Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் கண்களில் காண்பது உன் முகமே அத்தியாயம் 4

Advertisement

என் கண்களில் காண்பது உன் முகமே

அத்தியாயம் 4 நான் சாகும்வரை உன்மடியில் இடம் கொடு!

“கண்ணான கண்ணே கண்ணானக் கண்ணே என்மீது சாயவா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால் பூப்போல நீவ வா!
நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும் என் ஏக்கம் தீருமா?
நான் பார்த்து நின்றேன் பொன்வானம் எங்குமென் மின்னல் தோன்றுமா?
கண்ணீராய் மேகங்கள் தூவும் கண்ணீர்சேரும் கற்கண்டாய் மாறுமா?
ஆராரிராரோ ராரோராரோ ஆராரிராரோ ராரோராரோ!


அவள் பாட அவள் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் அவன் நெற்றியில் தெரித்து விழுந்தது! அந்தக் கண்ணீரின் ஸ்பரிசத்தோடு அவள் விரல்களின் ஸ்பரிசத்தை நெற்றியில் உணர்ந்தவன், அந்த விரல்களை பிடித்து முத்தமிட்டுக் கோண்டே,,,

“அலைகடலின் நடுவே படகென வந்தாய்;
புதை மணலில் புதைய இருந்த என்னை,
உன் புன்னகையால் மீட்டெடுத்தாய்;
மழையில் ஆடும் மயிலே!
உன் மடியில் சாகும் வரம் கொடு;
முன்னெற்றியில் முத்தங்கள் கொடுத்து
என் ஜென்மம் காத்திடுவாய் நீ!”


என்று அவன் சில கவிதை வரிகளை அவள் மீது தூவிக்கொண்டிருக்கும் பொழுதே மெல்ல மெல்ல உறக்கத்திற்குள் இழுத்துச் செல்லப்பட. தன் மடியிலிருந்தவனை தலையணையில் கிடத்தியவள்; என்ன நடக்கிறது என்று தெரியாமல், அப்பாவுக்கு ஏதோ வலி என்பதை மட்டும் புரிந்து கொண்ட குழந்தை அதுவும் அவளோடு சேர்ந்து தன் பிஞ்சு விரல்களால் அவன் நெற்றியை நீவிவிட அவனருகில் குழந்தையைப் படுக்க வைத்தவள், அவன் கைகளை அந்தக் குழந்தைக்கு அணைவாகக் கொடுத்தாள்.

“பவிமா அப்பா கூடவே இரு, இன்னும் கொஞ்ச நேரத்துல அப்பா கண் முழிச்சிருவாரு, அம்மா சீக்கிரமே வந்துருவேன், சமத்தா இருக்கணும்!” என்று அவள் கூற,

“நோ மம்மி! நீ போகாத மம்மி! இரு மீஈஈஈ! அப்பா பாவும்!” என்று அந்தக் குழந்தை மழலையில் அழத் தொடங்கியது!

“இல்லடா அம்மா ஆஸ்பத்திரி போயிட்டு சீக்கிரமே வந்துருவேன், நீ அப்பா கூடவே இரு, எங்கேயும் போகக்கூடாது!” என்று கூறிவிட்டு கௌதமின் நெற்றியில் புரண்ட முடியை ஒதுக்கியவள்; பவிக்கு முத்தம் கொடுத்துவிட்டு,

“என்னோட லட்சியம் நீயா? இல்லை மருந்துவமனையானு இன்னைக்கு முடிவெடுத்திருவேன்! வந்து பேசுவோம்,,, ‘உன் அனைத்துக் கேள்விகளுக்கும் இன்னைக்கு நான் பதில் தரப் போறேன்; அதுக்கப்புறம் உன் அம்மாவைச் சென்று பார்ப்போம்!” என்று சிரிப்புடன் கூறிவிட்டு அவள் கிளம்பிச் செல்ல, அவள் கூறியது அரை மயக்கத்திலிருந்த அவன் காதுகளிலும் விழுந்தது!

அவளுடைய இலட்சியம் என்னவென்று அவனுக்குத் தெரியும்! அது அவளின் மிகப் பெரிய தேடல்! நரம்பு உயிரியலிலும், மரபியல் மூலக்கூறுகள் பற்றியும் ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து கொண்டிருந்தாள் அவள்.

