Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயம் கேட்கும் காதல் 11

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
இதயம் கேட்கும் காதல்….

பகுதி 11

ஹரிஹரன், அங்கிருந்து சென்றதும், தோய்ந்து போய் சில நிமிடம் அமர்ந்த இதழினியின் மனமோ, 'தான் எடுத்த முடிவு சரி தான். இதில் மாற்று கருத்து இல்லை' என்ற தெளிவு கிட்டும் வரையிலும், அலைபாய்ந்தபடி இருக்க, மனம் தெளிவானவுடன் பழைய நிமிர்வும், துணிவும் வர, தனது வேலையை தொடர சென்றாள்.

இதுவரை, அங்கு இதழினியின் பேச்சினை கேட்டது, ஹரிஹரன் மட்டுமல்ல, வேறு இரு நபர்களும் கூட தான்!

சந்துருவிடம் சென்ற இதழினி, தனது முடிந்த வேலைக்கான ரிப்போர்ட்டை ஒப்படைத்தவள், அவளின் மற்ற வேலையில் ஆழ்ந்து போக..

சந்துருவுக்கோ, மீண்டும் இதழினியை பார்த்ததும், செழியன் பற்றிய சிந்தனையும், அங்கு அவன் எப்படியான கேள்வியில் சிக்கி தவிக்கிறானோ?! என்ற நினைவும் பாட்டாய் படுத்திட, 'நேராக அங்கே செல்வதும் சரிவராது. எப்படி, என்ன காரணம் கொண்டு, அங்கே செல்வது?' என்ற சிந்தனையில் இருந்தவனுக்கு, அந்த வாய்ப்பை தானாக வழங்கினார், மதி தனது அழைப்பின் மூலம்…

"மே ஐ கம்மின்" என்றதும், "எஸ்" என்ற கம்பீர குரலுக்கு அடுத்து, உள்ளே சென்ற சந்துருவின் மனமோ, குதிரை பந்தையத்தில் ஓடும் குதிரையை விடவும் வேகமாய் துடித்தது.. தன் நண்பனின் கவலையான முகம் பார்க்க வேண்டுமே என்ற தவிப்பால்..

ஆனால் அங்கோ, சந்துருவின் எதிர்பார்ப்பிற்கு, முற்றிலும் மாறாக, நண்பனின் புன்னகை முகத்தில், குழம்பி போய், அவனையும், அங்கிருந்த மதியையும் மாறி மாறி பார்த்திருந்தான்.. 'யாராவது சொல்வார்களா, காரணத்தை!' என்ற எண்ணத்தில்…

"என்ன.. சந்துரு. உன் கூட்டாளி மூஞ்சில எரியற பல்பு விசயத்த சொல்லாம சொல்லுதா? இல்ல நா விளக்கி சொல்லட்டுமா?!" என்றதும், சந்துருவிற்கு அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் ஒருங்கே கிடைத்தது.

மகிழ்வுடன் நண்பனை பார்த்தவன், 'நிஜமாவா?!' என கண்களால் கேட்க, தன் இமைகளை மூடி திறந்து, 'ஆம்' என்றதும் இருக்கும் இடம் மறந்து, "வாவ்.. " என்ற சத்தத்துடன் செழியனை கட்டிபிடித்திருந்தான் சந்துரு..

நண்பனின் இத்தனை ஆண்டு தவத்திற்கு பலனளிக்க, அவனின் குருவே ஒப்புதல் அளித்த பின், யாராலும் அதை தடுக்க இயலாது என்பது அவனுக்கு தெரியாதா என்ன..!!

இருவரின் பாச பிணைப்பு பற்றி நன்றாக தெரிந்திருந்தாலும், என்றும் போல இன்றும், அதுரமாக அவர்களை பார்த்துக்கொண்டிருந்த மதிக்கு கண்கள் கலங்கித்தான் போனது.

அதனை மறைத்து.. "செழியப்பா, இப்பவே சந்திராகிட்ட நா பேசிட்டு, இதழினி வீட்டுலையும் பேசிடுறேன். நீ அதுவரை கொஞ்சம் இதுவரைக்கும், அடங்கி இருந்த மாதிரி இருக்க. சரியா?!" என்றதும்,
மதியை நெருங்கி அவரை அணைத்தவன், "ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மதிம்மா.. நா கேட்டதுக்காக இவ்வளவு வருஷமா, அவளுக்காக பார்த்து பார்த்து செஞ்சதோட, அவளுக்கு பாதுகாப்பும் கொடுத்திருக்கீங்க.

