புத்திசாலிகளின் முட்டாள்தனம்’ என்று கூறுவார்களோ???

“அடி சக்கை! அப்படிப் போடு அருவாளை!” என்று சளசளவென்று அடித்துக் கொட்டும் மழையைப் போலச் சிரித்தவள்,

“அப்ப இந்தக் குழந்தையோட அம்மாவைத் தொலைச்சிட்டீங்களா!? அதுவும் அவங்களைச் சென்னையிலிருந்து டில்லியில் போய்த் தேடப் போறீங்களா?”

“ஆமாண்டி!” என்று சொல்லப் போனவன், ஒரு மரியாதையின் நிமித்தம் ஒன்றும் சொல்லாமல் அவளை வெறித்துப் பார்க்க,

“சரி டில்லில எந்த ஏரியாவில தொலைச்சீங்கன்னு சொல்லுங்க, நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாமானு பார்க்கிறேன்!” என்று அவள் கேட்டவுடன்தான் அந்தக் கேள்வி அவன் இதயத்தை அம்புபோல ஆழமாய் சென்று தாக்கியது!

கடந்த ஒரு வாரமாக இதே கேள்வியைத்தானே அவன் ரவ்வும் பகலும் தன் மூளையிடம் மன்றாடிக் கேட்கிறான்! அந்த நினைவுகளைக் கொட்டிவிடு என்று தன் மூளையிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துவிட்டான்! மண்டியிட்டுப் பார்த்துவிட்டான்! அது சிறிது கூட அசைந்து கொடுக்காத மௌனச் சாமியாராக இந்த ஒரு வாரமும் சாதிக்கிறது! அவன் எவ்வளவோ முயன்றும் அவனுடைய டில்லி வீட்டு முகவரி அவன் நினைவுகளில் புரளவில்லை.

டில்லி பக்கத்தில் நொய்டா, சிந்துஜா, இவை மட்டும்தான் அவன் ஞாபகம் கிளரப்பட்டவுடன் அதுவும் அவனுடைய பெற்றோர்கள் பற்றிய ஞாபகத்தோடு கிடைத்த முதல் புள்ளிகள். அந்தப் புள்ளிகளை வைத்துத்தான் இனி அவன் கோலம் வரைய வேண்டும். நொய்டாவில் ஏதோ ஒரு மென்பொருள் கம்பெனியாக இருக்க வேண்டும். அந்த நொய்டாவின் தெருக்களில் நடந்தால் தன் ஞாபகங்கள் கிளரப்படலாமென்று அவன் முற்றிலுமாக நம்பினான்.

‘கிளரப்படுமாவென்று டில்லியில் சென்றுதான் பார்க்க வேண்டும்!’

அவனால் நம்ப முடியாமல் போனது தாராவிடம் கட்டுண்டு கிடக்கும் தன் மனதை மட்டும்தான். அவளின் அன்புக்குப் பயந்துதான் அவன் சென்னையை விட்டு இப்படி டில்லியை நோக்கி ஓட்டம் பிடித்துள்ளான்! அவன் பிறந்து வளர்ந்த ஊர் கோவை, தன் தாய் கோவையில் கொவை ரயில்வே சந்திப்புக்கருகில் உள்ள தலைமைத் தபால் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் என்ற உண்மையை அவன் வாயிலிருந்து கக்க வைத்துவிட்டாள் தாரா! சோ அவளுடைய முதல் தேடல் கோவையிலிருந்துதான் தொடங்கும்! அவள் ஸீரோ டவுன் பண்ணி டில்லி வருவதற்குள் இவன் சிந்துஜாவுடன் தப்பிவிட வேண்டும்!

முதலில் அவனுக்குத் தாராவின் அன்பு வளையத்திலிருந்து தப்ப வேண்டும். அவனைத் தன் கைகளோடு பிணைத்துக் கொண்டு ஒரு கோவிலுக்கு இழுத்துச் சென்று ‘கட்டுடா தாலியை’ என்றால் அவனால் மறுக்க முடியாது! ஏனென்றால் அவள் அன்பு அவ்வளவு ஆழமானது! அகலமானது! அவனால் நீந்திக் கடக்க முடியாதது! அவன் நினைவிழந்திருந்த நாட்களில் அவனை அறியாமலேயே அவன் மனதை முற்றிலுமாய் ஆக்கிரமித்தவள் அவள்.

அவளுடைய அன்பு காட்டாற்று வெள்ளம் போல திக்கு திசை இல்லாமல் பாய்ந்தோடக் கூடியது! அவர்கள் இருவரும் காதலில் கசிந்துருகி பேசிய ஒவ்வொரு வார்த்தையும், அவன் மனமெனும் ஏட்டில் பதியப்பட்டுள்ளது! அவள் அடிக்கடி திருமணம் என்ற வார்த்தையை உப்யோகித்தாலும், ‘உன் சம்மதம் இல்லாமல் நடக்காதுடா’ என்று அந்தச் சாதராண சொற்றொடரை, சிக்கல்கள் நிறைந்த ஒரு சொற்றொடராக மாற்றிவிடுவாள். பலதடவை தாரா புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிராகவே அவனுக்குத் தோன்றினாள்!

