Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 25

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 25

நீண்ட நாள் கழித்து கல்லூரி ஆரம்பித்த அந்த முதல் வாரத்தில் தோழிகள் அனைவரும் மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தனர். அடிக்கடி மதுவிற்கு, பிரவீன் போன் செய்து பேசினான். அதே போல் வந்ததில் இருந்து கீழே பத்மாவும், வெங்கடேசனும் மூச்சுக்கு முன்னூறு முறை “மது.. மது..” என்று அழைத்தபடி இருந்தனர்.

எப்படியும் தினமும் கல்லூரியில் இருந்து அவர்கள் வந்த நிமிடமே, ஏதேனும் ஒரு மாலை உணவு வகை அவர்கள் இருக்கும் அறைக்கு பத்மாவிடம் இருந்து வந்து சேரும். வரும் போது இருக்கும் பசிக்கு நால்வரும் அதைக் காலி செய்து விடுவர். அப்போதைக்கு அதைப் பெரிய விஷயமாக மற்ற மூவரும் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இன்று அதைக் கேட்டே ஆக வேண்டும் என்று மதுவிடம் ஆரம்பித்தனர்.

“ஏய். மது. எதுவோ எங்களுக்குத் தெரியாம நடக்குது. கீழ அங்கிளும், ஆண்டியும் உன் மேல ஒரே கவனிப்பா இருக்காங்க. அடிக்கடி உனக்கு போன் வருது. முதல்ல எல்லாம் அம்மா, அப்பா பேசினா ரெண்டு நிமிஷம் பேசிட்டு வந்துடுவ. ஆனா, இப்போ அரைமணி நேரம் ஆனாலும், போன கீழ வைக்க மாட்டிங்கற. ம்ம்.. என்ன விஷயம்.? சொல்லு. எங்களுக்குத் தெரிஞ்சாகணும்.” என்று ரூபா கேட்க. அஞ்சலியும், ஷாலினியும் அதை ஆமோதிக்கும் விதமாக தலையாட்டினர்.

“ஹூம்ம்.. ஆமா, ஒரு பெரிய விஷயம் நடந்திருச்சு. ஆனா, உங்ககிட்ட அதைச் சொல்ல எனக்கு வாய்ப்பே கிடைக்கல. நீங்கள்லாம் ரொம்ப பிஸி. நான் சொல்றதக் கேட்கவே டைம் இல்ல உங்களுக்கு. அதனால தான் அப்பறமா சொல்லலாம்னு இருந்தேன்.” என்று மது ஆரம்பித்து அன்று நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

“அடிப்பாவி. எவ்ளோ பெரிய விஷயம். அதுவும், சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு. நீ ஏன் எதுவுமே சொல்லல.?” என்று அஞ்சலி கேட்க,

“நீ மட்டும் பேசாத அஞ்சலி. நான் எவ்ளோ டைம் உனக்கு கால் பண்ணிருப்பேன் தெரியுமா.? ஆனா, நீ போனே எடுக்கல. அதே மாதிரி, இங்க வந்ததுக்கப்பறம் அட்லீஸ்ட் சொல்லலாம்னு பார்த்தா, அப்பவும் சோகமாவே இருக்க. இத எப்படி நான் சொல்றது.?” என்று மது சொல்ல, அஞ்சலியிடம் பதிலில்லை. அமைதியாகவே இருந்தாள்.

“விடடா மது. அஞ்சலி எந்து செய்யும். அவளினண்டே சிச்சுவேஷன் ஆ மாறி அல்லே. எனிவே, கங்க்ராஜூலேஷன்ஸ்.. பிரவீன் எந்தா, நல்ல குட்டியானோ.? ஆங், அதுசரி. நல்ல குட்டியல்லங்கிள் நீ சம்மதிக்குமா.?” என்று ஷாலினி சொல்லிக்கொண்டிருந்தாள்.

“மது.. ஹார்ட்டி கங்க்ராட்ஸ். உனக்கு ஒரு நல்ல லைஃப் கிடைக்கப்போகுதுன்னு நினைச்சா, ரொம்ப ஹாப்பியா இருக்குடா.” என்று சொல்லியபடியே அஞ்சலி மதுவை அணைத்துக்கொண்டாள். கண்களில் சிறுதுளி கண்ணீர் கூட சிந்தினாள் அஞ்சலி. அதைப் புரிந்துகொண்டாள் மது.

