Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-14

Advertisement

praveenraj

Well-known member
Member
செழியனின் முகத்தை வைத்தே அவனொரு முடிவுக்கு வந்துவிட்டான் என்று அறிந்து கொண்டார் அவன் தாய். என்ன முடிவு என்று அவருக்கும் குழப்பம் வர அவனோ தீர்க்கமான தன் முடிவைச் சொன்னான்.

"அம்மா நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன். அத நீங்க எப்படி எடுத்துப்பீங்கனு எனக்குத் தெரியில...' என்று சொல்ல ஏனோ தன்னையும் அறியாமல் எச்சில் விழுங்கினார் அவன் அன்னை.

"கண்டிப்பா உங்களையும் இனியாவையும் ஏன் காஞ்சனாவைக் கூட பத்திரமா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு. பொறுப்பைக் காட்டிலும் கடமைனு சொல்லலாம். உங்ககிட்ட நான் ஒன்னு சொல்லல..." என்று அவன் பீடிகை போட,

அவரோ என்னவாக இருக்கும் என்று பார்க்க,

"அன்னைக்கு நைட்..." என்ற அவன் குரலும் கம்மியது.

"அதாவது அப்பா இறக்குறத்துக்கு முன்னாடி நாள் நைட் அப்பா திடீர்னு என்கிட்டே என்னென்னவோ சொன்னாரு..." என்றதும் அவர் அதிர்ந்தார்.

"ஆமாம் அம்மா. வழக்கமா சாதாரணமா பேசுறவரு அன்னைக்கு ஏனோ திடீர்னு காஞ்சனா, இனியா எதிர்காலத்தைப் பத்தி கொஞ்சம் கவலைப் பட்டுப் பேசுனாரு..."

"நான் கூட, 'எதுக்குப்பா இப்போ போய் இதைப் பத்தி ஃபீல் பண்றீங்க? அவங்க இப்போ தான் படிக்கிறாங்க. படிச்சு முடிக்கட்டும் எல்லாம் தன்னால நல்லது நடக்கும். அதுக்குள்ள நானும் படிச்சு முடிச்சி வேலைக்குப் போயிடுவேன். அப்றோம் என்ன கவலைனு' சொன்னேன்"

"இல்ல செழியா என்னமோ தெரியில ஒரு வாரமா ஒரு மாதிரியே இருக்குனு அப்பா சொன்னார்..."

"என்னப்பா ஆச்சு? உடம்புக்கு ஏதாவது தொந்தரவு செய்யுதான்னு கேட்டேன்..."

"அதெல்லாம் ஒன்னுமில்ல. ஒரு வேளை எனக்கு என்ன ஆனாலும் என் இடத்துல இருந்து நீ தான் செழியா எல்லாமும் பண்ணனும்னு சொன்னார்..."

"அப்பா என்ன பேசுறீங்க?"

"டேய் தீன்னு சொன்னா அது சுடாது. ஒருவேளை சுட்டா என்ன பண்ணனும்னு தான் சொல்றேன். பி பிராக்டிகல்..." என்றவருக்கு இப்போது கொஞ்சம் கேசுவலாய் வார்த்தை வர செழியனும் அதை சாதாரணமாய் எடுத்துக்கொண்டான்

"டேய் செழியா என்னடா சொல்ற?" என்ற அன்னைக்கு,

"என்னனு புரியில மா... ஆனா ஒன்னு கேள்விப்பட்டிருக்கேன்... சில பேருக்கு அவங்களோட கடைசி கட்டம் நெருங்கிடுச்சினு அதுக்கு கொஞ்சம் முன்னாடியே உணர்த்துடுவாங்கலாம். நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஒருவேளை அப்பா கூட அப்படி உணர்ந்திருப்பாரோ என்னவோ? யாரு கண்டா?"

கொஞ்சம் மௌனம் நீடிக்க,"சோ இனியா வாழ்க்கையும் எந்த சிக்கலும் இல்லாம செட்டில் செய்யணும் செழியா..." என்ற அன்னைக்கு,

"அப்பா அடிக்கடி ஒன்னு சொல்லுவாரு. உனக்கு ஞாபகம் இருக்கா அம்மா?"
அவர் என்னவென்று பார்க்க ,

"செழியா, நம்மை நம்பி யாராச்சும் வந்தாலோ இல்ல யாராச்சும் நம்ம கண்முன்னாடி கஷ்டப் படும் போது ஒருவேளை நம்மால அவங்களுக்கு ஏதாவது செய்ய முடியும்னு தோணுனா தயங்காம அவங்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செஞ்சிடனும் டா. அப்றோம் அவங்க படும் கஷ்டத்தைப் பார்த்து, 'ச்ச்சே நாம அப்படி அவங்களுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கணுமோ?செஞ்சிருந்தா இப்படி நடந்திருக்காதோனு எல்லாம் யோசிச்சு ஃபீல் பண்ணி எந்த பிரயோஜனம் இல்லனு சொல்வார். சோ நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்..."

