Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-28

Advertisement

praveenraj

Well-known member
Member
அன்றைய மாலை வேளையிலும் சோர்வில்லாமல் உற்சாகமாவே வீடு வந்தாள் ஆதிரா. அவள் வரும் போதே அங்கிருக்கும் நண்டு சிண்டுகள் எல்லோரும் அவளை அங்கேயே மடக்கி,"ஆதிராக்கா... நீங்களும் செழி அங்கிளும் கல்யாணம் பண்ணிப்பீங்களா?" என்று கேட்க ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தினாள் ஆதிரா. அந்தக் குழந்தையின் உயரத்திற்குக் குனிந்தவள்,"குட்டி பையா உங்களுக்கு இந்த விஷயத்தை யாரு சொன்னா?" என்று வினவ,

"அதோ அந்த வைஸ் செக்ரெட்டரி தாத்தா தான் சொன்னாரு... ஆமாவா?" என்று கேட்க என்ன சொல்வதென்று புரியாமல் விழித்தாள் ஆதிரா. என்ன தான் செழியனும் ஓகே சொல்லிவிடுவான் என்ற நம்பிக்கை இருந்தாலும் மனதின் ஓரத்தில் நாளைக்கு பப்லிக் எக்ஸாம் ரிசல்ட் வரும் என்றால் இன்று மாலையிலிருந்து ஏற்படுமே அந்த ஒரு திக் திக் உணர்வில் தான் இன்று காலையிலிருந்து இருக்கிறாள். எதையும் பேசாமல் அக்குழந்தையிடம் இருந்து விடைபெற்றவளிடம்,"அக்கா இன்னைக்கும் ஈவினிங் கண்ணாம்மூச்சி விளையாடலாமா?" என்று கேட்க அவளுக்கு இருந்த உற்சாக மனநிலை அவளை அனிச்சையாய் தலை ஆட்ட வைக்க அக்குழந்தை குதூகலித்து ஓட ஆதிராவும் சென்று ரெப்ரெஷ் ஆகிவந்தாள். இன்று காலையிலிருந்து பாத்ரூம் ட்ரெஸ்ஸிங் ரூம், ஆபிஸ் ரெஸ்ட் ரூம், என்று கண்ணாடி இருக்குமிடத்தில் எல்லாம் ஒத்திகை பார்த்துக்கொண்டே இருக்கிறாள். இவ்வளவு நாட்கள் ஏன் இவ்வளவு வருடங்கள் பழகிய செழியன் தான், இருந்தாலும் மனதிலொரு படபடப்பு குடிகொண்டது மட்டும் நிஜம். அவள் மேலே ஏற வீட்டில் தன் தந்தையும் செழியின் அன்னையும் வழக்கத்தைவிட கொஞ்சம் உற்சாகமாக இருக்க அவள் அதை நோட் செய்தாலும் எதையும் கேட்காமல் இருக்க அவள் சென்று குளித்து வர அங்கே அவளுக்காகவே காத்திருந்தாள் இனியா.

"என்ன இனி? என்ன யோசனை?"

"அது... அது... நான் உங்ககிட்ட ஒன்னு கேட்பேன்..." என்று இழுக்க,

"என்ன டா? என் கிட்ட என்ன தயக்கம் உனக்கு? கேளு..." என்று சொல்ல,

"நீங்க என் அண்ணனைக் கல்யாணம் பண்ணிப்பீங்களா?" என்று பட்டென கேட்டவள் உடனே நாக்கைக் கடிக்க, அவளிடமிருந்து இந்தக் கேள்வியை ஆதிரா சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அவள் ஆச்சரியத்தில் நிற்க, அவளின் முகத்தை உணராதவள்,

"என் அண்ணாக்கு நீங்கன்னா ரொம்ப இஷ்டம். அவருக்கு சின்ன வயசுல இருந்தே உங்க மேல ரொம்ப பிரியம். ஒரு உண்மையைச் சொல்லட்டா? உங்களுக்காகத் தான் அவரு இன்னமும் கல்யாணமே பண்ணல... எனக்குத் தெரிந்து என் அண்ணன் எதுக்குமே பெருசா ஆசைப்பட்டதில்ல... அவரு சின்ன வயசுல இருந்து இப்போவாரை விரும்புற ஒரே விஷயம் நீங்க தான்..." என்று சொல்லிவிட்டு ஆதிராவைப் பார்க்க அவள் கேட்டதில் ஒருபுறம் சந்தோசம் என்றாலும்,'இதெல்லாம் இவளுக்கும் கூடத் தெரிந்திருக்கு... எனக்குத் தான் தெரியாமலே போயிடுச்சி?' என்று நினைத்து வருந்த,

