Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் கண்களில் காண்பது உன் முகமே அத்தியாயம் 2

Advertisement

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 2

அத்தியாயம் 2 கௌதமின் கலைத்துப் போடப்பட்ட ஞாபகங்கள்

சிறிது நேரம் தன் மனதை நடுநிலைப்படுத்துவதில் அமைதி காத்த தாரா, பின்னர் தன் பேச்சை தொடர்ந்து,

யாதும் ஊரே யாவரும் கேளீர்!” என்று கூற,

“ஓ சான்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புனு சொல்ல வர்றீங்க!” என்று விட்டுக்கொடுக்காமல் தமிழால் தாக்கியவன்,
“டாக்டர், சென்னை, கோவை, எல்லாம் ரொம்ப தெரிஞ்ச ஊர் பெயராத்தான் இருக்கு, ஆனால் இந்த ஊர்களிலெல்லாம் நடந்த எந்த காட்சிகளும் எனக்கு ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது!!”

“பரவாயில்லை விடுங்க, அவை எல்லாம் பகல் நேர மேட்னி ஷோக்களா இருக்கும். இரவு நேரக் காட்சிகளாவது ஞாபகம் வருதானு வெயிட் பண்ணிப் பார்ப்போம்! எப்பவுமே இப்படி மூளை ஷாக்கினால் ஏற்படும் ஞாபக இழப்புகள் மெல்ல மெல்லத்தான் உங்க மூளையில டவுன்லோடாகி ரீரைட்டாகும். அதுக்கு பல மாதங்கள், ஏன் பல வருடங்களோ கூட ஆகலாம்! அதுக்காக நீங்க ரொம்ப மெனக்கெட்டு, மூளையை நோண்டினா இப்ப இருக்க ஞபகத்தையும் இழக்க வேண்டி வரும்!” டாக்டர் பெரிதாக பயமுறுத்தியதில் அவன் அரண்டு போனான்,

“அம்மா தாயே இருக்க ஞாபகங்களே போதும்!” என்று அவன் கை எடுத்துக் கும்பிட, தாரா சிரித்துக் கொண்டே நர்ஸ், கொண்டு வந்து கொடுத்த மருந்தை சிரிஞ்சில் ஏற்றி அளவை சரிப்பார்த்தவள், அவன் கையிலிருந்த ஒரு இரத்த நாளத்தைத் தேடிக் கண்டுபிடித்து அதில் நேரடியாக மருந்தைச் செலுத்தினாள்,

“இப்பக் கொஞ்ச நேரம் நிம்மதியா ரெஸ்ட் எடுங்க கௌதம், இங்க இருந்தா நீங்க எப்பவும் மாத்திரை மருந்துகளோடுதான் குடும்பம் நடத்த வேண்டியிருக்கும்! அது இல்லாத வேறொரு உலகத்துக்கு உங்களை அழைச்சிட்டுப் போகப் போறேன். இன்னைக்கு மாலை நான் வீட்டுக்குப் போகும்போது, உங்களையும் பார்சல் கட்டித் தூக்கிட்டுப் போகப் போறேன்!
உங்க குழந்தை ‘அபி’,,,சாரி சாரி ‘பவி’ என்னிடம் பத்திரமா இருக்கா!” என்று அந்த ஆச்சரிய தேவதை அவனிடம் கூற, அவனுக்கும் குழந்தைக்கும், ஒரு தேவதையின் கரங்களில், சுகமான பாதுகாப்புக் கிடைக்கப் போகிறதென்ற நிம்மதியில் நிம்மதியா தூங்கத் தொடங்கினான்! அவனைச் சுற்றி அவள் வளைத்த அந்த ஸ்டதஸ்கோப் கரம் அவனுக்கு மிகவும் சுகமாயிருந்தது

கௌதமைவிட, அவனுடைய குழந்தை பவி, தாராவின் அன்பான அரவணைப்பில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்ததில் அவளுடன் அவன் மேலும் ஒட்டிக் கொண்டான். ஆனால் அவள் கூறியது போல மாத்திரை, மருந்து ஊசிகளிடமிருந்து அவனால் முற்றிலுமாய் விடுபட முடியவில்லை! இவன் இடைவிடாமல் மறந்துபோன தன் ஞாபகங்களைத் தேடி அலைந்ததில் அவனுக்கு அடிக்கடி தலைவலி வரத் தொடங்கியது.

