Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் - 22

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments ❤


961
962

அத்தியாயம் - 22


சுகந்தியின் குரலே மீண்டும் மீண்டும் அந்த வீட்டில் ஒலிப்பதாகப் பட்டது.


தன் அப்பா, அம்மாவின் வளர்ப்பைப் பற்றி விமர்சனம் செய்யவும் ஒரு நொடி சுபி, நீரஜாவைப் பார்த்தாள்.


அவளோ, தலை குனிந்தாள்.


தன் அம்மாவையும், அப்பாவையும் பார்க்க… அவர்களோ, ஒருவரை ஒருவர் வேதனையுடன் பார்த்துக் கொண்டு எதுவும் பேசாமல் இருந்தனர்.


அவர்கள் இருவரும் எதுவும் பேசமாட்டார்கள், நாம் தாம் எதாவது பேசி சுகந்தி சித்தி வாயை அடைக்க வேண்டும் என்று ஒரு நொடிப் பொழுதில் முடிவெடுத்தாள்.


சுகந்தி சித்தி… எங்கம்மா அப்பாவைப் பத்தி எதுவும் பேசாதீங்க என்றாள் சுபி…


ஓஹோ… உங்க அப்பா, அம்மாவைப் பற்றி பேசக்கூடாது என்றால், அப்புறம் என்ன உங்க அக்காவைப் பத்தி பேசவா என சுகந்திக் கூற…


சற்று நேரம் சுபி வாயைத் திறக்காமல் இருந்தாள். ஆனால் அவளை அமைதியாக இருக்க சுகந்தி விடவில்லை. மீண்டும் தொடர்ந்தாள்.


" ஊமை ஊரைக் கெடுக்கும்,
ஆமை ஆற்றைக் கெடுக்கும்"
என்று சொல்வாங்களே அதுப்போல் அல்லவா இருக்கே… அமைதியாக ஊமை மாதிரி இருந்திட்டு இவ்வளவு வேலைப் பார்த்திருக்கா உங்க அக்கா…


அப்படி என்ன கல்யாணத்துக்கு அவசரம்… உங்க அப்பா அம்மாக்கிட்ட சொல்லி கல்யாணம் பண்ண சொல்ல வேண்டியது தானே… வேற எவனுமே கிடைக்கலையா… அதை விட்டுட்டு என் பொண்ணுக்குப் பார்த்து வைத்த, என் அண்ணன் பையன் தானா கிடைத்தான் என்று மேலும் தரக் குறைவாகப் பேச…


அத்தை… என்று கவினும், நவீனும் ஒன்றாக கத்த…


"என்னடா‌… நான் ஒன்றும் தப்பாக சொல்லவில்லையே உண்மையைத் தானே சொன்னேன் " என்றாள் சுகந்தி.


சுகந்தி பேசியதைக் கேட்ட நீரஜாவோ,ஐயோ! எனக் கூறி கீழே விழுந்து கதறி அழுதாள்.


பார்வதியும், ஈஸ்வரனும் வேரறுந்த மரம் போல் கீழே விழுந்த மகளிடம் சென்றுத் தூக்கி அவளை சமாதானம் படுத்த முயல, அவளோ எதுக்கும் அடங்காமல் அழுதுக் கொண்டே இருந்தாள்.


கவின் தான் சுகந்தியிடம் சென்று, " அத்தை கொஞ்சம் நேரம் பொறுமையாக இருங்க" என…


நான் ஏன் டா , பொறுமையாக இருக்கணும், அங்கப் பாருடா என் பொண்ணை என, சுகுமாரனின் தோளில் சாய்ந்து அழுதுக் கொண்டிருந்த தீப்தியைக் காண்பித்து, நான் எப்படி வளர்த்தேன் என்று தெரியும் தானே ! தவமா தவமிருந்து பெற்றேன். அவ ஆசைப்பட்ட எல்லாத்தையும் நிறைவேற்றினேனே! இன்றைக்கு ஆசைப்பட்ட வாழ்க்கையைக் கூட அமைச்சுத் தர என்னால் முடியவில்லையே என்றுக் கூறி புலம்ப...



