Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் கண்களில் காண்பது உன் முகமே அத்தியாயம் 5

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 5

அத்தியாயம் 5 அவன் வாழ்க்கையில் இன்னொரு பெண்ணா?

“டமால்!!!’’ என்ற சப்தத்தில் யோக நிலையிலிருந்து கண்விழித்த கௌதம், சுற்றும் முற்றும் பார்வையை சுழற்ற, அவன் அமர்ந்திருந்த ரயில் ஏதோ ஒரு ஸ்டேஷனே இல்லாத நடுக்காட்டில் கும்மிருட்டில் நிற்பதை உணர்ந்தவுடன் பதறிப் போனான். அவனுடைய மூளை இன்னும் முழுவதுமான சமநிலையை அடையவில்லை என்று அவனுக்குத் தெரியும்! மறுபடியும் ஒரு ரயில் விபத்தா? என்று அவன் மூளை பரபரப்படைய, சில காட்சிகள் அவன் மனதில் ஓடியது

ஒரு வருடத்துக்கு முன் நடந்த அந்த ரயில் விபத்தில் அவன் தன் கையில் குழந்தையோடு, தன்னைச் சுற்றியிருந்த ரத்தச் சகதியில் தரையில் உருண்டு; குழந்தையை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டே, உருண்டவனின் தலை எதிலோ மோதி நிற்க; இடி முழக்கம் போல் அவன் தலை அதிர; ஆழமான எதற்குள்ளோ அவன் குழந்தையோடு உருண்டு விழ, நினைவுகள் அவனை விட்டுப் பிரிந்து செல்லத் தொடங்கியது வரை மட்டுமே அவனுக்குத் தெரியும்.

அவன் தன் நினைவுகளை முற்றிலுமாக இழப்பதற்கு முன் மூளையில் பதியப்பட்டது ஒரே ஒரு வரிதான்! அது,
‘என் குழந்தை பவியைக் காப்பாற்றி என் தாயுடன்,,, தாயுடன் சேர,,,,சேர்க்க,,,!’ அவ்வளவுதான் அதே வினாடியில் அவனுடைய முழு உணர்வுகளும், நினைவுகளும், அவனிடமிருந்து முற்றிலுமாக பிய்த்தெறியப்பட்டு அவன் ஓர் ஆழ்ந்த நித்திரைக்குள் இழுத்துச் செல்லப்பட்டான்!

அதன் பிறகு ஒரு மாதம் முழுவதும் அவனுக்கோ, அவன் உடம்புக்கோ, அவன் மூளைக்கோ, தன் குழந்தைக்கோ என்ன நடந்ததென்று அவனுக்குத் தெரியாத மயக்க நிலையிலிருந்தான். அதை முற்றிலுமான கோமா நிலை என்று கூற முடியாது! அவனுக்கே தெரியாமல், கத்திக் கூச்சலிட்டு அந்த மருத்துவமனையையே ரணகளப்படுத்தியாக அவன் கண்விழித்தபோது தாரா டாக்டர் கூறக் கேட்டுருக்கிறான்.

ஓரு மாதம் கழித்து அவன் கண் விழித்ததே, தனக்கு யாரென்றே தெரியாத; பரிச்சயமே இல்லாத; ஒரு பெண்ணின் முகத்தில் தான். அவனுக்கு இருந்த வியாதியை ஆங்கிலத்தில் TBI, PCS என்று ஏதேதோ பெயர் சொல்லி அழைத்தார் அந்த டாக்டர்! Traumatic brain Injury and its after effects என்று கூறியவரே, பின்னர் அவனுடைய அருமைக் காதலியானதுதான் இதில் நம்பமுடியாத ஒரு கிளைக்கதை!

தலை தரையில் மோதியதால், மூளையில் ஏற்பட்ட அதிர்ச்சி, வீக்கம், இரத்தக்கசிவு, இரத்தம் உரைந்து கட்டியானது என்று அவனுடைய தலைமை செயலகமே அடிவாங்கியதில், அவன் உயிர் பிழைத்ததே உலக அதிசம்தான். எந்த ஊர், என்ன பேர், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்று எதுவுமே தெரியாத கைப்புள்ளையாகத்தான் முதலில் இருந்தான் அவன்.