ஒரு டாக்டராய் மருந்து மாத்திரைகள் கொடுக்கலாம், ஆனால் தொலைந்து போன ஞாபகங்களை அவளால் எப்படித் திருப்பித் தர முடியும்!? ஒருநாள் பேப்பரில் கூட அவனைப் பற்றிய விளம்பரம் கொடுத்துப் பார்த்தாள்! அவன் ஏகப்பட்ட தலைக் கட்டுகளோடும் பலநாள் தாடியோடும் இருந்த படம்தான் அவளிடம் இருந்தது!. இருபத்தெட்டு வருடங்கள் அவனை வளர்த்த பெற்றோரே அவனை அந்தப் புகைப்படத்தில் அடையாளம் கண்டிருக்க முடியாது! கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்த அவனே தன் முகம் கண்டு அரண்டு போனான்!

அன்று வரை கௌதமைத் தேடி, குடும்ப உறுப்பினர்கள், உறவுகள், நண்பர்கள் என்று யாருமே வரவில்லை! அவன் ஞாபகங்களைத் தூண்ட டாக்டர் தாரா பல வழிகளில் முயன்று பார்த்தார். ஆனால் அது இறுகிய பாறையாய் அழிச்சாட்டியம் செய்தது.

நாட்களோடு இணைந்து மாதங்களும் உருளத் தொடங்க; அந்த காலகட்டத்தில் தங்களுக்கென ஒரு உறவைத் தேடி கௌதம், தாரா என்ற இரண்டு இளம் உள்ளங்கள் ஒன்றிணைந்து துடிக்கத் தொடங்க குழந்தை பவி அவர்களுக்கிடையில் ஓர் உறவுப் பாலமானாள்.

“தொலைந்த ஞாபகங்கள் போகட்டும் விடு கௌதம், அந்தக் காலாவதியான கடந்த கால காசோலைகளை வச்சு என்ன செய்யப் போற? உனக்கு நான்! எனக்கு நீ! நமக்கு பவி இது போதாதா?” என்று டாக்டர் கேட்க,

“போதாது!” என்று படக்கென்று கௌதம் பதில் கூறினான்,
தாரா, சடக்கென்று தன் பாதையில் சடன் பிரேக்கடித்து நின்று, அவனை அதிர்ச்சியோடு பார்க்க,

“பவிகூட விளையாட இன்னொரு பேபி வேணாமா தாரா டியர்!?” என்று வாஞ்சையுடன் அவன் கேட்க, கல் எறியப்பட்டவுடன் கலங்கும் நீரைப் போலக் கலங்கியவள்,
“டேய் உண்மையாவா சொல்ற? கௌதமனான நீ எப்ப சித்தார்த்தனா மறு பிறப்பு எடுத்த?!” என்ற கேள்வியோடு, அவன் நெஞ்சில் சந்தோஷமாய் குத்தியவளின் விரல்களைத் தன் விரல்களுக்குள் இறுக்கிப் பொதிந்து கொண்டவன், முகத்தில் தோன்றிய சஞ்சல ரேகைகளுடன்!

“ஆனால் நான் சொன்ன அந்த ஒரு வருட கெடுமுடியட்டும் தாரா; அதுக்கப்புறம் நாமக் கல்யாணம்கட்டிக்கிட்டு ஓடிப்போயிரலாம்!” என்று, பயம் கலந்த சிரிப்புடன்,,,கூறியவன் தொடர்ந்தான்,,,,

