Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் - 28

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments ❤

1124

அத்தியாயம் - 28


சும்மா இருக்கும் மனம் சைத்தானின் உலைக்களம் என்பதுப் போல சுபியின் மனம் குழம்பி போய் இருந்தது.


அவளுக்கு நடக்கும் பிரச்சனைகளை விட, கவின் அத்தான் தன்னை விரும்புகிறாரா? இல்லையா? என்பதே அவளுக்கு பெரும் குழப்பமாக இருந்தது‌.


ஊரில் கவின்,காதல் சொன்னதையும் மறந்து விட்டிருந்தாள். சொன்ன அடுத்த கணமே அவனை காணவில்லை. அது உண்மையா, இல்லை கனவா என்றே அவள் குழம்பியிருந்தாள். சரி அவனிடம், பேசி தெரிந்து கொள்வோம் என்று நினைத்திருந்தாள்‌.


ஆனால் கவினோ‌அதற்கு பிறகு அந்தர்த்தனம் ஆகிருந்தான். சரி திருவிழா முடிந்துப் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து இருந்தாள், ஆனால் ஊருக்கு வந்த பிறகோ, நவீன், நீரஜா திருமணக் குழப்பம்,பிறகு ஜெயிலுக்கு போனது என்று அவளுக்கு வேறு எந்த நினைவும் வரவில்லை.



அங்கு காவல் நிலையத்தில் கவினுடைய காதல் பார்வையை கண்டு கொண்டாலும், அவளுக்கு இருந்தப் பதட்டத்தில் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை.


தன்னுடைய அம்மாவின் புலம்பலுக்காக, எங்கே தன்னை, பரிதாபப்பட்டு கல்யாணம் செய்துக் கொள்கிறேன் என்றுக் கவின் சொல்லி விடுவாரோ என பயந்துத் தான் அவனைப் பேச விடவில்லை.


யாரும் இங்கே வராதீர்கள், கொஞ்ச நாள் என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டவள், பிறகு தனது அக்காவை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாள்… 'பட் அக்கா

பாவம்,இதை எப்படி எடுத்துக் கொள்வாளா என்று தெரியவில்லை. ரொம்ப பீல் பண்ணீட்டு இருப்பா‌‌… ' என்று எல்லாவற்றையும் தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தாள் சுபி.


அடுத்து என்ன செய்வது என்று,ஒன்றுமே புரியாமல் குழம்பித் தவிக்க‌...


வீட்டிலேயே இருப்பது வேற சுபிக்கு டென்ஷனாக இருந்தது. இதில் தன்னுடைய அம்மாவின் கண்ணீரைப் பார்த்தாலே பீபி ஏறியது. இரண்டு நாட்கள் வீட்டிலே இருந்தவள், பின் இது சரி வராது என்று அலுவலகத்திற்கு செல்ல முடிவெடுத்தாள்.


************

காலையில் சுபி பரபரப்பாக கிளம்பிக் கீழே இறங்கி வர…


பார்வதி யோசனையாக பார்த்தாள். இப்படி அவசர அவசரமாக எங்கே கிளம்புகிறாள், என யோசனையாக சுபியைப் பார்த்தவள் சுபியிடம், " என்னடா… அதுக்குள்ள குளித்து தயாராகி வந்திருக்க வெளிய எங்கேயும் போகணுமாடா... ஏதாவது வாங்கணுமா… அம்மாவும் வரவாடா…" என வினவ.


ஷாலை சரி செய்துக் கொண்டே நிமிர்ந்தவள், பார்வதியைப் பார்த்து, "அம்மா...வீட்டிலேயே இருந்தால் போரடிக்குது. அதான் இன்னையிலிருந்து ஆஃபிஸ்க்கு போகலாம் என்று இருக்கேன்மா."


அங்கு பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஈஸ்வரன் நிமிர்ந்து தனது மனைவியை பார்க்க, அவளும் ஈஸ்வரனை பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன செய்வது என்பதுப் போல் பார்வதி முழிக்க...நான் பார்த்துக்கொள்கிறேன் என ஈஸ்வரன் பார்வையாலே கூறினார்.


