Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயம் கேட்கும் காதல் 3

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
இதயம் கேட்கும் காதல்...

பகுதி 3

"மதி கார்மெண்ட்ஸ்" என்ற பெயர் பலகை தாங்கி நின்ற, கட்டிடத்தினுள் சென்றதுமே இதழினிக்கு மனதில் ஒரு இனம் புரியா உணர்வு. காரணத்தை அவள் சரியாக புரிந்து கொண்டாளா(?!) அவளுக்கே வெளிச்சம்...

தனது அடையாள அட்டை கொண்டு, தனது என்ட்ரியை ரெஜிஸ்டர் செய்தவள், லிப்ட் உதவியுடன் தனக்கான தளத்தை அடைந்து, சீட்டில் அமர்ந்து வேலையை துவங்கிய சிறிது நேரத்தில், தன்னிடம் வந்த இரண்டு பேரை பார்த்ததும், மிகுந்த சளிப்பு தான் வந்தது. காரணம் வேறு என்னவாய் இருக்கும்?! பெண்கள் அவளை தேடி வந்தாலே, அது அவளின் அருமை தம்பியின் கைங்கரியமாக தான் இருக்கும், என தெரியாதா அவளுக்கு!!!

"இதழினிக்கா, உங்க தம்பிகிட்ட பேசினீங்களா, இல்லையா? அவன நாங்க மேடம் கிட்ட போட்டு கொடுக்காம போனதுக்கு ஒரே காரணம் நீங்க தான்" என்ற பெண்ணை தொடர்ந்து, மற்றொரு பெண்ணும்,

"காலைல வந்ததும் வேலைய பார்க்காம வந்து, எங்ககிட்ட கடலை போட்டுட்டு நிக்கறான். மேடம் சிசிடிவில பார்த்தா, அவனுக்கு மட்டுமில்ல, எங்க பொழப்பும் போச்சு" என்று கூறிட, இதழினிக்கும் அதே கவலை தான்..

மேலும்,"அவன் அக்கா தங்கச்சி கூட பொறக்காம இருந்திருந்தாலும் பொண்ணுங்க கஷ்டம் தெரியாம இருக்குமுன்னு நினைக்கலாம். ஆனா, ஒன்னுக்கு மூனு பேர் இருக்கீங்க. அவன இப்படி பொறுக்கி மாதிரி நடந்துக்க வச்சிருந்தா நல்லாவா இருக்கு?

நாளைக்கு உங்க வீட்டுல இருக்கறவங்ககிட்ட, இப்படி யாராவது நடந்துக்கிட்டா, அப்ப தான் எங்க கஷ்டம் புரியுமோ உங்களுக்கு?!
எங்க வீட்டுலையும் ஆம்பள பசங்க இருக்கறாங்க. எதையும் யோசிச்சு பேச சொல்லுங்க. அப்புறம் பின்விளைவு எப்படி இருக்குமுன்னு சொல்ல முடியாது" என்ற அவர்களின் வேதனையான மொழிக்கும், அவர்களின் மறைமுக மிரட்டலுக்கும்,
ஒடுங்கி தலைகவிழ்ந்து நிற்க வேண்டிய நிலை இதழினிக்கு,.

அவர்களையும் குற்றம் சொல்ல முடியாதே.. இதோடு ஆறு மாதமாக தினமும் இதே பிரச்சனை தொடர்ந்தால் அவர்களும் என்ன செய்வார்கள்?

'இங்காவது தான் இருக்கிறோம் என்ற நிலை, வெளியே சென்றால் இன்னமும் வேறு மாதிரி சிக்கலை உருவாக்கி விடுவானோ?!' என்ற பயத்தில் தான், இதுவரை பொறுமையாய் அவர்களுக்கு சமாதானம் சொல்லி வந்தவள், இன்று அவர்களின் மிரட்டலும், தம்பியின் பொறுப்பில்லா பதிலும் மேலும் அவளை சோர்வுற செய்தது என்பதில் ஐய்யமில்லை.