தீப்தி எங்கப் பொறுப்பு அத்தை… நான் பார்த்துக் கொள்கிறேன் அத்தை, என கவின் கூற…


நிறுத்துடா நீங்க பார்த்துக் கிட்ட லட்சணம் தான் எனக்கு தெரியுமே? நீங்க படிக்கிற காலேஜ்ல தான் படிப்பேன் என்று ஒத்த காலில் பிடிவாதமாக நின்றாள். காஞ்சிபுரத்திலிருந்து டெய்லி போயிட்டு போயிட்டு வந்து எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தாள், என்று தெரியுமா உங்களுக்கு...அத்தான், அத்தான் என்று உங்க கூடவே தானே சுத்துவாள்.


அவளை இப்படி ஏமாற்றி விட்டீர்களே! எனக் கூறியவள், நவீனைப் பார்க்க அவனோ சுற்றியுள்ள எவரையும் கவனிக்காமல் அங்கு ஈஸ்வரன் மேல் சாய்ந்து கதறி அழுதுக் கொண்டு இருந்த நீரஜாவின் மேலே மட்டும் அவன் கவனம் இருந்தது.


தன் சரி பாதி அங்குத் துடிக்க... அவளை சமாதானம் செய்யக் கூட முடியாத சூழ்நிலையில் தான் இருப்பதை நொந்துக் கொண்டு அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான்.


அதைப் பார்த்த சுகந்தி கோபம் மேலும் பொங்க... நவீன் அருகில் சென்று அவன் தோளை உலுக்கி அவன் கவனத்தை தன் பக்கம் திருப்பினாள்.


ஹாங் என திகைத்து திரும்பியவன்... என்ன அத்தை என்று வினவ?


என்ன, என்ன அத்தை … உன்னை வளர்த்த அத்தை இங்க புலம்பிட்டு இருக்கேன். நீ என்னவென்றால் அவளைப் பார்த்து மயங்கி நிக்கிற… எனக்குத் தான் பொண்ணை வளர்க்க துப்பு இல்லை. இல்லன்னா இப்படி அழுதுக் கொண்டு நிற்பாளா என தீப்தியைப் பார்த்துக் கூறியவள், மீண்டும் நவீனிடம் திரும்பி அப்படி என்ன செய்து உன்னை மயக்குணா, ஏதாவது சொல்லுடா என…


அது அத்தை என நவீன் ஏதோக் கூற வர…


சுகந்தி நிறுத்துடா நீ எதுவும் சொல்லத் தேவையில்லை என்றுக் கூறினாள்…


'இந்த அத்தை என்ன லூசா, ஏதாவது சொல்லு என்று சொல்லுறாங்க, சரி என்று சொல்ல வந்தால், எதுவும் சொல்லாதே என்கிறார்கள்... என்ன தான் செய்வது இருக்கிற தலைவலி பத்தாது , என்று இவர்கள் வேறு படுத்துறாங்களே' என மனதுக்குள் நொந்துக் கொண்டு அமைதியாக இருந்தான் கவின்.


ஈஸ்வரனோ, சுகந்தி மீண்டும் மீண்டும் தன் மகளைப் பற்றி தரக் குறைவாக பேசுவதைக் கேட்டதும், பேசாமல் நம்ம வீட்டுக்கு நீரஜாவை அழைத்து சென்று விடுவேமோ என்று யோசித்தார்.


ஆனால் இது தன் பொண்ணுடைய வாழ்க்கை பிரச்சினை. அது மட்டும் இல்லாமல் தன்னுடைய தங்கையின் வாழ்க்கையும் அடங்கி இருக்கிறது‌. எதாவது தான் பேசப் போய் இரு குடும்பத்திற்குள் பிரச்சினை வந்தால் என்ன செய்வது என்று அமைதியாக இருந்தார். சுகுமாரனும் அதற்காகத்தான் அமைதியாக இருக்கிறார் என்பதையும் புரிந்துக் கொண்டார்.


சுபி, தன் பெற்றோரைப் பார்த்தாள், அவர்கள் இருவரும் ஏதும் பேசப் போவதில்லை என்பதை புரிந்துக் கொண்டாள். நவீனைப் பார்த்தால், அவனும் மௌனமாக இருக்க… அவளால் கோபத்தை அடக்க முடியவில்லை.


