Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 28

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 28

முருகேஷ்பால்யா, சிவோகம் சிவன் கோவில். பெங்களூருவில் உள்ள மிகப் பிரசித்தி பெற்ற சிவன் தியான நிலையில் இருக்கும் ஆலயம். கிட்டத்தட்ட 65 அடி உயர சிவனை கீழே இருந்து பார்க்கும் போது, சற்று பிரமித்து தான் போக வேண்டும். தினம், தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசித்து சிவனின் அருள் பெற்று செல்கின்றனர்.

அமைதியான தியான நிலையில் இருக்கும் சிவனை தரிசிக்கும் போது, மனம் சற்று அமைதியடையும். அப்படித்தான் இருந்தது அர்ஜூனுக்கு. ஏனோ, அந்தக் கோவிலிலேயே நாள் முழுக்க இருந்து விடலாம் போன்று தோன்றியது அவனுக்கு. அமைதியான இடம். அம்சமான சிவன். அந்த இடம் அவனுக்கு மட்டுமல்ல, அங்கே வரும் அனைவரையும் அப்படித்தான் நினைக்க வைக்கும்.

சிவனை தரிசித்து விட்டு அனைவரும் போய் ஓரிடமாக அமர்ந்தனர். அர்ஜூன் அப்போது தான் சற்று தெளிவாக இருந்ததைப் போல் தெரிந்தான்.

“அம்மா, எப்படி இருக்கு கோவில்.? நீங்க தானே போகணும்னு ஆசைப்பட்டீங்க.?” என்றான் ரமேஷ் ஜானகியைப் பார்த்து.

“ரொம்ப அருமையா இருக்குபா கோவில். அமைதியா இருக்கு, மனசே ரொம்ப லேசான மாதிரி இருக்கு. எனக்கு கோவில்ன்னா ரொம்ப இஷ்டம். அதுவும், இதுமாதிரியெல்லாம் இருந்தா நான் பேசாம இங்கயே இருந்துடுவேன்.” என்று ஜானகி சொன்னதும், அனைவரும் சிரித்தனர்.

“நீங்க இருந்துடுவீங்க. ஆனா, பாவம் அர்ஜூன் என்ன பண்ணுவான்.?” என்றான் ரமேஷ்.

“நானும், அம்மா கூடவே இங்கயே இருந்துடுவேன். அம்மா மாதிரியே எனக்கும் இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு டா.” என்றான் அர்ஜூன்.

“நாங்க அடிக்கடி இந்தக் கோவிலுக்கு வருவோம். அட்லீஸ்ட் மாசம் ஒரு தடவையாவது வந்து சிவன தரிசிச்சிட்டுப் போனா, நம்ம மனசில இருக்கற பாரம் எல்லாம் குறைஞ்சு அமைதியாயிடும். கண்டிப்பா ஏதாவது ஒரு நல்லது நடக்கும்.” என்று ரமேஷின் அம்மா சொல்லிக் கொண்டிருந்தார்.

“அண்ணா, நீங்களும் என்ன வேணுமோ வேண்டிக்கோங்க. அத அந்த சிவனே பார்த்துக்குவார்.” என்றாள் ரமேஷின் தங்கை.

“சரி மா. கிளம்பலாம். வீட்டுக்கு போறதுக்குள்ள ட்ராபிக் ஆயிடும். போலாம்.” என்று ரமேஷ் அனைவரையும் கிளப்ப, மனதே இல்லாமல் அங்கிருந்து கிளம்பினர் அர்ஜூனும், ஜானகியும்.

அவர்கள் நடந்து போய்க்கொண்டிருந்த நேரம் அவர்களுக்கு முன்னே நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணி, கிட்டத்தட்ட ஜானகியை ஒத்த வயதுடையவர், தள்ளாடியபடியே சென்று கொண்டிருந்தார். அர்ஜூன் அதை முதலிலேயே கவனித்து விட்டான்.