"மாலா, தயவு செஞ்சு இத பெருசு பண்ணாத, கண்டிப்பா இனி இப்படி நடக்காம பார்த்துக்கறேன், இந்த முறை விட்டுடு" என்ற அவளின் கரகரத்த குரலிலேயே அவளின் நிலை புரிய..

"அக்கா உங்களுக்காக இப்பவும் அமைதியா போறோம், மறுபடியும் இப்படியே செஞ்சா நல்லா இல்ல சொல்லிட்டோம்" என்றதுடன் அவர்கள் வெளியேற, தலையில் கைகளை கொடுத்து கவிழ்ந்து அமர்ந்தாள் இதழினி.

"இதழினி, ஏன் இப்படி உக்காந்திருக்க?! என்னாச்சு? எதாவது பிரச்சனையா.. இல்ல உடம்புக்கு முடியலையா... " என்ற கேள்வியுடன், தன் முன் நிற்பவனை பார்த்த நொடி, இதுவரை மனதில் சூழ்ந்திருந்த வேதனை நீங்க, முகத்தை முயன்று திருத்தி,

"வாங்க சந்துரு, உடம்புக்கெல்லாம் ஒன்னுமில்ல, ஜஸ்ட் ஒரு ரிலேக்சேஷன் அவ்வளவு தான்" என புன்னகையுடன் கூறிட,

அவளை, "நம்பிட்டேன்" என்பதாய் ஒரு பார்வையை செலுத்தியவனின் முகத்தில் வந்த பாவத்தை புரிந்தவள்,

"நிஜமா தான் சந்துரு" என மறுபடியும் சொல்ல, சிறு புன்னகையுடன்

"நிஜமா இருந்தா சரி" என்ற வண்ணம், அவனின் வேலையை பார்க்க சென்றான். செல்லும் அவனின் முதுகையே வெறித்தவள், ஆழ்ந்த பெருமூச்சை வெளிவிட்டு விட்டு தனது பணியை தொடர்ந்தாள்.

சந்துரு, அவள் மீது காட்டும் இது போன்ற அக்கரையும், அவனும் தங்களை போன்ற தொழிலாளர் வர்கம் என்பதும் அவளை அவன் பால் ஈர்ப்பதை, அவளே முயன்றும் தடுக்க இயலாது போக, 'நடப்பது நடக்கட்டும்' என, அவள் போக்கில் காலத்தை நகர்த்தி கொண்டிருக்கிறாள்.

அவன் மீதான தனது சிறு ஈர்ப்பும் காதல் வரை போகுமா?! இல்லையா?! என்பதை பற்றி ஆராயும் நிலையில் அவளின் குடும்ப சூழல் இருக்க, அவளுக்கு வேறு மார்க்கமும் இல்லையே..!!!

சந்துரு அவள் வேலை பார்க்கும் அதே கார்மெண்ட்ஸில் வேலை பார்க்கிறான். கணக்கு வழக்கிலிருந்து, ஆர்டர்கள் சரியாக போய் சேர்ந்தது வரையிலும் சரிபார்ப்பது அவன் தான்.

'மேடத்தின் வலது கை அவன்' எனும் வண்ணம் அந்த கார்மெண்ட்ஸ்ஸில் பெயர் எடுத்தவன். பெரிதாக யாரிடமும் பேச மாட்டான். ஆனால் இதழினி இங்கு சேர்ந்த நாள் முதல், அங்கு வேலை பார்க்கிறான். அவள் மேல் மட்டும் கொஞ்சம் அக்கரையுடன் பேசுவான்.

அவனின் அக்கரை இதழினிக்கு அவனின் மேல் நல்ல மதிப்பையும், நம்பிக்கையையும், விதைத்ததை அவனே அறியவில்லை.