இப்போ அவளை முறையா, என்கிட்ட ஒப்படைக்கிறேன்னு சொன்னது போலவே செய்யவும் போறீங்க.
ஐ'யம் சோ ஹேப்பிம்மா.. லவ் யூ ம்மா.." என சந்தோஷமாக ஆர்ப்பாட்டம் செய்தவனுடன், சந்துருவும் இணைந்து கொள்ள, அந்த அறையே சந்தோஷ கூச்சலால் நிரம்பி வலிந்தது.

அவர்களை பார்த்தவரே, அமர்ந்த மதிக்கோ, செழியன் நான்கு வருடத்திற்கு முன் தன்னை காண வந்த நாள், கண் முன் வந்து போனது.

**********

நான்கு வருடத்திற்கு முன்பு...
இதழினியிடம் காதலை சொல்லி, அதற்கு அவளின் மறுப்பையும், அவளின் உதாசினத்தையும் பொறுத்துக்கொள்ள இயலாது, தனக்கு எப்போதும் குருவாய், நல்ல வழிகாட்டியாய் நினைக்கும் தனது மதியம்மாவின் வீட்டிற்கு விரைந்தான் செழியன், தனது மனபாரத்தை இறக்கிட வேண்டி..

செழியனை பார்த்ததும், முகத்தில் எப்போதும் சந்தோஷத்தையும், குறும்பையும் மட்டுமே காட்டும், தன் மகனின் கண்கள், இன்று ஒளியிழந்து தவிப்புடன் இருக்க, அதை சகிக்காத மதி, "செழியப்பா. என்னடா?!" என்ற வார்த்தையை முடிக்கும் முன்பு, அவரின் மடியில் தலை சாய்த்தவன்..

"ஏம்மா, நான் விளையாட்டு பிள்ளை தான். ஆனா இதுவரை யாரையாவது ஏமாத்த நினச்சிருக்கேனா?! எப்படிம்மா அவ அப்படி சொல்றா?!" என வேதனையோடு கேட்க..

செழியனின், 'அவ' என்ற பதத்திலேயே, இது காதல் விவகாரம் என புரிந்து கொண்ட மதி, அவனின் தலையை கோதிய படியே,
"யாருடா அந்த பொண்ணு ?!" என சாதாரணமாக கேட்க,

அவளை பற்றி, ஆதி முதல் அந்தம் வரை சிறிதும் தடங்கல் இல்லாமல், சொன்னதிலேயே, அவனின் உண்மை காதல் புரிந்து போனது மதிக்கு…

அதேநேரம், செழியன் புரிந்து கொள்ள தவறிய இதழினியின் நிலை, தாயாய் மட்டுமல்ல, சிறந்த தொழிலதிபராய் இருக்கும், மதிக்கு நன்றாகவே புரிந்து போனது.

ஆறுதலாய் அவனின் தலை கோதியபடியே, "செழியப்பா, நீ அந்த பொண்ண ரொம்ப விரும்பறீயா, இல்ல... இந்த காலத்து பசங்களுக்கு வர்ற மாதிரி, இன்ஸ்டன்ட் காதலா?!" என்றதும்,
 
சட்டென அவரின் மடியிலிருந்து எழுந்தவன், "மதிம்மா, நான் ரொம்ப சீரியஸ்ஸா தான் சொல்றேன். அவ தான் என்னோட சந்தோஷம், வாழ்க்கை எல்லாமே.

அவள நீங்க பார்த்தா தெரியும். அவ வீட்டு ஆளுங்க கிட்ட அவள் காட்டும் அக்கரையும்.. பொறுமையும், பொறுப்பும், கனிவான பேச்சும்.. பாசமா பார்க்கற பார்வையும்..

அது அத்தனையும், எனக்கே எனக்குன்னு வேணுமின்னு, என் இதயம் கேட்குது மதிம்மா" என்றதும்,

"நீ எப்ப செழியப்பா, அவங்க வீட்டுக்கு போன..?!" என்ற மதியின் கேள்வியில்,

"அது.. அவங்க வீட்டுக்கெல்லாம் போகலை மதிம்மா. அவளை ஃபாலோ பண்ணும் போது, கோவிலுக்கு குடும்பத்தோட வந்தாங்க..