அதிலும் அவளுடைய ஆராய்ச்சி, போதை தரக்கூடிய மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்களைப் பற்றியும்; போதை பொருட்களான கஞ்சா, கொக்காயின், ஹெராயின், மற்றும் அது போன்று போதை தரக்கூடிய மாத்திரைகள், மருந்துகள் ஊசிகள்; அதோடு தமிழகத்தில் ஆறாய் ஓடும் ஆல்கஹாலுக்கு அடிமையானவர்கள்; அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளநினைக்கும் இளையசமுதாயத்திற்கு எப்படி உதவுவது; என்பதை சுற்றியே இருந்தது! இவனோடு பலமுறை அதைப் பற்றிக் கலந்து பேசி இருக்கிறாள்

“கௌதம் ஒரு ஆணோ, பெண்ணோ ஏன் போதைக்கு அடிமையாகுறாங்கனு உனக்குத் தெரியுமா?”

“உன்னைப் போன்ற பெண்களின் மயக்கும்விழி பார்வையாலும்; அவர்களின் காந்தச் சிரிப்பாலும்; சுவையான ஏமாற்றுப் பேச்சுக்களாலும்னு நினைக்கிறேன்” என்று யோசிக்காமல் அவன் பதில்கூற. அவனை நங்கென்று தலையில் குட்டிவிட்டுத், தன் பதிலைக் கூறத் தொடங்கினாள் தாரா!

“நீ சொல்றது கொஞ்சம் சரியான பதிலா இருந்தாலும்,,,!!! என்று இழுத்தவள், “ஆண்கள் போதைக்கு அடிமையாவது பெண்களால்தான்! அதுபோல பெண்கள் போதைக்கு அடிமையாவதும் ஆண்களால்தான் என்பதில் கொஞ்சம் உண்மை இருக்கலாம், ஆனால் அதுவே முழுக் காரணமா இருக்க முடியாது! ஒரு பதினஞ்சு, பதினாறு வயசுப் பையன் பெண்களால் தனக்கேற்படும் காம இச்சைகளால் மட்டும் போதை மருந்தைத் தேடிப் போக மாட்டான்!”

“நீதான் பெரிய ஆராய்ச்சியாளர் ஆச்சே, இதுக்கான பதிலை நீயே சொல்லு தாரா! எனக்கு உன்னையும் என்னையும் என் கடந்த காலத்தை பத்தியுமே ஆராயவே நேரம் பத்தலை! இப்ப என்னோட ஆராய்ச்சி ‘பெண்ணின் இடைக்கும், எடைக்கும் ஏதாவது தொடர்பிருக்கா?” என்பது பற்றித்தான் என்று அவளின் மெல்லிடையை அவன் ஒரு புன்னகையோடு இரசிக்க “டேய்!” என்று கத்தியவள்,

“நீ எப்பவாவது தண்ணி அடிச்சிருக்கியாடா?”

“தெரியலை, ஞாபகம் இல்லை!”

“நான் மது குடுத்தா குடிப்பியா?”

“மாட்டேன், நான் ஞாபகங்களைத் தொலைச்சிருந்தாலும், என்மூளைக்கு அது தேவைனு எப்பவுமே எனக்குத் தோணியதில்லை! இன்னும் சொல்லப் பொனா இந்த மது, பீர், விஸ்கி, பொன்றவற்றின் மீது எனக்கு ஒரு அவர்ஷனே உண்டு! அவற்றை என் மனம் முற்றிலுமா வெறுக்குது”

“அதுதான் கௌதம் என்னோட ஆராய்ச்சியின் தலைப்பு! இந்தப் போதை வஸ்த்துக்கள் மேல் சில இளைஞர்களுக்கு மட்டும் அவங்களோட டீன் ஏஜ்லேயே இப்படியொரு தணியாத தாகம் எப்படி? ஏன்? ஏற்படுது? என்னோட ஆராய்ச்சியின் முடிவு ஒரு முக்கியமான முடிவை நோக்கிப் போய்க்கிட்டிருக்குப்பா! அந்தப் போதைப் பொருட்கள் மேல் ஓர் அடங்காத ஆசையும் ஏக்கமும் ஏற்கனவே அந்த மனிதனின் ஜீன்ஸில் பதியப்பட்டிருக்கணும்,

