Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உருமாற்றம் 5

Jeyalakshmimohan

Member
Member
ஊரடங்கு போடப்பட்டாலும் பெரிதாக எந்த பிரச்சனையுமில்லாமல் சில நாட்கள் கழிந்தன. கொரோனா தாக்கம் குறையாததால் ஊரடங்கு நாட்கள் நீட்டிக்கப்பட்டது. அதனால் பூங்குளத்தில் தினக்கூலி வேலைக்கு செல்லும் மக்களுக்கு பொருளாதார பிரச்சினை ஏற்பட்டது.வசதியான மக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏதுமில்லை. சாந்தி வீட்டு செலவை எப்படி சமாளிப்பது என விழித்தாள். அவள் தம்பி கண்ணன் பணம் தருவதாக கூறியும் அதை அவள் ஏற்கவில்லை. உன் எதிர்காலத்துக்கு கல்யாணத்துக்கு தேவைப்படும். அதனால் நீயே சேர்த்து வைத்துக்கொள் என உறுதியாக கூறி விட்டாள்.

அவள் கணவன் மணியோ யார் காட்டிலோ மழை பெய்வது போல் எதையும் கண்டுக்காம சுற்றிக் கொண்டிருந்தான். மளிகை கடையில் ஏற்கனவே 300 ரூபாய் பாக்கி பணம் தர வேண்டி இருந்தது. இதுதான் சமயம் என்று பல கடைக்காரர்கள் பொருட்களின் விலையை ஏற்றினர். "நீ கவலை படாதே அக்கா, உனக்கு என்ன வேணும் சொல்லு நான் கடைக்கு போய் வாங்கிட்டு வரேன். இந்த சின்ன உதவி கூட செய்யக்கூடாதா? நான் உனக்கு அவ்ளோ அந்நியனாகிட்டானா" என கூறினான் கண்ணன். சரி கோவிச்சுக்காதே வாங்கிட்டு வா என சில அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்கி வருமாறு கூறி அனுப்பினாள் சாந்தி. கண்ணன் அவள் கூறிய அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொண்டு வரும் வழியில் அவன் நண்பர்களை சந்தித்தான். ஊருக்கு வரும்போதெல்லாம் இவர்களுடன் சேர்ந்து தான் சுத்திக் கொண்டிருப்பான்.

"டேய் சதீஷ் எப்படி இருக்க?' என அவன் தோளில் தட்டிய படி கேட்டான் கண்ணன்." நான் நல்லா இருக்கேன்டா, நீ எப்படி இருக்க? ரொம்ப நாளா ஆள காணோம். பூங்குளம் பக்கம் வராதே இல்லை. என்ன பொண்ணு ஏதாவது ஓகே ஆயிடுச்சா" என சிரித்துக்கொண்டே கேட்டான் சதிஷ். "பொண்ணுன்னு சொன்னவுடனே மச்சான் முகத்துல வெட்கத்தைப் பாரு, ஒரு ஒளிவட்டம் தெரியுது. அப்ப ஏதோ பொண்ணு உன் வாழ்க்கைல வந்துட்டா போல" என கிண்டலாக கேட்டான் இன்னொரு நண்பன். "அப்படி எல்லாம் இல்ல, நீங்க வேற... என் மனசுக்கு பிடிச்ச மாதிரி எந்த பெண்ணையும் இதுவரை நான் பாக்கல டா" என கண்ணன் சொல்லவும் அனிதா எதிரே வரவும் சரியாக இருந்தது.

