Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 46

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 46

மது ஒரு வார்த்தை அப்படிச் சொன்னதும், ஏனோ திரும்பவும் மனம் அவனிடம் விலகி இருக்க வேண்டும் என்று எச்சரித்தது. எங்கே மனம் போன போக்கில் விட்டு தேவையில்லாமல் மாட்டிக் கொள்வோமோ என்ற ஒரு எண்ணத்தில் அடுத்த நிமிடமே கவனமாக இருக்க வேண்டும் என்று தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

ஆனால், விதி யாரை விட்டது.? அவள் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், திரும்பவும் அவளை வம்பில் மாட்டி விடவே எண்ணியது.

அவர்கள் இப்போது டேம் இருக்கும் இடத்திற்க்குச் சென்றனர். மேலே இருந்து அணையைப் பார்ப்பதற்க்கு மிகப் பிரம்மாண்டமாய் இருந்தது. நான்கு பெரிய மதகுகள் வழியே நீரை வெளியேற்றிக்கொண்டிருந்தனர். அதைப் பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது அவர்களுக்கு.

பெரிய பூங்காவினுள் நுழைந்து அங்கே உள்ள இயற்கைக் காட்சிகளை ரசித்துப் பார்த்தார்கள். இந்த முறை அஞ்சலி முடிந்த அளவு அர்ஜூனிடம் இருந்து விலகியே இருந்தாள். அவன் இருக்கும் பக்கமே போகவில்லை.



மதுவைப் பிடித்துக்கொண்டே சுற்றினாள் அஞ்சலி. பிரவீனும், புரிந்தவாறு அர்ஜூனிடமும், ரவியிடமும் பேசிக்கொண்டு வந்தான்.

அடுத்து அவர்கள் படகு இல்லத்துக்குச் செல்ல எண்ணினர். ஆனால், அங்கே செல்ல வேண்டுமென்றால் அந்தப் பெரிய தொங்கு பாலத்தைக் கடந்து செல்ல வேண்டும்.

அதைப் பார்க்கவே பயமாக இருந்தது. எங்கே, எந்த நேரத்திலும் அறுந்து விழுந்து விடுமோ என்ற பயமே மனதில் இருக்கும். அப்படியிருக்க, அதில் எப்படி செல்வது.? என்று கொஞ்சம் யோசித்தனர்.

“என்ன எல்லாரும் ரெடியா.? போலாமா.?” என்றான் பிரவீன்.

“அப்பா.. எவ்ளோ பெரிய பிரிட்ஜ்ஜா இருக்கு.!! இதில இருந்து விழுந்தா என்ன பண்றது.? நீங்க வேணும்னா போயிட்டு வாங்க. நான் அங்க சூடா கடலை வாங்கி சாப்டுட்டு இருக்கேன்.” என்றபடி அவர்களின் பதிலை எதிர்பாராமல் சென்று விட்டான் ரவி.

மதுவுக்கு சற்று பயமாய் இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “ம்ம்.. போலாம் பிரவீன்.” என்றாள்.

“என்னது.? அது எப்படி தொங்கிட்டு இருக்கு பாரு.? பார்க்கவே பயமா இருக்கு மது. அதுல போய் போலாம்னு சொல்றியா.? வேண்டாம், நாம வேற ஏதாவது போய் பார்க்கலாம்.” என்றாள் அஞ்சலி.

“இல்ல, அஞ்சலி. போட் ரைடிங்க்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுக்காகவே நான் கண்டிப்பா போகணும்னு நினைக்கறேன். ஃபர்ஸ்ட் கொஞ்சம் பயமா இருக்கும். இவங்களப் பிடிச்சிக்கிட்டு போயிடலாம் வா.” என்று மது சென்று பிரவீனின் கையைப் பிடித்துக்கொண்டாள்.

அப்போதே பிரவீனுக்கு ஆச்சர்யம். மது திருமணத்தின் போது தனது கையை இது போல் பிடித்து அக்னியை வலம் வந்ததாய் ஞாபகம். அதன் பிறகு இப்போது தான், அதுவும் அவன் எதிர்பாராமல் கையைப் பிடித்தது.