அவனுடைய மூதாதையர்கள் ஒருகாலத்தில் மொடாக் குடிகாரர்களா இருந்திருக்கலாம்னு ஒரு ஆராய்ச்சி கட்டுரை கூறுது! அது சரியாவும் இருக்கலாம், தவறாவும் இருக்கலாம்,,, ஆனால் குடிச்சுக் குடிச்சுத் தனக்குத்தானே சவக்குழி தோண்டுறவங்களையும், போதை மருந்து உபயோகிச்சு அழிஞ்சு போறவுங்களையும் பார்த்தா எனக்குள் ஒரு கொலை வெறி வருது! அதே நேரம் பாவமாவும் இருக்கு!

இந்த போதைங்கிறது மூளை சம்பந்தப்பட்ட ஒரு வியாதி! அவங்க தங்களுக்குமட்டும் சவக்குழி தோண்டலை, தனக்குப் பின்னால் வரப்போற தன்வழித் தோன்றல்களையும் பிஞ்சுலேயே காயப்படுத்தி அழிக்கிறாங்க! உனக்குக் குடியின் மேல் நாட்டம் இல்லைனா உன் அப்பா குடிச்சிருக்க மாட்டார்! என்னோட ஆராய்ச்சி, போதை மாத்திரைகளோ, மதுவோ சாராயமோ, ஏன் அதை இளையசமுதாயம் தேடிப் போகுது? குடியினால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள், அதிலிருந்து மீள முடியாமல் எது அவனைக் கட்டிப்போடுது? அதற்கு அடிமையாவதற்கான காரணங்கள், அதைவிடத் துடிக்கும் ஒருவன் மறுபடியும் ரிலாப்சாகி எதற்காகச் சாவு தன்னை நோக்கி வருகிறதென்று தெரிந்தும் அதில் விட்டில் பூச்சியாய் சென்று விழுகிறான்?

மூளையில் அந்தப் போதைப் பொருட்களுக்காக ஏங்க வைக்கும் சரியான ரிஸப்டர் செல்சை கண்டு பிடிச்சு அங்கே சில மாற்றங்கள் செய்தால் அந்த சாவுத் தொட்டிலிலிருந்து அவர்களைக் காப்பாற்ற முடியுமா? உயிரணுவில் இருக்கும் டி என் ஏவில் ஒரு கரக்ஷ்ன் செய்தால் இது போல் உள்ள இளவயது வாலிபர்களை மீட்க முடியுமா??? இதுதான் என்னுடைய ஆராய்ச்சியின் மூலக் கூறு கௌதம்!”

“ஆமா உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை! ஏதோ மூளையில், மூளை நரம்புகளில், இல்லைனா தண்டுவட நரம்புகள் இல்லை தண்டுவட டிஸ்க்குகளில் ஏதாவது பிரச்சனைனு வர்றவங்களுக்கு சத்திர சிகிச்சை பண்ணியோ, இல்லை கெட்டுப் போன மூளைக்குப் பதிலா, வேறொரு மூளையை வச்சுத் தச்சோ அனுப்ப வேண்டியதுதானே!?” என்றவன்,

இந்த உலகத்தில் பல இலட்சக் கணக்கில் உள்ள குடிகாரப் பசங்களையும், போதை வஸ்த்து சாப்பிடுற பசங்களையும் உன்னால் காப்பாத்த முடியும்னு தோணுதா?!” அந்தக் கேள்வியை அவன் கேட்டவுடன், அவள் கண்கள் தளுக்கென்று நிறைந்து போனது!

“ஐயோ சாரிடா! நான் ஏதாவது தப்பா சொல்லிவிட்டேனா? என் கண்ணம்மாவை அழ வச்சுட்டேனா, இங்க வா செல்லம்!” என்று அவளின் கண்ணீரைத் துடைக்கப் போனவனின் கைகளைக் கோபமாய்த் தட்டி விட்டவள்,

“இந்தக்கண்ணீரை நான் ஒருநாளும் காயவிடமாட்டேன், என் ஆராய்ச்சியின் மூலம் ஒரு 10% இளைஞர்களைப் போதைப் பழக்கத்திலிருந்து காப்பாற்ற முடியும்னா, அதுக்காக என் உயிரையும் தரத் தயங்க மாட்டேன்!”

