Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-27

Advertisement

praveenraj

Well-known member
Member
செழியன்,"உள்ள வாங்க அங்கிள்..." என்று அழைத்தும் ஜெகநாதன் தான் உள்ளே வர தயங்கி தன் மகளைப் பார்த்தார். ஏனோ தற்போதைய குழப்பங்கள், தலைவலி ஆகிய காரணங்களால் கொஞ்சம் சோர்வாகவே தெரிந்தாள் ஆதிரா. அந்த நிலை அவருக்கு அவர் மேலே மேலும் வருத்தமும் கோபமும் கொள்ளச் செய்ய ஏற்கனவே ஜான் தன் தந்தை வரவிருப்பதைச் சொன்னதால் ஓரளவுக்கு தன்னை தயார் படுத்தித்தான் இருந்தாள். எதையும் பேசாமல் அவள் அங்கிருந்து நகர்ந்து செல்ல அவர் தான் தன் மகளின் இந்தப் பாரா முகத்தைக் கண்டு உள்ளுக்குள்ளே புழுங்கினார். அதற்குள் காந்திமதி அம்மாவும் அவரை உள்ளே அழைக்க உள்ளே வந்தார் ஜெகநாதன். அங்கிருந்து நேராக கிட்சன் சென்றவள் ஏற்கனவே அங்கிருந்த இனியாவைப் பார்த்து புன்னகை செய்துவிட்டு அவள் காஃபீ போட அப்போது உள்ளே வந்தார் காந்திமதி.

"ஆதிரா..." என்று அழைக்கவும்,"சொல்லுங்க அம்மா..." என்றாள்.

"அப்பாவை உள்ள கூடக் கூப்பிடாமலேயே நின்னுட்டியே... ஏன்டா?" என்று ஆதுரமாகவே வினவினார்.

"அப்பாவா? எனக்குத் தான் யாருமே இல்லையே?" என்று விரக்தியில் சொன்னாள் ஆதிரா. அது ஹாலில் அமர்ந்திருந்த ஜெகநாதனுக்கும் ரூமிலிருந்து ரெப்ரெஷ் ஆகிவிட்டு வெளியேறிய செழியனின் காதிலும் தெளிவாகவே விழுந்தது.

"அங்கிள், கொஞ்சம் வாங்க..." என்று அவரை பால்கனிக்கு அழைத்துச் சென்றவன்,

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியில... ஆதிரா பத்தி நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவளுக்கு ரொம்ப பிடிச்சவங்க ஏதாவது தப்பு பண்ணா அவங்களை அவ்வளவு சீக்கிரம் மன்னிக்க மாட்டாள். சோ கொஞ்சம் பொறுமையா தான் இருக்கனும்..." என்று சொல்லும் போதே இனியா இருவருக்கும் காஃபீ கொண்டு வர, அதை வாங்கியவர் இனியாவை அழைத்து,

"என்னை மன்னிச்சிடும்மா..." என்று சொல்லவர உடனே சுதாரித்து இனியாவை அனுப்பியவன்,

"அங்கிள், அன்னைக்கு நடந்த எந்த விஷயமும் அம்மாவுக்கும் இனியாவுக்கும் தெரியாது..." என்று சொல்ல இப்போது செழியன் மீது அவருக்கு அபரீதமான அன்பு வந்தது.

"சும்மா சொல்லக் கூடாது... வாத்தியார் பையனை ரொம்ப நல்லாவே வளர்த்தியிருக்கார்..." என்று அவன் தோளில் கையை வைத்து ஆதுரமாய்த் தடவிவிட்டு அங்கே வேடிக்கை பார்க்க அப்போது கீழிருந்த நண்டு சிண்டுகள் எல்லாம்,

"அங்கிள் அங்கிள்... அக்கா எங்க?" என்று கூப்பிட,

"வரச்சொல்றேன்..." என்றவன்

"ஆதிரா, உன் ப்ரெண்ட்ஸ் எல்லோரும் உன்ன கூப்பிடுறாங்க... அவங்க உனக்காக வெயிட்டிங்..." என்று சொல்ல ஹ்ம்ம் என்று தலையை மட்டும் ஆட்டியவள் மணியைப் பார்க்க அது ஏழை கடந்திருக்கவும் திரும்பி காந்திமதி அம்மாவிடம் இரவு என்ன செய்யலாம் என்ன வாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு அவள் கீழே இறங்க அவளோடு இனியாவும் சென்றாள்.