ஒரு வருடம் கழிந்த பின்னும் இப்பொழுதும் எங்காவது ‘டமால்’ என்று ஒரு சப்தம் கேட்டால் போதும்; உடனே இதயக் கூட்டிற்குள் ‘லப், டப்; லப் டப்’ என்ற ஒரே சீரான தாலாட்டுப் பாடலோடு செல்லமாய் உறங்கிக் கொண்டிருக்கும் அவன் இதயம், மடமடவென்று தன் துடிப்புகளை அதிகப்படுத்தி அந்த இதயக் கூட்டை விட்டுப்பிய்த்துக் கொண்டு காது வழியாக வெளியே பறந்து செல்வது போல்தான் அவனுக்குத் தோன்றும். இப்பொழுதும் அதே ஒலி அவன் செவியில் வந்து அறைந்தது. இதோ இரத்தத்தில் அட்ரீனாலின் அளவு கூடி இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கிவிட்டது!

தாராவின் உதவி இல்லாமல் அவனால் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரமுடியுமாவென்று தெரியவில்லை! அவளைவிட்டு ஏன் ஓடுகிறான்? ஏன்? ஏன்? ஏன்? அவன் மூளை யோசித்து யோசித்து ஸ்தம்பிக்கும் நிலைக்குச் சென்றது!

இதுவரையிலும் அவன் மனதை நடு நிலமைப்படுத்த அல்லும் பகலும் உழைத்தவள் தாராதான். கௌதம் என்று பெயரிடப்பட்ட தான் யார்? தன் கடந்த காலத்தில் என்னவாக இருந்தான்? எங்கிருந்து வந்தான்? என்பதை எல்லாம் மறந்திருந்தாலும் அவனை ஒரு நார்மல் மனிதனாக்கி இந்தப் பூமிப்பந்தில் தத்தித் தத்தி நடை பழக வைத்து, அவனை அடித்து, உதைத்து, ஓடி, ஆடி விளையாட வைத்தது அந்த டாக்டர் தாராதான். அவனை மட்டுமில்லாமல், அவனுடைய உயிர்த்துளியில் பிறந்த குழந்தையையும் அவள் காப்பாற்றி இருக்கிறாள். இப்பொழுது அந்த தேவதையைப் பிரிந்து செல்கிறான்! ஏன்? ஏன்? அவனாலயே பதில் கூற முடியாத நூறு கேள்விகள் அவனுக்குள்!

இன்றும் ஒரு டாக்டராகத் தன் பணி முடித்து அவள் களைத்துச் சோர்ந்து வீட்டிற்கு வந்த பின் இவனையும், குழந்தை பவியையும்தான் தேடுவாள். நோ! அவளைப் பற்றிய நினைவுகளைத் தன் நினைவுப் பேழையிலிருந்து முற்றிலுமாக அழிக்க வேண்டும். இந்தப் பைத்தியக்காரன் அவளுக்கு வேண்டாம். அந்த டாக்டரம்மா வாழ்க்கையின் அனைத்துச் சௌபாக்கியங்களும் பெற்று சந்தோஷமா இருக்கணும். கடந்த சில மாதங்களாக இவனுக்காகத் தன் பெற்றோரிடமும், தன் அண்ணாவிடமும் அவள் போட்ட சண்டைகளை அவன் நேரடியாக பார்த்தவன்.

“இந்தப் பைத்தியத்தையா கல்யாணம் கட்டிக்கப் போற?” என்ற அவளுடைய அண்ணாவின் கிண்டலான கேள்விக்கு,

“உலகம் முழுவதிலும் இருக்கும் மனிதர்கள் எல்லாம் ஒரு வகையில் பைத்தியம்தான் அண்ணா! அதில் பெட்டர் பைத்தியமா நான் கௌதமைப் பார்க்கிறேன்னு!” சிரித்துக் கொண்டே பதில் கூறினாள் தாரா!