“எனக்கு ரொம்பப் பயமா இருக்கு தாரா! என்று கூறும்பொழுதே அவளைப் பற்றியிருந்த விரல்களும் அவன் தேகமும் நடுங்கத் தொடங்கியது. அந்த நடுக்கத்துடனே பேசத் தொடங்கினான்.
“நம்மை விழுங்கிக் கபளீகரம் செய்ய ஒரு ஆழிப்பேரலை நம்மை நோக்கிப் பாய்ந்து வர்ற மாதிரியே இருக்குடா! அந்த ரயில் விபத்து ‘டமால்’ என்ற சப்தத்துடன் என் மண்டையைத் தாக்க; இப்பவெல்லாம் கறுப்பு வெள்ளைப் படங்களில் பலர் என் மூளைக்குள்ள குறுக்கும் நெடுக்குமா ஓடுறாங்க! ஆனால் எனக்கு யாரையுமே தெரியல” என்றவனைத் தன் கரங்களில் தாங்கி அழைத்து வந்து படுக்கையில் கிடத்தியவளோடு தான் நடத்திய, அந்த ஒரு வருட வாழ்க்கையும் கமா, ஆச்சரியக்குறிகள், செமிக்கோலன்களோடு, மீதமிருக்கும் முற்றுப் புள்ளி வைப்பதற்கு முன்னால் அந்த உறவு பாதியில் அறுந்து போனது! அந்த அழகான உறவை அவனே அறுத்துவிட்டான்.

அவன் தயங்கித் தயங்கி அவளிடம் பழகினாலும் முதல் நாளே அவனோடு அவள் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டுவிட்டாள். அவனுடைய மூளை என்னும் சுத்தமான ஸ்லேட்டில் அவர்கள் வாழ்ந்த அந்த அழகான ஆத்மார்த்தமான ஞாபகங்கள் மட்டுமே பதியப்பட்டது! அதை அப்படியே ஒரு ரொமான்டிக் நாவலாய் அவனால் எழுத முடியும்,

ஆனால்,,, தெளிந்த நீரிருந்த அந்தக் குளத்தில் ஒருவருடம் முடிய இன்னும் வெறும் பத்து நாட்களே பாக்கியிருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாய் பல கற்கள் எறியப்பட்டுள்ளன!
வளையம் வளையமாக எத்தனை எத்தனை ஞாபகங்கள்,,,,!!!

அவனுக்குக் கடந்த வாரத்தில் மெல்ல மெல்ல நினைவுகள் திரும்பிய பொழுது, அவனுடைய மனம் முதலில் திருப்பிப் பார்த்த பக்கங்கள் அவனுடைய பெற்றோரும் அவர்களோடு அவன் வாழ்ந்த வாழ்க்கையும்தான்.

பிறந்ததிலிருந்தே அவனுக்கும் இந்த ரயில்களுக்குமான பந்தம் மிக மிக அதிகம். அவன் தந்தை ஸ்டேஷன் மாஸ்டராக வேலை பார்த்தது அதே ரயில்வேத் துறையில்தான். அவன் பிறந்து வளர்ந்ததெல்லாம் ரயில்களோடுதான். அவனுடைய தந்தை இந்த ரயில்களைப் பற்றியும் அதில் தான் கடந்து வந்த பாதைகளைப் பற்றியும் ஒரு நூறு கதைகளையாவது அவனோடு பகிர்ந்திருப்பார்.

ஒரு முறை இரவு வேலைக்காக கால்நடையாகத் தான் வேலை பார்க்கும் ரயில் நிலயத்தை அடையும் பொருட்டு அந்த தண்டவாளத்தின் ஓரத்தில் நடந்து சென்ற பொழுது, ஆள் அரவமற்ற அந்த இருண்ட காட்டுப் பகுதியில் சரசரவென்று சப்தம் கேட்க, பயத்துடன் அந்தத் திசை நோக்கி தன் கையிலிருந்த டார்ச் லைட்டை அடித்துப் பார்க்க அங்கே படமெடுத்தாடும் ஒரு நாகத்தைப் பார்த்து, அரண்டு போனவர், பயத்தில் உடல் முழுவதும் வியர்வை கொப்பளிக்க, தன்னை ஒரு நடிகர் திலகமாய் நினைத்துக் கொண்டு, முதலில் அந்தப் பாம்பிடம் வசனம் பேச நினைத்து, முடியாமல் பயத்தில் அவர் நாக்கு வாயின் மேல்கூரையில் ஒட்டிக் கொள்ளத் திக்கித் திணறி, முடிவில் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில்,

“நாதர் முடிமேலிருக்கும் நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தது யார் சொல்லு பாம்பே!’