இதுவரை ஒரு நல்ல தோழியாகத் தெரிந்தவள், காதலன் கையைப் பிடிக்கும் காதலியாய்த் தெரிந்தாள். பிரவீனுக்கு அதுவே ஒரு தைரியத்தைக் கொடுக்க, அவள் கைகளைப் பற்றிக்கொண்டு முன் சென்றான். அப்போது தான் மதுவும், பிரவீனை காதலுடன் பார்த்தாள்.

இருவரும் கண்களாலும், கைகளாலும் பேசிக்கொள்ள இவ்வளவு சீக்கிரம் தங்களது பந்தம் காதலுக்குள் செல்லும் என்று நினைக்காமலே, சிரித்துக்கொண்டு நடந்தனர்.

இது ஒருபுறம் என்றால், அவர்களின் காதலை ரசித்துக்கொண்டிருந்த அர்ஜூன் அப்போதே அஞ்சலியைத் தான் பார்த்தான். ஆனால், அவளோ அதை கவனிக்காமல் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள். அது அவள் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது.

“அஞ்சலி.. அஞ்சலி..” என்று அர்ஜூன் இருமுறை அழைத்தது கூடத் தெரியாமல் நின்றிருந்தாள். திரும்பவும் அவன் சலிக்காமல் அழைத்தான். அதன் பிறகுதான் திரும்பினாள். அவள் உடலே வேர்த்திருந்தது.

“அங்க போறதுக்கு உனக்கு பயமா இருக்கா.? நான் கூட்டிட்டுப் போறேன்.” என்றான் அர்ஜூன்.

“இல்ல.. நான் வரல.. நீ போ..” என்றாள் இன்னும் பயத்திலேயே.

“பயப்படாத அஞ்சலி. நான் கூட இருக்கேன். உன்னை பத்திரமா கூட்டிட்டுப் போறேன். அந்தப் பக்கம் இன்னும் நல்லா இருக்கும்னு சொன்னாங்க. அதனால தான். வா போலாம்.” என்றான் கணிவுடன்.

“ம்ஹூம்ம்.. எனக்கு இதைப் பார்த்தாலே ஒரு மாதிரி இருக்கு. ரோப் கார்ல போகும் போதே என்னால முடியல. இதுல நடந்து போனா எனக்கு உயிரே போயிடும் போல இருக்கு. நான் வரல.” என்றாள் பிடிவாதமாய்.

இவள் இப்படியே பேசிக்கொண்டே தான் இருப்பாள் என்று எண்ணியவன், அவள் கைகளைப் பிடித்து இழுத்தபடி நடக்க எத்தனித்தான். இதை எதிர்பாராத அஞ்சலி தன் கைகளை விடுவிக்க எண்ணினாள். ஆனால், அர்ஜூன் பலம் முழுக்க சேர்த்து அவளைப் பிடித்து நடக்கவே ஆரம்பித்து விட்டான்.

பார்ப்பவர்கள் ஏதேனும் தவறாக எண்ணிவிடக் கூடாது என்பதற்க்காக அமைதியாய் அவனுடன் நடந்தாள். ஆரம்பத்தில் கண்களைத் திறந்தே நடந்தவள், ஒரு கட்டத்தில் கீழே பார்த்து விட்டு கண்களை மூடி அர்ஜூனை இறுக்கிப் பிடித்தபடி நடக்க ஆரம்பித்து விட்டாள்.

இதை அர்ஜூன் எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு அது இம்சையாய்த் தெரிந்தது. ரோப் காரில் செல்லும் போதே மனதை சற்று அடக்க சிரமப்பட்டான். இப்போதோ இன்னும் சிரமமாக இருந்தது.

அவள் இப்படி தன்னைப் பற்றியிருப்பது ஒரு வித சுகம் தானென்றாலும், அவள் இன்னும் தனக்கானவளாய் இல்லை என்றதனாலேயே மனம் பாடுபட்டது.

மனம் இப்போது எதையோ சொல்லத் துடித்தது. அதுவும் அவளிடமே சொல்லத் துடித்தது. தன் கையைப் பற்றியிருந்தவளின் கையை மெல்ல விடுவித்து, அவளது தோள்களை இறுகப் பற்றிக்கொண்டு, மற்றொரு கையைப் பிடித்துக்கொண்டு நடந்தான்.