“அதுக்காக நீ ஏண்டா சாகணும், இதோ அரைகுறையாய் செத்த சவம் போல நானிருக்கேனே? பாரு எவ்வளவு வளர்ந்த பையன் நான்? ஆனால் எனக்குள்ள இருப்பது ஒரு வருட ஞாபகம்தான்! இப்ப நான் ஒரு நாய்குட்டிக்கு இருக்க அறிவோடுதான் இருக்கேன். ஏறக்குறைய ஒரு சுட்ட கத்தரிக்காயா கிடந்த என்னை நீ காப்பாத்திருக்க;

‘நான் உன்னோட ஆராய்ச்சிக்கு பயன்படுவேன்னா என் உடம்பையும் மூளையையும் எடுத்துக்க, என் உடம்பும் அதுக்குள்ள இருக்க எல்லா உள்ளுறுப்புகளும் உனக்கே சொந்தம்னு கிரையப் பத்திரம் போட்டுத் தரட்டா?” அதைக் கேட்டு கண்ணீரின் ஊடே குப்பென்று சிரித்தவள்,

“நீ வாக்கு மாற மாட்டியே! நீ அப்படியே முழுசா எனக்கே சொந்தம்னு சொல்லியிருக்க, உன் மூளை மட்டும் இல்லை அதில் உள்ள உணர்வுகளும், நினைவுகளும் எனக்கே சொந்தம்னு ஒரு கிரையம் போட்டுக் கொடு, அப்ப நான் உன்னை நம்புறேன்!” என்று அவள் அன்று அவன் கழுத்தை ஒரு குழந்தை போல் கட்டிக் கொண்டு சிரித்தாள். இன்று அவனே அவளைத் தூக்கி எறிந்துவிட்டு அவளுக்குத் தெரியாமல் அவளிடமிருந்து தப்பி ஓடப் பார்க்கிறான்.

காரின் சக்கரத்தை சுழற்றிக் கொண்டிருந்த தாராவின் கரங்களோடு ஒரு நாய் குட்டி போல அவள் மனமும் அதிலிருந்த உணர்வுகளும் ஓடிவந்து கொண்டிருந்தன!

கடந்த ஒரு வாரமாக கௌதம் தன் நினைவுகளோடு போராடுவதை அவள் முற்றிலுமாக உணர்ந்திருந்தாலும் அவனாகவே அவன் மனம் தெளிவடையட்டும் என்று காத்திருந்தாள். கௌதமிற்கு அவன் மனைவி பற்றிய எந்த நினைவுகளும் வராமல் இருப்பது மிகுந்த ஆச்சரியமாயிருந்தது!

ஓரே ஒரு காரணத்திற்காக அவனுக்கு சிந்து பற்றிய ஞாபகங்கள் வர வேண்டுமென்று மிகுந்த ஆசைப்பட்டாள். ஆனால் கௌதமின் மூளையோ இன்னும் சிந்து பற்றிய ஞாபகங்களை இறுக்கிப் பூட்டித் தான் வைத்திருக்கிறதென்று கௌதமின் நடவடிக்கைகளிலிருந்து புரிந்து கொண்டாள்.

அவனுடைய இறந்த காலத்தைப் பற்றி அவளுக்குக் கவலை இல்லை! ஏனோ மருத்துவ உலகில் பலவற்றைக் கற்றுத் தேறிய அந்த டாக்டருக்கு, கௌதமிற்கும் ஒரு இறந்த காலம் உண்டென்பதை அவள் மனம் நம்பத் தயாராயில்லை! அதுதான் காதலில் விழுந்த பைத்தியக்கார மனங்கள் செய்யும் மாயாஜாலம்! ஆனாலும் சிந்துவைப் பற்றிய முத்தாய்ப்பான உண்மை அவளுக்கு தெரியும். இந்த அன்பும், பாசமும், தோழமையும், அறிவும், அழகும் நிறைந்த ராஜகுமாரன் அவளுக்கே அவளுக்கென்று சொந்தமாக வேண்டும். அவள் தொலைத்த வாழ்க்கை இவன் மூலமாக அவளுக்கு மறுபடியும் கிடைக்க வேண்டும்