இவர்களின் பார்வை பரிமாற்றத்தை பார்த்த சுபி, ஒன்றும் கூறாமல் ஹாட்பேக்கில் இருந்த இட்லியை எடுத்து தட்டில் வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தவள், ஒரு நிமிடம் 'என்னவாக இருக்கும் என்று குழம்பியவள்,பிறகு எதுவாக இருந்தாலும், அவங்களா சொல்லும் போது பார்த்துக்கொள்ளலாம்' என நினைத்தவள் தன் கவனத்தை சாப்பிடுவதில் செலுத்தினாள்.


சில நாட்களாக வேலைக்கு செல்லாததால் இன்று கொஞ்சம் சீக்கிரமாக செல்லலாம் என்று முடிவெடுத்து வெகு சீக்கிரமாகவே தயாராகி வந்திருந்தாள்.


பேப்பர் படித்து விட்டு கடைக்கு கிளம்புவதற்காக எழுந்த ஈஸ்வரன், சாப்பிட்டுக் கொண்டிருந்த சுபியின் அருகில் வந்து தலையை வருடி ஏன்டா இன்னும் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா வேலைக்கு போகலாம் இல்லையா, என வினவ…


அப்பா... எனக்கு வீட்ல இருக்குறது ரொம்ப போரடிக்குது, வேலைக்கு போனா கொஞ்சம் ஃப்ரீயா இருப்பேன் என்றுக் கூறி தன் தந்தையை நிமிர்ந்துப் பார்க்க…


இல்லடா எனத் தயங்கி, தயங்கி ஒன்றும் கூறாமல், மீண்டும் பார்வதியைப் பார்க்க…


நீங்க இரண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே இருங்க. நான் கிளம்புறேன். எனக்கு நேரமாச்சு என்றவள், கைகளை கழுவி விட்டு, ஆஃபிஸ் பேக், ஸ்கூட்டி கீ, செல்ஃபோன் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, பை மா… பை பா… என்றுக் கூறி விட்டு கிளம்ப முயன்றாள்.


பார்வதியோ, ஈஸ்வரனை முறைத்துக் கொண்டே சுபியிடம், " சுபிமா… இல்லை அப்பாவைக் கொண்டு விடச் சொல்லவா"என…


தோளில் பேக்கை மாட்டிக் கொண்டு இருந்தவள், பார்வதியை நேராகப் பார்த்து, "மா… உனக்கு இப்போ என்ன பிரச்சினை. எதுவா இருந்தாலும் டைரக்டா சொல்லு… அதை விட்டுட்டு, எதுக்கு என்னை ப்ரோடக்ட் பண்ணனும்னு என்று நினைக்கிற… அப்படி என்ன பிரச்சினை வரும் என்று நினைக்குற..‌‌. அப்படியே ஏதாவது ப்ராப்ளம் வந்தாலும் நான் ஃபேஸ் பண்ணிக்கிறேன். யூ டோண்ட் வொரி மா." என்றவள் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு சிட்டாக ஸ்கூட்டியில் பறந்தாள்.


கண் கலங்க அமர்ந்திருந்த பார்வதியிடம், வந்த ஈஸ்வரன், "பாரு, ஏன் இப்படி இடிஞ்சுப் போய் உட்கார்ந்து இருக்க? என் பொண்ணு தைரியமானவ. அவள் தான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்றாள… அப்புறம் என்ன மா"என…


புரியாமல் பேசாதீங்க… அந்த வீடியோவை கவின், எடுக்க வைத்தாலும், அதனோட விளைவுகளை அவனால ஒன்னும் செய்ய முடியலை. யாராலும் செய்ய முடியாது.