என்று உரத்த குரலெடுத்துப் பாட, படமெடுத்தாடிய அந்த நாகம் அவர் குரலைக் கேட்டுப் பயந்து, தான் போட்டிருந்த பாம்புச் சட்டையைக் கழட்டித் தூர வீசிவிட்டு, ‘துண்டைக் கணோம் துணியைக் கணோம்’ என்று அம்மணமாய் ஓடி மறைந்தது’ என்று சிரித்துக் கொண்டே அப்பா கூறியதை அவனால் என்றும் மறக்க முடியாது! அன்று அம்மாவும், மகனும் ஒன்று சேர்ந்து சிரித்த சிரிப்பு இன்றும் அவன் மனதில் சில்லென்று மழை போலத் தூறிக் கொண்டிருக்கிறது! இதுபோல் அவன் பெற்றோர் அவனிடம் எத்தனையோ நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார்கள்.

அவன் ஞாபகக்கிடங்கிலிருந்து தெறித்து விழுந்து, 3டி வடிவம் பெற்ற இன்னும் சில ஒலி, ஒளிச் சிதறல்களை அவன் தன் மூளையிலிருந்த மெம்மரி கார்டில் மேலும் பதிந்தான்! கோவையில் ரயில்வே ஜங்க்ஷன், அருகிலிருந்த பெரிய போஸ்ட் ஆபிசில் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்த அவனுடைய தாயும், கோவை ரயில்வே ஜங்க்ஷனில் ஒரு ஸ்டேஷன் மாஸ்டராக வேலை பார்த்த அப்பாவும் காதலில் விழுந்து; உறவில் மலர்ந்து; குடும்பம் நடத்திய அவர்களுடைய ரொமான்டிக்கான காதல் கதையைத் தன் அழகிய கண்களை அகல விரித்து அம்மா பார்ட் பார்ட்டாக விரித்துச் சொல்ல, அந்த நினைவுகளெல்லாம் அவன் தேடாமலேயே அவனுடைய மெம்மரி பாக்சில் இப்பொழுது நிறைந்துவிட்டது!

உடனே கோவை செல்ல அவன் மனமும் உடலும் பரபரத்தது! தாராதான் அனைத்து ஞாபகங்களும் திரும்பும் பொருட்டு ஒரு வாரம் டைம் கொடுக்கச் சொன்னாள். ஏனென்றால் அவனுக்குத் திருப்பிக் கிடைத்த ஞாபகச் சங்கிலியில் அவனுடைய காதல் மனைவி, குழந்தை, அவன் டில்லியில் வாழ்ந்த வாழ்க்கை என்று எதுவுமே அவன் மூளையில் பதியப்படாமல் ஒரு பெரிய இணைப்பு அறுந்து தொங்கியது! அவர்கள் காலத்தில் அவனுடைய பெற்றோர் வேலைக்குப் பயணித்த நாட்கள்; அப்பொழுது அவர்கள் வாழ்க்கை என்னும் கேன்வாசில் அவர்கள் வரைந்த காதல் ஓவியங்கள்; அவனுடைய அம்மா அவனைச் சுமந்து கொண்டே வேலைக்குச் சென்ற நாட்கள்; அவருக்கு இடுப்பு வலித்து, துள்ளத் துடிக்க அவன் பிறந்த கதை’ என்று அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு பல நூறு கதைகளைக் கேட்டு ரசித்திருக்கிறான்!

சிறு வயதில் அவன் பிறந்த கதையை “இன்னொருதரம் சொல்லுமா!” என்று பலமுறை கேஞ்சி, எத்தனையோ முறை அவர்கள் அதைக் கூறக் கேட்டு கண்ணீரோடு அதை ரசித்திருக்கிறான்.

‘இங்கே ரொம்ப வலிச்சுதாமா?’ என்று அவன் அம்மாவின் வயிற்றைத் தன் பிஞ்சு விரல்கள் கொண்டு அமுக்கிவிடுவான்; ஒவ்வொரு முறை அவன் அமுக்கும் பொழுதும் அவன் தாய் கிளுகிளுவென்று சிரித்துக் கொண்டே பதில் கூறுவாள், ‘அந்த ஆனந்த வலியில் பிறந்தவன்தான் இந்தச் செல்லப் பையன்!’ என்று. அந்த அழகிய கண்களில் வழியும் ஆனந்தத்தை ரசிக்கவே அவன் ஒன்ஸ் மோர் கேட்பான். அவை எல்லாம் அவன் மனதிற்குள் ஆழமாய்ப் பதிந்து போன காட்சிப் பதிவுகள்!
அதனால்தான் அவனுக்கு நினைவுகள் திரும்பிய அந்த வினாடியே அவை எல்லாம் அவன் மூளைக்குள் சட சடவென்று கொட்டத் தொடங்கிவிட்டன.