அதுல அவங்க பேமிலி மெம்பர்ஸ் எல்லாரையும் பார்த்தேன். அப்புறம் தான் தெரிஞ்சுது, அவங்க வீட்டில் யாருக்கு பிறந்தநாளா இருந்தாலும், அந்த கோவிலுக்கு வருவாங்கன்னு. அதான்.." என்றவனுக்கு,

சொன்ன பிறகே, ஏதோ ஒரு வேகத்தில், அவசரப்பட்டு தானே மதியிடம் இதழினியின் பின்னே சென்றதை உளறி கொண்டிருப்பது புரிய, மெல்லிய அசட்டு சிரிப்போடு, வெக்கமும் வந்திட, தனது தலை மூடியை கோதும் சாக்கில் முகத்தை மறைத்தவனை, பார்க்க மதிக்கே ஆச்சர்யம் தான்.

விளையாட்டு பிள்ளையாய் இருந்த தங்கள் மகனின் இந்த பரிமாணம் அவருக்கு மிகவும் புதிது. அது மட்டுமில்லாமல், வெக்கத்தோடு அவன் முகம் காட்டும் பரிமாணத்திலேயே அவனின் ஆசையும், நேசமும் புரிய, இதுவரை அவனின் எந்த நியாயமான ஆசைக்கும் தடை விதிக்காது, அவனுக்கு சாதகமாய் முடிவு எடுப்பவர்கள் இந்த விசயத்திலும் அவனுக்கு சாதகமாகவே முடிவெடுக்க தயாரானார்.

எனினும், இப்போது தான், கல்வியை முடித்த அவனுக்கு இன்னும் பக்குவம் வர வேண்டும். அதே நேரம் அந்த பெண்ணுக்கும் இப்போதைய சூழலில் தெளிவாக முடிவெடுக்க முடியாது என்பதையெல்லாம் சிந்தித்தவர்,

"செழியப்பா, நா உன்னோட இதழினிய உனக்கே உனக்குன்னு கொடுக்க முடிவெடுத்துட்டேன். அவங்க வீட்டு ஆளுங்க, சம்மதத்தோடு உன் கல்யாணம் நடக்கும்" என்றதும் மலர்ந்த அவனின் முகம், அடுத்து அவர் சொன்னதில், "ஃப்யூஸ்" போன பல்பாகி போனது.

ஏனெனில் அவர் சொன்னது, "இப்ப இருந்து நாங்களா, சொல்ற வரை நீ அவள பார்க்கவோ, பேசவோ ட்ரை பண்ண கூடாது.

அந்த பொண்ணுக்கு வீட்டுல எப்ப, கல்யாணம் பேசறாங்களோ, அப்ப முறையா நாங்க பேசி நடத்தி வைக்கிறோம்.

அந்த இடைப்பட்ட நேரத்துல நீ, உன் திறமையால, தொழிலில் நிலையான ஒரு இடத்தை தக்க வச்சு காட்டனும்.

இதுக்கு ஓகே ன்னா இதழினி உனக்கு தான். அதுக்கு நா கேரன்டி" என்றதும்,

'அவங்க சொல்ற வரை ன்னா. எத்தன நாளோ?!' என்பது போல யோசித்தவனின், சிந்தனையை அறிந்தவர் போல,

சிறு புன்னகையோடு, "அவள உனக்கு கல்யாணம் செய்ய நாளில்ல, செழியப்பா வருஷங்கள் ஆகலாம். முடிவு உன்னோடது. உன்னால் காத்திருக்க முடியும் தானே.

இது ஒருவிதத்தில், உனக்கான ஒரு சுய பரிசோதனை ன்னு கூட வச்சிக்க. இதழினி மேல இருக்கறது ஈர்ப்பா, இல்ல உண்மையான நேசமான்னு தெரிய வைத்திடும், இந்த பிரிவு. என்ன சொல்லற?" என்ற மதியின் வார்த்தையில் உள்ள உண்மை புரிய,

இது வரை இருந்த மனநிலையிலிருந்து முற்றிலும் மாறி, தீர்மானம் செய்துவிட்ட திடமான குரலில், "ஓகே, மதிம்மா, நான், நீங்க சொன்ன எல்லா விசயத்திற்கும் சம்மதிக்கிறேன். அதே மாதிரி மூன்கிட்ட பேசி, இந்த கல்யாணத்திற்கு பர்மிஷன் வாங்கறதும் உங்க பொறுப்பு.