"உங்களுக்கு இதுல விருப்பமில்லையா...?" என்று வருத்தத்துடன் இனியா கேட்க,

"உங்க அண்ணன் மாதிரி ஒருத்தனைக் கட்டிக்க யாருக்குத் தான் கசக்கும்? ஆனா..." என்று நிறுத்த, அவளின் மனதைப் படித்தவள் போல் இன்று தன் தாயும் அவள் தந்தையும் பேசிக்கொண்ட விஷயத்தைச் சொல்ல இப்போது தான் ஆதிராவுக்கு அவர்களின் உற்சாகத்தின் காரணம் புரிய அதேநேரம் செழியனின் அன்னைக்கு இதில் விருப்பமா என்று ஆச்சரியப்பட்டவள் அதை இனியாவிடமே கேட்க,

"அண்ணாவோட சந்தோசம் தான் என் அம்மாக்கு முக்கியம்... அத்தோட உங்களையும் எங்க அம்மாக்கு ரொம்ப பிடிக்குமே..." என்று சொல்ல மனதில் சந்தோசமாக இருந்தாலும் ஏதோ ஒன்று அவளைக் குத்தியது.

"ஏன் அக்கா என்ன யோசிக்கறீங்க? சாரி உங்களை அண்ணின்னு உரிமையாவே கூப்பிடனும் தான்... ஆனாலும் நீங்க எந்தப் பதிலும் சொல்லலையே?" என்று பார்க்க,

"நீ உண்மையிலே வளர்ந்திட்ட இனியா... நான் சத்தியமா உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்கல..." என்று உற்சாகம் ததும்ப பேசினாள் ஆதிரா.

"இந்தக் கிண்டல் தானே வேணாம்? எனக்கு அடுத்த மாசம் கல்யாணமே நடக்கபோகுது..." என்று அவள் சொல்லவும் சிரித்தவள்,"இது நானோ இல்ல உங்க அம்மாவோ என் அப்பாவோ மட்டும் எடுக்க கூடிய முடிவில்லை... உங்க அண்ணா கிட்ட நான் பேசணும்..."

"ஐயோ அண்ணாகிட்ட பேசவே வேணாம். அண்ணா கண்ணை மூடிட்டு ஓகே சொல்லுவான்... எனக்குத் தெரியும்..."

"சரி காஞ்சனாவுக்கு இதுல?"

"அக்காக்கு எல்லாம் சின்ன வயசுலயே தெரியும். அக்கா அப்போவே அண்ணா கட்சி தான்..." என்று சொல்ல, இப்படி எல்லாப் பக்கமும் தனக்கு ஆதரவு இருப்பதை உணர்ந்த ஆதிராவுக்கு இருந்த தயக்கம் பயமெல்லாம் விலக,"சரி நீ போ நான் வரேன்..." என்று சொன்னவள் இன்னும் படபடப்பு கூட மீண்டும் ஒத்திகை பார்த்தாள். அதற்குள் அந்தப் பசங்க எல்லோரும் வீட்டிற்கே வந்துவிட காஃபீ குடித்திவிட்டு எல்லோரும் கீழே போக சற்று நேரத்தில் வானிலை மொத்தமாக மாறியது.

வைரமுத்துவின் வரிகளில் சொன்னால்,'வானமகள் நாணுகிறாள்... வேறு உடை பூணுகிறாள்... இது ஒரு பொன் மாலைப் பொழுது...' என்று சட்டென மழை வரும் அனைத்து சமிக்ஞைகளும் தென்பட வேகமாய் கீழே சென்றவள் அக்குழந்தைகளோடு விளையாட ஆயத்தமானாள். இம்முறை அவளோடு எல்லாக் குழந்தைகளின் பெற்றோர்களும் வந்துவிட செழியனின் அன்னை, இனியா, ஜெகநாதன் என்று எல்லோரும் சேர்ந்து அந்தத் தூறலில் விளையாட ஆயத்தமாகினர். பெரு மழையும் இல்லாமல் சின்ன தூறலும் இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தூற எல்லோரும் கூடி விளையாடிக்கொண்டு இருந்தனர்.