அஞ்சலி இதையெல்லாம் உணரும் மனநிலையில் இல்லை. அவளுக்கு அதைத் தாண்டி விட்டால் போதுமென்று இருந்தது. அவளின் உடல் இன்னும் நடுக்கத்திலேயே இருந்ததை அர்ஜூனால் நன்றாகவே உணர முடிந்தது.

“இந்த வாய்ப்பை நழுவ விட்டுவிடாதே அர்ஜூன்.” என்று அவனது உள்மனது சொல்லிக்கொண்டே இருந்தது. அவர்கள் பாதி சென்று கொண்டிருக்கும் போதே, மதுவும், பிரவீனும் அந்தப் பக்கம் சென்று விட்டார்கள்.

மது இவர்கள் வரும் விதத்தைப் பார்த்து, பிரவீனிடம் ஏதோ சொல்ல, இருவரும் செல்கிறோம் என்று அர்ஜூனுக்கு சைகை காமித்து விட்டு, படகு இல்லத்துக்கு சென்று விட்டனர்.

அர்ஜூனுக்கு அது இன்னும் நல்ல வாய்ப்பாக இருந்தது. கூடவே இருக்கும் யாரும் இப்போது இல்லை, யாரும் தங்களுக்காகக் காத்திருக்கவும் இல்லை. இது ஒரு அற்புதமான நேரம்.

இன்னும் சில நொடிகளில் இந்தப் பாலத்தைக் கடந்து விடுவோம். அதற்க்குள் ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று அவனின் உள் மனது அவனுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தது. இதோ கடந்துவிட்டார்கள்.

அது மட்டும் அஞ்சலிக்கு எப்படித் தெரிந்தது என்று தெரியவில்லை. அவள் நின்ற மாத்திரத்தில், அர்ஜூன் தன்னைப் பற்றியிருப்பதை உணர்ந்தவள், அப்பொழுதே தன் தோள்களைப் பற்றியிருந்த அவன் கைகளை விலக்கி விட்டாள். அதே போல் தன் கையையும் விடுவிக்க முயல,

அர்ஜூனோ, “வேண்டாம்..” என்பதைப் போல் தலையாட்டினான்.

அவள் அதைப் பார்த்தாலும், மனதைக் கட்டுப்படுத்த முயன்று அவன் கையை விட்டு உதறி, முன்னே வேகமாய் நடந்தாள். அர்ஜூன் விடுவதாய் இல்லை.

“அஞ்சலி.. அஞ்சலி.. ஒரு நிமிஷம்.. நில்லு..” என்று அவளின் கையைத் திரும்பவும் பிடித்தான். அவளுக்கோ தர்மசங்கடமான நிலை.

“என்ன இது அர்ஜூன்.? எதுக்கு இப்போ என் கையைப் பிடிக்கற.? விடு முதல்ல. எல்லாரும் பார்க்கறாங்க.” என்று கையைத் திரும்பவும் விடுவிக்க முயன்றாள்.

“இல்ல அஞ்சலி. முடியாது. இன்னைக்கு நான் உன்கிட்ட பேசியே ஆகணும். கொஞ்சம் கோ-ஆப்ரேட் பண்ணு. ப்ளீஸ்.” என்று கெஞ்ச,

யோசித்தவள், “சரி கையை விடு முதல்ல.” என்று சொன்னதும் கையை விடுவித்தவன், இப்போது நெருங்கி அவளிடம் வந்தான். இதென்ன ஒரு விபரீதம்.? அர்ஜூனா இப்படி நடந்துகொள்கிறான் என்று ஆச்சர்யமாக இருந்தது அஞ்சலிக்கு.

“என்கூட வா, நாம அந்தப் பக்கமா போகலாம்.” என்றபடி இப்பொழுதும் அவளது கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனான்.

அர்ஜூனுக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது.? இதுவரை தன்னைப் பார்ப்பது கூட கண்ணியமாய் இருக்க, இன்றோ ஏதோ அவன் கட்டிக்கொண்ட மனைவியைப் போல் உரிமையாய் இழுத்துக்கொண்டு செல்வதைப் பார்க்கும் போது, அஞ்சலிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

ஏதோ அவனுக்குத் தெரிந்த ஒதுக்குப்புறம் போல், அந்த பச்சைப் பசேல் புல்வெளிகளுக்கு மத்தியில் அவன் நின்றுகொண்டே பேசினான். ஆனால், அவளின் கைகளை அவன் விடுவதாய் இல்லை.