அன்று அவர்களின் டிஎன்ஏ விலிருந்த ஜீன்ஸ் வழியாகப் பொதிந்து அனுப்பிய பாசத்தைத் தான் இன்று அவனுடைய குழந்தை மேல் பூக்களாய் அள்ளித் தெளிக்கிறானோ? உடனே தன் மடியில் தலை சாய்த்திருந்த தன் குட்டி தேவதையை அவன் பார்க்க அது அவனைப் பார்த்துச் சிரித்தது. 'அப்படி என்றால் என் மனைவி சிந்து எங்கே? அவள் எங்கே ஓடி மறைந்தாள்???'

பல நினைவுகள் ஒன்றாய் வந்து அவன் அடைத்து வைத்திருந்த மூளையின் கதவுகளை கடந்த ஒரு வாரமாகத் தட்டத் தொடங்கி இருந்தன! கணினியில் உள்ள செர்ச்சிங்க் மோட்,,,,போல அத்தனை செர்ச் எஞ்சின்களும் அவன் மூளையில் குறுக்கும் நெடுக்குமாய் ஓட, டாக்டர் தாரா வீட்டில் இல்லாத நேரம் அவன் தன் மூளையை ‘சர்ச்சிங்க் மோடில் போட!!! மூளை பலமணி நேரங்கள் ஸ்தம்பித்துப் போனதுதான் மிச்சம். பல நினைவுகள் இன்னும் அவனுக்கு எட்டா தொலைவிலேயே கும்மிருடிற்குள் ஒதுங்கி இருந்தன!

அவனுடைய மூளையின் முழுத் தேடலிலும் அவனை ஆச்சரியப்பட வைத்த ஒரே விஷயம், அவன் தன் பெற்றோரோடு இளமை முதல் இணைந்து வாழ்ந்த காட்சிகளும்; அவர்களோடு தன் வாழ்க்கை பற்றி கலந்து பேசிய காட்சிகளின் வீடியோக்களும் மட்டும்தான் தன் ஞாபகத் தேடலில் அவனால் பெற முடிந்தது என்பதுதான்!

அதன் மூலமே, அவன் வேலை பார்த்த இடம் டில்லி, மனைவி பேர் சிந்துஜா போன்ற ஞாபகத் துளிகளை அவனால் பெற முடிந்தது. ஆனால் அவளோடு அவன் கலந்து வாழ்ந்த வாழ்க்கை எங்கே? அவன் குழந்தைப் பவியைப் பற்றிய நினைவுகள் எங்கே? அதை ஏன் அவன் மூளை முற்றிலுமாக மறைத்து வைக்கிறதென்று அவனுக்குப் புரியவில்லை!

அவன் தன் சிந்து இல்லாமல் பவியை மட்டும் தூக்கிக் கொண்டு தன் தாயை சந்திக்க கோவை செல்லும் ரயிலில் பயணித்திருக்க முடியாது! தாராவும் அவனும் நம்புவதுபோல் அவள் அந்த ரயில் விபத்தில் இறந்து போயிருக்கலாமோ! அப்படி இல்லை என்றால் அவள் எங்கே? என் சிந்து, பூமிக்குள் காணாமல் போன சரஸ்வதி நதியைப் போல் பூமியின் கீழ் எங்கோ ஓடி மறைந்து விட்டாளா? ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் டில்லியில் வேலை பார்த்துள்ளான் என்பது அம்மா பற்றிய ஞாபகங்களில் அவனுக்குக் கிடைத்த செய்தி!

அந்த நினைவுகளோடு கணினியோடு இணைந்து வரும் பல சொற்கள் அவன் ஞாபகத்தில் உருண்டன! உடனே ஃபைல்ஸ், ஃபோல்டர்ஸ், ஈமெயில், இன்டர்னெட், பாஸ்வெர்ட்,,, இப்படி நிறைய ஃபைல்கள் அவன் மூளையில் கொட்டத் தொடங்கின!