"என்ன செழியா?"

"ஆதிராவை இப்போ இருக்குற நிலையில தனியா விடவோ இல்லை எங்கேயாவது போனு சொல்லவோ முடியாதும்மா... அதுனால நான் ஆதிராவை என் கூடவே ஊருக்குக் கூட்டிட்டுப் போறேனம்மா..." என்றவன் இதற்கு தன் தாயின் முகம் எப்படி இருக்கிறது என்று கூர்ந்து கவனித்தான். அவனால் தான் எதையும் கண்டுப் பிடிக்க முடியவில்லை. அதில் எவ்வித உணர்வும் இல்லை.

"அம்மா ஏதாவது சொல்லுங்க ப்ளீஸ்?"

"என்ன சொல்லனும் செழியா?"

"சரினோ இல்லைனோ..." என்று அவன் சொன்னாலும் சரி உடனே வந்துவிட இல்லை நிறுத்தி நிறுத்தி இ... ல்... லை என்று தான் வந்தது.

"செழியா எனக்கு உண்மையிலே என்ன சொல்றதுனே தெரியில..."

"ஏம்மா என்மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?"

"ஐயோ, நம்பிக்கை இல்லாமலையா நான் ஆதிராவை இங்க கூட்டிட்டு வந்தேன். செழி உங்க அப்பா போனதுக்கு அப்றோம் இதுவரை நானா உன்கிட்ட எதையுமே செய்யுன்னும் சொன்னதில்லை செய்யாதனும் சொன்னதில்லை. நீயா படிச்சு முடிச்ச வேலைகிடைச்சிடுச்சினு போன... தங்கைங்களையும் அவங்க ஆசைப்பட்டதையே படிக்கவெச்ச... காஞ்சனாக்கு வரன் பார்த்த... கல்யாணமும் பண்ண... அவ பையனுக்கு தாய் மாமனா எல்லாமும் செஞ்சிட்ட... இப்போ இனியாக்கும் பார்த்து முடிவு பண்ணியிருக்க. போதாக்குறைக்கு காலையிலே என்கிட்டே எல்லாத்தையும் சொல்லிட்ட. எனக்குத் தெரிஞ்சி உங்க அப்பா போனதுக்கு அப்றோம் இந்த ஏழு எட்டு வருஷத்துல நீ உனக்குன்னு எதையும் பெருசா ஆசைப்பட்டோ இல்லை தப்பாவோ எதையும் செஞ்சதில்லை. நீ எடுக்குற எல்லா முடிவுக்கும் நான் கூட இருந்து தான் இருக்கேன். இப்பயும் இருக்கிறேன். இனியும் இருப்பேன். உனக்கே தெரியும் இந்த நிலைமையோட வீரியம் என்னனு? இதுனால நிச்சயமா நாளைக்கு ஆதிரா மாமா மூலமா இனியா கல்யாணத்துக்கோ இல்லை உனக்கோ எனக்கோ ஏன் ஆதிராவுக்கோ கூட நிறைய பிரச்சனை வரலாம். வரலாம் என்ன? கண்டிப்பா வரும்..." என்று நிறுத்த,

"நான் எதையும் சமாளிக்க தயாரா தான் இருக்கேன் ம்மா. இன் பேக்ட் நான் எல்லாம் யோசிச்சி தான் இந்த முடிவு எடுத்திருக்கேன். நான் உங்களுக்கு ஒரு வாக்கு தரேன். எந்தச் சூழ்நிலையிலும் என்னோட இந்த முடிவாலையோ இல்ல ஆதிராவலையோ இல்ல அவ குடும்பத்து மூலமாகவோ உங்களுக்கோ இனியாக்கோ இல்ல காஞ்சனக்கோ எந்த வித பாதிப்பும் வராது. வரவிடமாட்டேன். எனக்கு நீங்களும் முக்கியம் ஆதிராவும் முக்கியம்..." என்றவன் உணர்ச்சிவசத்தில் எதையோ உளறிவிட்டதைப் போல் நினைத்து நிமிர்ந்தவன், தன் தாயைப் பார்த்து,"அதவாது ஆதிரா வாழ்க்கை... அவ சந்தோசம், நிம்மதி... அவ மேல விழுந்திருக்கும் இந்தப் பெயர்..." என்று ஏதோ சொல்லிச் சமாளித்தான்.