ஒரு வருடப் பழக்கம்தான், அதிலும் ஓரு மாதம் எந்தவிதமான நினவுகளுமின்றி கோமாவில் கிடந்திருக்கிறான். ஆனால் அவன் எதுவுமே எழுதப்படாத வெறும் வெற்றுத் தாள்கள் மட்டுமே உள்ள புத்தம் புதிய புத்தகமாக மறு ஜென்மம் எடுத்த பொழுது அவன் ஒரு ராஜகுமாரனாக அவள் நெஞ்சில் நிறைந்து போனான். ஒரு கண்ணுக்குப் புலப்படாத பான்ட் அவர்களை இணைத்து வைத்திருப்பதாக அந்த நரம்பியல் டாக்டர், நம்பினாள்.

அவளுடைய வாழ்க்கையில் கலைக்கப்பட்ட கனவுகளும்; அவளைச் சுற்றி அவளே பின்னிக் கொண்ட சிலந்தி வலைகளும் ஏராளம். ஆனால் அனைத்தையும் தாண்டி, அவள் மனம் இப்பொழுது இவனிடம் மட்டுமே சுருண்டு கிடக்கிறது! இனி வாழ்க்கையோடு போராட அவளிடம் தெம்பு இல்லை!

‘ஏன் எதுவும் புரியாத புத்துவாக இவனிருக்கிறான்?’ என்ற அவளின் உள் மனக் கேள்விக்கு,

‘அப்படி என்றால் உன் இதயத்தை உடைத்து அவனிடம் காட்டு! உன் கலைந்து போன கனவுகளை அவனிடம் காட்டி, அவன் மனதைக் கலைத்துப் போடு!’ என்று மனசாட்சி அவளுக்குப் பதில் கூற,

‘அதை ஒரு நாளும் என்னால் செய்ய முடியாது! அவனுடைய அன்பு எனக்கு வேண்டும், ஆனால் அதை நான் யாசகமாய்ப் பெற முடியாது! அவனுடைய அன்பை, பாசத்தை, காதலை எனக்குப் பிச்சை இடும்படி கேட்க முடியாது! அது அவனுடைய காதல் கிண்ணத்தில் தானாக நிரம்பி வழிய வேண்டும்!’

‘அப்ப நீ என்னைக்கும் ஔவையாராத்தான் இருக்கப் போற’ என்று கைதட்டி குதூகலித்தது அவள் மனசாட்சி.

இருபத்தெட்டு வயது முடிந்து இருபத்தொன்பதாவது வயதிற்குள் அடி எடுத்து வைத்துள்ள டாக்டர். தாரா சென்னை மாநகரில் ஒரு புகழ் பெற்ற மருத்துவமனையில் கைதேர்ந்த நியூரோ சர்ஜன். சென்னையில் இதே ஆஸ்பத்திரியில் தன் மருத்துவத் தொழிலைத் தொடங்கியவள் ஒரு கட்டாயத்தின் நிமித்தம் கோவையில் சிறிது காலம் மருத்துவத் தொழில் பார்த்திருக்கிறாள்.

ஏனோ அந்த கோவை வாழ்க்கை முழுவதையும் மறந்துவிடத் துடிக்கிறது அவள் மனது! அவளுடைய கோவை வாழ்க்கையை முடித்து வைக்க வந்த தேவதூதனாய்த்தான் இன்றுவரை அவள் கௌதமைப் பார்க்கிறாள். அவன் இவளுடைய வாழ்க்கைக்குள் வந்த பிறகுதான் அது வரையிலுமிருந்த குளிர்காலமும், கார்காலமும்; ஓர் வசந்தகாலமாய் மாறத் துவங்கியுள்ளது என்பதை முற்றிலுமாக நம்பத் தொடங்கினாள்.

