Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 45

Advertisement

Aathirai

Well-known member
Member
அத்தியாயம் 45

ஒரு வழியாக அலுங்கி குலுங்கி ஷாலினியின் திருமணம் நடக்கவிருக்கும் கிருஷ்ண க்ருபா என்று பெயர் கொண்ட அந்த அதிநவீன மண்டபத்திற்க்குள் நுழைந்தனர். பலவிதமான கார்கள் அங்கே ஏற்கனவே வரிசையாய் நின்று கொண்டிருக்க,

“நீங்க எல்லாரும் இறங்கி ஒரு ஓரமா வெயிட் பண்ணுங்க. நான் வேற இடத்துல பார்க் பண்ணிட்டு வந்திடறேன்.” என்று பிரவீன் சொன்னதால் அவர்கள் நால்வரும் இறங்கி விட்டனர்.

நால்வரும் அப்படியே பேசிக்கொண்டே ஒரு ஓரமாய் நின்று கொண்டிருக்க, அனைவரும் மலையாளத்திலும், சிலர் தமிழிழும் கூட பேசுவதைக் கேட்க முடிந்தது.

கேரள சேச்சிகள் சிலர் அவர்களைக் கடந்து போக, “டேய்.. பாரு டா.. எல்லாம் கேரளத்து பைங்கிளிகள். எவ்ளோ அழகா இருக்காங்க.? என்ன கலரு.? என்ன முடி.?” என்று ரவி அர்ஜூனிடம் சொன்னபடி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்க, மதுவும், அஞ்சலியும் அவனைக் கேலியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“உடனே அவன், உண்மையைத் தானடா சொன்னேன். கேரளா பொண்ணுங்கன்னாலே ரொம்ப அழகு தானே.?” என்று ரவி வேண்டுமென்றே சொல்ல,

“ம்ஹூம்ம்.. இல்ல டா. என்ன இருந்தாலும் நம்ம தமிழ்ப் பொண்ணுங்க அழகுக்கு இணையா இல்ல. அவங்களோட லட்சணம் யாருக்குமே வராது.” என்று அர்ஜூன் சொல்ல, மது உடனே அஞ்சலியை இடித்தாள்.

“ம்ம்ம்... நீ யாரை நினைச்சு சொல்றன்னு எனக்குத் தெரியாதா.?” என்று அஞ்சலியைப் பார்த்துவிட்டு ரவி திரும்ப, அர்ஜூனோ அமைதியாய் நின்றான். அதற்க்குள் பிரவீன் வந்துவிட, அனைவரும் உள்ளே சென்றனர்.

அவர்கள் சென்று ஒரு பக்கமாக அமர்ந்து கொள்ள, அர்ஜூன் இப்போது வேண்டுமென்றே அஞ்சலியின் அருகில் சென்று நெருக்கமாய் அமர்ந்து கொண்டான். அதை ஏனோ அவளும் தடுக்கவில்லை. அப்படியே அமர்ந்தபடி ஒரு செல்ஃபி எடுக்க, அதைப் பார்த்தபடி எதேச்சையாய் அஞ்சலி திரும்ப அவன் உடனே க்ளிக் செய்தான்.

பார்ப்பதற்க்கு இருவரும் சேர்ந்து ஒன்றாய் எடுத்துக்கொண்ட புகைப்படம் போல் தோன்றியது. இவையெல்லாவற்றையும், அவர்கள் மூவரும் கண்டுகொள்ளாததைப் போலவே இருந்தனர். எப்படியோ இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டால் சரி என்று இருந்தது அவர்களுக்கு.

அப்போதுதான் மணமேடைக்கு பெண்ணும், மாப்பிள்ளையும் வந்தனர். ஷாலினி ஒரு மணப்பெண்ணாய்த் தெரிகையில் மிக அழகாக இருந்தாள். அதே போல் ஷாலினிக்கு, நித்தின் பொருத்தமான ஜோடி என்றே தோன்றியது அவர்களுக்கு.

கேரள முறைப்படி அவர்களது திருமணம் இனிதே நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் அனைவரும் மணமக்களை வாழ்த்த பரிசுகளோடு மேடைக்கு வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தபடியும், போட்டோக்கு நின்றபடியும் இருக்க, மற்றொரு புறம் பஃபே சிஸ்டத்தில் உணவும் பறிமாறப்பட்டது.

