Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 11

Advertisement

என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 11

அத்தியாயம் 11

சற்றே தெளிவாயிருந்த கௌதமிடம் தாமரை பேசத் தொடங்கினாள். கௌதம், “அந்த மறந்து போன கதை தானாகவே ஒருநாள் மூடியிருக்கும் உங்கள் மனக்கதவைத்,,,தட்டும். பிறக்கப் போற குழந்தையைப் பத்திக் கவலைப்படாம இப்ப பிறந்த குழந்தைக்குப் பேர் வச்சு வளர்க்கலாம்!” என்று தாமரை கூற, தன் தாயிடமிருந்து தன் கதையைத் துவங்கினான் கௌதம்.

“அம்மா!” என்று நான் அழைக்கும் பொழுதே எனக்குள் ஆயிரக்கணக்கான வார்த்தைகள் முட்டிமோத ஆரம்பிச்சிரும்! எங்கேயிருந்து ஆரம்பிச்சு எங்கே முடிக்கிறதுனே எனக்குத் தெரியலை தாமரை.

நான்; என் அம்மா; அவர்கள் வேலை பார்த்தத் தபால் நிலையம்; என் தந்தை வேலை பார்த்த கோவை ரயில்வே சந்திப்பு; மற்றும் இவை இரண்டையும் இணைக்கும் அந்த நடை மேம்பாலம்; இவை அனைத்தும் என் வாழ்க்கையிலிருந்து பிரிக்கமுடியாதவை. கோவை மணிக்கூண்டில் இறங்கி இடப்பக்கம் திரும்பி கொஞ்சம் வளைந்து நெளிந்து நடந்து சென்றால் கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய தபால் நிலையம் வந்துவிடும்.

மணிக்கூண்டிலிருந்து நேராகச் சென்று இடப்புறம் வளைந்தால் கொஞ்ச தூரத்தில் கோவை சந்திப்பு வந்துவிடும். இவை இரண்டையும் பிரித்தது, மிகப் பெரிய கோவில்களும், அதை ஒட்டிய பள்ளிக்கூடங்களும், பல வார்த்தக நிறுவனம்களும்தான்.

இந்தப்பக்கம் தபாலாபிசிலிருந்து, அந்தப் குறுக்கு மேம்பாலப் படிகளில் ஏறி, அதில் சிறிது நடந்து சென்று அந்தப் புறம் உள்ள படிகளில் இறங்கினால் கோவை ரயில்வே சந்திப்பை மிகவும் குறுகலான தூரத்திலும், நேரத்திலும் அடைந்துவிடலாம். இரண்டு அலுவலகத்துக்குமான மிகச் சிறந்த ஷார்ட்கட், அந்த மேம்பாலம்! ஆனால் வாழ்க்கையிலிருந்து பல சுவையான இடங்களும், சம்பவங்களும் கால ஓட்டத்தில் அழிந்து போவது போல் நான் டில்லி சென்ற இரண்டே வருடத்தில் அந்த மேம்பாலமும் கோவை மேப்பிலிருந்து தொலைந்து போனது!

அந்தப் பாதை அடைபட்டு, பல மேம்பாலங்களும், சுரங்கப் பாதைகளும் உருவாக்கப்பட்டிருந்தாலும்; அந்த மேம்பாலம், என் பெற்றோரோடு இணைத்து, என்னையும் கை பிடித்து அழைத்து வந்த அந்த வாழ்க்கைப் பாதை மிகவும் சுவையானது.

“என்னுடைடைய மிகச் சிறுவயதில் இந்த இரண்டு அலுவலகத்திற்கும் நடுவில் முதன்மைச்சாலையிலிருந்த பாலர்பள்ளியில் நான் படிக்க,

மூணு மணிக்கெல்லாம் பள்ளி விட்டவுடன் என்னை என் அப்பா, அம்மா யாராவது ஒருவர் வந்து அழைத்துச் சென்றுவிடுவார்கள். எனக்கு அப்ப மிஞ்சிப் போனா ஒரு அஞ்சு வயசிருக்கும்! நாம திருவிளையாடல் படத்தில் பார்ப்போமே முருகக் கடவுள் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு பழனிமலையில் ஏறி ஆண்டி உருவில் நின்னார்னு!