இல்லை என்றால் நாம ரெண்டு பேரும் வாக்கிங் போகும் போது, இவ்வளவு நாள் ஸ்நேகமா சிரிச்சவங்க எல்லாம், இன்றைக்கு முகத்தை திருப்பிக்கிட்டுப் போவாங்களா.‌…


பேப்பரில், நியூஸ்ல தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்தாள், என்று சொன்னதைக் கூடப் புரிந்துக் கொள்ளாமல்,

இந்த ஃபேஸ்புக், வாட்ஸ்அப்ல வந்த வீடியோ,மீம்ஸ மட்டும் உண்மை என்று நம்பிக்கிட்டு‍, பணத்தை வச்சு உண்மையை மறச்சிட்டோம் என்று நம் காதுபட சொன்னாங்களே… நம்மால என்னங்க செய்ய முடிஞ்சது… ஒன்னுமே செய்ய முடியலையே… சுபி மட்டும் என்ன செய்வா… ஐயோ! அவளை என்னப் பாடுபடுத்தப் போறாங்களோ, என்றுக் கூறி ஈஸ்வரனின் தோளில் சாய்ந்துக் கதற…


மெல்ல அவளை அணைத்து ஆறுதல் படுத்தியவர், கலங்கிய தன் கண்களை துடைத்துக் கொண்டு, பாருமா, "சுபி பாரதிக் கண்ட புதுமைப்பெண்." அவ சமாளித்துக் கொள்வாள் என்றுக் கூறி, தன்னையே சமாதானம் செய்துக் கொண்டார்.


ஆனால், அவரது கணிப்பை முதல் முறையாக சுபி பொய்யாக்கி விட்டு‍, மாலையில் வந்தவள் கதறித் துடித்தாள்.



‌ **********************

வழக்கம் போலவே தான் சுபி அலுவலகத்திற்குள் நுழைந்தாள். ஆனால் அங்கு நடந்ததோ, வழமைக்கு மாறாக நடந்தது.


உள்ளே நுழைந்ததும், அங்கிருந்த வாட்ச்மேன் எப்பொழுதும் மரியாதையுடன் வணக்கம் தெரிவிப்பவர்,இன்று அலட்சியமாக திரும்பிக் கொண்டார்.

இதெல்லாம் பெரிய விஷயமா இதைவிட பெரிய பெரிய துன்பங்களை எல்லாம் சந்திச்சாச்சு, இதெல்லாம் சிறு துரும்பு என ஒதுக்கியவள் உள்ளே சென்றாள்.


இது ஆரம்பம் தான் இனி தான் அவள் இதுப் போல நிறைய சந்திக்க வேண்டியிருந்தது‌.

சுபி பொதுவாக ஜாலியாக பேசுபவள், அதனாலே வேலைக்கு சேர்ந்த இந்த குறுகிய காலத்திலே எல்லோரும் அவளிடம் மிகவும் நெருங்கி பழகி விட்டனர்.


அவள், உள்ளே நுழைந்து அவளது கேபினுக்கு செல்வதற்குள், ஆளாளுக்கு அழைத்து பேசிக் கொண்டிருப்பர். இன்றோ, இவள் நுழைவதை கவனித்து விட்டு,பாராததுப் போல் வேலையில் கவனம் செலுத்தினர்.


சரி அவர்கள் கவனிக்கவில்லை என்று அவளாக, கீத், ரம்ஸ் என்று தன்னுடைய தோழிகளை அழைக்க…


என்ன என்பது போல் பார்த்து விட்டு, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. ஏதாவது முக்கியமான விஷயமா, இல்லையென்றால் அப்புறம் பார்க்கலாம் சுப்ரஜா, என்று அவளை மூன்றாம் நபராகத் தள்ளி வைத்துப் பேச, அது சுருக்கென அவள் நெஞ்சில் குத்தியது.


சரியென தலையசைத்தவள் நேராக தனது கேபினுக்குச் சென்று பேக்கை வைத்து விட்டு, எம்.டியைப் பார்க்கச் சென்றாள்‌.