அப்பொழுதெல்லாம் அவன் தன்னுடைய கடந்த காலம் முழுவதையும் கை இடுக்கில் வழிந்தோடும் நதி நீர் போல் முற்றிலுமாகத் தொலைத்திருந்தான்! ஆனால் இப்பொழுதோ அவனுடைய ஞாபகக் கிடங்கில் ஒரு சிறிய ஓட்டை விழுந்துவிட்டது! ஒரு சிறிய ஓட்டையால், கப்பல் முழுவதும் நீர் நிரம்பி, அந்தக் கப்பலையே சமுத்திரத்திற்குள் கரைத்துவிடுவது போல், திறந்திருக்கும் ஓட்டை வழியாக அவன் தொலைத்த ஞாபகங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக வந்து நிறைந்து கொண்டிருக்கிறது!

அந்த நினைவுகளின் வெள்ளத்தில் அவன் மூளை முழ்கப் போவது உறுதி! சிந்துஜா சிந்து நதிக்கரையிலிருந்து சிரிப்பது அவன் காதுகளில் கேட்கிறது! அவள் தனக்காகக் காத்திருப்பாளோ என்ற உண்மை அவன் மனதைச் சுட்டது!!! எப்படி அவளை மறந்து போனான்!

அந்த மறதியில் தாரா என்ற பெண்ணுக்கு மனதில் இடம் கொடுத்து,,,!!! ‘ஓ மை காட்’ அவன் விட்ட பெருமூச்சில் ரயிலிலிருந்த தண்ணீரெல்லாம் ஆவியாகி, அந்த நீராவியில் ஒரு நீராவி எஞ்சினையே ரயில்வே துறை ஓட்டியிருக்க முடியும்! அது அவ்வளவு நீண்ட பெருமூச்சாயிருந்தது.

மிக நீண்ட, அந்த அதிவேக எஃஸ்ப்ரெஸ் ரயில்எஞ்சினானது அதோடு இணைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகளை விசுக், விசுக்கென்று இழுத்துக்கொண்டு அந்த அத்வானக்காட்டிலிருந்து ஒரு தடுமாற்றத்துடன் மறுபடியும் ஓடத் துவங்க, அந்த ரயில் பெட்டிகளின் குலுக்கலையும் ரயில் எஞ்சின் விட்ட பெருமூச்சையும் தாண்டி அவனிடமிருந்து வந்த மிக நீண்ட பெருமூச்சை எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த வெள்ளை நிற ஏஞ்சலால் கேட்க முடிந்தது!

அந்தக் குலுக்கலில் தன் கையிலிருந்த குழந்தையும் ஒரு முறை குலுங்கி தன்னை “அப்பா, ப்பா ஆஆ” என்றழைப்பது காதில் விழ, வெகு நேரமாகத் தனக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தவன் தன் குழந்தையிடம் பேசத் தொடங்கினான்.

“ஒண்ணும்மில்லடா செல்லம், நின்ன வண்டி இப்பக் கிளம்பிருச்சு பாரு, வேற ரயில் போக இடம் விட்டுக் கிராசிங்கில் நின்னிருக்கும்! அவனுக்கு ஆச்சரியமாக இருந்த விஷயம், ரயில்களைப் பற்றித் தனக்குத் தெரிந்த எதுவுமே மறக்கவில்லை என்பதுதான். இவை எல்லாம் இளமையிலேயே அப்பாவால் சொல்லிக் கொடுக்கப்பட்டு அவன் மூளையில் பசுமரத்தாணி போல் பதிந்தவை!

‘ஆமாம் என்னோட அம்மா, அப்பாவைத் தேடிப் போகாமல் நான் ஏன் முதலில் சிந்துவைத் தேடிப் போறேன்!?”

அப்பா என்று நினைத்தவுடன் தானாகவே அவன் கண்களின் கரை உடைத்துக் கொள்ளப் பார்த்தது!

அன்றொரு நாள் ஈர உடையணிந்து, ஒரு தோளில் தண்ணீர் பானை சுமந்து ஒரு அறுவாளின் முனை கொண்டு முக்கண்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் கொட்ட, அடுக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளின் அடியில் சிதையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை மும்முறை சுற்றிவந்து, கண்ணில் கண்ணீரோடு அவர் சடலத்திற்கு கொள்ளி வைத்தது அவன் ஞாபகத்தில் வந்து சென்றது!