அப்போது தான் செழியன் அவரைப் பார்த்து,"ஆதிரா இன்னும் அதே துறுதுறு குழந்தை தான் அங்கிள். இங்க வந்த இந்த கொஞ்ச நாள்ல இங்க இருக்கும் பசங்க எல்லோரும் அவளுக்கு ரொம்ப க்ளோஸ் ஆகிட்டாங்க..." என்று சொன்னவன் அங்கிருந்தபடியே கீழே பார்க்க ஆதிரா கடைக்குச் செல்ல அவளோடே அந்தக் குழந்தைகளும் சென்று வந்தனர் .

இப்போது செழியனிடம் திரும்பியவர்,"நான் உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியில செழியா... என் பொண்ணு இன்னைக்கு ஓரளவுக்கு நல்லபடியா இருக்கானா அதுக்கு நீதான் காரணம்..." என்று சொன்னவர் அவருக்கும் அடுத்த கேள்வியைக் கேட்க ஆசைத்தான். இருந்தும் அருகிலே செழியனின் அன்னையும் இருந்ததால் அவருக்கு அதைக் கேட்க மனம் வரவில்லை. அவர்களும் கீழே இறங்க இனியா மட்டும் வாங்கிய பொருட்களை மேலே கொடுத்துவிட்டு அவளும் கீழே போக அவளோடே செழியனும் ஜெகநாதனும் சென்றனர்.
இவர்கள் அங்கே சென்று அங்கு இருந்த ஸ்டோன் பெஞ்சில் (stone bench) அமர தூரத்தில் அக்குழந்தைகளோடு விளையாடும் ஆதிராவையும் இனியாவையும் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

"நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் செழியா... இப்போ என்ன பண்றதுன்னே தெரியில... இதை நான் எப்படியாவது சரிசெஞ்சே தீரணும்..."

"தலைக்கு மேல இருந்த கத்தியெல்லாம் நீக்கியாச்சு அங்கிள். இனிமேல் அந்த அரவிந்தால எந்தப் பிரச்சனையையும் வராது. கவலையை விடுங்க..." என்று ஏதேதோ சொல்ல,

"உனக்கே தெரியும் தானே செழியா? நான் தான் அங்க நம்ம ஜாதி சங்க தலைவரா இருந்தேன். கட்சியிலையும் இருந்தேன். எனக்கு ஆதிரானா எவ்வளவு இஷ்டம்னு உனக்குத் தெரியும் தானே? அவளுக்காகத் தானே நான் அந்த இளங்கோ பையனை என் மருமகனான ஏற்க துணிஞ்சேன்? அதால என் பதவியையும் இழந்தேன். அப்போல்லாம் எனக்கு உண்மையிலே வருத்தம் இல்ல செழியா. அவ சந்தோசம் தான் எனக்குப் புரிஞ்சது. அந்தச் சமயத்துல தான் அவ அம்மா வேற இறந்துட்டா... ஒரே பொண்ணு நல்லா இருக்கட்டும்னு நெனச்சி தான் அமெரிக்கா மாப்பிள்ளைன்னு பார்த்தேன். நான் பார்க்கல... எல்லாம் அவ மாமன் தான் பார்த்தான். சரி அவன் அக்கா பொண்ணு மேல உண்மையில அக்கறை இருக்கும்னு நெனச்சன். அவனைக் குறை சொல்லியும் தப்பில்லை. அவனுக்கு என்ன இப்படியெல்லாம் நடக்கும்னு தெரியுமா என்ன? அங்க போனதுமே இப்படிப் பிரச்சனைன்னு தெரிஞ்ச உடனே திரும்ப வந்திருந்தா நான் ஒன்னுல ரெண்டை பார்த்திருப்பேனே? நான் நல்லா இருக்கேன் அப்பா நல்லா வாழறேன்னு சொல்லிட்டு திடீர்னு இப்படி வந்ததும்... அப்போ அங்க என் பொண்ணு எவ்வளவு கஷ்டம் அனுபவிச்சு இருப்பா? எல்லாம் எனக்காகத் தானே? நானே அவளைப் புரிஞ்சிக்காம..." என்று அவர் அழ உண்மையில் செழியனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