சிறிது நேரத்தில் மயங்கி கிழே விழுந்தார். பின்னாடியே வந்த இவர்கள், அவரை எடுத்து விட்டபடி கன்னத்தில் தட்டினர், தண்ணீரை முகத்தில் அடித்துப் பார்த்தனர். அவர் எழவில்லை. நர்ஸிங் படித்துக் கொண்டிருந்த ரமேஷின் தங்கை, நாடி பிடித்துப் பார்த்தாள். மிகவும் குறைவாக இருப்பதைப் பார்த்து,

“அண்ணா, உடனே இவங்கள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும். இல்லன்னா இவங்க உயிருக்கே ஆபத்து. பல்ஸ் ரொம்ப கம்மியா இருக்கு. சீக்கிரம் தூக்குங்க, இங்க பக்கத்துல ஒரு பிரைவேட் ஹாஸ்பிடல் இருக்கு. அங்க கூட்டிட்டு போலாம்.” என்று அவசரப்படுத்தினாள்.

அவர்கள் இருவரும் துரிதமாக செயல்பட்டனர். ஜானகி, மற்றும் ரமேஷின் அம்மா, தங்கையை வேறு டேக்ஸி பிடித்துக் கொடுத்து விட்டு, இரண்டு நிமிடத்தில் தாங்கள் வந்த கால் டேக்ஸியிலேயே அவரை அழைத்துக் கொண்டு பக்கத்து ஹாஸ்பிடலுக்கு விரைந்தனர். அதற்குள் அவர் வைத்திருந்த பையில் ஏதாவது உள்ளதா என்று ரமேஷ் தேடும் போது, அவருடைய அலைபேசி இருந்தது.

அதில், டயல்டு காலில் இருந்த நம்பருக்கு அழைத்துப் பேசினான் ரமேஷ். நான்கைந்து ரிங்கிற்க்குப் பிறகே, அழைப்பை எடுத்தனர்.

“ஹலோ, அம்மா. கிளம்பிட்டிங்களா.?” என்று எதிர்முனையில் கேட்க, அது அவருடைய மகள் தான் என்பதை உறுதி செய்த பிறகே ரமேஷ் பேசினான்.

“ஹலோ, மேடம். என் பெயர் ரமேஷ். உங்கம்மா கோவில்ல மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. எமர்ஜன்சி. நாங்க இங்க பக்கத்துல இருக்கற ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிட்டிருக்கோம்.” என்று ரமேஷ் சொல்லிக்கொண்டிருக்க, எதிர்முனையில் அந்தப் பெண் பதட்டமானாள்.

“என்ன சார், சொல்றீங்க.? என்னாச்சு அம்மாக்கு.? இப்போ எங்க இருக்கீங்க.? அம்மா, கோவிலுக்கு எங்க போனாங்க.?” என்றாள் அந்தப் பெண்.

“சரி, நான் வேணும்னா லொகேஷன் ஷேர் பண்றேன். நீங்க கொஞ்சம் சீக்கிரம் வந்துடுங்க.” என்றபடி போனை வைத்து விட்டு அவளுக்கு அந்த லொகேஷனை ஷேர் செய்தான்.

“சார், சார். ப்ளீஸ் நாங்க வர வரைக்கும் கொஞ்சம் அம்மாவ பத்திரமா பாத்துக்கோங்க சார். சீக்கிரம் வந்திடறோம்.” என்று குரல் தழுதழுக்க பேசிய குரலைக் கேட்டு ரமேஷூக்கு பாவமாக இருந்தது.

அதற்க்குள் ஹாஸ்பிடல் வந்துவிட, அவரை எமர்ஜென்சி வார்டில் கொண்டு சென்றனர். விரைவில் டாக்டர் வந்து அவருக்கு முதலுதவி அளித்தார். இப்போது தான் கொஞ்சம் நிலைமை சீராக உள்ளது என்று அவர் சொன்ன பிறகே அவர்களுக்கு நிம்மதியானது.

அவரின் வீட்டில் உள்ளவர்கள் வரும் வரை காத்திருக்கலாம் என்று இருவரும் காத்திருந்தனர். கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடங்கள் கடந்திருக்கும். இருவர் அந்த வார்டை நோக்கி பதட்டத்துடன் வருவதை ரமேஷ் பார்த்தான்.

“டேய். அவங்க தான் அந்த லேடியோட பொண்ணு போல இருக்கு.” என்று ரமேஷ் அவனிடம் சொல்ல, பார்த்த அர்ஜூனுக்கு தூக்கிவாரிப் போட்டது. அங்கே வந்து கொண்டிருந்தது, அஞ்சலியும், அவளது மாமா, மகேஷூம். ஆம், அந்தப் பெண்மணி பானுமதி.

