Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உருமாற்றம் 2

Advertisement

Jeyalakshmimohan

Member
Member
அதிகாலையில் பொழுது விடிந்து கோழி கூவும் முன்னே சங்கிலியின் பாட்டி சின்னதாயி கூவ ஆரம்பித்து விட்டாள். "ஐயோ காணோமே கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ட்டாங்களே" என பதறியபடி கத்தினாள் சின்னதாயி.

"என்ன ஆயா ஏன் காலையிலே கத்தற? என்ன காணம், உன் சுருக்குப் பையை எவனாவது சுட்டுட்டானா" என கண்களை கசக்கியவாறு தூக்க கலக்கத்துடன் கேட்டான் சங்கிலி. "எவடி அவ இருட்டுல வந்து யாருக்கும் தெரியாம சாணியை வழிச்சிட்டு போனவ, மாட்டுக்கு ஒரு நீச்ச தண்ணி ஊத்த மாட்டாளுங்க, ஆனா சாணியை மட்டும் எடுத்துட்டு போவாளுங்க, ஏன் எங்க வீட்டில் வாசல் இல்லையா? இல்ல நான் வாசலுக்கு சாணி போட மாட்டனா" என கத்த ஆரம்பித்தாள். பொதுவாக மாட்டுக்கு கழனி தண்ணி ஊற்றுபவர்களுக்கு சாணி கொடுத்து விட்டு, அவர்கள் வீட்டிலிருந்து கழனி தண்ணி எடுத்து வருவார்கள். வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ தினங்களில் சாணிக்கு பற்றாக்குறை ஏற்படும். இன்றும் அதுபோல சாணி காணாமல் போகவே சின்ன தாய்க்கு கோபம் கொஞ்சம் அதிகமாகவே வந்துவிட்டது. “அட சாணி எடுத்துட்டு போனதுக்கா இப்படி கத்துற, இதுக்கு இவ்வளவு அக்கப்போரா ? ஒருநாள் வாசலுக்கு சாணி போடலைனா என்ன இப்ப, இந்த கிழவி இந்த கத்து கத்துது" என சலித்தவாறே கூறிவிட்டு போர்வையை போர்த்தி மறுபடியும் தூங்க ஆரம்பித்தான் சங்கிலி.

"சங்கிலி மணி எட்டாகுது இன்னும் தூக்கமா... சீக்கிரம் எழுந்து தயாராகி பள்ளிக்கூடத்துக்கு கிளம்பு. எதோ பரிட்சை இருக்குன்னு கூட சொன்னியே" என சொல்லிய படியே அவனை எழுப்பினாள் சின்னதாயி. சட்டென எழுந்தவன் "ஆமா இன்னைக்கு பரிட்சை இருக்கு" என சோகமாக சொல்லிவிட்டு எழுந்து பள்ளிக்கூடத்துக்கு தயாரானான்.

"படிக்கவே இல்லையே, பரீட்சை எப்படி எழுதப் போகிறேன்" என்று புலம்பியவன் ஆயா...ஆயா... என அழைத்தான்."என்னடா சங்கிலி நெத்தில பயபக்தியோடு பட்டை போட்டுட்டு நிக்கிற பரிச்சைனதும் பக்தி கூடிடுச்சா" என சிரித்தபடி கேட்டாள். "லைட்டா காய்ச்சல் அடிக்கற மாதிரி இருக்கு, தொட்டு பாரேன்" என அவள் கையை எடுத்து அவன் கழுத்தில் வைத்தபடி கேட்டான். அதெல்லாம் ஒன்னும் இல்ல நல்ல ஜில்லுனு தான் இருக்கு. ஏமாத்தாம பள்ளிக்கூடத்துக்கு கிளம்பு என்றாள். சரி என சலித்துக்கொண்டே புத்தகப் பையை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே வந்தான். ரவி அப்போதுதான் சாவகாசமாக வேடிக்கை பார்த்தபடி பல் தேய்த்துக் கொண்டிருந்தான்.