அப்படி என்றால் அவரை இனி அவன் பார்க்கவே முடியாதா!? சிறு வயது முதல் தன்னை மார்பிலும், தோளிலும் தூக்கிப் போட்டு வளர்த்து; தனக்காகவே நூறு கதைகள் புனைந்து; தன்னைத் தன் கை அணைவிற்குள் தாலாட்டி தூங்க வைத்த தன் அன்பு அப்பாவை இனி அவன் பார்க்கவே முடியாதா?” அவன் அந்த எண்ணங்களை மறக்கவும், தன் தலையில் யாரோ ஏறி மிதிப்பது போலிருந்த வலி குறையவும், குழந்தை பவியுடன் பேசத் தொடங்கினான்.

“உனக்குப் பசிச்சா சொல்லுடா, அப்பா பையில் நிறைய ப்ரெட், பிஸ்கட், சாக்லேட்ஸ், ஜாம், பட்டர் எல்லாம் வச்சிருக்கேன். உனக்கு ரொம்பப் பிடிக்குமே குட்டி இதயம்; அதுதான் லிட்டில் ஹார்ட்ஸ் அதுகூட ரெண்டு பாக்கெட்ஸ் இருக்கு! ஒரு டப்பாவில் தயிர் சாதம் இருக்கு” என்றவனுக்குப் பதிலாக குழந்தை கேட்டது அவன் எதிர்பாராத ஒன்றை!

“எனக்கு அம்மு வேணாம், மம்மி வேணும்! மம்மி காணும்?!” என்றது குழந்தை குழைவாக! அந்தக் குழந்தைக்குத் தெரியுமா இவன் அந்தப் பெண்ணின் அன்புப் பிடியிலிருந்து தப்பியோடி வருகிறான் என்று!

“மம்மி ஊருக்குப் போயாச்சு! வரக் கொஞ்ச நாளாகும்டா! அவங்களோட மம்மி டாடியைப் பார்க்கப் போயிருக்காங்க!” என்று பவியை சமாதானப்படுத்த நினைத்துத் தோற்றுக் கொண்டிருந்தான் அவன். குழந்தை அவன் வார்த்தையைக் கேட்பதாய் தெரியவில்லை! மம்மி! மம்மி! என்று அந்தக் குழந்தை சிணுங்க,

‘தவறு செய்துவிட்டோமோ என்று அவன் மனம் கிடந்து அடித்துக் கொண்டாலும், அவனுடைய சிந்துவை அவன் பார்க்க வேண்டும் என்று பச்சைக் குழந்தை மாதிரி அவன் மனமும் சிணுங்கிக் கொண்டேதான் இருந்தது!!

‘அவனுக்குத் தலையில் வேறு அடிக்கடி வலிவரத் தொடங்கி விட்டது! இவ்வளவு நாட்களும் தான் யார் என்றே தெரியாத நிலையில் வந்த வலி இந்த ஒரு வாரமாக யாரென்று தெரிந்த பின் இன்னும் தீவிரமாய் வருகிறது! அப்பவெல்லாம் அவனுடைய அன்புக் காதலி அன்ட் டாக்டர் தாரா அவனுக்கு ஒரு தாயாய், தாரமாய், தோழியாய் ஒரு எடுபிடியாய் அனைத்தையும் செய்திருக்கிறாள். அவன் எடுத்த வாந்தியைக் கூடத் தன் கைகளில் பிடித்து சிங்கில் கொட்டி இருக்கிறாள். அவளுக்கு இவன் துரோகம் செய்யப் போகிறானா?’

“நோஓஓஓ!” என்று வலியில் துடித்த மூளை நரம்புகள் முறுக்கிக் கொண்டு கத்த, இப்ப என்ன செய்யலாம்? மறுபடியும் அவன் தன் நினைவுகளை இழப்பதற்கு முன்னால் இந்தக் குழந்தையை அதன் தாயிடம் சேர்க்க வேண்டுமே!’