"மத்தவங்களை விடு... உனக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும் தானே? ஊரே என்ன கண்டா மரியாதையான பயம் வரும். ஆனா இவளை நான் அப்படியா வளர்த்தேன்? அவ எதுனாலும் என்கிட்டே நேரடியா பேசுற அளவுக்கு தானே வெச்சியிருந்தேன்? அவ அந்த இளங்கோவைக் காதலிக்கறேன்னு சொன்னதும் எனக்கு விருப்பமில்லைனாலும் சரி இவளுக்காகக் காத்திருந்தேன். எதுக்கு? இந்த எதிர்ப்பை அந்தப் பையன் எப்படி கடந்து வரான்... எந்த அளவுக்கு இந்தக் காதல்ல உண்மையா இருக்கான்? இதெல்லாம் பார்க்க தான். ஆனா அந்தப் பையன்? திடீர்னு வேற பொண்ண கல்யாணம் பண்ணிட்டானு தெரிஞ்சதும் ஒரு பக்கம் சந்தோசம் ஒரு பக்கம் வருத்தம். சந்தோசம் இந்த மாதிரி ஒரு ஸ்திரமற்ற ஒரு ஆளை நம்பி நான் என் பொண்ணத் தரலைனு எண்ணி... வருத்தம், அவ இதுனால எவ்வளவு கஷ்ட பட்டா தெரியுமா? உங்க அம்மாவைக் கேட்டுப்பாரு. அந்த நேரத்துல அவ அம்மா வேற இறந்து... நானும் கொஞ்சம் உடல் நிலை சரியில்லாம போய்... அந்த நிலைமையில நான் இந்தத் தப்பைப் பண்ணிட்டேன். என்னடா இவன் அவன் தரப்பு நியாயத்தைச் சொல்றானேன்னு நெனைக்கறியா செழியா?" என்று ஏதும் பேசாமல் தான் பேசுவதை மட்டும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் செழியனை வினவினார் ஜெகநாதன்.

"அப்படியெல்லாம் இல்ல அங்கிள். உங்க சூழ்நிலை என்னனு எனக்குப் புரியுது அங்கிள். உங்களுக்கு ஏதாவது ஆகறதுக்குள்ள அவளுக்கு ஒரு நல்லது செய்யணும்னு நீங்க ஆசைப்படீங்க. அவளும் உங்களுக்காக இந்தக் கல்யாணத்தை ஒத்துக்கிட்டா. அன்னைக்கே அவ திரும்ப வந்திருக்கலாம்னு இப்போ நீங்க சொல்றீங்க? ஆனா அவ என்ன சொன்னானு தெரியுமா? நான் இந்த மாதிரி இருக்கேனு தெரிஞ்சா என் அப்பா ரொம்ப வருத்தப்படுவாரு செழியா... அவருக்கும் ஏதாவது ஆகிடுச்சினா நான் என்ன பண்ண செழினு கேட்டா? எல்லாம் சூழ்நிலை தான் அங்கிள். நாம எல்லோரும் அந்தச் சூழ்நிலை கைதிங்க அங்கிள். என் அப்பா அந்த வயசுல என்னயும் என் குடும்பத்தையும் விட்டுட்டுப் போவார்னு நான் நெனச்சேனா என்ன? விடுங்க பாஸ்ட் இஸ் பாஸ்ட். நடந்ததை விட்டுட்டு இனி என்ன நடக்கனும்னு யோசிக்கலாம்..."