அது மட்டும் அல்லாமல் மாமா தனது தங்கையை பேச விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பதாக எண்ணினாள்.


சுகுமாரனோ, தான் எதாவது பேசப் போய் இரு குடும்பத்திற்குள் சிறு பிரச்சினை வந்தால் கூட அது விஸ்வரூபம் எடுக்கும். இப்போது அமைதியாக இருக்க வேண்டும் என முடிவு எடுத்துக் கொண்டு அமைதியாக நின்றார்


அந்த அமைதி தான் சுபியின் கண்களுக்கு தவறாகப் பட்டது.



" இளம் கன்று பயமறியாது" என்பதற்கிணங்க எதைப் பற்றியும் யோசிக்காமல், இங்கப் பாருங்க சித்தி… இருவர் செய்த தவறுக்கு ஒருவரை மட்டும் குற்றம் சாட்டலாமா?


எங்க அக்கா மட்டும் தவறு செய்யலை… உங்க அண்ணன் மகனும் சேர்ந்து தான் செய்தார். எங்க அக்காவை ஒழுங்கா வளர்க்கவில்லை என்று சொல்றீங்களே… அப்ப உங்க அண்ணன் மகனோட வளர்ப்பும் சரியில்லை என்று சொல்வீங்களா என்று கேட்டே விட்டாள்.


சுபி இப்படி நேரடியாக பத்மாவையும், சுகுமாரனையும் குற்றம் சாட்டுவாள் என்று எதிர்பார்க்காத பார்வதி " ஏய் சுபி வாயை மூடு" என அதட்ட…


கவினோ, அவளை குற்றம் சாட்டும் பார்வைப் பார்க்க…


சுபி, தன் தாய் அதட்டியதற்குக் கூட கவலைப்படவில்லை. ஆனால் கவினின் பார்வையை பார்த்ததும் ஐயோ! கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாமோ என்று ஒரு கணம் நினைத்தாள்.


ஆனால் சுகந்தி அவள் பொறுமையை மேலும் மேலும் சோதித்தாள். சும்மாவே ஆடுபவள் காரணம் கிடைத்தால் விடுவாளா…


அண்ணா, பார்த்தியா இந்த சின்ன கழுதை எப்படி பேசுறா என்றுக் கூற…


சுகுமாரனோ வேதனையுடன் அவள் கூறுவதில் என்ன தவறு… என் வளர்ப்பு தான் சரியில்லை…

இல்லையென்றால் இவன் விரும்பியதை என்னிடம் சொல்லி இருக்க மாட்டானா… நான் கண்டிப்புடன் வளர்த்தேனே தவிர இவர்களுடைய ஆசைகளை என்றாவது நிறைவேற்றாமல் இருந்திருக்கிறேனா… அப்பா, அம்மாவிடம் சொன்னால் நம்ம விருப்பப் படி திருமணம் செய்து தருவார்கள் என்று அந்த நம்பிக்கையைக் கூட அவர்களுக்கு நான் தரவில்லை எனக் கூறி தழுதழுக்க…


அப்பா சாரிப்பா என நவீன் சுகுமாரனின் கைகளை பிடித்து மன்னிப்பு கேட்டான்.


விடுடா… உன்னை சொல்லி குற்றம் சொல்லி பயனில்லை சரி விடு என்றார்.


மாமா, என்று ஏதோ சுபிக் கூற வர…


"நிறுத்து மா… உனக்கு கூட இந்த மாமன் மேல் நம்பிக்கை இல்லை அல்லவா சரி விடு… ஆனால் நீரஜாவைப் பற்றி நீ கவலைப் பட தேவையில்லை. இனி அவள் இந்த வீட்டின் மூத்த மருமகள்… நான் பார்த்துக் கொள்வேன் நீ, அமைதியாக இரு " என்றார் சுகுமாரன்.


ஓஹோ! அப்ப எல்லோரும் ஒன்று சேர்ந்தாச்சா… சரி சரி அதைப் பற்றி எனக்கென்ன வந்தது… எனக்கு என் பொண்ணோட கதி என்ன? கவினுக்கு தீப்தியை திருமணம் செய்துத் தருவீங்களா? இல்லையா? அதை மட்டும் சொல்லுங்க என …


சுகுமாரன் எதுவும் சொல்லாமல் கவினைப் பார்க்க…


அவன் பதில் சொல்வதற்கு முன்பு, சுபி படபடக்க ஆரம்பித்தாள்.