சிலர் சென்று முடிந்ததும், இவர்கள் ஐவரும் மேடைக்குச் சென்றனர். அவர்களைப் பார்த்தவுடனேயே ஷாலினி ஒரு நிமிடம் குதூகலித்தாள். நித்தினிடம் அவர்களைப் பற்றி சொன்னதும், நித்தின் மறு நிமிடமே மதுவைத்தான் பார்த்தான்.

இப்போதும், மது ரயில் பயணத்தின் போது அவனை முறைத்தவாறே பார்க்க, நித்தினுக்கே சிரிப்பு வந்து விட்டது. அதைப் பார்த்து ஷாலினியும், மதுவும் சிரிக்க, இவர்களின் சிரிப்புக்கான காரணம் தெரியாமல் அந்த நான்கு ஜீவன்கள் முழிக்க, அந்த இடமே சிரிப்பால் நிறைந்தது.

அவர்களின் வாழ்த்துக்களையும், பரிசையும் கொடுத்து விட்டு கீழே வந்த பிறகு தான் மது அதைப் பற்றி சொல்ல, இவர்களும் சேர்ந்தே சிரித்தனர். உடனே ரவி,

“மது நீ எவ்ளோ பெரிய டெரர்ரான பொண்ணுன்னு இந்த நித்தின்க்கு தெரிஞ்சிருக்கு பாரேன். முறைச்சே நீ அவனை விரட்டிருக்க.” என்று சொல்ல,

“ம்ம்ம்.. ஆமா, பின்ன என்னோட ஃப்ரெண்டுக்கு ஒண்ணுன்னா நான் போய் நிக்க வேண்டாமா.? அந்த டைம்ல நான் பண்ணது சரிதான். ஆனா, இவனைத்தான் ஷாலினி ஃப்யூட்ச்சர்ல கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு தெரிஞ்சிருந்தா நான் அப்போ முறைச்சிருக்கவே மாட்டேன்.” என்றாள் மது.

“எங்களைப் பொறுத்தவரைக்கும் மது ரொம்ப போல்ட்டான பொண்ணு, எல்லாருக்கும் அட்வைஸ் பண்ற பொண்ணு, ஒரு பொண்ணு இப்படித்தான் இருக்கணும்னு நினைக்க வைக்கற அளவுக்கு நடந்துக்குவா. அதே மாதிரி, தனக்கு ரொம்ப நெருக்கமானவங்களுக்கு ஒண்ணுன்னா அவ தான் முதல்ல போய் நிப்பா.” என்று அஞ்சலி அவளைப் பிடித்துக்கொண்டு பெருமையாய் சொல்லிக்கொண்டிருக்க,

பிரவீனுக்கு அவளை நினைத்து இன்னும் சந்தோஷமாய் இருந்தது. தன் காதல் கண்களால் மதுவை ரசித்தபடி பார்த்துக்கொண்டிருந்தான். அடுத்து அனைவரும் பஃபே சிஸ்டத்தில் சென்று கலந்துகொண்டு சாப்பிட்டு முடித்து திரும்பவும் அங்கே ஓரமாய் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.

ரவி தான் முதலில் ஆரம்பித்தான். “இன்னைக்கு வேற ஏதாவது பிளான் இருக்கா.? நாளைக்கு நானும், அர்ஜூனும் குருவாயூர், சாலக்குடில இருக்க புன்னகை மன்னன் ஃபால்ஸ்ன்னு ட்ரிப் போலாம்னு இருக்கோம். நீங்க என்ன பண்ணப் போறீங்க.?” என்றான்.

“இன்னைக்கு எங்கயாவது போலாம்னா கூட ஓகே. ஆனா, நாளைக்கு நாங்க கோயம்புத்தூர் போயிட்டு டூ டேஸ் அங்க இருந்துட்டு, அப்பறம் திரும்ப சென்னை கிளம்பணும் பா. ஏன்னா, கம்மிங்க் வீக் பிரவீன் சிங்கப்பூர் போறார். அதனால தான்.” என்றாள் மது.