மென்துறையில் டெவலப்மென்ட், ஆட்டமேஷன், ப்ரோக்ராம்ஸ், யூகே பேங்க், கிளையண்ட்ஸ்,,,பொறு! பொறு மனமே ஓடாதே! இப்பத்தான் உன் மூளை நடை பழகுது! தொலைந்த ஞாபகங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் டவுன்லோட் பண்ணுவதற்காகத் தலை தெறிக்க ஓடினால் தலை வலிக்கத் தொடங்கிவிடும்! அவன் மூளை அவனுக்குச் சரியான புத்திமதி கூற, அந்த ஜன்னலை மூடாமல் அதை தானியங்கி மோடில் போட்டுவிட்டுத், தன் மூளை என்னும் கணினியில் அடுத்த ஜன்னலைத் திறந்து வைத்தான்.

அவனுக்கு நினைவுகள் திரும்புவது டாக்டர் தாராவிற்குத் தெரியும். தான் பிறந்து வளர்ந்த ஊர், தன் பெற்றோரோடு வாழ்ந்த வாழ்க்கை எல்லாம் அவன் மூளையின் ஞாபக மாண்டலத்தில் சேர்ந்துவிட்டதைக் அவளிடம் கூறி இருந்தான். ஆனால் சிந்து; அவனுடைய டில்லி வாழ்க்கை; அதைப் பற்றிய குறிப்புகள் அனைத்தும் 0 எண் பிட்டுகளிலேயே(0bytes) இருந்ததையும் தாராவிடம் கூறி இருந்தான்.

தன் தாயை சந்திக்க கோவை செல்ல வேண்டுமென்று அவன் மனம் பரபரத்தது! ஆனால் தாரா, அனைத்து நினைவுகளும் திரும்பிய பின் போகலாம் என்று அவனை ஆறுதல் படுத்த முயன்றாள். ஆனால் அவன் மனம் அடங்கவில்லை!

படக்கென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்ற கூகுளை பல கேள்விகளோடு துலாவத் தொடங்கினான். உடனே தன் மடிக்கணினியைத் தூக்கித் தன் மடியில் கிடத்திக் கொண்டு நோண்டத் தொடங்கினான். அவன் அந்த ரயில் விபத்திற்குப் பின் மயக்கத்திலிருந்து கண் விழித்த பொழுது தன் பழைய ஞாபகங்களை எல்லாம் மறந்து, உடலும், மனமும் தேற பல நாட்கள் படுக்கையில் கிடந்திருக்கிறான்.

வீட்டிற்கு வந்தவுடன் அவன் குழந்தை என்று பவியை அறிமுகம் செய்ய அதை அவன் மனம் எந்தவிதக் கேள்விகளும் கேட்காமல் ஏற்றுக் கொண்டது!
அதன் பின் தான் யார்? எங்கிருக்கிறோம்? இதற்கு முன்னால் என்ன செய்து கொண்டிருந்தோம்?’ என்ற எந்தவித நினைவுகளுமின்றி, தாராவின் உதவியோடு பல வேலைகளை அவனால் மிக எளிதாகக் கற்றுக்கொள்ள முடிந்தது! அதிலும் மடிக்கணினி அவன் மடியில் ஒரு குழந்தை போல் விளையாடியது!

“கண்ணா உனக்கு வந்திருப்பது செலக்டிவ் அம்னிஷியா!” அதனால் பலவற்றை நீ மறந்திருந்தாலும் அந்த நினைவுகளின் செயல்வடிவம், தானே வந்து உன் மூளையின் ஒரு மூலையில் இருந்து கொண்டு ஒண்டிக்குடித்தனம் செய்யும்! அதில் இந்த மடிக்கணினி ஆப்பரேஷனும் அடங்கும்!” என்று தாரா ஒரு விளக்கஉரை கொடுத்திருந்தாள்.