அவன் சொன்னதையும் இப்போது சமாளிப்பதையும் நன்கு புரிந்தாலும் புரியாதது போல் இருந்தவர் அங்கிருந்து நகர,

"அம்மா, எனக்கு ஒரு பதில் சொல்லிட்டுப் போங்க..."

"என்ன?"

"நான் ஆதிராவை என்கூடவே கூட்டிட்டுப் போறதுல உங்களுக்கு எந்த ஆட்சேபனையும்...?"

"எனக்கு என் வளர்ப்பு... இல்ல இல்ல, உங்க அப்பா வளர்ப்பு மேல முழு நம்பிக்கை இருக்கு. கூடவே என் மகன் மேலயும் அதிக நம்பிக்கை இருக்கு. உன் மனசுக்கு எது சரினு படுதோ அதைச் செய். ஆனா எந்தச் சூழ்நிலையிலும் இதால இனியாவோ காஞ்சனாவோ ஏன் உன் எதிர்காலமோ இல்ல உங்க அப்பாவோட பேரோ துளியும் பாதிக்கக் கூடாது. எனக்கு அவ்வளவு தான் வேணும். எனக்கு எதுனாலும் கவலை இல்ல. போய் படு செழியா மத்ததை காலையில பார்க்கலாம்..." என்றவர் நகர,

"அம்மா..."

"என்ன செழி?"

"விடியற் காலையிலே நாங்க சென்னை கிளம்பறோம். அதாவது பொழுது விடியும் முன்னே... அண்ட் உங்க நம்பிக்கை, ஆசை இதை என்னைக்கும் நான் கெடுக்க மாட்டேன். என் முடிவால உங்க யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. வரவும் விடமாட்டேன்..."

"சரி போய் படு. காலையில எழுப்புறேன்..."

செழியன் ஏனோ வெளியே வந்தவன் அங்கே மாற்றப்பட்டிருந்த தன் தந்தையின் புகைப்படத்திற்கு முன்பு நின்று,"அப்பா எப்பயும் போல இப்பயும் என் கூடவே இருந்து எனக்கு வழிகாட்டுங்க... என்னால இந்த நிலையில ஆதிராவை எக்கேடோ கெட்டுப் போனு விட முடியிலப்பா... அதே நேரம் இதுனால வேற பிரச்சனையும் வந்திடக் கூடாது. நான் எடுத்த முடிவு சரியா தப்பா எதுவும் எனக்குத் தெரியில. ஆனா ஒன்னு, எந்த இடத்துல ஆதிரா கேரக்டரை தப்பா பேசுனாங்களோ அதே இடத்துல அவ மேல எந்த தப்பும் இல்லைனு நான் நிரூபிக்கனும். முதல் தடவை தான் அவ கஷ்டத்துல நான் கூட இல்லாம போயிட்டேன். இந்த முறை என்ன ஆனாலும் அவ கூடவே இருப்பேன்..." என்றவன் சென்று கண்களை மூட, ஏனோ அவன் எடுத்த முடிவு எவ்வளவு கடினமென்பது அவனுக்கும் புரிந்தது. 'முதலில் இனியாவின் கல்யாணம், ஆதிராவுக்கு கொஞ்சம் நிம்மதி, பிறகு...' என்று யோசித்தவனுக்கு அரவிந்தின் நினைவு வர ஏனோ சொல்லமுடியாத கோவம் வந்தது. 'டேய் அரவிந்த் நீ யாரு எங்க இருக்க எதுவும் தெரியாது ஆனா உன் வாயாலே ஆதிராவைப் பற்றி உண்மையை சொல்ல வெப்பேன்...' என்று நினைத்தவன் அவனுக்கிருந்த தலைவலிக்கு படுத்ததும் தூக்கம் வர மனதில் இருக்கும் வலியால் அவனால் உறங்கவும் முடியாமல் தவித்தான்.

******************
வந்த வழியே மீண்டும் அவர்கள் காரில் பயணப்பட்டுக் கொண்டிருந்தனர். செழியன் தான் எதையும் வெளிக்காட்டாது ரோட்டை பார்த்து வண்டியை ஓட்ட, ஆதிரா தான் காலையில் நடந்ததையெல்லாம் நினைத்து அழுவதா இல்லை நிம்மதி கொள்வதா என்று இருந்தாள். வாழ்க்கையில் தான் என்றோ செய்த புண்ணியம் தான் இன்று செழியனின் மூலமாவும் அவன் அன்னையின் மூலமாவும் வந்ததுள்ளது என்ற ஒன்று மட்டும் அவளுக்குப் புரிந்தது.