எம்.டியின் அறைக் கதவை தட்டி விட்டு உள்ளே சென்றாள்‌. அங்கோ, அவரது செகரட்டரி தான் இருந்தாள். எம்.டி எப்ப வருவார், பார்க்கணும் என்றுக் கேட்க…


சாதரணமாகவே அவளுக்கு சுபியைப் பிடிக்காது. இப்போ சொல்லவும் வேண்டுமா, அவளை ஏளனமாகப் பார்த்து விட்டு, ஏன் அவரைத்தான் வேண்டாம் என்று ஒதுக்கினியே‍, இப்ப என்ன திரும்ப உன் வலையில் விழ வைக்கலாம் என்றுப் பார்க்குறீயா, என…


சுபியோ,முறைக்க…


என்ன முறைக்கிற… விட்டா என்னையும் அடிச்சே கொன்னுடுவப் போல, ஆளை விடு தாயே‌… சார் மாலையில் தான் வருவார் என்ற தகவலை நக்கலோடு சொல்ல…


சுபியும், ஒன்றும் கூறாமல் சரி தான் என்று வந்து விட்டாள்.


இவள் வெளியே வர அங்காங்கே நின்று பேசியவர்கள்,அமைதியாகி விட, அவர்கள் இவளைப் பற்றி பேசுவதாகவே தோன்றியது. அதை அலட்சியம் செய்து, இவள் ஏற்கனவே பாதியில் விட்டிருந்த வேலையில் கவனத்தை செலுத்தினாள்.


வேலையில் முழு கவனமாக இருந்ததில் மதிய உணவு நேரத்தை கவனிக்கவில்லை. எப்போதும் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் அவளது தோழிகள் தான் உணவருந்த அழைத்துச் செல்வார்கள்.


இன்றோ யாரும் இவளை அழைக்காமல் சென்றுவிட்டனர். இவள் வேலையை முடித்து விட்டு நிமிர்ந்து பார்த்தால், உணவு நேரம் எப்பொழுதோ ஆரம்பித்திருக்க... பக்கத்து இருக்கையில் இருந்த தோழிகளோ, எப்பொழுதோ எழுந்து சென்றிருந்தனர். அவர்களை காணவில்லை


சுபி, ஒரு நிமிடம் அவர்கள் சாப்பிட கூப்பிடவில்லை என்று கலங்கியவள், வழக்கம் போல அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு தன் வேலையிலேயே மூழ்கினாள்.


அவள் எவ்வளவுதான் தன்னை சமாளித்தாலும், மீண்டும் மீண்டும் அடி விழுந்தது.


அதுக்கப்புறம் அவள் எதிலும் கவனத்தை செலுத்தாமல்,தன் வேலையே குறியாக இருக்க…


அதை தடைச் செய்வது போல, அவளது எம்.டி மாலையில் வந்தவர்,அவளை அவரது அறைக்கு வரச்சொல்லி விட்டு சென்றார்.


மே ஐ கமின் சார் என்று கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள்.


வாங்க சுப்ரஜா என அழைத்தவர், ப்ளீஸ் ஸிட், என அவளை உட்காரச் சொன்னவர். ஒன்றும் கூறாமல் பேப்பர் வெயிட்டைச் சுற்றிக் கொண்டிருந்தார், பிறகு நிமிர்ந்து நீங்கள் வேறு வேலைத் தேடிக் கொள்ளுங்கள் என மின்னாமல்,முழங்காமல் ஒரு வெடியைத் தூக்கிப் போட்டார்.


சார் என்று அதிர்ந்து எழுந்தவள், நான், நான் எந்த தப்பும் செய்யவில்லையே சார்…


அவளது அதிர்ந்து முகத்தைப் பார்த்து மனதிற்குள் வருந்தியவன், "சாரி டூ சே சுப்ரஜா, உங்கள் மேல் எந்த தப்பும் இல்லை என்று தெரியும்.பட், கம்பெனி வளர்ச்சிக்காக இந்த முடிவு எடுக்க வேண்டியதாக இருக்கிறது. என்னால உங்களை வேலையை விட்டு நீக்க முடியாது. அதனால் நீங்களே வேலை ரிசைன் பண்ணிடுங்க எங்கோ பார்த்துக்கொண்டு கூற…"


ஓகே சார். இவ்வளவு நாள் என்னை வேலை செய்ய அனுமதித்தற்கு நன்றி சார். திரும்பியும் பார்க்காமல் வெளியேறி தனது கேபினில் அமர்ந்து விடுவிடுவென ராஜினாமா லெட்டரை டைப் செய்தவள், அதை எம்.டிக்கு அனுப்பி விட்டு அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறினாள்.