"டேய் ரவி எக்ஸாம் இருந்தா ஆளுக்கு முன்ன ரெடியாகி புத்தகமும் கையுமா நிப்பா, ஆனா இன்னைக்கு இன்னும் கிளம்பாம இருக்கிற" என ஆச்சரியமாகக் கேட்டான் சங்கிலி. "உனக்கு விஷயமே தெரியாதா பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டுட்டாங்க, நீ டீவி பாக்கலையா என புன்னகையுடன் சொன்னான் ரவி. "என்ன லீவா நேத்து தான் சார் நாளைக்கு எக்ஸாம் இருக்குன்னு சொன்னாரு" என குழம்பினான் சங்கிலி. “கொரோனா தொற்று பரவாமல் இருக்க கொஞ்ச நாளைக்கு பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டுட்டாங்க. அப்புறமா எக்ஸாம் வச்சாலும் வைப்பாங்க” என்றான் ரவி. "ஐ ஜாலி அப்போ பரீட்சை இன்னைக்கு இல்லை.கெட்டதிலும் ஒரு நல்ல நடந்து இருக்கு பாரேன். ஆண்டவா உனக்கு கோடான கோடி நன்றி. பரிட்சையை நினைத்து எனக்கு காய்ச்சலே வந்துருச்சு தெரியுமா" என்றான் சங்கிலி.

"சங்கிலி உனக்கு லீவாமே எல்லாம் பேசிக்கிறாங்க, "சரி இன்னைக்கு எனக்கு களை வெட்டும் வேலை இருக்கு. நீ மாட்டுக்கு தண்ணீர் காமிச்சிட்டு எல்லா மாட்டையும் காரட்டுக்கு ஒட்டிவிட்டு அப்பறமா" என சின்னத்தாயி பேசிக்கொண்டிருக்கும் போதே சங்கிலி இடை மறித்து "போதும் நீ கிளம்பு நான் பாத்துக்கறேன்" என வாயை அடைத்தான். "மனுஷனை கொஞ்ச நேரம் சந்தோசமா இருக்க விட மாட்டாங்களே, இந்த சங்கிலியை சங்கட பட வைக்கறதுல ஆயா குறியா இருக்குடா" என கடுப்பாக சொன்னான்.

சரி நீ சாப்பிட்டு ரெடி ஆகிட்டு வா, நான் வேலை எல்லாம் முடிச்சிட்டு வரேன் என சொல்லிவிட்டு மாடுகளுக்கு தண்ணீர் வைத்து விட்டு, அவற்றை மேய்ச்சலுக்காக கரட்டு பக்கம் ஓட்டிவிட்டு, சாணி அள்ளி வீட்டு கட்டுத்தறியை சுத்தம் செய்து கொண்டு இருந்தான். ரவியும் பழனியும் விளையாட அவனை அழைத்தனர். இருடா கை கழுவிட்டு வரேன் என்றான் சங்கிலி.

“இன்னும் என்னடா செய்ற, மதியானம் ஆயிடுச்சு” என்றான் பழனி. "உனக்கென்னடா வீட்டுல ஒரு வேலையும் இல்ல, எங்களுக்கு அப்படியா முடியல" என வழிந்த வியர்வையை துடைத்த படி சொன்னான் சங்கிலி. "எங்க அம்மாவும் தம்பியை பாத்துக்கோனு சொல்லிட்டு போயிருக்கு அதுனால வீட்டுக்கு பக்கத்திலேயே விளையாடலாம்" என்றான் ரவி. சரி என்ன விளையாடலாம் என சங்கிலி கேட்க "இங்க பாத்தியா... எவ்வளவு கோலிகுண்டு இருக்கு" என பழனி தான் பாக்கெட்டில் வைத்திருந்த கோலிகுண்டுகளை காண்பித்தான்.மற்ற இருவரும் எனக்கு கொஞ்சம் கொடுடா என கெஞ்சினார். "தரேன் இருங்கடா, ஆனா விளையாண்டு முடிச்சதும் குடுத்துடனும் சரியா" என பழனி சொன்னான். சிறிது நேரம்தான் விளையாடிக்கொண்டு இருந்திருப்பார்கள், "சங்கிலி..... சங்கிலி... உங்க மாடு எல்லாம் மாடசாமி மாமா வயல்ல புகுந்துடிச்சினு கத்திட்டு இருக்காரு போய் சீக்கிரம் பாரு" என ஆட்டுக்கு கட்டி வந்த புல் சுமையை கீழே இறக்கி வைத்து விட்டு சொன்னாள் அலமேலு மகள் பரிமளா.