அதே மாதிரி ஒருநாள் நானும் என் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு என்னோட ஸ்கூல் யூனிஃபார்ம் ட்ரெஸ்ஸையெல்லாம் கழட்டி எறிந்துவிட்டு, வெறும் ஜட்டி, ஷாக்ஸ், ஷூ, டை, மட்டும் அணிந்து கொண்டு அந்த மேம்பாலத்திலேறி ஒரு மூலையில் அமர்ந்து கொண்டேனாம்!” என்று சொல்லிவிட்டு கௌதம் விழுந்து விழுந்து சிரிக்க, தாமரையும் அந்தக் காட்சியை நினைத்து சிரிக்கத் தொடங்கினாள். பவியும் அவர்கள் சிரிப்பதைப் பார்த்து அதுவும் கைகொட்டிச் சிரிக்கத் தொடங்கியது!

“நல்ல வேளை சார் ஜட்டியோட இருந்தீங்க! கோமணமா இருந்திருந்தா கையில் ஒரு வேலையும் கொடுத்து ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரானு! பக்தர்கள் ’பக்த கோஷங்கள்' எழுப்பி உங்களைக் கும்பிட ஆரம்பிச்சிருப்பாங்க!” என்றவள்,

“ஆமாம் சாருக்கு என்ன அப்படி ஒரு கோபம்!?” என்று தாமரை கேட்க,

“அந்த வயசுக்கு அது ரொம்ப ஞாயமான கோபம் தாமரை! ஸ்கூல் விட்டப்புறம் 3.30 க்குள்ள எல்லாப் பசங்களையும் அவங்களோட பெற்றோர் வந்து கூட்டிட்டுப் போயிருவாங்க; ஆனா அன்னைக்கு அஞ்சு மணி ஆகியும் என்னை யாருமே கூப்பிட வரலை! நேரம் ஆக ஆக எனக்கு பயம் வந்து; அப்படியே வந்த அழுகையை அடக்கி அடக்கி எனக்கு முகமே வீங்கிப் போயிருச்சு! வாச்மேன், டீச்சர்ஸ், அங்கு வேலை பார்க்கும் ஆயா என்று ஒவ்வொருவராக வந்து துக்கம் விசாரிக்க, என்னுடைய துக்கம் குறையாம கூடிக்கிட்டே போய், ஒரு கட்டத்தில் நான் கதறி அழுவதற்குப் பதிலாய் அப்படியே மயங்கி விழுந்துவிட்டேன்.

இரவு வேலை முடித்துச் சென்ற அப்பா அப்படியே கண்ணயர்ந்து தூங்கி; என்னை அழைக்காமல் கோட்டைவிட, என்னோட அம்மாவோ, வேலைப் பளுவின் காரணமா, சீட்டைவிட்டே நகர முடியாமல் போக; இவர்களுக்கிடையில் அந்தப்பாலகன் மாட்டிக் கொண்டான், முழிப்புத்தட்டிய அப்பாவுக்கும், வேலையில் என்னை மறந்த அம்மாவுக்கும் ஒரே நேரத்தில் பையனைப் பற்றிய ஞானம் வர, இருட்டத் தொடங்கிய நேரம் ரெண்டு பேரும் என் பள்ளிக்கு ஓடி வந்தார்கள்.