எப்படி வீடு வந்து சேர்ந்தாள், என்பதை அவள் அறியவில்லை. வீட்டிற்கு வந்தவள், ஹாலில் அமர்ந்து இருந்தவர்களைப் பார்க்காமல்,அவளது அறைக்குச் சென்று அழுகையை அடக்கிக் கொண்டு,எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள்.


இவளது முகத்தைப் பார்த்து ஏதோ, சரியில்லை என்று மாடிக்கு வந்த பார்வதியும், ஈஸ்வரனும் என்னடா எனக் கேட்க… சுபியோ, கதறிக் துடித்தாள்.


எனக்கு அப்பவே தெரியும் நான் சொல்றதை யார் கேட்கிறா, என பார்வதி புலம்ப..

அழுதுக் கொண்டிருந்த சுபி நிமிர்ந்து தனது தாயை பார்த்து முறைத்து, கொஞ்சம் நேரம் சும்மா இரு மா…


என்ன நடந்தது என்று தெரியாம ஏதாவது சொல்லிட்டே இரு. அடுத்தவங்க என் முதுகுக்கு பின்னாடி பேசுறத நினைத்து கவலைப்படுற ஆள் நான் கிடையாது.


நான் உங்க கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல… எங்க எம்.டி என்னைய லவ் பண்றேன் என்று சொன்னாங்க, பட் எனக்கு அதுல இன்ட்ரஸ்ட் இல்லை என்று சொன்னேன்ல...


அப்ப நான் வேலையை விட்டு நிற்கிறேன் என்று சொன்னேன். அதுக்கு என்னோட திறமை கம்பெனிக்கு வேணும், நான் இனி உன்னை எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன், அப்படின்னு ஜென்யூனா பேசினாரு…


இப்ப என்னால கம்பெனி வளர்ச்சி பாதிக்கும், வேலையை விட்டு நீங்களே நின்னுடுங்க என்று சொல்லிவிட்டார். அதை தான் என்னால தாங்க முடியல... இந்த மனுஷங்களை நம்ப முடியல அப்பப்ப சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மனசு மாறும் போல...எனக்கு இந்த சமூகத்தை நினைச்சாலே எரிச்சலா வருது…


நான் எந்தத் தப்பும் செய்யல... யார் என்ன பேசினாலும்,நான் அதை பெரிசா எடுத்துக்க போறது கிடையாது. நான் இப்படியே முடங்கிப் போய்விட மாட்டேன்.


இந்த இடத்தில் இருந்தும் எழுந்து நடப்பேன்... எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வேன். என்றைக்காவது இருந்தாலும் வேலைக்குச் செல்வேன்.


இப்ப நான் தூங்கப் போறேன். யாரும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க… என்றவள் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.


இருவரும் அதற்கு மேல் அங்கு இருக்காமல், வெளியே வந்தனர்.


பார்வதி, " ஈஸ்வரனிடம், என்னங்க இவளைப் புரிஞ்சிக்கவே முடியல... வந்த உடனே அப்படி அழுதா... இப்ப என்னடான்னா தைரியமா பேசுறா... என்னமோ அவள் நல்லா இருந்தா சரி என்றாள்."


**********************

சுபியின் போர்வையை பிடித்து இழுக்க, அதை விடாமல் பிடித்துக்கொண்டு மா, என்னை டிஸ்டப் செய்ய வேண்டாம்னு சொன்னேன்ல...இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேன். ப்ளீஸ் மா, எனத் தூக்கத்திலேயே கெஞ்சினாள்.