ஒரு தடவை சொன்னா புரியாதா? திரும்ப, திரும்பக் கேட்கிறீங்களே நீங்க என்ன லூசா என வினவ…


ஏய் என்னடி நினைச்சிட்டு இருக்கிற, லூசு, முட்டாள் என்று என் பொண்ணை தான் சொல்லிட்டு இருந்த, இப்போ என்னையே லூசு என்று சொல்லுறீயா…


எங்கயாவது பெரியவர்களுக்கு மரியாதை தரணும் என்று இல்லாமல் இந்த பேச்சு பேசுற…


"இதுக்கு மேல ஏதாவது பேசுனா, நான் சும்மா இருக்க மாட்டேன்" என சுகந்திக் கூற…


சுபி " என்ன பண்ணுவீங்க" என….


மூஞ்சி முகரை எல்லாம் பேத்துடுவேன். ஒழுங்கு மரியாதையா இருக்கிறது என்றால் இரு, இல்லையென்றால் எங்க அண்ணன் வீட்டிலிருந்து வெளியே போ…


நான் ஏன் வெளியே போகணும்… இது எங்க மாமா வீடு என்று உரிமைக் குரல் எழுப்பினாள்.

'சுபிக்கு எப்பொழுதும் அத்தையை விட மாமா தான் ரொம்ப க்ளோஸ். அதனால் தான் அத்தை வீடு என்றுக் கூறாமல், மாமா வீடு என்றாள். அதேப் போல் சுகுமாரனுக்கும் சுபி என்றுமே ஸ்பெஷல். அதனால் தான் அவள், என்னை நம்பவில்லையே என வருத்தம் கொண்டார்.'


சுபியைப் பார்த்து சுகந்தி, "ஏய் இங்கப் பாருடி, முதலில் எனக்கும், என் மகளுக்கும் தான் இந்த வீட்டில் முதல் உரிமை… அப்புறம் தான் எவளுக்காக இருந்தாலும் புரிகிறதா" என…


சுபிக்கு சுறுசுறுவென கோபம் ஏறியது. சுகந்தியைப் பார்த்து ஏதோக் கூற வர….


சுபி ஏதோ ஏடாகூடமாகப் பேசப் போகிறாள் என்பதை, அவள் முகத்தைப் பார்த்தே உணர்ந்துக் கொண்ட கவின், அவள் அருகில் வந்து கையைப் பிடித்து கொண்டு, சுபி எதுவும் சொல்லாத ப்ளீஸ் எனக் கெஞ்ச…


அவளோ எதையும் காதில் வாங்காமல் வார்த்தைகளை விட்டாள்.


என்னது எனக்கு உரிமை இல்லையா … இது எங்க தாத்தா கொடுத்த வீடு, எனக்கு எல்லா உரிமையும் இருக்கு என்றுக் கூறி விட…


அவ்விடத்தில் ஒரு நொடி … எள் விழுந்தாலும் ஓசைக் கேட்குமாறு அவ்வளவு அமைதியாக இருந்தது.


அடுத்த நொடி… வில்லிலிருந்து அம்பு பாய்வதுப் போல, வேகமாக கவினிடமிருந்து மறுமொழி வந்தது.


ஹேய் இங்கப் பாருடி… இந்த சொத்து வேணும் என்றால் தாத்தா கொடுத்ததாக இருக்கலாம். ஆனால் உழைப்பு முழுவதும் எங்க அப்பாவோடது. அதனால் அதில் அவரது தங்கைக்கு இல்லாதது எதுவும் இல்லை. புரியுதா உனக்கு என்று கடினக் குரலில் கூறினான்.


"பேசாத வார்த்தைக்கு நாம் எஜமான்…

பேசிய வார்த்தை நமக்கு எஜமான்…"

என்பதை உணராத சுபி ஆத்திரத்தில் வார்த்தைகளை விட்டு விட்டு இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள்.