மாடுகளை கரட்டில் நல்ல மேய்ச்சல் உள்ள இடத்தில் சென்று விட்டால் தினமும் செல்லும் வழி அறிந்து அதுவே தானாக வீட்டுக்கு வந்துவிடும். மேய்ச்சல் கிடைக்காவிட்டாலும், தண்ணீர் குடிக்கவும் சில நேரம் மதிய வேளைகளில் திரும்பி வந்துவிடும். சங்கிலி பதறியவாறு "ஐயையோ நல்லா மாட்டிக்கிட்டேன்" என வேகமாக மாட்டை பிடிக்க ஓடினான். மாடசாமி கோபமாக "என்னடா சங்கிலி மாட்டை நல்லா நடு கரட்டுல ஓட்டி விட மாட்டீங்களா, முன்னாடியே விட்டுட்டு வந்துட்டியா எல்லாம் மதியமே திரும்பி வந்துடுச்சு பாரு. எங்கடா உங்க ஆயா எவ்வளவு எகத்தாளமாக பெரிய ஆபிஸர் மாதிரி எல்லார்கிட்டயும் கத்தும். இப்படி பொறுப்பில்லாமல் மாட்டை விட்டுட்டு எங்க போனா உங்க ஆயா" என சத்தம் போட்டார்.

"காலையிலேயே ஆயா களை வெட்ட போச்சு" என சொல்லிய படியே மாடுகளை பிடித்து செல்ல வந்தான் சங்கிலி. "நில்லுடா... இங்க பாரு மாட்டை எல்லாம் கட்டி வச்சிருக்கேன் உங்க ஆயாவ வர சொல்லு, வெள்ளாமை செய்யற காட்டுல மாடு எப்படி பயிரை நாசம் பண்ணி இருக்கு பாரு. அதுக்கு ஒரு நியாயம் சொல்லிட்டு அதுக்கப்புறம் மாட்டை எல்லாம் ஓட்டிட்டு போக சொல்லு" என கோபமாக கத்தினார். ஆயா வேற சாயந்திரம் தான் வரும் இப்ப என்ன செய்யறதுன்னே தெரியலையே என தலையை சொரிந்து கொண்டே விழித்தான் சங்கிலி.

சிறிது நேரம் கழித்து விஷயமறிந்த சின்னத்தாயி "எவன்டா அவன் என் மாட்டை பிடித்து கட்டி வைத்து இருக்கிறது" என வரும்போதே சத்தம் போட்ட படி வந்தாள். "ஏன்டா கழுத்தை மாட்டை ஒழுங்கா பார்த்துக்க தெரியாதா" என சங்கிலியின் காதை பிடித்து திருகினாள். சின்னத்தாயியை பார்த்ததும் மா....ம்மா...என மாடுகள் எல்லாம் காத்த ஆரம்பித்தன. "வாமா வந்து பாரு.உங்க மாடெல்லாம் எப்படி வயலை நாசம் பண்ணி வச்சிருக்கு" என மாடசாமி வயலை காட்டினார்.
“நான் கூட பெருசா ஏதோ ஆச்சோன்னு பயந்துட்டேன்.ஓரமா கொஞ்சமா தான மேஞ்சிருக்கு, ஆடு மாடு இருந்தா கொஞ்சம் அப்படி இப்படினு மேயத்தான் தான் செய்யும். என் மாடு மட்டும் தான் மேஞ்சதா போன வாரம் சிவகாமி மாடு ஒரு சரவையே பிடிச்சி மேயலா, நீங்க ஏதாவது வேலை சொல்லி அனுப்பிச்சா கூலி கணக்கு கூட பாக்காம உங்கள் தோட்டத்தில எல்லா வேலையையும் இழுத்து போட்டுக்கிட்டு செஞ்சதில்லை" என இடைவிடாது புலம்ப ஆரம்பித்தாள் சின்னதாயி. "சரி இந்த ஒரு முறை விடுறேன் இனிமே இப்படி நடக்காம பாத்துக்கங்க" என எச்சரித்து அனுப்பினார் மாடசாமி. சின்னதாயி சங்கிலியை திட்டியவாறு மாடுகளை வீட்டிற்கு இழுத்து வந்தாள்.

