Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உருமாற்றம் 4

Advertisement

Jeyalakshmimohan

Member
Member
2765
அடுத்த நாள் காலையில் அம்மா அனிதாவுக்கு காபி கொடுக்க அவள் அறைக்கு சென்றாள். "இன்னும் என்னடி தூக்கம் எழுந்திரு" என தட்டி எழுப்பியவள் அனிதாவின் கழுத்தைத் தொட்டுப் பார்த்துவிட்டு "என்னடி உடம்பு இப்படி நெருப்பாய் கொதிக்குது. நேத்து கிண்டல் பண்ணி சிரிச்சிட்டு இருந்த இல்ல அதனால சாமி குத்தமாயிருச்சி" என்றாள்.

"அம்மா காலையிலேயே ஆரம்பிக்காத நேத்து ஜில்லுனு ஷவரில் தலைக்கு குளிச்சன் அது தான் ஒத்துக்கல போல ஜலதோஷம் பிடிச்சிருச்சு, அதனால காய்ச்சலும் வந்துருச்சு" என்றாள். "அம்மா பால் வாங்கிக்கோங்க" என சின்னத்தாயி வெளியில் இருந்து குரல் கொடுத்தாள். "அம்மா காலைல நேரமா பால் கொண்டு வராமல் காபி போட்டுக் குடிச்ச பின் கொண்டு வர" என்றாள் அனிதா அம்மா. "காலையில் எழுந்திருக்க கொஞ்சம் நேரம் ஆச்சு இனிமே அப்படி நடக்காது, அப்போ இன்னைக்கு பால் வேண்டாமா கண்ணு" என கேட்டாள் சின்னதாயி. "ஊத்துங்க அனிதாவுக்கு வேற உடம்பு சரியில்ல சளி காய்ச்சல் புடிச்சிருக்கு. சாப்பாடு வேணாம் பால் மட்டும் போதும்னு சொல்லிட்டா" என்றாள்.

என்ன பாப்பாக்கு காய்ச்சலா இரு நான் பார்க்கிறேன் என உள்ளே சென்று நெற்றியில் தொட்டு பார்த்து ஆமா கொஞ்சம் காய்ச்சல் இருக்கு என்று சொல்லி அனிதாவிற்கு கண்ணை மூடி பாடம் போட்டாள் சின்னதாயி. "ஆயா என்ன செய்றீங்க அம்மா என்னம்மா இதெல்லாம்" என கடுப்பானாள் அனிதா. செத்த நேரம் பொறு தாயி என சொல்லிவிட்டு சமையலறை எங்கே இருக்கு என கேட்டு அறிந்து அங்கே சென்று கசாயம் வைத்து எடுத்து வந்து இந்தா குடி சூடான கசாயத்தை கொடுத்தாள் சின்னதாயி. அதை முகர்ந்து பார்த்துவிட்டு எனக்கு வேணாம் என முகத்தை திருப்பிக் கொண்டாள் அனிதா. ஒழுங்கா வாங்கி குடி என அதட்டினாள் அம்மா. வேறு வழியின்றி கசாயத்தை வாங்கி கொஞ்சம் குடித்து விட்டு அம்மா வேணாம் ரொம்ப கசக்குது என்றாள். மருந்து என்றால் கசக்கத்தான் செய்யும் சிரமம் பாக்காம குடித்தாயி என்றாள் சின்னத்தாயி. சரி என கண்ணை மூடிக்கொண்டு முழுவதையும் குடித்தாள். "குடிச்சிட்டியா சும்மா படுத்துட்டு இருக்காமல் வெளியில நடந்துட்டு வா... சாய்ந்தரமும் இந்த கசாயத்தை வச்சு குடி அப்புறமா சரியாகிடும்" என்றாள் சின்னதாயி.
"அப்படியா சரி என்ன எல்லாம் போடணும் ஒருமுறை சொல்லிட்டு போங்க" என்றாள் அனிதா அம்மா. "கொஞ்சம் துளசி, கற்பூரவள்ளி, மிளகு, சீரகம், மஞ்சள் தூள், ஆடுதொடா இலை இன்னும் சில செலவு எல்லாம் சேர்த்து போட்டு தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து பிள்ளைக்கு சூட குடு" என்றாள் சின்ன தாயி.