"இப்போ உண்மையிலே சொல்றேன் செழியா... ஒருவேளை அவ அந்த இளங்கோவை விரும்பியதுக்குப் பதிலா உன்ன விரும்பியிருக்கக் கூடாதானு அவ அழுத போதெல்லாம் நான் நெனச்சியிருப்பேன் தெரியுமா?" என்று சொன்னவர்,

"நான் கொஞ்சம் காத்தாட நடந்திட்டு வரேன்..." என்று சொல்லி அவர் செல்ல இங்கே செழியனின் எண்ணமெல்லாம் அவர் இறுதியில் சொன்ன வார்த்தையிலே இருந்தது. அவர் நடக்க அங்கே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் பந்து ஒன்று ஜெகநாதன் மீது பட உடனே தடுமாறிய அவரைத் தாங்கிப்பிடித்தாள் ஆதிரா. இருவரும் எதையும் பேசிக் கொள்ளாமல் இருக்க அங்கே வந்த பையன்,"தாத்தா நீங்க தான் ஆதிரா அக்காவோட அப்பாவா?" என்று வினவ அவரும் ஆமாம் என்று தலையாட்ட அதற்குள் இனியா அவர்களைச் சாப்பிட அழைக்கவும் மூவரும் மேலே சென்றனர்.

அவரைப் பிடித்துக்கொண்டே வந்தாள் ஆதிரா. இது தெரிந்தும் இதைக் கண்டும் செழியன் காணாதது போல் முன்னே சென்றுவிட்டான். சோ அவளே அவரை அழைத்துக்கொண்டு வந்து அமரவைத்தாள். எல்லோரும் இதைப் பார்த்துக்கொண்டு தான் இருந்தனர். அமைதியாக சாப்பிட்டவர்கள் சென்று படுக்க முடிவெடுக்க, தன் அன்னையையும் இனியாவையும் ஒரு அறையில் தூங்க வைத்தவன் ஆதிராவையும் அவள் தந்தையையும் மற்றொரு அறையில் தூங்கச் சொல்லிவிட்டு அவன் ஹாலில் படுத்தான்.

உள்ளே அவரைப் படுக்கவைத்ததும்,"அம்மாடி... இந்த அப்பாவை மன்னிச்சிடுமா... ப்ளீஸ்..." என்று அவர் கெஞ்ச ஏனோ நினைவு தெரிந்த நாளிலிருந்து இதுவரை கம்பீரமாகவே பார்த்து பழகிய தன் தந்தையை இவ்வளவு பலகீனமாகப் பார்த்தாலோ என்னவோ,"இப்போ உடம்பெல்லாம் எப்படி இருக்கு... பா..." என்று சொல்லிப் பேச தந்தையும் மகளும் நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் விட்டுப் பேசிக்கொண்டனர். அவர் தன்னுடைய வருத்தங்களைச் சொல்லிப் புலம்ப வரும் முன்னே வான்டேடாய் பேச்சை மாற்றியவள்,"அப்பா என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களைப் பத்தி இனி நான் பேசவோ யோசிக்கவோ விரும்பல. இனி என் வாழ்க்கையில நிகழ் காலமும் எதிர்காலமும் தான் இருக்கு... இறந்த காலம் இறந்திடுச்சு..." என்று சொல்லிவிட்டு சிறிது பேசியபடியே அப்படியே அவர் தூங்கிவிட ஏனோ செழியன் வந்ததிலிருந்து தன்னிடம் பேசாததை எண்ணி அவளுக்கு ஒரு மாதிரி ஆனது.

கைகள் அந்தத் தலையணை அடியில் போக அங்கே இருந்த அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவள் அந்தச் சிறுவனான செழியனை விரல்களால் தடவியவள்,"செழி இன்னைக்கு உன்கிட்ட என் காதலைச் சொல்லணும்னு தான் நெனச்சேன்... ஆனா உன் அம்மாவையும் தங்கையையும் பார்த்ததும் என்னையே அறியாமல் குற்றயுணர்ச்சி தயக்கம் வந்திடுச்சு. என்னால தானே இனியா கல்யாணம் நிற்கும் அளவிற்குப் போச்சி? ஏன்டா எனக்காக இவ்வளவு பண்ற? என் அப்பாவை என்கூடச் சேர்த்து விட்டுட்டு நீ என்னைவிட்டுப் போயிடுவியா? அதுக்காக தான் என் அப்பா கிட்ட நான் பேசவேயில்லை. என்னைப் பற்றி எல்லாமும் தெரிஞ்சும் நீ என்னை ஏற்றுக்கலாம் ஆனால் உன் அம்மா? அவங்க ஏதாவது தப்பா நெனச்சிகிட்டா? எனக்கும் ஒரு மாதிரி இருக்கு செழியா..." என்றவள் அந்தப் புகைப்படத்தையே நெஞ்சில் வைத்துக்கொண்டு அப்படியே உறங்கிவிட இரவில் ரெஸ்ட் ரூம் போக எழுந்த அவள் தந்தை அவள் மீதிருந்த அந்தப் புகைப்படத்தை எடுத்துப் பார்க்க பின்னால் எழுதியிருந்த வாசகத்தையும் பார்த்தவர் ஏனோ தன்னையும் அறியாமல் ஒரு சிறிய புன்னகை சிந்தி படுத்துக்கொண்டார்.
அங்கே இனியா தான் தன் அன்னையிடம் பேச்சை ஆரமித்தாள்.