கண்ணன் அவளை பார்த்தவுடன் அப்படியே வாய் அடைத்து நின்றான். அவ்வளவு அழகு தேவதை போல் இருந்தாள். மஞ்சள் நிற மாலை வெயிலில் தங்கம் போல ஜொலித்தாள். இது அன்னைக்கு பார்த்த பொண்ணு தானே என யோசித்தபடியே கண்களை சிமிட்டாமல் அவளையே பார்த்தபடி வழியை அடைத்து கொண்டு நின்றான். "ஹலோ.... நகருங்க வழியை விடுங்க, காது கேட்காதா..... பப்ளிக்ல மாஸ்க் கூட போடாம சோசியல் டிஸ்டன்ஸ் மெயின்டன் பண்ணாம இப்படி கும்பலா நின்னு பேசிட்டு இருக்கீங்க...... கொரோனவைரஸ் ஸ்பிரேட் ஆக கூடாதுன்னு தானே லாக்டவுன் போட்டாங்க, அதை மதிக்காமல் இப்படி சுத்திட்டு திரியுறீங்க. நீங்க எல்லாம் படிச்ச பசங்க தானே... மக்களுக்கு அவார்னஸ் கொடுக்க வேண்டிய நீங்களே இப்படி செஞ்சா நல்லா இருக்கா?” என அவள் பாட்டுக்கு தொடர்ந்து திட்டிக்கொண்டு இருக்க, கண்ணனோ புன்னகையுடன் தலையை ஆட்டியவாறு அவளைப் பார்த்து வழிந்து கொண்டிருந்தான். உங்களையெல்லாம் திருத்தவே முடியாது என சொல்லியவாறே தலையில் அடித்துக்கொண்டு கிளம்பி விட்டாள்.

"இவ மாணிக்கம் ஐயா இருக்காரு இல்ல அவருடைய பொண்ணு அனிதா. படிச்ச திமிரு எப்படி சீன் போட்டுட்டு போறா பாரு" என்றான் சதிஷ்.
" ஓ.... அவ பேரு அனிதாவா, எங்க சீன் போட்டா உண்மைய சொன்னா. சரியா தாண்டா பேசினா" என அவள் போவதை பார்த்தவாரே சொன்னான் கண்ணன். "டேய் வேணாண்டா, இது பெரிய இடம் பொண்ணு கொஞ்சம் திமிரு பிடிச்சவ அப்புறம் பிரச்சினை ஆகிடும்" என எச்சரிக்கை செய்தான் மற்றொரு நண்பன். "நாங்க பாக்காத பிரச்சனையா ? அவ எனக்குத்தான் என எழுதி இருந்தா அத யாராலையும் மாத்த முடியாது" என்ற கண்ணன் திடீரென "ஐயோ நேரம் ஆயிடுச்சு அக்கா மளிகை பொருள் எல்லாம் சீக்கிரம் வாங்கிட்டு வர சொன்னாங்க, கடைக்கு போனாவன இன்னும் காணோமே என திட்டிட்டு இருப்பாங்க, நான் கிளம்பறேன். நாளைக்கு பாக்கலாம் டா...." என சொல்லிவிட்டு கிளம்பினான் கண்ணன்.

அவன் வீட்டுக்கு வந்ததும் சாந்தி அவனை பார்த்து, "ஏண்டா கடைக்கு போறேன்னு தான சொன்ன, இவ்வளவு நேரம் எங்க போன? அங்க இங்கன்னு முன்ன மாதிரி பசங்களோட சுத்தி திரிஞ்சிட்டு அப்புறம் வீட்ல இருக்கவங்களுக்கு நோயை கொண்டாந்து விட்டுடாத, புள்ளகுட்டி எல்லாம் இருக்கு சொல்லிப்புட்டேன் ஆமா" என கண்டிப்புடன் கூறினாள் சாந்தி.

"நீ பயப்படாத அக்கா. எனக்கு தெரியும் நான் பார்த்து நடத்துகிறேன். முதல்ல உன் புருஷனை சரியா இருக்க சொல்லு ஊருக்கு வந்ததில் இருந்தே பாக்க முடியல. எங்க சுத்திட்டு இருக்காரு" எனக் கேட்டான் கண்ணன். "காலையில சாப்பிட்டு போன மனுஷன் இன்னும் ஆள காணோம் டா, சரி விடு இந்தா டீ குடி என டம்ளரை நீட்டியபடி கூறினாள். கண்ணன் தொலைக்காட்சியில் செய்தி பார்த்தவாறு மெதுவாக டீ குடித்துக் கொண்டிருந்தான்.
விளையாடி முடித்து விட்டு வீட்டிற்கு வந்த ரவி "மாமா எப்பவும் செய்திதான் பார்ப்பியா? உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்லுது தெரியுமா... எப்பவும் டிவில கொரோனா நிலவரம் பற்றிய செய்தியை போட்டு கேட்டா மன அழுத்தம், தேவையில்லாத பயம் அதிகம் வருமாம். ரிமோட்டை குடு இப்படி" என பிடுங்கி கார்ட்டூன் சேனல் மாற்றினான்.