மாலையும் அதே மாதிரி கசாயம் வைத்து அனிதாவின் அம்மா அவளுக்கு கொடுத்தாள். சளி காய்ச்சல் உடல் வலி எல்லாம் பறந்தே போச்சு நான் கூட அந்த ஆய்வை என்னமோ நினைச்சேன் கிரேட் என்றாள் அனிதா.

"இப்பயாவது புரிஞ்சுக்கோ பெரியவங்க சொல்லுற ஒவ்வொன்னுலையும் ஏதாவது அர்த்தம் இருக்கும்" என்றாள் அம்மா. "நான் எப்போ பெரியவங்க பேச்சை கேட்க மாட்டேன்னு சொன்னேன். நல்லதை யார் சொன்னாலும் எடுத்துக்குவேன். பாட்டி வைத்தியம் கூடாது அவங்க எது சொன்னாலும் தப்புன்னு நான் சொல்ல மாட்டேன் ஆனால் ஒரு சில மூடநம்பிக்கைகளையும் என்னால ஏத்துக்க முடியாது. சித்த மருத்துவம், அலோபதி எது நோயை குணப்படுத்துமோ அதை கண்டிப்பா ஏற்று கொள்ள வேண்டும் என்றாள்.

மல்லிகை பூவெல்லாம் செடியிலேயே அப்படியே வெடிச்சி வீணா போகுது.சரியா பூ வரத்து அதிகம் வர சீசனில் ஊரடங்கு போட்டுட்டாங்க, அதனால பூ எடுக்காம செடியிலே விட்டாலும் அடுத்தடுத்து வர மகசூல் குறைந்து விடும். பூந்தோட்டம் வச்சிருக்கிற நம்மள மாதிரி ஆளுங்களுக்கு வருமானம் இல்லன்னா கூட பரவாயில்லை. ஆனா எவ்வளவு நஷ்டம் தெரியுமா? இந்த பூஞ்செடிக்கு உங்க அப்பா எவ்வளவு செலவு பண்ணி இருக்காரு தெரியுமா.மல்லிப்பூ எல்லாம் செடியிலே வீணா வெடிச்சி கடக்கு, போய் பரிச்சிட்டு வந்து கட்டி வை. நாளைக்கு வெள்ளிக்கிழமை சாமி படத்துக்காவது போடலாம் என்றாள் அம்மா. சரிமா என சொல்லிவிட்டு தோட்டத்துக்கு போனாள் அனிதா. அவள் அப்பா சாமந்திப்பூ வயல் வரப்பு ஓரம் சோகமாக அமர்ந்தபடி யோசித்துக் கொண்டிருந்தார். என்னப்பா இங்க இங்க உட்கார்ந்து கிட்டு என்ன செய்றீங்க என கேட்டாள்.

"போன வருஷம் எல்லாம் இந்நேரம் சாமந்தி காடு அழகா பூத்துக் குலுங்கியது. வேலை செய்ற ஆளுங்க எல்லாம் கலகலன்னு பேசி சிரிச்சிட்டே சாமந்திப்பூ எடுத்துட்டு இருந்தாங்க. ஆனா இந்த வருஷம் பாரு எவ்வளவு செலவு பண்ணி சாமந்தி வெள்ளாம செஞ்சேன் ஆனா அறுவடை பண்ணுற காலத்திலே ஊரடங்கு வந்ததால சாமந்தி பூவெல்லாம் அப்படியே செடியோட காஞ்சி கிடக்கு. இதுல வர்ற வருமானம் நமக்கு மட்டும் இல்லாம சாமந்தி பூ எடுக்கிற கூலிகாரர்களுக்கும் ஒரு நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து. இந்த வருஷம் எல்லாம் வீணா போச்சு, பெருத்த நஷ்டம் ஆயிடுச்சு. இங்க காஞ்சி வாடி வதங்கி போய் கிடக்கிறது வயல் மட்டுமல்ல எங்களை மாதிரி விவசாயிகளோட வாழ்க்கையும் தான்" என வருத்தத்துடன் சொன்னார் மாணிக்கம்.

பூங்குளம் கிராமத்தில் மல்லிகை பூ தோட்டம் தான் அதிகம் இருக்கும். பூ மகசூல் அதிகம் வரும் சமயத்திலே ஊரடங்கு வந்துவிட்டதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். இந்த பூ வருமானம் தான் பூந்தோட்ட காரர்களுக்கும் சரி பூ எடுக்கும் வேலை ஆட்களுக்கும் சரி வீட்டு செலவுக்கு பேருதவியாக இருந்தது. சாமந்தி பூ விவசாயம் செய்தவர்களுக்கும் ஊரடங்கு பேரிடியாக தானிருந்தது. சாமந்தி பூக்களும் எடுக்கப்படாமல் செடியிலேயே காய்ந்து சருகாகின.