' ஓ… மேடம் இன்னும் அம்மா வீட்ல இருக்குற ஞாபகத்துல இருக்கிறார்களோ, கல்யாணம் ஆகி மாமியார் வீட்ல இருக்கிறோம் என்று கொஞ்சம் கூட ஞாபகமே இல்லையே... தூங்குமூஞ்சி என மனதிற்குள் வைதுக்கொண்டு' பொங்கி வந்த சிரிப்பை அடக்கினான் கவின்.


மணி ஒன்பது ஆகிவிட்டது, இதற்கு மேலும் தாமதமானால், இவள் குளித்து, தயாராகி கீழே செல்வதற்கு இன்னும் நேரமாகும். அதற்குள் மாமா வீட்டில் இருந்து மறுவீட்டிற்கு அழைக்க வேறு வந்திருப்பார்கள். இப்போது,இவளை எப்படியாவது எழுப்ப வேண்டும் என்று சலித்துக் கொண்டவன், சுபி, சுபி என்று சற்று உரக்க அழைத்தான்.


கவினின், கத்தலில் திடுக்கிட்டு விழித்த சுபி‌,வேகமாக எழுந்து அமர்ந்தவள்,அருகில் இருந்த கவினைப் பார்த்தவுடன் பயந்து ஐயோ, எனக் கத்திவிட்டாள்.


சுபியின், சத்தத்தைக் கேட்டு கவின் அதற்கு மேலும் பயந்து, ஏய் எதுக்குடி இப்படி

கத்துற என பதற…


அதுக்கப்புறம் தான் சுபிக்கு நிகழ்காலமே நியாபகம் வந்தது. 'ஓ… தூக்கம் வராததால், பழையதை எல்லாம் வெகு நேரம் நினைத்துக் கொண்டே இருந்தேன். அப்படியே தூங்கி விட்டேன் போலிருக்கு…' என நினைத்தவள், மெல்ல நிமிர்ந்து கவினைப் பார்த்து, சாரி அத்தான் என்றுக் கூறி விட்டு, மணியைப் பார்க்க அது ஒன்பது என்றுக் காட்டியது. கண்களை கசக்கி விட்டு மீண்டும் பார்க்க, அதே நேரத்தையேக் காட்ட‌…


ஓ.காட் என்று கத்தியவள், வேகமாக அரக்க பறக்க கட்டிலிருந்து எழுந்தாள், போர்வை காலிலே சுற்ற அருகில் நின்றிருந்த கவின் மேலேயே விழுந்தாள். பதற்றத்தில ஐயோ! எனக் கத்த…


கீழே விழாமல் இருப்பதற்காக, அவளை அணைத்து பிடித்து இருந்த கவின், ஏன்டி சும்மா, சும்மா கத்திட்டே இருக்க... யாராவது தப்பா நினைச்சுக்க போறாங்க என்று அவள் காதருகே முனுமுனுக்க…


அப்பொழுது தான், சுபி அவள் இருக்கும் நிலை உணர்ந்து விலகி, முகம் சிவக்க, சாரி சாரி என்று உளறிக் கொட்டியவள், பிறகு நான் குளிக்க போறேன் என்று அவளுடைய துணிகளை அவசரமாக எடுத்துக் கொண்டு ஓட...


அவள் செல்வதை புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த கவின், பால்கனிக்கு சென்று நின்றான்‌. அவன் ஏற்கனவே தயாராகி இருக்க… சுபிக்காக காத்திருந்தான்… சுபி வரவும் இருவரும் கீழே இறங்கினர்.



இவர்களுக்கு, முன்பே பார்வதியும், ஈஸ்வரனும் வந்திருத்தனர். சுபியோ, முகம் சிவக்க படபடப்போடு இருந்தாள். பார்வதிக்கு‍, அவளைப் பார்த்து உள்ளம் நிறைந்தது.


பத்மாவும், நீரஜாவும் பரபரவென வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தனர்‌...


சுபியைப் பார்க்கவும் வாடா, என அழைத்த பத்மா, இருவரையும் சாமியறையில், விளக்கேற்றி சாமி கும்பிட்டுட்டு வாங்க‍, என அனுப்பினாள்.