"இதெல்லாம் நல்லா பேசு. வெளியில போயி விளையாடிட்டு வரியே முதல்ல சோப்பு போட்டு கை கால் கழுவினியா ? கால் எல்லாம் பாரு எவ்வளவு அழுக்கு. இன்னைக்கு குளிக்கவே இல்லை தாண்டா நீ, முதல்ல போய் குளி" என அதட்டினாள் சாந்தி.

மணி தன் நண்பர்களுடன் ஊர் சுற்றிவிட்டு அப்போது தான் வீட்டுக்கு வந்தான். "ஏ சாந்தி.. ஒரு டம்ளர் சூடா டீ கொண்டு வா" என அதிகாரமாக கூறினான். "ஆமா துறைக்கு அது ஒன்னு தான் குறைச்சல். வீட்டு செலவுக்கு பணம் இல்லை மளிகை கடை பாக்கி இருக்கு, மாசம் பொறந்தா கடங்காரன் வாசல்ல வந்து நின்னு கத்துவான், சீட்டு காசு வேற கட்டணும்.அதை பத்தி எல்லாம் கொஞ்சம் கூட கவலையோ பொறுப்பு இல்லாம, நீ பாட்டுக்கு ஜாலியா வயசு பையன் மாதிரி ஆட்டம் போட்டுக்கிட்டு ஊர சுத்திட்டு திரியுற" என பாத்திரங்களை உருட்டிய படியே கத்தினாள். "ஆமாம் இப்ப எதுக்குடி கத்தறே...ஊரடங்கு போட்டதால் வேலையும் இல்ல, வீட்டுக்கு வந்தா எப்பவும் சண்டை இழுத்துக் கொண்டே இருக்க, பணம் வேணும்னா போய் பேங்க்ல கொள்ளை அடிச்சுட்டு வந்த தான் உண்டு" எனக் கோபமாகக் கூறினான் மணி.

"மாமா கோபப்படாதீங்க எல்லாம் சமாளிச்சுக்கலாம். அக்கா நீயும் சும்மா மாமாவை திட்டிட்டே இருந்தா, அப்புறம் அவரு எப்படி வீடு தாங்குவார்” என்றான் கண்ணன். "டேய் கண்ணா.... எப்படா வந்த, நான் உன்னை கவனிக்கவே இல்ல பாரு..... உனக்காவது டீ போட்டுக் கொடுத்தாளா இல்லையா" என புன்னகையுடன் கேட்டான் மணி. குடிச்சிட்டேன் மாமா வாங்க வெளியில காத்தோட்டமா உட்கார்ந்து பேசுவோம் என கண்ணன் கூற மாமனும் மச்சானும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தனர் .

அடுத்த நாள் காலையில் அலமேலு, சாந்தி வாசல் முன் நின்று "அடியே ....சாந்தி என்ன பண்ணிட்டு இருக்க இன்னைக்கு ரேஷன் கடையில கொரோனா நிவாரணம் 2000 ரூபாய் தரங்களாம், நான் போய் லைன்ல நிற்கிறேன். நீ சீக்கிரமா வா" என கூறிவிட்டு வேகமாக நியாயவிலை கடைக்கு சென்றாள்.

பாத்திரம் கழுவி கொண்டிருந்த சாந்தி அதை அப்படியே போட்டு விட்டு அவளும் நியாயவிலை கடைக்கு சென்று கொரோனா நிவாரண தொகையை வாங்கி வந்தாள். கூட்டத்தை கூட்டாமல் வேகமாக குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பணம் கொடுத்து அனுப்பினார் நியாய விலை கடை ஊழியர்.