மயக்கம் தெளிவிக்கப்பட்ட நான் முழு கோபத்தில் ‘இனி பள்ளி சீருடையையே அணியப் போவதில்லை, பள்ளிக்கே போகப் போவதில்லை’

என்று சிறுபிள்ளைத்தனமான முடிவெடுத்து, அவர்கள் கேட்ட நூறு மன்னிப்புகளுக்கும் மனமிறங்காதவனாய், பள்ளி சீருடையைக் கழட்டி எறிந்துவிட்டு, அவர்கள் கையிலிருந்து என்னைப் பிய்த்துக்கொண்டு ஓடி, மேம்பாலத்தில் ஏறி, ஜட்டி அணிந்த ஒரு ஆண்டியாய் அமர்ந்துவிட்டேன்.

இவ்வளவுக்கும் நான் அழவில்லை! என் அப்பாதான் முதலில் ஓடிவந்தார்! என்னைக் கையில் தூக்க அவர் எவ்வளவோ முயன்றும் நான் முரண்டு பண்ணவே என் அருகில் அந்த மேம்பாலத்தில் அமர்ந்து கொண்டவர்,

“சாரிடா கண்ணா, அப்பா ராத்திரி ஃபுல்லாத் தூங்காம வேலை பார்த்துவிட்டுப் போய்த் தூங்கியதில் கொஞ்சம் அசந்து தூங்கிவிட்டேன் ராஜா! அப்பாவை மன்னிக்கமாட்டியா? நீ எப்படி, பயந்து, தவிச்சு, கதறி அழுதிருப்பேன்னு எனக்குப் புரியுதுடா? உண்மையாகவே அவர் கண்களில் கண்ணீர் கட்ட, இனிமேல் இப்படி உன்னைத் தவிக்கவிடமாட்டேன்!” என்று என்னை அவர் நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டார்! வேகமாய்த் துடித்த அவர் இதயத்த்தின் ஒலி என் காதில் லப் டப், லப் டப் என்று ஒலிக்க, நான் நீர் நிறைந்த அவர் கண்களைப் பார்த்தேன்!

அவ்வளவுதான் அதுவரையிலும் நான் அடக்கி வைத்திருந்த கண்ணீரை எல்லாம் தாரை தாரையாய் கொட்டி, “அப்பா! எனக்குப் பயமா இருக்குப்பா! என்னை விட்டுட்டுப் போயிராதப்பா!” என்று ஏங்கி ஏங்கி அழத் தொடங்கினேன். அதற்கிடையில் என் அம்மாவும் எங்களோடு வந்து சேர்ந்து கொண்டார்!

“ஒரு நாள் லேட்டானா உன்னை மறந்திருவமா என்ன!?” என்று என் அம்மா கண்ணீரைத் துடைக்க!

“நீ போமா நான் உன்னோட டூ! நீயாவது என்னைக் கூப்பிட வந்திருக்கலாம் இல்லையா!?” என்ற ஒரு ஞாயமான கேள்வியைக் கேட்டுவிட்டு,

“போங்க உங்க ரெண்டு பேருக்குமே கௌதம் மேல பாசமே இல்லை! என்று நான் முகத்தைத் திருப்பிக் கொள்ள,

“நீ இப்பச் சின்னக் குழந்தைடா கண்ணா! பெற்றோருக்கு அலுவலகங்களில் இருக்கும் பணிச்சுமை குழந்தைகளுக்குப் புரியாது! இராத்திரி ஃபுல்லா அப்பா தூங்காம முழிச்சிருந்து வேலை பார்த்திருக்கார்! நீதான் அந்த தபாலாபிசில் வந்து அம்மா படும்பாட்டைப் பார்த்திருக்க இல்லையா! பொது ஜனங்களோடு வேலை பார்க்கும் பொழுது, அவங்களை வரிசையில் நிப்பாட்டி வச்சிட்டு உன்னைக் கூப்பிட ஓடி வந்திருந்தா, அப்பா அனுப்பிய பார்சல் உன்னோட அத்தை பொண்ணு தர்ஷி அக்காவுக்குப் கிடைத்த கதை மாதிரித்தான் போயிருக்கும்!” என்று அம்மா கூற,

கதைன்னு என் அம்மா சொன்னவுடன் என் கோபம் சூரியனைப் பார்த்த பனித்துளிபோல், உடனே வழிந்து ஆவியாகிப் போனது!