அந்த அபார்ட்மெண்டின் வைஸ் செக்ரெட்டரி ஆதிராவின் தந்தையிடம் இந்த ஒரே நாளில் அதிகம் ஒட்டிவிட்டார். இருவரும் பேசிக்கொள்ள ஆயிரம் கதைகள் இருக்க அன்றைக்குப் போல் இன்று எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாதென்று முன்னெச்சரிக்கையாகவே மின்சாரம் துண்டிக்கப் பட்டு விட இரவில் ஜெனெரேட்டர் போட்டுக்கொள்ளலாம் என்று எல்லோரும் கீழயே இருந்தனர். ஒரு மூச்சு எல்லோரும் ஓடியாடி விளையாடி முடிக்க இன்னும் செழியன் வந்ததற்கான அறிகுறி தென்படவில்லை. சாவி இரண்டும் இவர்ளிடமே இருக்க அவன் இன்னும் வரவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தியது.

இவர்கள் எல்லோரும் கீழேயே அமர்ந்திருக்க, காந்திமதி தான் ஆதிராவிடம் வீட்டிற்கு சென்று மெழுகுவர்த்தியாவது ஏற்றிவைக்குமாறு சொல்ல அவள் மேலே சென்றாள்.

கடந்த சில நாட்களாக அதிக பெர்மிஷன் எடுத்துக்கொண்டதால் இன்று செழியன் வீடு வர நேரமாகியது. அப்போது தான் வந்தவன் ரொம்ப டையேற்டாக இருக்க மேலே எறியபின் தான் எல்லோரும் கீழே இருப்பது தெரிய கதவைச் சந்தேகமாய்த் தள்ள உள்ளே இருட்டாக இருந்தது.

"யாரு?" என்று குரல் கொடுத்தபடியே உள்ளே செல்ல கையில் மெழுகுவர்த்தியோடு அறையிலிருந்து வெளியேறினாள் ஆதிரா. ஏனோ இப்போதெல்லாம் ஆதிராவைக் காணுகையில் முன்பைப் போல செழியனால் கண்ட்ரோல்டாக இருக்க முடிவதில்லை. சோர்வாய் வந்தவனுக்கு ஆதிராவைக் கண்டதும் கரெண்ட் இல்லாமலே ரீசார்ஜ் ஆனான். இன்றைக்கு முழுவதும் அவன் ஜானின் அழைப்பை ஏற்கவேயில்லை. பின்ன ப்ரொபோஸ் பண்ணிட்டியா? எப்போ பண்ணுவ? என்று எப்போதும் இதைதானே கேட்கிறான் என்ற சலிப்பு. அவனை இந்தச் சமயம் எதிர்பாராததால் ஆதிராவுக்குப் பேச்சே வரவில்லை. ரிகர்சல் பார்த்து ஸ்டேஜில் சொதப்பும் கிண்டர் கார்டன் குழந்தைகள் போல அவளின் அனைத்து ஒத்திகைகளும் வீணாகிப் போனது. நேற்றிலிருந்து அவளிடம் அவன் முகம் கொடுத்துக்கூடப் பேசுவதில்லை.

"ஏன் செழி இவ்வளவு நேரம்?" என்று கேட்டவளுக்கு,

"லேட் ஆகிடுச்சு..." என்று பதிலைத் தந்துவிட்டு ரெப்ரெஷ் ஆகச் சென்றவன் வெளியேற அங்கே அவனுக்காகவே காத்திருந்தாள் ஆதிரா. அவன் உள்ளே சென்றதும் மீண்டும் ஒருமுறை ரிகர்சல் பார்த்தவள் அவன் வந்ததும்,"செழி..." என்று அழைத்து,

"காஃபீ போடவா?" என்று கேட்க ஏனோ அவளுக்கே அவள் மேல் கோவம் தான் எழுந்தது. அவள் சென்று காஃபீ போட, இவனோ,"எவ்வளவு நேரமா கரெண்ட் இல்ல?" என்று வினவினான்.