"மாட்டுக்கு தீவன தட்டு ஒரு கத்தை அறுத்துட்டு வர சொன்னேனே அதாவது செஞ்சியா" என கோபமாக சங்கிலியை பார்த்து கேட்டாள். "அது வந்து ஆயா...அதுக்குள்ள தான் மாடசாமி மாமா தோட்டத்தில் மாடு புகுந்திடுச்சினு கூப்பிட்டாங்க" என சமாளித்தான் சங்கிலி. "இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, மதியம் சாப்பிட்டியா அதுவும் இல்லையா என்றாள். இல்லை ஆயா என பாவமாக சொன்னான். "சாப்பிடாம கூட பிள்ளைகளோடு சேர்ந்து ஆட்டம் போட்டுட்டு இருந்தியோ... போய் முதல்ல சாப்பிடு. மரவள்ளிக்கிழங்கு கொண்டு வந்து இருக்கேன் சாயந்திரம் வேக வைத்து தரேன்னு" சொல்லி விட்டு தீவன தட்டு அறுக்க கதிர் அரிவாள் எடுத்துக் கொண்டு கிளம்பினாள் சின்னத்தாயி.

ஆயா பையில் என்ன கொண்டு வந்து இருக்கு என சங்கிலி ஆராய ஆரம்பித்தான். குச்சி கிழங்கு அப்புறம் கொய்யாக்கா சீதாப்பழம் என ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்கும்போது எனக்கு ஒன்று தா டா என ரவியும் பழனியும் பங்கிற்கு வந்துவிட்டனர். சங்கிலி நண்பர்களுடன் பகிர்ந்து பழங்களை உண்டான்.அப்படியே சந்தோஷமாக சில நாட்கள் கழிந்தன.

காலையில் அலமேலுவும் சாந்தியும் வேலைக்கு செல்லும் போது நடந்தபடி பேசிக்கொண்டே சென்றனர். "பிள்ளைகளுக்கு லீவு விட்டதும் விட்டாங்க அவர்களை சமாளிக்க முடியல போ..." என்றாள் சாந்தி. "அப்படி என்ன செய்றாங்க சோறு பொங்கி வச்சா அதுக பாட்டுக்கு சாப்டுட்டு விளையாடிக்கிட்டு இருக்க போகுது" என்றாள் அலமேலு.

"ஆமா நீ சொல்லுவ அக்கா, பொட்ட பிள்ளையை பெத்து வச்சிருக்க. உன் பெரிய பொண்ணு பரிமளா பள்ளிக்கூடம் இல்லாததால வீட்டு வேலை எல்லாத்தையும் அவளே செஞ்சுடரா, சோறு கூட ஆக்கிவச்சிடரா, ஆனா நான் இரண்டு பையனை பெற்று வச்சி என்னத்த கண்டேன். வேலை முடிச்சிட்டு சாயந்திரம் வீட்டுக்கு போயி பார்த்தா வீடே குப்பை காடா கிடக்கு. சண்டை போட்டு வீட்டையே ரெண்டாகிடறானுங்க" என நொந்த படி சொன்னாள்.