காலையில் எழுப்பியவர் முன் ஒரு நிமிடம் தான் எங்கு இருக்கிறோம் என்ன நடந்தது என்று அனைத்தும் மறந்து போனாள் அவள். பிறகு நினைவு வர ஏனோ அவளை அழைத்துச் சென்றவர் மொத்தமாய் எல்லாமும் சேர்த்து விலக வேண்டி எண்ணெய் தேய்த்து அவளை குளித்து வரச்சொல்லி," நீ செழியனோடு சென்னை போற ஆதிரா. அவன் கூடவே தங்குற... உன் வாழ்க்கைக்கு என்ன தேவைன்னு பொறுமையா முடிவெடு. எதையாவது படிக்கணும்னாவோ இல்லை வேலைக்கு எங்கேயாவது போகணும்னுனாவோ அதற்கான ஏற்பாட பாரு. என்னடா வேலைக்குப் போகச் சொல்றாங்களே அப்போ நம்மள பார்த்துக்க மாட்டாங்களானு எல்லாம் நினைக்காத ஆதிரா. உனக்குன்னு ஒரு வேலை இருந்தா நீ யாரையும் டிபெண்ட் பண்ணி இருக்க வேண்டிய அவசியத்தை தராது. என் அனுபவத்துல சொல்றேன், செழியன் அப்பா போனதும் என்னால எதுவுமே பண்ண முடியல... ஏன்னா எனக்கு எந்த வேலையும் தெரியாது. பெருசா சொத்தும் இல்ல... இருந்ததை வெச்சு செழியன் படிச்சான். கொஞ்சம் பணம் வந்தது அவ்வளவு தான். அப்போ தான் நானும் ஒரு வேலைக்குப் போயிருக்கணுமோனு நெனச்சேன். சோ எந்தச் சூழ்நிலையிலும் நாம யாரையும் டிபெண்ட் பண்ணி இருக்கக் கூடாது. திரும்பவும் சொல்றேன் ஆதிரா, உன்னை நான் சுமையாவோ இல்லை உன்ன துரத்தணும்னு எல்லாம் இதைச் சொல்லல. நீ என்ன ஆனாலும் செழியன் கூடவே தான் இருக்கனும். உங்க மேல விழுந்திருக்க பழி ரொம்ப பெருசு. அதை நீங்க சேர்ந்து தான் நீக்கனும். அண்ட் இதெல்லாம் நினைத்து முட்டாள் தனமா எந்த முடிவும் எடுத்திடக் கூடாது..." என்று நிறுத்தியவர்,

"வாழ்க்கையில எதையும் போராடனும்... தோற்றாலும் பரவாயில்லை.. சாவுங்கறது இயற்கையா தான் வரணும்... இதுக்கு மேல நான் விளக்கமா சொல்ல வேண்டிய அவசியம் இல்லனு நினைக்கிறேன். ஒருவேளை நீ ஏதாவது தப்பா முடிவெடுத்தா அப்போ தான் உன்னால எங்களுக்கு பெரிய கஷ்டம் வரும். பிரச்சனை வரும். ஆனா இப்போ நீ எங்களுக்கு கஷ்டம் இல்ல..."

ஏனோ இதைச் சொன்னதும் ஆதிரா அவரைக் கட்டிக்கொண்டாள். ஆம் சூழ்நிலை அவளுக்குள் நிறைய நெகடிவ் தாட்ஸ் கொடுத்துவிட்டது. 'இனியும் தான் ஏன் வாழவேண்டும்?' என்ற கேள்வியும் அவளுக்குள் வந்தது தான். இப்போது தான் அது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று புரிந்தது.
ஒரு புதிய பயணம், புதிய அக்னி பரிட்சை... ஆனால் இம்முறை சீதைக்கு மட்டுமில்லை ராமனுக்கும் தான்! (பார்ப்போம்... தொடரும்...)

இந்தக் கதை எப்படிப் போகுது? ஏன்னா கதையுடைய இண்டெர்வெலுக்கு வந்துட்டோம். இன்னும் பதினைந்து அத்தியாயங்கள் வரும்...
 
செழியன் அம்மா வார்த்தைகள்
அர்த்தம் நிறைந்தவை
 
Top