"இப்போ ஒரு ஹாப் ஏன் ஹவரா..." என்று உடனே பதில் வர காபியோடு வந்தவள் அவனுக்குக் கொடுத்துவிட்டு அவன் குடிக்க எடுக்கும் வேளையில்,"செழி, நீ யாரையாவது லவ் பண்ணியிருக்கியா? இல்ல பண்ணிட்டு இருக்கியா?" என்று கேட்டு விட்டாள். அவளின் இந்தக் கேள்வியில் முதல் சிப் எடுத்துவனுக்கு புரையெடுக்க அவன் தலையை தட்ட எழுந்து அவனுக்கு முன் நின்று தட்டினாள். அந்த திடீர் அருகாமை இருவருக்குள்ளும் ஒரு குறுகுறுப்பைத் தந்து சென்றது. நடுவே மெழுகுவர்த்தி எரிய வெளியே மழை சற்று வலுவடைந்ததைப் போல் சப்தம் கேட்டது.

"நல்ல மழை போல?" என்று செழியன் சொல்லவும்,

"நான் கேட்டதுக்கு இது பதிலில்லையே?" என்று அவள் சொல்ல அவன் தான் பதில் சொல்லியே தீர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட அவன் பேச ஆரமிக்கும் முன் அவளின் குரலே மீண்டும் ஒலித்தது.

"ஏன் செழி? ஏன் எல்லாத்தையும் மறைத்த? ஏன் இன்னும் இந்த நாடகம்?" என்று கேட்க உண்மையில் அதிர்ந்தான் செழியன். அவளைப் பார்க்க முடியாமல் தவித்தவனிடம்,

"என்னைப்பாரு செழி..." என்றதும் அந்த மெழுகுவர்த்தி ஒளியிலும் அவன் முகம் அவளுக்கு நன்கு தெரிந்தது.

"இவ்வளவு காதலை மனசுக்குள்ளேயே போட்டு போட்டு பூட்டி வெக்க உன்னால எப்படி டா முடிஞ்சது? என்னால வெறும் பத்து நாளா கூட கண்ட்ரோல் பண்ண முடியில டா... நீ எப்படி டா பத்து வருஷமா?" என்று நிறுத்த, செழியன் அவளைக் கூர்ந்து நோக்கினான். அவன் முகம் ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சி இரண்டும் ஒருசேர கொண்டு இருந்தது.

'இவளுக்கு எப்படி இது தெரியும்?' என்று அவன் யோசிக்க அவளின் கரைதல் அந்த நிசப்தமான வீட்டில் நன்கு எதிரொலித்தது.

"ஐயோ ஆதி ஏன் அழற?" என்று அவளை அவன் நெருங்க,

"இப்போ கூட நானா இதை உணராம கண்டுபிடிக்காம இருந்தா நீயா சொல்லியிருக்க மாட்டேயில்ல?" என்று அவள் அடுத்த கேள்வியைக் கேட்க செழியன் மனதில் ஜான் நிவே, அனி என்று எல்லோரும் ஒருசேர வந்து சென்றனர். இதில் உண்மையில் அவனுக்கு சந்தோசம் தான். ஆனால் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்ற ஆவலும் சூழ்ந்துகொள்ள,
செழியன் பேச ஆரமித்த நேரத்தில் 'டம்' என்று ஒரு இடி சப்தம் முழங்கியது. அதற்கு கொஞ்சம் முன்னால் ஒரு மின்னல் அந்த ஜன்னலில் வெட்ட ஒரு நொடிக்கும் குறைந்த நேரத்தில் இருவரும் அவரவர் முகபாவங்களைக் கண்டுகொண்டனர்.

"எனக்காக நீ எவ்வளவு அவமானம், வலி, கஷ்டம் தாங்கியிருக்க? ஏன் செழி ஏன்? உனக்கு என்ன அவ்வளவு பிடிக்குமா டா?" என்று உண்மையை அவன் வாயாலே தெரிந்துகொள்ளும் ஆவலில் அவள் வினவி நிறுத்த,'கல்லாய்ப் போவாய்' என்று சாபம் கொடுக்கப்பட்ட அகலிகை போல் உறைந்து போனான் செழியன்.