"சாந்தி பிள்ளைங்க வளர வளர எல்லாம் சரியாகிடும். என் மூன்று பொண்ணுங்களும் கல்யாணமாகி வேற வீட்டுக்கு போயிடு வாங்க, ஆனா உன் பசங்க தான் வயசான காலத்துல உனக்கு கஞ்சி தண்ணி ஊத்த போறாங்கா" என்றாள் அலமேலு. "ஆமா இவனுங்க அப்படியே ஊத்திட்டாலும். இவனுங்க ஒன்னும் என்னை பாக்க வேணாம். ஆனா படிச்ச ஒரு நல்ல வேலைக்கு, அரசாங்க வேலைக்கு போகணும் நல்லபடியா வாழனும். அவங்க அப்பன் மாதிரி உருப்படாமல் போய் விடக்கூடாது என்று தான் கவலை படுகிறேன்" என்று பெருமூச்சு விட்டபடி சொன்னாள் சாந்தி. "நீ ஒன்னும் கவலைப்படாதே, உன் பையன் ரவி பாரு இந்த ஊருக்கே பெரிய டாக்டரா வரப்போறான்" என்றாள் அலமேலு. இவர்கள் இப்படி கனவு கொண்டிருக்க பிள்ளைகளும் எந்த கவலையும் கள்ளம் கபடம் இல்லாமல் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

"ஏண்டா ரவி தண்ணி வருதே பிடிக்கலையா உங்க அம்மா சொல்லிட்டு போயிருக்காங்க... மறந்திட்டியா" என பரிமளா கேட்டாள். "இந்த தண்ணிய பாரு காலையில வராமல் சரியா அம்மா வேலைக்கு போன வேட்டி வருது. இது கூட நமக்கு சதி பண்ணுது" என்றான் ரவி. பரிமளா வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு தண்ணீர் வரும் போதே துணிகளை துவைத்து விட்டு காலியான பாத்திரங்கள் அனைத்திலும் தண்ணீர் நிரப்பி வைத்தாள். பரிமளா சின்ன பெண்ணாக இருந்தாலும் பொறுப்பாக நடந்து கொள்வாள். வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு படிக்க ஆரம்பித்தாள். பத்தாம் வகுப்பு படிக்கும் அவள் விடுமுறை விட்டாலும் திடீரென்று எப்போது வேண்டுமானாலும் தேர்வு நடத்துவார்கள் அதற்குள் அனைத்து பாடங்களையும் படித்து முடித்து விட வேண்டும் என எண்ணினாள்.

"டேய் வாடா போய் தண்ணி பிடிக்கலாம்" என ரவி சங்கிலியை அழைத்தான். அப்போது தான் வந்த பழனி உங்களுக்கு வேலை இருக்கா சரி நான் போயிட்டு சாயந்திரமா விளையாடுவதற்கு வரேன் என பழனி வீட்டிற்கு கிளம்பினான்.

"இப்போ தான தண்ணி வர ஆரம்பிச்சிருக்கு கொஞ்ச நேரம் கழிச்சி பிடிச்சிக்கறேன்" என வேலை செய்ய சோம்பேறித்தனம் காட்டினான் சங்கிலி. ரவி தண்ணீர் பிடித்து அனைத்து பாத்திரங்களிலும் நிரப்பினான். தண்ணீர் குழாய் இருக்கும் இடத்திற்கும் ரவி வீட்டிற்கும் கொஞ்சம் தூரம் தான் என்றாலும் கரடு ஓரம் ஒட்டிய பகுதி என்பதால் நிலம் சமதளமாக இருக்காது. மேடாக இருக்கும் என்பதால் குடத்தை தூக்கிக்கொண்டு மேடேற ரவிக்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது.சங்கிலியின் வீடு ரவியின் வீட்டையும் தாண்டி மூன்று வீடுகளுக்கு அப்பால் இருக்கும். தண்ணீர் பிடித்து முடித்த ரவி "டாய் சங்கிலி... தண்ணி கம்மியா தாண்டா வருது, நீக்க போகுதுன்னு நினைக்கிறேன். சீக்கிரம் வந்து குடத்தை வை" என சத்தம் போட்டான் ரவி.