கிட்டத்தட்ட அழுது கொண்டே வந்த அஞ்சலி வார்டின் அருகே வர, வர அதிர்ச்சியானாள். அர்ஜூன் அங்கே ஒருவருடன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும்,

“அர்ஜூன். நீ எங்க இங்க.? அம்மா எங்க இருக்காங்க.? எனக்கு போன் பண்ணது யாரு.?” என்று பதட்டத்துடன் கேட்க.

அவளை இங்கே எதிர்பார்க்காத அர்ஜூனோ, என்ன சொல்வதென்று புரியாமல் நின்றான்.

“நான் தான் உங்களுக்கு போன் பண்ணேன் மேடம். உங்களுக்கு அர்ஜூனைத் தெரியுமா.?” என்று அவன் கேட்க, அவள் அருகில் நின்றிருந்த மகேஷ்,

“அக்காக்கு என்னாச்சு பா. நீங்க தான் அவங்கள அட்மிட் பண்ணீங்களா.? ரொம்ப தேங்க்ஸ். டாக்டர் என்ன சொல்றாங்க.?”

“ஒண்ணும் பயப்படற அளவுக்கு இல்ல சார். அவங்களுக்கு இப்போ ஃபர்ஸ்ட் எய்ட் கொடுத்து அப்ஸர்வேஷன்ல வைச்சிருக்காங்க. நீங்க போய் டாக்டரப் பார்த்துடுங்க.” என்று அர்ஜூனும் சொல்ல, அஞ்சலியும், மகேஷூம் முதலில் அவரைப் போய் பார்க்கலாம் என்று ஐசியூவில் வைத்திருந்த பானுமதியை சென்று பார்த்தனர்.

அப்ஸர்வேஷனில் வைக்கப்பட்டிருந்தார் பானுமதி. பார்க்கவே மிக கஷ்டமாக இருந்தது. அஞ்சலி அழுது கொண்டிருக்க, மகேஷ் அவளைத் தேற்றிக் கொண்டிருந்தான். அதை அர்ஜூனும், ரமேஷூம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“டேய். மாப்ள. அஞ்சலின்னு சொல்லி பேசிட்டிருந்த. அப்போ இது தான் நீ லவ் பண்ற பொண்ணா.?” என்று ரமேஷ் கேட்க, அங்கே பார்த்துக்கொண்டே தலையை மட்டும் ஆட்டினான் அர்ஜூன்.

அதற்க்குள் அஞ்சலியும், மகேஷூம் டாக்டரைப் பார்க்கச் சென்றனர். டாக்டரும் அவருடைய ரிப்போர்ட்டை கவனித்தபடி அவர்களுக்கு சில தகவல்களை அளித்தார்.

“நான் சொல்றதக் கேட்டு நீங்க பேனிக் ஆக வேண்டாம். பிகாஸ் அவங்களுக்கு வந்திருக்கறது மைல்ட் அட்டாக். இப்போ எமர்ஜென்ஸி லெவல் க்ராஸ் பண்ணிட்டாங்க. ஆனா, இனிமேல் கொஞ்சம் கேர்ஃபுல்லா தான் இருக்கணும். நல்ல வேள அந்தப் பசங்க உடனே கூட்டிட்டு வந்தாங்க. இல்லன்னா, ரொம்ப கஷ்டம். சில மெடிசின்ஸ் குடுக்கறேன். ரெகுலரா அவங்கள எடுத்துக்க சொல்லுங்க. அவங்க மனசுல நிறைய விஷயங்கள, எதையும் வெளிப்படையா சொல்லாம வைச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். அதனால தான், அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு பிரச்சினை வந்திருக்கு. அவங்கள முடிஞ்ச அளவுக்கு சந்தோஷமா வைச்சிருக்கப் பாருங்க. அவங்க மனசு எப்பவும் லேசா இருந்தா நல்லது. ரொம்ப டென்ஷனாகிற மாதிரி விஷயங்கள அவங்க கிட்டப் பேசாதீங்க. மத்த படி நீங்க அவங்கள டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம். பட், இன்னும் கொஞ்ச நேரம் அப்ஸர்வேஷன்ல இருந்தா அவங்களுக்கு நல்லது. சோ, முடிஞ்சா நைட் கூட்டிட்டு போங்க.” என்று அவர் சொல்லி முடிக்க, அவர்கள் இருவரும் அதிர்ச்சியில் உறைந்தபடி அமர்ந்திருந்தனர்.