ஊரடங்கு போட்ட இரண்டு மூன்று நாட்களுக்கு பெரிதாக யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. வீட்டை விட்டு வெளியே சென்றால் கொரோனா வந்து விடுமோ என பயந்து வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். பிள்ளைகளை வீட்டிலேயே இருக்க வைப்பது தான் சிரமமாக இருந்தது. நாளாக ஆக பிள்ளைகள் மீண்டும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தனர். பெரியவர்கள் அக்கம்பக்கத்தினரிடம் கூடி நியாயம் பேச ஆரம்பித்தனர்.

இளவட்ட ஆண்பிள்ளைகள் ஒன்றாக சேர்ந்து பூங்குளம் ஏரியில் மீன் பிடித்து அதை சமைத்து உண்டு பொழுதை கழித்தனர். கடைகள் ஏதும் இல்லாததால் பிள்ளைகளுக்கு நொறுக்குத்தீனி கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டது. பிள்ளைகளை சமாளிப்பது சிரமமாக இருந்தது. அதனால் வீட்டிலேயே பலகாரம் சுட ஆரம்பித்தனர். சுட்ட பலகாரங்களை பக்கத்து வீட்டாருடன் பகிர்ந்துகொண்டனர்.

பூக்கடைகளும் இல்லாததால் மல்லிகை பூ அனைத்து பூங்குளம் பெண்களின் தலைகளில் முழம் முழமாக தொங்கியது.பெருந்தொற்று ஊரடங்கு என்பது மறந்து பூங்குளம் மக்கள் விடுமுறை நாட்களை இனிமையாக்க களித்தனர்.

ரவி தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாட கிளம்பினான். "டேய் ரவி எங்கடா ஆளையே பாக்க முடியல, ஊருல தான் இருக்கியா" என கேட்டான். "சங்கிலி நீ வேற எங்க அம்மா கொரோனா வந்துடும் என்று சொல்லி வெளியவே விளையாட விட மாட்டேங்குது, நம்மள மட்டும் விளையாட வேணாம்னு சொல்லிட்டு பெரியவங்க மட்டும் கூடி கூடி நியாயம் பேசுறாங்க, தாயம் விளையாடுகிறார்கள். இன்னைக்கு எப்படியோ எஸ்கேப் ஆகி வந்துட்டேன்" என ஆதங்கத்துடன் சொன்னான் ரவி. "இது பரவாயில்லை எங்க ஆயா இருக்கே வாசலுக்கு சாணி போடும் போது, பாத்திரம் விளக்கும் போது, வீட்டில் தனியாக இருக்கும் போது கூட முகக்கவசம் போட்டுட்டு சுத்துது. அதோட அலம்பல் தாங்க முடியலடா" என கடுப்புடன் சொன்னான் சங்கிலி. அங்க பாருடா பழனி கைநிறைய முறுக்கு கொண்டு வாரான் என சங்கிலி பழனி கையில் இருந்த முறுக்கை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி சொன்னான்

"இந்தாங்கடா உங்களுக்கு தான் கொண்டு வந்து இருக்கேன். எங்க அம்மா சுட்டாங்க, சரி நீங்களும் சாப்பிடுவீங்கன்னு எடுத்து வந்தேன்" என பழனி முறுக்கை ரவிக்கும் சங்கிலிக்கு கொடுத்தான். சிறுவர்,சிறுமிகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் சந்தோஷமாக விளையாடி பொழுதை கழித்தனர். ஆண்கள் கில்லி, கபடி, கிரிக்கெட் என விளையாடி நாட்களை கடத்தினார். ஊரடங்கு கண்காணிக்க மாலை நேரங்களில் காவலர்கள் வண்டியில் வருவார்கள். அவர்களை பார்த்தவுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் ஆண்கள் என அனைவரும் தெறித்து ஓடி ஒளிவார்கள். காவலர்கள் சென்றபின் மீண்டும் விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.