தண்ணி நிற்க போகுதா என கத்தியபடி வேகமாக குடத்தை எடுத்துக்கொண்டு ஓடி வந்தான் சங்கிலி. இரண்டு குடங்கள் கூட நிரம்பி இருக்காது தண்ணீர் நின்றுவிட்டது.ஆயா வேற திட்டுமே எப்படி சமாளிப்பது என விழித்தான். "இப்படி நடக்கும்னு எனக்கு முன்னவே தெரியும்டா... மாடசாமி மாமா தோட்டத்தில் மோட்டார் போட்டு இருப்பாங்க போய் தண்ணீர் புடிச்சிட்டு வா..." என சிரித்துக்கொண்டே சொன்னான் ரவி. வேற வழி ஆயாகிட்ட திட்டு வாங்குறதுக்கு கஷ்டப்பட்டு தண்ணி பிடிச்சிட்டு வந்து விடலாம் என மாடசாமி தோட்டத்திற்கு சென்று நான்கு குடம் முக்கி முக்கி தண்ணீர் எடுத்து வந்தான் சங்கிலி.

மாலையில் ரவியின் அம்மா வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தாள். "என்ன ரவி காலையிலிருந்து இன்னும் குளிக்கலையா தண்ணி வரும்போது நீயும் குளிச்சிட்டு தம்பிக்கும் தண்ணி ஊத்தி விட மாட்டியா... "என திட்டினாள் சாந்தி. "உங்களுக்கு எல்லாம் தண்ணீர் பிடித்து வச்சேன் பாரு அது என் தப்பு தான்" என்றான் ரவி. "ஆமா ஒரு நாள் தண்ணி பிடிச்சிட்டா போதுமா? போய் குளிச்சிட்டு விளையாட போயிடாத கொஞ்சமாவது புத்தகத்தை எடுத்து வைத்தபடி" என்றாள் சாந்தி. சங்கிலியோ அதற்கு மேல் திட்டு வாங்கினான். ஏன் எல்லா குடத்துக்கும் தண்ணி பிடிக்கல நீ பிடித்த தண்ணீர் மாட்டுக்கு கூட பத்தாது என சத்தம் போட்டாள் சின்னதாயி.

வழக்கம் போலவே சாந்தியின் கணவர் குடித்துவிட்டு வந்து இருந்தான். "என்ன செல்லக்குட்டி இன்னும் தூங்கலையா என கிட்டுவை தூக்கி கொஞ்சினான் மணி. "இன்னைக்கு எந்த ஏழரையை இழுக்க போறான்னு தெரியலையே" என்று முனுமுனுத்தாள் சாந்தி.

"பிள்ளைங்களா... இங்க வாங்க, உங்களுக்கு சிக்கன் வாங்கிட்டு வந்திருக்கேன் வந்து சாப்பிடுங்க" என்றான் மணி. ஐ சிக்கன் என ஆசையுடன் வாங்கி சாப்பிட்டான் கிட்டு.ரவி நாளைக்கு உனக்கு பிறந்தநாள் இல்ல, உனக்கு புது துணி வாங்கிட்டு வந்திருக்கேன் என துணிப்பையை நீட்டினான் மணி.

புது துணியை ஆசையாக வாங்கி பார்த்தான் ரவி. "ஆமா இதெல்லாம் வாங்க பணம் ஏது? கடனை ஏதாவது வாங்கி தொலைச்சியா... கைல காசு இல்லாமல் சுத்தமா எல்லாத்தையும் செலவு பண்ணிட்டா அப்புறம் எப்படி குடும்பம் நடத்துறது .இப்ப வேற ஊரடங்கு போட போறாங்கன்னு சொல்லிட்டு இருக்காங்க. அப்புறம் வேலையும் வேற இருக்காது” என புலம்பினாள் சாந்தி. "அதெல்லாம் நான் பாத்துக்குறேன்.மத்த பிள்ளைங்க மாதிரி ரவியும் பிறந்தநாள் கொண்டாடணும் என்று ஆசைப்படுவான் இல்லை" என அரை போதையில் உளறினான் மணி. சரி பிள்ளைகளுக்குத்தானே செய்யறாரு பாத்துக்கலாம் என சமாதானம் ஆனாள் சாந்தி.
 
Top