“அது என்ன கதை சொல்லுமா! சொல்லுமா!” என்று அந்தப் படியிலேயே நான் அம்மா மடியில் படுத்துக் கொள்ள, அப்பா வெட்கத்தில் என் பிஞ்சுக் கரத்தை எடுத்து அவர் முகத்தை மூடிக் கொண்டார்.

“நீ இப்ப உன்னோட சீறுடையைப் போட்டுக்கிட்டு எங்களோட ஸ்கூல் பையனா ஜம்முனு வந்தா வீட்டுக்குப் போனவுடன், இன்னைக்கு ராத்திரி அம்மா அந்தக் கதையை சொல்வேனாம்!” நான் உடனே குதித்துக் கொண்டு என் சீருடையை அணிந்து கொள்ளத் தொடங்கினேன்.

“அந்த தர்ஷி கதைதான் என் தாயும் தந்தையும் காதலில் விழுந்த அவர்களின் முதலாம் சந்திப்பு. இந்தக் கதைகள் அனைத்தும் என் மனதில் பலமுறை பல வயதுகளில் பல பரிமாணங்களில் புரட்டப்பட்டவை! நாம் சிறுவர்களாயிருக்கும் பொழுது நம் புரிதல்கள் வேறாயிருக்கும், வயது ஏற ஏற அந்தப் புரிதல்கள் மாறுபடும், அதற்கேற்றவாறு நம் மனம் வரையும் அந்த 3D காட்சிகளும் மாறுபடும்.

நான் ஒரு வாலிபனான பின்புதான் பல கதைகளை அதன் உண்மையான அர்த்தத்துடன் புரிந்து கொள்ளத் தொடங்கினேன்.

ஆசிரியர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் படகோட்டும் பெண் பூங்குழலி பாடுவதா ஒருபாட்டு வருமே?

“அலைகடலும் ஓய்ந்திருக்க, அகக்கடல்தான் பொங்குவதேன்?” என்று “அந்த வரிகளில் கிடைக்கும் உள்மனப் பேரின்பம் வயதுக்கு வயது மாறுபடும், அது போல்தான் என் பெற்றோரின் அழியாத கோலங்களாய் என் மனதில் வரையப்பட்ட அவர்களின் காதல் ரங்கோலிகள்!

தாமரையிடம் அவன் முதலில் இறக்கி வைத்த சுவையான சம்பவம் கற்பகத்தின் தபாலாபிசில் அவருக்கும் அவன் தந்தை விசுவுக்கும் இடையில் நடந்த அவர்களின் முதலாம் சந்திப்பு!

என்னோட அம்மா கற்பகம் கோவையில் தலைமை தபால் நிலையத்தில் வேலை பார்த்த பொழுது, அப்பா விசு முதலில் கோவைக்கு அருகில் சின்னச் சின்ன ரயில் நிலையங்களில் எல்லாம் உதவி ஸ்டேஷன் மாஸ்டரா வேலை பார்த்துவிட்டுக் கடைசியா கோவை ரயில்வே சந்திப்பிற்கு ஒரு ஸ்டேஷன் மாஸ்டரா வேலை மாற்றல் வாங்கி வந்துள்ளார்.

அம்மா தினம் பஸ் புடிச்சு கோவை மணிக்கூண்டில் இறங்கி, அருகிலிருக்கும் தபால் நிலையத்துக்கு நடந்து போய் வந்திருக்காங்க. அந்தத் தபாலாபிசின் அருகில் ஒரு பெரிய பெண்கள் பள்ளியும் உண்டு.