“ஹூம்ம். எப்படியோ, புளியங்கொம்பா புடிச்சிட்ட மது. ஒரே பையன், சிங்கப்பூர்ல வேலை. ஹூம்ம்.. ஜாலியா லைஃப என்ஜாய் பண்ணப் போற. குடுத்து வைச்சவ. உன்ன மாதிரி தான் இருக்கணும்.” என்றாள் ரூபா. அவள் பேசுவதிலேயே அவளின் பொறாமை எண்ணம் தெரிந்தது. ஆனாலும், என்ன செய்வது.? தோழியாகிவிட்டாளே என்பதால் மது சிரிப்பை மட்டும் உதிர்த்தாள் அவளிடம்.

மதுவே தன் விஷயத்தை சொன்ன பிறகு, தான் எப்படி அந்த விஷயத்தை சொல்லாமல் இருப்பது என்று ஷாலினியும் மெல்ல ஆரம்பித்தாள்.

“ஏடா.. ஞான் ஒன்னு பரையனும் நிங்களூடே.” என்று தன் பாஷையில் ஆரம்பித்தவள், ஒன்று விடாமல் அன்று ரயில் பயணத்தில் நடந்ததைச் சொன்னாள்.

“அடிப்பாவி ஷாலினி. நீயும் எவ்வளவு பெரிய விஷயத்த மறைச்சுட்ட.? நான் போன் பண்ணப்ப கூட எதுவும் சொல்லல.?” என்றாள் மது.

“ஆங்.. நீ என்னோடு பரைஞ்சோ.? பின்னே ஞான் மாத்திரம் எப்படி.?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள் ஷாலினி.

“ஹூம்ம்.. பெரிய ரிவென்ஜ்” என்று சப்பு கொட்டினாள் மது.

“அது இருக்கட்டும். நித்தின் எப்படி.? நல்ல டைப்பா.? பேசினப்போ எப்படி தெரிஞ்சது.?” என்றாள் அஞ்சலி.

“ஹான்.. பார்க்கும் போல் ஒரு நல்ல கியூட்டான குட்டி. சம்ஸாரிக்கும் போலும் ஒரு நல்ல குட்டி தன்னே எனிக்கி தெரிஞ்சு. பக்ஷே, ஞான் எந்து செய்யும்.? எண்டே அச்சன் சம்மதம் இல்லங்கில் ஏதும் செய்ய பட்சில்லா.” என்று கூறினாள் ஷாலினி.

“ஹூம்ம்.. சரி விடு. அவங்க நல்லவங்களா இல்லைன்னா, நீ சொன்னதுக்கு எதுவும் சொல்லாம அமைதியா போயிருக்கமாட்டாங்க. இந்நேரம் வேற யாராவதா இருந்தா டார்ச்சர் மேல டார்ச்சர் பண்ணுவாங்க. சரி, விடு பாத்துக்கலாம்.” என்றாள் மது.

ஷாலினியும் அதை ஆமோதிப்பதைப் போல் தலையாட்டினாள். இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ரூபா, “ஹூம்ம்.. எல்லாரும் எப்படியோ ஆளுக்கு ஒரு ஆள் புடிச்சுட்டீங்க. எனக்கு தான் எவனும் சிக்க மாட்டிங்கறான்.” என்றாள்.

“என்ன ஆள் புடிச்சுட்டாங்க.? எதுக்கு அப்படி சொல்ற.? நான் எந்த ஆள புடிச்சேன்.?” என்றாள் அஞ்சலி சற்று கோபத்துடன்.

“என்ன அஞ்சலி, தெரியாத மாதிரி கேக்கற.? நீயும், அர்ஜூனும் லவ் பண்றீங்க தானே.? அதைத் தான் சொன்னேன். இதுல என்ன தப்பு இருக்கு.?” என்று ரூபா கேலியாக சொல்ல.