போலீஸ் வரும்போது சில பெண்கள் ஆலமரம் அருகே அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தனர். "ஏன்மா பார்த்தா எல்லோரும் வயசானவங்க மாதிரி இருக்கீங்க ஊரடங்கை மீறி இப்படி ஒன்னா உட்கார்ந்து கதை பேசிட்டு இருக்கீங்க. கொரோனா வயதானவர்களை அதிகம் பாதிக்கும் என்று சொல்லுறாங்க.... தெரியாதா உங்களுக்கு, மாஸ்க் எங்கம்மா ? போடலையா" என போலீஸ் கடுமையாக பேசவே சேலை முந்தானையை வைத்து அந்தப் பெண்கள் மூக்கை மூடினர். எல்லாரும் வீட்டுக்கு போங்கமா என போலீஸ் சொல்ல அனைவரும் கலைந்து சென்றனர்.

கொரோனா முதல் அலையில் என்னதான் அரசாங்கம் விழிப்புணர்வு செய்தாலும் கிராமத்திலும் சரி நகரத்திலும் சரி நோய் பாதிப்பு தீவிரம் மிகுந்த பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் மக்கள் கொஞ்சம் அலட்சியமாகவே இருந்தனர். முதல் அலையில் பூங்குளம் கிராமம் பெரிதாக தொற்று எண்ணிக்கை ஏதும் இல்லை என்பதால் பயமில்லாமல் பலர் எப்பொழுதும் போலவே ஒன்றாக பேசி பழகி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தனர். சிலர் கொரோனா தடுப்பு வழி முறைகளை தவறாமல் கடைப்பிடித்தனர்.

பூங்குள ஆண்களோ அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து தனியாக கறி சமைத்து சாப்பிட்டு விடுமுறையை கொண்டாடினார்கள். "ரவி அப்பா எங்கடா ரொம்ப நேரமா காணோம்" என சாந்தி கேட்டாள். "அவர் நண்பர்களுடன் வெளியே போனார், அம்மா ஏதோ அவர்களே கறி சமைத்து சாப்பிட போறாங்களாம் பேசிக்கிட்டாங்க" என்றான் ரவி. விஷயமறிந்த சாந்தி "வீட்டுக்கு ஏதாவது வாங்கி போடணும்னா செய்வதில்லை, ஆனால் கூட்டாளிகளுடன் சேர்ந்து கறி சமைத்து சாப்பிட போறாரா, வீட்டுக்கு வரட்டும் அப்புறம் இருக்கு கச்சேரி" என கோபமாக சொன்னாள் சாந்தி.

மணி திருட்டு பூனை மாதிரி மெதுவாக உள்ளே நுழைந்தான். அம்மா எங்க என ரவியிடம் மெல்ல கேட்டான். அம்மா சமைச்சுட்டு இருக்கு என்றான் ரவி. கணவன் வந்தது தெரியவே, "யோவ் எங்கய்யா போன, வீட்டில புள்ளகுட்டி எல்லாம் இருக்கே அவங்களுக்கு ஏதாவது வாங்கி வரணும்னு தோணுச்சா? நீ மட்டும் போய் கறி வறுத்து தின்னுட்டு வர, கூட்டம் சேரக்கூடாது நோய் பரவும் என்று சொல்லுறாங்க.... ஆனா நீ இப்படி கூட்டாளிகளுடன் சேர்ந்து ஊர சுத்திட்டு வரியே, பிள்ளைங்களுக்கு உடம்பு முடியாம போச்சுன்னா என்ன செய்றது" என நிறுத்தாமல் பொரிந்து தள்ளினாள் சாந்தி.

"ஆமா நீ மட்டும் சும்மாவா இருக்க எப்பவும் அந்த அலமேலு வீட்டுல தான் பொம்பளைங்களோட சேர்ந்துகிட்டு நியாயம் அடிச்சிக்கிட்டு தாயம் விளையாடிக்கிட்டு இருக்க, அப்ப எல்லாம் நோய் பரவாதா" என பதிலுக்கு கத்தினான் மணி. வீட்டுல உங்க கூட ஒரு நாள் கூட நிம்மதியா இருக்க முடியாது என மாறி மாறி கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். பிள்ளைகள் இருவருக்கும் இவர்கள் சண்டை போடுவது எரிச்சலாக இருக்கவே வெளியே விளையாட சென்று விட்டனர்.
 

Attachments

  • uru2.jpg
    uru2.jpg
    108.2 KB · Views: 1
Last edited:

Advertisement

Top