அவர்கள் இருவரையும் பார்த்த டாக்டர், “என்னாச்சு, ரெண்டு பேரும் ஏன் இப்படி ஷாக் ஆயிட்டீங்க. நான் தான் சொன்னேன்ல. பேனிக் ஆக வேண்டாம்னு. நீங்க நல்லா இருந்தாதான் அவங்கள தைரியப்படுத்த முடியும்.” என்று திரும்பவும் சொல்ல.

“ஓகே. டாக்டர். மத்தபடி வேற எதுவும் பிரச்சினை இல்லை தானே.?” என்றார் மகேஷ்.

“சார், நான் தான் தெளிவா சொன்னேனே. வேற எந்தப் பிரச்சினையும் இல்ல. அவங்கள ரிலாக்ஸா வைச்சுக்கிட்டா போதும்.” என்றார்.

அவரிடம் இதற்க்கு மேல் எதையும் கேட்க முடியாது என்று தோன்றி, அவரிடம் விடை பெற்று வெளியே வந்தனர். வரும் போதே மகேஷூம், அஞ்சலியும் பேசிக்கொண்டே வந்தனர்.

“என்ன மாமா, டாக்டர் இப்படி சொல்றாரு.? அம்மா, என்ன மனசில போட்டு புதைச்சு வைச்சிருக்காங்க.? என்னதான் பிரச்சினை அவங்களுக்கு.? உங்ககிட்டயும், அத்தைகிட்டயும் நல்லா தானே பேசறாங்க. அப்பறம் என்ன பிரச்சினை மாமா.?”

“என்கிட்டயும், மீனாகிட்டயும் பேசறதுக்கு என்ன இருக்கு அஞ்சலி மா. அவங்க யார்கிட்ட பேசினா நல்லா இருக்குன்னு ஃபீல் பண்றாங்களோ, அவங்க யாரும் பேசறது இல்லங்கறதுதான் அவங்க குறையே. இத நான் நிறைய தடவை பார்த்திருக்கேன். அக்கா அவ்ளோ சீக்கிரம் எதையுமே சொல்ல மாட்டாங்க. ஆனா, எனக்குத் தெரியும் அவங்க மனசில என்ன இருக்குன்னு.? நீங்க மூணு பேரும், அவங்க கூட இல்லாததே அவங்களுக்கு மிகப் பெரிய வருத்தம். அட்லீஸ்ட் போன்லயாவது முதலெல்லாம் பேசிட்டிருந்தீங்க. ஆனா, இப்போ யாருமே பேசறது இல்ல. உங்கப்பா, எப்பவும் பிஸி. ஸ்வேதா, கூப்பிடுவா. ஆனா, அக்கா பேசமாட்டேன்னு வீம்பு. இப்போ, நீயும் சரியா பேசறதில்ல. இது எல்லாம் சேர்ந்து தான் அவங்கள ரொம்ப காயப்படுத்திடுச்சு. அதனால தான் அவங்களுக்கு இந்த நிலைமை. இத சரி பண்றது, உங்க கையில தான் இருக்கு.” என்று மகேஷ் சொல்ல, அதைக் கேட்டு மௌனமானாள் அஞ்சலி.

ஆம், அன்று பானுமதி தனக்கு எதிராக பேசிய பிறகு, அவள் அவரிடம் சரியாகப் பேசுவதை நிறுத்திவிட்டாள். அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று அப்போது தான் அவளுக்குப் புரிந்தது. இருவரும் வெளியே வந்தபோது, அங்கே அப்போதும் அர்ஜூனும், ரமேஷும் இருந்தனர்.

“சரி அஞ்சலி மா. யார் இது.? உனக்கு இவங்கள முதல்லயே தெரியுமா.?” என்றார் மகேஷ்.