‘ரொம்ப நேரமா யாரோ அவனைத் தன் விழிகளால் விடாமல் தொடர்வது போலவும்; அவர்கள் பார்வையாலேயே தன்னை துவசம் செய்வது போலவும்; அவனை அவர்களின் விழிகளால் எத்துவது போலவும்; அவனுக்குத் தோன்ற, தன் கண்களைச் சுருக்கி எதிர் திசையில் அமர்ந்திருப்பது யாரென்று கீழ் பார்வை பார்த்தான் அவன்.

அங்கே எதிர் இருக்கையிலும் ஒரு பெண்தான் அமர்ந்திருந்தாள். அவளைப் பார்க்கும் பொழுது வானிலிருந்து இறங்கி வந்த வெள்ளைத் தேவதை போலிருந்தாள். கௌதம் அந்த ரயிலேறியதிலிருந்து இவனை, அவள் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். இவன் பார்க்கிறான் என்று தெரிந்தவுடன், சூரியனைப் பார்த்தவுடன் தன் தலையைக் கவிழ்த்துக் கொள்ளும் அல்லி மலர் போல் அவள் தன் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். அவளுக்கு இவனைவிட எப்படியும் இரண்டு மூன்று வயதாவது கம்மியாயிருக்க வேண்டும். மிகவும் இளவயது தோற்றத்தில்; கல்லூரிக் கனவுகளில் மூழ்கியிருப்பது போன்றதொரு மயக்கும் விழிப் பார்வையில்; தன்னை அவன் பார்க்கவில்லை என்று நினைத்து, அவள் ஓரப் பார்வை பார்ப்பதை அவனால் உணர முடிந்தது!

அந்த அகன்ற விழிகளில் இந்தக் காலத்துப் பெண்களுக்கு மைக்ரோகிராம் அளவில் கூட இல்லாத நாணம் லேசாக ஒட்டிக் கொண்டிருப்பது போல அவனுக்குத் தோன்ற,

‘நாணத்தில் செவ்வானமாய் சிவக்கும் கன்னங்களை உடைய அந்த அழகிய பெண்கள் எங்கே காணாமல் போனார்கள்?’ என்று அவனுடைய கவித்துவமான மனம் ஆராயத் தொடங்கியது.

‘போதும் உன் கவிதைகளும், கற்பனைகளும், வெறும் குப்பைகளாய்ப் போன காகிதங்களுமென்று’ அவனுடைய இன்னர் வாய்ஸ் அவன் தலையில் நங்கென்று கொட்ட, அதைக் கேட்காமல் அவனுடைய நார்மல் மனம் பதில் கூறத் தொடங்கியது!

‘ஒருவேளை ஒளிரும் மடிக்கணினி திரைகளிலும்; கண் சிமிட்டும் கம்ப்யூட்டர் மானிட்டர்களிலும், கைபேசிகளின் தொடு திரைகளில் விரல் தேய அடிக்கப்படும் குறுஞ்செய்திகளிலும் தொலைந்து போனார்களோ!’ இதோ இன்னும் சில நினைவுகள் அவன் மனதிற்குள் குவிந்து கொண்டிருப்பதை அவனால் உணர முடிந்தது! எந்தவித முகத்திரைகளும் இல்லாத முக நூல் பக்கங்களில் அவர்களின் முகத்திரை கிழிந்து அந்த நாணச் சிவப்பு அழிந்து போனதோ!?’

நான்ஸ்டாப்பாக வந்த எண்ணங்களில் அவன் தொலைந்து போகாமல் அவனைக் காப்பாற்றியது அவனுடைய குழந்தையின் குரல்தான்!