அங்கே அருகிலிருந்த, ஒரு குறுக்கு மேம்பாலத்தில் ஏறினா ஊரைச் சுற்றி வராம நேரா கொவை ஜங்க்ஷனுக்கு அருகில் வந்துவிடலாம் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறார்கள். ஆனாலும் அந்த வாலிபவயதில் அதில் தனியாப்போகப் பயம். ஆனால் ஒரு தடவையாவது அந்த மேம்பாலத்து மேல் நடந்து போய் அந்த ரயில்வே சந்திப்பை பார்க்கணும் என்பது என் அம்மாவின் அளவிட முடியாத ஆசை! ஆனால் அந்த ஆசை கனவாவே இருந்திருக்கு!

ஒருநாள் ஸ்டேஷன் மாஸ்டர் விசு அந்த தபால் நிலையத்துக்கு அரக்கப் பரக்க ஓடிவந்திருக்கார். அங்கே கூண்டுக்குள் கண்கள் மட்டுமே தெரியக் கூடிய கவுண்டரில் அந்தப் பக்கம் அம்மா! இந்த பக்கம் அப்பா!, முகநூலில் வரும் கான்வர்சேஷன் ஸ்டார்ட்டர் போல அம்மாதான் முதலில் உரையாடலை தொடங்கி வச்சிருக்காங்க

“என்ன சார் எதையாவது தொலைச்சிட்டுத் தேடுறிங்களா? வழிவிட்டா வரிசையில் நிக்கிற அடுத்த ஆளுக்கு ஸ்டாம்போ, கவரோ, என்ன தேவையோ கொடுப்பேன், இப்படி நந்தி மாதிரி நடுவில நின்னா எப்படி!?”

“என்ன தேவைனாலும் கொடுப்பீங்களா?” என்று அப்பா முனங்கியது அம்மா காதிலும் விழுந்திருக்கு! ‘வாடா மவனே உனக்குப் புளியவிளாறு ரெடியா இருக்குனு!’ அம்மா அவருக்குக் கேட்கும் தொணியில் கூற,

விசுக்கென்று தலையை உய்ரத்திய விசு, “ஈசனை அவ்வளவு ஈசியாப் பார்க்கக் கூடாதுன்னுதான் நந்தி தேவர் நடுவில மாடு ரூபத்தில் படுத்திருக்கார், நான் எதுக்காக உங்களை மறைக்கணும், நீங்க என்ன பெரிய ஈசனா? உங்களைத் தான் ஏற்கனவே கூண்டுக்குள்ள போட்டு அடைச்சு வச்சுருக்காங்களே!?” என்று அவர் பதில் கூற, விசுவின் பேச்சில் கற்பகத்தின் கோபம் கொதி நிலையைத் தொட்டாலும், அதைக் கண்களில் மறைத்தவர்,

“அப்ப உங்களை மாதிரித் துள்ளித் திரியும் காளைகள்கிட்ட இருந்து எங்களை எப்படி சார் பாதுகாத்துக்கிறது, அதுக்குத்தான் இந்தக் கூண்டு!” என்று அம்மாவின் பதிலடியில், வரிசையில் நின்ற மற்ற கனவான்களும், யுவதிகளும் உச்சுக் கொட்டத் துவங்கி உள்ளனர்!

“சார் நீங்க வரிசையிலிருந்து விலகி நில்லுங்க, நான் மத்தவுங்களுக்கும் பதில் சொல்லணும்!” என்று கற்பகம் குரல் உயர்த்திக் கூற,

“ஒரு பெஞ்சு வேணா போடுங்க மேடம்! ஸ்கூலில் ஒரு குழந்தைக்குக் கொடுக்கும் தண்டனையா நினைச்சு நான் அதுல ஏறி நின்னுக்கிறேன்!