மணி வேகமாக வீட்டுக்கு வந்து "சாந்தி... சாந்தி.... சீக்கிரம் ரேஷன் சீட்டை குடு,2000 ரூபாய் தராங்களாம் நான் போய் வாங்கிட்டு வரேன்" என அவசரப்படுத்தினான். "நீ மழைக்கு கூட ரேஷன் பக்கம் ஒதுங்க மாட்ட, போன வாரம் அரிசி போடுறாங்க போய் வாங்கிட்டு வான்னு சொன்னா, போகமாட்டேனு சொல்லிட்ட... நான் எவ்வளவு நேரம் வெயில்ல கூட்டத்தில் நின்னு வாங்கிட்டு வந்தேன். இப்ப பணம் கொடுக்குறாங்கனு தெரிஞ்சதும் ஸ்டோருக்கு போகிற பொறுப்பு வந்துடுச்சா ? நீ கவலைப்படாதே நான் போய் வாங்கிட்டு வந்துட்டேன்" என்றாள். வாங்கிட்டு வந்துட்டியா சரி என்கிட்ட கொடு என மணி கேட்க, முடியாது வீட்டு செலவுக்கு வேண்டும் என மறுத்தாள். வெளிய போற ஆம்பளைக்கு ஆயிரம் செலவு இருக்கும் என வழக்காடி அவளிடம் ஒரு 500 ரூபாய் பிடுங்கி சென்றான். ரவியும் அவன் தம்பி கிட்டுவும் அவர்கள் பங்குக்கு பத்து இருபது ரூபாய்களை வாங்கிக் கொண்டு விளையாட சென்று விட்டனர்.

கடன் வட்டி காசு 500 ரூபாய் அப்புறம் சீட்டு காசு 400 ரூபாய், மல்லிகை கடை பாக்கி 300 ரூபாய் மிச்சம் 200 ரூபாய் தான் இருக்கு. இத வச்சு எப்படி குடும்பம் நடத்துவது என யோசித்தாள். பேசாம மல்லிகை கடை பாக்கியை அடுத்த வாரம் தருவதாக கடைக்காரரிடம் பேசி சமாளிக்க வேண்டியதுதான் என முடிவு செய்தாள்.

ரவி சங்கிலியின் வீட்டிற்கு அவனைப் பார்க்கச் சென்றான். "டேய் இங்க பார்த்தியா எங்கம்மா எனக்கு இருபது ரூபா குடுத்துசு" என ரூபாய் நோட்டை ஆட்டிக் காட்டினான் ரவி. இது என்ன பெரிய காசா இங்க பாரு 100 ரூபாய் என ஒத்த 100 ரூபாய் நோட்டை பல்லை காட்டியவாறு ஆட்டினான் பழனி. "என்னடா எல்லோரும் வீட்டில காசு வாங்கிட்டு வந்து கடுப்பேத்துறீங்களா, இப்ப பாரு என் திறமையை' என அவன் ஆயாவிடம் ஓடினான் சங்கிலி. “ஆயா... ஆயா... ஸ்டோரில் இன்னைக்கு பணம் கொடுக்கிறார்கள். ஆம்பளைங்க லைன்ல கூட்டம் கம்மியா தான் இருக்கு ஸ்மார்ட் கார்டை குடு ஆயா நான் போய் வாங்கிட்டு வரேன்" பொறுப்பாக பேசினான் சங்கிலி. "என்ன தங்கம் ஆயாவுக்கு வேலை செய்ய அவ்வளவு ஆசையா" என சின்னத்தாயி கேட்க வேகமாக தலையை ஆட்டினான் சங்கிலி. "கவலைப்படாத, காலையிலே நீ எந்திரிகரத்துக்கு முன்னாடியே, முதல் ஆளா போய் பணம் வாங்கிட்டு வந்துட்டேன். நீ போய் சாணி அள்ளிட்டு வீடு வாசலை சுத்தமா கூட்டி விடு சரியா" என்றாள் சின்னதாயி. சோகமாக தலையை தொங்க விட்டபடி சென்ற சங்கிலியை சின்னத்தாயி அழைத்து, சரி இந்த காசு என ரூபாய் நோட்டை நோட்டுகளை எண்ணி சுருக்குப் பையில் வைத்துக் கொண்டு நன்றாக துழாவி ஒரு ஐந்து ரூபாய் காசை எடுத்து நீட்டினாள். சங்கிலி அந்த ஐந்து ரூபாயை வாங்கி பார்த்தபடி முகத்தை சுளித்தான். ரவியும் பழனியும் சங்கிலியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். வசதி இல்லாதவர்களுக்கு இந்த கொரோனா நிவாரண நிதி கொஞ்ச நாளைக்கு நாட்கள் கடத்த உதவியாக இருந்தது.
 
Top