பெரியவர்கள் ஏற்கெனவே சாப்பிட்டு இருக்க… பத்மா, இவர்களை விரைவாக சாப்பிடுமாறு உத்தரவிட்டுட்டாள், பிறகு அவர்கள் அனைவரும் ஹாலிற்கு சென்றுவிட்டனர்.


கவின் நினைத்தப்படியே, சுபிக் கத்தியதை வைத்து, சாப்பிடும்போது நவீன் தான் இவர்கள் இருவரையும் கேலி செய்துக் கொண்டிருந்தான்.


கவின் என்னடா பண்ண... தைரியசாலியான எங்கள் சுப்பமாவே கத்துறா, எனக் கேலி பண்ண… சுபியோ, நவீனை ஒரு முறை முறைத்துவிட்டு உணவில் கவனத்தை செலுத்தினாள்.


கவின், நவீனின் காதில் சென்று, "ஹலோ, நான் தான் உன்னை கேலி செய்யணும். நானே அமைதியாக இருந்தாலும், நீ என்னை அமைதியாக இருக்க விடமாட்ட போல… சார் நேற்று என்னோட கோவிலுக்கு வராமல் என்ன, என்ன வேலை செய்தீங்க என்று அல்ரெடி மேனேஜர் கிட்ட இருந்து இன்ஃபர்மேஷன் வந்தாச்சு" என மேடை ரகசியம் பேச…


அருகிலிருந்த நீராஜாவுக்கும் சுபிக்கும் அட்சரம் பிசகாமல் காதில் விழுந்தது சுபி நிமிர்ந்து, தன் அக்காவைப் பார்க்க, நீரஜாவின் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது. இப்போது தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.அக்காவை நினைத்து எப்போதுமே கவலைப்பட்டுக் கொண்டே இருந்தாள்.


தன்னுடைய சுயநலத்திற்காக அவளை, அம்மா வீட்டிற்கு வரவிடாமல் செய்து விட்டமோ, என்று வருத்திக் கொண்டே இருப்பாள்.


ஆனால், இவள் அறியாத ஒரு கதையும் உண்டு. இவளைத் தவிர, இருக் குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும் வெளியிடத்திலும்‍‍, கடைகளிலும் சந்தித்துக் கொண்டு தான் இருந்தனர்.



நாங்க, வந்துப் போனால் சுபி மனது சங்கடப்படும், அதனால் கொஞ்ச நாளாகட்டும், அப்புறமா நீருவையும், நவீனையும் அனுப்பி வைக்கிறேன் என்று பத்மாக் கூற…


நீரஜாவாலும், ஒன்றும் கூற இயலவில்லை. தங்கைக்காக என்று கூறும் போது,என்ன செய்வது என்று அமைதியாக இருந்துவிட்டாள்.


தங்கையின் வாழ்க்கையை நினைத்தும், அம்மா வீட்டிற்கு வந்துப் போகாமல் இருப்பதை நினைத்தும் கவலைப்பட்டு,அவள் சற்று சோர்ந்தே தெரிவாள்.


இன்று தான் அவளது முகத்தில் பழைய தேஜஸ் தெரிந்தது‌.


கவின் இருவரையும் ஓட்ட… நீரஜா,எனக்கு கிச்சனில் வேலை இருக்கிறது என்று ஓடி விட… நவீனோ,ஹலோ,என்றப்படி வராத ஃபோன்காலை, வந்தது போல் பேசிக்கொண்டு அந்த இடத்திலிருந்து எழுந்து சென்று விட்டான்.


அவர்கள் இருவரும் ஓடிய வேகத்தைப் பார்த்து, கவின்,சுபி இருவர் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.


இன்று எல்லோருக்கும் பார்வதி, ஈஸ்வரன் இல்லத்தில் விருந்துக்கு ஏற்பாடாகி இருந்தது.


அதன் பிறகு அனைவரும் அங்கு புறப்பட்டுச் சென்றனர்.