“ஓ.. புது மாப்பிள்ளை அதுக்குள்ள கிளம்பறீங்க.? அட்லீஸ்ட் ஒரு ஒன் மன்த்தாவது இங்க இருக்கலாமே.?” என்றான் அர்ஜூன்.

“இல்ல அர்ஜூன். நான் லீவ் டூ வீக்ஸ்க்குத்தான் சொல்லிருக்கேன். பேலன்ஸ் டூ வீக் மது சிங்கப்பூர் வரும் போது எடுத்துக்கலாம்னு. அங்க போய், அவளோட பாஸ்போர்ட், விஸா ப்ராசஸ் பத்திப் பார்க்கணும். அவ இன்னும் சிக்ஸ் மன்த்க்கு சென்னைல தான் இருக்கப் போறா. இடைல டூரிஸ்ட் விசா மாதிரி அப்ளை பண்ணிடலாம்னு இருக்கேன்.” என்றான் பிரவீன்.

“ம்ம்.. பரவால்ல மது. பிரவீன் செம்ம பிளான்ல தான் இருக்கார்.” என்று அஞ்சலி மதுவிடம் கிசுகிசுத்தாள்.

“சரி, அந்த பிளான் இருக்கட்டும். இன்னைக்கு ஏதாவது பிளான் பண்ணுங்கப்பா. அட்லீஸ்ட் ஒரு இடமாவது எல்லாரும் சேர்ந்து சுத்திப் பார்த்த மாதிரி இருக்கும்.” என்று ரவி சொல்ல,

“சரி இன்னைக்கு ரவியோட ரெக்வஸ்ட்க்காக நாம எல்லாரும் சேர்ந்து வெளில போலாம்.” என்றான் பிரவீன்.

“இங்க பக்கத்துல மலம்புழா டேம் இருக்கு. அங்க போனா கொஞ்சம் எஞ்சாய் பண்ண மாதிரி இருக்கும்.” என்றான் அர்ஜூன்.

“ம்ம்.. சூப்பர் அர்ஜூன். குட் சஜஷன். அப்படியே ஒரு நல்ல ரெஸ்ட்டாரண்ட் எதுன்னு பார்த்து லன்ச்சும் சாப்பிட்டுட்டு அங்க போயிடலாம்.” என்றான் பிரவீன்.

“ஆமா பிரவீன். இதுவும் நல்ல ஐடியாதான். நாம ரூமுக்குப் போயிட்டு ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு அப்பறமா கிளம்பிக்கலாம்.” என்றாள் மது.

அதுவே சரியென்று பட, சிறிது நேரத்தில் ஷாலினியைப் பார்த்து அவளை ஆரத் தழுவிக் கொண்ட அஞ்சலியும், மதுவும் அவளிடம் பிரியா விடை பெற்றனர்.

இப்போதும், அதே அலுங்கல் குலுங்கலா.? என்று நினைத்தவர்களுக்கு, பிரவீன் அங்கே இருந்த ஒருவரிடம் கேட்க, அவரின் அறிவுரையால் நல்ல பாதையில் செல்ல வழி கிடைத்தது. அதனால், எந்தக் குலுங்கலும் இல்லாமலே சென்று அவர்கள் தங்கியிருந்த சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டுக்குச் சென்றனர்.

அனைவரும் பார்மல் உடையிலிருந்து, கேஷூவல் உடைக்கு மாறியிருந்தனர். ஆண்கள் மூவரும் டி-சர்ட்டும், ஜீன்ஸூம் அணிந்திருக்க, அஞ்சலியும், மதுவும் குர்தா டாப்ஸூம், ஜீன்ஸூம் அணிந்து கொண்டனர். இருவருக்கும் மிகப் பொருத்தமானதாக இருந்தது.

ஒரு நல்ல ரெஸ்ட்டாரண்டைத் தேடிப் பிடித்து அங்கே பாரம்பரியமான கேரளா வகை உணவுகளை ஒரு கை பார்த்துவிட்டு அடுத்து மலம்புழா டேமுக்குக் கிளம்பினர்.

மலம்புழா டேம் போகும் வழியே அற்புதமாக இருந்தது. முழுதும் இயற்கை அன்னையின் வரப்பிரசாதமாய் பச்சைப் பசேல் இடங்கள். கண்ணுக்குக் குழுமையாய் இருந்தன.