அத்தான் என்று ஏதோ சுபிக் கூற வர…


"ஜஸ்ட் ஷட் அப் ஐ சே" இல்லைணா கிளம்பு இங்கிருந்து, ப்ளீஸ் கிளியர் திஸ் ப்ளேஸ் என்று கவின் கடினக் குரலில் கூறினான்.


சுபி கண்கள் கலங்க நிமிர்ந்துப் பார்த்தாள்…


"சுபிக் கொஞ்சம் அமைதியாக இருந்தால் தான் சூழ்நிலையை சமாளிக்க முடியும். ஆனால் அவள் இங்கிருந்தால் அது முடியாது என்பதால், சுபி இப்போது வீட்டை விட்டு செல்வதே நலம் என்று எல்லோரும் அமைதியாக இருந்தனர்."


யாரும் எதுவும் சொல்லவில்லை, என்பதை புரிந்துக் கொண்ட சுபி, கவினைப் பார்க்க, அவனோ வேறு புறம் பார்வையை திருப்பிக் கொண்டான்.


சுகந்தியோ நக்கலாக பார்த்தாள்…


சுபி அவமானத்துடன், நிலைகுலைந்து அவ்வீட்டை விட்டு விறு விறு வென்று வெளியே சென்றாள்.


கவினோ, அவளது அடிப்பட்ட பார்வையை சந்திக்க இயலாது, அவளது பார்வையை தவிர்த்தான்.


பார்வதியும், ஈஸ்வரனும் தனது பெரிய மகள் தவறே செய்திருந்தாலும் அடிபட்ட மானாக கதறிக்கொண்டிருப்பவளை விட்டு விட்டுச் செல்ல மனம் இடம் கொடாமல் இங்கேயே இருந்தனர்.


சுபி தைரியமாய் இருந்துக் கொள்வாள் என்று நம்பி, அவள் கூட செல்லவில்லை.


சுபி சென்றவுடன் அவ்விடம் மிகவும் அமைதியாக இருந்தது.


அங்கிருந்த அமைதியை கவினின் குரல் கலைத்தது.


தீப்தி முதலில் அழுகையை நிறுத்தி விட்டு இங்கே வா என அழைத்தான்.


சுகுமாரனின் தோளில் சாய்ந்து அழுதுக் கொண்டிருந்த தீப்தி மெல்ல அவனருகில் வந்து நின்றாள்.


அழுதழுது சிவந்த முகத்தைப் பார்த்தவன், கண்களைத் துடைத்துக் கொள் தீபுமா எனக் கனிவாக கூறினான்.


கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்.


இங்க பாரு தீபு மா, நீ நவீனை ரொம்ப லவ் பண்ணியா என்று கவின் கேட்க…


இல்லை என தலையசைத்தாள்.


அப்போ, என்னைய ரொம்ப விரும்புறீயா எனக் கேட்க..


இல்லை என மீண்டும் தலையசைத்தாள்.


பிடிக்காதா என்னை ஏன் கல்யாணம் செய்துக்கிறேன் என்று ஏன் சொல்லுறடா? என வினவ…


அது அத்தான், மாமா வீட்டிற்கு திருமணம் செய்து வந்துவிட்டால் எந்த பிரச்சனையும் வராது, உறவும் என்னைக்கும் தொடரும் என்று அம்மா அடிக்கடி சொல்லுவாங்க, அதான் என்றாள்.


இங்கப் பாரு தீபு மா… விருப்பம் இல்லாத கல்யாணம் என்னைக்கும் சரி வராது டா… இது வாழ்க்கைப் பிரச்சினை… நான் உனக்கு, உன் மனதுக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை அமைச்சு தரேன். அப்படியே உங்க மாமா வீடு மாதிரி பிரச்சனை இல்லாத வீடாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் சரியா என…


தீப்தியோ, ம் என்று புன்னகைத்தாள்.


சுகந்தியிடம் திரும்பி‌, " அத்தை தீப்தி திருமணம் எனது பொறுப்பு" என்றான்.


டேய் கவின், ஏதோதோ சொல்லி என் பொண்ணை குழப்பி விட்டுட்ட‌‌… அதே மாதிரி என்னைய ஏமாற்ற முடியாது… உனக்கு ஒரு வருடம் டைம் அதுக்குள்ள என் பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கல… அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன் என்றாள்.