"நான் தான் செழி தப்பு பண்ணிட்டேன். என் கைக்குள்ளயே வைரம் இருந்தும் நான் அதை வெறும் கல்லுன்னு நெனச்சி வைரத்தைத் தேடி அலைந்திருக்கேன். அப்போ நான் தானே முட்டாள்? உனக்கு எவ்வளவு பெரிய வலியெல்லாம் கொடுத்திருக்கேன்? உன்கிட்டயே வந்து நான் இளங்கோவை விரும்பனத்தைச் சொல்லி, நிவேதிதாவை உன்னோட கோர்த்துவிட்டு... இப்படி நிறைய நிறைய... அப்போ கூட ஏன்டா நீ எதையுமே சொல்லல? என்கிட்ட உணர்த்த வரல? சின்ன வயசுல இருந்து நீ என் கூடவே இருந்ததால எனக்கு உன்மேல அந்த ஃபீல் வரல... இல்ல இல்ல நான் அதை உணரல செழி. ஆனா ஒன்னு, நான் என்ன தான் இளங்கோவை விரும்பியிருந்தாலும் உன் கூட இருக்கும் போது இல்லாத ஒரு வெறுமை நான் அவன் கிட்ட பலமுறை ஃபீல் பண்ணியிருக்கேன். சத்தியமா சொல்றேன் அன்னைக்கு நைட் நீ மட்டும் என்னை ஏர்போர்ட்ல பார்த்து உன்கூடக் கூப்பிடலைனா நான் இன்னைக்கு உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்... அண்ட் உன்னைத் தவிர வேற யார் இருந்திருந்தாலும் அவங்க கூட வந்து தங்கியிருக்க மாட்டேன். சோ நான் என்னையே அறியாம உன் கூட என்னை ரொம்ப பாதுகாப்பா உணர்ந்திருக்கேன். இந்த இருவது நாள் உன்கூட நான் இருந்த மொமெண்ட்ஸ்ல நான் விரும்பனவன் கிட்ட கூட ஃபீல் பண்ணல டா. அன்னைக்கு நீ என்னை மழையில பிடிச்சது... இதோ இந்த பால்கனில என்னைச் சுற்றி வளைத்தது... நீ என்னைத் தொடாமலே நான் உன்ன நெருங்கியிருந்தேன். இப்போ நெனச்சாலும்..." என்று சொன்னவள் அவள் கையை அவனிடம் காட்டினாள். மயிர்கள் சிலிர்த்தெழுந்து இருந்தது.

"இது என்ன மாதிரியான ஃபீல் செழி? சத்தியமா எனக்குப் புரியில... நான் கேட்காமலே எனக்காக ஒவ்வொன்னும் பார்த்துப்பார்த்து செய்யுறியே எப்படி டா? உன் அளவுக்கு என்னால காதலிக்க முடியுமான்னு எனக்குத் தெரியில செழி... ஆனா ஒன்னு, நானும் உன்ன காதலிக்கிறேன். எவ்வளவு நாளா? எப்பயிருந்து? எப்படினு? எல்லாம் எனக்குத் தெரியாது. உனக்கு நிவேதிதா ப்ரொபோஸ் பண்ணது எப்போ எனக்குத் தெரிஞ்சதோ அப்போயிருந்து எனக்கு சுத்தமா நிம்மதியே இல்ல. உன்ன யாருகிட்டயும் விட்டுக்கொடுக்க எனக்கு மனசில்லை... அதேநேரம் நான் இதைக் காதல்னும் முழுசா நம்பாம போயிட்டேன். இப்போ நான் ஒரு முடிவெடுத்திருக்கேன்..." என்று நிறுத்த,
லப்டப் லப்டப் என்று செழியனின் இதயத்துடிப்பு அவனுக்கே நன்கு கேட்டது.

"என் முடிவை நான் சொல்றதுக்கு முன்னாடி நீ எதாவது பேசணும்னா பேசு செழி..." என்று அவனைப் பார்த்தாள்.

'என்ன பேசுவது? அதுதான் மொத்தமாக எல்லாமும் பேசிவிட்டாளே?'