பார்வதி, பத்மாவும் மதிய உணவை கவனிக்க சென்று விட…


ஈஸ்வரனும், சுகுமாரனும் கடை விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.


சிறியவர்கள், நால்வரும் மாடியில் அவர்களது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.


சுபி தான், சற்று நெர்வஸ்ஸாவே இருந்தாள். கவினும் அவள் கூடவே, அவளது அறைக்கு வரவும், என்ன செய்ய என்று புரியாமல் தவித்தவள், அவன் கட்டிலில் படுத்துக் கொள்ளவும், சரிதான், நமக்கு தேவையான திங்ஸ்ஸை பேக் பண்ணுவோம் என்று கஃபோர்டை திறந்தாள்.


அதிலிருந்து அவளது துணிகளை, எடுப்பதும்,பின்பு வைப்பதுமாக இருந்தாள்.


அவள் செய்பவற்றை, படுத்துக் கொண்டே,

பார்த்திருந்த கவின், இது வேலைக்கு ஆகாது என்று எண்ணி, எழுந்தவன் சுபி என்று அழைத்தான்.


என்ன செய்துட்டு இருக்கிற…


அது அத்தான… நம்ம வீட்டிற்கு எடுத்துட்டு வர வேண்டிய திங்ஸ்லாம் பேக் பண்ணணும்.


அப்ப, எடுத்து வைக்க வேண்டியது தானே…


எனக்கு எப்பவும் அம்மா, இல்லை அக்கா தான் ஹெல்ப் பண்ணுவாங்க… இன்றைக்கு இரண்டு பேருமே வரலை. அதான் எனக்கு குழப்பமா இருக்கு.


சரி வா நான் உனக்கு உதவி செய்கிறேன், என்றான் கவின். அதற்கு பிறகு இருவருக்கும் நேரம் சென்றதே தெரியவில்லை.


இருவரும் பேசிக் கொண்டும், இடையிடையே சிரித்துக் கொண்டும் எல்லாவற்றையும் எடுத்து வைத்தனர்.


பார்வதியே உணவருந்த ஃபோன் செய்து அழைக்கும் வரை, இருவரும் தங்களை மறந்து, சுற்றுப்புறம் மறந்து பேசிக் கொண்டே இருந்தார்கள்.



ஃபோன் சத்தத்தில் தான் மணியையேப் பார்த்தார்கள். ஐயோ! சாப்பாடு நேரம் தாண்டிடுச்சு, அதான் சாப்பிடக் கூப்பிடுவதற்காகத் தான் அம்மா ஃபோன் பண்ணியிருக்காங்க, கீழேப் போகலாமா? என சுபி வினவ…


ம் என்று மனமே இல்லாமல், சுபியின் பின்னயே கீழே வந்தான்.


இரண்டு மாப்பிளையையும், ஈஸ்வரன் நன்றாக கவனித்துக் கொண்டிருந்தார். எல்லோரும் ஒன்றாக உணவருந்திக் கொண்டிருக்கும் போது, இரண்டு மாப்பிள்ளைகளையும் மீன் சாப்பிடுங்க, ஏன் அப்படியே வச்சிருக்கீங்க, என்றுக் கூறி மீனை எடுத்து இருவருக்கும் பரிமாற…


பொறுத்து பொறுத்துப் பார்த்த, சுகுமாரன் பொங்கி விட்டார்.


டேய் ஈஸ்வரா, நான் தான்டா இந்த வீட்டிற்கு மூத்த மாப்பிள்ளை… முதலில் என்னைக் கவனிடா,என கலாய்க்க…


டேய் உனக்கு இல்லாததா, இந்தாடா, சாப்பிடு என்று மீன் வறுவலை அள்ளி வைக்க…


டேய் போதும் டா‌… சும்மா பேச்சுக்கு தான் சொன்னேன் என்று சுகுமாரன் தடுக்க… ஒரே கலகலப்பாக மதிய உணவு முடிந்தது.


தொடரும்…..
 
Last edited:
Top