“காலங்காத்தால கழுத்தறுக்கிறதுக்குனே வர்றானுங்க!!!” என்று முணங்கிக் கொண்டே, “உங்களுக்கு என்ன சார்! வேணும்? என்று அம்மா கேட்க,

“போஸ்ட் மாஸ்டர் தாயே!!! என் அக்கா பொண்ணுக்கு உடனே இந்த ட்ரெஸ் பார்சலை அனுப்பணும் இந்தாப் பாருங்க பார்சல் ரெடி, ஆனால் அட்ரசைத் தொலைச்சுட்டேன், ஐயோ இந்தப் பார்சல் நாளைக்குப் போய் சேரலைனா,,, நினைக்கவே பயமா இருக்கே???”

“என்ன உங்க அக்கா பொண்ணு ட்ரெஸ்ஸே போடாம போயிருவாங்களா?” என்று கற்பகம் தலையில் அடித்துக் கொள்ள,

“சரியா சொன்னீங்க மேடம், எங்க தர்ஷிக்கு இப்பத்தான் ரெண்டு வயசு முடிஞ்சு மூணு வயசு தொடங்குது, இந்த பார்சல் போய் சேரும் வரை அது அவங்க வீடு இருக்க ரோடெல்லாம்,

“எங்க மாமா எனக்குப் பிறந்த நாள் ட்ரெஸ் பார்சல் அனுப்புவாரே!” என்று, லவுட் ஸ்பீக்கர் இல்லாமலே பாட்டுப் பாடிவிட்டு பார்சல் கிடைக்கும் வரை அம்மணமாத்தான் திரியும்!” என்றவர்,

“அவங்க இருக்க அப்பார்ட்மென்ட், தெரு பேர், பின் கோடெல்லாம் சரியா எழுதலைனா கரெக்டா போய் சேராது!” என்று கூறிவிட்டுத், தன் ஷெர்ட், பேன்ட், பாக்கெட்டெல்லாம், இன்சைட் அவுட்டாக அவர் கொட்டித் தேட, அவர் பாக்கெட்டிலிருந்த பேப்பர் துண்டு ஒன்று பறந்து போய் கச்சிதமா அம்மா முகத்தில் அமர, அப்பா அதே! அதே! என்று கவுண்டர் வழியாக கைவிட்டு, அம்மா முகத்தைத் தடவி பேப்பர் துண்டை எடுக்க முயல,

தட்டுத் தடுமாறி ஓடிக் கொண்டிருந்த மண்டை பெருத்த உஷா ஃபேன் காற்றை ஊதி, ஊதி அதை மேலும் பறக்கவிட, அங்கே வரிசையில் நின்றவர்கள் ஒருவரோடு ஒருவர் முட்டி மோதி இடித்துக் கொண்டு அந்த துண்டு பேப்பரை விரட்டிச் செல்ல, அந்தக் கண்ணாடிக் கூண்டுக்குள்ளிருந்த அம்மாவின் கையோ அப்பாவின் கரத்தில் வசமாக மாட்டிக் கொண்டது! அவ்வளவுதான் இருவர் மனதிற்குள்ளும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து வயலின் வாசிக்கத் தொடங்கிவிட்டனர்.

“அக்கக்கோவ் கை கை மலர் கை, அம்மம்மோவ் கை மேல் கை வை
இது இருவர் தழுவும் மலர்கை, இந்த இரு கை இணைந்தால் வாழ்க்கை!”


அப்பா அம்மா இருவருமே அந்தக் காலத்தமிழ் சினிமா பாடல்களின் பைத்தியங்கள், இருவருடைய காதலும் அந்தத் தமிழ் சினிமாப்பாடல்களில் துவங்கி அதிலேயே வளர்ந்தது என்றுதான் கூறணும். அவர்கள் காதல் பிறந்தது தபால் ஆபிஸில் என்றாலும் அது தவழ்ந்து, வளர்ந்து, நடந்து, ஓடி விளையாடியது எல்லாம் அம்மாவுக்கு மிகவும் பிடித்த இரும்பினால் கட்டப்பட்ட அந்தக் குறுக்கு மேம்பாலத்தில்தான்.