சரி அத்தை நீங்க போய் உங்க ரூம்ல ரெஸ்ட் எடுங்க…


எதுக்கு நான் இங்கே... நீங்க சம்பந்தி விருந்து செய்வீங்க… அதில் நாங்கள் அதிகப்படி… நாங்க கிளம்புறோம்.


ஏய் தீப்தி ஏன் இன்னும் மசமசன்னு நின்னுட்டு இருக்க, சீக்கிரம் கிளம்பு என்றவள், சுந்தரத்திடம் திரும்பி உங்களுக்கு வேற தனியா சொல்லணுமா வாங்க என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.


பத்மாவிடம் சென்று, " அம்மா… நீங்க நவீனையும், நீரஜாவையும் அழைத்துச் சென்று ஏதாவது சாப்பிடக் குடுங்க" என்றான் கவின்.


பத்மாவும் எதுவும் பேசாமல் அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்று முகம் கழுவி வரச் சொல்லி விட்டு, மனசு கேளாமல் சாமியறைக்கு அழைத்துச் சென்றவர் விளக்கேற்ற சொல்லி விட்டு பிறகு பால் பழம் கொடுத்தார்.


சுகுமாரனும் எதுவும் பேசாமல் தனது அறைக்குச் சென்று விட்டார்.


கவின் தான் பார்வதி, ஈஸ்வரனிடம் சென்று, " அத்தை, மாமா நீங்களும் வீட்டிற்கு போய் சுபியைப் பார்த்துக்கோங்க எனக் கூற…


அதுவும் சரி தான் என்று தளர்வுடன் கூறியவர், சிறு தயக்கத்துடன் நீரஜாவைப் பார்த்துக்கோங்க மாப்பிள்ளை எனக் கூற…


ஏன் மாமா இவ்வளவு கவலைப் படுறீங்க… நீங்க போங்க, நான் காலையில் நவீனையும், நீரஜாவையும் அழைச்சிட்டு வரேன். அம்மா, அப்பா வருவாங்களா என்று தெரியவில்லை. அவர்கள் கோபமும் நியாயம் தானே மாமா. கொஞ்சம் நாள் ஆனால் சரியாகி விடும் மாமா என்றான்.


ஆனால் அவனுக்கு அப்பொழுது தெரியவில்லை இன்றே எல்லோரும் சேர்ந்து அவர்கள் வீட்டிற்கு செல்லப் போகிறார்கள் என்று…


சரி என தலையாட்டி விட்டு இருவரும் அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டு விட்டனர்.



************************

சுபி விறு விறு என அந்த வீட்டை விட்டு வெளியே சென்றாள். மனமோ உலைக்களமாகக் கொதித்தது.


வெளியே சென்ற சுபியை சற்று அதிர்ச்சியாகப் பார்த்தார் கேட்டிலிருந்த வாட்ச்மென்.


ஏனென்றால் எப்போது அவரைப் பார்த்தாலும் வம்பு இழுக்காமல் செல்ல மாட்டாள்.


அவள் வேகமாக வெளியே அதுவும் இந்த மதிய நேரத்தில் நடந்து செல்வதை பார்த்தவர்… எங்கே போறாங்க என கவனித்தார்… ஏனென்றால் வீட்டிற்கு போவதென்றால் தோட்டத்தில் உள்ள பக்கவாட்டு கதவு வழியே சென்று விடுவாள்.


அவர் நினைத்தது போலவே அவர்கள் வீட்டிற்கு எதிர் திசையில் செல்வதைப் பார்த்தவர், ஏதோ சரியில்லை என்று யோசிக்க…


அவரது யோசனையை தடை செய்வது போல … விடாமல் அடித்த காரின் சத்தத்தில் அதிர்ந்து வேகமாக கேட் கதவை நன்கு திறந்து வைத்தார்.

'என்ன இது சுகந்தி அம்மா, இப்போ தான வந்தாங்க அதுக்குள்ள கிளம்பிட்டாங்க… ' என்னமோ நடந்திருக்கு, நாம சுபி மா போனதை கவின் ஐயாக்கிட்ட போய் சொல்லுவோம் என வீட்டுக்குப் பக்கம் திரும்ப… ஈஸ்வரனின் காரும் வெளியே வந்தது.