“மாமா, இது என்னோட ஃப்ரெண்ட் அர்ஜூன். சென்னைல நாங்க எல்லாம் ஒண்ணாதான் படிக்கிறோம். இவங்க யாருன்னு எனக்குத் தெரியாது. ஆனா, இவங்க தான் போன்ல என்கிட்ட பேசியிருக்கணும். அர்ஜூனோட வாய்ஸ்ன்னா எனக்கு முதல்லயே தெரிஞ்சிருக்கும்.” என்றாள் அஞ்சலி.

“ஆமாங்க நான் தான் பேசினேன். நான் அர்ஜூனோட ஃப்ரெண்ட் ரமேஷ்.” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான் ரமேஷ்.

“ரொம்ப தேங்க்ஸ் பா. நீங்க மட்டும் கரெக்ட் டைம்ல கூட்டிட்டு வரலன்னா, அக்காக்கு ரொம்ப சீரியஸ் ஆகிருக்கும்னு டாக்டர் சொன்னார். நல்ல வேளை நீங்க ஹெல்ப் பண்ணீங்க. வெறும் தேங்க்ஸ்ன்னு சொன்னா பத்தாது. உங்களுக்கு எந்த ஹெல்ப், எப்போ தேவைப்பட்டாலும் என்னைக் காண்டாக்ட் பண்ணுங்க.” என்று அவரின் விசிட்டிங் கார்டை நீட்டினார் இருவரிடமும்.

“ரொம்ப தேங்க்ஸ், அர்ஜூன். இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் பண்ண ஹெல்ப், என்னால மறக்கவே முடியாது. நீ எப்படி இங்க.?” என்று அஞ்சலி கேட்க,

நீண்ட நாள் கழித்து அழகாக தன்னிடம் பேசும் அவளின் அழகை ரசித்தவாறே, “நானும், அம்மாவும் இங்க இருக்கற இவனோட வீட்டுக்கு வந்திருந்தோம். என்னோட சின்ன வயசுல இருந்தே பெஸ்ட் ஃப்ரெண்ட். சிவன் கோவிலுக்குப் போனப்போ தான், அம்மாவப் பார்த்தோம். ஆனா, எனக்கு அவங்க தான் உன்னோட அம்மான்னு தெரியாது. டாக்டர் என்ன சொன்னாங்க.?” என்றான் அக்கறையாய்.

“ம்ம். இப்போ ஒண்ணும் பிரச்சினை இல்லன்னு சொல்லிருக்காங்க. டேப்ளட்ஸ் குடுத்திருக்காங்க. சீக்கிரமே ரெக்கவர் ஆயிடுவாங்கன்னு சொல்லிருக்காங்க.” என்றாள் அஞ்சலி.

“சரி, அஞ்சலியோட ஃப்ரெண்ட். அதோட அக்காக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கீங்க. கண்டிப்பா, நாளைக்கு வீட்டுக்கு வரணும் நீங்க. எல்லாரும் கண்டிப்பா வரணும். நாளைக்கு சாப்பாடு கூட எங்க வீட்ல தான். சண்டே னால நானும், வீட்லதான் இருப்பேன். நான் லொகேஷன் ஷேர் பண்றேன். சரியா. ஹே அஞ்சலி மா, சொல்லு. உன் ஃப்ரெண்ட நான் கூப்பிடறேன். நீ கூப்பிட மாட்டியா.?” என்று அவர்களை அன்புடன் அழைத்தவாறே அஞ்சலியிடம் சொன்னார்.

“ஆங்க்.. வந்துடு அர்ஜூன். நீங்களும் வந்துடுங்க.” என்று சொன்னாள். முதலில் தயங்கியவர்கள், பிறகு சரி என்று வருவதாய் ஒப்புக்கொண்டு விடைபெற்று கிளம்பினர்.

அஞ்சலிக்கோ என்ன இது ஒரு விளையாட்டு, தான் அவனை விட்டு எவ்வளவுதான் விலகிப் போனாலும், இந்த விதியானது அவனை எப்போதும் தன்னிடமே வந்து சேர்த்து விடுகிறதே. இது எங்கு போய் முடியுமோ என்று நினைத்தவாறு அர்ஜூன் போவதையே பார்த்துக்கொண்டு நின்றாள்.


(தொடரும்...)
 
Top