டேமின் நுழைவு வாயிலில் பார்க்கிங் டிக்கட் வாங்கிவிட்டு அதன் பிறகு, டேமினுள் நுழைய எண்ட்ரி டிக்கட் வாங்கிவிட்டு உள்ளே நுழைந்தனர். பார்க்கினுள் நுழைந்தே டேமை நெருங்க வேண்டும்.

அந்த இடத்தைப் பார்க்கும் போது, அஞ்சலியும் சரி, அர்ஜூனும் சரி பிருந்தாவன் கார்டனைத்தான் நினைத்துக்கொண்டனர். அன்று நடந்த அந்த மறக்க முடியாத நிகழ்வு இன்றும் இருவர் மனதில் நீங்கா நினைவாய் இருந்தது. திடீரென இருவரும் பார்த்துக்கொள்ள பார்வைகள் பறிமாரிக்கொண்டன.

உள்ளே செல்லும் போதே, மேலே தொலைவில் பலர் ரோப் காரில் செல்வது தெரிந்தது. மலம்புழா டேமின் அழகை மேலிருந்து ரசிக்க அங்கே செய்திருக்கும் ஏற்பாடு அது. அதைப் பார்த்ததும் மதுவுக்கு குஷியானது.

“ஹே.. பிரவீன் அங்க பாருங்க. ரோப் கார்ல எல்லாரும் போறாங்க. சூப்பர் இல்ல. நாமும் போலாமா.?” என்று கேட்க,

பிரவீனோ, “ம்ம்.. கண்டிப்பா போகலாம் மது.” என்றபடி அவர்களை அழைத்துக்கொண்டு வாசல் வழியே வந்து ரோப் கார் செல்லும் பகுதிக்குச் சென்றனர்.

இருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வசதி கொண்ட ரோப் காருக்கு டிக்கட் எடுத்துவிட்டு முதலில் வந்த ரோப் காரில் மதுவும், பிரவீனும் சென்றனர். அவர்கள் செல்லும் போதே அஞ்சலிக்கு ஒரு மாதிரி ஆனது. மது சென்று விட்டாள். இனி தான் யாருடன் செல்வது.? என்று முழித்துக்கொண்டு நிற்க,

அர்ஜூனும் அதைப் புரிந்தாலும், பேசாமலே நின்றான். அடுத்தது யார் என்று ரோப் காரை இயக்குபவர்கள் கேட்டபடி இருக்க, இதுதான் சமயம் என்று ரவி,

“டேய்.. அர்ஜூன் போடா. அஞ்சலி நீயும் தான். அவங்க கேட்டுக்கிட்டே நிக்கறாங்க. ரெண்டு பேரும் போங்க.” என்று சொல்ல, அஞ்சலி தலையை மறுத்தபடி அசைத்து நின்றாள்.

“டேய். அவ ரொம்ப யோசிக்கறா டா. நீ கூட போ.” என்று அர்ஜூன் ரவியிடம் சொல்ல, அவனோ முறைத்தவாறே, “டேய்.. என்ன விளையாடறியா.? மேலிருந்து பார்க்கும் போது தலையே சுத்துது. போகும்போது எங்காவது கயிறு அந்துபோய் கீழ விழுந்தா யார் பொறுப்பு. நானெல்லாம் வரலப்பா, நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க. என்னை ஆள விடுங்கடா சாமி.” என்று சொன்னபடி அங்கிருந்து செல்ல,

வேறு வழி தெரியாமல் இருவரும் அங்கே வந்த மற்றொரு ரோப் காரில் ஏறினர். இவர்கள் யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் மதுவும், பிரவீனும் திரும்பியே வந்துவிட்டார்கள்.

மெல்ல செல்லச் செல்ல கீழே பார்த்த அஞ்சலிக்கு சற்று தலை சுற்றத்தான் செய்தது. பயத்தில் அருகில் இருந்த அர்ஜூனின் கையை சற்று இருக்கமாகப் பற்றிக்கொண்டாள். அப்படியே கண்களையும் மூடிக்கொண்டு அவன் மேல் சாய்ந்துகொண்டாள்.