மறுநாள் அப்பா, ஒரு 25 பைசா என்வலப் வேண்டுமென்று போஸ்ட் ஆஃபிஸ் வந்துள்ளார். கூட்டமில்லாத நேரமாப் பார்த்து வந்தவர் அங்கேயே அமர்ந்து ஒரு பேப்பரில் ஏதோ எழுதிவிட்டு அதை அந்தக் கவரில் போட்டு அம்மாவிடம் கொடுத்து இதுல கொஞ்சம் முகவரி எழுத முடியுமானு கேட்டிருக்கார்!

“என்ன சார் கொழுப்பா? ஏன் முகவரி எழுத உங்க பேனாவில் மை இல்லையா?” என்று கோபமாய் அம்மா கேட்க,

“இல்லங்க மேடம் என் மனதைக் கவர்ந்த பெண்ணைப் பற்றி எழுத பென்னில் மையில்லை! நான் பக்கத்துல இருக்க ரெயில்வே சந்திப்பில்தான் ஒரு ஸ்டேஷன் மாஸ்டரா ஒர்க் பண்ணிட்டிருக்கேன்!” என்று அப்பா கூற,

“ஹா! ஹா! கொடி ஆட்டுற வேலையா?” என்று அம்மா நக்கலா சிரித்தாலும், அவங்களுக்கு உடனே போஸ்டாபிசிலிருந்து செல்லும் அந்த ஷார்ட்கட் மேம்பாலம்தான் ஞாபகத்தில் வந்திருக்கு!

“என்னை அந்த மேம்பாலம் வழியா அந்த ரயில்வே சந்திப்புக்குக் கூட்டிட்டு போறேன்னு சொல்லுங்க, நான் முகவரி எழுதித் தர்றேன்?” என்று வெள்ளந்தியாய் விழி அகலத்தானாகவே அந்தப் புறா அவர் கரங்களில் விழ, அதைப் பத்திரமாகத் தன் கரங்களில் அள்ளிக் கொண்ட என் தந்தை!

“வார்த்தை தவறக் கூடாது, இன்னைக்கு மாலை நான் அந்தப் பாலத்தின் கீழ் காத்திருப்பேன், அந்த கவரில் நீங்க எழுதப் போறது உங்க வீட்டு முகவரியைத்தான்! வேணும்னா என் கையோடு கை கோர்த்துக்கிட்டு

கையோடு கை சேர்க்கும் காலங்களே!
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்!


என்று என்னோடு பாடிக்கொண்டே அந்த மேம்பாலத்தின் மீது நடந்து வரலாம், இல்லை ஒரு வழிப்போக்கனா என் கூட நடந்து வரலாம்!” என்று பளிச்சென்று கூறிவிட்டு, அவர் சென்றுவிட, என் தாய் அதிர்ச்சியில் அவர் கொடுத்துவிட்டு சென்ற முத்திரை குத்தப்படாத கடித உரையோடு அமர்ந்திருப்பதைப் பார்த்த ப்யூன்,

எப்பொழுதும் படபடவென்று பொரியும் அஞ்சலகத் தலைவி, அமைதியாய் அமர்ந்திருப்பதைப் பார்த்து,

“மேடம் என்ன முகவரி எழுத மறந்துட்டிங்களா? எழுதிக் குடுங்க அஞ்சல் டப்பாவில போட்டுட்டு வர்றேன், ஈவ்னிங்க் கிளியரன்சில் உங்க லெட்டரும் போயிரும்!” என்று மேலும் அவன் பங்குக்கு அவர்களின் ரத்தக்கொதிப்பை ஏற்றிவிட்டுச் செல்ல,

“இல்லப்பா நானே போஸ்ட்பண்ணிக்கிறேன், ‘அந்த லூசு என்ன எழுதியிருக்கோ தெரியல?’ என்று பயந்து கொண்டே கவரைப் பிரிச்சிருக்காங்க அம்மா!