அதுவரை அமைதியாக இருந்த அஞ்சலி, “போதும் ரூபா. உன் வாயை மூடு. நீ என்ன சொன்னாலும் நான் அமைதியா போயிடுவேன்னு தானே இப்படி சொல்லிட்டிருக்க.? நான் சொன்னேனா, இல்ல அர்ஜூன் சொன்னானா.? தேவையில்லாத பேச்செல்லாம் பேசற வேலை வைச்சுக்காத.” என்றபடி கோபத்துடன் வெளியே சென்றாள்.

“ரூபா. திரும்பத் திரும்ப சொல்றேன். இனியும் நீ இப்படியே பண்ணிட்டிருந்தா நாங்க மூணு பேரும் உன்கிட்ட பேசவே மாட்டோம். ஃப்ரெண்ட்ஸ்னா, எப்படி இருக்கணும்.? ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா, அன்பா, அனுசரனையா, உதவியா இப்படி சொல்லிட்டே போகலாம். ஆனா, இதுவரைக்கும் நாங்க உன்கிட்ட அப்படி ஒரு விஷயத்தப் பார்த்ததே இல்ல. அப்படியே ஆப்போஸிட்டாதான் நடந்துட்டிருக்க. அன்னைக்கே நான் சொன்னேன், அஞ்சலிட்ட அப்படி பேசாதன்னு. ஆனா, இன்னைக்கு திரும்பவும் அவ மனச நோகடிக்கற மாதிரி தான் பேசிருக்க. உன்னால ஆறுதலா பேச முடியாட்டியும் பரவால்ல. இந்த மாதிரி நடந்துக்காம இரு. அதுவே போதும்.” என்று சொல்லிவிட்டு அஞ்சலியைத் தேடிப் போனாள் மது.

“ரூபா. நீ எந்தா பட்டி. அவளோட பிரச்சினை எந்தா, நினக்கு அறியோ.? பிராந்து..” என்று ஷாலினி தன் பாஷையில் திட்டிக்கொண்டிருக்க, ரூபாவோ எதையும் கண்டுகொள்ளாமல், தன் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்தாள்.

மது வெளியே வந்து பார்த்த போது, அவர்கள் இருக்கும் மாடியில் அருகே இருக்கும் தென்னை மர நிழலின் அடியில் நின்றபடி அஞ்சலி அழுதுகொண்டிருந்தாள்.

அவளிடம் வந்த மது, “அஞ்சலி, இப்போ எதுக்கு அழுதுட்டிருக்க.? அவ எல்லாம் ஒரு ஆளு. அவ சொன்னதுக்குப் போய் இப்படி ஃபீல் பண்ணி அழுத்துட்டிருக்க. வர, வர உன்னோட கண்ணீர அதிகமா செலவு பண்ற. அது நல்லதுக்கில்ல. தெரிஞ்சுக்கோ.” என்றாள் மது.

“இல்ல, மது. நீயே பாரு. அவ என்ன பேசறான்னு. நானே எந்த ஒரு மனநிலைமைல இருக்கேன். இவ என் மனச இன்னும் நோகடிக்கற மாதிரி பேசறா. ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால அழாம இருக்க முடியல.” என்றாள் அஞ்சலி.

“அவ பேசினது தப்புதான். ஆனா, அவ சொன்ன விஷயம் உண்மைதான அஞ்சலி. இதுல நீ ஃபீல் பண்றதுக்கு ஒண்ணுமே இல்ல. நீ தான் தேவையில்லாம இப்போ அழுதுட்டிருக்க.” என்றாள் மது.

“ஏன் மது, நீயும் இப்படி பேசற.?” என்றாள் அஞ்சலி.

“பின்னே, நீ அர்ஜூன லவ் பண்றது, அதே மாதிரி அர்ஜூனும் உன்னை லவ் பண்றது உண்மைதான.? என்ன, ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் சொல்லிக்காம இருக்கீங்க. அவ்வளவுதான்.” என்று மது சொல்ல, அஞ்சலியிடம் பதிலில்லை.

“நீங்க ரெண்டு பேரும் உங்களையே ஏமாத்திட்டிருக்கீங்க. அதுல, கஷ்டப்படறதும் நீங்க தான். அதுக்கு ரெண்டு பேரும் லவ்வ சொல்லிட்டு ஹேப்பியா இருந்துட்டு போறதுல தப்பே இல்ல.” என்று மது சொன்னாள்.