"அம்மா நீ என்ன முடிவெடுத்து இருக்க?"

அவள் எதைக் குறிப்பிடுகிறாள் என்று புரிந்தும் புரியாது போல்,"நீ எதைக் கேட்கற இனியா?" என்றார்.

"அது செழியன் அண்ணா ஆதிரா அக்காவை விரும்பறதைப் பத்தி..." என்று சொல்ல,

"என்ன நடக்குமோ அது தான் நடக்கும். நீ பேசாமல் தூங்கு..." என்றவர் மாலை ஜெகநாதன் என்ன பேச முயன்றார் என்று புரிந்தவராய் அவரும் யோசனையில் ஆழ்ந்தார். இனியாவின் வாழ்வை நிறைவு பெற்றால் செழியன் எடுக்கும் எந்த முடிவிற்கும் அவருக்கும் சம்மதம் தான் என்று அவர் தான் அன்றே சொல்லிவிட்டாரே? இருந்தும் மாலை ஆதிரா கதவைத் திறக்கும் போது அவளுக்கு இருந்த அந்த உற்சாகம் அவரைப் பார்த்தும் மறைந்தது என்பதைப் பற்றி யோசித்தார். 'அப்போ செழியன் மேல உனக்கும் விருப்பம் இருக்கா ஆதிரா?' என்று நினைத்தவர் அப்படியே உறங்கினார்.

இங்கே வெளியே ஹாலில் படுத்த செழியனுக்கு ஒரு மிக்சட் பீலிங்ஸ் எழுந்தது.(கலவையான உணர்வு). ஒருபுறம் ஆதிராவின் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்வைத்துவிட்ட சந்தோசம் நிம்மதி மறுபுறம் நாளையொடு ஆதிரா இங்கிருந்தே கூடக் கிளம்பலாம், இல்லை வேறு எங்காவது தங்கலாம் என்ற வருத்தம். எதுவென்றாலும் ஆதிரா அவனோடு இருக்கும் கடைசி நாள் இது என்று மட்டும் அவனுக்கு மனம் சொன்னது. இந்த மனநிலையில்,'நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கறேன்...' என்று சொன்னால் அவள் என்ன நினைப்பாள்? ஒருவேளை அவளுக்கு கல்யாணத்தின் மீதே நம்பிக்கை இல்லாமல் போயிருந்தால்? இன்று காலை ஜான் மீண்டும் தன்னுடன் பேசியதை நினைத்தவாறே இருந்தான்.

"மச்சான் எல்லா ஆதாரமும் கிடைச்சாச்சு... இனி மேல் ஆதிராவுக்கு எல்லா வித பிரச்சனையில் இருந்தும் விடுதலை கிடைச்சிடுச்சி. அப்போ இன்னைக்கே ஆதிரா கிட்ட உன் காதலைச் சொல்லிடுடா..." என்று சொல்ல,

அவனோ,"இல்ல மச்சி... இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்..." என்று சொல்லி வைத்துவிட்டான். செழியனை நம்பினால் இந்த முறையும் ஆதிராவை அவன் இழக்க நேரிடும் என்பதைத் தெரிந்து அதை உணர்ந்தவன் பின்பு தான் ஆதிராவை அழைத்து எல்லாம் சொன்னான். இது எதுவும் செழியனுக்குத் தெரியாது.