“சந்திப்போமா இன்று சந்திப்போமா
தனிமையில் நம்மைப்பற்றி சிந்திப்போமா???,,,
மயக்கத்தில் உலகை சுற்றுவோமா?
மணவரையில் கை பற்றுவோமா?
முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா,
முத்து சிப்பி போலே சிரிப்போமா?”


அந்த பாடல் வரிகளைத் தொடர்ந்து அப்பா எழுதியிருந்த வரிகளைப் படித்த அம்மா அதிர்ச்சியின் உச்சத்தைத் தொட்டுள்ளார்கள்!

அப்பா அம்மாவிற்கு எழுதிய குட்டி லெட்டரைக் கவரில் போட்டு அந்தக் கவரில் அம்மாவை முகவரி எழுதச் சொன்ன பின்னர்தான் அம்மா தன் மேம்பாலக் கோரிக்கையை வைத்துள்ளார்! சந்திப்போமா பாடலின் கீழ் அவர் எழுதியிருந்த வரிகள்தான் அவர் அதிர்ச்சிக்குக் காரணம்.

‘கோவை மேம்பாலச் சந்திப்பில் இன்று மாலை சந்திப்போமா? உன்னிடம் நான் பேச வேண்டும்’ அந்தச் சினிமா பாடல் வரிகளோடு அப்பா அம்மாவிற்கு எழுதிய முதல் காதல் கடிதம் அது. இதற்குப் பெயர்தான் இதயத்தில் தோன்றும் ஒத்திசைந்த பாடல்களோ?!’

அப்பா, அம்மா இருவருமே ஒரே ரயில்வே மேம்பாலத்தின் மீது கை கோர்த்து செல்ல நினைத்ததுதான் அவர்கள் காதலின் ஹைலைட்! அன்று மாலையே அம்மா அப்பாவின் கரத்தோடு தன் கரத்தைப் பிணைத்துக் கொள்ளவில்லை என்றாலும், அவரோடு இணைந்து நடந்து சென்றுள்ளார்கள்.

“எனக்கு, உயரம்னா கொஞ்சம் பயம், அதுலையும் தரையிலிருந்து அந்தரத்தில் தொங்கும் இந்த மேம்பாலத்தின் மீது தனியாப் போக ரொம்பவே பயம்! ஒரு தடவையாவது அது மேல போகணும்கிறது என்னோட குழந்தைத்தனமான ஆசை!” என்று அம்மா கூற,

“பேர் கூடத் தெரியாத என்னை நம்பி நீ எப்படி வந்த?!” என்று அப்பா கேட்க,

“இப்ப சொல்லுங்க தெரிஞ்சுக்கிறேன், இன்னார்க்கு இன்னார்னு இறைவன் முதலிலேயே எழுதி வச்சிருவாருன்னு நினைக்கிறேன்! என் பேர் கற்பகம்!” என்று கேள்வியோடு அவரைப் பார்க்க,

“ஐ ஆம் விஸ்வநாத்! நீ சுருக்கமா செல்லமா எப்படிவேணா கூப்டுக்க!!” என்று அவர் சொல்லி வாய்மூடு முன்,

“ஐயோ அம்மா என்னைக் காப்பாத்து!” என்று கத்திக் கொண்டே நீண்டு தொங்கின அவர் கரங்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டார் கற்பகம். தொடரும்
 

Attachments

  • IMG-IUS 002.jpg
    IMG-IUS 002.jpg
    57.9 KB · Views: 3
Nalla love story, கோவனம் ஆண்டி பழனில்
இங்கு ஜட்டி ஆண்டி கோவை பாலத்தில்
அக்கா பொண்ணுக்கு ஆடை அனுப்பி
அதற்கு பரிசாக கிடைத்தது விசு விற்ககு ஜோடி
ஒத்த மனவோட்டம்.ullavarkal inavathu varam
 
Top