பவி “ப்பா” என்று அவனை அழைக்க “அவன் என்னடா” என்றான் கேள்வியாக! ஆனல் அவன் சிந்தனை நிற்காமல் எதிர் இருக்கை பெண்ணை ஆராயத் தொடங்கியது! இந்தக்கால ஆண் பெண்களின் யூனிஃபார்மான கறுப்பு ஜீன்ஸ், கறுப்பு டீ ஷெர்ட் என்று அணியாமல், லைட் ரோஸ் நிறத்தில் சுடிதாரும், சிவப்பு நிற டாப்சும் அணிந்து, வெள்ளை நிறத்தில் அள்ளித் தெளிக்கப்பட்ட சிறிய ரோஸ் நிறப்பூக்கள் நிறைந்த துப்பட்டாவை கழுத்தைச் சுற்றி ஒரு பாம்பைப்போல் சுற்றிக்கொண்டு, உன்னைப்பார்! என்னைப்பார் என்ற ஒரு எடுப்பான தோற்றத்தில்; ஒரு வித்தியாசமான பிங்கிஷ், சிவப்பு, வெள்ளை நிற காம்பினேஷனில், கன்னம் சிவந்த ஓர் அல்லி மலர் போலிருந்தவள் மறுபடியும் தன் தலை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

உட்கார்ந்தால் தலை இடிக்காத இரண்டடுக்கு ஏசி வசதியுடன்; அம்சமான பெரிய அஞ்சறைப் பெட்டி போலிருந்த அந்த கோச் மிக சுத்தமாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தன்னுடைய சீட்டிற்கு மேலிருந்த அப்பர் பெர்த் ஆளில்லாமல் காலியாயிருக்க, அவள் தலைமேல் இருந்த படுக்கையில் ஒரு நடுத்தர வயதுக்காரர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்.

அவர் வந்தவுடன் ஒரு அடையார் ஆனந்தபவன் ஸ்வீட் டப்பாவைத் திறந்து அதற்குள்ளிருந்த சிறிய டப்பாவை திறக்க; உள்ளே மணக்க மணக்க இருந்த முருங்கக்காய் சாம்பார் அந்தப் பெட்டி முழுவதும் பறவியது. அது கௌதம் அம்மாவின் கைமணத்தை அவன் மூளையில் பதிந்துவிட்டுச் செல்ல,

“எப்பம்மா உன் பிள்ளைக்கு முருங்கைக்காய் சாம்பார் செஞ்சு போடப் போற?” என்று மனம் குமுறியது! ‘உன் புள்ளைய மறந்திட்டியாமா, உன் பாசக்காரப் பிள்ளையைக் காணுமேனு நீ தேடவே இல்லியாமா? நீ தேடி இருப்ப! உன்னால் உன் மகனைப் பார்க்காம இருக்க முடியாது! நமக்கு ஏமா இவ்வளவு பெரிய தண்டனை? கௌதம் தன் சுய பச்சாதாபத்தில் புலம்பியதை எல்லாம் அந்த முருங்கைக்காய் சாம்பாரின் வாசனை விரட்டி அடிக்க,

அந்தப் பெரிய டப்பாவிற்குள்ளிருந்து தலை முழுவதும் இட்லி பொடியால் அலங்கரிக்கப்பட்டு, எண்ணையில் முங்கிக் குளித்த நாலு இட்லிகளும், வட்ட நிலவுகளாய் அவனை எட்டிப் பார்க்க, அவற்றை அந்தச் சாம்பாரில் முக்கி எடுத்து திவ்யமாய் உண்ணத் தொடங்கினார் அந்தக் கொடுத்து வைத்த மஹராசன்!!!

‘தன் கணவன் என்ற டெர்ரர் பீசிடமிருந்து அட்லீஸ்ட் ஒரு வாரமாவது விடுதலை கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் அவருடைய மனைவி சந்தோஷமாக மணக்க மணக்க சாம்பாரும் இட்லியும் செய்து கொடுத்திருப்பாரோ? இல்லை உண்மையான அன்பில் செய்து கொடுத்தாரோ? தெரியவில்லை! ஆனால் அந்த சாம்பாரின் மணம் அவன் ஞாபக நரம்புகளைத் தூண்டியது உண்மை!