அதில் அவனுக்கு என்ன ஆச்சரியம் என்றால் அவனுடைய பேச்சுமொழி மறக்கவில்லை, அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகள் மறக்கவில்லை. ‘சித்திரமும் கைப்பழக்கமும்; செந்தமிழும் நாபழக்கமும் போல’ தன் பவியைக் கவனிப்பது, மடிக்கணினியில் விளையாடுவது, இவை இரண்டும் அவனுக்கு மிகவும் சர்வசாதாரணமாக வந்தது.

குழந்தை பவியின் மேல் அவனுக்கு அளவுக்கதிகமான பாசம்! கங்காரூ தன் குட்டி வளர்ந்த பின்னும் அதைத் தன் வயிற்றுப் பையில் சுமப்பது போல, தாய்ப்பூனை தன் குட்டிகளைப் பத்திரப்படுத்த தன் வாயில் கவ்விக் கொண்டே திரிவது போல அவன் அந்தக் குழந்தையைக் கவ்விக் கொண்டே திரிந்தான் என்பதுதான் உண்மை.

தாரா அவனுக்கென்று ஒரு பேங்க் அக்கவுன்ட் ஒப்பன் பண்ணி, அதில் தாராளமாகப் பணமும் போட்டு, பேங்க் ATM டெபிட் கார்டை எப்படி உபயோகிப்பது என்பது வரை அனைத்தையும் சொல்லிக் கொடுத்திருந்தாள். ஆனால் அன்றுவரை அதை அவன் உபயோகித்தது இல்லை! அவனும் குழந்தையும் விளையாட ஒரு மொபைல் ஃபோனும் அவனிடமிருந்தது. அதில் தாராவின் நம்பர் மட்டுமே உண்டு.

இப்பொழுது நினைவுகள் திரும்பத் தொடங்கியவுடன், பெற்றோர் பற்றிய ஞாபகத்தோடு இணைந்து வந்த தன் மனைவி சிந்துவைத் தேடி உடனே டில்லி செல்ல வேண்டும் என்று மனம் பரிதவித்தது. தாரா கண்டிப்பாய் அதை ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்று அவனுக்குத் தெரியும்.

இன்டர் நெட்டில் ரயில் டிக்கெட் பதிவுகள், தட்காலில் ரயில் டிக்கெட்பதிவு செய்வது என்று பலவற்றை அந்த வாரத்தில் ஒரு நாள் பேச்சுவாக்கில் தாராவிடமிருந்தே தெரிந்து கொண்டான்.

அவன் மூளையில் ஒரு யோசனை பளிச்சிட தாரா இல்லாத நேரம் தன் செயல் திட்டத்தில் இறங்க நினைத்தான். தன் மனதில் இதுபோல் தோன்றும் பல செய்திகளை அவளிடமிருந்து லாவகமாய் மறைக்கக் கற்றுக் கொண்டான்.

முதலில் அவன் சிந்துவை சந்திக்கச் செல்வதற்கு அவனிடம் வலுவான காரணம் இருப்பதாக அவன் மூளை கூற, தாராவிற்கு சற்றும் சந்தேகம் வராத வண்ணம், அன்று காலையிலேயே சென்னையிலிருந்து வாரங்கல், நாக்பூர் இட்டார்சி, வழியாக இரண்டு இரவு ஒரு பகலில் டில்லியைக் காலையில் அடைந்துவிடும் க்ராண்ட் ட்ரங்க் துரித வண்டியில் டூ டயர் ஏசி கோச்சில் பயணச் சீட்டை தட்காலில் புக் பண்ணிவிட்டு, பதுங்கிப் பதுங்கிச் செல்லும் திருட்டுப் பூனை போல் தாரா மருத்துவமனை புறப்படுவதற்காகக் காத்திருக்கத் தொடங்கினான்.

இதோ அவளும் மருத்துவமனை கிளம்பப் போகிறாள்! மனம் படபடவென்று அடித்துக் கொள்ள, அவளின் அந்த புறப்படும் நிமிடத்திற்காகக் காத்திருந்தான். என்றும் இல்லாத வேகத்தில் அவனுடைய நேற்றியின் உயிர்நாடியும், இதயமும் வேகமாய்த் துடிக்கத் தொடங்க,

தாராவின் மனதிற்குள்ளோ அவளை அறியாமல் ஏதோ ஒரு சங்கடம் அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது! தொடரும்Comp story UKKUM IMG-02.jpg
 
Top