“மது, நீ தெரிஞ்சு தான் பேசறியா.? என்னோட நிலைமை என்னன்னு உனக்கு சொல்லியும் நீ எப்படி இப்படிப் பேசற.? எங்கப்பா இப்போதான் கொஞ்சம் நல்லாயிருக்கார். அவர நினைச்சாலே எனக்கு அர்ஜூனப் பத்தி யோசிக்கவே தோணாது. இதுல நான் லவ்வெல்லாம் எப்படி பண்ணுவேன்னு நீ நினைக்கற.?” என்றாள் அஞ்சலி கேள்விக்குறியாய்.

“அஞ்சலி. ஒரு விஷயத்த புரிஞ்சுக்கோ. நான் ஒண்ணும் பெத்தவங்கள உதறித் தள்ளிட்டு போய் லவ் பண்ண சொல்லல. நீ அப்படி ஒரு விஷயம் பண்ணா, அத தப்புன்னு சொல்ற முதல் ஆள் நானா தான் இருப்பேன். ஆனா, உன்னோட விஷயத்துல நான் சொல்ல வரது வேற. நீ முதல்ல இப்படி எதுக்கெடுத்தாலும் பயப்படறத நிறுத்து. உன்னால, இப்போ எதுவும் பண்ண முடியலன்னாலும் அட்லீஸ்ட் உனக்கு சப்போர்ட் பண்றவங்க மூலமா உன் அப்பா, அம்மாகிட்ட பேசச் சொல்லி பாரு.” என்று மது சொன்னதும், அஞ்சலி புரியாமல் பார்த்தாள்.

“உனக்கு உன்னோட மகேஷ் மாமா தான இதுவரைக்கும் எல்லா விஷயத்துலயும் சப்போர்ட் பண்ணிருக்கார். அப்போ, அவர்கிட்ட முதல்ல விஷயத்த சொல்லு. அப்பறமா, அவர் நேரம் வரும் போது வீட்ல பேசட்டும். எந்த விஷயமா இருந்தாலும் அதை தைரியமா ஃபேஸ் பண்ணப் பழகு அஞ்சலி. சரியோ, தப்போ அது எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம். சரியா.?” என்று மது அவளிடம் தெளிவாகப் பேச, அஞ்சலியோ யோசித்தவாறே இருந்தாள்.

“இல்ல மது. மாமா கிட்ட கூட நான் இதப் பத்தி பேச விரும்பல. அவர் எனக்காக எத்தனையோ செஞ்சிருக்கார். அவர வீணா இதுக்காக அப்பா, அம்மாகிட்ட சங்கடப்படுத்துற மாதிரி ஆயிடும். அக்கா லவ் பண்ணி கல்யாணம் பண்ணதால தான், அப்பாக்கு இந்த மாதிரி ஒரு நிலைமை. அதே மாதிரி நானும் பண்ணா, இன்னும் அப்பா என்கிட்ட கடைசியா சொன்னது இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு. வேண்டாம், எதுவும் வேண்டாம். என் விதில இதுதான் இருக்குன்னா, அதை யாரால மாத்த முடியும். நான் யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம்னு நினைக்கறேன். இதுக்கு மேல இந்த விஷயமா நான் எதுவும் யோசிக்கப் போறது இல்ல. நீயும் என்கிட்ட எதுவும் இது விஷயமா எதுவும் பேசாத மது. ப்ளீஸ். நீ என்னை என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோ. நான் கோழை, தைரியமில்லாதவ எப்படி வேணும்னாலும். ஆனா, என்னோட பயம் எனக்கு மட்டும் தான் தெரியும்.” என்று அழுதுகொண்டே சொல்லி முடித்தாள் அஞ்சலி.

இதற்க்கு மேலும் பேசி அவளை கஷ்டப்படுத்த விரும்பாமல் மது, “சரி, அஞ்சலி. இனிமேல் நான் எதுவும் சொல்ல மாட்டேன். நீ எதுவும் மனசுல போட்டு குழப்பிக்காத. சரியா.” என்றாள் வேறு வழியில்லாமல். ஆனால், இதன் தீர்வு தான் என்ன, என்பதை அந்தக் கடவுள் தான் அறிவார் என்று நினைத்தாள்...

(தொடரும்...)











 
Top