‘தனிமையில் தன் தாய் என்ன செய்து கொண்டிருப்பார்கள்???’ அவனுக்கு அந்த நினைப்பிலேயே இதயமும், மூளையும் சேர்ந்து வெடித்துவிடும் போலிருந்தது! டில்லி சென்றவுடன் சிந்துவை அழைத்துக் கொண்டு மறு விமானத்தைப் பிடித்து அம்மாவிடம் வந்துவிட வேண்டும்!’ என்று முடிவெடுத்தவனுக்கு இன்னொரு உண்மையும் புரிந்தது!

அதுதான் அவனுக்கு விமானப் பயணம் பற்றியும் தெரியும் என்ற உண்மை! அவன் கடந்த காலத்தில் நிறைய விமானப் பயணங்கள் செய்திருக்க வேண்டும். அவன் மண்டைக்குள் நூற்றுக் கணக்கான விமானங்களும், பல வகையான விமானத் தளங்களும் ஓடி மறைந்தன! சில விமானத் தளங்களில் ஐஸ் கட்டிகள் கூட உரைந்து கிடந்தன! விமானத்தை மறந்துவிட்டு, மேலடுக்கில் உறங்கிக் கொண்டிருந்த அந்த நடு வயதுக்காரரைப் பார்த்தான் அவன்.

அவர் படுப்பதற்கு முன் மூன்று, நான்கு மாத்திரைகளை ஒன்றாய் முழுங்கிவிட்டுத், தன் மொபைல் வயரை இழுத்து, அதை சார்ஜரில் இணைத்து அங்கிருந்த பாயிண்ட்டில் சொருகியவர், மேல் தட்டில் போர்வையை விரித்து; ரயில்வேக்காரர்கள் கொடுக்கும் குட்டித் தலையணையில் தலைவைத்து, ஒரு கருப்புக் கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டு நிம்மதியாக மெல்லிய குரட்டையோடு உறங்கத் தொடங்கினார்! பாவம் பொண்டாட்டியிடமிருந்து அன்றுதான் அவருக்கு சாப விமோச்சனம் கிடைத்தது போலும்! அவன் மென்மையாக சிரிக்க அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டுத் தலை கவிழ்ந்தது அந்த அல்லி மலர்!

தன் எதிரில் பனிபடர்ந்த வெண்மையும் ரோசும், சிவப்பும் கலந்த கலப்பின மலர்போல் அமர்ந்திருந்த அந்தப் பெண் இப்போதைக்கு உறங்கச் செல்வாள் என்று அவனுக்குத் தோன்றவில்லை. அவள் மடியில் ஓர் ஆங்கில நாவல் விரிந்து கிடந்தாலும் அவள் கவனம் அதில் இல்லை என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது! ரயில் ஏறியதிலிருந்து அந்தப் புத்தகம் பக்கம் மாறாமல் அதே பக்கத்தில் உறைந்து போயிருந்தது!

புத்தகத்தைப் படிக்காமல் இந்தப் பெண் ஏன் என்னைத் திருட்டுத்தனமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறாள் என்ற கேள்வியோடு அவனும்் அவளை ஆராயத் தொடங்கினான். தொடரும்

 
UNMAYAVE GOW NALLAVAN THANA,

THARA PATHI NIKALA SINTHU PATHI NINAIKAMA ETHIRIL IRUPAVALA ARAYA THODANKUM IVAN YAR?

TRAIN ACCIDENT POTHU KADAISI NIMIDATHIL THAN MAGALAI THAYIDAM SERKAVA VENDUM ENRU NINAITHAN ENDRAN ENRAL SINDUKKU ENNA ANATHU,

AVAN PALA NADUKALUKKU SENTRAVAN POLA ENAVE THAN PALA VIMANA THALANKALUM NINAIVIL VARUKIRATHU

AANAL VARA VENDIYATHU INNUM NINAIVIL ILLAI

YOUR STORY ALSO GOING SMOOTHY SO FOR WAITING TOO KNOW THE PAST

I REALLY APPRECIATE THE WRITERS, YOU PEOPLES DO MAY RESEARCH ANY TELL US MANY NEW THINKS

IF I START READ ANY STORY NORMALLY I COMPLETE IN A DAY BUT I DON'T DO THAT IN UR STORY

KEEP ROCKING
 
Top