“என்ன சார் நான் ஏதாவது தப்பாக் கேட்டுட்டேனா!? ஐ ஆம் எஃஸ்ட்ரீம்லி சாரி! அப்படி ஒண்ணும் உங்க மனசை வருத்தி என்கிட்ட ஃப்ரென்ட்ஷிப் வச்சுக்க வேணாம்! இந்த ரயில் ஸ்னேகிதமெல்லாம் நம் வாழ்க்கையில் கலைந்து போகும், கடந்து போகும் மேகங்கள், விடுங்க சார், உங்க குழந்தைக்குப் பசிக்கிது போல, நான் டிக்கெட் புக் பண்ணும் போதே எனக்கு இரவுச் சாப்பாட்டுக்கும் சேர்த்தே ஆர்டர் பண்ணி இருக்கேன்!” அவன் முறைப்பது போல் அவளைப் பார்க்க

“ஐயையோ! நெற்றிக் கண்ணை திறந்திறாதீங்க! நான் என் சாப்பாட்டை உங்களோட ஷேர் பண்றேனு சொல்லலை! பாப்பாவுக்கு வேணும்னா,,,என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்ளாக ஒரு பெரிய ஸ்டேஷனில் வண்டி நிற்க, தெலுங்கு வாலாக்காளின் சுந்தரத் தெலுங்கு அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

அவள் கூறியது போலவே அவளுக்கு நிறைய குழிகள் நிறைந்த வெள்ளைத் தட்டில், நிறைய உணவு வந்தது! அவனுக்கோ அவன் அம்மாவின் நினைவுகள் வந்து அவன் இதயத்தையும் மூளையையும் அழுத்திப் பிசையத் தொடங்கியது!!!

அவளிடம் நம்பிக் குழந்தையைக் கொடுத்து விட்டு கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு சிறிது நேரம் அந்தக் கீழ் பெர்த்தில் படுக்கலாமென்று தோன்றவே,

“பவி அந்த ஆன்டிக்கிட்ட கொஞ்ச நேரம் இருக்கியா, அப்பாவுக்கு தலைவலி மண்டையைப் பொளக்குது!” என்று அவன் பவியிடம் கெஞ்சலாய் கேட்க,

“நீ படுத்துக்கப்பா, 'மம்மி' மாதிரி 'மீ' தேச்சுவிடுறேன்!” என்று அந்தக் குழந்தை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அவன் தனக்காக ஒதுக்கப் பட்டிருந்த கீழ் பெர்த்தில் சரிய அவன் குழந்தை அவன் நெஞ்சில் சரிந்தது!

அவன் குழந்தை அவன் உடம்பின் மேல் படுத்துக் கொண்டே தன் பிஞ்சு விரல்களால் அவனுடைய நெற்றியை தேய்த்து விடத் தொடங்கியது! தாரா அவன் நெற்றியை பல முறை நீவி விடுவதைப் பார்த்துள்ளது குழந்தை! அது அதன் மனதில் ஓரளவிற்கு செட்டாகியிருந்ததால் அந்த மூன்று வயதுகூட நிறம்பாத குழந்தையால் தன்அப்பாவிற்கு பணிவிடை செய்யமுடிந்தது

கௌதம் வலியில் முணங்க, அந்த அல்லி மலர் சொல்லிலடங்கா ஆச்சரியத்தோடும், வியப்போடும் அந்த தந்தை-மகள் உறவைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவன் பக்கதிலிருந்த ஹேன்ட் பேக்கைக் காட்டி

“மாத்திரை! மாத்திரை!” என்று முணங்க, அவளுக்கு உடனே புரிந்தது அவன் மாத்திரை கேட்கிறான் என்று! உடனே அந்த ஹேன்ட் பேக்கை குடைய அந்தப் பையில் பலவகையான மாத்திரைகள்!

‘அம்மாடி! இவ்வளவு மாத்திரைகளா? இந்தச் சின்னவயதில், இந்த ஆணழகனுக்கு என்ன வியாதியாய் இருக்கக் கூடும்?’ என்று அவளுடைய உள் மனம் கேள்வி கேட்க, அவளுடைய இரண்டு விழிகளும் இந்த மாத்திரைக் குவியலில் எந்த மாத்திரைனு தெரியலியே என்ற கேள்வியில் விரிந்து நின்றது.

அந்தப் புத்திசாலிக் குழந்தை, சரியான இரண்டு மாத்திரைகளை காட்ட, அவள் எந்தச் சந்தேகமும்மின்றி குழந்தையை நம்பி, அந்தக் காப்ஸ்யூல் அட்டையிலிருந்து ஒன்றும், மற்றொரு மாத்திரை அட்டையிலிருந்து ஒன்றுமாக இரண்டு மாத்திரைகளைப் பிரித்தெடுத்து, தன்னிடமிருந்த வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை அவன் வாயில் ஊற்றி மாத்திரைகளை விழுங்க வைத்தாள்.

பின்னர் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த கீழ் பெர்த்தில் வெள்ளை ஷீட்டை விரித்து அதன் மேல் சின்னத் தலையணை வைத்து, படுக்கையை ரெடி பண்ணி முடித்துவிட்டு, தனக்கு வந்த சாப்பாட்டில் சிறிது எடுத்து அந்தக் குழந்தைக்கு ஊட்டிவிட்டாள். குழந்தையின் கையில் ஒரு லிட்டில் ஹார்ட்ஸ் பிஸ்கெட் பாக்கெட்டை உடைத்துக் கொடுத்து விட்டு வந்த சாப்பாட்டில் தானும் சிறிது சாப்பிட்டு அவன் கண் முழிப்பதற்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.

ஒரு மணி நேரம் கழித்து கண் விழித்த கௌதம் தன் குழந்தையை தன் சீட்டில் தூங்க வைத்துவிட்டுத், தன்னையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவளை, முதல் தடவையாக முறைத்துப் பார்க்காமல் ஒரு புன்முறுவலுடன் பார்த்தான். அந்தப் புன்னகையில் அவள் மனம் சொக்கிப் போனது அவள் கண்களில் தெரிந்தது! தொடரும்.
 

Attachments

  • train EKKUM 005.png
    train EKKUM 005.png
    837.2 KB · Views: 6
Top