“அஞ்சலி, என் மனசுல இத்தனை வருஷமா நான் பூட்டி வைச்சிருந்த விஷயத்த உன்கிட்ட சொல்லியே ஆகணும். இதுக்கும் மேல என்னால மறைக்க முடியாது. போதும், நாம ரெண்டு பேரும் ஆடுன கண்ணாமூச்சி ஆட்டம். ரெண்டு பேருமே ஒரே விஷயத்த சொல்லிக்காமயே உருகிட்டிருக்கோம். நீ சொல்வியான்னு எனக்குத் தெரியாது. ஆனா, நான் உன்கிட்ட சொல்லியே ஆகணும். எனக்கு உன்னைப் புடிச்சிருக்கு அஞ்சலி. நான் உன்னை லவ் பண்றேன்.” என்றான் அர்ஜூன் பட்டென்று.

இந்தத் தருணத்தில், இதை எதிர்பார்க்காத அஞ்சலி ஒரு நிமிடம் திக்குமுக்காடித்தான் போனாள். தான் இரண்டு வருடங்களாய் மனதில் பொத்தி வைத்திருந்த காதலை இந்த நிமிடம் அர்ஜூன் சொல்லி விட்டான். ஆனால், அவளால் அதே போல் சொல்ல முடியாத நிலை. அவள் அழுதுகொண்டிருந்தாள்.

அர்ஜூன் தொடர்ந்தான், “அஞ்சலி, நான் எப்போ உன்ன முதன் முதலா பிருந்தாவன் கார்டன்ல பாத்தேனோ, அப்போ இருந்தே உன்னக் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். அப்பறம், உன்ன நம்ம காலேஜ்ல அதுவும் என்னோட கிளாஸ்லயே பாத்தப்போ, ரொம்ப ஹாப்பியா இருந்துச்சு. நான் நெனச்ச மாதிரியே என் கூட நல்ல ஃப்ரெண்ட் ஆன. அப்பறம், நீயாவே வந்து என் கிட்ட இந்த மாதிரி பீல் பண்றதா சொன்ன. நான் அதை அப்போதைக்கு சரின்னு விட்டுட்டேன். ஆனா, அதுக்கப்புறம் தான், உன்னோட ஞாபகம் அதிகமா வந்துச்சு. இடையில உனக்கு நிச்சயம் ஆயிடுச்சுன்னு தெரிஞ்சதும் தான், நான் கொஞ்சம் விலகி இருக்க முடிவு பண்ணேன். அதனால தான் அன்னைக்கு பஸ் ஸ்டேண்ட்ல கூட அப்படி நடந்துக்கிட்டேன். ஆனா, என்னால முடியல அஞ்சலி. இங்க வந்ததுக்கப்பறம், இந்த கொஞ்ச நேரத்துல உன்னுடைய நெருக்கமான உணர்வு என்னைக் கொல்லுது. இது நாள் வரைக்கும் நான் என் மனசக் கட்டுப்பாடா வைச்சிருந்தேன். ஆனா, இன்னைக்கு அது எல்லாத்துக்கும் முடிவு கட்டியாச்சு. இனியும் உன்ன என்னால மிஸ் பண்ண முடியாது அஞ்சலி. நீ எனக்கு வேணும் அஞ்சலி. ப்ளீஸ். ஏதாவது பேசு.” என்று அர்ஜூன் இதுநாள் வரை தன் மனதில் வைத்திருந்த எல்லா உணர்வுகளையும் அவளிடம் கொட்டித் தீர்த்தான்.

அவளோ, அவன் எதிரில் உணர்வற்றவளாய் நின்றுகொண்டிருந்தாள். அஞ்சலிக்கு பதில் பேச முடியவில்லை. தொண்டைக்குழி அடைத்துக்கொண்டது. என்ன பதில் சொல்ல முடியும்.? தன் கை மீறிப் போனதை நினைத்து நொந்த மனதை கஷ்டப்பட்டு அடக்கியபடி பேச எண்ணினாள். அதை அறியாமல் அவளின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தான் அர்ஜூன்.


(தொடரும்...)
 
Top