அன்றைய வேலை நேரம் முடிந்ததும், "எப்படி தன் தம்பியின் பிரச்சனையை சரி செய்ய போகிறோமோ???" என்ற எண்ணத்துடன் வீடு வந்து சேர்ந்தவளை, அவளின் தந்தை சொன்ன விசயம் ஆனந்தின் பிரச்சனை பற்றிய சிந்தனையை ஓரம்கட்ட வைத்தது.
 
"என்னப்பா சொல்றீங்க?! காலைல கூட எதுவுமே சொல்லையே! திடீர்ன்னு வந்து, நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்க, லீவ் போடுன்னு சொன்னா எப்படிப்பா?!

இப்ப என்னோட கல்யாணத்துக்கு என்ன அவசரம், வீடு இப்ப இருக்கற நிலைக்கு என் கல்யாணம் தேவையா?!" என பலவிதமான மனதின் குழப்பம், பயம் போன்ற உணர்வுடன் கேட்டவளை அதுரமாய் தலையை தடவியவர்,

"இதழிம்மா, உனக்கும் வயசாகிட்டே போகுதே டா, இப்பவே 25 முடிய போகுது, இன்னும் அடுத்து அபி, வினி ரெண்டு பேர் இருக்காங்கடா, அப்பாவும் இனி ரிட்டையர்டு ஆக போறேன், அதுல வர்ற பணத்த வச்சு எப்படியோ உனக்கும், அபிக்கும் நல்லத நடத்திட்டா, அப்புறம் வினியும் ஆனந்தும் தானே, எப்படியோ நாங்க சமாளிச்சிடுவோம்டா" என்றதும்,

"அப்பா, வர்ற பணம் மொத்தத்தையும் எங்களுக்கு செஞ்சிட்டா, அடுத்து நீங்க மூனு பேரும் எப்படி…. வினி வாழ்க்கையை வேணுமின்னா, நாங்க போற வீட்ட பொறுத்து பொறுப்பு ஏத்தக்கலாம். ஆனா ஆனந்த்?!" என்றவளின் தயக்கம் நன்றாகவே புரிந்தது அவளின் பாசமான தந்தைக்கு,

"அவன் செய்யறதுக்கு நம்ம எப்பவும் பழியாகிட்டே இருக்க முடியாதுடா, அவன் விதி எப்படியோ அப்படியே நடக்கட்டும். உனக்கு நா செய்யறது இஷ்டமில்லையா, அத மட்டும் சொல்லு, இல்ல வேற யாராவது மனசுல இருந்தாலும் சொல்லும்மா?" என்பவரிடம்.. 'சந்துரு பற்றிய தன் அபிப்ராயத்தை சொல்லலாமா?'என ஒரு நொடி யோசித்தவள்,.

'இன்னும் அவளுக்கும் சரியாக புரியாத விசயம் அதோடு, அவனின் மனதை அவளே தெரிந்து கொள்ளாத போது அவருக்கு எப்படி சொல்வது?' என தயங்க,.

அவளின் மௌனமான நிலை, அவருக்கு ஒரு வித பதட்டத்தை கொடுத்தது உண்மை. ஏனெனில் தந்தையாய், அவளின் வாழ்க்கை தேர்வு தன்னுடையதாய் இருக்க வேண்டும் என நினைப்பதை அவராலும் தடுக்க முடியாது போக வந்த படபடப்பு அது…

"என்னடாம்மா, அப்படி உன் மனசுல யாராவது இருக்காங்களா என்ன?" என மறுமுறை கேட்டதும்,

அவரின் நிலையை உணர்ந்தவள்,
"இல்லப்பா, நீங்க ஏற்பாடு செய்ங்க" என சொன்னதும், மாரியப்பன் முகத்தில் வந்த மகிழ்ச்சியை பார்த்தவள், இந்த மகிழ்ச்சிக்காக எதையும் இழக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள் இதழினி.
 
Top