அன்றைய இரவு கழிந்து அடுத்த நாள் பொழுது புலர ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணத்தில் இருந்தனர். ஆனால் எல்லோருடைய எண்ணதின் நோக்கமும் ஒன்றாகவே தான் இருந்தது. அது செழியன்-ஆதிரா காதல் பற்றியது தான். மகளின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட தந்தை இன்று எப்படியாவது செழியனின் அன்னையிடம் பேசிவிட வேண்டும் பிறகு செழியனிடம் பேசிவிடலாம் என்று நினைத்து ஆயத்தமானார். செழியனின் அன்னை தான் ஆதிராவின் தந்தையிடம் எப்படியாவது செழியனின் காதலைச் சொல்லத் தயாரானார். இனியா அண்ணனுக்காக ஆதிராவிடம் பேச முடிவெடுத்தாள். ஆதிராவோ இன்று எப்படியாவது செழியனிடம் தன் காதலைச் சொல்ல முடிவெடுத்தாள். செழியனோ இன்னும் தொண்டைக்குள் சிக்கிய மீன் முள்ளாவே எந்தப் பக்கமும் முடிவெடுக்க முடியாமல் ஆபிஸ் கிளம்பிக்கொண்டு இருந்தான். ஆதிராவும் ஆபிஸ் கிளம்பிக்கொண்டு இருந்தாள்.

"ஏன் ஆதி அங்கிள் இருக்காரு லீவ் எடுக்கலாமில்ல?" என்று செழியன் கேட்க அவர்களின் பெற்றோர்களோ இவர்கள் இருந்தால் எப்படி விஷயத்தைப் பேசுவது என்று எண்ணி அவர்களைக் கிளப்புவதிலே குறியாக இருந்தனர்.

"பரவாயில்ல செழியன், அவ போகட்டும். நான் இன்னும் கொஞ்ச நாள் இங்க இருக்கலாம்னு நெனைக்கிறேன். இருக்கலாம் தானே?" என்று இறுதியில் தயங்கியவாறே செழியனைப் பார்க்க,

"ஐயோ அங்கிள் இது என்ன கேள்வி? நீங்க தாராளமா இங்கயே இருக்கலாம்..." என்று சொல்ல செழியன் ஆதிரா இருவரும் ஆபிஸ் கிளம்பினார்கள்.

அதற்குள் அவர்களின் பெற்றோர்கள் இருவரும் தங்கள் எண்ணத்தைச் சொல்ல இருவரும் ஒன்றுபோலவே யோசித்து இருப்பதை எண்ணி சந்தோசம் கொண்டனர். மற்றதை எல்லாம் இனியாவின் திருமணம் முடிந்ததும் பேசிக்கொள்ளலாம் என்று முடிவெடுக்க அங்கே ஆதியோ என்ன ஆனாலும் சரி இன்று செழியனிடம் தன் காதலைச் சொல்லிவிட வேண்டுமென்று குறியாக இருந்தாள். நேற்று விடுப்பு எடுத்ததாலும் அத்துடன் தெளிவான முடிவையும் எடுத்ததாலும் தந்தையுடன் சேர்ந்தாலும் உற்சாகமாவே காணப்பட்டாள் ஆதிரா.

காலையிலே செழியனை அழைத்து என்ன நடந்து என்று பொதுவாக விசாரிக்கும் மாதிரி ஜான் கேட்க அவன் சொன்னதையெல்லாம் கேட்டவன்,'இந்த ஆதிரா அப்போ இன்னும் லவ்வை சொல்லலையா?' என்று மனதில் அவளை வறுத்தெடுத்தவன் ஆதிராவுக்கு அழைக்க அவளோ நேற்று நடந்ததைச் சொல்லி இன்று கட்டாயம் சொல்லிவிடுவதாகச் சொன்னாள். இன்றைய மாலைக்காக ஜான், நிவேதிதா, ஜென்னி மற்றும் ஆதிரா ஆகியோர் காலையிலிருந்தே காத்திருந்தனர். (தொடரும்...)
 
Top