அவரிடம் சென்று ஐயா… சுபி மா வீட்டுக்குப் போகாமல் எதிர் திசையில் போனாங்க என்றார்.


சரி நான் பார்த்துக்கொள்கிறேன் நீ போய் வேலையை பாரு என்று அனுப்பிவிட்டார்.



பார்வதி அவ பார்க்குக்கு தான் போயிருப்பாள்.. கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு வருவா… நாம வீட்டுக்குப் போகலாம் என்றுக் கூறி விட்டு காரை எடுத்தார்.


வாட்ச்மென் நேராக கவினிடம் சொல்லிருந்தால், அவன் அவளைத் தேடி சென்றிருப்பான். சுபிக்கும் எந்த பிரச்சனையும் வந்திருக்காது. விதி வலியது, சுபி பல இன்னல்களை அனுபவிக்கணும் என்று விதி எழுதியிருக்க அதை யாரால் மாற்ற முடியும்…


ஆனால் சுபி அந்த சோதனையையும் சாதனையாக மாற்றினாள்.


வெளிக்காற்றில் அவளது மனது கொஞ்சம் அமைதியானது‌‌. எப்பவும் மனதில் குழப்பமோ, இல்லை எதையாவது யோசிக்க வேண்டும் என்றாலோ அருகிலுள்ள பார்க்கு நடந்துச் செல்வாள்.


அந்த சாலையில் இருமருங்கிலும் உள்ள மரங்கள், அந்த சாலையை சோலையாக மாற்றிருக்க…


மதிய நேர வெயிலேத் தெரியாமல் சிலுசிலுவென காற்றடிக்க, இவ்வளவு நேரம் சுழன்று அடித்த புயலைக் கிஞ்சிற்றும் நினையாமல் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தாள்.


வழக்கம் போல எதிர்சாரியில் இருந்த ஒரு வீட்டைப் பார்த்தவுடன் நின்று விட்டாள். அது வசதியானவர்கள் வசிக்கும் பகுதி. பெரும்பாலான வீடுகள் தனி வீடுகளாகத் தான் இருக்கும். அந்த வீடும் ஒரு தனி வீடு…


அந்த வீட்டின் கதவு எப்பொழுதும் திறந்து தான் இருக்கும். அந்த வீட்டின் வாட்ச்மேனும், தோட்டக்காரரும் சற்று வயதானவர்கள் அதனால் உள்ளே எங்கேயாவது உட்கார்ந்து பேசிக் கொண்டு இருப்பார்கள்.


அந்த வீட்டின் உறுப்பினர்களை ஒரு முறையேனும் பார்த்ததில்லை சுபி.


அந்த வீட்டின் தோட்டத்தில் அவளுக்கு மிகவும் பிடித்த வைலட் கலரில் பூக்கள் பூத்துக் குலுங்கும்.

அப்பூக்கள் அலியம் வகையைச் சேர்ந்தது. பொதுவாக அது குளிர்பிரதேசங்களில் தான் இருக்கும். அந்த அபூர்வ வகை பூக்களைப் பார்த்தால் ஐந்து நிமிடம் நின்று ரசித்து விட்டு தான் செல்லுவாள்.


அதே போல இன்றும் நின்று ரசித்துக் கொண்டிருந்தவள். உள்ளே நடந்ததைப் பார்த்து ஐயோ! என ஒரு நொடி அதிர்ந்தவள், பிறகு எதைப் பற்றியும் யோசிக்காமல் வேகமாக சாலையைக் கடந்து அவ்வீட்டிற்கு சென்றாள்.


வழியில் வந்த ஒரு பைக்காரர் இவள் மேல் மோத வந்து ஒரு நானோ செகன்டில் ப்ரேக் பிடித்து,இவளைத் திட்டிக் கொண்டே சென்றதைக் கூட அறியவில்லை.


இவளது கவனம் முழுவதும் எதிர் திசையில் இருந்த அந்த வீட்டில் இருந்த குழந்தையிடமே இருந்தது.


எப்படியாவது அந்த குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.


தொடரும்…..
 
Last edited:
Top