"ஆதி நான்..." என்று நிறுத்தியவன்,

"நிச்சயமா சொல்றேன்... நான் மீட் பண்ணும் போதும் அதுக்கு முன்னாடியும் கூட நீ எனக்கில்லைன்னு தான் நெனச்சிட்டு இருந்தேன். ஆனா எப்போ உன்வாழ்க்கையிலும் இனி யாருமில்லைனு எனக்குத் தெரிஞ்சதோ அப்போயிருந்து திரும்ப அந்தக் காதல் எட்டிப்பார்க்க ஆரமிச்சது. எத்தனையோ தடவை நான் உன்கிட்ட என் காதலைச் சொல்லணும்னு நெனச்சியிருக்கேன். ஆனா எங்க நான் என் காதலைச் சொன்னா நீ என்ன புரிஞ்சிக்காம என்னை விட்டுப் போய் விடுவியோன்னு எனக்குள்ள ஒரு பயம்... எனக்கு உன் கூட இருப்பதே போதும்னு முடிவு எடுத்துட்டேன். உண்மையிலே நேத்து உன் அப்பாவைப் பார்த்துப் பேசிட்டு அவரை இங்க கூட்டிட்டு வரும் போதும் சரி நேத்து நைட்டும் சரி, இனிமேல் திரும்ப நீ எனக்கு கானல் தானோனு ஒரு பயம் எனக்குள்ள இருந்துட்டே இருக்கு. உன்ன இத்தனை நாள் ஒரு நண்பனா கூடவே இருந்து பாத்துட்டேன். ஆனா இப்போ மனசெல்லாம் உன்ன வெச்சிக்கிட்டு உன்கிட்ட வெறும் நண்பனா என்னால நடிக்க முடியில ஆதி. அது தான் அவாய்ட் பண்ணேன்... பண்றேன்... நீ என்கூட இருக்கறதை விட சந்தோசமா இருக்கனும் ஆதி... அது தான் எனக்கு முக்கியம்..." என்று நிறுத்தினான் செழியன்.

"நான் உன்கூட இருக்கும் போது மட்டும் தான் சந்தோசமா இருக்கேன் செழி. உனக்கு நான் என்ன சொல்றேன்னு புரியுதா?" என்றவள்,

"உன்கிட்ட எப்படியெல்லாம் ப்ரொபோஸ் பண்ணனும்னு நிறைய ஒத்திகை பார்த்தேன் செழி... எல்லாம் மறந்திடுச்சி. என்னை வெளிய அனுப்பாம உன் கூடவே இருக்க வெச்சிப்பியா செழி? எனக்கு எப்படிக் கேட்கறதுனே தெரியில? வில் யூ மேரி மீ? என்னைப் பத்தி எல்லாமும் உனக்குத் தான் தெரியும். அந்த தைரியத்துல தான் நான் இந்தக் கேள்வியையே கேட்டேன். அண்ட் நீ சொல்ற முடிவுல தான் நான் இனிமேல் இங்க இருக்கறதுக்கு இல்ல அப்பாவோட ஊருக்கே போறதும் இருக்கு..." என்றவள் எழுந்து அந்த பால்கனிக்கு செல்ல முயன்று திரும்பி,"இப்போ கூட உன் காதலை நீ சொல்ல மாட்டேயில்ல? ஒருவேளை உனக்கு என்கிட்ட உன் காதலைச் சொல்லணும்னு எப்போ தோணுதோ அப்போ வந்து சொல்லு..." என்று சொன்னவள் அந்த பால்கனிக்குச் சென்று வெளியே பெய்யும் மழையை பார்த்தப்படி உள்ளுக்குள் இருந்த மழையைக் கொட்டிவிட்ட நிம்மதியில் நின்றாள்.

கண்களை மூடியபடியே ஏதேதோ யோசனையில் இருக்க அவளுக்கு இடதுபுறமாக வந்து நின்றான் செழியன். அவள் சொல்லிவிட்டுச் சென்றதை எல்லாம் கொஞ்ச நேரம் யோசித்தவன் இனியும் எதையும் மறைத்து பயனில்லை என்று பால்கனிக்கு வந்தவன் அன்று போலவே இன்றும் அவளை ஒட்டி நின்று அவன் வலது கரத்தை அவளைத் தாண்டிச் சுற்றியவன் கைகளை அவள் மீது வைக்கலாமா வேண்டாமா என்று யோசித்து வேடிக்கை பார்க்க கண்களை மூடியிருந்தாலும் அருகில் நிற்பது செழியன் தான் என்று உணர்ந்தவள் விழித்து அவன் கரத்தின் மீது அவள் கரத்தை வைத்து அதை எடுத்து அவள் இடைமீது வைக்க அவளைத் தன்னோடு இழுத்துக் கொண்டான் செழியன். அவன் முகத்தைப் பார்த்தபடியே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் ஆதிரா. இருந்தும் ஏனோ சின்ன விசும்பல் மட்டும் அவளிடமிருந்து வந்துகொண்டு இருக்க அவளை இன்னும் இறுக்கிக்கொண்டவன் அவள் உச்சந்தலையில் அவன் உதடுகள் பதித்தான்... (தொடரும்...) next episode will be the last and epilogue...
 
Top