அர்ஜூனுக்கும் ஒரு நிமிடம் அது கனவா.? நினைவா.? என்று இருந்தது. அஞ்சலி தன்னை நெருக்கமாக உணர்ந்த நிமிடம் அவனுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன.

அந்த உணர்வை எந்த பாஷையாலும் வர்ணிக்க முடியாது. அவளை அப்படியே அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்த்து. ஆனாலும், எல்லை மீற தனக்கு எந்த உரிமையும் இல்லை என்ற நினைவில் உறுதியாய் இருக்க, அவனால் அமைதியாய் மட்டுமே இருக்க முடிந்தது.

இறுதியாய் வந்து சேரும் இடத்திற்க்கு வந்த போதுதான் அர்ஜூன், அஞ்சலியிடம் “அஞ்சலி, அஞ்சலி..” என்று அவளை உலுக்க, தன் கண்களை மெல்லத் திறந்து பார்த்தாள்.

“நாம ரிட்டன் வந்துட்டோம். ரொம்ப பயந்துட்டியா.?” என்று அர்ஜூன் கேட்க, அப்போதுதான் அவளுக்கு அத்தனை நேரமும் பயத்தில் அர்ஜூனைப் பற்றிக்கொண்டே வந்தது நினைவுக்கு வந்தது. அதுவே ஒரு மாதிரி ஆனது.

அர்ஜூன் தன்னை என்ன நினைத்திருப்பானோ என்று எண்ணி சிறிது வருந்தினாள். ஆனால், அவன் அதை எவ்வளவு ஆன்ந்தமாய் நினைத்தான் என்பது பாவம், அவளுக்கு அப்போது தெரியாதல்லவா.?

ஒரு வழியாக அவர்கள் திரும்பி வந்துவிட்டனர். அஞ்சலி அந்த இயற்கையை ரசித்ததை விட, முக்கால்வாசி பயத்தில் அர்ஜூனைப் பிடித்துக்கொண்டு வந்ததே அதிகம். மது, பிரவீன், ரவி மூவரும் வெளியே இவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.

வந்த்துமே, ரவி அர்ஜூனை இழுத்தபடி கேட்டான். “டேய்.. அஞ்சலி உன்னையே தான் புடிச்சிட்டே வந்தா போலிருக்கு. ம்ம்.. நடத்து நடத்து..” என்று அவனை கேலி செய்ய.

“டேய்.. கொஞ்சம் சும்மா இருக்கியா..” என்று தன் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் அவனை அடக்கியபடி வந்தான் அர்ஜூன்.

மதுவும் அதே போல், அஞ்சலியிடம் கேட்டாள். “அஞ்சலி நீ நேச்சர ரசிச்சத விட, கண்ணை மூடி அர்ஜூன் மேல சாஞ்சுட்டே வந்தது தான் அதிகமா இருந்துச்சு. ரொம்ப பயந்துட்டியா.?” என்றாள்.

“ஹூம்ம்.. நான் என்ன பண்றது மது.? ஆரம்பத்துலயே எனக்கு தலை சுத்திடுச்சு. என்ன பண்றதுன்னு தெரியாமத்தான் அர்ஜூனைப் புடிச்சிக்கிட்டேன்.” என்றாள்.

“இதே மாதிரி வாழ்க்கை முழுக்க அர்ஜூனைப் புடிச்சிக்கிட்டா நல்லாத்தான் இருக்கும். அவன் உன்னை ரொம்ப பத்திரமா பாத்துக்குவான், இப்போ மாதிரியே.” என்று மது ஜாடையாய் சொல்லிக்கொண்டே செல்ல, அஞ்சலி அந்த நிமிடம் தான் உள்ள நிலையை யோசித்தாள்.

தான் தற்போது செய்யும், செயல்கள் சரியா.? தவறா.? தெரியாது. ஆனால், என்ன இருந்தாலும் தான் ஒருவருக்கு நிச்சயிக்கப்பட்டவள். அப்படி இருக்கும் போது, இப்படி ஒருவருடன் தான் நெருக்கமாக இருப்பது நல்லதா என்ற ஒரு கேள்வியுடனே மெல்ல நடந்தாள்...


(தொடரும்...)
 
Top