சொந்த ஊர் காரைக்குடி என்றாலும், சென்னை மெடிக்கல் காலேஜில் சீட் கிடைத்துப் படிக்க ஆரம்பித்த நாள் தொட்டு சென்னையே தஞ்சம் என்று கிடந்தவளுக்கு அதுவே சொந்த ஊராகிப்போனது.

பெற்றோர் சொந்த ஊரைவிட்டு கிளம்பி வர மறுத்து அங்கேயே அண்ணனுடன் தங்கிவிட்டதால் தாராவின் வாழ்க்கை முழுவதும் ஹாஸ்டல் வாசம்தான். பின்னர் டில்லி AIIMS மருத்துவமனையோடு இணைந்த கல்லூரியில் ரெசிடென்சியலாக இருந்து நியூரோ சர்ஜரியில் போஸ்ட் கிராஜுவேஷன் முடித்தவள் மறுபடியும் சென்னைக்கே திரும்பி வந்து விட்டாள்…..

அவள் தன் முப்பது வயதைத் தொடுவதற்கு முன்பே வாழ்க்கையில் எத்தனையோ அனுபவங்களைப பெற்றுவிட்டாள். ஆனால் அந்த அனுபவங்களை அவனுடன் பகிந்து கொள்வதற்கு முன்னரே அவன் பெட்டி படுக்கையை சுருட்டிக் கொண்டு கிளம்பப் போவது அவளுக்குத் தெரியாது!.

தாரா குழப்பமான ஒரு மனநிலையில் தன் காரை மருத்துவ மனைநொக்கி இயக்கிக் கொண்டிருக்க, தலைவலி சற்றே மட்டுப்பட்ட நிலையில் டில்லிப் பயணத்திற்கான ஏற்பாடுகளை மடமடவென்று கவனிக்கத் தொடங்கினான் கௌதம். மாலை ஐந்து மணியை நெருங்கியவுடன், தனக்கு அடைக்கலம் கொடுத்த வீட்டிலிருந்து கண்ணீரோடு விடை பெற்றவன், தன் மனதை ஒரு யோக நிலைக்கு அனுப்பிவிட்டு, டில்லி செல்லும் ரயிலில் குழந்தையோடு ஏறிவிட்டான்.

“அப்பா எங்கப்பா போறோம், தாராம்மா வரலை!” என்ற குழந்தையின் கேள்விக்கு அவனால் பதில் கூறமுடியவில்லை! குழந்தை பயத்துடன் அவனைப் பார்க்க, அவன் சென்ற ரயில் ‘டமால்’ என்ற சப்தத்துடன் முன்பின் தெரியாத ஒரு நடுக் காட்டில்,கும்மிருட்டில் நின்று போகக் குழந்தையைத் தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டான் கௌதம். தொடரும்
 

Attachments

  • EKKUM 002.png
    EKKUM 002.png
    451.4 KB · Views: 4
சகோதரி டெய்சி அவர்களுக்கு நன்றி நான் எல்லா கதைகளையும் படிப்பவன் அல்ல
நேற்று ஏனோ தங்கள் கதையை படிக்க வேண்டும் என்று தோன்றியது அதிலும் தங்கள் அறிமுகம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பது மறுக்கமுடியாத ஒன்று இந்த பதிவு வரை நான் ரசித்து படித்து வருகிறேன் some time our inner soul tell us go try this அது போல் ஒரு உணர்வால் படிக்க தொடங்கினேன்

தாரா லின் இலட்சியம் சாதாரணமானது அல்ல இது வரை தாரா மதிப்பு சிகராமா இருக்கு

ஆனாலும் கௌதம் ( தாராவால் சூட்டப்பட்ட பெயர்) இதுவரை அவன் தாய் நினைவுகள் வந்தபின் சிந்து பெயர் நியாபகம் வந்து பின் அவன் பெயர் நினைவுக்கு வரவில்லையா

ஆனாலும் இடைக்கும் எடைக்கும் உள்ள தொடர்பிர்கான ஆராய்ச்சி நல்லா இருக்கு

இப்படி பட்ட தாராவை விடுத்து ஓடுவது நியாயமா

பொருத்து இருந்து பார்ப்போம் விதி வலியது

மறுபடியும் ஒரு சப்தமா !!!!!!!...

நன்றி நல்ல பதிவு...
 
Top