உங்களுக்கு கொடுத்த வாக்குபடி, நான் பிரிஞ்சு இருக்க போற, இந்த கேப்ல அவளுக்கு வேற வாழ்க்கை அமைஞ்சாலோ.. இல்ல நீங்க சொன்னது மாறினாலோ, எப்பவும் இந்த செழியன் உங்க மகன் மட்டும் தான். யாருக்கும் நான் கணவன் கிடையாது.

என் வாழ்க்கையின் கடைசி வரையிலும் உங்க ரெண்டு பேருக்கும் மகனா, அக்காவுக்கு தம்பியா, குட்டிம்மாக்கு மாமாவா மட்டும் தான் இருப்பேன். என் வாழ்க்கையில், வேறு வகை பந்தத்திற்கு இடமே இல்லை. இதை மனசுல நீங்களும் வச்சுக்கோங்க" என்றவனின் வார்த்தையில் இருந்தே, அவன் முடிவு மதிக்கு நன்றாக புரிந்ததால், அவர் செய்ய போகும் செயலை, எவ்வளவு தூரம் தன்னால் சரியாக செய்ய முடியுமோ, அதை செய்தே தீர்வது... என்ற உறுதியை மனதில் வகுத்துக்கொண்டார், மதி.

அன்று, மதிக்கு கொடுத்த வாக்கின் படி, முதலில் தனது தந்தை விட்டு சென்ற தொழில்கள் அனைத்தையும், மதியிடமிருந்து, தன் பொறுப்பின் கீழ் கொண்டு வந்தவன், அதில் இருந்த சில குளறுபடிகளை, தன் திறமை கொண்டு அயராத உழைப்பால், சீர்படுத்தி அவற்றை நல்ல நிலைக்கு கொண்டுவர, ஒரு வருடம் ஆனது.

இதே நேரம், இதழினிக்காக, மதி கார்மெண்ட்ஸ் பொறுப்பை மட்டும் செழியனிடம் கொடுக்காமல், மதி தன் கட்டுப்பட்டிலேயே வைத்து கொண்டு, அவளை தனது நிறுவனத்திலேயே வேலைக்கு சேர்த்து, தனது கண்காணிப்பிலேயே வைத்துக்கொண்டார்.
 
இதழினி, மதி கார்மெண்ட்ஸில் சேர்ந்ததை, அறிந்த செழியன் தனது தொழில் பார்ட்னரும், தனது தந்தையின் நண்பரின் மகனான சந்துருவை, மதியை சரிக்கட்டி, அங்கேயே இதழினிக்கு அருகில் இருக்கும்படி வேலைக்கு அமர்த்தி விட்டான். ஒவ்வொரு நாளும், அவனின் மூலம் அவளின் விசயங்கள் யாவும் செழியனுக்கு சென்றுவிடும்.

அப்படி தான் அவளின் பெண் பார்க்கும் படலம் தெரிந்தது. அன்று மட்டும் சந்துரு போனை ஆப் செய்யதிராவிட்டால், விடிய விடிய அவனை போட்டுபடுத்தி விடுவான் என்பதால் தான், மதி அவ்வாறு செய்தது. இதில் அவர் எதிர்பாராதது செழியனின், 'மதி கார்மெண்ட்ஸ்' விஜயம்.

அவன் வந்ததை அறிந்து, அவனை தனதறைக்கு அழைத்தவர், இதழினியின் மனதினை அறிய வேண்டி, அவளும் ஹரியும் பேசும் அறையின் சிசிடிவியை போட, அதில் இருந்த இதழினியின் பாவனையே, சொல்லாமல் சொல்லியது, அவளின் பிடித்தமின்மையை..

அதுவரை இழந்துவிட்டதாக நினைத்த பொருள், 'கிடைத்துவிடும்' என்றதும் தான், அவனின் மனம் போல முகமும் மலர்ந்தது.

அவனின் மலர்ச்சியை கண்ட மதி, அதனை தக்க வைக்க செய்யும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன.. அதற்கு இதழினியிடமிருந்து வரும் எதிர் வினை ?!!!


ஹாய் ப்ரண்ட்ஸ்,

கதையோட அடுத்த பகுதிய கொடுத்துட்டேன். இதுவரைக்கும் நீங்க கொடுத்துட்டு வர்ற ஆதரவிற்கு மிக்க நன்றி.

பையனோட எக்ஜாம்ஸ் ஓவர். சோ, இனி ரெகுலர் யூடி வந்திடும்.


என்ஜாய்.. அதே போல உங்க கருத்துக்களையும் பதிவு செஞ்சிங்கன்னா ரொம்ப சந்தோஷம்...
 
Top